தன்னருகே வானரம் ஒன்று அமர்ந்திருப்பதை கண்டு “ஆ..” என அலறிக்கொண்டே அவள் எழ,
அவள் சத்தம் போட்டதும் அந்த குரங்கு “கர்..” என பல்லைக்காட்ட,அதில் இன்னும் அதிகமாய் மிரண்டு பின்வாங்கினாள் யாழினி.
“உஷ் எதுக்கு சத்தம் போடறீங்க?கத்தாதீங்க” என கணீர் குரலில் வாயில் விரல் வைத்து அவளை அதட்ட,
‘ஏதே சத்தம் போடக்கூடாதா?திடீர்னு குரங்கை பார்த்தால் எப்படிடா சத்தம் போடாமல் இருக்க முடியும்?’ என மனதிற்குள் அவனை வசைப்பாடியவளிற்கு பயத்தில் பேச்சே வரவில்லை.
அவள் அச்சத்தில் மிருளுவதை கண்ட அந்த பள்ளி மாணவர்கள்
“அக்கா பயப்படாதீங்க…அது நம்ப அண்ணாவோட ரெகுலர் கஸ்டமர் தான்” என சிரித்துக்கொண்டே சொல்ல,
‘ஏதே குரங்கு ரெகுலர் கஷ்டமரா?’ என வாயைப் பிளந்தாள்.
அதற்கு ஏற்றாற் போன்று அந்த குரங்கோ மெதுவாக அவளின் தட்டிலிருந்து பிஸ்கெட்டை எடுக்க கையை நீட்ட “ராமு” என அதட்டிய சரவணன் “இந்தா இதை சாப்பிடு” என அதற்கு தனியாக ஒரு வாழைப்பழத்தையும் பிஸ்கெட்டையும் தட்டில் வைத்து கொடுத்தான்.
அதுவும் கையை தூக்கி ‘நன்றி’ என்பது போல் ஆர்ப்பரித்துவிட்டு அவன் கொடுத்ததை வாங்கி சாப்பிட ஆரம்பித்தது.
உடனே அவளிடம் திரும்பிய சரவணன் “உங்களுக்கு வேணும்னா வேற டேபிள் மாறிக்கோங்க” என்றான்.
அவளோ அந்த குரங்கை திரும்பி ஒரு பார்வை பார்க்க,அதுவோ சாதுவாக முகத்தை வைத்தப்படி உணவைக் கொறிக்க ஆரம்பித்தது.
அதைப்பார்த்துவிட்டு “பரவாயில்லை…இங்கே உட்கார்ந்துக்கிறேன்” என இருக்கையை தள்ளிப்போட்டு அமர்ந்துவிட்டாள்..
ஆயினும் இதயம் திக்திக்கென அதிர சரவணனையும் அந்த குரங்கையும் மாறி மாறி பார்த்து “இது என்னை ஒண்ணும் பண்ணாது இல்லை” என தயக்கத்துடன் இழுக்க,
அவனோ அவளை கூர்ந்து நோக்கிவிட்டு “அது ஒண்ணும் பண்ணாது…அவ்வளவு பயம் இருந்தால் வேற சேருக்கு மாறிக்கோங்க” என்று இலகுவாக ஒரு தீர்வை கூறிவிட்டு சென்றுவிட்டான்.
ஆனால் குரங்கோ அவளை பார்த்து “கர்” என மீண்டும் பல்லைக்காட்ட,
அவளோ ‘ஆத்திஈஈ’ என நெஞ்சில் கைவைத்து அதிர்ந்து இன்னும் இருக்கையை தள்ளிப்போட்டு அமர்ந்தாள்.
அந்த ராமுவிற்கும் அவளை சீண்டிப்பார்ப்பது பிடித்திருக்கிறதோ என்னவோ அவளை சீண்டிக்கொண்டே இருந்தது.
‘இந்த மங்கி வேணும்னே என்னை வெறுப்பேத்துது…யாழ் பயப்படாதே’ என நெஞ்சை நீவி தன்னை தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
குரங்கோ அவளை துளியும் கண்டுக் கொள்ளாமல் தன் உணவில் கவனமாய் இருக்க,அவளும் அவன் கொடுத்த குளம்பியைப் பருக ஆரம்பித்தாள்.
