எனக்கானவள்(ன்) 2

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் 
வேல்உண்கண் வேய்த்தோள் அவட்கு
(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1113)

தொண்டை மண்டலத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஊர் என்று பெயர் பெற்ற சென்னையில் உள்ள வேளச்சேரி வேகமாக வளர்ந்துவரும் குடியிருப்பு பகுதிகளில் ஒன்று.அப்பகுதியில் உள்ள மிகப்பெரிய ஒலிப்பதிவு செய்யும் அரங்கில் பிரபல திரைப்பட இசைப்பாளர் ஶ்ரீ மானின் இசையில் ஒரு பாடல் பதிவுச் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

அந்த ஒலி பதிவு அரங்கு இரண்டு பகுதிகளாக ஒரு கண்ணாடி தடுப்பைக் கொண்டுப்பிரிக்கப்பட்டிருந்தது.தடுப்பிற்கு ஒருபுறம் இசையமைப்பாளரும் அவர் டியூன் செய்யும் இயந்திரங்களும் அவர்களுடன் படத்தின் கதாநாயகன் கோகுல் சந்திரன் இயக்குனரும் தடுப்பிற்கு மறுபுறம் ஒரு இளம் வயது பாடகி காதில் தலையணி கேட்பொறி அணிந்து,ஒரு சிறிய காகிதத்தை கையிலேந்தி அதிலிருந்த பாடலை வாயில் முணுமுணுத்தப்படி நின்று கொண்டிருந்தாள்.

அவள் பெயர் விபான்சீ கபூர்.பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஷாஷி கபூரின் ஓரே மகள்.இருந்தும் தனது தந்தையின் உதவியின்றி சுயமாக தானே முயன்று சினிமாவில் வளர்ந்த வரும் பாடகர்களில் ஒருவராக திகழ்கிறாள்.விபான்சீ வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் மிகவும் சுதந்திரமாக செயல்படுவதற்கு அனைத்து உரிமைகளும் அவளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

வீட்டில் அவள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை இருப்பினும் பெற்றோர்களை எதிர்த்து எந்த ஒரு காரியத்தையும் செய்ய விரும்பாதவள்.அவர்களின் முகத்தை பிரதிப்பலிப்பை வைத்தே அவர்களின் எண்ணத்தை கணித்து அதற்கு ஏற்றாற்போல் நடந்து கொள்ளும் பிரியமானவள்.

சிறுவயதிலிருந்தே இசையின் மேல் அலாதி பிரியம் கொண்டதின் பலனாக கர்நாடக இசை முதல் இப்போதைய மேற்கத்திய இசை வரை அனைத்தையும் கற்று தேர்ந்திருக்கிறாள்.இன்னும் கற்றுக்கொண்டு இருக்கிறாள்.இசையின் மீது அவளுக்கு இருப்பது பற்று என்பதை விட காதல் என்று கூறுவதே சாலச்சிறந்தது.

சமீபத்தில் வெளியான படங்களில் அவள் பாடிய பாடல்கள் அனைத்திற்கும் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.கடந்த ஆண்டு இந்தியாவின் சிறந்த பாடலை பாடியவருக்கான தேசிய விருதை இவள் தட்டி சென்றாள்.

அவளின் இனிமையான குரலைக் கேட்டு மயங்கிய பல ரசிகர்கள் அவளுக்கு ‘கவிக்குயில்’ என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளனர்.

இப்போதும் ஒரு பிரபல நடிகரான கோகுல் சந்தரனின் படத்தில் ஒரு தேவகான பாடலை பாடுவதற்காக காத்திருந்தாள்.

இசையமைப்பாளர் அங்கிருந்தப்படியே கண்ணாடி தடுப்பின் வழியே கையசைத்து அங்கிருந்த ஒலிவாங்கியில் “விபான்சீ ரெடியா…??” என கேட்க “ரெடி சார்” என்று கட்டை விரலை நிமிர்த்திக்காட்டினாள்.

“ஒன்…டூ…த்ரீ ரெடி ஸ்டார்ட்” என்றவுடன் இசைகள் ஒலிக்க ஆரம்பிக்க விபான்சீ தனது செவ்விதழை அசைத்து பாட ஆரம்பித்தாள்.

“ஓஓஓஓஓஓஓஓஓ…….
நிலவே திரை விலகு
உந்தன் அழகிய முகம் காட்டிட
நிலவே திரை விலகு
உந்தன் அழகிய முகம் காட்டிடஆஆஆஆ…

முகில் என்னும் மாயவன்
உன் துயில் கலையாமல் 
புகையாய் உனை மறைக்க
நீ தடை விலகி வா
உந்தன் அழகிய முகம் காட்டிட
ஓஓஓஓஓஓஓ…..” என்று கண்மூடி ரசித்து அதன் பாடல் வரிகளை உள்வாங்கி பாடிக்கொண்டிருக்க அவள் இனிமையான குரல்கள் செய்த மாயஜாலத்தில் அங்கிருந்த அனைவரும் தங்களை மறந்து மூழ்கிக்கொண்டிருந்தார்கள்.

