முகிழ்மதி 104(2):

தன்னவளின் பற்களுக்கு இடையே சிக்கிய இதழை கண்ட ரத்தினவேலின் பார்வை மாறியது.
அதிலும்,இன்றைய அவளின் தோற்றம் சிறிது வித்தியாசமாக இருந்தது.
எப்போதும் போல் அதே எளிமையான தோற்றம் தான்!
ஆனால் சிறிது மாறுப்பட்டு தெரிந்தாள்.
நடைமுறையில் அணியும் காட்டன் புடவை அணியாமல்,மிருதுவான வெண்ணிற ஷிபான் புடவையில் கருப்பு நிற கோடுகள் போட்டு,அதில் இளஞ்சிவப்பு நிற ரோஜா பூக்கள் ஆங்காங்கே அச்சிட்டு,அதே ரோஜா நிறத்தில் மேல் சட்டையும் அணிந்திருந்தாள் அவள்.
வழமையாக பின்னலிட்டு இருக்கும் அவளின் கூந்தல் தலைக்கு குளித்ததால் நடுவில் குட்டி கூந்தல் கவ்வி மட்டும் வைத்து மயில் தோகையென பரப்பி விட்டிருந்தாள்.
அவளை பார்ப்பதற்கு ஒரு பட்டாம்பூச்சி இறக்கை விரித்து பறப்பது போல் இருக்க,அவனின் கரு விழிகள் மோகத்தில் விரிய தொடங்கின.
பஞ்சும் நெருப்பு பக்கத்தில் இருக்கும் போது நெருப்பு பற்றிக்கொள்வது இயல்பு தானே?
அதனால் தவிப்பாய் அமர்ந்திருந்த மனையாளின் இடைப்பற்றிய ரத்தினவேல் “ஏய் பொண்டாட்டி நீ இன்னைக்கு செம்ம அழகா இருக்கடி” என மோகத்துடன் கூறி அவளை தன்னருகே பற்றி இழுக்க,
அதை சற்றும் எதிர்பாராத பெண்ணவளோ பதறிப்போய் முன்னால் இருந்த ஓட்டுனரை பார்த்துவிட்டு “ஏங்க என்னங்க பண்ணறீங்க…அவரு..” என படபடப்புடன் விழியால் அவரை சுட்டிக்காட்டி உரைக்க,
“அவர் பார்க்கிறது தான் உனக்கு பிரச்சனையா இப்போ?” என ஒற்றை புருவம் உயர்த்தி கேட்ட ரத்தினவேல் “ம்க்கும்” என தொண்டையை செருமியவுடன்,அவனது பேச்சற்ற கட்டளைக்கு கட்டுப்பட்ட ஓட்டுனரோ காட்சி பார்க்கும் கண்ணாடியை அவரின் புறம் திருப்பி வைத்துவிட்டார்.
அவர்கள் பேசுவது எதுவும் காதில் விழாதவாறு ஒலிப்பெருக்கியில் ஒரு அதிரடி திரைப்பட பாடலை ஓடவிட்டார்.
அதில் முதல் பாடலாக “மச்சி ஓப்பன் தி பாட்டில் இது அம்பானி பரம்பரை
அஞ்சாறு தலமுறை
ஆனந்தம் வளர்பிறைதான்…” என மங்காத்தா படத்திலிருந்து பாடல் மகிழுந்து அதிர ஒலித்தது.
அந்த சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாத பாடலை கேட்டு முகிழ்மதி விழிக்க,
அவனோ அவளின் புறம் திரும்பி “இப்போ அவராலே பார்க்க முடியாதுடி…” என சரசமாக காதோரம் மொழிந்தவனின் விழிகள் அவளை தலைமுதல் பாதம் வரை அப்படியே கபளீகரம் செய்ய தொடங்கின.
அவளிற்கோ அவனது பார்வையின் வீச்சு வெட்கத்தையே வரவழைத்தன.
“மாமா…” என சிணுங்கலாய் அழைத்து இமைத்தாழ்த்த,
அவளின் வெட்கம் கூட அவனது உணர்வுகளை தூண்டி விட,
“யூ லுக்கிங் கார்ஜியஸ்டி…” என அவளின் நெற்றியில் முத்தமிட்ட ரத்தினவேல் “வழக்கமா நீ கட்டற புடவைய விட இந்த சாதாரண புடவை உனக்கு அழகா இருக்குடி” என கூறியப்படியே அவளின் இடைப்பற்றி தன்னோடு நெருக்க,
இப்போது பக்கவாட்டில் ஒன்றோடு ஒன்று உரசிய ஸ்பரிசங்களின் தீண்டலில் உள்ளுக்குள் அனல் பரவிட,
அவளோ “நீங்க வாங்கி கொடுத்த புடவை தான் மாமா” என தடுமாற்றத்துடனே மொழிய,
“எஸ்…என் செலக்ஷன் தான்டி இது…ஆனால்” என்றவன்,
அவளின் செவியோரம் குனிந்து “பட் இந்த புடவைய விட அது இல்லாமல் நீ இன்னும் அழகுடி” என தாபமும் மோகமும் கலந்த உஷ்ணப்பெருமூச்சுடன் அவன் உரைக்க,
“ஐய்யோ என்ன இப்படி பேசறீங்க…” என நாணத்தில் அவள் இதழ்கடிக்க,
கடித்த அவளின் இதழ்களை இழுத்து சுவைக்க அவனிற்குள் தாபம் பொங்கி பெருகிட “உனக்கு எந்த டிரஸ் போட்டாலும் பொருத்தமா இருக்குடி…புடவையிலே நீ இவ்வளவு அழகா இருக்கே அப்போ அந்தவொரு டிரஸ்…” என அவன் சொல்லும் போதே அவனது முரட்டு தேகம் சூடேறி சிவந்திட,
அவளோ இமைகள் படபடக்க “எந்த டிரஸ் மாமா?” என குரலே வெளிவராமல் இதழசைத்து மயக்கத்துடன் வினவ,
அதனை அவனது கூரிய விழிகள் கச்சிதமாக படித்திட,அவனோ உஷ்ணப்பெருமூச்சுடன் அவளின் செவியோரம் குனிந்து “அன்னைக்கு ஒரு நைட் டிரஸ் எடுத்திட்டு வந்து காட்டினீயே?அதுடி…” என சொன்னவனின் மனம் அவளை அந்த உடையில் கற்பனை செய்து பார்த்து கிளுகிளுத்தன.
அவளோ ‘எது?’ என்று புரியாமல் விழிக்க,
அவனோ “அது தான்டி அந்த எக்ஸ்போசிவ் நைட் டிரஸ்” என இதழ்கடித்து சிரித்தப்படி உரைக்க,அவளின் சிந்தைக்கு அவன் கூறியது உறைத்ததும் ‘ஐய்யே ச்சீ மாமா’ என மனதிற்குள் சிணுங்கியவளிற்கு மண்ணிற்குள் புதையுண்டு விடும் அளவிற்கு நாணம் பிடுங்கி தின்றது.
அவளுமே அந்த உடையில் தன்னை கற்பனை செய்து பார்த்திருக்க,அவளால் அவனை காணவே முடியாத அளவு ஒரு அவஸ்தையான உணர்வு!
படீரென தலைகுனிந்து வேறுப்புறம் திரும்பிய பெண்ணவளை ஆக்கிரமிக்க அவனது உடலும் உள்ளமும் தவித்தாலும் அந்த அரசியல்வாதி சிறிது கட்டுப்பாடும் அறிந்தவனாய் அவளை ரசிப்பதோடு நிறுத்திக்கொண்டான்.
அவளோ மேனி சூடேறி இதயம் படபடக்க ‘என்ன இப்படி பேசறாரு மாமா’ என தனக்குள்ளே புலம்ப,அவனோ அவளின் அவஸ்தையான உணர்வை இதழ்பிரித்து புன்னகைத்து பார்த்தவாறே அவளை தோளோடு அணைத்துக்கொண்டான்.
அவனின் அந்த அணைப்பே அவளின் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை புது இரத்தம் பாய்ச்சிட,அவளின் வெண்ணிற தேகம் குங்குமமாய் சிவந்து விட்டது.
அவனிற்கு தற்சமயம் காமத்தின் உச்சத்தை தொட்டுவிடும் அளவு விரக தாபம் வாட்டியப்போதும் தற்சமயம் அவளின் அருகாமை மட்டுமே போதுமாய் மௌனம் காத்தான்.
அத்துடன் அவளின் கலங்கிய மனதை திசை திருப்புவதற்காக அவன் மேற்கொண்ட முயற்சி வாகை சூடி விட,அவன் பெரும் நிம்மதியுற்றான்.
