அவனது வண்டி சத்தம் வாசலில் கேட்டதும் வேகமாக தலையுயர்த்தினாள் யாழினி.
அவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
வண்டியை நிறுத்திவிட்டு தலையுயர்த்திய சரவணனோ அங்கு ஒருவள் இருப்பதையே அறியாதவனாக வீட்டிற்குள் செல்ல முயல ‘இந்த ஆளுக்கு இருக்க ஏத்தத்தை பார்றேன்’ என கடுப்பாகி ய யாழினி “ஹலோ மிஸ்டர் கட்டன் சாயா” என தெனாவெட்டான குரலில் சரவணனை தடுத்து நிறுத்தினாள்.
அவளின் அந்த திமிரான அழைப்பில் கோபம் கொண்ட சரவணன் அவளை இமைகள் இடுங்க திரும்பி முறைக்க,
அவளோ அதற்கெல்லாம் அசராமல் நிதானமாக எழுந்து அவனருகே வந்தவள் “டீயிலே மட்டும் கசப்பை கலக்குங்க…மனுஷங்களோட வெள்ளை மனசிலே கசப்பை கலக்காதீங்க மிஸ்டர்” என சீறலுடன் கூற,
அவனோ ‘என்ன பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்காள்’ என குழப்பமாக அவளை ஏறிட,
‘எல்லாம் பண்ணிட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி முழிக்கிறதை பாரு…’ என திட்டியவள்,தனது நாசி விடைக்க “போங்க கன்னுக்குட்டி போங்க…போய் ஒழுங்கா காப்பி டீ போடற வேலைய மட்டும் பாருங்க…அதை விட்டுட்டு ஒருத்தரை பத்தி முழுசா தெரிஞ்சுக்காமல் அவங்களை ஜட்ஜ் பண்ணாதீங்க மிஸ்டர்…அது ரொம்ப கேவலமா இருக்கு” என படபடவென வெடித்து தள்ளிவிட்டு விறுவிறுவென வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
அவனோ அவளின் பேச்சிற்கான உட்பொருள் அறியாமலும் அதேசமயம் அவளின் அலட்சியமான பேச்சில் சினமுற்றவனாய் மேலேறி சென்றான்.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவன் தாய் மாலை நடந்த நிகழ்வுகளைப் படபடப்புடன் கூறிவிட்டு “கன்னுக்குட்டி யாழு பாப்பா பாவம்டா…நான் பேசலைனு அழுகிற நிலைமைக்கு போயிடுச்சு தெரியுமா? அதனாலே நான் அவகிட்ட பேசிட்டேன்” என்று பவ்யமாக கூறியதும்,
அதுவரை அவளின் பேச்சிற்கான அர்த்தம் புரியாமல் குழம்பியிருந்தவனிற்கு அனைத்தும் தெளிவாகிட “அம்மா உங்களோட முடியலை” என பல்லைக்கடித்தப்படி நெற்றியை நீவ,
அவரோ “ஏன் கன்னுக்குட்டி திட்டறே?” என முகத்தை சுழிக்க,
அவரை உறுத்து விழித்த சரவணன் “ஹான் வேண்டுதல்” என எரிந்து விழுந்தப்படி சிலையை அழுந்தக்கோதி அறைக்குள் நுழைந்துக்கொண்டான்.
அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்திருந்த வீராவிடம் திரும்பியவர்
“என்னய்யா எதுக்கு இப்போ அவன் திட்டிட்டு போறான்?நான் ஒண்ணுமே தப்புப்பண்ணலையே” என ஆற்றாமையுடன் கேட்க,
அவரோ ‘ஆமா ஆமா நீ ஒரு தப்பும் பண்ணலை…எல்லாமே சரி தான்’ என்றெண்ணி பெருமூச்சுவிட்டவர் “அவன் கிடக்கிறான் விடு சிலுக்கு…நாளைக்கு எனக்கு லீவு…நாம்ப இரண்டு பேரும் மட்டும் பொட்டானிக்கல் கார்டன் போகலாமா?” என கண்கள் மின்ன கேட்டுக்கொண்டே எழ,
அதைக்கேட்டவரின் முகம் விளக்குப்போட்டது போல் பளீச்சிட “நிஜமாவா?” என்று கேட்டவர்,
உடனே வேகமாக தலையாட்டி “போகலாம்…போகலாம்” என சிறுப்பிள்ளையின் துள்ளலோடு குதித்த மனைவியை புன்னகையுடன் நோக்கினார் வீரா.
