“கட்டன் சாயா வித் காதல்” என அந்த கடையின் பெயர்ப் பலகையை வாசித்த யாழினியின் இதயத்தில் வித்தியாசயான ஓர் உணர்வு!
அப்போது சூடான தேநீரின் நறுமணம் மழைச்சாரலின் வழியே மெதுவாக அவளை நோக்கி மிதந்து வந்தது.
சோர்ந்துபோன இதயங்களிலிருந்து கவலைகள் அனைத்தையும் கிள்ளி எடுக்கும் அளவுக்கு அந்த வாசனை வீரியமிக்கதாக இருந்தது.
காற்றில் மிதந்து வந்த நறுமணம் அவளை மயக்கின.
அத்தோடு கடையின் உள்ளே,
“மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்…
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்…
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்…
ஏன் என்று கேளுங்கள்…” என ஜானகி அம்மாவின் குரலில் தேனில் உருகி கசிந்து வந்த பாடல் அவளை அப்படியே மோனத்தில் உறைய வைத்தது.
அந்த பாடலின் வரிகள் ஏனோ அவளிற்காக பிரத்யேகமாக எழுதப்பட்டது போன்ற ஒரு மாயை!
அவளின் மேல் மழைநீர் கொட்டியதை கூட உணராமல் சில வினாடிகள் விழி மூடி நின்ற பாவை சட்டென இமைத்திறந்தாள்.
இப்போது தேநீரில் சேர்க்கப்பட்ட ஏலக்காய்,இஞ்சி,புதினா மற்றும் பட்டையின் நறுமணம் அவளை சுண்டியிழுக்க அவளையும் அறியாமல் அவளின் பாதங்கள் அந்த கடையை நோக்கி நகர்ந்தது.
மெல்ல அடியெடுத்து வைத்தவளின் விழியில் அந்த கடையின் பெயர்ப்பலகை நன்றாகவே தெரிந்தது.
மீண்டும் ஒரு முறை “கட்டன் சாயா வித் காதல்” என அவளின் இதழ்கள் முணுமுணுத்திட ‘என்னடா பேரு இது…விசித்திரமா இருக்கு…சாயாவோட சேர்த்து காதலையும் தருவாங்களோ?’ என குறும்பாக அவளின் மனம் எண்ணியது.
ஆனால் அவள் விளையாட்டாக நினைத்ததற்கு ஏற்றாற் போன்று அவளிற்கான நேசத்தை அள்ளி தருவதற்காக ஒரு ஆறடி உயர ஆண்மகன் அங்கு காத்திருந்தான்.
அவனை கண்டவுடன் அவள் அப்படியே திகைத்து நின்றுவிட்டாள்.
ஏனெனில்,அங்கு ஒரு இருபத்தி எட்டு வயது ஆடவன் தான் குளம்பியை ஆற்றியப்படி நின்றிருந்தான்.
அதிலும் அவளை அதிர வைத்தது அவனது தோரணை தான்!
கருப்பு நிற சட்டையை நேர்த்தியாக மடித்துவிட்டு,இடது காதில் ஒரு வெள்ளி கடுக்கன்,களைந்த அடர்த்தியான சிகை,கூர்மையான இரண்டு கண்கள்,அழுத்தமான உதடுகள்,அவனது முகத்திலோ ‘எட்டி நில் எச்சரிக்கிறேன்’ என்பது போன்ற ஒரு பாவனை!
‘நிஜமாவே இவன் தான் ஓனரா?’ என ஆச்சரியத்தில் விழி விரித்து அவனையே அவள் இமைக்காமல் பார்த்திருந்தாள்.
அவனை அந்த பத்துக்கு பத்து அறை தேநீர் கடைக்குள் அவளால் பொருத்திக்கொள்ளவே முடியவில்லை.
திரைப்படத்தில் நடிக்கும் நாயகன் போல் நேர்த்தியான அழகுடன் இருந்தான்.