அனைவரும் தங்களை மறந்து அவளின் இனிமையான குரலில் மயங்கி ரசித்துக்கொண்டிருக்க நடிகர் கோகுல் சந்திரன் மட்டும் பாடலை விடுத்து அதை பாடிக்கொண்டிருந்தவளை ரசித்துக்கொண்டிருந்தான்.

விபான்சீ ஐந்தரை அடி உயரம் கோதுமை நிறம்,முதுகு வரை படர்ந்திருந்த அடர்த்தியான நீளக்கூந்தல்,வில்லென வளைந்த இரண்டு புருவங்களுக்கு மத்தியில் கருஞ்சிவப்பு நிற பொட்டு,கருப்பு மை தீட்டிய வேல் விழி கண்கள்,கூரான நாசி,பவள நிற சிவந்த இதழ்கள்,பார்ப்பவர்களை எளிதில் கவரும் கொழுக்மொழுக் குண்டு கன்னங்கள்,அதற்கு திருஷ்டியாக சிரிக்கும்போது விழும் கன்னக் குழி இவையனைத்தும் அவளை அழகு பதுமையாக காட்டியது. ஊளைச் சதைகள் இருந்தாலும் சற்று கவர்ச்சியான உடல்வாகு.

விபான்சீ எப்போதும் எளிமையை மட்டுமே விரும்புபவள் என்பதால் காதில் ஒரு சிறிய அளவு ஜிமிக்கி கம்மல் கழுத்தில் ஒற்றை தங்க சங்கிலி அணிந்து கையில் இரண்டு தங்க நிற வளைவிகள் அத்தோடு ஒரு சாதாரண பருத்தி சுரிதாரை அணிந்திருந்திருந்தாள்.வேறு எந்த வித ஆடம்பரமும் ஒப்பனையுமின்றி சாதாரணமாக இருந்தாள்.

‘கிளாசிக் பியூட்டி’ என்று கூறுவார்களே அதற்கு மிகச்சிறந்த உதாரணம் விபான்சீ.

அவளின் நடை உடை பாவனையில் எளிமை இருந்தாலும் அவளின் மைத்தீட்டிய வேல் விழி கண்களும்,பேசும் போதும் சிரிக்கும் போதும் விழும் கன்னக்குழியும் அவளை பேரழகியாகவே காட்டியது.

கோகுலும் கைக்கட்டி நின்றப்படி அவளின் கண்களையும் பாடும் போதும் விழும் கன்னக்குழியையும் மெய் மறந்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

விபான்சீ முழு பாடலையும் பாடி முடித்து கண்களைத் திறக்க அதுவரை அவளின் குரலில் மயங்கியிருந்தவர்கள் அனைவரின் முகத்திலும் ஒரு திருப்திக்கரமான புன்னகைத் தோன்றியதைக் கண்டு அகமகிழ்ந்தாள்.

விபான்சீ கண்ணாடி தடுப்பிலிருந்து கன்னக்குழி சிரிப்போடு வெளியே வர அங்கிருந்த அனைவரும் அவளுக்கு கைகொடுத்து வாழ்த்தினார்கள்.

இசையமைப்பாளர் ஶ்ரீ மான் விபான்சீயிடம் கைக்கொடுத்து “நீ ரொம்ப அருமையா பாடனேம்மா…எவ்வளவு அருமையான குரல் கடவுள் உனக்கு கொடுத்திருக்காரு தெரியுமா…கண்டிப்பாக உன்னோட குரலில் ஒரு மேஜிக் இருக்கு…நான் நினைச்சதை விட நீ 200 சதவீதம் அதிகமாகவே உன்னோட உழைப்பைக் கொடுத்திருக்கே…நிச்சயம் இந்த பாட்டுக்கு உனக்கு விருது கிடைக்கும்…ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் பாடறதை மட்டுமே விட்டுடதே…நீ வருங்காலத்தில் மிகப்பெரிய பாடகியாக வருவாய்” என்று அவளின் தலையில் கை வைத்து ஆசிர்வாதிப்பது போல் கூற விபான்சீ அவரின் காலைத் தொட்டு பணிந்து வணங்கினாள்.

இசையமைப்பாளர் ஶ்ரீ மானிடம் அவ்வளவு எளிதாக யாராலும் பாராட்டைப் பெற்று விட முடியாது என்பதை அறிந்த அவரின் உதவியாளர்கள் ‘இந்த பெண் மிகவும் அதிர்ஷ்டசாலி’ என்றப்படி அவளை அதிசயத்துடன் பார்த்திருந்தார்கள்.

அவரை வணங்கி எழுந்த விபான்சீ கன்னக்குழிய சிரித்து “உங்ககிட்ட இருந்து இந்த வாழ்த்தை பெற்றதற்கு நான் எந்த ஜென்மத்திலோ புண்ணியம் பண்ணியிருக்கறேனு நினைக்கிறேன் சார்…அதற்கு ரொம்ப நன்றி” என்று இரு கரம் கூவித்து நன்றி செலுத்தியவள் தொடர்ந்து,

“இசை என்னோட உயிர் மூச்சுனு எல்லாரும் சொல்லுவாங்க…ஆனால் நான் அப்படியெல்லாம் சொல்லமாட்டேன்…சின்ன வயதிலிருந்தே இப்போது வரை என் கூடவே பிறந்து…நான் வளரும் போது என் கூடவே ஒட்டி பிறந்த இரட்டையை போன்று வளர்ந்து இருக்கிற என்னோட சகோதரியை நான் எப்படி சார் பாதியில் வெட்டிவிட முடியும்…அதனால் அதை எக்காரணம் கொண்டும் ஏன் எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிடமாட்டேன்…அதே மாதிரி இசையும் என்னை கை விடாது சார்” அவளது குரல் ஒரு அழுத்தத்துடனும் அதே சமயம் ஒரு உறுதியுடனும் ஒலித்தது.