அதே கணம் தனது சகோதர சகோதரிகளை பற்றி எண்ணியவனிற்கு அவனையும் அறியாமல் ஒரு பெருமூச்சு எழுந்தது.
**********
ஆத்விக்கோடு சிறிது தூரம் பயணித்த தமயந்தி இறுகிய முகத்துடன் “ஆத்வி வண்டிய ஓரங்கட்டி நிறுத்துங்க” என ஆணையிட்டாள்.
உடனே பக்கவாட்டாக திரும்பி அவளை நோக்கிய ஆத்விக் “என்னாச்சு தமயந்தி?நடு ரோட்டிலே ஏன் ஸ்டாப் பண்ண சொல்லறே?” என குழப்பமாக விசாரித்தான்.
“நிறுத்துங்க ஆத்வி” என பிடிவாதமாக அவள் எடுத்துரைத்ததும் சென்னையில் வாகன நெரிசலான சாலையில் ஒரு ஓரமாக நிறுத்தினான்.
‘என்ன?’ என்பது போல் புருவம் சுருக்கி அவளை அவன் காண,
அவளோ ஒரு முறை தொண்டையை செருமி தலையுயர்த்தி அவனை ஏறிட்டவள் “ஆத்வி எனக்கு உங்களை ரொம்பவே பிடிக்கும்…அது வெறும் நட்பு ரீதியா மட்டும் தான்…நீங்க ஏன் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்கனு எனக்கு தெரியாது…ஆனால் எனக்கு இந்த கல்யாணத்தில் துளியும் விருப்பமில்லை” என பட்டென எவ்வித தயக்கமும் இல்லாமல் மனதிலிருப்பதை போட்டு உடைத்து விட்டாள்.
அவள் கூறியதை கேட்ட ஆத்விக்கின் முகம் தீவிரமடைய “இப்போ பிடிக்கலைனா என்ன?கல்யாணத்துக்கு பிறகு பிடிக்கலாமே தமி” என நம்பிக்கையுடன் கூறினான்.
அவளோ “நோ வே…இப்போ மட்டுமில்லை…எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் மனசை உங்களால் ஜெயிக்கவே முடியாது” என நிற்சிந்தையுடன் அவனிற்கு மறுப்பு உரைத்தாள்.
“வாட் யூ மீன் தமயந்தி?” என கோபத்துடன் கேட்டவனின் இமைகள் இடுங்கின.
அவளோ “இதுக்கு ஒரே ஒரு மீனிங் தான் ஆத்வி…ஐ லவ் சம் அதர் ஒன்…அவரை தவிர வேற யாரையும் என்னாலே கல்யாணம் பண்ணிக்க முடியாது” என உறுதியான குரலில் இயம்பினாள்.
“யாரு அது?” என கேட்டவனின் குரலில் சிறிது வெறுப்பு கொப்பளித்ததோ?
அவளோ அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.
“அது உங்களுக்கு தேவையில்லாதது ஆத்வி…இந்த பேச்சை இத்தோடு விட்டிருங்க” என முகத்திலடித்தாற் போன்று கூறிவிட்டு வாகனத்திலிருந்து அவள் இறங்க முற்பட்டவள்,
சட்டென அவனின் புறம் திரும்பி “அப்புறம் இன்னொரு விஷயம் எங்க அப்பா கல்யாணம் பேசற விஷயமே எனக்கு தெரியாது ஆத்வி…முன்னாடியே தெரிஞ்சிருந்தா உங்களை இந்த அளவு கூட்டிட்டே வந்திருக்க மாட்டேன்…சாரி” என மனமாற அவனிடம் மன்னிப்பையும் வேண்டினாள்.
அவனோ அவளை உணர்வுகளற்று வெறித்து பார்த்திருக்க,அவளிற்கும் அவனை பார்த்தால் பாவமாக இருந்தது.
தவறு தந்தை மீது இருக்கும் போது அவனின் மீது சினத்தை காட்டுவது தவறாக தோன்ற “நீங்க விருப்பப்பட்டால் என் கூட கடைசி வரை ஃப்ரெண்டா இருக்கலாம் ஆத்வி…பட் கல்யாணம் மட்டும் வேணாம்” என்றுவிட்டு விறுவிறுவென அங்கிருந்து வேகமாக கீழிறங்கிய தமயந்தி புயல் போல் “ஆட்டோ” என ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவை கைகாட்டி நிறுத்தினாள்.
அதில் ஏறி அமர்ந்தவளின் நெஞ்சம் மட்டும் தந்தையை எண்ணி கொதித்துக்கொண்டிருந்தது.
‘என்னை கேட்காமல் எப்படி அவரு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணலாம்?’ என உள்ளுக்குள் குமுறிக் கொண்டே இருந்தவளின் மேனி செக்க செவ்வேலென சிவந்திருந்தது.
அவள் தனது வாகனத்தில் இருந்து இறங்கி சென்றதை ஆத்விக் தடுக்கவில்லை.
கண்ணாடி திரையின் வழியே அவள் நடந்து செல்வதையே உறுத்து விழித்திருந்தான் அவன்.
அவள் வண்டியில் ஏறியதும் “மேடம் எங்க போகணும்?” என ஓட்டுனர் விசாரித்ததற்கு வீருடைய வீட்டு முகவரியை தந்தாள்.
இன்று அவனிடம் எப்படியாவது பேசி அவன் மனதில் என்ன இருக்கிறது என தெரிந்துக்கொள்ள எண்ணினாள் தமயந்தி.
அவனும் தன்னை நேசிக்கிறான் என்பது அவளிற்கு நன்கு தெரியும்.ஆயினும்,அவனது வாயிலிருந்து திடமான வாக்குறுதி கிடைத்துவிட்டால் வீட்டினரிடம் துணிந்து போராட முடியும் என்று கருதியே வீரின் இல்லம் நோக்கி புறப்பட்டாள்.
ஒரு குட்டி கட்டாறு தன்னை அடித்து செல்ல வருவதை அறியாத வீரோ சந்திரமதியிடம் உரையாடிக் கொண்டிருந்தான்.
சந்திரமதி இன்று பணிக்கு செல்லாததை கவனித்து “என்னம்மா நீ வேலைக்கு போகலையா?” என அவன் கேட்க,
“இல்லைண்ணா…நான் வேலையை விட்டுட்டேன்…” என்றாள் அதிரடியாக…
அதில் அவனின் ஒற்றை புருவம் வியப்புடன் ஏறி இறங்கின..
அவன் எதிர்பார்த்தது அது தான் என்றாலும்,திடீரென்று அவனது மனதை உறுத்தின.
அத்தோடு அவளின் முகம் சரியில்லாததை கவனித்து “ஏன்மா?என்னாச்சு?மே வரை வேலைக்கு போறேன்னு சொன்னே…இப்போ திடீர்னு வேலையை விட்டுட்டேன்னு சொல்லறே?வேலையிலே ஏதாவது பிரச்சனையா?” என ஒரு தமையனாக அவளின் மீதுள்ள அக்கறையில் விசாரிக்க,
அவளோ ஒரு பெருமூச்சுடன் “இல்லைண்ணா…நான் நல்லா யோசிச்சேன்…எப்படியும் ஜுன் தொடங்கினால் காலேஜ் ஆரம்பமாகிடும்…அதுக்கு பிறகு உங்களோட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது…அதனாலே இந்த ஒரு மாசமும் உங்க கூட எல்லாம் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு நினைச்சு வேலைய விட்டுட்டேன்” என அவன் மறுக்க இயலாத வகையில் ஒரு பொய்யான காரணத்தை கூறவும்,அவனும் “சரி” என அவளின் பதிலை ஏற்றுக்கொண்டான்.
“அப்போ சரிம்மா…நீ வீட்டுலையே இரு…இன்னும் கொஞ்ச நேரத்திலே பூபதி டாலையும் கொண்டு வந்து விடுவான்…நீங்க அம்மா கூட இருங்க…நான் கிளம்பறேன்” என முழுங்கை சட்டையை மடக்கி விட்டவாறே அவன் தெரிவித்தான்.
பின்பு தாய் மற்றும் விஜயலட்சுமியிடம் விடைப்பெற்று வெளியே வந்த வீர் ஆட்டோவில் வந்திறங்கிய தமயந்தியை புருவம் சுருக்கி பார்த்தான்.
அவளோ அவசரத்தில் கிளம்பியதால் கையில் காசு எதுவும் எடுத்து வந்திருக்கவில்லை.
