முகிழ்மதி 103,104(1)

முகிழ்மதி 103:


 

 

ஜித்தேந்திரன் நட்சத்திர விடுதியில் நுழைந்ததுமே ரோகிணி அவனை கட்டியணைத்து வரவேற்க,

அதை சற்றும் எதிர்பாராத ஜித்து ஒரு கணம் திகைத்து பின்பு தெளிவுற்றவன் “ரோகிணி வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்?” என அடிக்குரலில் சீறி அவளை தன்னிலிருந்து விலக்கி நிறுத்தினான்.

ரோகிணியோ அப்போதும் முகம் மாறாமல் சிரித்துக்கொண்டே “ஓகே ஓகே காம் டவுன்…வாங்க” என முன்னால் நடக்க,

அவனோ ‘காட்…பைத்தியக்காரி பப்ளிக் பிளேஸிலே எப்படி சடனா ஹக் பண்ணறானு பாரு’ என சட்டையை இழுத்து விட்டவாறே விழிகளை சுழற்றினான்.

அவ்விடத்தில் இதையெல்லாம் வாயை பிளந்து பார்த்திருந்த மீனுவை பார்த்த ஜித்து ‘சுத்தம்’ என நெற்றியை நீவியப்படி ரோகிணியின் பின்னால் நடந்தான்.

ரோகிணியோ அவன் வழக்கமாக அமரும் குளம்பியகத்தை நோக்கி நடக்க “இங்க எதுக்கு?” என அவளருகே நடந்தப்படி வினவினான்.

ஏனெனில்,ரோகிணி இங்கு வந்தாலே அவளிற்கென பிரத்யேகமாக உள்ள தனியறையில் மட்டுமே யாவரையும் சந்திப்பாள்.

இன்று குளம்பியகத்தில் அவள் சென்று அமரவும் “சும்மா ஒரு சேன்சுக்கு ஜித்து…உங்களுக்கும் இந்த காஃபி ஷாப்னா ரொம்ப பிடிக்கும்னு கேள்விப்பட்டேன்” என்றவளின் குரலில் நக்கல் பொதிந்திருந்ததோ என்று ஒரு சந்தேகம் அவனிற்குள்!

அதனால் அவளை அவன் கூர்ந்து கவனிக்க அவளோ முகத்தில் எதையும் காட்டாமல் அவனை பார்த்து பளீச்சென்று புன்னகைத்தாள்.

‘இவளுக்கு என்னாச்சு?ஏன் ஒரு மாதிரி வித்தியாசமா நடந்துக்கிறாள்?சம்திங் ராங்’ என தாடையை நீவியப்படியே அமர்ந்தான்.

இவ்விடத்தில் அமர்ந்தால் அனைவரின் விழிகளும் தங்கள் மேல் பதியும் என்று அவன் அறிவான்.

குறிப்பாக,அவனவளின் விழிகளிலும் இக்காட்சி விழுந்து அவள் என்ன நினைப்பாளோ என்ற உறுத்தல் தோன்றினாலும் ‘முதல்ல இவளை பேசி அனுப்பவோம்…பிறகு அவக்கிட்ட பேசுவோம்’ என பெருமூச்சை வெளியேற்றினான்.

மீனுவோ இருவரும் அணைத்ததை பற்றி தன் தோழியிடம் தெரிவிக்க ஓடினாள்.

“மதி மதி இப்போ என்ன நடந்துச்சு தெரியுமா?அதுவும் உன் ஆளு…” என மூச்சிறைக்க பரபரப்புடன் அவள் கண்டது அனைத்தையும் ஒப்பிக்க,

சந்திரமதியின் புருவம் ஒரு கணம் சுருங்கி விரிய “அவன் ஒண்ணும் என் ஆளு இல்லை…இன்னொரு தடவை ஆளு கிளுனு சொன்னே அடி வெளுத்திடுவேன் மவளே…ஓடிப்போ” என அவளை சிடுசிடுவென அதட்டினாள்.

“ப்ச் மதி…சரி விடு உன் ஆளு இல்லை…என் ஆளு…” என்றதும் அதற்கும் அவளை திரும்பி முறைக்க,

அதில் மிரண்ட மீனு “சரி விடு…யாரோ ஒருத்தரோட ஆளு…இப்போ அதுவா முக்கியம்?” என படபடத்தவள்,

“அந்த பொண்ணு யாருடி?அவர் கூட அவ்வளவு க்ளோசா கட்டிப்பிடிச்சு பேசறாள்?” என தோழியிடம் சந்தேகம் கேட்டாள்.

சந்திரமதியோ “ஐ திங்க் ஷீ இஸ் ஹிஸ் ஃபியான்சி” என எவ்வித சலனமுமின்றி உரைத்தவள்,தள்ளு வண்டியை தள்ளியப்படி செல்ல,

இருவரும் அறைக்கு வெளியே இருக்கும் நடப்பாதையில் நடந்தப்படியே பேசினார்கள்.

மீனுவோ “உனக்கு வருத்தமா இல்லையா மதி?” என சோகமாக தோழியின் முகத்தை பார்த்தவாறு கேட்க,

உடனே தன் நடையை நிறுத்திவிட்டு அவளை கூர்ந்து நோக்கியவள் “இங்க பாரு மீனு…” என அவள் கறாராக ஆரம்பிக்கும் போதே,

வேகமாக அவளை இடைமறித்து “நான் எதுக்கு வருத்தப்படணும்?அவன் ஒண்ணும் என் ஆளு இல்லை…அதானேடி…புரியுது…புரியுது” என சலிப்பாக அவளை போலவே பேசிக்காட்டி பொரிந்தாள் மீனு.

அதில் மெல்லியதாக புன்னகைத்த சந்திரமதி “அதான் உனக்கே தெரியுதே…போ போய் வேற வேலை இருந்தால் பாரு” என அவளின் தோளை பின்பக்கமாக திருப்பி அங்கிருந்து அனுப்ப முயன்றாள்.

“ப்ச் போடி…நான் என்னவோ நினைச்சேன்…இங்க வேற எதுவோ நடக்குது?” என முனகியவள்,

சட்டென அவளின் புறம் திரும்பி “ஆனால் அவர் கண்ணுலே அன்னைக்கு லவ்…” என ஆதங்கத்துடன் சொல்ல தொடங்கும் போதே,சந்திரமதியின் விழியில் கனல் கூட,

அதைப் பார்த்ததும் சுதாரித்த மீனு ‘ஆத்தி மேடம் ஃபயர் மோடுக்கு போயிட்டாள்…இதுக்கு மேலே போச்சு…மீனு மூச்சு நின்னு போச்சு…எஸ்கேப்’ என அங்கிருந்து ஓடியே விட்டாள்.

அவள் ஓடியவதை பார்த்து ‘ஆளை பாரு’ என பல்லை நறநறவென கடித்தப்படி திரும்பிக்கொண்டாள்.

‘லவ்’ என்றதும் அவளின் மனதில் நெருஞ்சி முள் குத்துவது போன்று இருக்க,அவளின் முகம் இறுகிவிட்டது.

அச்சமயம் அங்கு வந்தாள் நிர்மலா.

நிர்மலா அறை சேவை செய்யும் ஊழியர்களுக்கு எல்லாம் தலைவி.

அவளிற்கு ஏனோ சந்திரமதியை கண்டாலே பிடிக்காது.அவளின் மீது அதீத வெறுப்பை கொட்டக்கூடிய காழ்ப்புணர்ச்சி உள்ள பெண் அவள்.

அவளிடம் வேகமாக வந்தவள் “எங்க போயிட்டு இருக்கே?” என அதிகாரமாய் வினவினாள்.

சந்திரமதியோ “ரூம் நம்பர் 405ல் சாப்பாடு கேட்டாங்க மேடம்…அவங்களுக்கு தான் கொண்டுப்போயிட்டு இருக்கேன்” என தணிவாக பதிலுரைத்தாள்.

ஆனால் அவளோ அந்த பணிவை சோதிக்கும் விதமாக “நீ ஒண்ணும் சாப்பாட்டை எடுத்திட்டு போய் கிழிக்க வேணாம்…இதுவரைக்கும் நீ பண்ணி கிழிச்சதே போதும்” என அப்பட்டமான குற்றச்சாட்டை வைத்தவள்,

“ஹே ராணி…ராணி…” என வேறொரு பெண்ணை விரல் சொடுக்கி அழைத்தாள்.

அவள் அருகே வந்ததும் “இந்த டிராலிய நீ வாங்கிட்டு போய் சர்வ் பண்ணு…ஒழுங்கா சாப்பாட்டை கொடுத்தமா வந்தமானு இருக்கணும்…மத்தவங்க மாதிரி காசுக்காக வழிஞ்சிட்டு நிக்கக்கூடாது…என்ன புரியுதா?” என சந்திரமதியை ஓரக்கண்ணால் பார்த்து குத்திக்காட்டியப்படி அரட்டினாள்.