அவள் பேசியதைக் கண்டு இசையமைப்பாளர் முதற்கொண்டு அங்கு கூடியிருந்த அனைவரும் அவளின் பேச்சில் அசந்து நின்றிருந்தார்கள். இருப்பத்தியாறு வயதில் ஒரு பெண்ணிடமிருந்து இத்தகைய உறுதியையும் தெளிவையும் கண்டவர்களுக்கு ‘இவள் மிகவும் அற்புதமான பெண்…’ என்று தோன்ற இப்பெண் எத்தனை பக்குவத்துடன் வளர்ந்திருந்திருக்கிறாள் என்று புல்லரித்துப்போயனார்கள்.

கோகுல் விபுவை நெருங்க விருப்பிமில்லாமல் தொலைவில் நின்றிருந்தப்படியே அவள் பேசுவதை விரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தான்.ஒவ்வொரு முறையும் அவள் தலையாட்டி பேசும் போதும் காதோடு சேர்ந்து ஊஞ்சலாடும் அவளின் குட்டி ஜிமிக்கி,மெத்தென்றிருக்கும் கன்னத்தில் விழும் குழி,நெற்றி முன் சரிந்த தனது கார்மேக கூந்தலை ஒரு கையால் மென்மையாக காதோரம் ஒதுக்கிய அவளின் கைகள்,ஒவ்வொரு முறை பேசும் போதும் இதழ்களோடு சேர்த்து பேசும் இரண்டு வேல் விழிகள் என ஒவ்வொன்றையும் நிறுத்தி நிதானமாக பொறுமையாக ரசித்துக்கொண்டிருந்தான்.

அதுவும் காதோரம் ஊஞ்சலாடும் அவளின் குட்டி ஜிமிக்கியில் அவளின் அனுமதியின்றி விரும்பியே அதில் சிறைப்பட்டான் கோகுல்.அதுவரை அவளை மட்டுமே ரசித்துக்கொண்டிருந்தவனுக்கு அவளின் பேச்சு ஒரு பிரமிப்பைத் தோற்றுவிக்க அவளின் இதயத்தில் விரும்பி சிறைப்படப்போகும் நாளுக்காக இப்போதே காத்திருக்க ஆரம்பித்துவிட்டான்.

பார்த்த முதல் பார்வையிலே ஒருத்தியை இவ்வளவு தூரம் நேசிக்கமுடியும் என்று முன்பு எவரேனும் கூறியிருந்தால் ‘பைத்தியம்’ என்றிருப்பான். ஆனால் பார்த்தவுடன் காதல் வருவது மெய் என்பதை இன்று அறிந்துக்கொண்டிருந்தான்.அத்தோடு விபான்சீ அவனுடன் நடித்த நடிகைகளை ஒப்பிடும் போது சற்று அழகில் குறைவு என்ற போதிலும் அவனுக்கு அவளை தான் மிகவும் பிடித்திருந்தது.அவ்வளவு ஏன் அவனின் பால் வெள்ளை நிறத்திற்கு அவள் சற்று குறைவு தான்.அப்போதும் அவளை தான் பிடித்திருந்தது.

அவனுக்கே அவனின் இத்தகைய காதல் சற்று விசித்திரமாக தான் இருந்தது.இருந்தும் ‘இவள் தான் தன் மனைவி’ என்று அவன் எடுத்த முடிவில் ஒரு அடி கூட பின்வாங்க விரும்பவில்லை.

மனைவி என்று முடிவெடுத்தவுடன் அதைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க ஆரம்பித்துவிட்டான் கோகுல்.ஆனால் அவனின் திட்டமும் அவனின் காதலும் ஒரு நாளும் நிறைவேறப்போவதில்லை என்பதை அவன் அக்கணத்தில் அறியவில்லை.

******************************
நட்சத்திர விடுதியிலிருந்து ராமனால் கடத்தப்பட்ட அப்பத்திரிக்கை பெண்ணை,ராம் மித்ரனின் முன்னாள் கொண்டு வந்து நிறுத்தியிருந்தான்.

தனக்கு எதிரே அமர வைக்கப்பட்டு இருந்தவளை மித்ரன் தனது கூரிய விழிகளால் துளைத்துக் கொண்டு இருக்க ராம் தனது தமையனுக்கு அருகில் அமர்ந்து அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

இருவரின் பார்வையும் ஒரே நேரத்தில் தன்னை தாக்குவதை தாங்கிக்கொள்ள முடியாத அப்பெண் நெஞ்சு நிறைந்த பயத்துடன் முகம் வெளிறி அமர்ந்திருந்தாள்.

