அறைக்குள் வந்த யாழினி கதவை மெதுவாக மூடினாள்.
அறை முழுக்க லேசான சந்தன வாசனை படர்ந்திருந்தது.
பழமையான மர அலமாரி, ஒரு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள், சுவரில் மாட்டப்பட்டிருந்த பழைய குடும்பப் புகைப்படங்கள் என அந்த இடமே ஒரு தனி அமைதியில் இருந்தது.
அவற்றுக்கு நடுவே இருந்த பெரிய மர ஜன்னல் வழியே, மழையின் துளிகள் கண்ணாடியில் கோடுகளாய் ஓடிக்கொண்டிருந்தன.
சில நொடிகள் அப்படியே திகைத்து நின்றாள் யாழினி.
குளிரில் அவளது கைகள் இன்னும் நடுங்கிக்கொண்டிருந்தன.
ஆனால் அவளது மனதிற்குள் அதைவிடப் பெரிய தடுமாற்றம்!
‘ஏ காதல் தோல்வி பாப்பா…’
‘எங்க சரவணன் மாதிரி நல்ல பையன் கிடைப்பான்…’ என்ற
தனலட்சுமியின் குரல் அவளது காதுகளில் மீண்டும் மீண்டும் அசரீரியாய் ஒலித்து அவளை வதைத்தது.
அவரின் குரல் ஒலித்ததும் இன்று வண்டியில் பயணம் செய்யும் போது எதிர்பாராமல் நிகழ்ந்த அந்த தேக உரசல் நினைவில் எழுந்ததோடு ‘அவர் எனக்கே எனக்குனு கிடைச்சா எப்படி இருக்கும்?’ என்று எண்ணும் போதே அவளின் முகம் சிவந்துப்போனது.
அவளிற்குள் விபரீதமான எண்ணங்கள் எல்லாம் தோன்ற ஆரம்பித்திட,அவளின் மொத்த மேனியும் சூடேறியது.
உடனே ‘காட்’ என கன்னத்தை கைகளால் அழுந்த தேய்த்துக்கொண்டவள் “ஊப்…ஊப்” என இதழை குவித்து ஊதி தன்னுள் நிகழ்ந்த மாற்றத்தை கட்டுப்படுத்த முயன்றாள்.
அவளின் மனசாட்சியோ ‘யாழினி இது ரொம்ப தப்பு…அவனை பத்தி உனக்கு என்ன தெரியும்?அவனை பார்த்து முழுசா ஒரு நாள் கூட ஆகலை… அதுக்குள்ள என்ன இதெல்லாம்?’ என வார்த்தைகளை கடித்துத் துப்ப,
‘புரியுது புரியுது’ என தன் எண்ணங்களையே வெறுத்துத் தலையை உலுக்கிக்கொண்டாள் அவள்.
அடுத்த கணமே தன்னை நிதானப்படுத்திக்கொண்டு கையிலிருந்த பையிலிருந்து மாற்று உடை எடுக்கச் சென்றவள், மேஜை மீது கிடந்த அவளது அலைப்பேசியின் திரை ஒளிர்வதைக் கண்டாள்.
அதில் ‘137 தவறவிட்ட அழைப்புகள்’ என்று காட்டியது.
அதைப் பார்த்ததும் அவளது முகம் அப்படியே சோர்ந்து போனது.
அப்பா, அம்மா,சில நெருங்கிய நண்பர்கள், இன்னும் சில தெரியாத எண்கள் எனத் திரை முழுக்க அழைப்புகள் வந்து குவிந்திருந்தன.
சட்டென திரை அணைந்துவிட,அலைப்பேசியை அப்படியே மேஜை மீது தலைகீழாக கவிழ்த்து வைத்துவிட்டாள்.
இப்போது யாருடனும் பேச அவளிற்கு விருப்பமில்லை,யாரையும் எதிர்கொள்ளும் துணிச்சலும் அவளிற்கு இல்லை என்பதே உண்மை!
இப்போதைக்கு அவளிற்கு இந்த மழையும், இந்தத் தனிமையும் மட்டுமே போதுமானதாக இருந்தது.
