யாழினியின் அந்த வார்த்தைகள், நேராகத் தன் முகத்தில் வந்து அறைந்ததைப் போலிருந்தது சரவணனுக்கு.
“அதை உங்ககிட்ட சொல்லணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை…”
அவள் உதிர்த்த அந்த ஒற்றை வாக்கியம், கணப்பொழுதில் சரவணனின் முகபாவனையை முற்றிலும் இறுகச் செய்தது.
சில நொடிகள் அவளையே தன் தீர்க்கமான விழிகளால் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவன், மெதுவாக தன் பார்வையைப் பக்கவாட்டில் திருப்பிக் கொண்டான்.
அவன் கேட்ட கேள்வியில் எந்தத் தவறும் இருப்பதாக அவனிற்கு தோன்றவில்லை.
அவளின் மேல் அவன் கொண்ட அக்கறையின் வெளிப்பாடு தான் அது!
ஆனால் அதற்கு அவள் பதிலளித்த விதம்,அவனிற்குள் இருந்த சுயமரியாதையை சரியாக தூண்டிவிட்டிருந்தன.
‘அம்மா பேச்சை கேட்டு நான் இவ்வளவு தூரம் வந்ததே தப்பு’ என வெடுக்கென்று எழுந்து நின்றவன் “நான் வெளிய இருக்கேன்…நீங்க பாக்ஸை கழுவி எடுத்திட்டு வந்து கொடுத்திடுங்க” என இறுகிய குரலில் கூறியப்படி வெளியேற ஆயுத்தமானான்.
அவனது குரலின் வழியே வெளிப்பட்ட அழுத்தம் பாவையவளின் உள்ளத்தைத் தடுமாற வைத்தன.
‘கொஞ்சம் அதிகமா பேசிட்டமோ?’ என தன்னையே நொந்துக்கொண்டவள் “சரவணன்” என்று அழைத்தாள் அவசரமாக…
முதல் முறையாய் அவள் அவனை ‘சரவணன்’ என்று அழைக்கிறாள்..
அவளின் அந்த அழைப்பில் வெளிப்பட்ட உரிமையுணர்வு அவனது இதயத்தை ஏதோ செய்ய,மெதுவாக அவளை நோக்கி அவன் திரும்பினான்.
அவளோ தன் தவறை உணர்ந்து “சாரி” என இமைச்சுருக்கி மன்னிப்பு வேண்டினாள்.
அவனோ எவ்வித சலனமும் இல்லாமல் அவளையே சில வினாடிகள் கூர்ந்து நோக்கியவன்,பின்பு ‘என்ன நினைத்தானோ?’ “ஏன் சாப்பிடலை?” என்று கேட்டான்.
‘ஷப்பா இதை அவர் விடமாட்டாரா?’ என மனதிற்குள் அலுத்துக்கொள்ள,அவளிடம் பதில் எதுவும் இல்லை என்றவுடன் “மனசுக்குள்ள ஆயிரம் கஷ்டம் இருக்கலாம்…அதுக்காக சாப்பிடாமல் இருந்தால் எல்லாம் சரியாகிடுமா?” என்று மார்ப்பிற்கு குறுக்கே கைகள் கட்டி அவன் வினவ,
அவன் கேட்கும் கேள்வி சரியானது தான்!
ஆனால் அவளிடம் அதற்கான பதிலளில்லை.
அவனோ மேலும் “சாப்பிடலைனா எல்லா பிரச்சனையும் சரியாகிடும்னு சொன்னால் நாட்டுலே பல பேரு உண்ணாவிரதம் இருந்து அவங்க கஷ்டத்தை போக்கிப்பாங்க” என்றவன்,
ஒரு கணம் நிறுத்திவிட்டு தொண்டையை செருமி “சாப்பிடறதும் சாப்பிடாமல் இருக்கிறது உங்க இஷ்டம்…ஆனால் சாப்பிடாமல் இருந்தால் உங்களை சுத்தி இருக்கவங்க தான் கஷ்டப்படுவாங்க” என மறைமுகமாக அவளை உணவருந்த வலியுறுத்தினான்.
‘சரியான ஆளு…நேரடியா சாப்பிடுனு உரிமையா சொல்லாமல் மனுஷன் சுத்தி வளைச்சு அட்வைஸ் பண்ணறதை பாரு’ என அவனை உள்ளுக்குள் திட்டினாலும்,அவனது அக்கறை அவளை நெகிழ்த்தவே செய்தது.