அதில் ஒரு கணம் அந்த பெண்ணின் பார்வை சந்திரமதியின் மீது இளக்காரமாக பதிந்து மீள “ஓகே மேடம்” என்றுவிட்டு வண்டியை தள்ளி சென்றாள்.

சந்திரமதிக்கு இம்மையும் புரியவில்லை…மறுமையும் புரியவில்லை.

‘என்ன பேசுகிறாள் இவள்?’ என விழி சுருக்கி அவளை ஏறிட்டாள்.

அவளிற்கு மெய்யாகவே அவர்களது இளக்கார செயலுக்கான பொருள் புலப்படவில்லை.

“என்ன பார்க்கிறே?போ போய்…லாபி மொத்தமும் மாப் போடு” என ஒரு வித இகழ்ச்சியுடன் ஆணையிட,

‘என்னவொரு இகழ்ச்சி’ என அவளிற்குள் சுறுசுறுவென ஆத்திரம் பொங்கி வர “மேடம் அது என்னோட வேலை கிடையாது…ஐயம் ஜஸ்ட் ரூம் சர்வீஸ் கேர்ள்…நான் எதுக்காக இந்த வேலையெல்லாம் செய்யணும்?” என சற்றே துணிச்சலுடன் கேள்வி எழுப்பியிருந்தாள்.

படீரென்று திரும்பி அவளை மேலிருந்து கீழாக நோக்கியவள் “நான் தான் இங்க ஹெட்…நான் சொல்லறதை செய்யறதா இருந்தால் செய்…இல்லையா வேலைய விட்டு கிளம்பிட்டே இரு” என அலட்சியமாய் தோளை குலுக்கிவிட்டு சென்றுவிட்டாள்.

இதுவே முன்பிருந்த சந்திரமதியாக இருந்தால் அவளின் நக்கல் தோணியில் கடுப்பாகி அவளை விளாசி தள்ளியிருப்பாள்.

ஆனால் அவள் சந்தித்த வலிகளும் வேதனைகளும் அவளை சற்று நிதானிக்க வைத்தன.

அதேசமயம் அவளின் பேச்சில் இருந்த இளக்காரம் மற்றும் தன்னை பார்க்கும் அவளின் கண்களில் தெரிந்த அருவருப்பு அவளது இதயத்தை படபடக்க வைத்தன.

‘எதுக்கு இந்த லேடி என்னை அப்படி பார்த்திட்டு போகுது?’ என்ற சிந்தனையினூடே விடுதியின் வரவேற்பறையை சுத்தம் செய்ய அங்கு வந்தாள்.

அங்கு வந்தவுடன் அவளை முதலில் கவர்ந்தது என்னவோ ஜித்து ரோகிணி ஜோடி தான்!

அவளை மட்டுமில்லை…சுற்றியிருந்த அனைவரின் விழிகளையும் அவர்கள் தான் ஈர்த்திருந்தார்கள்.

அதை அவதானித்த சந்திரமதிக்கு கோபமாக வந்தது…

அது பொறாமையால் விளைந்த கோபமெல்லாம் இல்லை…ரோகிணி போன்ற அகந்தையான பெண்ணை அவன் திருமணம் செய்யவிருப்பதை எண்ணி எரிச்சலானவள் ‘எக்கேடோ கெட்டு ஒழியட்டும்…நமக்கென்ன?’ என திட்டிக்கொண்டே தரையை மாப்பு போட ஆரம்பித்துவிட்டாள்.

தற்சமயம் அவளின் கவலையெல்லாம் தங்கையின் எதிர்காலத்தை பற்றியதாக மட்டும் தான் இருந்தது.

ரோகிணியால் ஏதேனும் ஆபத்து வந்திடுமோ என்று!

அதனால் ஒரு பெருமூச்சுடன் அவள் தரையைச் சுத்தம் செய்ய தொடங்கிவிட,இங்கு ஜித்து அவளிற்கு முதுகுக்காட்டி அமர்ந்திருந்ததால் அவளின் வருகையை அறியவில்லை.

ரோகிணியிடம் வெகு தீவிரமாக உரையாடிக்கொண்டிருந்தான்.

அவளோ குளம்பியகத்திற்கு வந்ததும் ஊழியனை அழைத்து வழக்கமாக ஜித்து குடிக்கும் குளம்பியை எடுத்து வரும் படி உத்தரவிட்டாள்.

உடனே அவனின் இமைகள் இடுங்கிட “எனக்கு இது தான் பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும்?” என கோபமாக வினவ,

அவளோ அவனின் முகத்தை தன் கூரிய விழிகளால் உறுத்து விழித்தப்படி “ஐ நோ ஆல் அபவுட் யூ ஜித்து” என்றவளின் இதழில் மட்டுமே புன்னகை இருந்தன.

கண்ணில் வேறு ஏதோ கல்மிஷம் இருக்க,அவளின் சொற்களில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடந்தன.

அவனிற்கும் அவளின் பேச்சும் பார்வையும் விசித்திரமாக இருக்க,அவனின் மனம் ஏனோ முரண்டின‌.

அதனால் அவளிடம் பேச வேண்டிய விவரத்தை உரைத்துவிட்டு கிளம்பி விடலாம் என்றெண்ணிய ஜித்து “ரோகிணி நீ என்ன விஷயம் பேச வந்திருக்கேனு தெரியாது…பட் நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…” என தீட்சண்ய குரலில் தொடங்கும் போதே “கொஞ்சம் இருங்க ஜித்து…காஃபி குடிச்சிட்டு நிதானமா பேசலாம்” என அவனை தடுத்து நிறுத்தயிருந்தாள்.

அவன் மறுக்க நினைக்கும் நேரம் ஊழியன் கையில் குவளையுடன் வந்துவிட “கேப்பச்சீனோ அவருக்கு கொடு…கூட எக்ஸ்ட்ரா க்ரீம் போட்டியா?யூ நோ ஹீ லவ்ஸ் க்ரீம்” என கட்டிய மனைவி போல் அக்கறை எடுத்து அவள் பேசியது அவனிற்கு கடுப்பை வரவழைத்தது.

அவளை கண்டப்படி திட்டிவிட இதழ் துறுதுறுத்தாலும் ஊழியன் அவ்விடத்தில் நிற்பதால் எதுவும் பேசாமல் பல்லைக்கடித்து அமர்ந்திருந்தான்.

அவன் அங்கிருந்து நகர்ந்தவுடன் “காஃபி குடிங்க ஜித்து” என ரோகிணி சிரித்தப்படி உபசரிக்க,

“வாட் தி ஹெல் ரோகிணி?எதுக்காக இந்த டிராமா?” என சத்தம் செய்யாமல் பல்லிடுக்கில் அவன் சீற,

உடனே அவளின் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்திட “டிராமா எல்லாம் இல்லை ஜித்து…நீங்க என்ன பேச வந்திருக்கீங்கனு எனக்கு நல்லாவே தெரியும்…சோ இதுவே நாம்ப சேர்ந்து குடிக்கிற கடைசி காஃபியா கூட இருக்கலாம்…அதனாலே முதல்ல காஃபிய குடிச்சிடுங்க” என இறுகிய குரலில் உரைத்தாள்.

அவனோ குளம்பியை எடுத்து பருகாமல் அவளை ஆழ்ந்து நோக்க “குடிங்க ஜித்து…நான் உங்ககிட்ட பேசிட்டு ஒரு முக்கியமான மீட்டிங் ஆட்டென்ட் பண்ணனும்…நம்பலைனா இதை பாருங்க” என அலைப்பேசியின் வழியாக அவளிற்கு வந்திருக்கும் தகவலை எல்லாம் காட்ட,

அவற்றையெல்லாம் பார்த்தப்பிறகே ஓரளவு சமாதானமாகிய ஜித்து குளம்பியை அருந்த ஆரம்பித்தான்.

தன் குவளையில் இருக்கும் குளம்பியை அருந்திய ரோகிணியின் விழிகள் தங்களுக்கு குளம்பியை கொண்டு வந்த ஊழியனை ஒற்றை புருவம் உயர்த்தி ஏறிட,அவனோ அவளிடம் வெற்றி குறியீட்டை கையால் செய்துக் காட்ட ரோகிணியின் மனமோ வெஞ்சினத்தில் தகித்தன.

ஜித்தேந்திரன் அவளை அவமதித்த நாட்கள் தொட்டு அவனை எவ்வாறெல்லாம் பழி தீர்க்கலாம் என ஒவ்வொரு திட்டமாக யோசித்து இறுதியாக விபரீதமான ஒரு திட்டத்தை தீட்டியிருந்தாள்.

