காதல் 4

விடுதியிலிருந்து அவள் வெளியே வந்த நேரம் நல்லவேளையாக ஒரு ஆட்டோ அந்த பக்கம் வந்தது.

அதில் ஏறி அமர்ந்து பயணித்த ஐந்தே நிமிடத்தில் மரம் ஒன்று விழுந்து சாலையை மறித்திருக்கிறது என்று தெரிந்த யாழினி நொந்துப்போனாள்.

‘எனக்குனே வந்து சேருவீங்களாடா?’ என உளச்சோர்வோடு அவள் புலம்ப,

அதேநேரம் அந்த ஓட்டுனர் “மேடம் இதுக்கு மேலே ஆட்டோ போறது கஷ்டம்…நீங்க நடந்து தான் போகணும்னு நினைக்கிறேன்” என்றவன்,

வெளியே ஒரு பார்வை பார்த்துவிட்டு “இருட்டா வேற இருக்கு…போயிடுவீங்களா மேடம்?” என தயங்கியப்படி கேட்டார்.

ஊருக்கு புதிதாக வந்திருக்கும் பெண்ணை தனிமையில் அனுப்ப அவருக்கு அச்சமாக இருந்தது.

அவரின் நன்மனம் புரிந்திட  “ஒண்ணும் பிரச்சனையில்லை அண்ணா…நான் போய்க்கிறேன்” என தணிவாக உரைத்து,கீழிறங்க ஆயுத்தமானாள்.

“என் பொண்ணும் அம்மாவும் வீட்டுலே தனியா இருக்காங்க மேடம்…இல்லைனா நானே உங்க கூட வந்து விட்டுட்டு வந்திருவேன்…கரெண்ட் இல்லாமல் இருட்டா இருக்குதுனு பாப்பா அழுவுறாள்…அம்மா இல்லாத பொண்ணு…அதான் என்னை தப்பா நினைக்காதீங்க மேடம்” என்றார் மீண்டும் குற்றவுணர்வுடன்.

அவரின் மன உணர்வுகளை படித்தவளாய் “இட்ஸ் ஓகே அண்ணா…இது ஒண்ணும் எனக்கு புதுசு இல்லை…சென்னையிலே இதை விட லேட் நைட் நான் தனியா போயிருக்கேன் அண்ணா…அதனாலே நீங்க பயப்படாமல் கிளம்புங்க” என மென்புன்னகையுடன் கூறி கீழிறங்கியதும் அவளை மாரி நனைக்க ஆரம்பித்தது‌.

அந்த ஓட்டுனர் அவளிடம் குடை இல்லாததை கவனித்துவிட்டு “மேடம் மழையிலே நனையாதீங்க…இந்தாங்க குடை” என அவளிடம் குடையை நீட்டினார்.

“பரவாயில்லை” என அவள் மறுத்தாலும் “பிடிங்க மேடம்…எங்க ஊருக்கு நீங்க புதுசா வந்திருக்கீங்க…எங்க மக்களாலே உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது…ஆனால் இங்க சுற்றுலா பயணிங்க அதிகம்…அவங்களை நம்ப முடியாது மேடம்…அதுமட்டுமில்லாமல் காட்டு விலங்குகள்,பூச்சிகள் எல்லாம் மழைக்கு ஒதுங்க இந்த பக்கம் வரும்…அதனாலே பார்த்து பத்திரமா போங்க…ஏதாவது ஒண்ணுனா சட்டுனு போலீஸுக்கு கால் பண்ணிடுங்க” என கண்டிப்புடன் அறிவுரை மொழிந்து விட்டே வாகனத்தை கிளப்பியிருந்தார்.

மூன்றாம் மனிதர்களிடமிருந்து அவளிற்கு கிடைத்த இந்த அக்கறை அவளிற்கு புதிது…

அவளிற்கு இனிக்கவும் செய்தது.

சென்னையில் வாழும் மக்களுக்கும் இங்கிருக்கும் மக்களுக்கும் எத்துணை வித்தியாசங்கள்!

அவள் இங்கு காலடி எடுத்து வைத்ததிலிருந்து சந்தித்த மனிதர்கள் ஒவ்வொவரும் தங்கமாய் இருந்தார்கள்.

அதை எண்ணி சிலாகித்தப்படி அவள் குடையுடன் மெதுவாக அந்த சாலையில் நடக்க ஆரம்பித்தாள்.

