எனக்கானவள்(ன்) 1

அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா 
மானம் உடையது அரசு
(அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:384)

இந்தியாவின் பெருநகரங்களில் ஒன்றான மும்பையில் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் உள்ள பார்ட்டி கூடத்தில் வெவ்வேறு பத்திரிக்கை துறையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சித் துறையில் பணிச்செய்யும் செய்தித்தொடர்பாளர்களும் ஒன்றாக கூடியிருந்தனர்.

அவர்களுக்கு நேர் எதிரே உள்ள மேடையில் ஒரே ஒரு நாற்காலியும் மேசையும் மட்டுமே போடப்பட்டிருந்தது.மேசையின் மீது ‘Asoka Mithran – Ministry of Commerce and Industry(Government of India)அசோக மித்ரன் – வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்(இந்திய அரசாங்கம்)’ என்ற ஆங்கில எழுத்துக்களைத் தாங்கிய பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது.

முப்பத்தியோரு வயதிலே இரண்டாவது முறையாக அமைச்சராக பொறுப்பேற்று சாதனைப் புரிந்திருக்கும் அசோக மித்ரனை நேர்காணலின் மூலம் சந்தித்து பேட்டியெடுக்க இத்தனை பெரிய கூட்டம் இங்கே கூடியிருந்தது.

மித்ரனின் வளர்ச்சியைக் கண்டு சில அரசியல் தலைவர்கள் பொறாமையோடும் வெகுசிலர் பிரமிப்போடும் இருக்கின்றார்கள். மித்ரன் முதன்முதலாக கட்சியில் இணைவதற்கு தன் செல்வாக்கையும் பணப்பலத்தையும் பயன்படுத்தினான்.ஆனால் கட்சியில் இணைந்த பிறகு எந்த விதமான குறுக்கு வழியையும் பயன்படுத்தாமல் தனது நேர்மை மற்றும் திறமையின் மூலம் இத்தகைய உயர் நிலையை வெகு விரைவில் அடைந்துவிட்டான்.

மித்ரன் சிறு வயதிலே தனது பெற்றோரை இழந்துவிட்டான்.அத்தோடு அவனுக்கு ஒரு தம்பியும் இரு தங்கைகளும் மட்டுமே இருக்கின்றார்கள். அவனின் ஒரு தங்கை அனாமிகா சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்துவிட்டாள்.இப்போது அவனுக்கு தம்பி ராம் ரித்தேஸ் மற்றும் இன்னொரு தங்கை தேன்மொழி இவர்கள் மட்டுமே அவனுக்கு உறவு என்ற பெயரில் இருக்கின்றார்கள்.

மித்ரன் மக்களுக்கு நல்லது செய்து அவர்களின் மனதிலும் நீங்காத இடம்பிடித்ததின் பலனாக பெருவாரியான வாக்குகளைப் பெற்று இரண்டாவது முறையாக தேர்தலில் வென்று அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறான்.

சென்ற முறை அமைச்சராக பொறுப்பேற்ற இரண்டு வருடத்தில் ஆட்சியை கலைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் குறைந்தபட்சம் இரண்டு வருடம் மட்டுமே அமைச்சராக இருந்தான்.அதனால் இப்போது நடந்த பொது தேர்தலில் மீண்டும் வெற்றிப்பெற்று முன்பு இழந்த இடத்தை பிடித்துவிட்டான்.

ராமனுக்கு ஒரு இலட்சுமணன் என்பது போல் அசோக மித்ரனுக்கு அவனின் தம்பி ராம் ரித்தேஸ்.மித்ரனின் உதவியாளரும் அவனே. அண்ணனின் சொல்லே வேதவாக்கு என்று செயல்படக்கூடியவன். அதுமட்டுமில்லாமல் மித்ரன் கொலைச்செய்து வா என்றால் ராம் சற்றும் தயங்காமல் கொலைச்செய்து தலையைக் கையோடு கொண்டு வரும் உத்தமன்.சுருங்கக்கூறினால் ‘அண்ணன் சொல்லை தட்டாத தம்பி,தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’ என்ற பழமொழிக்கு உதாரணமே இவர்கள் இருவரும் தான்.