‘யாழ் உன் நிலைமையை பார்றேன்…இதுவரைக்கும் நீ ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸுனு பல பேரு கூட டேட் போயிருக்கே…முதல் முறையா ஒரு குரங்கு கூட டேட்டிங்…அச்சோ’ என மனதிற்குள் புலம்பிக்கொண்டாள்.
அனைத்து உணவுகளையும் உண்டு முடித்த அந்த ராமுவோ வேண்டுமென்றே அவளது தட்டிலிருந்த மாச்சில்லை(பிஸ்கட்) எடுக்க கையை நீட்ட,
அதையறிந்து ‘ஏய் அது என்னோடது’ என தட்டை தன்பக்கம் நகர்த்தி வைத்து ஐந்தறிவு ஜீவனுடன் உரிமை போராட்டம் நடத்திக்கொண்டிருந்தாள் யாழினி.
உடனே அந்த குரங்கு அவளை முறைக்க,அவளோ ‘ச்சீ பே’ என இதழை சுழித்து காட்டிவிட்டு மாச்சில்லை வாயில் வைத்து கடிக்க,
அந்த கடுவனோ ‘நீ மந்தமாய் இருந்தது போதும் அட்டாக்’ என தனக்குள்ளே பேசி அவளின் மீது பாயத் தயாராகியது.
அதுவரை இவர்களை கவனித்துக்கொண்டிருந்த சரவணன் தனது நண்பனின் சேட்டை அறிந்து “ராமு” என குரலுயர்த்தி அழைத்ததும் அது அவன் அமர்ந்திருந்த இருக்கையை நோக்கி வேகமாக ஓடிப்போனது.
அதன்பிறகே ‘ஹப்பாடா’ என ஆசுவாசமடைந்தாள் யாழினி.
‘கொஞ்ச நேரத்திலே என் மூச்சே நின்னுடும் போலே…ஷப்பா’ என இதழை குவித்து ஊதியப்படி மற்றவர்களை நோட்டம் விட ஆரம்பித்தாள்.
அந்த பள்ளி மாணவர்களோ இவளது செயலைப் பார்த்து தான் சிரித்துக்கொண்டு இருந்தார்கள்.
அதில் ஒருவனான கமலேஷ் “அக்கா ரொம்ப க்யூட் இல்லை” என வழிந்துக்கொண்டே சொல்ல,
“டேய் அவங்க நமக்கு அக்காடா…”
அவனோ “இருந்திட்டு போகட்டும்…வயசுலே பெரியவங்களை சைட் அடிக்கக்கூடாதுனு ஏதாவது இருக்கா என்ன?” என்று கேட்டு “ஈ” என பல்லை காட்டி இளிக்க,
“மவனே நீ பண்ணறது மட்டும் சரவணன் அண்ணாவுக்கு தெரிஞ்சது தோளை உரிச்சு உப்புக்கண்டம் போட்டிருவாருடா” என மற்றவன் பயத்தோடு எச்சரித்தான்.
அவனோ அப்போதும் யாழினி தனது சுருள் முடியை காதோரம் ஒதுக்கி விட்டப்படி குளம்பியைப் பருகுவதை ரசித்திருந்தான்.
அதைக் கவனித்த கூட்டத்தில் இருந்த ஒரு நண்பனோ “மச்சி இந்த கமலுக்கு ஏதோ ஆகிடுச்சு…இதுக்கு மேலே இங்க இருந்தோம்…இவனோடு சேர்த்து நமக்கும் தர்ம அடி கன்ஃபார்ம்…முதல்ல கிளம்புங்கடா” என படபடத்தப்படி அனைவரையும் அங்கிருந்து கிளப்பினான்.
அந்த கமலேஷோ யாழினியை பார்த்தப் படி “அக்கா…” என முப்பத்திரெண்டு பல்லையும் காட்டி சிரிக்க,
“ஆத்திஈஈ இவன் நமக்கு சங்கூதாமல் விடமாட்டான் போலே…முதல்ல இவன் வாயை மூடுங்கடா” என அவனது வாயை பொத்திக்கொண்டு புறப்பட்டார்கள்.