மித்ரனின் கூரிய விழிகள் தான் அவளை பெரிதும் கலவரப்படுத்தியது. அதனால் பதட்டத்துடன் கைகளை பிசைந்து கொண்டிருக்க “உன்னை இந்த மாதிரி எல்லாம் பேச சொல்லி யாரு சொல்லி கொடுத்தா… ஹூம்…?” எடுத்தவுடன் இந்த அதிரடியான கேள்வியில் அவளின் தேகத்தில் ஒரு நடுக்கம் ஓடி மறைந்தது.

“சொல்லு உன்னை யார் இந்த மாதிரிலாம் பேச சொன்னது” என்று கர்ஜிக்க,

அப்பெண் தேகம் தூக்கி வரப்போட்டது.ஆனால் அப்போதும் கவலை அப்பிய முகத்துடன் படப்படப்புடன் கைகளை பிசைந்து கொண்டிருக்க ‘இப்போதே வந்திடுவேன்’ என்பது போல் கண்களில் கண்ணீர் துருத்திக்கொண்டிருந்தது.

அதைக்கண்டு ராம் “சொல்லுடி…எதுக்கு இப்படி அசமஞ்சம் மாதிரி உட்கார்ந்து இருக்கே…அண்ணனை எதிர்த்து கேள்வி கேட்கிற அளவு…உனக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது…??” என்று ஆவேசத்துடன் கேட்க விட்டால் அடித்துவிடுவேன் என்பது போல் இருந்த அவனின் தோற்றத்தைக் கண்ட மித்ரன் தனது தம்பியை கண்களால் எரித்தான்.

அப்பார்வை ‘உன்னை யார் பேச சொன்னது’ என்று சொல்லாமல் சொல்ல உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு அமைதி காத்தான் ராம்.

இப்போதும் அவளிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராததோடு அவ்வளவு ஏன் தலை நிமிர்த்தி ஏனென்று கூட இருவரையும் பார்க்கவில்லை. அதில் அண்ணன் தம்பி இருவருக்குமே சுறுசுறுவென கோபம் பொங்கியது.

அதுவும் ராம் மனதில் ‘திமிரு…திமிரு…உடம்பு முழுக்க திமிரு’ என்று மனதிற்குள்ளே பொறுமிக் கொண்டிருந்தான்.

மித்ரனின் நெற்றி யோசனையில் சுருங்க “நான் கேட்கிற எந்த கேள்விக்கும் பதில் சொல்லக்கூடாதுனு நினைச்சிருக்கியா…??இல்லை இவன் கேள்விக்கெல்லாம் நாம் ஏன் பதில் சொல்லணும்னு நினைச்சிட்டியா…?” என்று ஒரு மாதிரி குரலில் கேட்க,

அதில் வெடுக்கென்று தலை நிமிர்த்தியவளின் கண்களிலிருந்து கண்ணீர் கன்னங்களின் வழியே உருண்டோடு கீழே விழுந்து சிதறியது.

‘நான் அப்படி நினைப்பேனா’ என்பது போல் அடிப்பட்ட பார்வைப் பார்க்க அதைக் கண்டு ராம் வெறுப்புடன் “நடிக்க ஆரம்பிச்சுட்டா சாமி… குடும்பமே சரியான நடிப்பு திலகம்…உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ணறதை பத்தி இந்த குடும்பத்துக்கு சொல்லியாத் தரணும்” என்று சத்தமாகவே முணுமுணுத்தான்.

அவனின் முணுமுணுப்பு அந்த அறையில் இருந்த நிசப்தத்தின் பலனாக அங்கிருந்த இருவரின் காதலும் தெள்ள தெளிவாகவே விழுந்தது. அதில் மனதளவில் பெரிதும் அடிவாங்கிய அவளின் முகம் மேலும் வேதனையில் கசங்கி சுருங்கியது.

அப்பெண்ணின் முகத்தை கண்ட மித்ரனுக்கு அவளின் வேதனைத் தொய்ந்த முகமும் கண்ணீரும் ஏனோ அவனின் இதயத்தை வலிக்கச் செய்தது.

அதனால் அதற்கு காரணமான தனது தம்பியின் மீது கோபம் முழுவதும் திரும்ப கண்கள் சிவக்க “ராம் முதல்ல இங்க இருந்து வெளியே போ…” என்று குரலுயர்த்தி கூறி வெளிப்பக்கம் கைக்காட்ட,அதில் முகம் சுருங்க ராம் தலையை தொங்கப் போட்டவாறு அறையிலிருந்து வெளியேறப்போனான்.

அவன் வெளியேறியதற்கு காரணம் தாம் தான் என்ற குற்ற உணர்ச்சியில் ராமிடம் மன்னிப்பு யாசிப்பது போல் பார்க்க அவன் அதை அலட்சியம் செய்து அங்கிருந்து வெளியேறினான்.அவன் அந்த அறையில் இருந்து வெளியேறும் வரையில் கண்கள் கசிய காதலுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்த அப்பெண்ணின் கவனத்தை “நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லவில்லை” என்ற மித்ரனின் குரல் பாய்ந்து வந்து கலைத்தது.