சில நிமிடங்களில் உடை மாற்றிவிட்டு அவள் அறைக்கு வெளியே வந்தாள்.
வரவேற்பறையில் அடியெடுத்து வைத்ததுமே மிளகு, இஞ்சி, துளசி கலந்த கசாயத்தின் காட்டமான நறுமணம் அவளது நாசியைத் துளைத்தது.
அவளது புருவங்கள் தானாகச் சுருங்கின. அங்கே தனலட்சுமி கையில் ஒரு சிறிய குவளையுடன் அவளுக்காகவே காத்திருந்தார்.
அவள் வந்ததை கண்டவுடன் அவளிடம் கசாயத்தை நீட்டியவர் “நீ இங்க தான் வர்றேன்னு என்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தால் நானே உன்னைய கூட்டிட்டு வந்திருப்பேனில்லை…என்ன பொண்ணும்மா நீ” என ராகம் போல் முகத்தை நீட்டி முழக்கிச் சொல்ல,
அவரை குறும்புடன் நோக்கியவள் “நீங்களும் இங்க தான் தங்கியிருக்கேன்னு சொல்லியிருந்தால் நானும் முன்னாடியே அதைப்பத்தி சொல்லியிருப்பேனில்லை…என்ன பெரியவங்க நீங்க?” என அவரை போன்ற பாணியிலே பேசிக்காட்ட,
அவளின் விளையாட்டை அறிந்தவர் “சரி சரி நீயும் தப்பு…நானும் தப்பு ஒத்துக்கிறேன்” என அவளிடம் உடனடியாக சரணடைந்தவர்,பின்பு ஏதோ நினைவு வந்தவராய் அவளிடம் விசாரணை செய்ய ஆரம்பித்துவிட்டார்.
‘மகனை எவ்வாறு தெரியும்?’ என்பதில் தொடங்கி அனைத்தையும் கேட்டறிந்து “ஓ அப்படியா?” என யோசனையுடன் கூறியவர்,
பின்பு “அதானே பார்த்தேன் என் பையனுக்கு அப்படியெல்லாம் ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணற அளவுக்கு சமத்து இல்லையேன்னு நினைச்சேன் நீயும் அதையே சொல்லறே…எப்போ தான் இந்த பையன் திருந்தப்போறானோ” என முகத்தைச் சுளித்தார்.
அவரின் பேச்சை கேட்டு திகைத்தவள் “ஆன்ட்டி உங்க பையன் ரொம்ப நல்லவரா இருக்காருனு நீங்க சந்தோஷம் தான் படணும்…இப்படி அவரை திட்டக்கூடாது” என்றாள்.
அவரோ முகத்தை சுருக்கி “அட நல்லவனா இருந்து என்ன பிரயோஜனம்மா…கால காலத்திலே கல்யாணம் பண்ணி நாலைஞ்சு புள்ளைக்குட்டிய பெத்துப்போட்டால் தானே வீடு கலகலனு இருக்கும்” என ஒரு தாயாக அவரின் குமறலை கொட்ட,
அவர் கூறிய தொனியில் யாழினிக்கு சிரிப்பு வந்திட
“ஆமா உங்களுக்கு எத்தனை பிள்ளைங்க” என கேலியாக புருவம் உயர்த்தினாள்.
அவரோ “இரண்டு” என பெருமிதமாக கூறி இருக்கையில் அமர,
“ஓ…நீங்க மட்டும் அளவான குடும்பம்னு இரண்டு பெத்துப்பீங்க…உங்க பையன் மட்டும் நாலைஞ்சு பெத்துப்போடணுமா?இது என்ன அநியாயமா இருக்கு” என ஆச்சரியம் போல் அவரை பரிகாசித்தாள்.