“அண்ணா நாங்க கிளம்பறோம்” என அவசரமாக ஒருவன் மொழிய,
அவனோ வெளியில் ஒரு பார்வை பார்த்துவிட்டு இவர்களை நோக்கியவன் “மழை இன்னும் விடலையே…அதுக்குள்ள ஏன்டா கிளம்பறீங்க?மழை நிற்கட்டும்” என்றான் அக்கறையாக.
“இல்லைண்ணா மழை இப்போதைக்கு நிற்கிற மாதிரி தெரியலை…ரெக்கார்ட் நோட் வேற எழுதணும்…நாங்க கிளம்பறோம்ண்ணா” என்றார்கள் கோரசாக.
கமலேஷின் வாய் மூடியிருப்பதை கண்டு “ஏன்டா அவன் வாயை மூடியிருக்கீங்க?” என சந்தேகமாக கேட்க,அந்த மாணவர்களுக்கு கை கால் எல்லாம் உதறியது.
அவனது பார்வை வேறு இப்போதும் யாழினியின் மீதே நிலைத்திருந்தது.
‘இவன் வேற’ என அவனது தலையை பிடித்து தன் தோளோடு அழுத்திய ஒரு பையன் “இவனுக்கு ஏதோ வயித்தை பிரட்டுதாம் அண்ணா…அதான் இங்க அசிங்கப்பண்ணிட கூடாதுனு வாயை பொத்தி இழுத்திட்டு போறோம்” என பொய்களை அவிழ்த்து விட்டான்.
அவர்களுக்கு வேறு வழியும் இருக்கவில்லை.
அவனது எண்ணம் அறிந்தால் அனைவருக்கும் தர்ம அடி நிச்சயம்!
யாழினி வேறு இவர்களை சுவாரசியமாக பார்க்கவும், அவர்களுக்கு ஒரு மாதிரி இருந்தது.
அதற்குள்
“என்னாச்சு கமல்…உடம்பு சரியில்லையா?”
அவனோ “ம்ஹும்….” என தலையசைத்து யாழினியை காண முற்பட,
அதில் மிரண்ட நண்பர்களோ “ஐய்யோ அண்ணா அவனுக்கு வாந்தி கிட்னி வரைக்கும் வந்திடுச்சாம்…இதுக்கு மேலே இங்கயிருந்தால் வெடிச்சு வெளியே வந்திடும்…நாங்க கிளம்பறோம்…” என அவசரமாக சொல்லி கிட்டத்தட்ட அவனை தரதரவென இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள்.
சரவணனோ ‘வாந்தி வாய் வழியா தானே வரணும்…கிட்னி வரைக்கும்னு உளறிட்டுப்போறானுங்க…இவனுங்களுக்கு என்னாச்சு?’ என குழப்பமாக பார்த்தான்.
அந்நொடி அவர்கள் பேசியதை கேட்ட யாழினியோ சத்தமாக சிரித்து விட்டாள்.
அவளின் சிரிப்பு சத்தம் கேட்டு அவன் திரும்பி அவளை ஏறிட,அவளோ “சாரி பசங்க பேசியதை பார்த்து சிரிப்பு வந்திடுச்சு” என்றப்படி சிரிப்பை கட்டுப்படுத்தினாள்.
அவனோ ‘எனக்கு கஸ்டமரா வந்து சேர்றது எல்லாம் அரை பைத்தியம் இல்லைனா முழுபைத்தியமாவே இருக்கு..ஊப்’ என சலிப்பாக தலையாட்டியப்படி ராமுவிடம் உரையாடினான்.
“என்ன ராமு இன்னும் பசிக்குதா?இரு உனக்கு இன்னொரு வாழைப்பழம் எடுத்திட்டு வர்றேன்” என கனிவாக கூறி மற்றொரு வாழைப்பழத்தை எடுத்து வந்து நீட்டினான்.
அதுவும் ஆசையாக வாங்கி அதனை உண்ண தொடங்கின.
சரவணனோ ஒற்றை கன்னத்தில் கைவைத்து மேசையில் ஒரு கைஊன்றி அது உண்ணும் அழகை சிறு புன்னகையுடன் பார்த்திருந்தான்.
இப்போது அந்த கடையில் அவர்கள் மூவர் மட்டுமே இருந்தார்கள்.
அவனுடன் தனிமையில் இருப்பதற்கு அவளிற்கு சிறிதும் அச்சமில்லை.