அதனால் ஓட்டூனரிடம் “இங்கியே வெயிட் பண்ணுங்க…என் ஹஸ்பெண்ட் வந்து காசு தருவாரு” என சொல்லிவிட்டு அவள் திரும்ப,
அவளது பேச்சின் நாயகனான வீரும் அவளை நோக்கி வந்துக்கொண்டிருந்தான்.
அவனருகே வந்ததும் “வீர் காசு கொடுத்திட்டு உள்ள வாங்க” என உரிமையாய் அவனிடம் ஆணைப்பிறப்பித்துவிட்டு கிளம்பிவிட்டாள்.
அவனோ அவளின் முகத்தில் தெரிந்த அனலை கவனித்து ஒரு பெருமூச்சுடன் “கூகுள் பே தம்பி” என ஓட்டூனரிடம் சொன்னான்.
அவனும் “இங்க ஸ்கேன் பண்ணுங்க அண்ணா” என ஒரு புகைப்பட குறியீட்டை காட்டினான்.
வீரும் அதன் வழியாக பயணத்திற்குரிய பணத்தை செலுத்திவிட்டு அவனிடம் விடைப்பெற முயல,அச்சமயம் “அண்ணா உங்க பொண்டாட்டி பயங்கர கோபத்திலே இருக்காங்கனு நினைக்கிறேன்…ஆட்டோவிலே வரும் போது யாரையோ சத்தமா திட்டிட்டே வந்தாங்க…சீக்கிரம் போய் மேடமை சமாதானம் செய்யுங்க…இல்லைனா உங்க பாடு திண்டாட்டம் தான்…என் பொண்டாட்டி கூட இப்படி தான் ஆவுன்னா முகத்தை தூக்கி வைச்சுப்பா…பொண்டாட்டிய சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்ண்ணா” என விளையாட்டாய் சிரித்தப்படி சொல்லிவிட்டு புறப்பட,வீரோ ‘உங்க பொண்டாட்டி’ என்ற வார்த்தையில் சிலையென சமைந்து நின்றுவிட்டான்.
அந்தவொரு சொல்லே அவனது இதயத்தின் அடியாழம் வரை சென்று தாக்கின.
அவனது முரட்டு தேகமும் அந்த உணர்வு தந்த கற்பனையில் சிலிர்த்திட ‘பொண்டாட்டி’ என தனக்குள்ளே ஒரு முறை எண்ணியவனிற்கு மனம் தேனாய் தித்தித்தது.
ஆனால் அடுத்த கணமே எதையோ எண்ணி தலையை உலுக்கிக்கொண்ட வீரின் முகம் உணர்ச்சிகளை துடைத்தது போல் மாறியிருந்தன.
அதன்பிறகே சந்திரமதி உள்ளிருக்கும் விடயம் நினைவில் வர ‘ஷிட்’ என வேகமாக உள்ளே வந்தான்.
ஏனெனில்,அவனது அதிரடி குட்டி புயல் பற்றி அவன் அறிவானே?
அவளிற்கு இதுவரை நிஜம் எதுவும் தெரியாததினால் ஏதேனும் தங்கையை கூறிவிடுவாளோ என்று பதறிப்போய் உள்ளே வந்தான்.
அவன் நினைத்தது போலவே நீள்விரிக்கையில் உரிமையாய் அமர்ந்திருந்த சந்திரமதியை கண்ட தமயந்தி கொதித்துப்போனாள்.
முகிழ்மதி 105:

அவன் நினைத்தது போலவே “ஹே நீ இங்க என்ன செய்யறே?” என எடுத்த எடுப்பிலே சந்திரமதியை கண்டு சீறியிருந்தாள் தமயந்தி.
அவளின் கேள்வி பெண்ணவளின் முகத்தை கறுக்கச் செய்தன.
இருப்பினும், எவ்வித பதிலும் கூறாமல் சந்திரமதி அவளை அழுத்தமாக பார்த்திருக்க,அச்சமயம் வேகமாக உள்ளே நுழைந்த வீரும் அவளின் பேச்சை கேட்டிருக்க “தமி வாயை மூடு…இங்க எதுக்கு வந்தே நீ?” என முதல் முறையாக அவளிடம் அவன் உறுமினான்.
சட்டென அவனை நோக்கி திரும்பிய தமயந்தி “நான் வர்றது இருக்கட்டும் வீர்…எதுக்கு கண்டவங்களையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து உட்கார வைச்சிருக்கீங்க?” என்று கேட்டவளின் வார்த்தையில் அனல் தெறித்தது.
சந்திரமதி அவனிற்கு என்ன உறவாக வேண்டும் என்று தெரியாமல் அவள் சொற்களை உதிர்த்துவிட்டாள்.
அதற்காக அவன் மேல் அவள் சந்தேகம் கொள்ளவில்லை..
மாறாக,தன்னவன் அவளின் மேல் பரிதாபம் கொண்டு அவளை தன் இல்லத்திற்கு அழைத்து வந்துவிட்டானோ என எண்ணினாள்.
அதிலும் சந்திரமதியின் மீது முதலில் இருந்தே அவளிற்கு பெரிதாக அபிப்பிராயம் இல்லாததால் அவளின் இருப்பை சந்தேகம் கொண்டாள்.
வீருடைய இரக்கம் குணத்தை பயன்படுத்தி ஏதேனும் விபரீதமாக செய்துவிடுவாளோ என அஞ்சியவளின் இதழிலிருந்து வார்த்தைகள் தடித்து வெளியே வந்தன.
ஆனால் பல வருடங்கள் தவமிருந்து கிடைத்த தங்கையை யாரேனும் குறைக் கூறனால்,தனக்கு பிடித்தமானவளாகவே இருந்தாலும் அவனால் அமைதி காக்க முடியுமா என்ன?
“தமயந்தி ஷட் அப்…இதுக்கு மேலே ஒரு வார்த்தை நீ பேசக்கூடாது” என கழுத்து நரம்புகள் கோபத்தில் புடைக்க கத்தியிருந்தான்.
அவன் சினம் கண்டு அசரக்கூடிய சாதாரண பெண்மகளா அவள்?
அதனால் நெஞ்சில் தீரத்துடன் “அவளை எதுக்கு இங்க வைச்சிருக்கீங்க?” என சந்திரமதியை சுட்டிக்காட்டி அழுத்தம் திருத்தமாக வினவினாள்.
அதில் அவனிற்கு சுறுசுறுவென சினம் பொங்கி பெருகிட “யாரை என் வீட்டுலே தங்க வைக்கணும் வைக்கக்கூடாதன்றது என் விருப்பம்…நீ அதிலே தலையிடாதே…உனக்கு அதுக்கான உரிமையில்லை தமயந்தி” என்றான் அவளிற்கும் மீறிய அழுத்தத்துடன்…
ஆனால் அவனது சொற்கள் அவளின் இதயத்தை பலமாக சென்று தாக்கியிருந்தன.
அவளது நெஞ்சத்தில் பெரும் வலி ஒன்று உருவாகிட “எனக்கு எந்த உரிமையும் இல்லைனு சொல்லறீங்களா வீர்?” என அவனை நேருக்கு நேராக விழியோடு விழி கலந்துக் கேட்க,
அதில் அவன் ஒரு நொடி தடுமாறினாலும் “ஆ..மா…நீ யார் முதல்ல எனக்கு?என்னை கேட்க உனக்கு என்ன உரிமை இருக்கு” என தன்னை சமாளித்து அந்த கேள்வியை எழுப்பினான்.
இதுநாள் வரை அவளிடம் பேசியிராத ஒரு விறைப்பான தோரணை அவனிடம்!
அவளிற்கு வலிக்கும் என்று தெரிந்தே அவளை காயப்படுத்தும் சொற்களை உபயோகித்தான் வீர்.
அவன் எண்ணியது போல் அவளின் இதயம் பலத்த அடி வாங்கியது.
அவனை அடிப்பட்ட விழிகளோடு ஏறிட்ட தாரிகை “நான் உங்களுக்கு என்ன உறவுனு உங்களுக்கு தெரியாதா வீர்?” என தீட்சண்ய குரலில் கேட்டவளின் குரல் சிறிது கரகரத்ததோ?
அவனோ எதுவும் பேசாமல் இறுக்கமாக நின்றுக்கொள்ள,அதில் வெகுண்டவள் “சோ பதில் பேச மாட்டிங்கயில்லை?” என கேட்டவளின் விழிகளில் கனல் தெறித்தது.
அவன் அப்போதும் மௌனம் காக்க அவளிற்கு மனம் வெறுத்துப்போனது.
