‘சரவணா கன்னுக்குட்டி’ என அழைத்துக்கொண்டு வந்தது வேறு யாருமல்ல…சாட்சாத் தனலட்சுமியே தான்!
‘சிலுக்கு ஆன்ட்டி இங்க எப்படி?’ என அவள் வாயைப் பிளக்க,
வண்டியை அதனுடைய இடத்தில் நிறுத்துவிட்டு திரும்பிய சரவணன் “அம்மா” என அதட்ட,
“ஏதே அம்மாவா?” என அதற்கும் சேர்த்து அதிர்ந்து வாயைப் பிளந்தாள் யாழினி.
அப்போது தான் அவனின் பின்னோடு உள்ளே வந்திருந்த யாழினியை கவனித்த தனலட்சுமியோ “ஏ காதல் தோல்வி பாப்பா? நீ எங்க இங்கே?” என வியப்புடன் விழி விரிக்க,
சரவணனோ சட்டென திரும்பி அவளை ஒரு மாதிரி பார்க்க,
அதற்குள் தலையை உலுக்கி வெளியே வந்த யாழினி “சிலுக்கு ஆன்ட்டி எனக்கு காதல் தோல்வி இல்லைனு எத்தனை தடவை சொல்லறது?” என செல்லமாய் அவரை முறைத்தாள்.
அவரோ அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் “ஆமா…நீ எப்படி என் கன்னுக்குட்டியோட…” என இருவரையும் பதிலுக்காய் மாறி மாறிப்பார்க்க,
சரவணனோ ‘மானத்தை வாங்கறாங்க அம்மா’ என சங்கடமாக பின்னங்கழுத்தை வருடி “அம்மா கன்னுக்குட்டினு என்னை கூப்பிடாதீங்கனு எத்தனை தடவை சொல்லறது?” என அடிக்குரலில் சீற,
அவரோ இடையில் கைவைத்து “டேய் மகனே…இப்போவா நான் உன்னை இப்படி கூப்பிடறேன்? நீ பிறந்ததிலிருந்தே என் கன்னுக்குட்டி தான்டா நீ” என மகனை கொஞ்சிட,
அவனோ ‘இவங்களை திருத்த முடியாது’ என சலிப்பாக தலையசைத்துக்கொண்டு சிகையை களைத்துவிட்டான்.
யாழினியோ ‘இந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்?’ என சரவணனை ஆச்சரியமாக திரும்பிப்பார்க்க,அவனோ அவளை கண்டுக்கொள்ளவே இல்லை.
அதிலும், அவன் சிகையை களைத்துவிடும் போது சிதறிய ஒன்றிரண்டு நீர் துளிகள் அவளின் மேல் விழ, அதில் அவளின் மேனி சிலிர்த்தது.
தன் மீது விழுந்த நீர்த்துளிகளை ரசித்தப்படி விழி மூடி திறந்த யாழினிக்கு ‘இவர்கள் எப்படி இங்கே?’ என்ற சந்தேகம் முளைத்தன.
அதைப்பற்றி அறிவதற்காக யாழினி வாய் திறக்க,
அதற்கு முன்பே “ஓ…நீ தான் சரோஜாம்மாவோட பேத்தியா? அச்சோ அப்போ நமக்கு வேண்டப்பட்ட பொண்ணா நீ? உனக்கா இப்படி காதல் தோல்வி வரணும்…நினைக்கும் போதே ஒரே கஷ்டமா இருக்கு பாப்பா…” என குரலில் ஏற்ற இறக்கத்துடன் அவளின் கைப்பற்றி கவலையுற்றவர்,
அடுத்தக்கணமே கண்கள் பளீச்சிட “பரவாயில்லை போனது போகட்டும்…உனக்கு வேற நல்லப்பையன் கிடைப்பான் எங்க சரவணன் மாதிரி…” என சந்தடிச்சாக்கில் இளித்துக்கொண்டே மகனை சுட்டிக்காட்ட,
அதைக்கேட்டு இளையவர்கள் இருவரும் ஒரு சேர அதிர்ந்தனர்.
உடனே இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் சந்தித்து மீள, யாழினி அவனை காண சங்கடமுற்று இதழ்கடித்து தலைக்குனிந்தாள்.
சரவணனுமே “அம்மா என்ன பேச்சு இது?” என குரலுயர்த்தி அதட்டியவன் “அவங்க மழையிலே நடுங்கிட்டு இருக்கிறது தெரியலை…முதல்ல அவங்களை உள்ளே போக விடுங்கம்மா” என அன்னையின் செயலை கண்டித்தான்.