அங்கு வந்த ஒரு மணி நேரத்திலே அவனது குணம் அறிந்தவளிற்கு அவனால் எந்த வித ஆபத்தும் தனக்கு நேராது என நிச்சயமாக தெரிந்தது.
அதனால் துணிச்சலாக மழை நின்றவுடன் செல்வதற்காக காத்திருந்தாள்.
அவள் கேட்டது போல் ஆவிப்பறக்க கட்டன் சாயாவை எடுத்து வந்து அவளின் மேசையில் அவன் வைக்க “தேங்க்ஸ்” என குறுநகையுடன் அதனை வாங்கிக்கொண்டாள்.
ஏற்காடு செல்லும் பேருந்தில் ஏறியதிலிருந்து அவளின் கவலைகள் அனைத்தும் தூர விலகி ஓடியிருந்தது.
கடந்த சில நாட்களாக சிரிப்பை தொலைத்துவிட்டு சுற்றித்திரிந்த யாழினியின் இதழில் மீண்டும் ஒரு முறை சிரிப்பை கொண்டு வந்தது,சிலுக்கு ஆன்ட்டியும் சரவணனும் தான்!
ஏனென்றே தெரியவில்லை…அவனுடன் இருக்கும் போது அவள் மிகவும் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் உணர்கிறாள்.
அதிலும் வேடிக்கையாக அந்த கடையில் நிகழ்ந்த சம்பவங்களும் அதற்கு காரணியாகும்.
சாயாவை கொடுத்துவிட்டு அவன் அங்கிருந்து செல்ல திரும்பிட “ஒரு நிமிஷம்” என அவனை தடுத்து நிறுத்தினாள்.
‘என்ன?’ என்பது போல் அவளை அவன் ஏறிட,
“உங்ககிட்ட கேட்கறேன்னு தப்பா நினைக்காதீங்க?இந்த மாதிரி வனவிலங்குகளுக்கு சாப்பாடு எதுவும் போடக்கூடாதுனு அரசாங்கம் விதிமுறை விதிச்சிருக்காங்க…அதை மீறுவது தப்பில்லையா?” என ராமுவை சுட்டிக்காட்டி வினவினாள்.
அவளை தீர்க்கமாக நோக்கிய சரவணன் “இங்க பாருங்க…அரசாங்கத்தோடு பேச்சை மீறி இதுமாதிரி செய்யறது தப்பு தான்…அதுக்காக பசியோட என்னை தேடி வர ஜீவனை ‘ச்சீ போ’னு அடிச்சு விரட்ட என்னாலே முடியாது…அதே மாதிரி ராமு ஒண்ணும் வேற யாரோ இல்லை…அவனை எனக்கு சின்ன வயசிலிருந்து தெரியும்…அவன் எனக்கு ஒரு தம்பி மாதிரி…அது இங்க இருக்கிற எல்லாருக்கும் தெரியும்…அதனாலே நீங்க எங்களை பத்தி கவலைப்படாமல் உங்க வேலையைப் பாருங்க” என சற்றே கடுமை ஏறிய குரலில் அவளிற்கு விளக்கம் கொடுத்தான்.
‘ஷப்பா இப்போ எதுக்கு இவ்வளவு சூடு…நான் விதிமுறைய தானே எடுத்துச்சொன்னேன்…அதுக்கே ஏன் இப்படி எரிஞ்சு விழறாரு…முடியலைடா சாமி’ என முணுமுணுத்தப்படி தேநீரை பருகினாள்.
அவனோ அவளின் பேச்சை கேட்காதவனாய் மீண்டும் ராமுவிடம் சென்று அமர்ந்தான்.
தேநீரை ஒரு மிடறு விழுங்கியவளோ ‘காட்…என்ன இது இப்படி கசக்குது’ என முகத்தை சுளித்தாள்.
பின்பு இரண்டாவது மிடறு அவள் குடித்து பார்க்க,இப்போது அதிலிருந்த மசாலாப் பொருட்களின் நறுமணமும் சுவையும் அவளை ஈர்த்திட ‘முதல் வாய் குடிச்சப்போ கசப்பா இருந்துச்சு…இப்போ நல்லாயிருக்கு…அப்படியே அவங்க ஓனர் மாதிரி…’ என நாவால் இதழில் ஓட்டியிருந்த சுவையை ருசித்தப்படி அவனை காண,
அவனோ அங்கு ஒருவள் இருப்பதை கண்டுக்கொள்ளாமல் அந்த குரங்கிடம் சிரித்தப்படி பேச, அவளிற்கு கடுப்பாக வந்தது.
