காதல் 1

காதல் 1

சேலம் ஏற்காடு மழை அடிவாரம்,

அங்கிருந்து ஒரு பேருந்து தனது பயணிகளை ஏற்றிக்கொண்டு மலைக்கு மேல் ஏறத்தொடங்கியது.

அந்த அரசு பேருந்து மலையில் ஏறிய கணத்திலிருந்து மழை ஓயாமல் கொட்டி தீர்க்கத் தொடங்கின.

சிறிதும் ஓய்வு கொள்ளாமல் பொழிந்த மாரியால் மழைத்துளிகள் சன்னல் திரையின் மீது சரசரவென ஊர்ந்து செல்ல,அப்போதும் ஓட்டுநர் சோர்ந்து விடாமல் மலையின் கொண்டை ஊசி வளைவுகளில் வாகனத்தை திறமையாக செலுத்திக்கொண்டிருந்தார்.

வெளியில் ரகசியங்களை அப்படியே விழுங்கிவிடும் அளவுக்கு அடர்ந்த பனிமூட்டத்திற்குள், ஏற்காட்டின் இருண்ட மலைப்பாதைகள் வளைந்து நெளிந்து மறைந்தன.

பேருந்து பல சிரமங்களை கடந்து பயணித்தாலும் அரசு பேருந்தின் உள்ளே மக்கள் எவ்வித அசௌகரியமும் இல்லாமல் சொகுசாகப் பயணித்தனர்.

அவர்கள் எந்த அளவு சௌகரியமாக பயணித்தார்கள் என்றால்,

ஒரு சிலர் குறட்டை விட்டுத் உறங்கிக் கொண்டிருக்க,ஒரு சிலர் அருகில் இருப்பவரிடம் அரட்டை அடிக்க,இன்னும் சிலர் வேர்க்கடலையை வாயில் போட்டு சத்தமாக கொறித்தார்கள்.

பின் பக்க இருக்கையில் ஒரு குழந்தையோ ‘நீ நிம்மதியா தூங்கவா செய்யறே?இருடி மவனே’ என்பது போல் வீறிட்டு கத்தி உறங்கியிருந்த நபர்களை தட்டியெழுப்பியது.

அதில் கடுப்பான ஒரு சில ஆட்கள் வெளிப்படையாக முகத்தை சுளித்தனர்.

ஆனால் அந்த குழந்தையின் தாயோ அனைவரையும் சங்கடமான பார்வையுடன் எதிர்க்கொண்டு மன்னிப்பை வேண்டினார்.

குழந்தையோ அதீத சேட்டை பிடித்தது போலும்!

‘என்னையே முறைக்கிறீயாடா?’ என்பது போல் இன்னும் அதிகமாக அழுது அவர்களின் இரத்த அழுத்தத்தை அதிகரித்தது.

அவர்களுக்கு அருகே அமர்ந்திருந்த பெண்மணியோ “குழந்தைக்கு பசியாத்திட்டியாம்மா?” என கேட்க,

அந்த தாயோ “பஸ் புறப்படறதுக்கு முன்னாடி தான் பால் கொடுத்து தூக்கிட்டு வந்தேன்மா…அப்புறமும் ஏன் அழறான்னு தெரியலை” என்று கவலையுடன் பதிலளிக்க,

உடனே குழந்தையை எட்டிப்பார்த்த அந்த பெண்மணி “குளிருக்கு அழுவுதோ என்னவோ?அப்படியே புடவையாலே குழந்தையை மூடி உன் மார்போட அணைச்சுக்கோம்மா” என்று வயதில் அனுபவமுள்ளராய் யோசனை தெரிவித்தார்.

‘அப்படி பண்ணால் குழந்தை எப்படி அழுகையை நிறுத்தும்?’ என ஒரு வித சந்தேகத்துடனே அவர் கூறியப்படி செய்தாள்.

ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக குழந்தை அடுத்த ஐந்தே நிமிடத்தில் தாயின் கதகதப்பிலும் அழுதச்சோர்விலும் அப்படியே மெல்ல கண்ணயர்ந்தது‌.

அதைக்கண்டு குழந்தையின் அன்னை மட்டுமல்ல…பேருந்தில் பயணித்த அனைவரும் ஆச்சரியமுற்றனர்‌.