அவன் கூறியது போலவே யாழினி மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல் நடுங்கிக்கொண்டிருக்க “அச்சோ வாம்மா…உன் நிலைமை தெரியாமல் நான் வேற வாசல்ல நிக்க வைச்சே பேசிட்டு இருக்கேன்…உள்ள வாம்மா” என பரபரப்புடன் அவளின் கரம் பற்றி உள்ளே அழைத்துச்சென்றார்.
அவனோ தாயின் இந்த விசித்திரமான செயலை கண்டு ‘அம்மாவுக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்?’ என நெற்றி சுருங்க சிந்தித்தப்படியே அவர்களின் பின்னோடு உள்ளே நுழைந்தான்.
வீட்டிற்குள் இருவரும் நுழைந்ததும் சரோஜா பாட்டி தனது பேத்தியை எதிர்க்கொண்டார்.
அவருக்கு வயது அறுபதிற்கும் மேலாக இருக்கும்.
சந்தன நிற அழகான பருத்திப்புடவையில் நேர்த்தியாக கொண்டையிட்டு பார்த்தவுடன் மற்றவர் மதிக்கும் தோரணையில் இருந்தார் சரோஜா.
அவரது கண்களில் தங்க நிற சட்டமிட்ட கண்ணாடி ஒன்று இருந்தது.
அவளை கண்டதும் அவரின் விழிகள் அவளை உறுத்து விழித்திட,அவளோ பதில் எதுவும் பேசாமல் தலைக்குனிந்தாள்.
அவள் மழையில் நனைந்து வந்திருப்பதை கண்டுவிட்டு அவரின் முகம் கனிந்தது.
அதனால் வந்ததும் அவளிடம் எதுவும் பேசவேண்டாம் என்றெண்ணி “போ…போய் முதல்ல டிரஸ் மாத்திட்டு வா…காய்ச்சல் வந்திடப்போகுது” என அரட்டி அவளை உள்ளே அனுப்பினார்.
அவள் எதுவும் பேசாமல் மௌனமாக உள்ளே செல்ல, அந்நேரம் அவளின் பாட்டியோ “சரவணா நீ ஏன் வெளியவே நிற்கறே? உள்ள வா…” என்றழைப்பது காதில் விழ ‘இவனுக்கும் பாட்டிக்கும் என்ன சம்பந்தம்’ என குழப்பத்துடன் நீர் சொட்ட சொட்ட அறைக்குள் நுழைந்தாள் யாழினி.
வெளியில் “இல்லை சரோஜாம்மா…டிரஸ் எல்லாம் ஈரமா இருக்கு…நான் இங்கியே நிற்கறேன்” என்ற சரவணன்,
யாழினி அறைக்குள் நுழைந்ததை கண்டு பெருமூச்சை வெளியேற்றியவன் “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் சரோஜாம்மா…இங்க வாங்க” என அவரிடம் மெல்லியக்குரலில் உரைத்தான்.
மகனின் தழைந்தக் குரலை வைத்தே அவன் ஏதோ இரகசியம் பேசப்போகிறான் போல் என்றெண்ணிய தனலட்சுமி “டேய் நானு” என சிறுப்பிள்ளை போல் கண்கள் ஆர்ப்பரிக்க முன் வர,
அவரை தீர்க்கமாக நோக்கிய சரவணன் “அம்மா நீங்க போய் அவங்களுக்கு சளிப்பிடிக்காமல் இருக்க கசாயம் வைச்சுக்கொடுங்க” என அன்னையை அங்கிருந்து அனுப்ப முயற்சித்தான்.
அவரோ “கன்னுக்குட்டி” என மகனை ஏமாற்றத்துடன் கண்டு சிணுங்க,
அவன் “அம்மா” என குரலுயர்த்தியதும் “சரி..சரி” என முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் தனலட்சுமி.
அவர் செல்வதையே புன்னகையுடன் பார்த்த சரோஜா “உங்கம்மா எப்போ தான்டா வளருவாள்?” என்று சலிப்புடன் கேட்டார்.
அவனோ அன்னை சென்ற திசையைப் பார்த்தவாறே “அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை சரோஜாம்மா” என பெருமூச்சுடன் தலையசைத்தான்.