அதற்காக மற்றவரை பார்த்தவுடன் வசீகரிக்கும் தோற்றமெல்லாம் இல்லை.
தமிழர்களுக்கே உரிய நிறத்தில் வெகு சாதாரணமாக தான் இருந்தான்.
ஆனால் ‘கட்டன் சாயா’ என்ற பெயரிலிருந்து அவன் முற்றிலும் வித்திசாயமாக தெரிந்தான்.
அதற்கு காரணம்,அவள் எதிர்பார்த்தது கேரளாவை சேர்ந்த நாற்பது வயதுள்ள ஆடவரை!
இப்போது ஒரு இளைஞன் அவ்விடத்தை ஆக்கிரமித்திருக்கவும் அவளிற்குள் அதிர்ச்சி!
அவன் குளம்பியை பித்தளை குவளை கொண்டு ஆற்றிட, அவனது கைகள் ஆடும் நாட்டியத்தின்
அழகை கண்டு அவள் மெய்மறந்து நின்றாள்.
அதேநேரம் அவனும் அவளை விழி உயர்த்தி பார்த்தான்.
மழைநீர் ஒரு பக்கம் அவளை நனைத்துக்கொண்டிருக்க,அவனது இமைகள் இடுங்கின.
‘யாரிந்த பைத்தியம் மழையிலே நனைஞ்சிட்டு இருக்கு’ என அவளை ஒரு மார்க்கமாக நோக்கியவன் “ஹலோ ஒண்ணா உள்ள வாங்க…இல்லையா கடையோட வழிய அடைக்காமல் கிளம்பிப்போங்க…இப்படி இன்ஸ்பெக்ஷனுக்கு வந்த ஆபிசர் மாதிரி எவ்வளவு நேரம் கடையையே பார்த்திட்டு இருக்கப்போறீங்க?” என அழுத்தமான குரலில் கேட்டதும்,அவள் திடுக்கிட்டாள்.
அவனது முகத்தில் தெரிந்த கடுமையை கண்டதும் தன் தவறு உரைக்க,அதேநேரம் ‘கடை போர்டிலே மட்டும் தான் காதல் இருக்கு…இவரு முகத்திலே அது துளியும் இல்லை’ என பெருமூச்சுடன் கடையினுள் நுழைந்தாள்.
தலையில் அணிந்திருந்த முக்காடை விலக்கி ஈரமாகியிருந்த உடையை உதறிக்கொண்டே உள்ளே வந்தவளிடம் “மழை வருதுனு தெரியுதில்லை…அப்புறமும் எதுக்கு அப்படியே மழையிலே நின்னுட்டு இருந்தீங்க?” என அவன் கடிந்தான்.
அவனது கணீர் குரல் அவளை அதட்டினாலும் அதில் ஒரு கனிவும் இருந்தது.
தனது தோளிலிருந்த பையை அங்கே கழட்டி வைத்துவிட்டு மெதுவாக அவனை நோக்கி நிமிர்ந்தவள் “உங்களை பார்த்து அப்படியே மெர்சலாகிட்டேன் பாஸ்” என வெளிப்படையாக அவளது எண்ணத்தைக் கூறியிருந்தாள்.
அதைக்கேட்டு அவன் ஒரு கணம் திகைத்துவிட்டான்.
கடையிலிருந்த ஏனையோரின் பார்வையும் அவளை அதிர்ச்சியுடன் ஏறிட்டன.
அவளோ அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டு அவனருகே நெருங்கி வர,அதனை உணர்ந்து “ம்க்கும்” என தொண்டையை செருமி “என்ன வேணும்?” என்றான் கறாரான குரலில்…
“ஊப்” என இதழை குவித்து ஊதிய காரிகை மஞ்சள் நிற விளக்கு ஒளியில் மிளிர்ந்த கடையை சுற்றி பார்த்தப்படி “எனக்கு ஒரு கோல்ட் காஃபி பிளீஸ்” என ஏதோ ஒரு நினைவில் கூறிவிட,
அதைக்கேட்டு “என்ன?” என அவளை அவன் முறைத்தான்.