மித்ரன் யாரையும் எளிதில் தன் அருகில் சேர்க்கமாட்டான். உடன்பிறந்தவனிடம் பற்றுதலும் அன்பும் இருப்பினும் சில விசயங்களை அவனிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்பமாட்டான்.அவனிடமும் எதை கூறவேண்டுமோ அதை மட்டுமே பகிர்ந்துக்கொள்வான்.ஒரு காரியத்தை முடிக்க வேண்டும் என நினைத்தால் அதை அடையும் வரை போராடுவான்.அவனைத் தடுத்து நிறுத்தும் எந்தவொரு விசயத்தையும் அதுவொரு சிறு கல்லாக இருப்பினும் அதை கண்டுக்கொள்ளாமல் எட்டி உதைத்து முன்னேறி சென்று கொண்டிருப்பான்.பார்வையாலே எதிரில் இருப்பவரை எடைப்போடுவதில் வல்லவன்.அவனிடம் சில அதிரடி செயல்கள் இருப்பினும் அதனை முழுதாக ஆராய்ந்து செயல்படுவதில் வல்லவன்.அந்த ஒரு செயலே அவனுக்கு இத்தகைய பெரும் பதவியை சிறு வயதிலே பெற்று தந்திருக்கிறது.

அந்த அறையில் கூடியிருந்த அனைவரும் அருகில் இருப்பவரிடம் சலசலத்துக் கொண்டிருக்க அவர்களின் இருக்கைக்கு அருகில் மித்ரனின் பாதுகாப்புக்கு காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் கருப்பு பூனைப்படைகள் புடைச்சூழ அசோக மித்ரன் அந்த அறையை அடைந்தான்.எப்போதும் சாதாரண உடையில் காட்சியளிப்பவன் இன்றும் அதேப்போல் சாதாரண உடையிலே காட்சியளித்தான்.ஆனால் ஒரே ஒரு மாற்றமாக சட்டை மற்றும் கால்சட்டைக்கு பதிலாக தமிழரின் பண்பாட்டு உடையான வேஷ்டி மற்றும் சட்டையில் வந்திருப்பது அவனின் கம்பீரத்தை மேலும் அதிகரித்துக்காட்டியது.

அனைவரையும் உயர்ந்து பார்க்க வைக்கும் அசாத்தியமான ஆறடி இரண்டு அங்குல உயரம் பாலும் வெண்ணையும் கலந்தெடுத்த பளப்பளப்பான நிறம் நடக்கும் போது நெற்றியின் மீது துள்ளி விளையாடும் கருமைப் பொருந்திய அடர்த்தியான கேசம் எதிரிகளின் ஆழ்மனதைத் துளையிடும் வாள் போன்ற கூரிய கண்கள் நேரான நாசி அரும்பு மீசை ஆளை மயக்கும் புன்னகையைச் சிந்தும் இதழ்கள் யோகசனத்தின் பலனாக கட்டுக்கோப்பாக இருந்த உடல்வாகு படர்ந்து விரிந்திருந்த மார்போடு அகன்ற முறுக்கேறிய புஜங்களுடன் கூடிய நீண்ட கரங்கள்.மொத்தத்தில் முழு ஆண்மகனுக்கான இலக்கணத்தற்குரிய அத்தனை அம்சங்களையும் மித்ரன் பெற்றிருந்தான்.

அவனிடம் இருக்கும் ஒரே ஒரு தீயப்பழக்கம் புகைப்பிடிப்பது.அதை மட்டும் அவனால் எக்காரணத்தைக் கொண்டும் விடமுடியவில்லை. முன்பிருந்ததை விட இப்போதும் சிறிது குறைத்திருந்தான்.அத்தோடு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சில மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றி உடல்நலத்தைப் பேணி பாதுகாத்துக்கொண்டிருந்தான்.