குழந்தையின் அன்னையோ “நன்றிங்க” என அந்த பெண்மணியிடம் கூற,

அவரோ “குழந்தை தூங்கிடுச்சு போலே…தூங்கட்டும்” என சிறியதாக ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு தனக்கு அருகே அமர்ந்திருந்த கணவரிடம் உரையாட ஆரம்பித்துவிட்டார்.

‘பலே ஆளு தான் போலே இந்த லேடி’ என பலரும் மனதிற்குள் மெச்சிக்கொண்டனர்.

இவையெல்லாம் செவியில் விழுந்தும் கூட கண்டுக் கொள்ளாமல் மூன்று இருக்கை முன்பு சன்னலில் சாய்ந்தப்படி ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தாள். 

அவள் பெரிய அளவிளான சாம்பல் நிறக் குல்லாய் அங்கியை (Hoodie) அணிந்து, தலையைக் கவிழ்த்தபடி அமர்ந்திருந்தாள்.

அவளின் காதுகளில் ஒலிப்பான்கள் சொருகப்பட்டிருந்தன.ஆனால் அதில் பாடல்கள் எதுவும் ஓடவில்லை.

வெறுமனே பாடல் கேட்கும் பாவனையில் இருந்தாள்.

அவ்வளவே?

அவள் யாழினி.

24 அகவை…பார்த்தவுடன் மற்றவரை கவர்ந்திழுக்கும் பேரழகி இல்லை என்றாலும் அவளும் அழகி தான்!

கோதுமையோடு வெண்மை கலந்த நிறம்,ஒளியிழுந்த இரண்டு பெரிய கண்கள்,கூரான நாசி,சிவந்த நிற உதடுகள்,சுருள் சுருளான அழகான கூந்தல் கொண்டவள்.

அவளின் அந்த சுருண்ட கூந்தலின் கற்றைகள் அவள் அணிந்திருந்த குல்லாய் அங்கியை மீறி வெளியே தெரிந்தன.

அவளைப் பார்க்கும்போது அந்த வயதிற்கு உரிய துடிப்பு எதுவும் தெரியவில்லை.மாறாக,இந்த உலகத்திலிருந்து யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் மறைந்துவிடத் துடிக்கும் ஒரு வெறுமை தென்பட்டது.

அவளின் இதயத்திற்குள் பெரும் அலையே அடித்துக்கொண்டிருந்தன.

அவளது சட்டையின் ஓரங்களில் இன்னும் மழையின் ஈரப்பதம் ஒட்டியிருந்தது.

பேருந்தில் ஏறுவதற்கு முன்பு மழைத்துளிகள் அவளின் ஆடையை நனைத்து விட்டிருந்தது.

அதன்பலனாய் அவளின் மேனி குளிர்ந்தக்காற்று மேலே படும் நேரம் இலேசாக சிலிர்த்து அடங்கின.

அவளிடம் ஆடம்பரமான பெட்டிகள் எதுவுமில்லை…அவளின் காலடியில் ஒரு நடுத்தர அளவிலான பயணப்பை மட்டுமே இருந்தன.

அவளது இதயத்தில் சொல்ல முடியாத ஒரு அச்சமும் வருத்தமும் ஆர்ப்பரித்தாலும்,அவளின் கண்ணிலோ ஒரு சொட்டு கண்ணீர் இல்லை.

அவளை போலவே அவளின் கண்ணீரும் வறண்டுப்போயிருந்தன.

அவளிடம் வெறும் மௌனம் மட்டுமே எஞ்சியிருந்தது. 

வாழ்க்கை ஒருவனை ஒட்டுமொத்தமாக உலுக்கி எடுத்த பிறகு எஞ்சியிருக்கும்,அந்தப் பாரமான மௌனம் அவளிடம்!

பேருந்து இப்போது தான் ஒன்றாவது கொண்டை ஊசி வளைவைக் கடந்திருந்தது.

அவள் பேருந்தில் ஏறி பத்து நிமிடங்கள் தான் கடந்திருந்தது.அதற்கே அவளிற்கு பல யுகங்கள் பயணித்தது போல் ஒரு மாயை!

அவள் ஒரு பெருமூச்சுடன் அமர்ந்திருக்க,அச்சமயம் பேருந்தின் விளக்குகள் பலவீனமாக மின்னி மின்னி எரிந்தன.