ஆயினும் அவனை வம்பிழுக்கும் பொருட்டு “இப்போ நீங்க என்ன சொல்ல வர்றீங்க?நான் சாப்பிடணுமா?இல்லை வேணாமா?” என அந்த உணவு பாத்திரத்தை தூக்கிக்காட்ட,
சரவணனோ அவளை விசித்திரமாக பார்த்தான்.
அவளோ அப்பாவி போல் கண்ணை விரித்து அவனையே காணவும்,அவனது இதழில் முதல் முறையாய் ஒரு புன்னகை எட்டிப்பார்த்தது.
அதனை அடக்கிக்கொண்டு “சாப்பிட்டால் உங்களுக்கு நல்லது…சாப்பிடலைனா மத்தவங்களுக்கு நல்லது” என்றான் நக்கலாக.
அதில் குழப்புற்றவள் “நான் சாப்பிட்டால் நான் ஹெல்தியா இருப்பேன்…ஓகே…ஆனால் அதென்ன மத்தவங்களுக்கு நல்லது?” என தலை சரித்து வினவ,
அவளை குறுகுறுவென நோக்கிய சரவணன் “நீங்க சாப்பிடலைனா சீக்கிரமா டிக்கெட் வாங்கிடுவீங்கயில்லை…உங்க தொல்லை இல்லைனா மத்தவங்களுக்கு நல்லது” என எவ்வித சலனமுமின்றி சிரியாமல் அவன் அதை கூறியதும்,அவளிற்கு வந்ததே ஆத்திரம்!
அவனது மண்டையில் அந்த பாத்திரங்களை போட்டு உடைக்கும் அளவு கோபம் வந்தது.
“மிஸ்டர் கட்டன் சாயா…” என கோபத்துடன் கத்தி அவள் புசுபுசுவென மூச்சு விட்டு அவனை முறைக்க,
அவனோ அவளை சீண்ட விரும்பாமல் “சாப்பிடுங்க” என மென்மையாக அறிவுறுத்த,
அவனது மென்மையில் உடனே மயங்கி தூண்டிய மனதை அடக்கி “சாப்பிட முடியாது” என தனது குதிரை வாலை ஆட்டி சிலுப்பிக்கொண்டாள்.
அவளின் அந்த செயல் சிறு குழந்தை தந்தையிடம் கோபத்தில் முகத்தை தூக்கி வைத்திருப்பது போலவே இருக்க,அவனையும் மீறி அவன் அதரங்கள் முறுவலித்தது.
அவனது சிரிப்பை கவனித்த யாழினியோ திகைப்பில் விழி விரித்தாள்.
‘நிஜமாவே இவரு என்னை பார்த்து சிரிக்கிறாரா?’ என அவனது இதழ் விரிவை அசையாமல் பார்க்க,அவளின் பார்வை தன் இதழ் மீது படிந்திருப்பதை கண்டவனிற்குள் ஒரு தடுமாற்றம்!
அதனால் சட்டென தன் சட்டையின் கையை மடித்துவிட்டப்படி தொண்டையைச் செருமினான் சரவணன்.
‘சரவணா இதுக்கு மேலே இங்கயிருக்கிறது சரியில்லை’ என தன்னையே எச்சரித்துக்கொண்டவன் “நான் கிளம்பறேன்” என அவளை பார்க்காமலே கூறியப்படி விறுவிறுவென வாசல் வரை சென்றுவிட்டான்.
அவன் வாசலை நெருங்கிய பிறகே தன் சுய உணர்விற்கு வந்திருந்த யாழினி “சரவணன் இருங்க” என வேகமாக பாத்திரத்தை மேசையில் வைத்துவிட்டு அவனருகே ஓடி வந்தாள்.
அந்த ஆறடி உயர வாசலை அடைத்துக்கொண்டு அவன் நிற்க ‘ஹப்பாடி என்ன ஹைட்டா இருக்கான் இந்த மனுஷன்’ என அவனை வியப்பாக பார்த்தப்படி “நீங்க சாப்பிட்டிங்களா?” என அவனை விசாரித்தாள்.
அவனோ இலேசாக கறுக்க ஆரம்பித்த மேகத்தை பார்த்தவாறு “ம்” என்று மட்டும் கூறினான்.