மற்றவர்களும் ‘யாருடா இந்த பொண்ணு…மழை வெளிய கொட்டிட்டு இருக்கு…இப்போ போய் கோல்ட் காஃபி…அதுவும் இங்க வந்து’ என அவளை சுவாரசியமாக நோக்கினார்கள்.
அவளோ சட்டென இதழ்கடித்து அவனை நோக்கி திரும்பிட,அவனோ அவளை உற்றுநோக்கி “இது ஒண்ணும் உங்க சென்னை கிடையாது…ஏற்காடு…அதை முதல்ல ஞாபகம் வைச்சிட்டு ஆர்டர் பண்ணுங்க” என அழுத்தம்திருத்தமாக உரைத்தான்.
இப்போது ஆச்சரியத்தில் விழி விரித்த மங்கை “நான் சென்னை தான்னு எப்படி கண்டுப்பிடிச்சீங்க?” என அவன் அருகே வர,
அவனோ அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்துவிட்டு “என்ன வேணும்?” என்றான் காட்டமான குரலில்.
அவனது முகத்தில் கோபத்தின் ரேகைகள் படர்வதை கண்டு ஒரு பெருமூச்சை வெளியேற்றியவள் “இங்க என்ன ஸ்பெஷலோ அதையே கொடுங்க” என்றவள்,
“எனக்கு இந்த பட்டர் பிஸ்கட்டும் வேணும்” என கண்கள் மின்ன அங்கிருந்த ஒரு கண்ணாடி பாட்டிலை சுட்டிக்காட்டினாள்.
அவளது சிறுப்பிள்ளை பாவனையை ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டே “ம்” என தலையசைத்தவன் பின்பு “கட்டன் சாயா தான் இங்க ஸ்பெஷல்…அது வேணுமா?இல்லை காஃபி ஏதாவது வேணுமா?” என ஒரு கடைக்காரனாக வாடிக்கையாளரின் தேவையறிய விரும்பி வினவினான்.
“ஓ…இங்க காஃபி எல்லாம் கிடைக்குமா?ஓகே…அப்போ எனக்கு ஒரு கப் காஃபியும் உங்க கடையோட ஸ்பெஷல் கட்டன் சாயாவையும் கொடுங்க” என்றுரைத்துவிட்டு இருக்கைக்கு சென்று அமர்ந்தாள்.
நேரே மின்விசிறிக்கு கீழே சென்று அவள் அமர்ந்துக்கொள்ள,
குளம்பியையும் தேநீரையும் ஒரே நேரத்தில் அவள் பருகக் கேட்டதை கண்டு ‘சரியான பைத்தியம்’ என அன்றைய நாளில் இரண்டாவது முறையாக அவளை வசைவிக்கொண்டு தன் பணியை தொடர்ந்தான் சரவணன்.
அவனது முழுப்பெயர் சரவண வேல்…இருபத்தி எட்டு வயது நிரம்பிய ஆடவன்.
அவனது வயதிற்கு உரிய பக்குவமும் கனிவும் கொண்டவன்.
அதேசமயம் அவனுள் ஒரு அழுத்தமும் இருந்தது.
அவள் வந்ததிலிருந்து அவனை காண்கிறாள்.அவனது முகத்தில் மருந்திற்கும் ஒரு புன்னகை இல்லை.
‘ஏன் கொஞ்சம் சிரிச்சா தான் என்னவாம்?’ என அவள் சிணுங்கலாய் நினைக்க,
அவளின் மனசாட்சியோ ‘உன் நிலைமையே இங்க சிரிப்பா சிரிக்குது…இதிலே நீ மத்தவங்க சிரிக்கலைனு வருத்தப்படறே?’ எள்ளலாக சாட,
‘ஓ…ஆமா நம்ப வேலைய நாம்ப பார்ப்போம்’ என தனக்கு தானே வலியுறுத்தி அந்த கடையைச் சுற்றி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
அச்சமயம் “அண்ணா எனக்கொரு காஃபியும் குண்டு பன்னும் வேணும்” என ஒரு மேசையில் இருந்த பள்ளி மாணவன் கேட்க,
“சரவணா அப்படியே எனக்கும் ஒரு டீ கேக் எடுத்திட்டு வாப்பா” என மற்றொரு பெரியவரும் அவனிடம் வேலை ஏவ,
அவனோ “இருங்க எடுத்திட்டு வர்றேன்” என சளைக்காமல் பதில் கூறிவிட்டு அவர்கள் கேட்டதை எடுத்து வந்து கொடுத்தான்.