அவரோ “ம்க்கும்” என தோள்பட்டையில் நொடித்துக்கொண்டே “இரண்டு நான் பெத்திருக்கேன்னு தான் பேரு…இரண்டுமே அவங்க அப்பன் புலிக்குட்டி மாதிரியே சிடுமூஞ்சு…கன்னுக்குட்டி அது தான் மூத்தது…இருபத்தி நாலு மணி நேரமும் உர்ருன்னே திரியும்…அப்படி இருந்தால் எந்த பொண்ணுக்கு பிடிக்கும்…சின்னது ஆட்டுக்குட்டி சேலத்திலே ஹாஸ்டெல்ல தங்கிப்படிக்குது…ஃபோன் போட்டால் ‘தேவையில்லாமல் பேசி என் நேரத்தை வீணாக்காதீங்கம்மா…நான் படிக்கணும்’னு வைச்சிடுவான்…என்னத்தை சொல்ல” என படபடவென புலம்பித்தள்ளினார்.
“ஏன் ஆன்ட்டி?உங்களுக்கு மட்டும் செல்லப்பேரு சில்க் ஸ்மிதா…அவங்களுக்கு மட்டும் சிங்கக்குட்டி…கன்னுக்குட்டி…ஆட்டுக்குட்டினு ஒரே மிருகங்க பேரா வைச்சிருக்கீங்க…டூ பேட்” என அவளின் காதோர சுருள் அசைந்தாட தலையசைத்து கூற,
“காட்டுப்பயலுகளுக்கு காட்டு மிருகங்க பேரு தான் வைக்கணும்...அது தான் சரி” என முகத்தை சுழித்து அவர் திமிராக சொல்ல,அவளோ தன் மனதில் இருக்கும் கவலைகளை மறந்து கலகலவென சத்தமாக சிரிக்க தொடங்கிவிட்டாள்.
அவளின் சிரிப்பு சத்தம் வெளியில் நின்றிருந்த சரவணனிற்கும் சரோஜாவிற்கும் கேட்டது.
அவளிற்கு சிரிப்பில் கண்ணிலிருந்து நீரே வழிந்துவிட்டது.
அந்த அளவு மனம் விட்டு சிரித்தாள் யாழினி.
சரவணனோ ‘என்ன மோகினி பிசாசை விட மோசமா சிரிக்கிறாள்’ என்றெண்ணிட,
சரோஜாவோ “உன் அம்மா வேலை தான் போலே…” என்று கூறி அவரும் சிரிக்க,
‘ஷப்பா முடியலை’ என நெற்றியை நீவியவன் “அம்மா” என வெளியிலிருந்து அதட்டலாய் அழைக்க,
இருவரும் ஒரே நேரத்தில் ஒன்றாக எட்டிப்பார்த்தனர்.
யாழினியின் முகத்தில் தெரிந்த களைப்பை கவனித்துவிட்டு தாயிடம்
“அம்மா அவங்களை தொந்தரவு பண்ணாமல் வாங்க…அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றான் கண்டிக்கும் தொனியில்.
தனலட்சுமியோ “மை டியர் சன்…ஒரு அழகான பொண்ணுகிட்ட பேசினால் உனக்கு ஏன்டா பொறுக்கமாட்டிக்குது…நீ எதுவும் அந்த பொண்ணை காதல் பண்ணற யோசனையிலே இருக்கியா என்ன?” என கடுப்பான குரலில் கேட்டுக்கொண்டே வெளியில் வர,
சட்டென அவன் முகம் மாறிட “அம்மா…” என பல்லைக்கடித்து சீறினான்.
அன்னையுடைய விளையாட்டு பேச்சை அவன் அறிவான்.
ஆனால் அதைக்கேட்டு பெண்கள் இருவரும் ‘என்ன நினைப்பார்களோ?’ என சங்கடமாக அவர்களை ஏறிட,
பாட்டி பேத்தி இருவருமே தனலட்சுமியின் குணம் அறிந்ததால் புன்னகையுடனே நின்றிருந்தார்கள்.
இருப்பினும் “அம்மா என்ன பேச்சு இது?” என அழுத்தமாய் சரவணன் கண்டிக்க,
“சரிடா…சரிடா நான் எதுவும் பேசலை” என முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு சொன்னவர் “நான் வர்றேன்மா…கசாயம் கசப்பா இருக்குனு குடிக்காமல் இருக்காதே…மறக்காமல் குடிச்சிடு…வர்றேன்மா…நாளைக்கு காலையிலே பார்ப்போம்” என இருவரிடமும் விடைப்பெற்று மகனுடன் புறப்பட்டார்.