அவனிற்காக அவள் அகிலத்தையே தூக்கியெறிந்துவிட்டு வர காத்திருக்க,அவனென்றால் யாரோ ஒரு பெண்ணிற்காக அவளின் நேசத்தை காலில் தூக்கிப்போட்டு மிதித்ததை அவளால் கிரகிக்கவே முடியவில்லை.
அவளிற்கு வலித்தது…
உடலில் உள்ள ஒவ்வொரு அணுவையும் ஊசியால் குத்தியது போன்ற ஒரு பிணி…
முகமெல்லாம் துக்கத்தில் சிவந்திட கண்களில் நீர் கோர்த்தது.
ஆனால் அவள் அழ மாட்டாள் ‘அழக்கூடாது’ என தனக்கு தானே தீரத்துடன் முடிவெடுத்தவள்
“வீர் உங்களையே சுத்தி சுத்தி வர்றதாலே தான் உங்களுக்கு என் அருமை தெரியலை…என்னை நீங்க ரொம்பவே நீங்க காயப்படுத்திட்டிங்க…இதுக்கு மேலே உங்களோட போராட என்னாலே முடியாதுங்க…இங்க ரொம்பவே வலிக்குது” என தன் நெஞ்சத்தை தொட்டு உயிரை உருக்கும் குரலில் உரைத்தவள்,
“இனி நீங்களே என்னை தேடி வர வரைக்கும் நான் உங்ககிட்ட பேசறதா இல்லை வீர்…நான் போறேன்…உங்களை விட்டு முழுசா போறேன்…சந்தோஷமா இருங்க” என வலி ஊடுருவ வெளிப்பட்ட கண்ணீரை உள்ளுக்குள் இழுத்தப்படி கூறியவளின் குரலில் உச்சக்கட்ட விரக்தி தாண்டவமாடியது.
அவனை சில கணங்கள் ஆழ்ந்து நோக்கிய பாவை,அப்போதும் அவனது உருவத்தை விழிகளால் நிரப்பிக்கொண்டே சென்றிருந்தாள்.
இறுதியாக,அங்கிருந்து அகலும் முன்பு சந்திரமதியை உறுத்து விழித்தப்படி சென்றவளின் விழியில் அனல் தெறித்தது.
அதுவரை அவர்களின் உரையாடலில் வெறும் பார்வையாளாராக இருந்த சந்திரமதிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.
அதிலும்,அவளிடம் கடுமையாக பேசினாலும்,தமயந்தி பேசும் ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்டு தமையன் உள்ளுக்குள் மரித்துக் கொண்டிருப்பதை அவன் விழி வழியே அறிந்துக்கொண்டாள் தங்கை.
தமயந்தி அங்கிருந்து செல்லும் போது கூட அவளை தடுக்க முயன்ற கரத்தை அவன் கைமுஷ்டி இறுக கட்டுப்படுத்தியதை வைத்தே வீருக்கும் அவளின் மீது காதல் இருப்பது வெட்ட வெளிச்சமாகியது.
“அண்ணா நீங்க பண்ணறது கொஞ்சம் கூட சரியில்லை…ரொம்பவே தப்புண்ணா” என சந்திரமதி அவனை குற்றஞ்சாட்ட,
அவனிற்கும் அது தவறு என்பது தெரிந்தாலும் வெளியே
“அவ கிடக்கிறாள் விடும்மா” என அலட்சியமாக பேசி அதனை புறம் தள்ள முயன்றான்.
ஆனால் அவனால் முயல மட்டுமே முடிந்தது.
ஏனெனில்,அவனின் முகம் மனதின் வலியை பளிங்கு கல்லாய் வெளியே பிரதிபலித்தன.
அதனை ஆழ்ந்து கண்ணுற்ற சந்திரமதி “என்ன அண்ணா அவ கிடக்கிறாள் விடுன்னு அசால்ட்டா சொல்லறீங்க? அவங்க பேசறதை பார்த்தாலே உங்களை ரொம்பவே லவ் பண்ணுறாங்கனு தெரியுது…நீங்களும் அவங்களை காதலிக்கிற மாதிரி தான் இருக்கு…தென் எதுக்காக அவங்களை அவமானப்படுத்தி அனுப்பறீங்க?பார்க்கவே ரொம்ப பாவமா இருக்குண்ணா” என்றவளின் முகம் நிஜமான வலியை வெளிப்படுத்தின.
ஒரு காதல் தோல்வியால் பாதிப்புற்ற பெண்ணிற்கு அதன் உயிர் வதை தெரியும் என்பதாலே தமயந்திக்கு ஆதரவாக கொடிப்பிடித்தாள் சிறியவள்.
ஆனால் அவனோ “அதை பத்தி பேச வேணாம் விடும்மா” என்று அவனது வாய் மட்டுமே கூறியதே தவிர அவனின் மனம் நிலைக்கொள்ளாமல் அவளிற்காக தவித்தது.
அவனின் அலைப்புற்ற விழியை கண்ட சந்திரமதி “உங்க விஷயத்திலே தலையிட எனக்கு இஷ்டமில்லை அண்ணா…ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் உங்ககிட்ட நான் சொல்லணும்னு நினைக்கிறேன்…ஒரு பொருள் நம்பகிட்ட இருக்கிற வரை அதனோட மதிப்பு தெரியாது…அது நம்ப கையை விட்டு போற சமயம் தான் எப்படிப்பட்ட சொர்க்கத்தை இழந்திருக்கோம்னு புரியும்…இழந்ததுக்கு பிறகு கவலைப்பட்டு பிரயோஜனமில்லை அண்ணா…இப்போவே தக்க வைச்சுக்கோங்க…அது தான் உங்களுக்கு நல்லது” என மறைமுகமாக அவனிற்கு அறிவுரை கூறிவிட்டு அவள் சென்றிருந்தாள்.
அவனோ ‘எனக்கும் அவளோட அருமை தெரியும்மா…அவ ஒரு பொக்கிஷம்…அதை காவல் காக்கிற உரிமை மட்டும் தான் எனக்கு இருக்கு…ஆனால் அந்த பொக்கிஷத்தை எனக்கு சொந்தமாக்கிக்க நினைக்கிறது ரொம்ப அபத்தமா இருக்கும்மா…அதுக்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை…நடக்காத ஒண்ணுனு தெரிஞ்சப்பிறகு விலகியிருக்கிறது தான் நல்லதும்மா’ என மனதில் எழுந்த வலியோடு விழி மூடியவனின் இமையோரம் கண்ணீரின் துளி!
ஏனெனில்,ஒரு நாள் அவர்களது வீட்டு வாசலில் தமயந்தி வீரின் கன்னத்தில் முத்தமிட்டதை காணக்கூடாத இரு விழிகள் கண்டிருந்தன.
அந்த விழிகளுக்கு உரித்தானவர் வேறு யாருமல்ல சாட்சாத் விஜயேந்திரன் தான்!
அந்த காட்சியை கண்டவரின் உதிரமெல்லாம் எரிமலை போல் கொதித்துக் குமுறின.
தன் மகளுக்கு காதலா?அதுவும் தங்களுக்கு கீழ் பணிப்புரியும் ஒருவனை நேசிப்பதா? என்ற கொலைவெறியும் ஆக்ரோஷமும் தலைத்தூக்க,அடுத்த கணமே இதனை கண்டிக்க முடிவு செய்துவிட்டார்.
மகளின் பிடிவாதம் அறிந்த தந்தை சூழ்ச்சியை மேற்கொண்டது என்னவோ வீரிடம் தான்!
எங்கு அடித்தால் இந்த காதலை வேரோடு பிடிங்கி எறிய முடியும் என்ற சூட்சமம் தெரிந்து வைத்திருந்த மனிதர் வீரை அணுகினார்.
ஒரு நாள் வீரை தன்னறைக்கு வரவழைத்த விஜயேந்திரன் “குடிசையிலிருந்து கோபுரத்திற்கு வர எல்லாரும் ஆசைப்படலாம் வீர்…அது வெறும் ஆசையா மட்டுமே இருக்கிற பட்சத்திலே எனக்கும் எந்த பிரச்சனையுமில்லை…ஆனால் கடைசி வரை கோபுரத்திலே தங்கி இருக்கணும்னு நினைக்கிறது எல்லாம் பேராசை…அதுக்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன்…உனக்கு நான் என்ன சொல்லறேன்னு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் வீர்” என மறைமுகமாக அவனை எச்சரித்த கையோடு “இனி நீ என் வீட்டுக்கு வர வேண்டாம்ப்பா…எதுவா இருந்தாலும் ஆபிஸிலயே பேசி முடிச்சுக்கலாம்…குறிப்பா தமயந்தியை நீ நெருங்கவே கூடாது…புரியுதா?” என அதீத ஆர்ப்பாட்டம் எதுவும் மேற்கொள்ளாமல் தந்திரமாக காய் நகர்த்தினார் அந்த அரசியல்வாதி.
