காதல் 8

யாழினியின் மனம் ஏமாற்றத்தில் குமைந்தது.

‘ஒரு குட்டி மன்னிப்புக்கு கூட தகுதியில்லாதவளா நானு’ என்றெண்ணியவளின் விழியோரம் கண்ணீர் கசிந்தது.

அதையுணர்ந்தவள் ‘நோ யாழு’ என பிடிவாதமாக தனக்கு தானே வலியுறுத்தி கண்ணீரை சுண்டிவிட்டாள்.

‘தன்னை சகமனிதியாக கூட மதிக்காத ஒருவனிற்காக அவள் ஏன் அழ வேண்டும்?’ என்ற வீம்பு அவளுள் பிறந்திட,அவள் உடல் விறைத்து நிமிர்ந்தாள்.

சட்டென தனலட்சுமியின் நினைவு எழுந்தவுடன் அவளின் மேனி மீண்டும் இளகியது.

தனலட்சுமி தன் மீது காட்டும் அன்பை கணக்கில் கொண்டு வேறுவழியின்றி உணவருந்த அமர்ந்தாள்.

உணவு அடுக்கை பிரித்து பார்த்தவளின் விழிகள் இரண்டும் பனித்தது.

அவளிற்கு மிகவும் பிடித்த கீரைக் கூட்டு,உருளைக்கிழக்கு வறுவல்,சாதம் மற்றும் ரசம் என அனைத்தும் இருந்தது.

தனலட்சுமியின் உயரிய குணத்தை எண்ணி சிலாகித்தவள் ‘அப்படிப்பட்ட அம்மாவுக்கு இப்படியொரு சிடுமூஞ்சி பையன்’ என திட்டிக்கொண்டே உணவை தட்டில் பறிமாறி உண்ண ஆயுத்தமானாள்.

ஆனால் வாய் வரை உணவை கொண்டு சென்றவளால் அதற்கு மேல் உட்கொள்ள முடியவில்லை.

ஏனோ அவளிற்குள் ஒரு தடுமாற்றம்…!

அந்த தடுமாற்றம் கூட சரவணனது உதாசீனத்தால் விளைந்த வருத்தம் தான்!

சரவணனின் செயல்களும் அவளை வருத்த,அதன் பின்னோடு அவளின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களும் நினைவில் எழுந்து அவளின் இதயத்தை அழுத்தியது.

அதற்கு மேலும் அந்த உணவை உட்கொள்ள முடியும் என்று அவளிற்கு தோன்றவில்லை.

உடனே கையிலிருந்த உணவை மீண்டும் தட்டில் உதறிக்கொண்டு எழுந்து விட்டாள் காரிகை‌.

தட்டிலிருந்த உணவை மூடி வைத்துவிட்டு எழுந்து விறுவிறுவென வரவேற்பறைக்கு வந்தவள் கண்மூடி நீள்விரிக்கையில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள்.

பெற்றவர்களே அவளை அவமதித்து விட்டார்கள் என்ற காரணத்திற்காக உதறித் தள்ளிவிட்டு வந்தவளால் அவளை  அலட்சியம் செய்தவனை ‘போடா’ என அவ்வளவு எளிதில் ஒதுக்கி தள்ள முடியவில்லை.

ஏன் இந்த தடுமாற்றம்…கலக்கம்…தவிப்பு என தனக்குள்ளே கேள்விக்கேட்டவளிற்கான பதில் அவளிற்கு கிடைக்கவில்லை.

அதேநேரம் தனது கடைக்கு வந்த சரவணன் மனமும் முரண்டிக்கொண்டே இருந்தது.

அவளின் முகத்தில் தெரிந்த எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் உள்ளுக்குள் நெருஞ்சி முள்ளாய் குத்தின.

அப்போது அவனது தாய் தனலட்சுமியிடமிருந்து அழைப்பு வந்தது.