அவளிற்கு அவன் வேண்டும்…அதற்காக அவள் எதையும் செய்ய தயாராக இருந்தாள்.

அதனால் அவன் குளம்பி அருந்துவதை இதழோரம் பூத்த ஒரு குரூரப்புன்னகையுடன் பார்த்திருந்தாள் ரோகிணி.

குளம்பியை அருந்திவிட்டு குவளையை கீழே வைத்த ஜித்தேந்திரன் “ரோகிணி நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை…இது உனக்கு ஷாக்கா கூட இருக்கலாம்…பட் எனக்கு வேற சாய்ஸ் இல்லை…எனக்கு இந்த கல்யாணத்திலே இஷ்டமில்லை ரோகிணி…ஐ லவ் சம் அதர் ஒன்” என பொட்டில் அறைந்தாற் போன்று விஷயத்தை போட்டு உடைத்திருந்தான்.

அவளோ முகத்தில் சிறு மாற்றத்தை கூட காட்டாமல் “ஐ நோ ஜித்து” என்றாள் ஆழ்ந்த குரலில்.

அதில் அவனின் நெற்றி சுருங்கிட “எப்படி…” என கேட்கும் போதே அவனிற்கு திடீரென்று ஏனோ தலை கிறுகிறுக்க தொடங்கின.

அதனை இகழ்ச்சியாக நோக்கி “உங்களுக்கு யாரை பிடிக்கும்?யாருக்காக இந்த கல்யாணத்தை நிறுத்தறீங்க?யாரை பார்க்கறதுக்காக இந்த காஃபி ஷாப்பே கதினு கிடக்கிறீங்க எல்லாமே எனக்கு தெரியும் ஜித்து” என்றவளின் முகத்தில் அதுவரை இருந்த பாவனை மறைந்து வஞ்சம் துளிர்க்கத் தொடங்கின.

அவனது கண்ணிற்கு முன்பிருந்த உருவம் சிறிது சிறிதாக கலங்க ஆரம்பிக்க “வாத் நான்சென்ஸ்?எ…ந்த பேசாத…” என்றவனின் நாவு குழற சொற்கள் பிறழத் தொடங்கின.

அவன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தெளிவின்றி வெளி வர,அதனை எள்ளலாக நோக்கிய ரோகிணியின் விழிகளோ தூரத்தில் தரையை சுத்தம் செய்துக்கொண்டிருந்த சந்திரமதியின் மீது வன்மத்துடன் பதிந்து மீண்டன.

அவனை கண்காணிக்க ஆள் வைத்திருந்த ரோகிணிக்கு அவனது ரகசியங்கள் அனைத்தும் அத்துப்படி!

ஆதலால் ‘என்னை வேணாம்னு சொல்லிட்டு அந்த பிச்சைக்காரிய காதலிக்கிறீயா?உன்னை அவ்வளவு சீக்கிரம் விடமாட்டேன்டா’ என இதழை கோணலாக வளைத்து புன்னகைத்தவள்,மேசையில் நிலை தடுமாறி சரிய இருந்தவனை திருப்தியாக நோக்கி எழுந்து நின்றாள்.

மற்றவரின் விழிகள் அவனது ஆழ் மயக்கத்தை அறிவதற்கு முன்பாக தனது ஆட்களிடம் கண்ணை காட்ட அவர்கள் வேகமாக வந்து அவனை தாங்கிக் கொண்டார்கள்.

அவனது சிந்தை மட்டுமே மயங்கியிருக்க அவன் ஓரளவு விழிப்புடனே இருந்தான்.

ஆனால் நடக்க முடியாமல் தள்ளாடியவனை மற்றவருக்கு சந்தேகம் தோன்றாத வகையில் மின்தூக்கி வரை வழி நடத்தி சென்றார்கள்.

இடையில் ஒரு சிலர் அவனது நடையின் தள்ளாட்டத்தை கூர்ந்து கவனிக்க “நத்திங் திடீர்னு கொஞ்சம் பிளட் பிரஷர் கம்மியாகிடுச்சு…ரெஸ்ட் எடுத்தால் சரியாகிடும்” என சோகமாக முகத்தை வைத்து சமாளித்திருந்தாள்.

அவர்கள் அங்கிருந்து சென்றவுடன் அவளின் முகம் கோபத்தில் சிவக்க ‘தேவையில்லாமல் இந்த ***களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதா இருக்கு’ என கண்டப்படி திட்டிக்கொண்டே ஒரு அறையின் வாசல் வரை சென்றிருந்தாள்.

விடுதி ஊழியர்கள் சிலரின் பார்வையில் அவை விழுந்தாலும் அவளிடம் கேள்வி கேட்கும் அளவு தைரியம் யாருக்கும் இல்லை.

ஏனெனில்,அவர்கள் அனைவருக்கும் அவள் இந்த விடுதி முதலாளியின் நண்பனின் மகள் என்பது தெரியும்.

எனவே ‘பெரிய இடத்து விவகாரம் நமக்கு எதுக்கு?’ என ஒதுங்கியிருந்தார்கள்.

அறைக்குள் வந்தவுடன் “அவனை இங்க படுக்க வைங்க…” என கட்டிலைக் காட்டி ஆணையிட,அவர்களும் அவள் கூறியது போலவே நடந்தார்கள்.

அவனை கட்டிலில் படுக்க வைத்ததும் அவன் “ஏய் எ..ந்த பண்ணறே…” என  கையை காற்றில் அசைத்து குழற,

அவனை ஒரு கணம் திரும்பி பார்த்துவிட்டு “அவன் கிடக்கிறான்…விடுங்க…நீங்க செஞ்ச வேலைக்கான பணம் உங்க அக்கௌண்டுக்கு வந்திடும்…அவுட்” என அதிகாரமாய் விரல் சொடுக்கி இருவரையும் வெளியே அனுப்பி வைத்தாள்.

அவர்கள் வெளியேறியதும் கதவை தாளிட்டு விட்டு அவனருகே வந்த ரோகிணி மெத்தையில் எழ முடியாமல் தொய்ந்துப்போய் முனகிக்கொண்டிருந்த ஜித்துவை வஞ்சனையின்றி பார்த்திருந்தாள்.

‘இப்போ நீ எப்படி கல்யாணத்தை நிறுத்தறேன்னு பார்க்கறேன்டா’ என பழிவெறியோடு கூறியப்படி தாம் அணிந்திருந்த மேலாடையை கழற்றி வீசிவிட்டு கட்டிலில் ஏறி அமர்ந்தாள்.

அவன் மேல் படர்ந்து அவனது கன்னத்தில் முத்தமிட ஆரம்பித்தவளின் இதழ்கள் அவனில் எல்லை மீற தொடங்கின.
 


 

 

மூன்று நாட்கள் கழித்து,

ஜித்தேந்திரன் அன்றைய நாள் சம்பவத்திற்கு பிறகு,தனது வாழ்க்கையே இழந்தது போல் சுற்றி திரிந்தான்.

அலுவலகம் செல்வான்…வீட்டிற்கு வருவான்…உண்பான்…உறங்க சென்றுவிடுவான்.

யாரிடமும் எவ்வித பேச்சு வார்த்தையுமின்றி நேரே தனது அறைக்குள் முடங்கிவிடுவான்.

வீட்டில் கலகலவென சுற்றி வந்த பிள்ளை களையிழந்த இருண்ட முகத்துடன் இருப்பதை கண்ட யாவருக்கும் தாளவில்லை.

குறிப்பாக,அந்த வீட்டின் பெண்களுக்கு!

ஏனெனில்,குடும்ப ஆண்கள் இருவரும் இரண்டு நாளில் நடக்கவிருக்கும் தேர்தலில் கவனம் செலுத்தியிருந்ததால் ஜித்துவின் இந்த சோகம் பற்றி எதையும் அறியவில்லை.

தமயந்தியும் கூட கடுமையான துயரில் தான் ஆழ்ந்திருந்தாள்.

வீரை தனிமையில் சந்தித்த நாட்களுக்கு பிறகு அவனது அலைப்பேசிக்கு பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் அவளிற்கு வெற்றி கிட்டவில்லை.

இதற்கெல்லாம் மேலாக அவளிற்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது,அவளது எண்ணை அவன் முடக்கியிருந்தான்.

அதனால் பல முறை அவனது எண்ணிற்கு அழைத்து ஓய்ந்துப்போன மங்கையவளிற்கு ‘என்ன செய்வது?’ என்றே தெரியவில்லை.