‘இவனுக்கு மனுஷங்களை பார்த்தாலே பிடிக்காது போலே…குரங்குகிட்ட மட்டும் இப்படி சிரிக்கிறான்’ என பொறாமையில் பொங்கினாள்.
தேநீரை பருகிவிட்டு மௌனமாக வேடிக்கை பார்த்தாள்.
மழை விட்டதும் புறப்படலாம் என்று அவள் எண்ணினாள்.
அந்தோ பரிதாபம்!
மணி ஒன்பதை தொட்டப்போதும் மழை விடுவதாக இல்லை.
அதனால் அவள் அவஸ்தையுடன் அங்கே அமர்ந்திருந்தாள்.
அவனிற்கு கடை மூடி வேண்டிய தருணம் வந்துவிட்டதால் மெதுவாக பொருட்களை சுத்தம் செய்து எடுத்து வைத்தான்.
மழைக்காகவும் பசிக்காகவும் ஒதுங்கிய ராமுவும் கூட அங்கு தான் இருந்தது.
அதற்கும் வெளியில் செல்ல கால்கள் இரண்டும் பரபரத்தது.
ஆனால் விடாமல் கொட்டி தீர்த்த மாரியின் வேகம் கண்டு தடுமாறி நின்றன.
ஐந்தறிவு ஜீவனே இவ்வாறு என்றால் யாழினி சொல்லவே தேவையில்லை.
அவளிற்கு இங்கிருந்து விரைந்து செல்ல வேண்டும்.ஆனால் இயலாமையுடன் அமர்ந்திருந்தாள்.
அவளிற்கு சரவணனை பிடித்திருந்தது.
அதற்காக கண்ட முதல் பார்வையிலே காதல் எல்லாம் இல்லை.
அவனிடம் ஒரு ஈர்ப்பு…
அவ்வளவே?
அவன் வேகமாக பத்திரங்களை சுத்தப்படுத்தி எடுத்து வைத்துக்கொண்டிருக்க,
‘இவன் வேற கடையை மூடப்போறான் போலே…டாக்ஸி ஏதாவது கிடைக்குமா?’ என சிந்தித்தாள்.
அதனால் அதுவரை அணைத்து வைத்திருந்த அலைப்பேசியை மெதுவாக உயிர்ப்பித்தாள்.
அதில் நூற்றுக்கும் மேலான தவறிய அழைப்புகள் இருந்தது.
அதனை சில கணங்கள் வெறித்துப்பார்த்த மங்கை ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள்.
அச்சமயம் வானொலியிலிருந்து “அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது” என கசிந்து வந்துக்கொண்டிருக்க,
‘என்ன ஒரே சிட்சுவேஷன் ஷாங்கா வருது…அதுவும் இளையராஜா பாட்டு…ஒரு வேளை இவர் ராஜா ஃபேனா இருப்பாரோ?’ என அவள் யோசிக்கும் நேரம் அவளின் அலைப்பேசி விடாமல் ஒலித்தன.
அவளின் அலைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் ‘மாம்’ என ஒளிர்ந்த பெயரை கண்டவளின் முகம் மேலும் சோர்வுற்றது.
அவளுள் மீண்டும் பாரம் ஏறியது.
அவளது தாயின் அழைப்பு முழுமையாக சென்று ஓய்ந்தும் கூட அவள் அழைப்பை ஏற்கவில்லை.
அவளிற்குள் தனிமை என்னும் உணர்வு ஆட்கொண்ட நேரம்
“ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம்
என்னை பொறுத்த வர காவியம்
எந்நாளும் நீ தான்டி என்னோட ராசாத்தி” என்றதும் அவள் சட்டென விழி உயர்த்தி அவனை ஏறிட்டாள்.
அவனோ அவளை சிறிதும் பொருட்படுத்தாமல் தன் வேலையில் கவனமாக இருந்தாள்.