முதலில் அவர் பேச்சின் உட்பொருள் அறியாமல் விழி சுருக்கிய ஆடவனிற்கு ‘தமயந்தி’ என்ற ஒற்றை பெயர் அனைத்தையும் விளங்க வைத்தன.
அவனது நிலை எது என்பதை உணர்த்த அவர் கூறிய சொற்கள் அவனது முகத்தை அவமானத்தில் கறுத்து சிவக்க செய்தன.
அவரோ அத்தோடு நிறுத்தாமல் “ஏன்பா உங்க அம்மா வீட்டுக்கு வந்திட்டாங்கனு கேள்விப்பட்டேன்…நல்லது…பாவம் எத்தனை வருஷமா ஆஸ்பத்திரியிலே இருந்தாங்க…என் அம்மா மட்டும் சரியான சமயத்திலே உதவலைனா உன் நிலைமை ரொம்ப மோசமாகியிருக்குமில்லைப்பா…இனியாவது அவங்க உன் கூட நிம்மதியா இருக்கட்டும்…ஹும்” என அவனிற்கு பரிதாபம் பார்ப்பது போல் பூடகமாக அவனிற்கு அவர்கள் செய்த உதவியை எடுத்துரைத்தவர்,
மேலும் “பூபதி உன் மேலே பயங்கர நம்பிக்கை வைச்சிருக்கான்ப்பா…துரியோதனனுக்கு கர்ணன் மாதிரி எனக்கு என் வீர்னு எப்பவும் சொல்லுவான்…அவன் நம்பிக்கைய கெடுக்கிற மாதிரி நீ எந்த துரோகமும் செய்யமாட்டேன்னு எனக்கு தெரியும்…அப்படியொரு விசுவாசி நீ…இல்லையா வீர்?” என நயவஞ்சகமாக சிரித்துக்கொண்டே அவனது இதயத்தை பலவீனமாக்கும் சொற்களால் அவனை தாக்கினார்.
அவர் வீசிய கணை சரியாக அவனது இதயத்தை சென்று பதம் பார்த்தது.
அவன் எதற்காக தமயந்தியை நிராகரித்தானோ?
எந்த காரணத்திற்காக அவளை விட்டு விலகியிருந்தானோ அதையே அவரும் எடுத்துரைத்ததும் அவனிற்கோ அது முகத்தில் அமிலத்தை எடுத்து ஊற்றியது போலிருக்க,அந்த ஆறடி உயர ஆண்மகன் ரணவலியில் துடித்துப்போனான்.
தவறு செய்துவிட்டமோ என அவனின் நெஞ்சம் குற்றவுணர்வில் தவிக்க,அதனை அதிகரிக்கும் விதமாக அவர் பேசியதை கேட்டவனிற்கு தன்னுடைய பெருந்தவறு உரைக்க,அவளிடமிருந்து மொத்தமாக விலக முடிவெடுத்து விட்டான்.
‘நட்பா?காதலா?’ என்று வருகையில் தராசு நட்பின் புறமாகவே இறங்கின.
இதயத்தை துடிக்க துடிக்க அறுக்கும் அளவு கொடூம் வலி உண்டாகினும் அவளை முழுமையாக நிராகரிக்க ஆரம்பித்துவிட்டான்.
அதன் முதல்படியாகவே அவளின் எண்ணை அலைப்பேசியில் கருப்பிட்ட வரிசையில் போட்டவன்,அடுத்ததாக அவளை சந்திக்கும் தருணத்தை முற்றிலும் புறக்கணித்தான்.
அதைத்தொடர்ந்து இன்று அவளிடம் கடுமையாக பேசி அனுப்பியதும் அந்த காரணத்திற்காகவே!
அவனிடமிருந்து விலகுவதற்கான ஆடவனின் புரட்சி மார்க்கம் தான் இவையெல்லாம்…
ஆனால் அதிகம் பாதிக்கக்குள்ளானது என்னவோ காதல் கொண்ட இருமனங்களும் தான்!
தமயந்தி துணிச்சலான பெண் என்றாலும் காதல் என்றும் வருகையில் வீரனும் கோழையே…
தன்னவனின் புறக்கணிப்பில் உள்ளம் உடைந்த மங்கையள் சாலையில் அநாதரவான நிலையில் அழ கூட தெம்பின்றி நடந்து சென்றுக் கொண்டிருந்தாள்.
அவளிடமிருந்து மொத்தமாக விலக எண்ணினாலும் அவளை தனியே விட மனமற்று அவள் வீடு போய் சேரும் வரை தன் ஜீப்பில் பின்தொடர்ந்து வந்தான் வீர்.
அவளோ எவ்வாறு வீட்டிற்கு வந்து சேர்ந்தோம் என்று தெரியாத மனம் மரத்த நிலையில் வீடு வந்து சேர்ந்திருந்தாள்.
மகளின் முகம் உயிரற்று இருப்பதை கண்ட விஜயேந்திரனிற்கு கஷ்டமாக தான் இருந்தது.
அவருக்கு வீரை பற்றி நன்றாக தெரியும்.அவன் எப்போதும் பூபதியின் மீதான நட்பிற்கு கட்டுப்பட்டவன்,அவனால் அதற்கு துரோகம் இழைக்க முடியாது என்று!
அதன் பொருட்டே அவர் மகளை எந்த வகையிலும் அடக்க நினைக்கவில்லை…
அவர் நினைத்தது அனைத்தையும் வீரை வைத்து செயல்படுத்திக்கொண்டார்.
தாம் கொண்ட காரியத்தில் வாகையும் சூடினார்.
தந்தையின் சூட்சமம் அறியாத தமயந்தியோ இதயமே வெடித்து சிதற தன் கட்டிலில் சென்று விழுந்தவள்,அதன்பிறகு எழவே இல்லை.
ஒவ்வொரு நொடியும் அவனிற்காக அவளின் இதயம் துடிக்க,ஆடவனோ மொத்தமாக அவளின் நேசத்தை உதாசீனம் செய்ததை அவளால் ஏற்கவே முடியவில்லை.
அன்றைய நாள் முழுவதும் தன்னறைக்குள்ளே அடைந்து கிடந்தாள் தமயந்தி.
வானதியும் அவளை உணவருந்த அழைத்து ஓய்ந்துப்போனார்.
“அத்தை என்னானே தெரியலை…அவ முகமே சரியில்லை…சாப்பிட கூப்பிட்டாலும் வரலைன்னு சொல்லறாள்…எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” ஒரு தாயாக தன் மகளை எண்ணி கவலையுற்றார் அவர்.
காஞ்சனா மாலாவின் புருவமும் அவரின் பேச்சை கேட்டு சுருங்கின.
அதற்குள் அவசரமாக இடைப்புகுந்த விஜயேந்திரன் “கல்யாணம் பேசறோமில்லை…அதனாலே ஒரு மாதிரி வெட்கமா இருக்கும்…இன்னைக்கு அவளை விடு…நாளைக்கு வந்து அவளே சாப்பிடுவாள்” என சொல்ல,அவரின் பேச்சை வானதியால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.
அன்று காலை நடந்த நிகழ்வு தான் அவருக்கு நன்கு தெரியுமே?
அதனால் அதனை வெட்கம் என கருதாமல் மகளிற்கு ஏதேனும் பிரச்சனையா என்ற ரீதியிலே அவரின் மனம் சிந்தித்தது.
ரத்தினவேல் அனைத்தையும் மௌனமாக பார்த்திருந்தானே ஒழிய,யாரிடமும் எதுவும் பேசவில்லை.
வழக்கம் போல் இங்கு நடக்கும் யாவும் புரியாமல் திருதிருவென விழித்த ஒரு ஜீவன் முகிழ்மதி மட்டுமே!

மகளின் நிலை இங்கு மோசம் என்றால் மகனோ அதற்கும் மேலாக இருந்தான்.
வேலை முடிந்து அவன் வீட்டிற்கு வருவதற்கே இரவு பதினொன்றை கடக்க ஆரம்பித்தது.
பெற்றவரான வானதிக்கு அது மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தன.
தனக்காக அன்னை காத்திருப்பது அவனிற்கும் கவலையைக் கொடுக்க “அம்மா எனக்காக வெயிட் பண்ண வேணாம்…நீங்க தூங்குங்க” என பலமுறை கூறிவிட்டான்.