தெரு விளக்கின் ஒளியை பயன்படுத்தி நடந்தாள்.

ஆனால் நேரம் செல்ல செல்ல மழை வலுக்க தொடங்கிட,அவள் வைத்திருந்த குடை காற்றில் பறக்க ஆரம்பித்தன.

‘ஷிட்’ என முனகி மிகுந்த சிரமப்பட்டு குடையை தன் தலையோடு ஓட்டி வைத்துக்கொண்டாள்.

இப்போது அவள் அணிந்திருந்த ஆடை முழுவதும் மழைச் சாரல் பட்டு தொப்பரையாக நனைந்திருந்தன.

ஒரு கட்டத்தில் அவள் வைத்திருந்த குடையும் கூட காற்றில் பறந்துவிட்டன.

‘பிரமாதம்’ என இதழை சுழித்துவிட்டு நடந்தவளின் மேனியை குளிர் ஊசியாய் குத்த ஆரம்பித்தன.

உடனே மார்ப்பிற்கு குறுக்கே கைகள் கட்டி குளிரை அவள் விரட்ட நினைத்தாலும் மழை நீரின் தாக்கம் அவளின் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை வெடவெடக்க செய்தன.

தோளின் இருபக்கமும் மாட்டியிருந்த பை வேறு அவளிற்கு கனக்க தொடங்கியது.

அந்நொடி சாலையோரமிருந்த மின்விளக்குகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக அணைந்துப்போயின.

திடீரென்று இந்த உலகமே ஒரு பெரும் கருப்புக் கம்பளியால் மூடப்பட்டது போன்று பேரிருள் சூழ்ந்தது.

யாழினியால் நின்ற இடத்திலிருந்து முன்னால் இரண்டடி தூரத்தைக் கூடத் தெளிவாகப் பார்க்க முடியாத நிலை. 

‘அட அட சூப்பர் யாழினி…உன் நேரம் ரொம்ப அமோகமா இருக்கு’ என அவளின் மனசாட்சி இகழ்ச்சியாக அவளை சாடியது.

‘நானே நொந்துப்போயிருக்கேன் நீ வேற ஏன்?’ என சோர்வுடன் அதனை கடிந்துவிட்டு தனது ஜீன்ஸ் கால்சராயிலிருந்து அலைப்பேசியை வெளியே எடுத்தாள்.

இப்போது அவளிற்கென்று இருந்த ஒரே ஒரு புகலிடம் அவளது கைபேசி மட்டும்தான்.

அதன் திரையை அவள் ஒளிரச் செய்து பார்த்தபோது, அதில் எஞ்சியிருந்த சக்தியின் அளவு,வெறும் 7 சதவீதம் மட்டுமே?

“சூப்பர்…” என விரக்தியுடன் தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டவள்,

உடனே ஆகாயத்தை நோக்கி “இப்போ பேக் கிரவுண்டிலே ஒரு ஹாரர் மியூசிக் மட்டும் நீ போட்டுட்டா திரில்லர் மூவிக்கு உரிய எல்லாம் கனகச்சிதமா பொருத்தும்…அதையும் செய்யு” என குழந்தைப் போல் அதனிடம் புலம்ப,

அவளின் பேச்சை கேட்டதும் அந்த வருடப்பகவனும் ‘டமார்’ என ஒரு இடியையும் மின்னலையும் பரிசளித்திட,

‘அம்மா’ என காதை பொத்தியவள் ‘இதுங்களும் சதிப்பண்ணுதே ஆண்டவா’ என வடிவேலு பாணியில் வருடப்பகவனை திட்டிக்கொண்டே வேறுவழியின்றி நடந்தாள்.

சிறிது தூரம் அவள் நடந்து வந்ததும் அந்த பாதையின் நடுவே ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து கிடந்தது.

‘ஓ…இது தான் அந்த மரமா?’ என சிந்தித்தப்படி அலைப்பேசி வெளிச்சத்தில் அவ்விடத்தில் வழி ஏதேனும் தென்படுகிறதா என்று சுற்றிலும் ஆராய்ந்தாள்.

பாதையின் இருமருங்கிலும் அடர்ந்த காடு.