அச்சமயம் அந்த இருளை மீறி ஒளிர்ந்த மின்னல் ஒளியில்,மழையூறிய கண்ணாடியில் அவளது பிம்பமும் தெரிந்தது.

சட்டென அவளின் முகத்தை கண்ணாடியின் வழியே பார்த்தவளின் நெஞ்சில் பாரமேறியது.

களைப்படைந்த கண்கள்,அந்தக் குல்லாயையும் மீறி அலைபாயும் கலைந்த சுருண்ட கூந்தல்,எதையும் யோசித்துவிடக் கூடாது என்று பிடிவாதமாய் மறுக்கும் ஒரு முகம்,சிரிக்க மறந்த உதடுகள்!

அவளின் குணத்திற்கும் சற்றும் பொருந்தாத ஒரு அழுத்தம் அவளுள்!

ஏனெனில்,மற்றவர் அனைவரும் தடுத்தாலும் ‘நான் இப்படி தான்’ என்பது போல் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பவள் அவள்.

அவளின் பேச்சில் ஒரு துள்ளல் கலந்த சிரிப்பும் வார்த்தையில் ஒரு தெளிவும் இருக்கும்.

இன்றோ சிறு சிரிப்பிற்கே பஞ்சமாகியாகியிருந்தது‌.

அவளின் வாழ்க்கை ஒரே நாளில் இவ்வாறு தலைகீழாக மாறும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

அவள் அதை மட்டுமா எதிர்பார்க்கவில்லை…தன்னுடைய வீட்டை விட்டு…பிழைப்பு செய்துக்கொண்டிருந்த ஊரை விட்டு…உறவினர்கள்…நண்பர்கள் என அனைவரையும் விட்டு இவ்வளவு தூரம் யாருக்கும் தெரியாமல் ஓடி வருவாள் என்று சிறிதும் நினைக்கவில்லை.

ஆனால் அனைத்தும் நடந்தது…அதுவும் அந்தவொரு நாளில்…

அவளிற்கு வாழ்க்கையே சூன்யமாகியிருந்தது.

அவளிற்கு அழ வேண்டும் போன்று ஓர் உணர்வு!

அதையும் கூட அவளால் செய்ய முடியவில்லை.

ஏனெனில்,அது அவளின் குணத்திற்கு நேரெதிரானது.

அப்படியொரு திடமான உள்ளம் படைத்தவள் அவள்.

நிம்மதியை தேடிய அவளின் பயணத்தில் மௌனம் மட்டுமே ஆட்சிச் செய்ய,யாரிடமும் பேச விருப்பமின்றி சாலையை வெறித்து பார்த்திருந்தாள்.

நிலைமை இவ்வாறு இருக்கையில்…

அவளை போலவே விதியும் மௌனம் காக்குமா என்ன?

அவளின் அமைதியை குலைக்கவே ஒரு இடையூறை உடனே அனுப்பி வைத்தது.

வந்ததிலிருந்து அவளை கவனித்துக்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணியோ “ஏன் பாப்பா?உன்னை உன் காதலன் ஏமாத்திட்டனா என்ன?” என சற்றே நையாண்டி கலந்த குரலில் சத்தமாக கேட்டுவிட,சட்டென பலரின் விழிகள் இவளின் புறம் திரும்பின.

இவளோ ‘ஏதே காதலன் ஏமாத்திட்டானா?பிரமாதம்’ என சலிப்பாக ஒரு முறை விழிகளை மூடி திறந்தாள்.

அவள் எங்கு சென்றாலும் இதுப்போலான கேள்வியிலிருந்து தப்ப முடியாது போலும்!

அவரின் கேள்விக்கு அவள் செவிமடுக்காதது போல் தவிர்க்க நினைத்தாலும்,அவரோ “பாப்பா உன்னை தான்” என அவளின் கைத்தொட்டு விடாமல் அழைத்த பிறகும் அவளால் பதில் கூறாமல் இருக்கமுடியாது அல்லவா?

அதிலும்,மற்றவரின் ஆர்வமான பார்வை வேறு அவளை சங்கடமுறுத்த “அப்படியெல்லாம் எதுவுமில்லை” என அவரை பார்க்காமலே முணுமுணுத்தாள்.