இது நாள் வரை அவளிடமிருந்து விலகி ஓடினாலும் அவன் மீதுள்ள நேசத்திற்காக அவனை துரத்தி செல்வாள்.

இன்றோ அவனை சந்திக்க அவளின் இல்லத்தில் கெடுப்பிடிகள் இருந்ததோடு,அவனும் அவளை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் விதமாக நடந்துக்கொண்டதினால் மனமுடைந்து போனாள்.

இதில் அவளின் சின்னஞ்சிறிய இதயத்தை அதிகம் பாதித்தது என்னவென்றால்,அவளுடைய எண்ணை முடக்கி வைத்திருக்கிறான் என்று தாய் அல்லது பாட்டியின் எண்ணிலிருந்து அழைத்தால் “ஹலோ” என அழைப்பை ஏற்றுப் பேசுபவன்,

“வீர்” என்ற அவளது உருகிய குரல் கேட்ட மறுகணமே அழைப்பை துண்டித்துவிட்டான்.

அவனது இந்த உதாசீனம் அவளிற்கு இதயத்தில் கத்தியால் சொருகிய வலியைக் கொடுத்தன.

முன்பாவது அவளின் நேசத்தை வெளிப்படையாக ஏற்கவில்லை என்றாலும் கூட,அவளை அவன் ஒரு நாளும் அவமதித்தது இல்லை.

இப்போது அவளை நிற்சிந்தையுடன் அவன் மறுக்கும் விதம் அவளிற்குள் ஒரு அச்சத்தையும் கடுமையான வேதனையையும் தந்தன.

அவனது நிராகரிப்பு உயிரை சுருட்டிக்கொள்ளும் வலியை கொடுத்தாலும் தமையனின் சோர்வுற்ற முகம் அவளை உசுப்பிவிட்டன.

அதனால் தன் துக்கத்திலே உழன்று கொண்டிருக்காமல் “அண்ணா என்னாச்சு?ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என தமையனிற்காக கவலைக்கொண்டாள்.

ஜித்துவோ “நத்திங் லட்டு…கொஞ்சம் வேலை டென்ஷன்…அவ்வளவு தான்” என வலுக்கட்டாயமாக சிரித்தப்படி சமாளித்தவன்,அவளின் விழியில் படர்ந்திருந்த சோபையை கண்டு துணுக்குற்றான்.

உடனே புருவம் சுருக்கி “உன் முகம் கூட சரியில்லையே லட்டு?ஏதாவது பிராப்ளமாடி?சொல்லு…அண்ணா நான் பார்த்துக்கிறேன்” என தங்கையை தோளோடு அணைத்து ஆறுதலாக உரைக்க,

அவனது மனசாட்சியோ ‘உன் நிலைமையே கவலைக்கிடமா இருக்கு…இதிலே நீ அவளுக்கு உதவி செய்யப்போறீயா?’ என எக்களாமிட,

அவனோ பெருமூச்சுடன் தமயந்தியைப் பார்த்திருந்தான்‌.

‘ஒரே ஒரு கணம் அனைத்தையும் அவனிடம் கூறிவிடலாமா?’ என அவளின் இதயம் பரபரக்க,பின்பு ‘வேண்டாம்’ என முடிவெடுத்துக்கொண்டாள்.

வீர் தனது நேசத்தில் உறுதியாக இருந்தாலாவது வீட்டினரிடம் பேச முடியும்.

அவனோ விசுவாசம்,நட்பு என்ற சிறைக்குள் அகப்பட்டு அவளின் மீது காதல் இருந்தும் நிராகரிக்கிறானே?

அதனால் எவ்வித உறுதியுமின்றி குடும்பத்தினரிடம் தெரிவிக்க மனமற்றவளாய் “இல்லைண்ணா…ஐயம் ஆல்ரெட்…வீட்டிலே அடைஞ்சு இருக்கிறதாலே ஒரு மாதிரி இருக்கு…வேற ஒண்ணுமில்லை” என்றாள் சமாதானமாக..

அவனோ ஒரு பெருமூச்சுடன் “சரி விடு லட்டு…எலெக்ஷன் முடியட்டும்…இந்த வாரம் வீக் அண்ட் நீயும் நானும் மட்டும் எங்கியாவது வெளிய போவோம்…வேற யாரும் வேணாம்…டீல்” என கட்டை விரலை தூக்கிக்காட்ட,

அவளும் சிரித்துக்கொண்டே “டீல்” என கட்டை விரலை நீட்டி அவனது கையோடு கை இடித்து இருவரும் ஒரு உடன்படிக்கைக்கு வந்தார்கள்.

இதயத்தை வேரோடு பிடிங்கி எறியும் வகையில் வலி நிறைந்திருந்தாலும் மற்றவருக்காக தங்களது வேதனை மறைத்து நாடகமாடினார்கள் அண்ணனும் தங்கையும்!

இருவரும் சிரித்து பேசியப்படி இருப்பதை கண்டப்பிறகே மற்றவருக்கு ஓரளவு சமாதானமாக இருந்தது.

ஆனால் தாய் அறியாத சூள் உண்டா என்ன?

அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது…தனது இரு மக்களின் இதழில் இருந்த புன்னகை கண்ணை எட்டவில்லை என்று!

அதனால் முதலில் மகளிடம் தனிமையில் சந்தித்து உரையாடிய வானதி “என்னம்மா ஏதாவது பிரச்சனையா?” என அவளின் கூந்தலை வருடியப்படி வினவ,

அவளோ சட்டென தாயின் தோளில் ஆதரவாக சாய்ந்துக்கொண்டு “பெரிய பிரச்சனையெல்லாம் இல்லைம்மா…குட்டி பிரச்சனை தான்…பட் அதை நான் கூடிய சீக்கிரம் சால்வ் பண்ணிடுவேன்” என திடமான குரலில் உரைத்தாள்.

தமயந்தி சட்டென சுணங்கி சோர்ந்துப்போகும் பெண் கிடையாது.இன்று அவளே தன் தோளில் சாய்ந்துக்கொண்டது அவருக்கு கஷ்டமாக இருந்தது.

இதற்கெல்லாம் காரணம் தனது கணவனின் கெடுப்பிடிகள் என்று எண்ணியவருக்கு அவரின் மீது கோபமாக வந்தது.

அதனால் “அம்மாகிட்ட என்ன பிரச்சனைனு சொல்லலாம் இல்லை லட்டு” என்றவரின் குரல் நலிந்து வருத்தத்துடன் வெளிவர,

சட்டென சுதாரித்து அவரிடமிருந்து விலகிய தமயந்தி “உங்ககிட்ட நான் கண்டிப்பா சொல்லுவேன்மா…ஆனால் இப்போ இல்லை…” என தீர்க்கமாக உரைத்தவள் ‘என்னோட ரவுடி என்னை ஏத்துக்கிட்ட பிறகு எல்லாருக்கும் சொல்லறேன்’ என மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.

வானதியோ ‘என் ஒரு புள்ளை வாழ்க்கை நேராகிடுச்சுனு நினைச்சு சந்தோஷப்படறதா?இல்லை என்னோட இரண்டு பிள்ளைங்க வாழ்க்கை இப்படி இருக்கிறதை நினைச்சு கவலைப்படறாதா?எனக்கும் ஒண்ணும் புரியலை.நீ தான் என் பிள்ளைகளுக்கு துணை இருக்கணும் ஆண்டவா’ என வழக்கம் போல் இறைவனிடம் முறையிட்டு அவரது பாதத்தை சரணடைந்தார்.

கூடவே,தனது வருத்தத்தை பற்றி மாமியாரிடமும் தெரிவிக்க “நானும் பார்த்திட்டு தான் இருக்கேன் வானதி” என இயலாமையுடன் கூறியவரின் மனதில் பல்வேறு சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன.

இல்லத்திலிருக்கும் பிரச்சனைகள் போதாது என்பது போல் புதிதாக தன் பங்கிற்கு பிரச்சனைகளை இழுத்துக்கொண்டு வந்தார் விஜயேந்திர பூபதி.

ஜித்தேந்திரனிற்கு திருமண திகதியை முடிவெடுத்த கையோடு தமயந்திக்கும் புதிதாக வரன் பார்த்திருப்பதாக பெருமிதமாக அறிவித்தார்.

அவ்விடத்தில் ரத்தினவேல் மற்றும் வீட்டின் மூத்தவர்கள் மட்டுமே இருந்தனர்.

குடும்பத்திலிருக்கும் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் தான் தோன்றித்தனமாக முடிவெடுத்து அதை தகவல் போல் மற்றவரிடம் அறிவித்த விதம் அனைவரையும் சினம் கொள்ள செய்திருந்தது.

ரத்தினவேலிற்கு சொல்லவே தேவையில்லை.