அங்கே சத்தம் என்று கேட்கக் கூடியதாக இருந்ததெல்லாம்…

மழையின் பேரிரைச்சல்,

காற்றின் சீறல்,

மற்றும் எங்கோ தொலைவிலிருந்து ஒலிக்கும் பெயரறியாப் பூச்சிகளின் விசித்திர ஓசை மட்டுமே!

கண்ணிற்கு எட்டிய தூரம் வரை மனிதரின் நடமாட்டமே இல்லை.

அந்தக் கணத்தில், யாழினிக்கு தாம் முற்றிலும் தனியாக இருக்கிறோம் என்ற நிஜம் புரிப்பட,அவளிற்குள் மெதுவாக பயம் ஏறத் தொடங்கியது. 

இத்தனை நேரம் தோன்றாத ஒரு அச்சம் அவளுள் உருவாகி,இப்போது அவளது இதயத் துடிப்பை வேகப்படுத்தின.

ஒரே ஒரு கணம் மறுபடியும் சரவணனிடமே சென்றுவிடலாம் என்று எண்ணினாள்.

ஆனால்… அவளால் இப்போது என்ன செய்ய முடியும்?

மீண்டும் அந்தப் பழைய இடத்திற்கே திரும்பிப் போக முடியாது.

அதற்கு பல காரணங்கள் இருந்தன.

ஒன்று,இந்நேரம் அவன் தன் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றிருப்பான்.

இரண்டாவது,அவனது கடையிலிருந்து அவள் வெகு தூரம் பயணம் செய்து வந்திருந்தாள்.திரும்பி நடப்பது என்பதெல்லாம் சாத்தியமல்ல.

மூன்றாவது,மற்றைய மனிதர்களின் உண்மை சுயரூபத்தை கண்டப்பிறகு தானே மனம் வெறுத்து நிம்மதி தேடி  இங்கு வந்திருக்கிறாள்.

மீண்டும் அவளின் வாழ்வில் வேறொரு நபரை நம்புவது என்பதெல்லாம் நரி தந்திரத்தில் வீழ்வது போல் ஆபத்தானது.

அவற்றை எண்ணியவுடன் அவளின் முகம் இறுகிட ‘நோ…எனக்கு யார் உதவியும் வேணாம்’ என மறுப்பாக தலையசைத்து துணிச்சலை வரவழைத்துக்கொண்டு நடந்தாள்.

அவள் தன் நடுக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு மீண்டும் இருளுக்குள் நடந்திட,

சாலையை அந்த மரம் மறைத்தாலும் ஒரு இருசக்கர வாகனம் செல்லும் அளவு ஒரு சிறிய பாதை இருந்தது.

அதன் வழியே அதனை கடந்து நடக்க துவங்கினாள்.

சில அடிகள் தான் அவள் எடுத்து வைத்திருப்பாள்…ஆனால் அடுத்த நொடி…

‘படக்’ என அவளிற்கு மிக அருகிலிருந்த புதரிலிருந்து ஒரு சத்தம் கேட்டது.

அந்த சத்தம் கேட்டு யாழினி அப்படியே கல்லாய் உறைந்து நின்றாள். 

அவளது சுவாசம் கூட ஒரு கணம் தடைப்பட்டது‌.

அவள் மிக மெதுவாக தலையை திருப்பிப் பார்த்தாள்.

பேரிருள்,கொட்டும் மழை அதையும் மீறி பளீச்சிட்ட இரண்டு கண்கள்!

நேராக அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன அந்த விழிகள்.

யாழினியின் இதயம் முற்றிலும் நின்றுவிட்டது போன்றதொரு பிரம்மை.

இருளுக்குள் இருந்த அந்த உருவம் மெதுவாக அசைந்து, புதரை விட்டு வெளியே வந்தது.

அவளோ உச்சக்கட்ட பயத்துடன் “அம்மா…” என்று வீறிட்டு அலறியப்படி அவள் பதற்றத்துடன் பின்நோக்கி நகர்ந்தாள்.

‘இன்னைக்கு நம்ப சாவு இங்க தான் போலே’ என அவளின் இதயத்துடிப்பு ஒரு கணம் நின்றுவிட்டன.

ஆனால் அவளின் அச்சத்திற்கு எதிராக அவளின் சத்தம் கேட்டு வெளியே வந்தது என்னவோ ஒரு ஆடு தான்!

அவள் கத்தியதை கேட்டு அதுவும் மிரண்டுப்போய் “மே…மே” என துள்ளிக்குதித்தது.