“பொண்ணாட்டம் நெஞ்சோடு
வெச்சேனே காப்பாத்தி
எங்கே நான் போனா என்ன
எண்ணம் யாவும் இங்கேதான்
உன் பேர மெட்டுக்கட்டி
உள்ளம் பாடும் அங்கேதான்
என்னாசை காத்தோடு போகாது
எந்நாளும் என்வாக்கு பொய்க்காது” என அடுத்தடுத்து வரிகள் பாடிக்கொண்டே இருக்க,
இவளிற்கோ ‘இவரு நிஜமாவே என் மனசறிஞ்சு பாட்டுப்போடறாரா?இல்லை ஏதேச்சையா நடக்குதா?’ என நெற்றி சுருங்க யோசித்தவளின் முகம் மீண்டும் சகஜநிலைக்கு மாறின.
‘இவர்கிட்ட ஏதோ மேஜேக் இருக்கு’ என எண்ணிய வேளை அவளின் அலைப்பேசிக்கு மீண்டும் ஒரு அழைப்பு வந்தது.
இம்முறை அவளிற்கு அழைத்தது அவளின் பாட்டி சரோஜா.
திரையில் ஒளிர்ந்த அவரது பெயரை கண்டவள் ‘எடுப்பதா?வேண்டாமா?’ என தனக்குள்ளே பட்டிமன்றம் நடத்தினாள்.
அச்சமயம் “காத்திருக்கேன் கதவ திறந்து
உள்ளுக்கு வாடி” என்ற பாடல் ஒலிக்க,
‘அடேய் என்னடா இது’ என அவனை விழி உயர்த்தி பார்க்க இப்போதும் அவன் விழி கூட அவளின் புறம் திரும்பவில்லை.
“ஊப்” என இதழ் குவித்து ஊதியவள் சிறிது தயக்கத்திற்கு பிறகு அழைப்பை ஏற்றாள்.
பெரும் குழப்பத்தில் இருந்தவளிற்கான வழியை அவனது பாடல் வரிகள் காட்டின.
அவள் அழைப்பை ஏற்ற கணமே “ஏன்டி சீமந்த புத்திரி…சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடி வந்திட்டியாம்…இப்போ நீ எங்கடி இருக்கே?” என எடுத்த எடுப்பிலே அவர் சீற ஆரம்பித்துவிட்டார்.
பின்பு அவளை காணாமல் காலையிலிருந்து அனைவரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
அவளது அலைப்பேசிக்கு அழைத்துப் பார்த்தும் அவை அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற பதிலையே கொடுத்தன.
அதனால் அவளிற்கு ஏதேனும் நிகழ்ந்து விட்டதோ என்று பயத்தில் இருந்தார்கள்.
அவளோ சில நொடி நேர அமைதிக்கு பிறகு “ஏற்காட்டிலே இருக்கேன்” என்றாள் மெதுவாக.
“ஏதே ஏற்காடா?அடிப்பாவி” என எதிர்புறம் அவர் வாயில் கைவைத்து அதிர்ந்தார்.
அதேநேரம் அவள் அலைப்பேசியில் உரையாடுவதை கவனித்துவிட்டு பாடலை சிறிது சத்தம் குறைத்து வைத்தான் சரவணன்.
அதை கவனிக்கும் நிலையில் கூட அவள் இல்லை.
ஏனெனில்,அவளது காதிலிருந்து இரத்தம் வரும் வரை அவளை தொடர் வசைவுகளால் அர்ச்சித்துக் கொண்டிருந்தார் சரோஜா.
அவள் செய்தது பெரும் குற்றம் என்பதால் அவளும் அமைதியாக அதனை பெற்றுக்கொண்டாள்.
அவளை வாய் ஓயாமல் திட்டி முடித்தவர் “ஊருக்கு வந்தவ தான் வந்தே?நேரா வீட்டுக்கு வரவேண்டியது தானேடி…இப்போ எங்கயிருக்கே?” என்று கேட்டார் அடக்கப்பட்ட சீற்றத்துடன்…
அவளோ “ஒரு டீக்கடையிலே காஃபி குடிச்சிட்டு இருக்கேன்” என்றதும் தான் தாமதம் “அங்க உன் அப்பனும் அம்மாவும் உன்னை காணலைனு பச்சைத்தண்ணீ கூட குடிக்காமல் விரதமிருக்காங்க…நீ என்னடான்னா இங்க உற்சாகமா காப்பி குடிக்கிறீயாடி?” என படபட பட்டசாய் வெடித்துத் தள்ளினார்.