தந்தையின் இந்த நடவடிக்கையை அவன் சிறிதும் விரும்பவில்லை என்பது போல் அவனின் முகம் இறுகி விட்டது.

தனது புதல்வனின் செயலை ஏற்க முடியாமல் வழக்கம் போல் காஞ்சனா மாலா தான் எதிர்த்து குரல் கொடுத்தார்.

“விஜய் நீ பண்ணறது ரொம்ப தப்புப்பா…நீ வீட்டிலே யாரோடையும் கலக்காமல் உன் இஷ்டத்துக்கு முடிவு பண்ணிட்டு வந்திருக்கிறதை என்னாலே ஏத்துக்கவே முடியலை…நீ வர வர ரொம்பவே மாறிட்டே…அது உனக்கு புரியுதா இல்லையா?” என மனத்தாங்கலுடன் வினவியவரின் குரல் கரகரத்தது,

விஜயேந்திரனோ “அம்மா நான் என்ன தான் செய்யறது?ரோகிணி இந்த வீட்டுக்கு கல்யாணம் பண்ணி வர்றது உங்க யாருக்கும் பிடிக்கலை…கல்யாண விஷயத்தில் யாரும் ஆர்வம் காட்டாதனாலே நானே எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டேன்…” என அவரது பக்க நியாயத்தை உரக்கப் பேசினார்.

சட்டென மகன் பேசிய விடயத்திலிருந்து ஒரு நூலை பிடித்தவர் “யாருக்கும் விருப்பமில்லைனு உனக்கே தெரியுதேப்பா…அப்புறம் எதுக்கு இந்த கல்யாணம்?” என தங்களது விருப்பமின்மையை அபிவியத்தத்துடன் மூதாட்டி தெரிவிக்க,

அவர் தொடுக்கும் வினா நூறு சதவிகிதம் சரியானது தான்.ஆனால் விஜயேந்திரனிற்கு தான் சமீப காலமாக கௌரவம் என்ற பேய் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறதே?

ஆதலால் தொண்டையை செருமியவர் “அம்மா இப்போ இந்த விஷயத்திலே உங்க யாருக்கும் சந்தோஷமில்லாமல் இருக்கலாம்…ஆனால் எதிர்காலத்திலே நான் செஞ்சது தான் சரினு உங்களுக்கே புரியும்” என அபரிமிதமான நம்பிக்கையுடன் கூற,அவரை பெற்றவருக்கு ஒரு வித சலிப்பே வந்திருந்தது.

இனி இவரிடம் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை என பிரமாணம் எடுத்து வாயை மூடிக்கொண்டார்.

தன் மகனிற்காக அவர் பொறுமை காக்கலாம்.

ஆனால் தன் பிள்ளைகளுக்கு கஷ்டம் என்றால் பெற்ற அன்னை பொறுத்துக்கொள்வாளா என்ன?

அதுவரை அமைதிக் காத்த வானதி முதல் முறையாக வாயை திறந்தார்.

“ஏங்க ஜித்துவுக்கு அவசர அவசரமா கல்யாணம் பண்ணறதே எங்களாலே தாங்க முடியலை…இப்போ தமியையும் உங்க இஷ்டத்துக்கு வளைக்க பார்க்கறீங்க?அவ தான் இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு சொன்னாயில்லை…அப்புறம் அவளுக்கு எதுக்கு மாப்பிள்ளை?” என ஆதங்கமும் அங்கலாய்ப்புமாய் வினவ,

அவரோ தனது மனைவியை நேருக்கு நேர் காண விருப்பமின்றி “என் பிள்ளைங்களோட எதிர்காலத்துக்கு எது நல்லதோ அதை தான் நான் பண்ணறேன்…இதுக்கு ஏன் எல்லாரும் இழவு வீடு மாதிரி மூஞ்சிய தூக்கி வைச்சிருக்கீங்கனு சத்தியமா எனக்கு தெரியலை” என எரிச்சலுடன் பேசியவரை ஆயாசத்துடன் நோக்கினார் வானதி.

வீரின் இல்லத்திற்கு தன் பேச்சை மீறி சென்ற நாட்கள் தொட்டு மனைவியிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை அவர்.

தன் கணவரது வீம்பை கண்டு வானதிக்கு ஒரு பக்கம் சலிப்பாகவும் மற்றைய பக்கம் வேதனையாகவும் இருந்தது.

தாயின் முகம் வாடினால் தனயனிற்கு தாங்குமா என்ன?

அதனால் தகப்பனை எதிர்க்க துணிந்தவனின் செயலை அறிந்தாற் போன்று சட்டென மகனின் கரம் தடுத்து நிறுத்தினார் வானதி.

மற்றைய பக்கம் பாட்டியும் ‘வேணாம்’ என தலையசைக்க,

அவனோ நடக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்க விடாமல் தடுக்கும் இருவரையும் பார்வையால் உறுத்து விழித்தான்.

ஆயினும், அவர்களை மீறி தந்தையிடம் எதுவும் பேசமுடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையில் நடக்கும் விபரீதத்தை வேடிக்கை பார்த்தான்.

ஒரு கட்டத்தில் விஜயேந்திரன் பேச பேச அவனின் நரம்புகள் கோபத்தில் புடைத்திட ‘இதற்கு மேல் முடியாது’ என்பது போல் வெடுக்கென்று எழுந்து நின்றான்‌.

அவன் எழுந்து வேகம் கண்டு அனைவரும் மிரண்டு அவனை காண,தாயின் பார்வையில் பயத்தை மீறிய கெஞ்சலை கண்டு ‘என்னவோ பண்ணுங்க’ என கடுப்பாக பின்னங்கழுத்தை வருடியவன் தந்தையிடம் “அப்பா நீங்க எங்க விருப்பத்தை மதிக்கலைனா பரவாயில்லை…காலம் பூராவும் வாழப்போறது அவங்க இரண்டு பேரும் தான்…முதல்ல அவங்க இரண்டு பேரோட சம்மதத்தை கேட்டுட்டு மேலே பேசுங்க…எல்லாத்தையும் பண்ணிட்டு பின்னாடி நீங்க தான் ரொம்ப வருத்தப்படுவீங்க” என இழுத்துப் பிடித்த பொறுமையுடன் பூடகமாக அவரை எச்சரிக்க,

அவரோ அப்போதும் “ஜித்து தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டானே…தமிய எப்படி என் வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும் பூபதி” என ஒரு வித திண்ணத்துடன் உரைத்தவரை கோபத்தில் ஏதேனும் பேசிவிடுவோமோ என்றெண்ணி “பாட்டி கட்சி பேனரெல்லாம் ரெடியாகிடுச்சானு நான் போய் பார்க்கறேன்…நீங்க பேசுங்க” என இறுகிய முகத்துடன் கூறி விறுவிறுவென அறையிலிருந்து வெளியேறிவிட்டான்.

செல்லும் முன்பு தந்தையை உறுத்து விழித்துவிட்டே சென்றிருக்க,அவரோ வழமை போல் அதனை தூசியாக தட்டிவிட்டு தன் பிடியில் இருந்துக்கொண்டார்.

சொல்வதை காது கொடுத்து கேட்பவருக்கு யோசனை கூறலாம்?

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல் பிடிவாதமாக நிற்பவரிடம் யாராலும் எதுவும் பேச முடியவில்லை.

வீட்டு பெண்டியர் இருவரும் கையாலாகாத நிலையில் விஜயேந்திரனுக்கு அடிப்பணிந்தார்கள்.

தேர்தல் முடிந்து ஒரு வாரத்தில் திருமணம் என்று கேள்வியுற்றதும் ஜித்தேந்திரனது இதழில் ஒரு கசந்த முறுவல் பூத்தன.

இனி அவனாக நினைத்தாலும் கூட இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த இயலாது என்பதை அவன் நன்கு அறிவான்.

ஏனெனில் அப்படியொரு பலமான அஸ்திரம் கொண்டு தான் ரோகிணி அவனை தாக்கியிருந்தாள்.

அவன் திருமணத்தை நிறுத்த முயற்சித்தாலே அவளது கையில் இருக்கும் ஆதாரங்கள் மூலமாக அவர்களது குடும்பத்தின் மானமும் மரியாதையும் கப்பலேறிவிடும்.

அன்று நடந்த அந்த விபரீதமான நிகழ்வும் அதைத்தொடர்ந்து நடந்த அந்த கசப்பான சம்பவமும் அவனது சிந்தையை விட்டு இன்றும் அகல மறுத்தது.

போதை மருந்தின் வீரியத்தில் என்றாலும் அப்படியொரு காரியத்தை செய்தப்பிறகு சந்திரமதியின் முகத்தில் அவனால் விழிக்கவே முடியவில்லை.