அவரோ விடாமல் “ம்ஹும்…எனக்கு உறுதியா தெரியும் பாப்பா…நானும் வந்ததிலிருந்து பார்க்கறேன்…நீ ரொம்ப சோகமாவே இருக்கே…இப்போ இருக்கிற பிள்ளைங்க எல்லாம் முதல்ல காதலில்ல வேண்டியது…பின்னாடி ஏன்டா காதலிச்சோம்னு வருத்தப்பட வேண்டியது இதை தவிர உங்களுக்கு எல்லாம் வேற என்ன பிரச்சனை வரப்போகுது” என திடமாக தன் கருத்தை பதிவு செய்ய,

அவளிற்கோ உள்ளுக்குள் சுறுசுறுவென கோபம் வந்தது.

‘ஏன் லவ்வை தவிர எங்களுக்கு எல்லாம் வேற பிரச்சனையே வராதா?’ என சுருக்கென்று அவரிடம் கேட்டுவிட இதழ் துடித்தாலும் அவள் எதுவும் பேசவில்லை.

ஆனால் அவரோ ஏதோ நாட்டின் உளவுத்துறை ரகசியத்தைக் கண்டுபிடித்ததைப் போல் “ஹும்ம்…நீ இல்லைனா சொன்னாலும் கண்டிப்பா உனக்கு காதல் தோல்வி தான்” என எள்ளலாக அவர் கூறியதும் வெடுக்கென்று திரும்பி யாழினி அவரை முறைத்துப் பார்த்தாள்.

அவளிற்கு வந்த ஆத்திரத்திற்கு அவரின் நடு மண்டையைப் பிளக்கும் வெறி வந்தது.

‘எப்படித்தான் இவங்களாலே மத்தவங்களை ஜட்ஜ் பண்ண முடியாதோ…ஒரே கடுப்பாகுது ஆண்டவா’ என மனதிற்குள் முனகி கோபத்தை அடக்கி அமர்ந்திருந்தாள்‌. 

அவள் அமைதியாக இருந்தாலும் அருகிலிருந்த பெண்மணி அவளை விடமாட்டார் போலும்..

“இப்ப இருக்குற பொண்ணுங்யெல்லாம் முசுக்குன்னா அழுவுறாங்க…எங்க காலத்துலே நானெல்லாம் ஏமாத்தினவனை விளக்கமாறு இல்லைனா செருப்பாலே மிதிமிதினு மிதிச்சு கொழுப்பை வெளியிலே எடுப்பேன்” என தற்பெருமை பேசி அவளை கடுப்பாகிக்கொண்டிருக்க,

அதுவரை அவர்களின் உரையாடலை கேட்டிருந்த ஒரு நடுத்தர வயது ஆளோ “நீங்க சொல்லறது உண்மை தான்…” என அர்த்தமாக கூறி தனது நெற்றியில் இருந்த காயத்தை வருடினார்.

அவர் யாரோ ஒரு பெண்ணிடம் வசமாக வாங்கிக்கட்டியிருக்கிறார் என்று அவரின் முகத்தை வைத்தே அறிந்துக்கொண்டாள் யாழினி.

ஆனால் அவரின் பேச்சை யாரும் மதிக்கவில்லை.

இருந்தாலும்,வலையொளி காணொளிக்கு நடுவில் வரும் விளம்பரம் போல் அவர் சம்மந்தமே இல்லாமல் அந்த உரையாடலுக்குள் நுழைந்தார்.

யாழினி தனது குல்லாயை முன்னுக்கு தள்ளி முகத்தை மறைக்க முயல “ஏன் பாப்பா?கொலை எதுவும் பண்ணிட்டு ஓடி வந்திட்டியா?” என அதிரடியாக கேட்டுவிட,அனைவரின் விழிகளும் சடாரென்று இவர்களின் புறம் திரும்பியது.

அவரின் கேள்வியை அவளுமே சற்றும் எதிர்பார்க்கவில்லை.

‘ஏய் ஆன்ட்டி…என்ன கேள்வி இது?’ என அதிர்ச்சியில் விழி விரித்தவள்,இதற்கு மேலும் மௌனமாக இருந்தால் அவர் தன் கற்பனை குதிரைகளை எக்குத்தப்பாக ஓட்டுவார் என்பதை அறிந்து “வேலை பார்த்து ஒரே களைப்பா இருக்கு…ஒரு ரெஸ்ட் வேண்டி இங்கு வந்திருக்கேன்” என அவரின் கற்பனைக்கு கடிவாளமிட்டு அடக்கினாள்.