அந்த ஆட்டை பார்த்ததற்கு பிறகே அவளின் இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்திட ‘தேவையில்லாமல் என்னை ஏன்டா இப்படிச் சோதிக்கிறீங்க?’

என நெஞ்சில் கைவைத்து அழாத குறையாக உள்ளுக்குள் குமுறினாள்.

அவள் இருளில் பளீச்சிட்ட கண்களை கண்டு காட்டு விலங்கு தான் வந்துவிட்டதோ என்று அஞ்சி விட்டாள்.

இப்போது அது சாதாரண ஆடு என்றதும் “ஊப்” என இதழை குவித்து ஊதி அந்த பிராணியை முறைத்து பார்த்தாள்.

அவளை போலவே அதுவும் தனியாக வந்து அந்த காட்டில் சிக்கிக்கொண்டது போலும்.

ஆடோ அவளையே விழி அகற்றாமல் மிரட்சியுடன் பார்த்திருக்க,

‘நீயும் என்னை மாதிரியே தனியா வந்து மாட்டிக்கிட்டியா?அச்சோ பாவம்’ என அதற்காக பரிதாபம் கொண்டாள்.

சரியாக அந்த நேரத்தில் தொலைவிலிருந்து ஒரு வண்டியின் ஒளிக் கீற்று அந்த அடர்ந்த பனிமூட்டத்தையும் மழையையும் வெட்டிக்கொண்டு முன்னேறி வந்தது.

அது ஒரு இருசக்கர வாகனம்.

அவள் கண்களைச் சுருக்கி, கைகளை தலைக்கு மேலே குடையாகப் பிடித்து கூர்ந்து நோக்கினாள்.

அந்த வாகனம் அவளுக்கு மிக அருகில் வந்து மெதுவாக தன் வேகத்தைக் குறைத்து நின்றது.

தலைக்கவசம் மற்றும் கருப்பு நிற லெதர் ஜாக்கெட்டிற்கு மேலே மழை அங்கி அணிந்து வந்து நின்ற உருவத்தை கண்டு விழி விரித்தாள் அவள்.

வண்டியின் சத்தம் கேட்டதும் ஆடு மீண்டும் அதே புதருக்குள் சென்று ஒளிந்துக்கொண்டது.

அவளிற்கு அருகே வந்து வண்டியை நிறுத்திய அந்த ஆடவன் மெதுவாக தன் தலைகவசத்தைக் கழற்றினான்.

அவன் வேறு யாருமல்ல சரவண வேல் தான்…அவளை காக்கும் ஆபத்பாந்தவனாய் வந்திருந்தான்.

அவனை அக்கணம் எதிர்பாராத யாழினியோ அதிர்ச்சியில் விழி விரித்தாள்.

அவனை கண்ட அதிர்ச்சியில் அவளால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. 

அவன் வண்டியின் எஞ்சினை அணைத்துவிட்டு,அவளை நிமிர்ந்து ஏறிட்டான்.

அவள் முற்றிலும் நனைந்து, குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பது அவனது கூர்மையான கண்களில் பட்டது. 

அவன் தன் புருவங்களைச் சற்றே சுருக்கி “இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?வீட்டுக்கு போகலையா?” என கோபமாக கேட்டான்.

யாழினியோ அவனது சிடுசிடுப்பை பார்த்து கடுப்பாகி “ஹான் மழையிலே இப்படி இருட்டுலே நிக்கணும்னு எனக்கு வேண்டுதல்…அதான்” என முகத்தை சுளித்தாள்.

உடனே அவளை முறைத்த சரவணன்

“அப்படியா உங்க வேண்டுதல் படி நடைப்பயணமா வீடு போய் சேருங்க” என அலட்சியமாக கூறியப்படி தலைகவசத்தை மீண்டும் அணிந்திட,

அவளோ எங்கு அவன் தனிமையில் விட்டு கிளம்பிவிடுவானோ என்ற பீதியில் “அட இருங்க…விட்டால் இங்கியே சாவுன்னு விட்டுட்டு கிளம்பிடுவீங்க போலே…” என பதட்டத்துடன் மொழிந்து அவனது வண்டியை இறுகப்பற்றிக்கொண்டாள்.

சற்று முன்பு அவனிடம் உதவி கேட்கக்கூடாது என்று அவள் எண்ணி வைத்திருந்தது அனைத்தையும் வசதியாக மறந்துவிட்டாள்.