‘சரவணா’ என தனக்குள்ளே சொல்லிப்பார்த்தவள் ‘பேரு கூட இவனுக்கு பொருந்தலை…பட் நல்லப்பேரு தான்’ என எண்ணிக்கொண்டாள்.
அதேப்போல் அவளிடம் நேரே வந்த சரவணன் “இப்போதைக்கு காஃபியும் பிஸ்கெட்டும் மட்டும் எடுத்திட்டு வந்திருக்கேன்…டீ கடைசியா தர்றேன்…இரண்டையும் ஒட்டுக்கா குடிச்சா ஒரு மாதிரி இருக்கும்” என அறிவுறுத்தி குளம்பியை மட்டும் அவளிடம் தந்துவிட்டு சென்றான்.
அவளோ அவன் கூறியதை ஏற்று தலையசைத்துவிட்டு குளம்பியைப் பருக ஆரம்பித்தாள்.
அவளின் விழிகள் சுற்றிலும் அலைப்பாய்ந்தாலும் ஏனோ அவனை தேடியே அடைக்கலம் புகுந்தது.
கடையில் இருந்தது ஐந்து பேர் என்றாலும் அவன் ஒருவன் மட்டுமாக பம்பரமாய் சுழன்று வேலைப் பார்த்ததை ஆர்வமாக பார்த்தாள்.
சில நேரம் அந்த பள்ளி மாணவர்களுடன் அவன் அமர்ந்து பேசவும் செய்தான்.
திடீரென்று அந்த அறுபது வயதான பெரியவர் “ஏப்பா சரவணா…மழை நிற்கிற மாதிரி இல்லை…என் பையன் முத்துவை வரச்சொல்லுப்பா” என கோரிக்கை முன் வைக்க,
“சரி பெரியப்பா” என சொல்லிக்கொண்டே அலைப்பேசியின் வழியே அவரது மகனை தொடர்புக் கொண்டு பேசினான்.
“முத்து வர்றேன்னு சொல்லிட்டான் பெரியப்பா” என்று கூறி அவர் அருகே அமர்ந்து அவரிடம் பேச ஆரம்பித்தான்.
அனைவரிடமும் அவன் இதமாக பழகிய விதம் அவளை ஈர்த்தது.
ஒவ்வொருவரும் அவனிடம் முறை வைத்து அழைப்பதை கண்டு உறவினர்களாக இருப்பார்களோ என்று எண்ணினாள்.
ஆனால் எல்லாரும் ஒரே ஊரில் வளர்ந்ததால் அவ்வாறு பாசத்துடன் அழைக்கிறார்கள் என்று அறிந்து வியந்தாள்.
அனைவரும் அவனிடம் சிரித்து பேசினாலும் கூட அவனின் இதழில் ஒரே ஒரு மில்லி மீட்டர் புன்னகை மட்டுமே தோன்றின.
‘உராங்கோட்டான்’ என திட்டிக்கொண்டவளின் நெஞ்சில் ஏனோ அந்த சூழ்நிலை ஒரு இதத்தை கொடுத்தன.