அவருக்கு தன் மனைவியின் மகிழ்ச்சியை தவிர வேறு எதுவும் பெரிதில்லை.
அந்த அளவு அவரை உயிராய் நேசிக்கிறார்.
திருமணமாகிய நாளிலிருந்து இன்று வரை அவரின் நேசம் துளியும் மாறவில்லை.
எந்தவொரு சூழ்நிலையிலும் மனைவியிடம் கோபத்தைக் காட்ட மாட்டார்.மற்றவரிடமும் அவரை விட்டு கொடுக்கவும் மாட்டார்.
அது அவர்கள் பெற்ற பிள்ளைகளாகினும் சரி..
அத்துணை ஆழமான பரிச்சுத்தமான காதல் தனலட்சுமியின் மீது!
மகன்கள் சிறு வயதாக இருக்கும் போது “அம்மா என்ன பண்ணாலும் கோபத்தை காட்டக்கூடாது…அவள் குழந்தை மாதிரி…அவளை பத்திரமா பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு” என்று சொல்லியே வளர்த்திருந்தார்.
அதன்பொருட்டே தனலட்சுமியை ஒரு மகாராணி போலவே குடும்பத்திலுள்ள மொத்த ஆண்களும் நடத்துவார்கள்.
சரவணன் இப்போது தனது அன்னையிடம் கோபத்தை காட்டாததற்கும் அதுவே காரணம்!
இப்போதும் மகன் கோபமாக சென்றது அவரின் குட்டி இதயத்தை உறுத்திட “சரவணா நான் தப்புப்பண்ணிட்டனா?” என அறைக்குள் நுழைந்து அவனிடம் குற்றவுணர்வுடன் வினவ,
அன்னையின் முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்திருப்பதை கண்ட சரவணனின் உஷ்ணம் அப்படியே குறைந்து குளிர்ந்த நிலவாகியது.
அதனால் மெல்லியதாக புன்னகைத்தவன் “உங்க மேலே எனக்கு ஒரு கோபமும் இல்லைம்மா” என்று கனிவுடன் உரைத்தான்.
அதன்பிறகே அவரின் முகமும் தெளிவாகிட “அப்போ சரி வா…வா…நாளைக்கு நானும் அப்பாவும் டேட்டிங் போறோம்…காலையிலே சீக்கிரமா வேற எழுந்திரிக்கணும்” என மகனை இழுத்துக்கொண்டு சென்றார்.
அதைக்கேட்டு அவனது ஒற்றை புருவம் மேலேறிட “ஏதே டேட்டிங்கா?இதெல்லாம் யாரும்மா உங்களுக்கு சொல்லி தர்றாங்க?” என சிரிப்புடன் கேட்டுக்கொண்டே இருக்கையில் வந்து அமர,
“யாரும் சொல்லி தரலை நானே யூட்யூப்பிலே ஒரு நாடகத்தைப் பார்த்து கத்துக்கிட்டேன்…” என பெருமிதமாக கூறி மகனிற்கும் கணவனிற்கும் உணவை பரிமாறினார்.
“யூட்யூப்பிலே நாடகமா?என்ன நாடகம்?” என்று புருவம் சுருக்கி அவன் வினவ,
அவரோ சிறுப்பிள்ளையின் குதூகலத்துடன் “ஏதோ வேற நாட்டு நாடகம்டா…ரொம்ப நல்லாயிருக்கு…மூஞ்சி எல்லாம் சப்பையா இருந்துச்சு…சைனா காரன் நாடகம்னு நினைக்கிறேன்…அதிலே இன்னொரு வார்த்தை கூட சொன்னாங்க…அது…அது…” என அவர் யோசித்திட,
சரணவனோ ‘என்ன’ என ஆர்வமாக பார்த்துக்கொண்டே உணவை வாயில் வைத்திட,
அதேநேரம் “ஹான் ஞாபகம் வந்திடுச்சு ஹுக் அப்…” என முகம் பளீச்சிட அவர் சொன்னதும் அவனிற்கு சாப்பிட்ட உணவு தொண்டைக் குழியில் அடைத்துக்கொள்ள புரையேறி இருமல் வந்தது.
“அச்சோ கன்னுக்குட்டி பார்த்து சாப்பிட மாட்டியா?” என வேகமாக தண்ணீரை எடுத்து அவனிற்கு பருகக்கொடுத்தார்.