அதில் சடாரென்று திரும்பியவள் அவனின் கூர் பார்வையில்,மீண்டும் முகம் சுருங்க தலைகுனிந்தாள் சீதா.

சீதா இருபத்தி இரண்டு வயது பெண்.சீதா பார்ப்பதற்கு மிகவும் லட்சணமாக இருந்ததோடு நல்ல குணமுள்ளவள்.மித்ரனின் தாய் மாமன் மகள் தான் சீதா.சிறு வயதிலே தன் தந்தையை இழந்து அவளின் குடும்பம் மித்ரனின் வீட்டில் குடியேறியது.ஆனால் சீதாவின் தாய் மற்றும் தமையனின் பணத்தாசையினாலும் மித்ரனின் சொத்தை அடைய அவர்கள் செய்த நயவஞ்சகத்தாலும் மித்ரனின் ஒரே தங்கை அனாமிகா தற்கொலை செய்து இறந்துவிட்டாள்.அதை அறிந்த மித்ரன் அவர்களுக்கு தக்க தண்டனையாக அவர்களிடமிருந்து சொகுசு வாழ்க்கையைப் பிடுங்கி வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டான்.ஆனால் சீதா ‘சேற்றில் விளைந்த செந்தாமரை’.

அவளின் குடும்பத்தினர் செய்த பாவத்தினால் ராம் சீதாவின் மீது வைத்திருந்த தனது காதலை அடியோடு வெறுத்தான்,அவளையும் தான்…!!

சீதாவின் இத்தகைய நல்ல குணத்திற்கு காரணம்,சிறு குழந்தையாக இருக்கும் போதே அவளை தனது தங்கையோடு சேர்த்து அவளுக்கும் பாசத்தை ஊட்டி வளர்த்திருந்தான் மித்ரன்.

அதனால் சீதா எப்போதும் மித்ரனின் பேச்சைத் தட்டாமல் கேட்டதால் நல்ல ஒழுக்கத்தோடு வளர்ந்திருந்தாள்.ஆனால் இப்போது அவளின் இத்தகைய நடத்தையில் மித்ரன் பெரிதும் கோபம் கொண்டிருந்தான்.

அந்த கோபத்தோடு “சீதா எப்போதிலிருந்து என்னுடைய கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியாது அளவு நீ பெரிய மனுஷியானாய்… பரவாயில்லை பதில் சொல்ல முடியலைன்னா நீங்க இங்க இருந்து வெளியே போலாம் இனிமே உன் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன்…உன் இஷ்டம் போல நீ வாழு…என்ன வேணா பண்ணு” ஒட்டாத தன்மையுடன் பன்மையில் அவளிடம் கூறிவிட்டு எழுந்த வேளையில் சீதா பதறி  “அச்சோ அத்தான்…என்னை மன்னிச்சிடுங்க… நான் பேசாம இருக்கறதுலயே என் மேல தான் எல்லா தப்பும் இருக்குன்னு உங்களுக்கு தெரியலையா அத்தான்…??அதனால் தான் குற்ற உணர்ச்சியில் என்ன பேசுறதுன்னு தெரியாம அமைதியா இருந்தேன்…என்ன மன்னிச்சிடுங்க அத்தான்…” என்று கண்களில் கண்ணீர் வழிய தேம்பியபடி கூறியவளின் கண்ணீர் அவனின் மனதை பிசைய “சரி விடு சீதா…முதல்ல அழுகிறதை நிறுத்து… பலவீனமானவர்களின் ஆயுதம் தான் கண்ணீர்…அது எனக்கு எப்பவும் பிடிக்காதுனு உனக்கு நல்லாவே தெரியும்…நீ இன்னமும் என் மேல் மதிப்பும் மரியாதையும் வைச்சிருக்கிறேனு நான் நம்பறேன்…அப்படி இருந்தால் முதலில் உன்னோட கண்ணீரைத் துடை” சற்று அழுத்தத்துடன் கூறினாலும் அதில் அக்கறை மிகுந்து வந்தது என்பது தான் உண்மை.

அவன் கூறியது சரியாக வேலை செய்ய சீதா தனது இரண்டு கண்களையும் அழுந்த துடைத்துக் கொண்டு புன்னகைக்க முயன்று அதில் வெற்றியும் கண்டவள் அவன் நின்றுக்கொண்டிருக்க தான் மட்டுமாக அமர்ந்திருப்பது ஒரு வித சங்கடத்தை ஏற்படுத்த “அத்தான் நீங்க முதல்ல உட்காருங்க” என்று மெல்லிய குரலில் கூற இப்போது மித்ரன் அவளின் எண்ணத்தைப் புரிந்துக்கொண்டு வசீகரப் புன்னகையைச் சிந்தியவாறு அமர்ந்து “சரி இப்போ சொல்லு…என்னை பத்தி உனக்கு நல்லாவே தெரியும்…அப்படி இருந்தும் நீ அந்த மாதிரி ஒரு கேள்வி கேட்டால் எனக்கு கோபம் வருமா வராதா…??அதுவுமில்லாமல் ராம்கிட்ட உன்னை பத்தி பேசி இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருக்கிற இந்த நேரத்தில் நீ இந்த மாதிரி பண்ணா அவன் எப்படி உன்னை ஏத்துப்பான்…உன் மேலே இன்னும் கோபம் அதிகமாக தானே செய்யும்…ஹூம் சொல்லு” கடிந்தப்படிக் கேட்க மறுபடியும் அவளின் முகம் வேதனையில் கசங்கத் துவங்க “ச்சூ…இப்போ தானே சொன்னேன்…எல்லாத்தையும் தைரியமா பேஸ் பண்ண கத்துக்கணும்னு…முதல்ல நிமிர்ந்து உட்காரு” என்று அதட்ட அதில் பயந்து வேகமாக நிமிர்ந்து அமர்ந்தாள்.