சில நிமிடங்களில் அந்த பெரியவரின் மகன் குடையுடன் அங்கு வந்துவிட “போகும் போதே வெளியப்போகுதீங்கன்னு சொன்னேனில்லைப்பா…சொல்லற பேச்சையே கேட்காதீங்க” என தனது தந்தையை அந்த முத்து திட்ட,
சட்டென இடைப்புகுந்து “டேய் என்ன சவுண்டு அதிகமா வருது” என சரவணன் அவனை அதட்ட,
அதில் மிரண்ட அந்த ஆடவன் “இல்லண்ணா…மழையிலே நனைஞ்சு அவருக்கு ஏதாவது வந்திடுமோனு…” என தயக்கமாய் இழுக்க,
“அவரும் எவ்வளவு நேரம் தான்டா வீட்டுக்குள்ளே அடைஞ்சு கிடப்பாரு…அதான் வெளிய வந்திருப்பாரு…அதுக்கு நீ திட்டுவியா?பாவம்டா அந்த மனுஷன்…” என பெரியவருக்கு ஆதரவாக அவன் பேச,
அவரும் அதனை ஆமோதிப்பது போல் “ஆமா சரவணா” என்றவர்,
“மழை நின்னுடுச்சின்னு தான் ஒரு எட்டு இங்க வந்து உன் டீயை குடிச்சிட்டு போகலாம்னு நினைச்சேன்…ஆனால் உள்ளே வந்தவுடனே மறுபடியும் மழை பெய்ய ஆரம்பிச்சிடுச்சு” என கவலையாக சொல்ல,
“கேட்டியா?திட்டாமல் ஒழுங்கா அப்பாவை கூட்டிட்டு போடா…” என்றவன் அந்த பெரியவரிடம் திரும்பி “பெரியப்பா வீட்டுக்கு போய் ஏதாவது திட்டினா என்கிட்ட சொல்லுங்க…அம்மாவை அனுப்பி வைக்கிறேன்” என அவனை ஒரு பார்வை பார்த்தப் படி கூற,
அதைக்கேட்ட அந்த முத்துவின் விழிகளோ பெரிதாக விரிந்தது.
‘ஆத்தி அந்த பொம்பளையா?’ என்ற மிரட்சி அவன் முகத்தில் பட்டவர்த்தனமாக தெரிய “அப்பா வாங்கப்பா” என பவ்யமாக தனது தந்தையின் கைப்பிடித்து அவன் அழைத்து செல்ல,
அந்த பெரியவரோ சரவணனை நோக்கி ஒரு அன்பான புன்னகையை பரிசளித்துவிட்டு கிளம்பினார்.
அவரின் புன்னகையில் அவரது நன்றியுணர்வும் கலந்திருந்தது.
ஆனால் அவனோ அவருக்கு சிறு தலையசைப்பை மட்டுமே பதிலாக கொடுத்தான்.
இயந்திரத்தனமான வாழ்க்கைக்குள் வாழ்ந்து பழகியவளிற்கு இவையெல்லாம் விசித்திரமாக இருந்தது.
அவளிற்கு பிடித்தமான பணியை செய்தப்போதும் அதில் சுதந்திரமாக அவளால் செயல்பட முடியாது.
அவளின் மேலாளர் கூறுவதை மட்டுமே அவள் செய்ய வேண்டும்.
கிட்டத்தட்ட ஒரு சூழ்நிலை கைதி போல் தான்!
அதுவே அவளிற்கு மிகுந்த வருத்தம்.
இருப்பினும்,பல தடைகளை தாண்டி சிறப்பாக பணி செய்தவளின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் இப்போது மொத்தமாக பறிப்போயிருந்தது.
அதை எண்ணி அவளின் முகம் மீண்டும் சோர்வுற,அச்சமயம் அவளின் அருகே உள்ள இருக்கையில் யாரோ ஒருவர் அமருவது போல் தோன்றின.
அதையறிந்து வேகமாக அவள் திரும்ப,அங்கு அமர்ந்திருந்த நபரை கண்டு “ஆ…” என அலறியப்படி துள்ளிக்குதித்து எழுந்தாள்.
ஏனெனில்,அவளிற்கு பக்கத்து இருக்கையில் சொகுசாக அமர்ந்திருந்தது,ஒரு குரங்கு!