அவனோ வேகமாக தண்ணீரை அருந்திவிட்டு “என்னம்மா சொன்னீங்க?” என தனது காதில் விழுந்தது சரி தானா என்றறிய மீண்டும் வினவினான்.
“ஹுக் அப்” என்றவர் “அதுக்கு என்னப்பா அர்த்தம்?” என விழி விரித்து ஆவலாக கேட்க,அவனிற்கு இப்போது நெஞ்சே அடைத்துக்கொண்டது.
வீராவிற்கு அந்த சொற்கள் அனைத்தும் புதியது என்பதால் அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
தாய் மகன் இருவரையும் மாறி மாறி பார்த்திருந்தார்.
அதற்குள் “ஊப்” என இதழை குவித்து ஊதிய சரவணன் “அம்மா அதெல்லாம் பேட் வொர்ட்…இனிமேல் அந்த மாதிரி சீரியல் எல்லாம் பார்க்காதீங்க” என அழுத்தமாக உரைத்தான்.
அவரோ “டேய் போடா…நம்ப ஊரு அழுது வடியற நாடகத்தை விட அது நல்லாயிருக்கு…நானும் புதுசு புதுசா நிறைய கத்துப்பேன்…” என சிறுப்பிள்ளை போல் அடம்பிடிக்க,
‘விளங்கின மாதிரி தான்’ என மனதிற்குள் எண்ணியவனால் அன்னையிடம் அதைப்பற்றியெல்லாம் வெளிப்படையாக பேச முடியவில்லை.
அவன் சங்கடமாக அங்கு அமர்ந்திருக்க,வீராவோ “விடுப்பா…நாம்பயெல்லாம் வேலைன்னு வெளிய எங்கியாவது போறோம்…அவ நாள் பூராவும் வீட்டுக்குள்ள தானே இருக்காள்…அதனாலே அவளுக்கு பிடிச்ச மாதிரி எதையாவது பார்க்கட்டும் விடு” என இப்போதும் தனது மனைவிக்கு ஆதரவாக கொடிப்பிடித்தார் மனிதர்.
‘நாசமாப்போச்சு…இவர் வேற விவரம் புரியாமல்…இதெல்லாம் ஒரு மார்க்கமான வார்த்தைனு இவர்கிட்ட நான் எப்படி சொல்லி புரிய வைக்கிறது?’ என கழுத்தை நீவிக்கொண்டே சங்கடத்துடன் உணவருந்தி எழுந்துக்கொண்டான்.
இருப்பினும் “அம்மா நான் உங்களுக்கு பிடிச்ச மாதிரி வேற ஒரு நாடகத்தை போட்டு விடறேன்…அதை பாருங்க…கண்ட சீரியலை பார்த்து கண்டதையும் கத்துக்காதீங்க” என்றவன்,
“நான் போட்டு விடற நாடகம் உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்” என்றதோடு அந்த நாடகத்தைப் பற்றி சிறு விளக்கம் வேறு கொடுக்க,
அவரும் பெரிதாக அடம் பிடிக்காமல் ஆர்வமாக “சரிப்பா” என வேக வேகமாக மண்டையை உருட்டினார்.
‘இவரை வைச்சுக்கிட்டு என்ன தான் செய்யறதோ?’ என சிரிப்புடன் அலுத்தப்படி உறங்க ஆயுத்தமானான் மகன்.
படுக்கையில் சென்று விழுந்த சரவணன் சிந்தையில் யாழினி பேசிய சொற்கள் தான் ஓடிக்கொண்டிருந்தன.
‘ஒருத்தரை பத்தி முழுசா தெரியாமல் அவங்களை ஜட்ஜ் பண்ணாதீங்க மிஸ்டர்…அது ரொம்ப கேவலமா இருக்கு’ என்றவளின் சொற்கள் மட்டுமின்றி கோபத்தில் வெடித்தவளின் முகம் கண் முன் வந்து சென்றன.
அவன் மீது பெருஞ்சினத்தில் இருந்தப்போதிலும் சொற்களை பக்குவமாக பயன்படுத்திய அவளின் பண்பும்,அவளது சிவந்த முகமும் ஒரு கணம் மின்னி மறைந்திட ‘கரெக்ட் தானே…அவங்களை பத்தி எனக்கு எதுவும் தெரியாது…அப்புறம் எதுக்கு அவங்களை பத்தி தப்பா நினைச்சேன்?தப்பு என் மேலே தான்’ என்றெண்ணிக் கொண்டான்.