அவரின் திட்டலுக்கு அவளிடம் ஒரு ஆழ்ந்த மௌனம்!
“மௌனம் ஏன் மௌனமே ஏன்..வசந்த காலமா..
நினைவிலே வளர்ந்தது..பருவ ராகமா
தனிமையில் நீ இனிமையை..அழைத்து வா..
மனதில் ஆட வா.” என மீண்டும் அவளின் சூழ்நிலைக்கு ஏற்ற பாடல் ஒலித்திட ‘ஷப்பா இவன் வேற’ என மானசீகமாக தலையிலடித்துக்கொண்டாள்.
அதற்குள் அவளின் அமைதிக்கான காரணம் அறிந்த பெரியவரும் சிறிது தழைந்துப்போய்
“மணி ஒன்பதாகுது…இங்க உன் ஊரு மாதிரி இல்லை யாழு…மழை வேற பெய்யுது…வெரசா ஒரு ஆட்டோ பிடிச்சு பாதுகாப்பா வீடு வந்து சேரு” என்றவர்,
“வீட்டு விலாசம் இருக்கு தானே” என அக்கறையாக பேத்தியிடம் கேட்க,
“உம் இருக்கு பாட்டி” என்றவளோ கடையின் பெயர்ப்பலகையை அவன் தூக்கி உள்ளே வைத்துக்கொண்டிருப்பதை கவனித்தாள்.
தானும் அங்கிருந்து புறப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பது அவளிற்கும் புரிந்தது.
“சரி சீக்கிரம் கிளம்பி வா…நான் உன் அப்பனுக்கு போனு பண்ணி பேசறேன்” என சிடுசிடுப்புடன் கூறி,அழைப்பை துண்டித்தார் சரோஜா.
இதற்கு மேல் இங்கு இருக்க முடியாது என்பதறிந்து “உங்க கடையோட காஃபி அன்ட் சாயா இரண்டும் பிரமாதமா இருந்தது…அதுமட்டுமில்லாமல் இங்க உங்க எல்லாரோடும் இருந்தது ஒரு புது அனுபவமா இருந்தது…இதுக்கெல்லாம் உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்…ரொம்ப தேங்க்ஸுங்க” என சிரித்து முகமாக பணத்தை கொடுத்துவிட்டு ராமுவிடமும் “பை” சொல்லி விடைப்பெற்றாள்.
அவள் மழையில் நனைந்துக்கொண்டு ஓடியதை பார்த்து அவனிற்கு பாவமாக இருந்தது.
அவளிற்கு உதவி செய்ய அவன் மனம் விரும்பினாலும் ‘சரவணா நீ ஒண்ணும் தேவதூதன் கிடையாது…நீ உன் வேலையைப் பாரு’ என அவனது மனசாட்சி அதட்டி திசைத்திருப்பியது.
அவனிற்கும் அதுவே ‘சரி’ என்று தோன்றிட ராமுவிடம் “ராமு நீ கடைக்கு வெளிய இருக்கிற செட்டிலே படுத்துக்கோ…மழை நின்ன பிறகு தான் போகணும்” என கறாராக கூறி,அதனை கடைக்கு வெளியே தர்பாய்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிறு வீட்டினுள் தங்க வைத்தான்.
அதுவும் அவன் கூறுவதை கேட்டு சாதுவாக அவற்றினுள் படுத்துக்கொண்டது.
அதனை சிரிப்புடன் பார்த்தப்படி தனது இரு சக்கர வாகனத்தில் ஏறி வீட்டை நோக்கி புறப்பட்டான்.
ஆனால் இங்கோ யாமினியின் கெட்ட நேரம்,அவள் கிளம்பிய சிறிது நேரத்திலே ஒரு மரம் விழுந்து சாலையின் பாதையை மறித்திருந்தது.
மழை வேறு புயல் போல் கொட்டி தீர்க்க,அதன்பலனாய் மின்சாரமும் தடைப்பட்டு சாலை முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது.
‘எனக்கு நேரமே சரியில்லை’ என தலையில் கைவைத்து ஆள் அரவமில்லாத அந்த சாலையில் அநாதரவாய் நின்றிருந்தாள் யாழினி.