ஆனாலும் அன்னையவளின் உள்ளம் அதனை ஏற்க மறுத்தது.
ஆடவனோ தாயின் தவிப்பறியாமல் அலுவலகத்தில் உள்ள இருக்கையில் தலைசாய்த்து விழி மூடி அமர்ந்திருந்தான்.
சிந்தைக்குள் அவனது வாழ்வு திடீரென்று தலைகீழாக மாறிய அந்த துர் நிகழ்வை நோக்கி பயணித்தது.
ஜித்தேந்திரனிற்கு போதை மருந்து வழங்கிய இரண்டு நாட்களுக்கு பிறகு,ரோகிணி அவனை தனிமையில் சந்திப்பதற்காக அழைத்திருந்தாள்.
அவள் தன்னுடைய இலக்கை அடைவதற்கு இப்படியொரு கீழ்த்தரமான வேலையில் இறங்குவாள் என்று அவன் துளியும் எதிர்பார்க்கவில்லை.
அவள் சிறிது அகந்தையான குணம் உள்ள பெண் என்று மட்டுமே எண்ணியிருந்தான்.
ஆனால் தாம் நினைத்ததை அடைவதற்காக ஒரு பெண் இப்படியொரு தரம் தாழ்ந்த செயலை செய்வாள் என அவன் கனவிலும் நினைக்கவில்லை.
அவனிற்கு போதை தெளிந்து எழுந்தப்பிறகே நடந்தேறிய அனைத்து நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவில் எழ,அவனால் நடந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
‘கடவுளே’ என தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டவனிற்கு சந்திரமதியை எவ்வாறு ஏறெடுத்து பார்ப்பது என்றும் தெரியவில்லை.
இதற்கெல்லாம் காரணமான ரோகிணியைப் பற்றி எண்ணும் போதே அவளை கொலை செய்யும் வெறி வந்தது.
அவள் செய்த காரியத்தை நினைக்கும் போது அவனின் நெஞ்சம் கொதித்தது.
இரண்டு நாட்களாக அவன் உச்சக்கட்ட கொதி நிலையில் இருக்க,மூன்றாம் நாள் அவளாகவே அவனும் அவளும் படுக்கையில் இணைந்திருப்பது போன்ற புகைப்படத்தை அனுப்பி “ஜித்து நான் உன்னை இப்போவே மீட் பண்ணியாகணும்…வரலைன்னா இந்த இமேஜ் மொத்தமும் மீடியாவிலே இருக்கிற எல்லாருக்கும் அனுப்பிடுவேன்” என மிரட்டியே அவனை அவளின் அகந்தைக்கு அடிப்பணிய வைத்திருந்தாள்.
அவர்களது சந்திப்பு வழக்கம் போல் அதே நட்சத்திர விடுதியில் தான் நடந்தேறின.
அதுவும்,தனிமையில்…
அவன் அவளை ஏறிட்டு பார்க்க பிடிக்காமல் வேறுப்புறம் தலை திருப்பி அமர்ந்திருந்தான்.
அவனிற்கு வந்த ஆத்திரத்திற்கு அவளை அப்போதே கழுத்தை நெறித்து கொல்லும் வெறி வந்தது.
கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்திருந்த ரோகிணியின் விழிகளோ அவனை தலை முதல் பாதம் வரை எகத்தாளமாக அளந்தது.
அவளின் பார்வை கூட அவனிற்குள் அருவருப்பை கொடுக்க,அவன் முகத்தை சுளித்தான்.
அவள் அதையெல்லாம் கிஞ்சித்தும் மதிக்கவில்லை.
ஏனெனில்,அவள் தான் தனது வெற்றி கனியை பறித்திருந்தாளே?
“என்ன ஜித்து எப்படி இருக்கே?ரொம்ப நல்லா இருக்க போலவே” என்று கேட்டவளின் குரலில் அப்படியொரு நக்கல்!
அவளிடம் தக்கப் பதிலடி கொடுப்பதற்கு அவனிடம் பதிலேதுமில்லை.
அதனால் அவளை ஏறிட்டு தன் கூரிய விழிகளால் சுட்டெரிக்க,அவளோ இதழை வளைத்து “ஓவரா ஆட்டம் போட்டியே ஜித்து…இப்போ நீ அடங்கிப்போய் இருக்கிறதை பார்த்தால் எனக்கே பாவமா இருக்கு…பாவம் சோ சேட்” என சோகமாக உரைப்பது போல் அவனை நன்றாக பரிகாசம் செய்ய,
அவனிற்குள் சுறுசுறுவென ஆத்திரம் பெருகியது.
அவளோ அவனது பொறுமையை மேலும் சோதிக்கும் விதமாக “ஹான்…இப்போ நம்ப கல்யாணத்திலே உனக்கு எந்த ஆட்சேபணையும் இருக்காதுனு நினைக்கிறேன்… மீறி ஏதாவது இருந்தாலும் சொல்லு…அதையும் இன்னைக்கே பேசி தீர்த்துக்கலாம்” என அசால்ட்டாக ஒற்றை புருவம் உயர்த்தி மொழிந்தவளின் விழியில் ஒரு சவால் இருந்தது.
‘நீ என்னை எப்படி வேணாம்னு சொல்லறேன்னு பார்க்கறேன்டா’ என்ற மிதப்பு அவள் முகத்தை தெரிய,
அவளின் நக்கல் ஆடவனை உசுப்பிவிட்டதின் விளைவாக அதுவரை அமைதியாக இருந்த ஜித்தேந்திரன் முதன்முறையாக கோபத்தில் வெடித்தான்.
“ச்சை நீயெல்லாம் என்ன மாதிரி பிறவிடி…நீ நினைச்சது நடக்கணும்ன்றதுக்காக இவ்வளவு கேவலமா இறங்கிவியா?உன்னை பார்த்தாலே அருவருப்பா இருக்கு…நீயெல்லாம் மனுஷியே இல்லை…” என காறி உமிழாத குறையாக பேசியவனின் நெஞ்சம் சீற்றத்துடன் குமுறியது.
அவளோ “ஹோ என்னை பார்த்தால் அருவருப்பா இருக்கு…இருக்கட்டும் ஒண்ணும் பிரச்சனையில்லை…காலம் முழுசும் இந்த முகத்தை தான் நீ பார்க்கணும்…உனக்கு வேற சாய்ஸ் இல்லை ஹப்பி” என சிரித்துக்கொண்டே தெனாவெட்டாக கூறியவளின் முகத்தில் இளக்காரம் தாண்டவமாடின.
அவள் ‘ஹப்பி’ என்றதை கேட்டு கடும் சினம் கொண்ட ஆடவன் “ரோகிணி நீ உன் எல்லையை மீறி போயிட்டு இருக்கே?நீ கூப்பிட்டவுடனே வந்ததாலே உனக்கு பயந்திட்டேன்னு நினைச்சியா?நெவர்…உன் இஷ்டத்துக்கு என்ன தோணுதோ பண்ணுடி…நான் உன்னை மட்டும் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்…அதை சொல்லிட்டு போக தான் வந்தேன்” என அவனிற்கே உரிய ஆக்ரோஷத்துடன் கூறியிருந்தான்.
அவளோ அதற்கெல்லாம் அசரவே இல்லை.
“ஓ…ஐ சீ” என அலட்சியமாக சொல்லிக்கொண்டே,அவனை ஆழ்ந்து நோக்கிய ரோகிணி “நீ இதுக்கெல்லாம் அசரமாட்டேனு எனக்கு நல்லாவே தெரியும் ஜித்து…அதுக்கு தான் வேறொரு அஸ்திரம் எடுத்திட்டு வந்திருக்கேன்” என்றவள் தன் அலைப்பேசியிலிருந்து எதையோ தேடி எடுத்தாள்.
அடுத்த கணமே நெருப்பாய் கொதித்துக்கொண்டிருந்த ஆடவனை ஏறிட்டவள் “உனக்கு கண்ணு நல்லா தெரியும்னு நினைக்கிறேன்…இதிலே இருக்கிறது யாருனு கொஞ்சம் கண்ணை விரிச்சு பாரு செல்லம்” என விஷமத்துடன் சொல்லிக்கொண்டே அலைப்பேசியை அவனை நோக்கி தள்ளிவிட்டாள்.