தன் தவறை உணர்ந்தானே ஒழிய அடுத்த கணமே அவளிடம் மன்னிப்பை கேட்க வேண்டும் என்றெல்லாம் அவன் எண்ணி விடவில்லை.
அவளை பற்றி தனக்குள்ளே விமர்சிப்பதை நிறுத்துக்கொள்ள வேண்டும் என்று மட்டும் முடிவெடுத்திருந்தான்.
அவ்வளவே?
அடுத்த நாள் காலை எழுந்ததிலிருந்து வீடே பரபரப்பாக இருந்தது.
வீரா அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உதவி செய்யும் பணியில் அரசாங்கத்தால் அமர்த்தப்பட்ட ஊழியர்.
யாரேனும் வழி தவறிவிட்டாலோ அல்லது தங்களது உடைமைகளை இழந்துவிட்டலோ அவரிடம் உதவிக்கோரினால் தன்னால் முயன்ற வகையில் மற்றவருக்கு நல்வழிக்காட்டுவார்.
தன்னால் முடியாத பெரிய காரியமாக இருந்தால் காவல் துறையினரின் உதவியை நாடுவார்.
மேலும்,வெளிநாட்டு பயணிகளுக்கு ஏதேனும் உதவி தேவையென்றால் அவர்களுக்கு ஏற்றாற் போன்று பேசி அவரின் தேவையை நிறைவேற்றிக்கொடுப்பார்.
அப்படியான ஒரு பணியில் தான் வீரா இருக்கிறார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தனது மனைவியுடன் ஊர் சுற்றிப் பார்க்க கிளம்பிவிட்டார்.
தனலட்சுமியும் கூட அன்று தான் புதிதாக திருமணமான பெண் போல் தன்னை சிறப்பாக அலங்கரித்துக் கொண்டு கணவருடன் புறப்பட ஆயுத்தமாகியிருந்தார்.
இருவரும் ஜோடியாக வெளியேறுவதை கண்டு சரவணன் புருவம் சுருக்கிட “கன்னுக்குட்டி நானும் அப்பாவும் டேட்டிங் போறோம்…காலைக்கும் மதியத்துக்கும் சேர்த்து சமைச்சு வைச்சிட்டேன்…சரோஜாம்மா எஸ்டேட் வரைக்கும் போயிருக்காங்க…நீ கீழே யாழுக்கு மட்டும் சாப்பாடு கொடுத்திடு” எனவும்,
அவன் அவரை முறைக்க,அதை அவர் துளியும் கண்டுக் கொள்ளாமல் “நீயும் இந்நேரம் கல்யாணம் பண்ணியிருந்தால் பொண்டாட்டி கூட ஜாலியா எங்களை மாதிரி சுத்தியிருக்கலாம்…அதுக்கெல்லாம் உனக்கு குடுப்பினை இல்லை மகனே” என மகனை கேலிச் செய்து சலித்துக்கொண்டார்.
அவனோ “அம்மா” என அதட்ட,
“சரி விடு…உனக்கு எங்க இந்த காதல் பத்தின அருமையெல்லாம் தெரியப் போகுது…கடைசி வரை ஒண்டிக்கட்டையா கெட…நான் என் புலிக்குட்டியோட வெளியப்போறேன்” என கர்வமாக கூறி வீராவை ஏறிட,
அவரோ “ப்ச் பையன் முன்னாடி என்ன இது” என மனைவியை அதட்டியவர் “நாங்க வர்றோம்ப்பா” என தனலட்சுமியை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
மகனிடம் அவர் அறியாமல் கண்ணை காட்டிவிட்டு செல்ல,அவனும் இலேசாக தலையசைத்தான்.
அவர்கள் இருக்கும் வரை உர்ரென்று முகத்தை வைத்து இருந்தவனின் முகம் இருவரும் ஜோடியாக வெளியேறியதை கண்டதும் மென்மையுற்றது.
அவன் இதழில் மெல்லியதான புன்னகை ஒன்றும் தவழ்ந்தது.
‘சோ க்யூட் கப்பிள்’ என தனது பெற்றோரை பற்றி சிலாகித்துக்கொண்டவனை வரவேற்றது மேசை மேல் இருந்த மூன்று அடுக்கு உணவு கிண்ணம்!
‘இதை வேற அவளுக்கு நான் கொடுக்கணுமா?’ என பெருமூச்சுடன் பார்த்தப் படியே குளித்து தயாராகி வந்த சரவணன்,அடுக்கு கேரியரை கீழே எடுத்துக்கொண்டு சென்றான்.