அத்தோடு ரோகிணியின் அதிரடியான மிரட்டல்,அவனது நிலையை சுயப்பட்தாபத்தில் அடி பாதாளத்திற்கு தள்ளியிருந்தது.

இப்போது குறித்த நேரத்தில் திருமணம் நடந்தாக வேண்டிய கட்டாயம்!

அவனிற்கு வேறு வழியும் இருக்கவில்லை.

அவனது திருமணம் விடயம் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்த மற்ற இரு நபர்கள் முகிழ்மதியும் சந்திரமதியும்!

ரோகிணியை திருமணம் செய்துக்கொள்ள விருப்பமில்லை என முகிழ்மதியிடம் அவன் முன்பு தெரிவித்திருந்ததை எண்ணி அவனிற்காக கவலையுற்றது,அந்த பேதை உள்ளம்!

சந்திரமதிக்கு ஏனென்றே தெரியவில்லை…அவனது திருமண விடயம் அவளின் இதயத்தை சுருக்கென்று தைத்தது.

இப்போது வரை அவனை அவள் நேசிக்கவில்லை தான்!

ஆனால் அவனால் அவளின் மனதில் சிறு சலனம் உண்டாகியிருப்பது மட்டும் நிஜம்.

ஆதலால்,ஏனோ இந்த தகவல் அவள் மனதை வாள் கொண்டு அறுக்க,

கூடவே அவளுள் சிறு கோபமும் துளிர்த்தன.

‘நீயும் மத்தவங்களை மாதிரி தான்டா’ என வெறுப்புடன் எண்ணிக்கொண்டாள் அவள்.

தமயந்தியிடம் அவளது திருமண விடயம் பற்றி யாவரும் தெரிவித்திருக்கவில்லை.

தாமாக மகளிடம் பேசும் வரை யாவரும் இதை பற்றி மூச்சுவிடக்கூடாது என வீட்டினரை எச்சரித்திருந்தார்.

ஆனால் ஜித்தேந்திரன் போன்று அடங்கிப் போகும் குணம் கொண்டவள் மகள் அல்ல என்பதை அறிய தவறினார் அவர்.

இந்நிலையில் ஒரு நாள் குளித்துவிட்டு சோகமாக கீழிறங்கி வந்தாள் தமயந்தி.

அச்சமயம் அவர்களது வரவேற்பறையில் வாட்டசாட்டமாக அமர்ந்திருந்த அந்த இளைஞனை கண்டவளின் முகம் பளீச்சிட்டது.
 

முகிழ்மதி 104(1):


 

 

அவன் ஆத்விக்…தமயந்தியின் கல்லூரி சீனியர்.

ஆறடி உயரம்…நல்ல வாட்டச்சாட்டமான இளைஞன்…நல்ல அழகனும் கூட!

தமயந்தியை விட மூன்று வயது மூத்தவன்.கல்லூரியில் இருவருக்கும் நட்பு ரீதியாக நல்ல பழக்கம் இருந்து வந்தது.

பல மாதங்கள் கழித்து அவனை தனது வீட்டில் பார்த்ததும் ஆச்சரியமடைந்த தமயந்தி “ஹே ஆத்விக் நீங்க எப்போ இந்தியா வந்தீங்க?” என உற்சாகமாக கேட்டுக்கொண்டே அவனை நெருங்கினாள்.

அவள் குரல் கேட்டு திரும்பிய ஆத்விக்கின் இதழ்கள் புன்னகைத்திட “தங்கச்சி கல்யாணத்துக்காக இரண்டு நாள் முன்னாடி தான் லண்டனிலிருந்து வந்தேன்…நீ எப்படி இருக்கே தமி?” என அவளின் நலன் விசாரிக்க,

அவளோ “ஓ பைன்” என தலையசைத்து இருக்கையில் அமர்ந்தவள்,

“நான் நல்லாயிருக்கேன் ஆத்வி…பட் நீங்க எப்படி என் வீட்டுக்குள்ளே?” என புருவம் உயர்த்தி தன்னுடைய வீட்டை சுட்டிக்காட்டி ஆர்வமாக வினவினாள்.

அவனோ மெல்லியதாக சிரித்தவாறு “ரோகிணி இஸ் மை சிஸ்டர் தமி” என ஒரே வரியில் அவளின் கேள்விக்கு பதில் கொடுத்ததும் அவளின் ஒற்றை புருவம் ஏறி இறங்கின.

கூடவே அவளுள் ஒரு சந்தேகமும் முளைக்க “உங்களுக்கு தான் சிஸ்டர் எதுவுமில்லையே?” என அவனை கூர்மையாக பார்த்தாள்‌‌.

அவனோ “தமி ரோகிணி என் ஓன் சிஸ்டர் இல்லை…சித்தப்பா பொண்ணு தான்…பட் இந்தியா வந்த பிறகு தான் மாப்பிள்ளை உன் பிரதர்னு தெரிஞ்சது…கேட்டதும் நான் பயங்கர ஹேப்பி” என்றவனின் பேச்சில் அபரிமிதமான மகிழ்ச்சி தென்பட்டது.

அதைக்கேட்டு “ஓ..” என இதழ் குவித்தவளின் முகம் படீரென்று சுணங்கின.

ஏனோ ரோகிணியின் பெயரை கேட்டாலே அவளின் மேனிமெல்லாம் மிளகாயை அரைத்து பூசியது போல் தீப்பற்றி எரிந்தது.

‘இப்படியொரு நல்லவனுக்கு அப்படியொரு தங்கச்சியா?விளங்கிடும்’ என இதழை சுழித்தவள் “ஓகே…நீங்க எப்படி இருக்கீங்க?இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என அவனிடம் படபடவென ஒவ்வொரு கேள்வியாக கேட்க,

அவனோ “நீ இன்னும் மாறவே இல்லை தமி…” என தலையாட்டி சிரித்துக்கொண்டே அவளின் கேள்விகளுக்கு நிதானமாக பதில் கூறினான்.

சில நாட்களுக்கு பிறகு தமயந்தியின் முகத்தில் இலேசாக மலர்ச்சி எட்டிப்பார்த்தது.

ஆத்வீக் தான் அவளிற்காக விஜயேந்திரன் பார்த்திருக்கும் மணமகன்!

அவளையும் ஜித்துவையும் தவிர வீட்டிலுள்ள அனைவருக்கும் இந்த விடயம் தெரியும்.

‘என்ன நடக்குமோ?’ என கலவரத்தை எதிர்பார்த்து காத்திருந்த வீட்டு பெரியவர்களுக்கு அவளின் இந்த மலர்ச்சி ஆச்சரியத்தைக் கொடுத்தன.

குறிப்பாக,அவளின் தந்தைக்கு சொல்லவே தேவையில்லை.

நினைத்ததை நடத்தி முடித்துவிடலாம் என்ற மிதப்பு அவருள் உருவானது.

ஆதலால் “என்னம்மா தமி? மாப்பிள்ளைய உனக்கு முன்னாடியே தெரியுமா?” என அட்டகாசமான குரலில் கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் விஜயேந்திர பூபதி.

தமயந்தியோ ‘மாப்பிள்ளை’ என்பது போல் புருவம் சுருக்க,

ஆத்வீக்கோ அவர் வந்ததும் “ஹாய் அங்கிள்…நான் ஆத்விக்” என மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று புன்னகையுடன் ‘வணக்கம்’ தெரிவிக்க,

அச்சமயம் அங்கு வந்த வானதிக்கும் அவன் வணக்கம் தெரிவிக்க அவரும் “வாங்க” என சிரித்த முகமாக வரவேற்றார்.

ரோகிணியிடம் இல்லாத பண்பும் பணிவும் இவனிடம் அளவுக்கதிகமாகவே இருந்தன.

பார்ப்பதற்கு அனைவரையும் வசீகரிக்கும் தோற்றத்தடன் இருந்தவனை கண்டு விஜயேந்திரன் உச்சிக்குளிர்ந்துப்போனார்.

“வாங்க தம்பி…வாங்க…உட்காருங்க…தமி மாப்பிள்ளைக்கு போய் காஃபி எடுத்திட்டு வா” என பரபரப்புடன் பேசியவரை புரியாமல் பார்த்தாள் மகள்.

அதற்குள் ஆத்வீக்கோ “அங்கிள் இந்த ஃபார்மாலிட்டி எல்லாம் வேணாம்…எனக்கு தமயந்தியை முன்னாடியே நல்லா தெரியும்…காலேஜ் டைமிலே நான் அவளோட சீனியர்…சோ ஐ நோ ஹர் வெல்” என தமயந்தியை பார்த்தவாறே உள்ளம் உருக அவன் உரைத்ததும்,பெற்றவரின் மனம் நெகிழ்ந்துப்போனது.