அவள் கையில் அலைப்பேசியை தராமல் தள்ளிவிட்டது அவனது தன்மானத்தை தூண்டிவிட “நான் எதுக்கு நீ சொல்லறதெல்லாம் செய்யணும்?தேவையில்லாமல் என் டைம் வேஸ்ட் பண்ணாதே…நீ பேச வேண்டியதை எல்லாம் பேசி முடிச்சிட்டான்னா நான் கிளம்பறேன்” என்றான் உச்சக்கட்ட கோபத்துடன்…
அவளோ “ப்ச்…ச்சூ…” என உச்சுக்கொட்டி அவனை கேலி செய்தவள் “ஜித்து நான் சொல்லும் போதே இந்த ஃபோட்டோவை பார்த்திடுங்க…பார்க்கலைனா பின்னாடி ரொம்ப வருத்தப்படுவீங்க…யாரு கண்டால் இந்தவொரு ஃபோட்டோ உங்க அப்பாவோட அரசியல் பயணத்தையே முடிச்சு வைக்கலாம்…இல்லையா உங்க அண்ணானோட வாழ்க்கையிலே சூறாவளிய கொண்டு வரலாம்…அப்படி இல்லையா உங்க ஒட்டுமொத்த குடும்பத்துக்கே கருமாதி கூட நடக்க வைக்கலாம்” என முகத்தில் வெஞ்சினம் படர குரூரம் நிறைந்த குரலில் எடுத்துரைத்தவளின் பாவனை ஆண்மகனான அவனையே விதிர்விதிர்க்க செய்தன.
அவளது பேச்சில் இருந்த வஞ்சகமும் அதிலிருந்த உண்மை தன்மையும் அவனது இதயத்தை படபடக்க வைக்க,அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு எட்டி அவளின் அலைப்பேசியில் இருந்த புகைப்படத்தை பார்த்தான் ஜித்து.
முதலில் அதனை அலட்சியமாக நோக்கிய ஆடவனின் தேகமோ சடுதியில் விறைத்து இறுகிப்போனது.
இப்படியொரு காட்சியை அவன் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.
அதில் ஹிரிஷ் சந்திரமதியை முத்தமிடுவது போன்ற புகைப்படம் தான் அது!
ஒரு அந்நிய ஆடவன் தன்னவளை முத்தமிடுவது போன்ற காட்சியை பார்த்தவனின் உள்ளம் வெடித்து சிதற,அவனிற்கு வந்த ஆத்திரத்தில் அந்த அலைப்பேசியை தன் கரங்களால் நெறிக்க ஆரம்பித்தான்.
அவனது கழுத்து நரம்புகள் புடைத்த விதம் கண்ட ரோகிணியிற்கு அவை போதுவில்லை போலும்…
ஆதலால் “ஜித்து இது ஜஸ்ட் இமேஜ் மட்டும் தான்…என்கிட்ட ஃபுல் எச்டி வீடியோ கூட இருக்கு…யூ வான்னா சீ?” என அவனது மனதை காயப்படுத்தும் நோக்கத்துடன் கேட்டவளிற்கு அதீத எக்களிப்பு!
அவனை கண்காணிக்க ஆள் வைத்தவளிற்கு அவனது காதல் தெரியாமல் இருந்தால் தான் அதிசயம்!
அதனால் தன்னை விட்டு அவளின் பின்னால் சென்றதற்கான தண்டனை தான் இது!
அவனை துடிக்க வைக்க வேண்டும் என அவள் எண்ணினாள்.
இப்போது அதனை செவ்வனே செய்துக்கொண்டிருந்தாள்,அந்த ராட்சசி!
இப்படியொரு வலியை அவன் வாழ்வில் அனுபவித்ததே இல்லை…
வலி என்றால் அப்படியொரு வலி…இதயமே வெடித்து சிதறும் அளவு வலித்தது.
கூடவே,அவனிற்குள் பெரும் ஆத்திரம்!
ஒரு புகைப்படமே அவனிற்குள் பெரும் பூகம்பத்தை கொண்டு வந்திருக்க காணொளி பற்றி எண்ண எண்ண அவனின் ஆவேசம் எல்லையை கடந்தன.
கோபம்,ஆவேசம்,ஏமாற்றம்,வலி என பல வகையான உணர்ச்சி குவியல்களுக்கு இடையில் சிக்கிய ஆடவனால் அதனை ஏற்கவே முடியவில்லை.
தனது இதயத்தில் குடி வைத்திருக்கும் பெண்ணை வேறொரு ஆண்மகன் முத்தமிடுவதை எந்தவொரு காதலனால் தான் சாதாரணமாக கடக்க முடியும்?
அவனது உள்ளத்தின் உணர்வுகளை பிரதிபலிப்பது போல் அவனின் விழிகள் இரண்டும் சிவந்துவிட்டன.
அவனிற்கு வந்த ஆத்திரத்தில் அவனது கையிலிருந்த அலைப்பேசியின் விம்பம் உருமாற தொடங்கின.
அவனது உடைந்து நொறுங்கிய இதயத்தை போல் அவனது கையிலிருந்த அலைப்பேசி மொத்தமாக நொறுங்க ஆரம்பித்தன.
உடைந்த கண்ணாடி சில்லுகளின் பிசிறுகள் அவனது கரத்தை கீறி பதம் பார்த்ததின் விளைவாக அவனது கரத்திலிருந்து உதிரம் கொட்டின.
அவனது கையில் வழிந்த உதிரத்தை ரசனையாக நோக்கிய ரோகிணி “அச்சோ என்ன ஜித்து இப்படி என் காஸ்ட்லி ஃபோனை கையாலே உடைச்சிட்டிங்க?பாருங்க உங்க கையிலே இரத்தம் வேறு வருது…பாவம்” என பாவமாக கூறியவளின் முகத்தில் மருந்திற்கும் கருணையில்லை.
அவளின் குரலிலும் சரி…முகத்திலும் சரி அளவுக்கதிகமான நக்கலும் நையாண்டியும் மட்டுமே பொதிந்திருந்தது.
“சரி விடுங்க நான் வேற ஃபோன் வாங்கிக்கறேன்” என வேறு வழியில்லாதது போல் கூறியவள்,
மேலும் அவனின் இதயத்தை கூறுப்போடும் விதமாக பேச ஆரம்பித்தாள்.
“ஜித்து இது ஆக்சுவலி உங்க அண்ணியோட டிவின் சிஸ்டர் தான்…பட் மத்தவங்களுக்கு இது தெரியாதில்லை…அதுவுமில்லாமல் மிஸ்டர் ரத்தினவேல் அவங்க பொண்டாட்டிய முறையா வேற உலகத்துக்கிட்ட அறிமுகப்படுத்தலை…சோ அவங்க கல்யாணம் நடந்ததே ஒரு கான்ட்ரோவர்சி தான்…இந்த நிலைமையிலே முதலமைச்சரோட மூத்த மருமக கிளப்பிலே ஒரு ஆம்பளையோட சல்லாபம்னு நியூஸ் பரப்பினால் எப்படி இருக்கும்?தேர்தல் வரைக்கும் இது தான் ஹாட் நியூஸ்…சும்மா வியூஸ் பிச்சுக்குமில்லை…” என விரல் சொடுக்கி குரலில் ஏற்ற இறக்கத்துடன் குதூகலமாக உரைத்தவளை அவன் வெறித்து பார்த்தான்.
ஒரே நேரத்தில் அவனது காதலை உயிரோடு கொன்றது மட்டுமின்றி அவனது குடும்பத்தின் கௌரவத்தையும் குலைக்கும் விதமாக குரூரமாக பேசியவளை மண்ணோடு மண்ணாக்க அவனது நாடி நரம்புகள் அத்தனையும் துடித்தன.
அவர்கள் இருவரின் கட்டிலறை புகைப்படத்தை கண்டப்போது கூட அவன் பெரிதாக அஞ்சிவிடவில்லை.
ஏனெனில்,அதனை சமாளிக்கும் அளவு அவனிற்கு திறமையும் துணிச்சலும் இருந்தன.
ஆனால் இது சாதாரண விடயமல்லவே…ஒரு பெண்ணின் நடத்தை சார்ந்த விஷயம்…
இந்த விடயத்தில் அவனது காதலி மட்டுமில்லை…அன்னையிற்கு நிகரான பெண்ணவளின் வாழ்க்கையும் அடங்கியிருக்கிறது.
அதிலும் முகிழ்மதியின் குணம் பற்றி நன்கு அறிந்த ஆடவனிற்கு அவளால் நிச்சயம் இதுப்போலான குற்றச்சாட்டுகளை தாங்க முடியாது என்று தோன்றின.