அதில் அவனின் இதழில் ஒரு புன்னகை கோடாக வந்து மறைந்தது.

“இப்போ சொல்லு உனக்கு என்ன பிரச்சனை…??”

“அது…அது வந்து” என்று தயங்கிக்கொண்டிருக்க “எதுவா இருந்தாலும் பட்டுனு பதில் சொல்லு சீதா…எனக்கு நிறைய வேலை இருக்கு” என்று கடிந்தப்படி தனது கடிகாரத்தைப் பார்க்க அவனின் கடமையை உணர்ந்த சீதா “அத்தான் உங்களுக்கே தெரியும் எங்களோட குடும்ப நிலைமை…நானும் அம்மாவும் இந்த வீட்டிலிருந்து போனப் பிறகு எனக்கு வேலைக் கிடைக்க ரொம்ப கஷ்டமா இருந்தது…யாருமே எக்ஸ்பீரியன்ஸ் இல்லைனா வேலைக்கொடுக்கமாட்டேனு சொல்லிட்டாங்க…அதனால் இரண்டு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்குனு பொய் சொல்லி போலியான சான்றிதழ் தயார் பண்ணி தான் இந்த ரிப்போர்ட்டர் வேலையில் சேர்ந்தேன்…” என்றவுடன் மித்ரன் அவளை கண்களால் எரிக்க அதில் பயந்து “சாரி அத்தான்…இது பிராடு வேலை தான்…ஆனால் வயித்துக்கு சோறு வேணுமே…சாப்பாட்டுக்கு முன்னால் வேற எதுவும் எனக்கு பெருசா தெரியலை…அதனால் வேற வழியில்லாமல் தான் இந்த வேலையில் சேருவதற்கு பொய் சொன்னேன் அதுமட்டுமில்லாமல் என்னோட பெர்பார்மன்ஸ் சரியா இருந்தால் தான் என் வேலையை நிரந்தரமாக்குவேனு எடிட்டர் சொல்லிட்டாரு… அதனால் அவர் என்ன மாதிரி பேச சொல்லறாரோ அது மாதிரி பேசினால் தான் எனக்கு வேலை நிரந்தரமாகும்…அவர் சொல்லி தான் நான் இந்த மாதிரி பண்ணேன் அத்தான்…என்னை மன்னிச்சிடுங்க அத்தான்” இரு கரம் கூப்பி உணர்ந்து மன்னிப்பு வேண்ட அதில் மித்ரன் சற்று இறங்கி வந்தான்.

“சரி இனிமே போனதெல்லாம் விடு…இனிமே நீ எங்கயும் வேலைக்கு போக வேண்டாம்…வீட்டிலே இரு” அலங்காமல் குலுங்காமல் ஒரு குண்டைத் தூக்கிப்போட்டுவிட்டு “இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு” அமர்த்தலாக வினவ ‘என்ன’ என்பது போல் அதிர்ந்து பார்த்தாள் சீதா.

மித்ரன் நிதானமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து தனது நெற்றியின் மீது சரிந்து விழுந்த கூந்தலைக் கோதி சிகரெட்டை எடுத்து வாயில் வைத்து அதை தீ மூட்டி கொண்டு பற்ற வைத்தவாறு தனது கண்களை மட்டும் உயர்த்தி கூரிய விழிகளால் அவளின் முகத்தை ஆராய்ந்தவாறு “நீ ராமை கல்யாணம் பண்ணிக்கப்போறியா இல்லையா…??” என சட்டென்று வினவ “அஅஅஅத்தான்” என்று மேலும் அதிர்ந்து விழித்தாள் சீதா.

“எனக்கு பதில் வேணும் சீதா” அழுத்தமாக புகையை உள்ளிழுத்தப்படி வினவ சீதா மனம் முழுவதும் ராமே நிறைந்திருந்தாலும் அதை மறைத்து ‘இல்லை’ எனும் விதமாக தலையாட்டினாள்.

மித்ரன் புகைப்பிடித்தால் ஏதோ ஒரு வில்லங்கம் வரும் என்பதை அறிந்தவளுக்கு உள்ளுக்குள் குளிர் பரவியது.மானசீகமாக நெஞ்சை அழுத்திப்பிடித்துக் கொண்டு வில்லங்கத்திற்காக பதைப்புடன் காத்திருந்தாள்.

மித்ரன் அவளை கண்டுக்கொள்ளாமல் இன்டர்காமின் வழியே ராமை தொடர்புக்கொண்டு “ராம் சீக்கிரம் இங்க வா” என்று அழைக்க அடுத்த இரண்டு நிமிடத்தில் தனது தமையனின் முன் பிரசன்னமானான் அந்த நவநாகரீக இலட்சுமணன்.