அவனோ தன் வாகனத்தை பற்றியிருந்த அவளின் கரத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளை கூர்ந்து நோக்கியவன் “சரி வண்டியிலே ஏறுங்க” என்று அவளிடம் சொன்னான்.

அவளோ அவனது வாகனத்தில் ஏற தயங்கிட “எவ்வளவு நேரம் இங்கியே இருக்கப்போறதா உத்தேசம்.மரம் விழுந்திட்டதாலே இந்த பக்கம் எந்த வண்டியும் வராது…நைட்டு முழுக்க மழையிலே நின்னா விறைச்சு சாகப்போறீங்களா என்ன?” என அங்கு நிலவிய சூழ்நிலையின் தீவிரத்தை சற்று கடுமையாகவே எச்சரித்தான்.

ஆயினும்,சட்டென ஒரு ஆண்மகனுடன் செல்ல அவளிற்கு ஒரு மாதிரியாக இருந்தது.

அதனால் அவளிடமிருந்து மௌனம் மட்டுமே பதிலாக கிடைத்தது.

அதைக்கண்டு பெருமூச்சை வெளியேற்றிய சரவணன் “சரி வாங்க…உங்க கூட வீடு வரை நடந்து வர்றேன்” என இயல்பாய் கூறியதோடு வாகனத்திலிருந்து இறங்கவும் செய்தான்.

அதுமட்டுமின்றி தாம் அணிந்திருந்த மழை நீர் மேலங்கியை கழட்டி “இதை போட்டுக்கோங்க…இல்லைனா நாளைக்கு உங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போயிடும்” என அக்கறையாக மொழிந்து அவளிடம் அங்கியை நீட்டினான்.

சட்டென விழி உயர்த்திய யாழினி அவன் நீட்டிய மேலங்கியையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.

அவனது முகம் வழக்கம்போலவே எந்தவொரு உணர்ச்சியுமின்றி இருந்தது.

அவனிடம் எந்தவொரு திரைத்தனமான நாயகன் தோரணையும் இல்லை. 

ஒரு மனிதன்,ஆபத்தான நேரத்தில் இன்னொரு சக மனிதனுக்கு உதவி செய்யும் இயல்பான தோரணை மட்டுமே அவனிடம்!

அவனது இந்த நாடகத்தன்மையற்ற செயல் அவளை மிகவும் கவர செய்தன.

ஆயினும் “இல்லை நீங்க போட்டுக்கோங்க…எனக்கு வேணாம்” என மறுத்தாள்.

அவனோ “எனக்கு இந்த மழையெல்லாம் பழக்கம் தாங்க…ஆனால் உங்களுக்கு இது புதுசு…அதனாலே என்னை விட உங்களுக்கு தான் இது அவசியம்…வேணாம்னு மறுக்காமல் இதை போட்டுக்கோங்க” என அவளிடம் வலுக்கட்டாயமாக திணித்துவிட்டு நடைப்பயணத்திற்கு தயாரானான்.

அவளும் அவன் வழங்கியதை வாங்கி அணிந்துக்கொண்டாள்.

எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யும் மனிதனை தன் சுயநலத்திற்காக சிரமப்படுத்த விரும்பாமல் “நில்லுங்க…வண்டியிலே போயிடலாம்” என்றாள் மெல்லியக்குரலில்.

வெடுக்கென்று அவளின் புறம் திரும்பிய சரவணனோ “நிஜமா தான் சொல்லறீங்களா?” என இமைகள் இடுங்க சந்தேகமாக வினவ,

“ஆமா…” என தலையாட்டியதும் அவளை ஒரு கணம் ஆழ்ந்து நோக்கி விட்டு அவன் வாகனத்தில் ஏறி அமர்ந்தான்.

அவளும் ஆழ்ந்ததொரு மூச்சை இழுத்துவிட்டு அவனது வண்டியின் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்தாள்.

இருவருக்கும் இடையில் ஒரு அடி இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொண்டாள் யாழினி.

அவனும் அதையறிந்தும் எதையும் கண்டுக் கொள்ளவில்லை.

அவன் வண்டியை இயக்கிட, அவனது எஞ்சினின் சத்தம் அந்த இரவின் நிசப்தத்தைக் கலைத்தது.