“வாயை திறந்து பதில் சொன்னால் முத்து கொட்டிடும் போலே” என சத்தமாக முணுமுணுத்தவள் “சரி சாப்பிட்டாலும் பரவாயில்லை…எனக்கு தனியா சாப்பிட ஒரு மாதிரி இருக்கு…எனக்கு வந்து கொஞ்சம் கம்பெனி கொடுங்க” என அதிகாரமாய் அவனிடம் ஆணைப்பிறப்பித்தாள்.
அதை உணர்ந்து அவளை நோக்கி திரும்பியவன்,உணர்ச்சியற்ற முகத்துடன் “இல்லை மழை வர மாதிரி இருக்கு…அதுக்குள்ள நான் கடைக்கு போகணும்…” என சரவணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, படபடவென வானத்திலிருந்து நீர் கொட்ட ஆரம்பித்தன.
அந்த சத்தம் கேட்டு “ப்ச்” என அவன் வெளியே திரும்பிப் பார்க்க,
யாழினியோ அவன் நீட்டியிருந்த கைக்கு கீழே குனிந்து இடைவெளியில் வெளியே எட்டிப்பார்த்து “மிஸ்டர் கட்டன் சாயா மழை வரமாதிரி எல்லாம் இல்லை… மழை ஆல்ரெடி வந்திடுச்சு…இனி நீங்க எங்கியும் போக முடியாது…வாங்க வந்து எனக்கு கம்பெனி கொடுங்க” என குறும்பு புன்னகையுடன் கூறியப்படியே அவனை தலையுயர்த்தி ஏறிட,
அதேநேரம் அவனும் அவளை நோக்கி தான் குனிந்திருந்தான்.
அவன் வாசலில் ஒரு கை வைத்து சாய்ந்து நின்றிருக்க,அவனது கைகளுக்குள் புகுந்தப்படி அவள் குனிந்து நின்றிருந்தாள்.
இப்போது கிட்டத்தட்ட அவனது கைக்குள் அவள் அடங்கிய நிலை தான்!
இருவரின் தேகமும் உரசிக்கொள்வதற்கு ஐந்து சென்டி மீட்டர் அகலம் மட்டுமே மிச்சம் இருந்தன.
பார்த்த விழி பார்த்தப்படி இருவரின் விழிகளும் எத்துணை கணங்கள் கலந்து இருந்ததோ தெரியவில்லை.
ஒரு பலமான இடி சத்தம் கேட்டப்பிறகே இருவரும் சுதாரித்தார்கள்.
இருவரும் அவசரமாக ஒரே நேரத்தில் விலக முயற்சிக்க,அவனது முரட்டு கரம் அவளின் பின் மண்டையில் ஓங்கி அடித்திருந்தது.
அவளோ “அம்மாஆஆ” என மண்டையைப் பிடித்து அலற,
அதைக்கண்டு பதறிப்போன சரவணன் “ஹே சாரி…சாரி” என அவளை நெருங்க முற்பட,இப்போது பலமான இடி சத்தம் கேட்டதும் அதில் மிரண்டுப்போன மங்கை “ஐய்யோ” என அலறி கண்மூடி அவனது மஞ்சள் நிற ஜாக்கெட்டை இறுக பற்றிக் கொண்டாள்.
அவளின் செயலை சற்றும் எதிர்பாராத சரவணனோ ஒரு கணம் அதிர்ந்து சிலையென சமைந்து நின்றுவிட்டான்.
அதற்குள் மீண்டுமொருமுறை வீட்டை அதிர வைக்கும் வகையில் பலத்த இடி ஒன்று விழ “அர்ஜுனா…அர்ஜுனா” என முணுமுணுத்த யாழினி வேகமாக சரவணனை நெருங்கி நின்றாள்.
அவளின் மேனி மொத்தமும் அவனது தேகத்தை உரசிக்கொண்டு இருக்க,சரவணனிற்கு அவளின் நெருக்கம் மூச்சடைக்க வைத்தது.
‘என்ன இப்படி பண்ணறாள் இவ?’ என பதற்றத்துடன் அவளை கீழே குனிந்துப் பார்க்க,அவளோ இன்னும் அதிகமாக அவனது தோள் வளைவுகளுக்குள் சரண் புகுந்திருந்தாள்.
அவளின் ஸ்பரிசம் அவனிற்குள் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான உணர்வுகளை எல்லாம் கொடுத்திட ‘காட்’ என அவன் வெளிப்படையாகவே முணுமுணுத்தான்.