“எல்லாம் உங்க அப்பா கொடுக்கிற இடம்டா” என சரோஜா சிரிப்புடன் உரைக்க,
அதை ஆமோதிக்கும் விதமாக “ஆமா…ஆனால் அவங்களுக்கு இது தான் அழகு சரோஜாம்மா…எந்தவொரு கஷ்டம் வந்தாலும் அதைப்பத்தி கவலைப்படாமல் சந்தோஷமா இருப்பாங்க…அவங்க மட்டுமில்லை…தன்னை சுத்தி இருக்கவங்களையும் சந்தோஷமா வைச்சுப்பாங்க….அதுக்கு காரணம் அந்த வெள்ளந்தி மனசு தான்” என மனமாற உரைத்தவனின் முகத்தில் அப்படியொரு மென்மை!
ஒரு குழந்தையை தாய் சுமந்து தான் அனைவரும் பார்த்திருக்கிறார்கள்.
ஆனால் இங்கோ மகன் தான் அன்னையை சுமந்துக் கொண்டிருக்கிறான்.
பலரும் அவனது அன்னையின் வெகுளி குணத்தை தவறாக விமர்சித்தாலும், அவனிற்கு என்றுமே அவனது தாயின் மீது கோபம் வந்ததில்லை.
அவர் மனதில் நினைப்பதை பேசும் விதம் அவனை ஈர்க்கவே செய்தன.
முகமூடி அணிந்து வாழும் மனிதர்களுக்கு மத்தியில் அனைத்தையும் காட்டும் கண்ணாடியாய் அவர் வாழ்வதில் அவனிற்கு ஒரு தவறும் தெரியவில்லை.
அதனால் அவனது அன்னையை பற்றிய பூரிப்பு முகத்தில் தெரிய, சரோஜாவின் இதழிலும் ஒரு சிறு புன்னகை ஒன்று உதியமாகியது.
“சரிப்பா ஏதோ பேசணும்னு சொன்னியே?” என சரோஜா எடுத்துக்கொடுக்க,படீரென சரவணனின் முகமும் தீவிரத்தைத் தத்தெடுத்தது.
“ஒண்ணுமில்லை சரோஜா அம்மா…இந்த மாச வீட்டு வாடகை கொடுக்க தான் உங்களை கூப்பிட்டேன்” என்றவன் தனது கால்சட்டை பையிலிருந்த ஒரு நெகிழி பொட்டலத்தை எடுத்தான்.
மழையில் நனைந்து விடாமல் இருப்பதற்காக பணத்தை நெகிழி பையில் சுற்றி வைத்திருந்தான்.
அதைக் கவனித்த சரோஜா “ப்ச் சரவணா…அதுக்குள்ள என்ன அவசரம்? நாளைக்கு பொறுமையா தான் தர்றது” என அவர் முறைத்தப்படி உரைக்க,
அவனோ “இல்லை சரோஜாம்மா…எப்பவும் நாலாம் தேதியானவுடனே வாடகை கொடுத்திடுவேன்…இன்னைக்கு ஒரு நாள் தாமதமாகிடுச்சு…இதுக்கு மேலையும் டிலே பண்ணறது ரொம்ப தப்பு” என சொல்லிக்கொண்டே பணத்தை மீண்டும் ஒரு எண்ணி அவரிடம் நீட்டினான்.
அவரோ “நீ இருக்கியே? இவ்வளவு பிடிவாதமாகாதுடா உனக்கு” என திட்டிக்கொண்டே பணத்தை கையில் வாங்கிக்கொண்டார்.
அவர் மறுத்தாலும் அவன் கேட்கப்போவதில்லை என்பதால் வாங்கினார்.
அவர் பணத்தை எண்ணாமல் வைப்பதை கண்டு “பணத்தை எண்ணலையாம்மா?” என சரவணன் புருவம் சுருக்கி வினவ,
அவனை அழுத்தமாக நோக்கியவர் “அதெல்லாம் தேவையில்லை உன் மேலே எனக்கு நம்பிக்கையிருக்குப்பா” என திடமாக உரைத்து பணத்தை முந்தானையில் முடிந்து இடையில் சொருகிக்கொண்டார்.
அவரிடம் பிடித்ததே அவன் மீது அவர் வைத்திருக்கும் இந்த நம்பிக்கை தான்!
அவருக்கு அவனிடம் பிடித்ததும் இந்த கறாரான குணமே…அதற்கெல்லாம் மேலாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னை கவனித்துக்கொள்ளும் தனலட்சுமியின் உதவும் பண்பு!
அவருக்கு தினந்தோறும் சமைத்து தருவதில் தொடங்கி அவர் தனிமையில் வாடும் பொழுதுகளில் எல்லாம் துணை இருந்தார் தனலட்சுமி.