வானதியோ வேண்டாவெறுப்பாக கணவனின் ஆணைக்கு உட்பட்டு அவ்விடத்தில் நின்றிருந்தார்.

தமயந்தியோ பாதி புரிந்தும் புரியாத ஒரு நிலையில் நடப்பதை கிரகிக்க முடியாமல் அமர்ந்திருந்தாள்.

அவளின் அதிர்ச்சியை கண்டுக்கொள்ளாத ஆடவர்களோ தங்களுக்குள் உரையாடிக்கொண்டிருந்தனர்.

“இரண்டு நாள் முன்னாடி இந்தியா வந்த நிமிஷமே அசோக் சித்தப்பா கல்யாண விஷயத்தை பத்தி பேசினாரு அங்கிள்…சொல்லப்போனால் எனக்கு முதல்ல விருப்பமில்லை தான்…பட் மாப்பிள்ளையோட தங்கச்சி தமயந்தினு தெரிஞ்சவுடனே கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன்…ஜஸ்ட் ஒரு ஃபார்மாலிட்டிக்கு தான் அப்பா இங்க போய் பொண்ணு பார்த்திட்டு வர சொன்னாரு…தமயந்தி ரொம்ப நல்லப்பொண்ணு…அவளை வேணாம்னு சொல்ல எனக்கும் விருப்பமில்லை அங்கிள்…அதான் தலையாட்டிட்டேன்” என அவன் பெருமிதமும் சிலாகிப்பும் கலந்து சொல்லிக்கொண்டிருக்க,

விஜயேந்திரனோ அவனது பேச்சிலும் நடத்தையிலும் விழுந்தே விட்டார்.

முன்னராவது அசோக் செல்வன் கூறியதற்காக ஒப்புக் கொண்டிருந்தார்.

இப்போது அவனை பார்த்தப்பிறகு தன் மகளுக்கு ஏற்ற மணாளன் இவன் தான் என முடிவே செய்துவிட்டார்.

இரு ஆண்களும் மாறி மாறி தமயந்தியை புகழ்ந்து பேசிக்கொண்டிருக்க தமயந்தியோ தனது ஒட்டுமொத்த வாழ்வும் சூன்யமாகியதை போல் அமர்ந்திருந்தாள்.

அவளிற்குள் கோபம்,வெறுப்பு,ஏமாற்றம்,அழுகை என அனைத்து வகையான உணர்வுகளும் முட்டி மோதிக்கொண்டிருந்தன.

ஒரு புட்டியின் கழுத்தை வரை நிரப்பியிருக்கும் நீர் போல் அழுத்தமாக இருந்தது அவளின் நிலை!

எப்போது வேண்டுமென்றாலும் தளும்பி கீழே விழலாம் என அவளின் இமையோரம் கண்ணீர் துருத்திக்கொண்டு நின்றன.

மற்றொரு புறம் தன்னிடம் ஒரு வார்த்தை கேளாமல் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த தந்தையின் மீது தீராத ஆத்திரம்!

அவள் எரிமலையாய் குமுறிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

வீரை தவிர வேறொரு ஆண்மகனை அவளது மூச்சுக்காற்றால் கூட சுவாசிக்க முடியாது…

அவனே அவளின் உயிர்நாடி!

அத்தகைய நிலையில் வேறோரு மணமகனை கொண்டு வந்து நிறுத்தினால் அவள் பொறுத்துக்கொள்வாளா என்ன?

தந்தையிடம் வெடித்து சிதறுவதற்காக தக்கத்தருணம் வேண்டி காத்திருந்தாள் அவள்.

அக்கணமே அவளின் நெஞ்சம் கொதித்து குமுற தயாராகியிருந்தாலும் மூன்றாம் மனிதரின் முன்பு தந்தையை அவமதிக்க விரும்பாமல் அமைதி காத்தாள்.

தந்தையின் மானம் காக்க பெண்ணவள் தவிக்க,அவரோ அவளது அடிப்படை விருப்பத்தை கூட மதியாமல் திருமணம் பேசிக்கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் அவ்விடத்தில் அமர்ந்திருப்பது நெருப்பின் மேல் அமர்ந்திருப்பது போல் நெஞ்சை தகிக்க வைக்க,ஒரு வழியாக ஆண்கள் இருவரும் பேசிவிட்டு எழுந்துவிட்டார்கள்.

செல்லும் முன்பு ஆத்விக் “அங்கிள் நான் தமியை கூட்டிட்டு ஒரு ரைய்டு போயிட்டு வரலாமா?” என அனுமதி வேண்ட,

அவரோ திரும்பி மகளின் முகத்தை பார்த்தார்‌.

அவளின் முகம் இறுகி அனலாய் கொதித்துக்கொண்டிருந்தது.

அதனை ஒரு பெருமூச்சுடன் நோக்கியவர் “அவள் வந்தால் தாராளமா கூட்டிட்டு போயிட்டு வாங்க மாப்பிள்ளை” என அனுமதி வழங்கினார்.

‘ஆமா இங்க கல்யாணத்துக்கே அனுமதி கேட்கலை…இதிலே இது ஒண்ணும் தான் குறைச்சல்’ என வானதி தன் புதல்வியின் முகத்தை கண்டு நொடித்தார்.

அவருக்கும் ஆத்திரமாக வந்தது.

அவனோ “தேங்க்ஸ் அங்கிள்” என பெருந்தன்மையாக நன்றியுரைத்துவிட்டு அவளிடம் திரும்பியதும் அவன் கேட்பதற்கு முன்பே “உங்ககிட்ட நானும் கொஞ்சம் பேசணும்…வாங்க” என தந்தையை விழிகளால் உறுத்து விழித்தப்படி கூறிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்துவிட்டாள்.

அவள் யாரிடமும் அனுமதி கேட்கவே இல்லை…மதியை மறைக்கும் அளவு கோபம் அவளுள் கனன்றன.

மகளின் நடையிலே அவளது ஆவேசம் தெரிய அதையறிந்தும் எதுவும் பேசாமல் விஜயேந்திரன் மௌனம் காத்தார்.

ஆத்விக்கின் முகம் அதில் சட்டென மாறினாலும் தன்னை சமாளித்து “சரி நான் வர்றேன் ஆன்ட்டி அங்கிள்” என பணிவாக அங்கிருந்து விடைப்பெற்றான்.

விறுவிறுவென வெளியே சென்று நின்ற தமயந்திக்குள் தரிப்பிடத்தில் நிற்கும் தந்தையின் மகிழுந்தை எல்லாம் உடைத்து நொறுக்கும் அளவு ரௌத்திரம்!

‘எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை கேட்காமல் கல்யாணம் பேசுவாரு இந்த அப்பா’ என இதழுக்குள் தந்தையை போட்டு வறுத்தெடுத்தாள்.

அவள் இதழசைத்து பொருமிய சமயமே ஆத்வீக் வந்துவிட “வா தமி” என வாகனத்தை அவன் எடுத்ததும் அவளும் அவனுடன் இணைந்து ஏறிக் கொண்டாள்.

இருவரும் அங்கிருந்து புறப்பட்டதும் வானதியோ தனது விழிகளால் கணவனை எரித்து சாம்பலாக்கிவிட்டு சமையலறைக்குள் நுழைந்துக்கொண்டார்.

விஜயேந்திரனோ அதைப்பற்றியெல்லாம் கவலையுறவில்லை.

அவருக்கு தாம் நினைத்தது அனைத்தும் நடந்தேற வேண்டும்.அவ்வளவே?

அதற்கு குறுக்கே யார் வந்தாலும் தூக்கியெறிந்துவிட்டு பிள்ளைகள் இருவருக்கும் வளமான எதிர்காலத்தை அமைத்து தர உத்தேசத்தார்.

அவர் சிந்தித்து வைத்த வளமான வாழ்வு செல்வத்தில் இல்லை…அவர்களது இணையினர் காட்டும் அன்பில் இருக்கிறது என்று அவர் அறிய தவறினார்.

இதேநேரம் மனநல மருத்துவரை சந்தித்துவிட்டு மகிழுந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள் முகிழ்மதியும் ரத்தினவேலும்!

முகிழ்மதியிடம் அவளிற்கு இருக்கும் பிரச்சனைகளை பற்றி அவன் எதுவும் கூறவில்லை.

அவளிற்கு தெரிந்தால் தேவையின்றி எதை எதையோ நினைத்து குழம்பிக்கொள்வாள் என்று மறைந்துவிட்டான்.