மித்ரன் அந்த அறையில் நுழைந்தவுடன் அனைவரும் தங்களுக்குள் சலசலப்பதை நிறுத்திவிட்டு மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றிருந்தார்கள்.

மித்ரன் நடக்கும் போது தடுக்கும் வேட்டியை ஒரு கையால் மிருதுவாக தூக்கிப் பிடித்துக்கொண்டு எப்போதும் அவனின் இதழிலிருக்கும் ஆளை மயக்கும் புன்னகையைப் பூசிக்கொண்டு நெற்றியில் கலைந்து விழுந்த நீள கூந்தல் அவனின் நடைக்கேற்ப அங்குமிங்கும் துள்ளி விளையாட அதை மற்றொரு கையினால் கோதிவிட்டு கம்பீரமான நடையுடன் மேடையை நோக்கி சென்றவனை பார்க்க பார்க்க யாருக்கும் தெகிட்டவில்லை.

பெண்கள் தான் ரசித்துப் பார்த்தார்கள் என்றால் ஆண்களும் அவனை ரசித்துப்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.மொத்தத்தில் அந்த கூட்டமே அவனைக் கண்டு விட்ட ஜொள்ளிலில் ஆறு கடலாக மாறிப் பெருக்கெடுத்து பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது.

அதற்குள் மேடையை அடைந்த மித்ரன் இரு கரங்களையும் கூப்பி தனது வசீகரப்புன்னகையுடன் தமிழ் பண்பாட்டின் படி “வணக்கம்” என்று தமிழில் கூறினான்.

அதுவரை அவனை பிரம்மிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தவர்களின் போதை தெளிந்து அவனை புன்னகையுடன் பார்த்தார்கள். புகைப்படக்காரர்கள் தங்களது பணியைச் செவ்வென செய்துக் கொண்டிருக்க ஒளிப்பதிவாளர்களும் தங்களது பணியை ஆரம்பித்தார்கள்.

மித்ரனின் தமிழை புரிந்துக்கொண்ட ஒரு சிலர் பதிலுக்கு அவனுக்கு வணக்கத்தை தெரிவிக்க தமிழ் மொழித் தெரியாதவர்கள் திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்தார்கள்.

அதனைக்கண்டவனின் புன்னகை மேலும் பெரிதாக “நமஸ்தே” என்று ஹிந்தியில் கூறினான்.

அதைக்கேட்டு அனைவரும் திருப்தியாக புன்னகைத்து “நமஸ்தே ஜி” என்று பதிலுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

அதன்பிறகு மித்ரன் அனைவரையும் அமரும் படி கையமர்த்தி தனக்கென போடப்பட்டிருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்தான்.

(இங்கே இந்தியில் பேசப்படும் உரையாடல்கள் தமிழில்)

மித்ரனுக்கு பின்னால் அவனின் தம்பி ராம் அமைதியாக கைக்கட்டி நின்றுக்கொண்டிருந்தான்.

இருவரும் அச்சில் வார்த்தாற் போன்று ஒரே மாதிரியாக இருந்தார்கள் ஒரே ஒரு மாறுதலாக மித்ரனை விட ராம் சிறிது ஒல்லியாக இருந்தான்.மேலும் அவர்களின் நடை உடைப் பாவனைகளில் சிறிது வேறுப்பாடுகள் இருந்தது.

மித்ரன் தன் தலைக்கு மேலே குளிர்சாதனப்பெட்டியிலிருந்து வெளிவந்த குளிர்காற்றில் அசைந்தாடிய தனது சிகையைக் கோதியவாறு கணீர் குரலில் வசீகர புன்னகையுடன் “உங்களுடைய கேள்வியை ஆரம்பிக்கலாம்” என்று உத்தரவுக்கொடுக்க முதலில் அந்த கூட்டத்திலிருந்து ஒரு இளம் பெண் முறுவலுடன் “சார் மறுபடியும் அமைச்சராக பதவி ஏற்றதற்கு முதலில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என கூற அதை தலையசைத்து அவன் ஏற்றுக்கொண்டான்.