அன்னையின் எண்ணை கண்டதும் அவனின் முகம் இளகிட “ஹலோ” என்று மென்மையாய் கூறியதும் தான் தாமதம் படபடவென தனது விசாரணையைத் துவங்கிவிட்டார் தனலட்சுமி.

ஆரம்பத்தில் மகனது நலனை விசாரித்து அறிந்தவர், பின்பு

“கன்னுக்குட்டி யாழு பாப்பா சாப்பிட்டாளா?” என யாழினியை பற்றி வினவ தொடங்கினார்.

அன்னை அவளை பற்றி பேசியதும் காலையில் நிகழ்ந்த சம்பவங்கள் ஞாபகத்தில் எழ,அவன் இதழை குவித்து ஊதிக்கொண்டான்.

“கன்னுக்குட்டி பாப்பா சாப்பிட்டாளா இல்லையா?” என மீண்டும் ஒரு முறை அவன் அன்னை கேட்கவும்,

அவனோ “எனக்கு எப்படி தெரியும்?” என விட்டேற்றியாக கூறியப்படி தேநீர் கலக்க ஆரம்பித்தான்.

அவன் பதிலை கேட்டதும் கடுப்பானவர் “ஏன்டா மகனே…அவ சாப்பிட்டாளா இல்லையானு கூட பார்க்காமல் கடைக்கு கிளம்பிட்டியா?” என சிடுசிடுக்க,

அவனோ நிதானமாக தேநீரை குவளையில் ஊற்றியப்படி “அம்மா அவங்க என்ன சின்னக்குழந்தையா?அவங்களுக்கு சாப்பிட தெரியும்” என்றான்‌.

அதில் இன்னும் கோபமுற்றவர் “நிஜமாவே நீ நான் பெத்த மகன் தானாடா?இல்லை…ஆஸ்பத்திரியிலிருந்து மாத்தி தூக்கிட்டு வந்திட்டனா?” என அவனை திட்ட,

அவனோ “அம்மா” என குரலுயர்த்தி அன்னையை கண்டிக்க,

“பின்ன என்னடா?உனக்கு சொன்னால் மட்டும் கோவம் வருது…அக்கறைய என் மச்சானை பார்த்து கத்துக்கோடா…உன்னை யெல்லாம் என்ன செய்யறதோ தெரியலை” என மகனை வசைப்பாடிவிட்டு,அருகிலிருந்த தனது கணவரின் புறம் திரும்பிய தனலட்சுமி,

“புலிக்குட்டி உங்க பையன் பண்ணி வைச்சிருக்கிற காரியத்தை பார்றேன்…ஏற்கனவே அந்த புள்ளை மனச்சொடிஞ்சு போய் இங்க வந்திருக்கு…நாம்ப தானே அந்த புள்ளைய கொஞ்சம் அன்பா பார்த்துக்கணும்…சோகத்திலே அந்த புள்ளை ஏதாவது பண்ணிக்கிட்டால் என்ன செய்யறது?இது தெரியாமல் உங்க பையன் வேற பைத்தியக்காரன் மாதிரி பேசிக்கிட்டு கிடக்கான்” என தனது கணவரிடம் மகனைப் பற்றி குற்றப்பத்திரிக்கை வாசித்தார்.

அதனை அலைப்பேசியின் வழியே கேட்ட சரவணனிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது.

அதனால் “அம்மா எனக்கு வேலை இருக்கு ஃபோனை வைங்க” என பட்டென அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

தனலட்சுமியின் பேச்சை கேட்டு அதிர்ந்த வீராவோ “சிலுக்கு நிஜமாவே அந்த புள்ளை ஏதாவது பண்ணிக்குமா என்ன?” என பயத்துடன் கேட்க,

தனலட்சமியோ “அட இல்லீங்க…சும்மா நம்ப பையனை பயமுறுத்த அப்படி சொன்னேன்” என அசால்ட்டாக கூறியப்படி அலைப்பேசியை கைப்பையினுள் போட்டார்.

“அடிப்பாவி” என வாயில் கைவைத்தவர்,

“எதுக்கு இப்படி பையன்கிட்ட பொய் சொன்னே?” என்று ஆற்றாமையுடன் கேட்டார்.