மழை இன்னும் தீவிரமாக தன் ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்க, அந்த இரு சக்கர வாகனம் மெல்ல இருளைக் கிழித்துக் கொண்டு நகரத் தொடங்கியது.

அவர்கள் இருவருக்கும் நடுவே குளிர்ந்த காற்று மட்டுமே பயணம் செய்தது.

ஆனால் யாழினிக்கு ஏனோ இந்தத் திகிலூட்டும் மழையும், அந்த அடர்ந்த இருளும் சிறிதும் பயத்தைக் கொடுக்கவில்லை.

மாறாக,அவனது அருகாமை அவளிற்கு பெரும் வலிமையைக் கொடுத்திருந்தது.

அதற்கெல்லாம் மேலாக அவளின் சிந்தையில் ‘யாமிருக்க பயமேன்…சரவணன் இருக்க பயமேன்’ என்ற பிரபலமான திரைப்பட வசனம் ஒன்று ஞாபகத்தில் எழ,அவளின் இதழோரம் ஒரு புன்னகை பூத்தன.

சரவணனோ அவளிடம் விலாசம் கேட்பதற்காக பேசியதோடு சரி…

அதன்பிறகு அவளிடம் வாயை திறக்கவே இல்லை.

அவளின் முகவரி கேட்டதற்கு பிறகு அவனது முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்தது.

அதனால் சிறிது யோசனையினூடே வாகனத்தை ஓட்டுவதில் கவனமாய் இருந்தான்.

மழை நேரங்களில் வண்டி ஓட்டுவதே சிரமம்…இதில் இருள் என்றால் சொல்லவே தேவையில்லை.

சிரமேற்கொண்டு அவன் வண்டியை செலுத்த,அவளோ வாகனத்தை ஒரு பிடிப்பிற்காக இறுகப்பற்றியிருந்தாள்.

சில நேரங்களில் மேடுப் பள்ளங்களில் வண்டி பயணிக்கும் போது அவள் தடுமாறி அவனது ஜாக்கெட்டை இறுகப் பற்றியிருந்தாள்.

இன்னும் சில சமயங்களில் சரிந்து சென்று அவனது தேகத்தை அழுத்தமாக உரசியும் இருந்தாள்.

‘ஐய்யோ…அவருக்கு தெரிஞ்சா என்னை பத்தி என்ன நினைப்பாரு’ என அவசரமாக அவனிடமிருந்து விலகிவிட்டாள்.

ஆனால் ஒவ்வொரு முறை அவனை உரசி வரும்போதும் அவளின் இதயத்தில் சிறிது படபடப்பும் உண்டாகியது.

ஆனால் அவனோ சிறிதும் சலனமின்றி அமர்ந்திருந்தான்.

அவனிடம் சிறு அசைவும் இல்லாமல் இருப்பதை கவனித்து ‘ஒரு அழகான பொண்ணு பின்னாடி இருக்கேன்…அதுவும் பாடி டச்சிங் எல்லாம் நடந்திருக்கு…இவன் என்னடானா எந்த உணர்ச்சியும் இல்லாமல் உட்கார்ந்திருக்கான்…நிஜமா இவன் மனுஷன் தானா?’ என கடுப்புடன் அவனை மனதிற்குள் திட்டியும் கொண்டாள்.

அவனோ அதை யாவும் அறியாமல் சில நிமிட நேர பயணங்களுக்கு பிறகு அவளை கொண்டு வந்து அவளது வீட்டில் பாதுகாப்பாக இறக்கிவிட்டிருந்தான்.

அவளும் “ரொம்ப தேங்க்ஸ்…நீங்க இல்லைனா எனக்கு ரொம்ப கஷ்டமாகியிருந்திருக்கும்” என மனதார நன்றி உரைத்தாள்.

அவனோ அவளின் நன்றியை சிறிதும் எதிர்பாராமல் அவளது வீட்டின் நுழைவாயிலை திறந்து வாகனத்தை உள்ளே செலுத்தினான்.

அதைப்பார்த்து அவள் திகைத்து விழி விரித்தாள் என்றால் “சரவணா கன்னுக்குட்டி வந்திட்டியா?” என ஆர்ப்பாட்டமாக கேட்டுக்கொண்டே வெளியே வந்த நபரை பார்த்து இன்னும் அதிகமாய் அதிர்ந்து விட்டாள் யாழினி.

 

 

 

 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top