அதன்பிறகே அவர் ‘ஓ அப்படியா?’ என்பது போல் அவளை ஒரு பார்வை பார்த்தவர் “எங்க காலத்திலே எல்லாம் பொம்பளைங்க ஒரு நிமிஷம் கூட ஓய்வெடுக்காமல் ஓடிக்கிட்டே இருப்போம்…நீங்க என்னடான்னா பார்க்கிற வேலைய கூட விட்டுட்டு ஓய்வு எடுக்க நினைக்கிறீங்க…கலிகாலம்டா” என அதற்கும் அவளை பேச,யாழினிக்கோ ‘யாருடா சாமி இவரு…என்னா வாயி’ என ஆயாசமாக வந்தது.

இதுவே மற்றைய நாட்களாக இருந்தால் யாழினியும் அவருக்கு சரிசமமாக வம்பு வளர்க்கக்கூடிய பெண் தான்!

நடந்த அசம்பாவிதங்கள் அவளின் வாயை அடைக்க வைத்திருந்தன.

‘யாழ் காம் டவுன்’ என தனக்கு தானே அமைதியை வரவழைத்துக்கொள்ள,அதைக் கெடுக்கும் விதமாக “நீ தப்பு எதுவும் பண்ணலைனா அப்புறம் எதுக்கு முகமூடிப்போட்டிருக்க பாப்பா?” என சந்தேகம் கேட்க,

‘ஷப்பா இவரோட முடியலை…குளிருதுனு ஒரு ஹூடி போட்டது குத்தமா?’ என கடுப்பாகி குல்லாயை பின்னுக்கு தள்ளி “இப்போ சந்தோஷமா ஆன்ட்டி” என்றாள் வலுக்கட்டாயமாக சிரிப்பை சிந்தி…

அவரோ வேகமாக தலையாட்டி “ஹான் இப்போ தான் உன் முகம் பார்க்க லட்சணமா இருக்கு…முக்காடு போட்டால் வீட்டு ஆட்களுக்கு ஆகாது தெரியுமா?இனிமேல் இப்படி முக்காடு போடாதே பாப்பா” என அறிவுரை வேறு சொல்ல,

அவளோ ‘அது சரி’ என சலிப்பாக தலையாட்டினாள்.

பயணச்சீட்டை கிழித்துக் கொண்டிருந்த நடத்துனர் கூட இவர்களை ஆர்வமாகப் பார்த்தார்.

அவளிற்கு ‘ஐய்யோ’ என்றானது.

தெரியாமல் வந்து சிக்கிட்டமோ என்ற மனநிலைக்கு மாறிப்போனாள்.

அதனால் சட்டென வெளியே தெரிந்த இருண்ட காட்டுப் பகுதியை காண்பதை போல் திரும்பிக்கொண்டாள்.

பனிமூட்டம் எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டிருந்தது.

‘சாலைகள்,மரங்கள்,அவளின் எண்ணங்கள்’ என அனைத்தையும் விழுங்கிட,பேருந்து மெதுவாக மேல்நோக்கி மலைப்பாதையில் ஏறியது.

ஜன்னலின் சிறிய இடுக்கின் வழியே குளிர்ந்த காற்று உள்ளே நுழைந்தது.

பயணிகள் ஒவ்வொருவராக மெதுவாகத் தூக்கத்தில் ஆழ்ந்தனர்.

அவள் அருகில் இருந்த அந்த பெண்மணியைத் தவிர.

அனைவரிடமும் ஓயாமல் பேசிக்கொண்டே வந்தார்.

‘இந்த அம்மா சேட் ஜீபிடியை விட அதிகமா வாய் பேசுதுடா சாமி…முடியலை’ என பெருமூச்சை வெளியேற்றினாள்.

திடீரென்று அவளின் புறம் திரும்பிய பெண்மணி “பாப்பா உன் பேர் என்ன?” என்று விசாரிக்க,

அவளோ “யாழினி” என்றாள் ஒரு பெருமூச்சுடன்…

அவள் பதில் கூறவில்லை என்றாலும் விடுப்போவதில்லை என்பதால் கூறிவிட்டாள்.