அவரை அலட்சியமாக நோக்கிய தனலட்சுமி “ஏய்யா உன் பையன்‌ எப்போ பாரு மூஞ்சிய உர்ருங்கோட்டான் மாதிரி வைச்சிட்டு சுத்தினால் எப்போ அவனுக்கு கல்யாணமாகறது?இப்போ பாரு நான் போட்ட பிட்டுலே பையன் இந்நேரம் வண்டிய எடுத்திட்டு வீட்டுக்கு கிளம்பியிருப்பான்” என உறுதியாக இயம்பினார்.

அதில் திகைத்த வீரா “எப்படி அவ்வளவு உறுதியா சொல்லறே?” என சந்தேகமாக கேட்க,

அவரோ “உறுதியாலாம் எனக்கு தெரியாதுய்யா…ஏதோ என் உள் மனசு சொல்லுது…” என்றார் அசிரத்தையுடன்..

உடனே மனைவியைக் கூர்ந்து நோக்கிய வீரா “நீ இப்போ என்ன வேலை பண்ணிட்டு இருக்கேனு தெரியுதா தனம்?” என அழுத்தமாக வினவ,

“அது என்னவா வேணா இருந்திட்டு போகட்டும்…பையனுக்கு நல்லது நடந்தால் சரி தானே” என சிரித்தப்படி கூறியவர்,

“சரி நீங்க வாங்க…என்னை இந்த ரோஜா கூட ஒரு போட்டோ எடுங்க…அழகா இருக்கில்லை ரோஜா” என வேகமாக ஓடிச்சென்று ரோஜாவிற்கு அருகே தன் முகம் வைத்து நின்றுக்கொண்டார்.

கணவன் அப்படியே நின்றிருப்பதை பார்த்து “சீக்கிரம் போட்டோ எடுய்யா” என செல்லமாய் சிணுங்கி வீராவை ஊந்தி தள்ள,

மனைவியின் இந்த சிறுப்பிள்ளை செயலை கண்டு ‘இவளை எதிலே சேர்க்கறதுனே தெரியலை…இன்னும் சின்னப்பிள்ளையாவே இருக்கிறாள்’ என புலம்பிக் கொண்டே புகைப்படம் எடுக்க ஆயுத்தமானார்.

ஆனால் அந்த பூக்களோடு பூக்களாய் ஐக்கியமாகி பல வித உணர்ச்சிகளை முகத்தில் காட்டிய இல்லாளின் அழகில் சொக்கிப்போய்விட்டார் வீரா.

“சிலுக்கு நீ ரொம்ப அழகா இருக்கடி” என குழைந்துக்கொண்டே அவர் அருகே செல்ல,தனலட்சுமியின் முகம் நாணத்தில் குப்பென்று சிவந்தது.

“புலிக்குட்டி நாம்ப வெளிய இருக்கோம்” என தன்னருகே வந்தவரின் தோளில் அவர் தட்ட,

“வெளிய இருந்தால் என்னடி?நீ என் பொண்டாட்டி தானே?” என காதலில் உருகினார் மனிதர்.

அவரின் பேச்சில் மனைவியும் உருகினாலும் “யோவ் போய்யா…வாலிபம் திரும்புதுனு நினைப்பா…பிள்ளைக்கே கல்யாண வயசு வந்திடுச்சு…இப்போ போய் வழிஞ்சிட்டு கிடக்கே” என கணவரை செல்லமாய் முறைக்க,

“இருந்திட்டு போகட்டும் சிலுக்கு…அதுக்கு என்ன இப்போ?” என வீரா அவரையே இமைக்காமல் பார்த்தார்.