சரவணனோ இலேசான தலையசைப்புடன் இருவரிடமும் விடைப்பெற்று தாயின் பின்னோடு படியேற ஆரம்பித்தான்.
அவர்கள் படியேறியதும் சரோஜா பேத்தியிடம் “தனலட்சுமியை உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்பதும் அவள் மெல்லியக் குரலில் அதற்கான பதிலை சொல்வதும் அவன் செவியில் தெளிவாக விழுந்தது.
அவனும் அப்போது தான் இருவருக்கும் எப்படி அறிமுகமானது என்று தெரிந்துக்கொண்டான்.
‘அம்மா பண்ணறதே தாங்கலை…இவ அம்மாவை விட பெரிய ஆளா இருப்பா போலே…எப்படி இவளோட நாளை ஓட்டறது?’ என பெருமூச்சை வெளியேற்றி குளித்து தன் உணவை முடித்துக்கொண்டு படுக்கையில் விழுந்தான்.
இரவு உண்ணும் போது “அம்மா அந்த பொண்ணுக்கிட்ட தேவையில்லாமல் பேசக்கூடாது…சரோஜாம்மா மாதிரி அவங்களும் நல்லவங்களா இருப்பாங்கனு எதிர்பார்க்கமுடியாது…ஜாக்கிரதையா இருங்க” என எச்சரித்தான் மகன்.
வீராவோ “என்னப்பா?” என மகனிடம் விசாரிக்க,அவனும் நடந்ததை சுருக்கமாக விவரித்தான்.
உடனே மனைவியின் புறம் திரும்பியவர் “தனம் சரவணன் சொல்லறது சரி தான்…எல்லாரும் ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க…சாப்பாடு கொடுக்கிறதா இருந்தால் கொடுத்திட்டு பேசாமல் வந்திடணும்” என்று அவரும் தன் பங்கிற்கு அறிவுரை கூறினார்.
“ஏங்க நீங்க நினைக்கிற மாதிரி இல்லை…அந்த பொண்ணு பாவம்ங்க…காதல் தோல்வி வேற…நான் கொஞ்சம் பேசினால் ஆறுதலா இருக்குமில்லை” என யாழினிக்கு பரிதாபப்பட்டு பேச,
சட்டென தலையுயர்த்திய சரவணன் “ஏதே காதல் தோல்வியா?” என ஒரு மாதிரி குரலில் வினவ,
அவனது குரலின் இறுக்கம் அறியாத “ஆமாப்பா” என்றார் சோகமாக.
‘ஓ அதான் மேடம் பைய தூக்கிட்டு ஓடி வந்திட்டாங்களோ?யாருக்கிட்டயும் சொல்லாமல் வர அளவு அப்படி என்ன காதலோ?’ என அவளை இளக்காரமாக மனதிற்குள் திட்டிக்கொண்டான்.
மனைவி கூறுவதை நிதானமாக கேட்ட வீரா “என்ன வேணா இருந்திட்டுப் போகட்டும் தனம்…அவங்க குடும்பம் விவகாரம் நமக்கு எதுக்கு?சரோஜாம்மா ரொம்ப வருஷம் கழிச்சு பேத்திய பார்க்கிறாங்க…அதனாலே அவங்ககூட தனியா நேரம் செலவளிக்க நினைப்பாங்க…நீ போய் சும்மா சும்மா அவங்களை தொந்தரவு பண்ணாதே…என்ன புரியுதா?” என்றார் அழுத்தமான குரலில்…
மகனும் அதையே ஆமோதிக்கவும் வேறுவழியின்றி “சரி” என வேண்டாவெறுப்பாக தலையசைத்தார் தனலட்சுமி.
அடுத்த நாள் காலையில் அவர்கள் வீட்டிற்கு உணவை கொண்டு வந்து வைத்துவிட்டு அமைதியாக வெளியேற முயன்றவரை எதிர்கொண்ட யாழினி “குட்மார்னிங் சிலுக்கு ஆன்ட்டி” என்று சிரித்தப்படி காலை வணக்கம் சொல்ல,
அவரோ “ம் குட்டு மார்னிங்” என அவளை பார்க்காமலே முணுமுணுத்தப்படி வெளியேறிவிட்டார்.