அவரது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் அனைவரும் இங்கு வந்தே பல வருடங்களுக்கு மேலாக கடந்துவிட்டது.
தனிமைத் துயரில் அவர் வாடி இருந்த நேரத்தில் ஆறுதலாக வந்ததே சரவணனின் குடும்பம்!
அவரது வீட்டின் மேல் பாகம் முழுவதையும் அவர்களது குடும்பத்திற்கு வாடகைக்கு விட்டு இத்தோடு பத்து வருடங்களாகியிருந்தது.
அன்று தொடங்கிய அவர்களது உறவு இன்று வரை தொடர்கிறது.
அவர்களுக்கு இடையே உண்டான அந்த பந்தம் அவர்களையும் தனது குடும்பத்தினராக நினைக்கும் அளவு உருமாற்றம் அடைந்திருந்தது.
ஆயினும், வாடகை விடயத்தில் சரவணன் கறாராக இருப்பான்.
முன்பொருமுறை “சரவணா இனி வாடகை கொடுக்க வேண்டாம்ப்பா…” என சரோஜா பாட்டி மறுத்துப்பார்த்தார்.
“அதெல்லாம் சரி வராது சரோஜாம்மா” என்று உறுதியாக சரவணன் மறுத்துவிட்டான்.
அதில் கோபமுற்றவர் “டேய் ஏன்டா பிடிவாதம் பிடிக்கிறே? நீயும் உங்க குடும்பமும் எனக்கு செய்யற உதவி இதைவிட அதிகமா இருக்குடா…அப்புறமும் எதுக்குடா வாடகை தர்றே?” என்றார் ஒரு வித ஆயாசத்துடன்…
அவனோ அவரை அழுத்தமாக நோக்கி “உதவி வேற…இது வேற சரோஜாம்மா…பணம் விஷயத்திலே சரியா இருக்கணும்…இல்லைனா அதுவே ஒரு பெரிய முறிவுக்கு காரணமா அமைஞ்சிடும்…அதனாலே வாடகையை வேணாம்னு சொல்லாதீங்க” என தீட்சண்ய குரலில் கூறி அவரின் முடிவை நிராகரித்துவிட்டான்.
உடனே தனலட்சுமியிடம் அதைப்பற்றி ஆதங்கமாக கூற “சரவணன் சொல்லறது சரி தான்மா…நாங்க இங்க வாடகைக்கு குடியிருக்கோம்…அதுக்கான பணத்தை கொடுக்கிறது தானே நியாயம்” என்று அவரும் கூறிவிட்டார்.
மற்றைய விடயத்தில் வெகுளிப்போல் நடந்துக்கொண்டாலும் இதில் மகனது முடிவே தன் முடிவும் என தெள்ளத்தெளிவாக விளக்கிவிட்டார்.
சரவணனின் தந்தையைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
சரவணன் அப்படியே அவருடைய வார்ப்பு…அவரும் மகனது முடிவையே ஆதரித்தார்.
அதில் கடுப்பாகிய சரோஜா “அப்போ நீங்க செஞ்சு தர்றே சாப்பாடு எதுவும் வேண்டாம்” என பிடிவாதமாக மறுத்தவருக்கு அடுத்த இரண்டே நாளில் உடல்நலம் குன்றிப்போனது.
அதைக் கேள்வியுற்று அவரது பிள்ளைகள் துடித்தார்களோ இல்லையோ சரவணன் குடும்ப பதறிப்போனது.
அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கவனித்துக்கொண்டது எல்லாம் அவனது குடும்பம் தான்!
சொந்த குடும்பத்திலிருந்து கிடைக்காத அன்பு அயலவர்களிடமிருந்து கிடைத்ததும் அவரின் நெஞ்சம் நெகிழ்ந்துப்போனது.
அன்றிலிருந்து அவர்கள் பாசமாக
தருவதை எதையும் அவர் மறுத்ததில்லை.
அதேசமயம் அவன் கொடுக்கும் பணத்தை வைத்து வீட்டிற்கு தேவையான சில மளிகை சாமான்கள் வாங்கி வந்து தனலட்சுமியிடம் கொடுப்பார் சரோஜா.
முதலில் அதையும் அவர்கள் மறுக்க “என்னையும் உங்க குடும்பத்திலே ஒருத்தியா நினைச்சா? இதை வாங்கிக்கோங்க…இல்லைனா இனி உங்ககிட்டயிருந்து எந்த உதவியும் வாங்கிக்க மாட்டேன்…பேசவும் மாட்டேன்” என திட்டவட்டமாக அறிவித்ததும் வேறுவழியின்றி அவர் வாங்கி வரும் பொருட்களை பெற்றுக்கொண்டனர்.