அதைப்பார்த்து “யோவ் ஒழுங்கா இருக்க மாட்டியா நீ” என கேட்டு  இடையில் கைவைத்து அவரை‌ முறைக்க,

வீராவோ “நம்ப பையனோட பையனுக்கே கல்யாணமாகி குழந்தை பிறந்தாலும் நீ என்னோட சிலுக்கு தான்டி…சாகற வரைக்கும் உன்னை நான் ரசிச்சிட்டு இருப்பேன்” என உயிர் உருக பேசியவரின் சொற்களில் தனலட்சுமி நெக்குருகிப்போனார்.

இருவரும் சிறு வயதிலே காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்கள்.

பதினெட்டு வயதில் தொடங்கிய அவர்களது காதல் கதை இன்று வரை முடிவில்லா பயணமாய் தொடர்ந்துக்கொண்டே இருந்தது.

அதிலும்,வீராவின் நேசத்திற்கு எல்லைகளே இல்லை போலும்!

அந்த அளவு ஆத்மார்த்தமான அன்பு அவருடையது!

மனையாளின் மீது அவர் காட்டும் அன்பு நாட்கள் செல்ல செல்ல வளர்ந்ததே ஒழிய,சிறிதும் குறையவில்லை.

தன்னவரின் இந்த நேசத்தில் மூழ்கி எப்போதும் போல் தனலட்சுமி நீச்சலடிக்க ஆரம்பித்துவிட்டார்.

 

தனது விடுதியில் நின்றிருந்த சரவணனிற்கோ நிலைக்கொள்ள முடியவில்லை.

அன்னையின் பேச்சு அவனுள் ஒரு விதமான அவஸ்தையை கொடுத்திருந்தன.

‘அவ சாப்பிட்டால் என்ன?சாப்படலைனா என்ன?’ என ஒரு புறம் அவன் நினைத்தாலும்,

‘மனசு உடைஞ்சு போயிருக்கிற பொண்ணு ஏதாவது செய்துக்கிட்டால்’ என்ற எண்ணம் உருவாகியதும்,உடனே வண்டியின் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

ஞாயிற்றுக்கிழமையில் சுற்றுலா பயணிகளின் வருகை அங்கு அதிகம்!

அதனால் மற்றைய நாட்களை காட்டிலும் அன்று வியாபாரம் சற்று கூடுதலாக நடைப்பெறும்.

அவனிற்கு தற்சமயம் அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை.

யாழினியின் நினைவு மட்டுமே அவனது சிந்தையெங்கும் நிரம்பியிருக்க அடுத்த கணமே வீட்டிற்கு புறப்பட்டுவிட்டான்.

புறப்பட்ட பத்தே நிமிடத்தில் அவன் வீடு வந்து சேர்ந்திருந்தான்‌.

அவளது வீட்டு மணியை அவன் அழுத்த,அதுவரை விழி மூடி அமர்ந்திருந்த யாழினி மெதுவாக கண் திறந்தாள்.

தனது பாட்டியாக இருக்கக்கூடும் என்றெண்ணி முகத்தை அழுந்தத்துடைத்துக் கொண்டு கதவை திறந்தாள் யாழினி.

கதவை திறந்த யாழினியோ அவ்விடத்தில் சரவணனை சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

அதனால் அவளின் விழிகள் வியப்பில் பெரிதாய் விரிந்தன.

அவள் கதவை திறப்பதற்குள் சரவணனின் இதயம் துடித்த துடிப்பை சொற்களால் வடிக்க முடியாது.

அப்படியொரு பதட்டம் அவனுள்!

இதயம் படபடக்க காத்திருந்தவனின் தவிப்பு அவளை முழுதாய் பார்த்த பிறகே ஆசுவாசமானது.

“ஊப்” என இதழை குவித்து ஊதி பிடரியை வருடிக்கொண்டவனை அவள் கேள்வியாய் நோக்கினாள்.

அவனிற்கோ இப்போது அவளிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

அதேசமயம் தாம் இங்க வந்ததற்கான காரணத்தையும் வெளிப்படுத்த அவனிற்கு மனமில்லை.