உள்ளே வந்த ராம் சீதாவை அசட்டை செய்து தனது தமையனைப் பார்க்க அவன் ஒரு கையில் சிகரெட்டைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் தலையைக் கோதியவாறு “ராம் இந்த ஊரில் ஒரு பெஸ்ட் கல்யாண மண்டபத்தை வர இருபதாம் தேதி பேசி வை…அப்புறம் நம்முடைய சொந்தக்காரங்க, ப்ரெண்ட்ஸ்,அப்புறம் நம்ப கட்சியில் ரொம்ப முக்கியமானவங்க இவங்க பேரெல்லாம் ஒரு லிஸ்ட் போட்டு கொண்டு வா…அப்புறம் ஒரு முக்கியமான விசயம் ஒருத்தரைக் கூட மிஸ் பண்ணக்கூடாது… அதனால் கவனமாக பார்த்து லிஸ்ட் தயார் பண்ணி வை” என்று கட்டளையிட ராம் மனதில் குழப்பம் இருப்பினும் தமையன் கூறியதை தலையாட்டிக் கேட்டுக்கொண்டான்.

இங்கே சீதா ஒருபுறம் ‘ஐய்யோ வில்லங்கம் வேலைச்செய்ய ஆரம்பிச்சிருச்சு…ஆனால் என்னனு புரியலையே’ என்று பதட்டத்துடன் குழம்பிப்போய் இருக்க மித்ரன் அவன் போக்கிற்கு ஒரு திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு திட்டமிடலை பற்றிய விளக்கத்தை ராமிடம் வலியுறுத்திக்கொண்டிருந்தான்.

அவனும் தலையாட்டி பொம்மையென அனைத்தையும் கேட்டு மனதில் குறித்துக்கொண்டிருந்தான்.ஆனால் இருவரின் மனதிலும் ‘யாருக்கு திருமணம்’ என்ற கேள்வி ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத சீதா “அ…அத்தான் யாருக்கு திருமணம்…??” தவிப்புடன் வாய்விட்டே கேட்டுவிட்டாள்.

அதுவரை ராமிடம் பேசிக்கொண்டிருந்த மித்ரனின் பார்வை சீதாவின் மீது விழ “உனக்கு தான் கல்யாணம்…??” சாதாரணமாக அடுத்த வெடிக்குண்டை தூக்கி வீசிவிட்டு இருவரின் பேரதிர்ச்சியைக் கண்டுக்கொள்ளாமல் மித்ரன் ராமிடம் “எல்லாம் பக்காவா பண்ணிடு ராம்” என்று கூறிவிட்டு அத்துடன் தன் வேலை முடிந்தது என்பது போல் அவனின் கைப்பேசியை எடுத்து அதில் யாருக்கோ தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தான்.

சீதா மனதில் ‘ஐய்யோ வில்லங்கம் வந்திடுச்சே’ என்று இடி விழுந்தாற் போன்று அமர்ந்திருந்தாள்.

மித்ரன் கைப்பேசியில் பேசுவதற்கு முன் கவனமாக தனது சிகரெட்டை எடுத்து சாம்பற் படிக்கத்தினுள் வைத்து நசுக்கிவிட்டு அவனது அக்மார்க் புன்னகையுடன் “ஹலோ அம்மு…நான் அண்ணன் பேசறேன்டா…”

“……”

“நான் நல்லாயிருக்கேன்டா…அப்புறம் ஒரு முக்கியமான விசயம்…நம்ப சீதாக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்”

“……”

“ஹாஹாஹா மாப்பிள்ளை ராமா…இல்லைடா வேற தான்…இரண்டு பேருக்கும் மனசு ஒத்துப்போகலை…அதனால் எதுக்கு தேவையில்லாமல் இரண்டு பேரையும் கஷ்டப்படுத்திக்கிட்டு அதான் சீதாவுக்கு வேற ஒருத்தரோடு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருக்கேன்…அதுக்கு அப்புறம் ராமுக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சிடலாம்மா”

“…….”

“மாப்பிள்ளையா ரொம்ப நல்ல பையன்…எனக்கு அவனைப் பத்தி நல்லாவே தெரியும்…நீ எதுவும் பயப்படாதம்மா…சரிம்மா…நான் பிறகு பேசறேன்” தனது தங்கை தேன்மொழியிடம் பேசிவிட்டு வைத்த மித்ரன் கைப்பேசியில் வேறு எதையோ பார்த்துக்கொண்டிருக்க,இப்போது ராமின் பார்வையும் சீதாவின் பார்வையும் ஒன்றை ஒன்று மனதில் வலியுடனும் கண்களில் ஒரு தேடுதலுடனும் கவ்விக்கொண்டது.

இருவருக்கும் அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை.அதுவும் மித்ரனின் வேகத்தையும் அதிரடி முடிவையும் கண்ட இருவரும் விழிப்பிதுங்கியிருந்தார்கள்.

இருவரின் விழிகளும் வலிகள் நிரம்பிய காதலுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தது.