ஒழுக்கத்தை உயிரினும் மேலாக கருதும் தனது குடும்பத்தினருக்கு இவையெல்லாம் தெரிந்தால் என நினைக்கும் போதே சர்வ அங்கமும் ஆடிப்போயின.
அவனது உயிரற்ற முகத்தை பார்த்து இரக்கமின்றி சத்தமாக சிரித்தாள் அவள்.
அவளின் சிரிப்பு சத்தம் கேட்டு அவன் தலையுயர்த்தி அவளை காண,அவளோ “என்ன ஜித்து பயந்திட்டீங்களா?” என கண்சிமிட்டி கேட்டவள்,
“டோன்ட் வொர்ரி…நீங்க என்னை கல்யாணம் பண்ணலைனா மட்டும் தான் இது ஹாட் நியூஸ்…இல்லைனா இது வெறும் சீக்ரெட் மட்டும் தான்…பிகாஸ் நான் கல்யாணம் பண்ண வீட்டை பத்தி யாராவது தப்பா பேசினால் என்னாலே தாங்க முடியுமா என்ன?அந்த அளவு உங்களை நான் லவ் பண்ணறேன் ஜித்து…ஐ பிராமிஸ்…என்னை மீறி விஷயம் எங்கியும் வெளியப் போகாது…நம்புங்க” என நிமிடத்திற்கு நிமிடம் தன் முகத்தை மாற்றி பேசியவளை விசித்திரமாக நோக்கினான் அவன்.
தனது குடும்பத்திற்காகவும் குடும்பத்தின் கௌரவத்திற்காகவும் வேறுவழியின்றி அவன் அமைதிக்காத்தான்.
அவனிடம் வேறு எந்த மார்க்கமும் இருப்பதாக தெரியவில்லை.
ரோகிணி அவனை அப்படியொரு உறுதியான விலங்கை கொண்டு தான் சிறைச் செய்திருந்தாள்.
இத்துடன் தன்னவளை பற்றி அவன் வரித்து வைத்திருந்த விம்பமும் பொய்த்துப் போனதில் அவனின் மனம் பெரும் காயமுற்றது.
உயிருடன் இருக்கும் போதே அதை வேரோடு பிடிங்கி எறியும் ரண வேதனையை அவன் அனுபவித்தான்.
ஆதலால்,சந்திரமதியை சந்திக்கும் திரணற்று வீடு விட்டால் அலுவலகம் என அதிலே அவனது நேரம் முழுவதும் கழிந்தது.
இதற்கிடையில் ரோகிணியின் இம்சை வேறு…
அவள் அழைக்கும் இடத்திற்கு அழைக்கும் நேரத்திற்கு செல்ல வேண்டும்…வர மறுத்தால் அவளிடமுள்ள புகைப்படம் இத்யாதிகளை வைத்து மிரட்டல் விடுக்க தொடங்கினாள்.
அவனும் வேறுவழியின்றி அவளின் கைப்பாவையாக மாறி அவள் இசைவுக்கு ஏற்ப ஆடினான்.
அவள் ‘நில்’ என்றால் நிற்க வேண்டும்…’உட்கார்’ என்றால் உட்கார வேண்டும்…சிறிது பிசகி அவன் நடந்தாலும் கூட விளைவு விபரீதமாக இருக்கும்.
தனது குடும்பத்தின் மானம் காக்க தனியொருவனாக அவன் போராட,விஜயேந்திரனோ பிள்ளைகளின் இருவரின் வாழ்விலும் தன் பங்கிற்கு ஒரு புறம் பந்தை உருட்டி விளையாடிக்கொண்டிருந்தார்.
அலுவலகத்தில் வேலையில் இருந்த ஜித்தேந்திரனிற்கு ரோகிணி அழைக்க,அவனிற்கோ வெறுப்பாக இருந்தது.
அவனை மாலை ஒரு பணக்காரர்களின் மது விருந்திற்கு அழைத்திருந்தாள் அவள்.
அதுவொரு ஏடாக்கூடமான விருந்து…அங்கு வரும் யாவருக்கும் கண்ணியம் என்றால் என்ன விலை என்று கேட்பார்கள் போலும்…
ஜோடியாக செல்லும் இணையினர் அனைவரும் பண்டமாற்றும் முறையில் வேறொரு இணையினரோடு மது அருந்தி ஆட வேண்டும்.
அதையும் விட முகத்தை சுழிக்க வைக்கும் அருவருப்பான பல கலாச்சார சீரழிவுகளும் அந்த விருந்தில் நிகழும்.
அதை அவனால் ஜீரணிக்கவே முடியாது.
ஒழுக்கமாக வளர்க்கப்பட்டிருக்கும் ஆடவனிற்கு ஒழுக்கம் கெட்டு ஜோடி மாற்றி சல்லாபம் கொள்ளும் மேல்நாட்டு அந்த கலாச்சார விருந்து பிடிக்கும் என்ன?
முதல் முறை அவளுடன் சென்று அவனிற்கு ஒவ்வாமையில் வாந்தியே வரும் போலிருந்தது.
அதனால் இம்முறை அவளுடன் செல்ல விருப்பமின்றி “ரோகிணி ட்ரை டூ அன்டர்ஸ்டென்ட் மீ…எனக்கு அந்த மாதிரி பார்ட்டிக்கு வர விருப்பமில்லை…அதுவுமில்லாமல் வேலையும் இங்க அதிகமா இருக்கு” என அவளிடம் நிச்சலனத்துடன் மறுத்தான்.
அவளோ அவன் கூறியது எதையும் காதில் வாங்காமல் “எப்போ நீ வருவே?” என சுள்லென்று கேட்க,
அவனோ “ரோகிணி புரியாமல் பேசாதே…நான் என்ன உன்னோட பொம்மையா?உன் இஷ்டப்படி ஆட…என்னாலே இப்போ வேலைய விட்டு எங்கியும் வரமுடியாது” என்றான் கோபமும் அழுத்தமுமாய்…
“எஸ் நீ என்னோட பொம்மை தான்…எனக்கு வேற எந்த ரீசனும் தேவையில்லை…நீ எப்போ கிளம்பி வர்றே” என தன் பிடியிலே அவள் உறுதியாய் நிற்க,
“ரோகிணி” என ஆற்றாமையுடன் அவன் அழைக்க,
அவளோ “இன்னும் அரை மணி நேரத்திலே நீ இங்க இருக்கணும்” என கட்டளையிட்டு அழைப்பை துண்டித்து விட்டாள்.
அலைப்பேசியை சில கணங்கள் வெறித்துப் பார்த்தவனின் இதழ்கள் ‘சைக்கோ’ என்று முணுமுணுத்தது.
ஆனால் அவளிட்ட கட்டளையை நிறைவேற்ற அவனது உடல் மற்றும் மனம் இரண்டிலும் தெம்பில்லை..
அத்தோடு,திடீரென்று வெளிநாட்டிலிருந்து வாடிக்கையாளர் ஒருவர் இங்கு வந்துவிட்டதால் அவருடன் நேரத்தை செலவிட வேண்டிய கட்டாயம்!
அவனுடைய இக்கட்டான நிலையை புரிந்துக்கொள்ளாத ரோகிணியோ அவள் குறிப்பிட்ட நேரம் தாண்டி அவன் வராததால் ‘என்னையே நீ அவமதிக்கறீயாடா?’ என வெஞ்சினத்துடன் எண்ணியவள்,அடுத்த கணமே முகிழ்மதிக்கும் ரத்தினவேலுவிற்கும் நடந்த திருமண நிகழ்வை ஊடகத்தில் வெளியிட்டு இருந்தாள்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்க இந்த அவசர செய்தி காட்டு தீ போல் தமிழகமெங்கும் பரவி பரபரப்பை கிளப்பியிருந்தது.
அந்த இரகசியத்தை வெளியிட்டது மட்டுமின்றி ஜித்தேந்திரனிற்கு ‘இது ஜஸ்ட் சேம்பிள் ஜித்து…நெக்ஸ்ட் டைம் பாம் மஸ்ட் பீ பிளாஸ்ட்’ என குரோதத்துடன் அனுப்பியிருந்தாள்.
அவள் அனுப்பிய தகவலை இரவு வேலை முடிந்த பிறகே நிதானமாக வாசித்த ஆடவனிற்கு தேகம் விதிர்விதிர்த்துப்போனது.
அவன் அடுத்த கணமே பதறிப்போய் வீட்டிற்கு ஓடி வந்தான்.
இந்த விடயம் வெளியில் தெரிந்ததும் வீட்டில் ஒரு ருத்ர தாண்டவமே ஆடிவிட்டார் விஜயேந்திரன்.