யாழினியோ மணி ஒன்பதை கடந்தப்போதும் இன்னும் படுக்கையிலிருந்து எழவில்லை.
‘நைட் கொஞ்சம் ஓவரா பேசிட்டமோ?’
‘சில்க் ஆன்ட்டி மாதிரி ஒரு ஆளை எச்சரிக்கையோட வைச்சுக்கிறது நல்லது தானே’
‘அதுக்குனு என்கிட்ட பேச வேணாம்னு அவன் சொல்லுவானா?’
‘சரி அதுக்கு தான் திட்டிட்டியே அப்புறம் என்ன?’
‘ஐய்யோ அதானே இப்போ எனக்கு பிரச்சனை.அவரை அப்படி திட்டிட்டு எப்படி நான் அவர் முகத்திலே முழிக்கிறது?’ இவ்வாறு அவளும் மனசாட்சியும் மாறி மாறி உரையாடிக்கொள்ள,ஒரு கட்டத்தில் தலையணையில் தலைக்கவிழ்ந்து “ம்ம்ம்” என சிணுங்கிக்கொண்டே படுத்திருந்தாள்.
காலையில் சரோஜா “யாழு வந்ததிலிருந்து வீட்டுக்குள்ளே அடைஞ்சுக்கிடக்கிறே?என்னோட எஸ்டேட் வரைக்கும் வரீயா?சுத்திப்பார்த்திட்டு வரலாம்” என அவளை தன்னுடன் அழைக்க,
சரவணன் ‘தன்னிடம் இனி பேசுவானா?’ என மனக்கஷ்டத்தில் இருந்தவள் “நான் வரலை பாட்டி…இன்னொரு நாள் வர்றேன்…இப்போ எனக்கு தூக்கமா வருது” என போர்வையால் முகத்தை மூடிக்கொண்டாள்.
அவரும் பெருமூச்சுடன் அவளை பார்த்துவிட்டு “சரி சரி தூங்கு…தனம் வீராவோட வெளியப்போறாளாம்…இன்னைக்கு உனக்கு சாப்பாட்டை சரவணன் எடுத்திட்டு வந்து தருவான்…வாங்கி சாப்பாடு…நான் ஒரு பதினொரு மணிக்கெல்லாம் வந்திடுவேன்” என்று கூறி அவளிடம் விடைப் பெற்று சென்றார்.
உடனே போர்வை விலக்கியவள் ‘ஏதே அவர் சாப்பாடு எடுத்திட்டு தருவாரா?’ என்றெண்ணியளின் இதயம் படபடக்க,
‘நிஜமாவே வருவாரா?’ என அவளிற்குள் ஒரு வித பரபரப்பு தொற்றிக்கொண்டது.
சடாரென்று படுக்கையிலிருந்து எழுந்தவள் வேக வேகமாக ஓடிச்சென்று குளித்துவிட்டு தனது பையிலிருந்து நல்ல உடை ஏதேனும் கிடைக்கிறதா என ஆராய்ந்தாள்.
அவசர அவசரமாக பையினுள் கைவிட்டு துழவிக்கொண்டிருந்த காரிகையின் கரம் படீரென்று நின்றது.
‘ஒரு நிமிஷம் இரு…நான் எதுக்கு இப்போ ரொம்ப எக்ஸைட் ஆகறேன்…அவன் என்னை அவ்வளவு கேவலமா நினைச்சிருக்கான்…நீ என்னடானா கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் அவனுக்காக உன்னை அலங்கரிச்சிட்டு இருக்கே?’ என தனக்குள்ளே காறி உமிழாத குறையாக திட்டியவள்,வேகமாக ஒரு இளஞ்சிவப்பு நிற குளிர் அங்கியையும் கீழே முழங்கால் வரையிலான மிக்க மவுஸ் போட்ட கால்சட்டையும் அணிந்து மெத்தையில் விழுந்துவிட்டாள்.
‘எனக்கு என்ன தான் ஆச்சு?நான் இப்படியெல்லாம் கிடையாதே’ என தன்னை பற்றியே சுய பரிசோதனை செய்தாள்.
அவளிற்கான விடை தான் இப்போது வரை கிடைக்கவில்லை.
‘ஆன்ட்டி இருந்தாலாவது என் மனசை திசைத்திருப்பிடுவேன்…இப்போ என்ன செய்யறது?’ என தலையணையில் முகத்தை புதைத்துக்கொண்டு காலை உதறி அவள் சிணுங்கியிருந்த வேளை அவளது வீட்டின் அழைப்பு மணி ஓசைக் கேட்டது.