‘எல்லாம் இந்த அம்மாவாலே வருது…தேவையில்லாமல் என்னை பயமுறுத்தி இங்க வர வைச்சிட்டாங்க…இவகிட்ட இப்போ நான் என்ன சொல்லறது?’ என சங்கடமாக நின்றான்.

அவனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை என்றவுடன் “மிஸ்டர் கட்டன் சாயா பெல் அடிச்சு என்னை வரவைச்சிட்டு பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்?” என ஒற்றை புருவம் உயர்த்தி அவள் கேட்க,

அவனோ ஆழ்ந்தொரு மூச்சை வெளியேற்றிவிட்டு “காலையில் கொடுத்த கேரியர் வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்” என வாயிற்கு வந்த காரணத்தை அள்ளிவிட்டான்.

அவளோ “நிஜமாவே அதுக்கு தான் வந்தீங்களா?” என நம்பாமல் அவனை பார்க்க,

அவனிற்கு சங்கடமாக இருந்தது.

அவளின் நலன் அறியவே அவன் வந்தான் என்று அவளிடம் கூறுவதற்கு ஒரு மாதிரியாக இருக்க “ஆம்” என பொய்யாக தலையாட்டி வைத்தான்.

அவளோ அவனை சந்தேகமாக பார்த்துவிட்டு “சரி உள்ளே வாங்க” என்றப்படி திரும்பினாள்.

“இல்லை நான் இங்கியே நிற்கறேன்” என அவன் சொல்ல,

வெடுக்கென்று அவனை நோக்கி திரும்பியவள் “அட சாரே…உங்களை நான் ஒண்ணும் கடிச்சு தின்னிட மாட்டேன்…உள்ள வாங்க” என கடுப்புடன் மொழிந்தப்படியே உள்ளே சென்றாள்.

‘ஷப்பா எப்படி பேசறாள் பாரு’ என அவளை திட்டிக்கொண்டே அவனும் உள்ளே நுழைந்தான்.

அவன் உள்ளே வந்ததும் “இங்க சோபாவிலே உட்காருங்க…கேரியர் கழுவி எடுத்திட்டு வர்றேன்” என நீள்விரிக்கையில் அவனை அமர வைத்துவிட்டு அவள் திரும்ப,

“அதெல்லாம் கழுவ வேணாம்…அப்படியே கொடுங்க யாழினி” என்றான் சரவணன்.

முதன் முதலாக அவனது வாயிலிருந்து அவளின் பெயர் ஒலித்ததும் அவளின் மேனி சிலிர்த்தது.

அதனால் ஒரு வித ஆச்சரியத்துடன் அவனை நோக்கி திரும்பியவள்

“இல்லை பரவாயில்லை இருக்கட்டும்…நான் கழுவி எடுத்திட்டு வர்றேன்” என்று அவள் சொல்ல,அவனும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

அவளோ நேரே உணவு மேசைக்கு சென்று பாத்திரத்தை கையில் எடுத்தாள்.

அந்த உணவு அடுக்கில் சாப்பாடு அனைத்தும் அப்படியே இருப்பதை கவனித்த சரவணன் “சாப்பாடு எல்லாம் அப்படியே இருக்கிற மாதிரி இருக்கு…சாப்பிடலையா நீங்க?” என புருவம் சுருக்கி வினவ,

அவனை நோக்கி மெதுவாக திரும்பிய யாழினி “இல்லை எனக்கு பசிக்கலை” என்றாள் வெறுமையான முகத்துடன்…

“ஏன்?” என அவன் அழுத்தமாக அவளை கேட்க,உள்ளுக்குள் சுறுசுறுவென்று கோபம் பொங்கி எழுந்தது.

‘எல்லாத்தையும் பண்ணிட்டு எப்படி கேட்கிறான் பாரு சிடுமூஞ்சி’ என திட்டியவள்,

அவனை எரிச்சலாக நோக்கி “அதை உங்ககிட்ட சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்லை” என முகத்திலடித்தாற் போன்று கூறிவிட,அவனது முகம் அப்படியே கறுத்து சிவந்துப்போனது.

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top