தனது மகன் மற்றும் கணவர் கூறியதை அப்படியே அச்சுப்பிசகாமல் செய்தார் தனலட்சுமி.
தனக்கு உரித்தானவர்கள் கூறுவது தான் அவருக்கு வேதவாக்கு!
அதனால் அதனை தெளிவாக பின்பற்றினார்.
அன்றைய நாள் மதியமும் அதுவே தொடர்கதையானது.
நேற்றெல்லாம் வாய் ஓயாமல் பேசிய நபர் இன்று வாயே திறக்காமல் அழுத்தமாக இருக்கவும் அவள் குழம்பிப்போனாள்.
‘என்னாச்சு இவருக்கு?’ என யோசனையுற்றாள்.
தனது பாட்டியிடம் “பாட்டி அந்த ஆன்ட்டிக்கு என்னாச்சு?என்கிட்ட சரியாவே பேசலை” என சோகமாக சொல்ல,
உடனே பேத்தியை முறைத்த சரோஜா “ஏன்டி அங்க உங்க அம்மாவும் அப்பாவும் நீ ஒரு வார்த்தை பேசமாட்டியானு தவிச்சுப்போய் இருக்காங்க…நீ யாரோ ஒருத்தர் பேசலைனு கவலைப்படறே?” என சிடுசிடுத்தார்.
நேற்று வந்ததிலிருந்து அவளிடமிருந்து பல வகையில் பேசிப் பார்த்துவிட்டார்.
ஆனால் அவளிடமிருந்து சரியான பதில் எதுவும் வரவில்லை.
இப்போதும் அவள் அமைதியாகிவிட “யாழினி எப்போவாது தவறு நடப்பது இயற்கை தான்மா…அதுக்காக அவங்க உறவே வேணாம்னு ஓடி வந்திட்டால் எப்படி?அவங்க மன்னிப்பு கேட்கக்கூட சந்தர்ப்பம் கொடுக்கலைனா எப்படிம்மா?” என அவளின் கரம் பற்றி கனிவுடன் உரைக்க,
சட்டென விழிகளில் பூத்த நீருடன் அவரை ஏறிட்டவள் “பாட்டி அவங்க என்ன பண்ணாங்கனு உங்களுக்கே தெரியும்…அப்படியிருந்தும் எப்படி பாட்டி இப்படி பேசறீங்க?” என ஆதங்கத்துடன் கேட்டவள்,
அடைத்த தொண்டையை செருமிக்கொண்டு “என் இடத்திலிருந்து என்னை பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருங்க…எனக்கு அவங்க செஞ்சதை இப்போ நினைச்சாலும் இங்க வலிக்குது பாட்டி” என இதயத்தை தொட்டுக்காட்டி உயிரை உருக்கும் குரலில் பேசியவளின் சொற்களை கேட்டு அவருக்கும் வலித்தது.
“அவங்க பண்ணது தப்பு தான்மா…ஒரு தடவை அவங்க கூட பேசி பார்க்கலாமில்லை…வேணும்னா நேரிலே வரச்சொல்லட்டுமா?” என அவளின் கரம் பற்றி சொல்ல,
படீரென்று அவரின் கரத்தை தட்டிவிட்டவள் “உங்களுக்கு என்னை விட அவங்க தான் முக்கியம்னா தாராளமா வரச்சொல்லுங்க…ஆனால் அவங்க வரும்போது நான் இங்க இருக்கமாட்டேன்” என்றாள் அழுத்தத்திருத்தமாக.
அதைக்கேட்டு அதிர்வுற்றவர் “யாழினி” என பதறிப்போய் அழைக்க,
அவளோ அவரை தீர்க்கமாய் நோக்கியிருந்தாள்.
கண்டிப்பாக நான் கூறியதை செய்வேன் என்ற உறுதி அவளின் விழிகளில் பட்டவர்த்தனமாக தெரிந்தது.