அதன்பிறகு அப்பெண்ணின் பேச்சு மற்றும் தோற்றுமே மாறியது.அவளது முகத்தில் மருந்திருக்கும் சிரிப்பு இல்லாமல் போய் தனது கேள்வியால் அவனை திணறடிக்க முயன்றுக்கொண்டிருக்க அதற்கெல்லாம் அசராமல் பதில் கொடுத்துக்கொண்டிருந்தான் மித்ரன்.

“சார் நீங்க போனத்தடவையும் வர்த்தகம் மற்றும் தொழில் துறையைச் சார்ந்த அமைச்சர் பதவியில் இருந்தீங்க…அந்த இரண்டு வருடத்திலே ஒண்ணும் பண்ணலை இந்த ஐந்து வருடத்தில் மட்டும் என்ன செய்யப் போறீங்க” சற்று இகழ்ச்சியாக கேள்வி எழுப்ப,

அதில் மித்ரனின் முகம் கோபத்தில் இறுக அவனின் புன்னகைக்காணாமல் போனது.

“நான் இரண்டு வருடத்தில் எதுவுமே செய்யலைனு நீங்க எப்படி சொல்லுறீங்க மிஸ்…??” அடக்கப்பட்ட சினத்துடன் கேட்க,

அப்பெண் “நீங்க என்ன செய்தீங்கனு எனக்கு எப்படி சார் தெரியும்…நீங்க ஆதாரம்னு எதையாவது காட்டினால் தான் நீங்க ஏதோ செய்திருக்கீங்கனு எங்களுக்கு தெரியும்” அலட்சியத்துடன் கூறி “இப்போ எந்த அரசியல்வாதி அவனோட கடமையைச் சரிவர செய்யறங்க…பெருசா பேச வந்துட்டாரு” என்று அவளுக்குள் முணுமுணுக்க அருகில் அமர்ந்திருந்தவர் ஆன் செய்து வைத்திருந்த ஒலிவாங்கியின் உதவியுடன் அது நன்றாகவே கேட்டது.

கூடியிருந்தவர்களும் ‘இந்த பொண்ணு எதுக்கு இப்படியெல்லாம் பேசுது’ என்று தங்களுக்குள் அவளை அர்ச்சனைச் செய்துக்கொண்டிருந்தார்கள்.

அவள் கூறியது காதில் விழுந்தவுடன் மித்ரனின் கோபம் உள்ளுக்குள் பல்கி பெருகியது. இருந்தும் எந்தவொரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் சாதாரண குரலிலே “மிஸ் நீங்க இந்த வேலைக்கு வந்து எத்தனை வருஷமாகுது…?” என்று ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினான்.

அப்பெண் அதில் கவரப்பட்டாலும் ‘இதை எதுக்கு கேட்கிறான்’ என்று எரிச்சலுடன் “3 வருடம்” என்றாள்.

“அந்த மூன்று வருடத்தில் வேலையில் இருந்தப்படியே மக்களுக்காக என்னென்ன நல்லது செய்திருக்கீங்க”

அப்பெண் சற்று யோசித்து சில பதில்களைக் கொடுத்தாள்.

இப்போது மித்ரன் இதழில் கேலிப் புன்னகையை நெளியவிட்டப்படி “மிஸ் நீங்க மக்களுக்காக இதைச் செய்தேன் அதை செய்தேனு சொன்னீங்களே…இதெல்லாம் உண்மைனு நான் எப்படி நம்பறது” என கேட்க அப்பெண் கோபத்துடன்,

“சார் அதுக்குனு நான் செஞ்ச நல்லதுகெல்லாம் ஆதாரத்தைக் கையிலே வைச்சுக்கிட்டு சுத்தமுடியுமா…??உங்க கேள்வியே முட்டாள் தனமா இருக்கு சார்” என்று எரிச்சலுடன் மொழிய,