அவரோ “நல்ல பேரு…என் பேரு தனலட்சுமி…என புருஷன் பேரு வீரா…எங்களுக்கு இரண்டு பிள்ளைங்க…” என தனது வாழ்க்கை வரலாற்றாயே படிக்க ஆரம்பிக்க,அதைக் கேட்கும் போதே யாழினிக்கு மலைப்பாக இருந்தது.

ஆனால் இறுதியாக அவர் கூறியதை கேட்டு அவள் திருதிருவென விழித்தாள்.

தன் குடும்பத்தை பற்றி அனைத்தையும் கூறியவர் இறுதியாக “எனக்கு ஒரு செல்லப்பெயர் இருக்கு…அதை வைச்சு தான் என் புருஷன் என்னை கூப்பிடுவாரு…அது என்ன தெரியுமா?சில்க் ஸ்மிதா” என நாணத்துடன் கூறி முடித்ததும் தான் தாமதம் அதனை கேட்ட அனைவரும் கொல்லென்று சிரித்தார்கள்.

யாழினியோ ‘ஏதே சில்க் ஸ்மிதாவா?’ என அவரை மேலிருந்து கீழாக நோக்கினாள்.

அதுவரை முன் சீட்டில் அமர்ந்து இதனை கேட்டிருந்த அந்த கல்லூரிப் பையனிற்கு சிரிப்பு வந்துவிட,திடீரெனச் சிரித்ததினால் குடித்துக்கொண்டிருந்த தண்ணீரை அருகிலிருந்த தனது நண்பனின் முகத்தில் துப்பியிருந்தான்.

அவனது வாய் நீரினால் அபிஷேகம் செய்யப்பட்ட நபர் நண்பனை முறைக்க “சாரிடா சாரி…எல்லாம் இந்த சில்க் ஆன்ட்டியாலே தான்…நானில்லை” என மொத்த பழியையும் அந்த பெண்மணியின் மீது தூக்கிப் போட்டான்.

அவளின் ஆராய்ச்சிப் பார்வையை கவனித்த பெண்மணியோ “என்னம்மா நம்ப முடியலையா?நான் சின்ன வயசிலே அப்படியே சில்க் ஸ்மிதா மாதிரி இருப்பேன்…அதைப்பார்த்து  மயங்கி தான் என் மனுஷன் கல்யாணம் பண்ணாரு” என நாணத்துடன் முகம் சிவக்க கூற,அவளோ ‘இதெல்லாம் நான் கேட்டனா?’ என்பது போல் பார்த்து வைத்தாள்.

அவளின் பதிலை எதிர்பாராத அந்த பெண்மணியோ அவளின் காதல் தோல்வியை மனதில் வைத்து “காதல்,கல்யாணம்னாலே ஏற்றம் இறக்கம் எல்லாம் இருக்கும்மா…அட்ஜஸ்ட்மென்ட் தான்மா வாழ்க்கை…இப்படி தான் ஒருவாட்டி பயங்கர கோபம் வந்திடுச்சு…உடனே என் புருஷன் மேல டிவி ரிமோட்டை தூக்கிப் போட்டுட்டேன்” என்றதும் “வாட்” என்பது போல் அதிர்ந்தாள் யாழினி.

முன்னால் இருந்த மாணவர்களோ ஆர்வமாக கதைக்கேட்கும் ஆவலுடன் “அப்புறம்?” என சுவாரசியமாக அவரை திரும்பிப் பார்க்க,

சட்டென அவர்களின் புறம் திரும்பி தனலட்சுமியோ “அப்புறம் என்ன?ரிமோட்டு அவர் மேல படாமல் வேறப்பக்கம் போய் ஜன்னல் கண்ணாடி உடைஞ்சு போச்சு.அதுக்கு செலவு பண்ண காசை இப்போ நினைச்சாலும் வயிறு கபகபனு எரியுது” என்றார் வருத்தமும் வயிற்றெரிச்சலுமாக…

அவரின் பேச்சை கேட்ட அனைவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. 

அதுவரை அதீத மன அழுத்தத்துடன் அமர்ந்திருந்த யாழினியின் இதழோரம் கூட இலேசாக சிரிப்பு எட்டிப்பார்த்தது.