இடி சத்தம் முற்றிலும் நின்று மாரி விழும் ஓசை மட்டுமே மண்ணில் கேட்டப்போதும் அவள் அவனிடமிருந்து விலகவே இல்லை.
அவனை ஒட்டிக்கொண்டே அவள் நின்றிருக்க,அவனது தேகத்திலுள்ள ஒவ்வொரு அணுக்களும் உயிர்த்தெழ ஆரம்பித்த வேளையில் “யாழினி” என்றான் கரகரத்தக்குரலில்…
காரிகையோ சில நிமிடங்களுக்கு பிறகே தன்னிலை அடைந்தாள்.
அவளின் நாசி உணர்ந்த வித்தியாசமான நறுமணத்தின் சுவை அவளை அப்படியே கிறங்க வைத்திட ‘என்ன வாசம் இது…இப்படி என்னை மயக்குது?’ என நாசியை சுருக்கி மோப்பம் பிடிக்க ஆரம்பித்தாள்.
அவளின் விழிகள் இப்போது வரை திறந்திருக்கவில்லை.
அதனால் அவள் நின்றிருக்கும் நிலையையும் உணரவில்லை.
அவளின் நாசி புணர்ந்த வாசனை அவளிற்கு ரொம்பவே பிடித்துப்போக,இன்னும் அதிகமாய் அதன் வாசம் வேண்டி அவளின் மனம் துடித்தது.
எனவே,அவன் அணிந்திருந்த மஞ்சள் நிற ஜாக்கெட்டை பிடித்து இழுத்து வாசம் பிடிக்க ஆரம்பித்தவளின் மூச்சுக்காற்று ஆடவன் அணிந்திருந்த ஆடையை மீறி அவனை ஊடுருவுவது போல் இருக்க,அவனின் தேகம் சிலிர்த்தது.
ஏற்கனவே அவளின் நெருக்கம் உள்ளுக்குள் ஏதேதோ செய்துக்கொண்டிருக்க,இப்போது அவளின் இந்த செயல் இன்னும் அதிகமாய் அவனது உணர்வுகளை தூண்டிட செய்திட “யாழினி” என வேகமாக அவளின் தோளை பற்றி அவளை விலக்கி நிறுத்தினான்.
அவனது முரட்டுத்தனமான செயலில் தன்னுணர்வுக்கு வந்த யாழினியோ திருதிருவென விழித்தாள்.
அவளிற்கு அங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
அவனோ ‘நாய் மோப்பம் புடிக்கிற மாதிரி மோப்பம் புடிச்சிட்டு இப்போ ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி முழிக்கிறதை பாரு’ என உள்ளுக்குள் திட்டிவிட்டு அவளின் மீதிருந்த கைகளை அவசரமாக அகற்றிக்கொண்டான்.
யாழினிக்கு அதன்பிறகே சிறிது சிறிதாக அவள் செய்த முட்டாள்தனங்கள் உறைக்க ‘ஐய்யோ என் மானமே போச்சு’ என மானசீகமாக தலையடிலடித்துக்கொண்டு வேறுப்புறம் திரும்பியவளின் முகமோ வெட்கத்தில் சூடேறி சிவந்துப்போனது.
‘கடவுளே நான் என்ன பண்ணி வைச்சிருக்கேன்…அவன் என்னை பத்தி என்ன நினைப்பான்?’ என அவஸ்தையாக தனக்குள்ளே புலம்பியவளால் அவனது முகத்தை ஏறிடவே முடியவில்லை.
அக்கணமே பூமிக்குள் புதைந்துப்போகும் அளவு நாணம் அவளிற்குள்!
அவசரமாக அவள் அணிந்திருந்த இளஞ்சிவப்பு நிற ஜாக்கெட்டின் காலரை தூக்கிப்பற்றி தன் சிவந்த கன்னங்களை மறைத்தவாறு “நான் போய் சாப்பிடறேன்” என அவனது முகத்தை பார்க்காமல் அவசரமாக முணுமுணுத்தப்படி உள்ளே ஓடிச்சென்றுவிட்டாள்.
தன்னை காண வெட்கி அவள் ஓடிச்சென்றதை கண்ட சரவணனின் இதழ்கள் இப்போது தாராளமாக விரிந்துக்கொண்டது.
அவனையும் அறியாமல் அவனது மனம் ‘நாய்க்குட்டி’ என அவளை கொஞ்சியிருந்தது.