அதில் அச்சமுற்றவர் “சரி சரி அவங்களை இங்க வர வேணாம்னு சொல்லிடறேன்…எனக்கு நீ தான் முக்கியம்…நீ இங்க என் கூடவே இரும்மா…எங்கியும் போக வேணாம்” என பேத்தியைக் கட்டிக்கொள்ள,அதன்பிறகே யாழினி சிறிதும் சமாதானமுற்றாள்.
மாலை அவர்கள் வீட்டிற்கு சிற்றுண்டியை எடுத்துக்கொண்டு வந்த தனலட்சுமியைப் பிடித்துக்கொண்ட யாழினி “என்னாச்சு ஏன் என்கிட்ட சரியா பேசமாட்டிக்கிறீங்க ஆன்ட்டி…நான் ஏதாவது தப்பா பேசிட்டானா?” என வருத்தமாக கேட்க,அவரிடம் அப்போதும் மௌனம்!
“ஆன்ட்டி பிளீஸ்…” என அவள் கெஞ்சலாய் கேட்டதும் அவளை விழி உயர்த்தி ஏறிட்டார்.
அவளது விழியில் தெரிந்த தவிப்பை கண்டவருக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
அதனால் புடவை முந்தானையை திருக்கிக்கொண்டே “அது வந்தும்மா…என் பையனும் என் புருஷனும் உன்கிட்ட பேசக்கூடாதுனு சொல்லிட்டாங்க” என பட்டென சொல்லிவிட,
அதைக்கேட்டவுடன் அவளின் மனம் கொதித்துப்போனது.
அவளிற்கு என்று இருக்கும் ஒரே ஆறுதல் அவர் தான்!
அவரை அவளுடன் பேசவேண்டாம் என்று கூறியதை கேட்டு “ஏன்வாம்?” என வெதும்பிப்போய் கேட்டாள்.
அவர் நேற்று இரவு நடந்தது அனைத்தையும் அவளிடம் அப்படியே ஒப்பித்துவிட அவளின் மனதில் ஆத்திரம் சுறுசுறுவென ஏறியது.
‘எவ்வளவு தைரியம் இருந்தால் என்கிட்ட பேச வேணாம்னு அந்த ஆள் சொல்லியிருப்பான்?இன்னைக்கு அவன் வரட்டும்…இருக்கு’ என சரவணனை நினைத்து பல்லைக் கடித்தாள்.
வீராவை பற்றி அவளிற்கு எதுவும் தெரியாது.ஆனால் நாயகனாக வரித்து வைத்திருப்பவனின் இந்த விஷமம் அவளை இன்னும் அதிகமாய் கோபப்படுத்தியிருந்தது.
அதேசமயம் தன் முன்னே நின்றிருந்த தனலட்சுமியின் கரம் பற்றி “யாரு வேணா என்னவேணா சொல்லிட்டு போகட்டும் ஆன்ட்டி…எனக்கு நீங்க பேசறது பிடிச்சிருக்கு…உங்ககூட பேசினால் என் மனசு ரிலாக்ஸ்டா இருக்கு…என்கூட பேசாமல் மட்டும் இருக்காதீங்க…பிளீஸ்” என கெஞ்சலும் கோரிக்கையுமாய் அவள் கேட்க,
அதில் மனம் இளகிய பெரியவர் முகம் மலர்ந்திட “நீயே அனுமதி கொடுத்திட்டியே பாப்பா…இனிமேல் பாரு எப்படி பேசறாருன்னு…” என வழக்கமான அவரது ஓட்டப்பந்திய பேச்சை ஆரம்பித்துவிட,அவளும் அவருடன் ரசனையாக உரையாட ஆரம்பித்திருந்தாள்.
அவளின் மனம் உலைக்களமாய் சரவணனை எண்ணி கொதித்திருந்தது.
‘பார்க்க ஹீரோ மாதிரி இருந்திட்டு பண்ணறது வில்லன் வேலை…சேடிஸ்ட்’ என திட்டிக்கொண்டு இரவு அவனது வருகைக்காக வாசலில் இருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து அவனிற்காக காத்திருந்தாள் யாழினி.