உடனே அவளின் இதயம் படபடத்திட,படீரென்று கட்டிலில் எழுந்து அமர்ந்த யாழினி வேகமாக தனது களைந்து சுருண்ட கூந்தலை சரிச்செய்ய ஆரம்பித்தாள்.
அவளின் சுருண்ட கூந்தலோ அடங்குவேணா அவளை போலவே திமிராக எழுந்து நின்றது.
‘ப்ச்’ என சலித்து வேகமாக ஒரு நெகிழி பேண்டை எடுத்து கூந்தலை அதில் அடக்கிக்கொண்டு தனது ஆர்ப்பரிப்பை மறைத்தப்படி கதவை திறந்தாள்.
அவள் நினைத்தது போலவே சரவணன் தான் அவளிற்கான உணவுடன் வந்திருந்தான்.
அவளோ கதவை திறந்த நொடியே தன் முகத்தை கோபமாக இருப்பது போல் மாற்றி வெளியில் நின்றிருந்த ஆடவனை முறைத்தாள்.
வெளியில் நின்றிருந்தவனை பார்த்ததும் அவளின் மனம் பாகாய் உருகியது.
அதிலும்,கருப்பு நிற சட்டை அணிந்து அதற்கு மேலாக மஞ்சள் நிறத்தில் ஜாக்கெட் அணிந்து ஆண்மையின் இலக்கணமாய் நின்றிருந்தவனை கண்டு அவளின் இதயம் தடம்பிரளவில்லை என்றால் தான் அதிசயம்!
அவனில் உருகி ரசிக்க தோன்றிய மனதை ‘யாழினி ஸ்டெடி…ஸ்டெடி’ என அடக்கி “ம்க்கும்” என தொண்டையைச் செருமினாள்.
அவனிடம் எதுவும் பேசாமல் மார்ப்பிற்கு குறுக்கே கைகள் கட்டி நின்றாள்.
அவனின் மீது அவள் கோபமாக இருக்கிறாளாம்…அதை தன் செயலில் காட்ட முயன்றுக் கொண்டிருக்கிறாள்.
ஆனால் உள்ளுக்குள் அவளின் இதயம் மட்டும் “லப் டப் லப் டப் லப் டப்” என வேகமாக துடித்தது.
ஆனால் அவனோ அவளிடம் மன்னிப்போ அல்லது வேறு விதமான எந்தவொரு உரையாடலும் இல்லாமல் “அம்மா சாப்பாடு கொடுக்க சொன்னாங்க…அதைக்கொடுக்க தான் வந்தேன்…இந்தாங்க” என அழுத்தமாக கூறி,அவளிடம் அடுக்கு கிண்ணங்களை நீட்டினான்.
அவளோ ‘அவ்வளவு தானா?’ என்பது போல் ஏமாற்றத்துடன் அவனை பார்த்தாள்.
தனலட்சுமியிடம் அவ்வாறு பேசியதற்கு குறைந்தபட்சமாக அவளை கண்டு குற்றவுணர்வுடன் தலைக்குனிவான் என்று எண்ணினாள்.
ஆனால் அவனோ நிமிர்ந்து நின்று அவளின் முகத்தை ஆழ்ந்துநோக்கி தவறே செய்யாதவன் போல் பேசிட,அவளிற்கு சப்பென்றானது.
அதுவரை அவளின் ஆர்ப்பரித்த உள்ளம் எல்லாம் அமைதியாகிவிட “கொடுங்க” என வேகமாக அவனிடமிருந்து உணவை அவள் கிட்டத்தட்ட பறிந்துக்கொள்ள,
அவனோ “ம்” என தலையசைத்துவிட்டு அவளிடம் எதுவும் கூறாமல் கூட அங்கிருந்து தனது வாகனத்தை நோக்கி சென்றிருந்தான்.
அவனின் இந்த விட்டேற்றியான குணம் அவளின் மனதை காயப்படுத்திட ‘போடா போ’ என வெகுண்டுப்போய் கதவை படீரென்று சாற்றியிருந்தாள்.
அவள் கதவை அடித்து சாற்றிய சத்தத்தில் அவ்விடமே இலேசாக அதிர்ந்து அடங்கியது.
சட்டென விழி உயர்த்தி அவள் மூடியக்கதவை வெறித்த சரவணன் தலையை உலுக்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.