அவளிடம் பழைய ஞாபகங்கள் வரவழைப்பதற்காக இந்த சந்திப்பு என்று பொய்யுரைத்து ஒவ்வொரு முறையும் சமாளித்திருந்தான்.

மருத்துவரை அணுகிவிட்டு வந்தப்பிறகு மனைவியின் முகம் வாடி இருப்பதை கண்டுவிட்டு “என்ன ஸ்டார்?ஏதாவது பிரச்சனையா?” என பக்கவாட்டாக திரும்பி விசாரித்தான்.

அவளோ அச்சமயம் தனது கொளுந்தனாரை பற்றி தான் சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

ஆதலால், கணவனிடம் அந்த விஷயத்தை எப்படி கூறுவது என தெரியாமல் தயக்கமாக அவனை ஏறிட,

“ப்ச் முகிழ் என்கிட்ட எதுவா இருந்தாலும் தைரியமா பேசணும்னு சொல்லியிருக்கேனில்லை…சொல்லு என்ன பிரச்சனை?” என சற்று குரலுயர்த்தி கேட்டதும்,

அவளோ எச்சிலை கூட்டி விழுங்கி “மாமா பேசாமல் இந்த கல்யாணத்தை நிறுத்திடலாமா?” என்றாள் மொட்டையாக…

உடனே அவனின் புருவங்கள் சுருங்கிட “என்ன கல்யாணம்?” என புரியாமல் கேட்டவனிற்கு அதன் பின்பே அவள் பேசியதின் அர்த்தம் விளங்கிட “ஏன்?” என்று அவளை ஆழ்ந்து நோக்கியப்படி வினவினான்.

அவளோ கைகளை பிசைந்தப்படி “இல்லை ரோகிணி அக்காவை கல்யாணம் பண்ணிக்க ஜித்து…அவருக்கு விருப்பமில்லையாம் மாமா” என ஒரு வழியாக விடயத்தை கணவனிடம் தெரிவித்துவிட்டாள்.

சட்டென அவனின் இமைகள் இரண்டும் இடுங்கிட “யாரு சொன்னா?” என்றவனின் குரலில் ஸ்ருதி ஏறின.

அதில் மிரண்டாலும் தன்னவன் தன்னை எதுவும் செய்யமாட்டான் என்ற துணிச்சலில் “அது…அவரு…அவரு தான் சொன்னாரு மாமா” என்றாள் நலிந்த குரலில்…

அவனோ கைக்காப்பை பின்னுக்கு தள்ளி மார்ப்பிற்கு குறுக்கே கைகள் கட்டியப்படி “உன்கிட்டயா?எப்போ சொன்னான்?” என விவரம் அறியும் பொருட்டு கேள்வி எழுப்ப,

அவனை மிரட்சியோடு பார்த்துக்கொண்டே “அது வந்து அன்னைக்கு…” என்றவள் தங்களுக்குள் நடந்த நிகழ்வை சுருக்கமாக திக்கி திணறி தெரிவித்தவள் “அவர் வேற யாரோ ஒரு பெண்ணை காதலிக்கிறாராம் மாமா…அப்படி இருக்கும் போது எப்படி ரோகிணி அக்காவை கல்யாணம் பண்ணிப்பாரு?கல்யாண தேதி குறிச்சதிலிருந்து அவர் முகமே சரியில்லை…பார்க்கவே பாவமா இருக்கு” என தனது கொளுந்தனிற்காக வருந்திய பேசிய மனைவியை கண்டு ஒற்றை புருவம் உயர்த்தினான் ரத்தினவேல்.

அவளிற்காக வாயை திறந்து பேசுவே அஞ்சும் பெண்,இன்று அவனது தம்பிக்காக பேசியதை கேட்டு ஆச்சரியமுற்றான்‌.

அத்தோடு அவளே ஒரு அப்பாவி…அவள் மற்றவனை பாவம் என்றுரைத்தது சிரிப்பையும் வரவழைக்க “எது அவனை பார்த்தால் உனக்கு பாவமாயிருக்கு” என நக்கலாக இதழை வளைத்து கேட்க,

அதையறியாத பேதையவளோ “ஹும் ஆமா பாவமா இருக்கு” என பரிதாபமாய் தலையாட்டிய மனைவியை பார்த்தவனிற்கு சிரிப்பு தான் வந்தது.

அவனது ஸ்டாரை அப்படியே அவனிற்குள் வாரி சுருட்டிக்கொள்ளும் வேட்கை தோன்றின.

ஆயினும்,அவள் கூறிய விடயத்தின் தீவிரம் உணர்ந்த ரத்தினவேல் மீசையை முறுக்கி தொண்டையை செருமி பேச ஆரம்பித்தான்.

“இங்க பாரு முகிழ்…ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ…யாருக்காவது ஏதாவது வேணும்னா அதுக்காக அவங்க தான் ஃபைட் பண்ணனும்…நாம்ப யாருடைய வாழ்க்கையிலும் தலையிட முடியாது” என தெள்ளத்தெளிவாக அவளிற்கு புரியும்படி கூறினான்.

அதில் முகம் வாடிய முகிழ்மதியோ “ஆனா அவரு உங்க தம்பி மாமா…வேற யாரோ இல்லையே” என அவனையே கிடுக்குப்பிடி போடுவது போல் வினவ,

அவளின் இந்த நுட்பமான கேள்வியை கேட்டு வியந்தாலும் அதை மறைத்து “ஆமா என் தம்பி தான்…பட் அவன் என்கிட்ட வந்து எந்த உதவியும் கேட்கலையே…கேட்காமல் உதவி செய்ய நான் என்ன பாரி வள்ளலாடி?” என நக்கல் தோனிக்கும் அதே குரல்!

அவளோ “ஆனால்..” என மீண்டும் தயக்கமாய் இழுக்க,

“உஷ்” என அவளது வாயின் மேல் விரல் வைத்து பேச்சை அடக்கிய ரத்தினவேல் “அவன் ஒண்ணும் டீன் ஏஜ் பையனில்லை முகிழ்…அவனாலே சமாளிக்க முடியும்னு தீரம் இருக்கிறதாலே தானே என்கிட்ட அவன் வரலை…சோ கண்டிப்பா அவன் சமாளிப்பான்…சொந்த வாழ்க்கையை ஒருத்தனாலே காப்பாத்திக்க முடியலைனா அவன் எப்படி நாளைக்கு ஒரு பெரிய சோசியல் பிரஷரை தாங்குவான்?அடிப்பட்டு எழுந்து வரட்டும் விடு” என அலட்சியமாக சொல்வது போல் தெரிந்தாலும், சகோதரனின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே அவனை அவ்வாறு பேச வைத்தன.

அவன் கூற வருவது அவளிற்கு புரிந்தாலும் ஏனோ மனம் சமாதானமடைய மறுக்க “நீங்க சொல்லறது சரிங்க…ஆனால் கல்யாணத்துக்கு ஒன்பது நாள் தானே இருக்கு” என்றாள் சற்றே பயம் கலந்த குரலில்…

அவனோ மெல்லியதாக புன்னகைத்து “ஒன்பது நாள் இருக்கே பொண்டாட்டி…முகூர்த்தம் வரைக்கும் நேரம் இருக்கு…என்ன நடக்குதுனு வேடிக்கை மட்டும் பார்ப்போம்…நீ கவலைப்படாதே” என அவளின் காதோரம் சுருண்டிருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டான்.

அப்போதும் அவளின் முகம் தெளியாமல் இருக்க அதைக்கண்ட ரத்தினவேல் “நீ ஏன் பயப்படறே?கடைசி நிமிஷத்திலே உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்துச்சில்லை..அது மாதிரி ஹிந்து வாழ்க்கையிலும் மிராக்கிள் ஏதாவது நடக்கலாம்” என தோளை குலுக்கி சொல்ல,

அவனது பேச்சில் சட்டென அவளின் முகம் பளீச்சிட “நிஜமாவா?” என கண்கள் விரிய நம்பாமல் வினவ,

அவனோ இதழ்கடித்து சிரிப்பை அடக்கி “யாருக்கு தெரியும்…நடக்கலாம் நடக்காமலும் போகலாம்…ரோகிணியையும் கல்யாணம் பண்ணற மாதிரி வரலாம்…என்ன வேணா நடக்கலாம்” என புதிர் போல் எடுத்துரைத்தவனின் பேச்சை கேட்ட முகிழ்மதிக்கு தான் ஒன்றும் புரியவில்லை.

இப்போது கணவன் என்ன சொல்ல வருகிறான் என குழப்பமாக இதழ்கடித்து அவள் அமர்ந்திருக்க,

அவளின் குழப்பத்தை கண்ட ரத்தினவேலின் இதழ்கள் குறுஞ்சிரிப்பில் விரிந்தன.
 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top