இத்தனை நாட்களாக அவளை வெறுத்துக்கொண்டிருந்ததாக நினைத்த ராம் அவள் வேறு ஒருவனுக்கு சொந்தமாக போகப்போவதை அறிந்த நொடி அவனின் ஆழ்மனதில் புதைத்து வைக்கப்பட்டிருந்த அவனின் காதல் உடைப்பெடுத்துக்கொண்ட வெளியேற அது அவனின் கண்களின் வழியே சீதாவின் பார்வையின் வழியே ஊடுருவி அவளின் இதயத்தைச் சென்றடைந்தது.

ராமிற்கு தன் உயிரே தன்னை விட்டு பிரிந்து செல்வது போல் இருக்க ‘ஐய்யோ என்னால் உன்னை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாதுடி… நீ எனக்கு வேணும்…வேணும்டிஈஈஈஈஈ’ என்று கத்தி கதறியழ வேண்டும் போல் இருந்தது.ஆனால் தனது தமையனின் முன்னால் எதுவும் செய்யமுடியாமல் மனதில் ஊமையாக அழுதுக்கொண்டிருந்தான்.

‘அவளை எனக்கு பிடிக்கவில்லை’ என்று கூறிவிட்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு தனது தமையனிடம் அவளின்றி எனக்கு வாழ்க்கையில்லை என்று எப்படி கூறுவது என்று புரியாமல் கலங்கியிருந்தான்.

சீதா அவனையும் விட பரிதாபமான நிலையில் இருந்தாள்.அவனின் மீது கடலளவு நேசத்தைச் சுமந்துக்கொண்டு அவனை விட்டு பிரியவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் நரக வேதனையில் இருந்தாள்.இத்தனை நாள் அவனின் பாராமுகம் அவளை கொல்லாமல் கொன்றுக்கொண்டிருக்க இந்த திருமணச் செய்தி அவளை உயிரற்ற வெறும் சடலமாக மாற்றிவிட்டது.

இன்றைய உரையாடலுக்கு பிறகு மித்ரன் அதிரடியாக ஒரு முடிவெடுப்பான் என்று சீதாவுக்கு தெரியும்.ஆனால் இத்தனை விரைவில் இத்தகைய அதிரடியை மேற்கொள்வான் என்று அவள் சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை.இத்திருமணம் வேண்டாம் என்று ஒரு வார்த்தை கூறினால் மித்ரன் ஏற்றுக்கொள்வான் என்று தெரியும்.ஆனால் ஏன் வேண்டாம் என்று கேட்டால் அவளிடம் அதற்கான பதில் இல்லை.

ஏனெனில் தன் மனம் முழுவதுமாக ராம் மட்டுமே நிறைந்திருக்கிறான். அவனை நினைத்துக்கொண்டே கடைசி வரை வாழ்ந்துவிடுவேன் என்று கூறினால் மித்ரன் ராமை கட்டாயப்படுத்தி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துவிடுவான் என்பதை அறிந்தவளால் அவனை எதிர்த்து ஒரு வார்த்தை கூறிமுடியவில்லை.

விருப்பமில்லாத வாழ்க்கையில் இணைவதை விட நரகம் வேறு எதுவுமில்லை என்பதை அவள் நன்கு அறிந்து வைத்திருந்தாள்.

இப்போதும் அவனின் கண்களில் காதல் தெரிகிறது தான்.ஆனால் அதை வைத்து அவனிடம் பேசினால் ‘இல்லவே இல்லை’ என்று சாதித்துவிடுவான் என்று தனது மனங்கவர்ந்தவனின் அழுத்தத்தையும் பிடிவாதத்தையும் பற்றி அறிந்ததால் வேதனையுடன் மனதிற்குள்ளே அழுதுக்கொண்டிருந்தாள்.

‘என்னால் தான் பேசமுடியாது…நீ அண்ணாக்கிட்ட ஒரு வார்த்தை வேணாம்னு சொல்லுடி’ என அவனும்,

‘சின்னத்தான் நீங்க ஒரு வார்த்தை உன்னை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாதுடி…நீ எனக்கு வேணும்னு சொல்லுங்க… அடுத்த நொடி எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு உங்க பின்னாடி வந்தடுறேன்’ என அவளும் மாற்றி மாற்றி மனதிற்குள் அரற்றிக்கொண்டிருந்தார்கள்.மொத்ததில் இருவரும் மனது நிறைய காதலைச் சுமந்துக்கொண்டு தேவையில்லாத காரணங்களுக்காக மனதில் ஊமையாக அழுதுக் கொண்டே வெளியில் மௌனமாக இருந்தார்கள்.

இருவரின் மௌன நாடகத்தை கண்டும் காணாமல் இருந்த மித்ரனின் இதழோரம் ஒரு மர்மப் புன்னகை பூத்தது.

அவன் மனதில் ‘இருவருக்கும் வலிக்க வலிக்க அறுவை சிகிச்சை செய்தால் தான் அனைத்தும் சீராகும்’ என்று யோசித்து ஒரு பெரிய திட்டத்தை வகுத்திருந்தான் மித்ரன்.

அவனின் திட்டம் நிறைவேறுமா…??

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
1 Comment
error: Content is protected !!
Scroll to Top