அதைக் கண்டு இதழில் பெரிதாக கேலிப் புன்னகையை நெளியவிட்டு “ஒரு ரிப்போர்ட்டரான நீங்களே எல்லாத்துக்கும் ஆதாரம் கையில் வைச்சுக்கிட்டு சுத்தமுடியாதுனு சொல்லறப்போ…ஒரு நாட்டின் அமைச்சரான நான் போற இடத்தில் செய்யற நல்லது எல்லாத்துக்கும் ஆதாரத்தை சேகரிச்சு வைச்சுக்கிட்டே இருக்கமுடியுமா…??அப்போ நீங்க கேட்ட கேள்வி மட்டும் சரியா மிஸ்…??” என்று ஒற்றை புருவத்தை அலட்சியமாக உயர்த்தி கேட்க அவளை வைத்தே அவளின் தவறைச் சுட்டியக்கட்டியவனின் அதிரடியில் அப்பெண் உட்பட அங்கிருந்த அனைவரும் வாயடைத்துப்போனார்கள்.

இருந்தும் அப்பெண் அடங்காமல் “சார் நீங்க மக்களின் நலனிற்காக எந்த திட்டமும் கொண்டு வரலைனு சொல்ல வந்தேன்…அதை நீங்க திசைத் திருப்பி வேறுப்பக்கம் கொண்டுப்போறீங்க” என்று சினத்துடன் கூற மித்ரன் இப்போது அவளை தனது கூர் பார்வைக் கொண்டு குத்திக்கிழித்தான்.

ஒருவர் பார்வையிலே குத்திக்குதற முடியும் என்பதை இன்று தான் அனைவரும் அறிந்தார்கள்.அவளின் உடலில் ஒரு நடுக்கம் ஓடி மறைய பதட்டத்துடன் கேட்ட கேள்வியை மறந்து தலைக்குனிந்து அவ்விடத்திலேயே வாயை மூடிக்கொண்டு அமர்ந்தாள்.அவள் முகம் முழுவதும் பீதி படர்ந்திருந்தது.

அதன்பிறகு அப்பெண் மறந்தும் மித்ரனை நிமிர்ந்துப் பார்க்கவில்லை.கேட்ட கேள்வியையும் மறந்தும் தனது குறிப்பேடை எடுத்துக்கொண்டு அதில் குறிப்பெடுப்பது போல் குனிந்திருந்தாள்.

‘இதெல்லாம் தேவையா…??’ என்ற ரீதியில் அனைவரும் அவளைப் பாவமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அவள் அமைதியாக அமர்ந்தப்பிறகு தான் மித்ரனின் முகத்தில் மீண்டும் பழைய வசீகரப் புன்னகைத் தோன்றியது.

அமர்த்தலான குரலில் “அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு…அதேசமயம் உங்களுக்குள்ளவும் இந்த கேள்வி ஓடிக்கொண்டிருக்கும்னு எனக்கு தெரியும்…அதனால் எல்லாருக்கும் சேர்த்தே பதில் சொல்லுறேன்…அவங்க சொன்ன மாதிரி நான் கடந்த இரண்டு வருடமா எந்த நல்லதும் செய்யலை” என்றவுடன் அனைவரும் “சார்” என்று அதிர்ந்து விழிக்க அவர்களின் முன் ஒரு கை நீட்டி தடுத்து “இருங்க…இருங்க நான் முழுசா சொல்லி முடிச்சிடறேன்…அதுக்குள்ள எதுக்கு இந்த அதிர்ச்சி…நான் ஏன் ஒண்ணுமே செய்யலைனு சொன்னேனா நாம் எதுவுமே செய்யலைனு நமக்கு நாமே சொல்லிக்கிட்டா தான்… ‘நாம் மக்களுக்காக ஏதாவது பெருசா செய்யணும்னு தோணும்’…அதே மாதிரி தான் இந்த இரண்டு வருடம் நான் எதுவுமே செய்யலைனு நினைச்சுக்கிட்டா தான் இந்த ஐந்து வருடத்தில் மக்களுக்காக ஏதாவது செய்யணும்னு தோணிக்கிட்டே இருக்கும்…அதுக்குனு கடந்த இரண்டு வருஷமா ஒரு துரும்பு கூட நகர்த்தலையானு கேட்டறாதீங்க…??” என்று சிரித்தவன் தொடர்ந்து,