இவர் கில்லாடி என்றால், அவர்கள் பலே கேடியாக இருப்பார்கள் போலும்!
அவர் வாங்கி வரும் பொருட்களை கொண்டு அவருக்கு மட்டுமே சமைத்து தருவார் தனலட்சுமி.
அவர்கள் அதிலிருந்து ஒரு பிசறு கூட எடுக்க மாட்டார்கள்.
அதனையறிந்து அவர் வருந்தினாலும், அவர்களின் சுயமரியாதை குணம் அறிந்து வாழ பழகிக்கொண்டார் சரோஜா.
அவருமே சில நேரங்களில் உரிமையாக “தனம் வாயெல்லாம் கசக்குது…ஏதாவது செஞ்சு கொடுக்கிறீயாம்மா?” என கேட்பார்.
அடுத்த கணமே அவர் கேட்டதை செய்துக்கொடுத்து அசத்திவிடுவார் தனலட்சுமி.
தனலட்சுமியை காட்டிலும் சரவணன் மற்றும் வீரா இருவரும் நன்றாக சமைப்பார்கள்.
ஆண்கள் வீட்டில் இருக்கும் நேரங்களில் அவர்களது சமையல் தான்!
இன்று கூட தனலட்சுமி ஊருக்கு சென்றிருந்ததால் வீரா தான் அவருக்கான உணவை சமைத்துக் கொடுத்திருந்தார்.
தற்போது நினைவலைகளில் இருந்து மீண்ட சரோஜா “ஏன்பா சரவணா…நீயா என் பேத்தியை கூட்டிட்டு வந்தே?” என நெற்றி சுருங்க கேட்க,
“ஆமாம்” என தலையசைத்தவன் அன்று நடந்த நிகழ்வை சுருக்கமாக சொல்லி முடித்தான்.
அவன் கூறியதை அனைத்தையும் கேட்டவரின் முகம் பயத்தில் வெளுத்துப்போனது.
“நீ மட்டும் சரியான நேரத்துக்கு அங்கப்போகலைனா என்ன நடந்திருக்கும்?” என கேட்கும் போதே அவரின் சர்வ அங்கமும் நடுங்கியது.
“ப்ச் எதுக்கு இப்போ பயப்படறீங்க? அதான் நான் பத்திரமா கூட்டிட்டு வந்திட்டனே…கவலைப்படாமல் இருங்க” என்று சரவணன் அவரை ஆறுதல்படுத்தினான்.
ஆனால் சரோஜாவோ “பெத்தவங்ககிட்ட கூட சொல்லாமல் வீட்டை விட்டு ஓடி வந்திருக்காள் பைத்தியக்காரி…கல்யாண வயசு வந்திடுச்சு இன்னமும் பொறுப்பில்லாமல் நடந்துக்கிறாள்…இவளை நினைச்சு எப்படி பயப்படாமல் இருக்கிறது சரவணா?” என ஆதங்கமும் கோபமாய் பேச, அவரின் வருத்தம் அவனிற்கும் நன்றாகப் புரிந்தது.
அவள் எதற்காக அவ்வாறு செய்தாள் என்று நாகரீகம் கருதி அவன் பதில் கேள்வி எதுவும் எழுப்பவில்லை.
சரோஜாவோ பேத்தியை நன்றாக வசைப்பாடி கொண்டிருக்க, அனைவரும் கவலைக்கொள்ள செய்யும் அவளின் அசட்டை குணம் அவனிற்கு சிறிது கோபத்தை கொடுத்தது.
‘என்ன பொண்ணு இவள்? இவ்வளவு அன்பா இருக்கிற உறவுகளை கஷ்டப்படுத்தி பார்க்கிறாள்…இடியட்’ என மனதிற்குள் அவளை வறுத்தெடுத்தான்.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அவளை முதன் முதலில் பார்த்ததிலிருந்தே அவளின் மீது அவனிற்கு பெரிதாக அபிப்பிராயம் ஏற்படவில்லை.
இப்போது அவளது பொறுப்பற்ற செயலைப் பற்றி அறிந்துக்கொண்டதும் அவன் மனதில் அவளின் நிலை பூஜ்ஜியம் தான்!
ஆனால் அவளின் மனதிலோ அவன் ‘நாயகன்’ என்னும் அந்தஸ்திற்கு உயர்ந்து அழுத்தமாக கோலூன்றியிருந்தான்.