“ஏனெனில் மக்கள் யாரும் ஒரு துரும்புக்கூட நகர்த்தாதவனுக்கு இரண்டாவது முறையா ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைச்சிருக்கமாட்டாங்க…அதேசமயம் அரசியல்வாதிகள் யாரும் சரியா வேலைச் செய்யலைனா மக்கள் நிம்மதியா சாப்பிட,தூங்க ஏன் எந்த அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியாது…அவர்கள் தலைமையின் பொறுப்பில் தான் நமக்கு அனைத்தும் கிடைக்கிறது… சும்மா எதுக்கெடுத்தாலும் அரசியல்வாதிகளைக் குறைச்சொல்லாதீங்க… அதுக்காக அரசியல்வாதிகள் எல்லாரும் நல்லவன்னு நான் சொல்ல வரலை…அதில் கெட்டவங்களும் இருக்காங்க…அவங்களை அடையாளம் கண்டுப்பிடிச்சு எதிர்த்து கேள்விக்கேட்டால் அடுத்த முறை தப்புச் செய்யறதுக்கு முன்னாடி பயப்படுவான்…மக்கள் யாரும் அந்தளவு முட்டாள் இல்லைனு நான் நினைக்கிறேன்” என்று அழுத்திக்கூறியவனின் பார்வை இப்போது அப்பத்திரிக்கை பெண்ணை மீது அர்த்தத்துடன் பதிந்து “அத்தோடு அந்த பொண்ணு கேட்டதற்கான ஆதாரமும் கிடைச்சிடுச்சுனு நினைக்கிறேன்…அதுவும் ஒண்ணு இரண்டு ஆதாரங்கள் இல்லை… எனக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்த கோடிக்கணக்கான மக்கள் தான் ஆதாரங்கள்…இந்த ஆதாரங்கள் கடந்த இரண்டு வருடமா மக்களுக்காக ஏதோ ஒண்ணு செய்திருக்கேனு நினைக்கிறதுக்கு போதுமானதாக இருக்கும்னு நினைக்கிறேன்…வேற எதாவது கேள்வி இருக்கா…??” என்று கேட்க ஒரு வயதானவர் “சார் அடுத்த ஐந்து வருடத்தில் என்ன புதிய திட்டம் கொண்டு வரப்போறீங்க…??” என்று கேட்க,

மித்ரன் தனது அக்மார்க் புன்னகையுடன் தலைக்கோதி “ஆக்‌ஷன்ஸ் ஸ்பீக்ஸ் லவுடர் தென் வேர்ட்ஸ் என்று மட்டும் கூறியவன் தனது கைக்கடிக்காரத்தைத் திருப்பிப் பார்த்து “ஓகே உங்களுக்கென ஒதுக்கப்பட்ட என்னுடைய நேரம் முடிவடைந்தது…இதுவரை என்னுடன் ஒத்துழைத்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்” என்று கூறியவனின் பார்வை இப்போதும் தலை நிமிராமல் அமர்ந்திருந்த அப்பெண்ணை அழுத்தமாக தொட்டு மீண்டு தனது தம்பியை அர்த்தத்துடன் பார்த்தது.

அதைப்புரிந்துக் கொண்ட ராம் கண் மூடித்திறந்து அதை ஆமோதித்தான்.

அடுத்த சில நொடிகளில் மித்ரன் இருகரம் குவித்து அந்த கூடத்திலிருந்து அவசரமாக வெளியேறினான்.

அவன் வெளியேறிய அடுத்த பதினைந்தாவது நிமிடம் அப்பத்திரிக்கை பெண் ராமினால் கடத்தப்பட்டாள்.
 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
1 Comment
error: Content is protected !!
Scroll to Top