ஆயினும்,அதனை கட்டுப்படுத்திக்கொண்டாள்.

அவளிற்கே ஆச்சரியம் தான்!

முதலில் எரிச்சலுடன் ஆரம்பித்த அவருடனான பயணம் இறுதியில் அவளின் மனதை திசைத்திருப்பி பாரத்தை குறைத்திருந்தது.

இறுதியில் பேருந்து ஏற்காடு வந்து சேர்ந்த நேரம் “சில்க் ஆன்ட்டி பை…பை” என அந்த கல்லூரி மாணவர்கள் சந்தோஷமாக விடைப்பெற்று கிளம்பினார்கள்.

அவரோ “உதை வாங்குவீங்க…அது என் புருஷனுக்கு சொந்தமான பேரு…நீங்க சொல்லாதீங்க” என அதட்ட செய்ய,

அந்த கல்லூரி மாணவர்களோ “சில்க் ஸ்மிதா லவ் யூ” என கையால் இதயவடிவில் செய்துக்காட்டி கண்சிமிட்ட “அடிங்” என நாக்கை கடித்து ஓரடி எடுத்து வைத்ததும் அவர்களோ கடகடவென சிரித்துக்கொண்டே சிட்டாய் பறந்துவிட்டனர்.

யாழினியும் சிறு புன்னகையுடன் விடைப்பெற “உன் முகம் இப்போ எப்படி இருக்கு பாரு…இப்படியே பழைய காதலனை நினைச்சிட்டு இருக்காமல் நல்லா சிரிச்சு சந்தோஷமா இருடிம்மா…எல்லாம் நல்லதே நடக்கும்” என நிம்மதி தேடி வந்தவளிற்கு அவர் கூறிய அந்த சொற்கள் ஒரு நேர்மறையான எண்ணத்தை விதைத்தன.

அதேசமயம் அவளிற்கு காதல் தோல்வி என அவராகவே முடிவுச்செய்து பேசிய விதம் ‘இவரோட முடியலை’ என பல்லை கடிக்க வைத்தது.

ஆனாலும் அவள் அதனை மறுக்கவில்லை…

அவளும் எத்தனை முறை தான் விளக்குவாள்…அவரோ புரிந்துக்கொள்ள மறுப்பதினால் அப்படியே விடுத்தாள்.

மேலும் ‘ஆல் இஸ் வெல் யாழ்’ என தன்னை தானே தேற்றிக்கொண்டு அவரிடம் விடைப்பெற்று திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

அச்சமயம் “சிலுக்கு மழைனு சொன்னவுடனே நீ நல்லப்படியா வரணும்னு பயந்திட்டேன்…இப்போ உன்னை பார்த்தப்பிறகு தான் நிம்மதியா இருக்கு” என ஒரு நடுத்தர ஆடவரின் குரல் நடுக்கத்துடன் கேட்டது.

அவர் தான் தனலட்சுமியின் கணவராக இருக்கக்கூடும் என்றெண்ணி யாழினி திரும்பிப் பார்த்தாள்.

அவள் நினைத்தது சரியே என்பது போல் மனைவியின் கைகளை பற்றி பேசிக்கொண்டிருந்தார் வீரா.

அவர் மிகவும் எளிமையாக இருந்தார்.

தனலட்சுமிக்கு நேரெதிரான ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான மனிதர்.

அவரது கண்களில் தெரிந்த தவிப்பே அவரின் நேசத்தை தெளிவுப்படுத்தின.

“சரி சரி நசநசனு பேசாமல் நடய்யா…மறுபடியும் மழை வந்திடப்போகுது” என அவரின் மனைவி திட்டினாலும் தனது சேலையின் முந்தானை கொண்டு அவரின் முகத்தை ஆறுதலாக துடைத்து விட்டார்.

அவர்களின் அந்த சிறு செயலில் கூட காதல் வெளிப்பட்டது.

பார்க்கவே அத்துணை அழகு…

‘லவ்லி’ என மனதிற்குள் சிலாகித்துக்கொண்டே சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

நெடிதுயர்ந்த மரங்களின் நிழலில் சிறிய வீடுகள் உறங்கிக் கொண்டிருந்தன.

தெருவிளக்குகள் யாவும் களைப்படைந்த மின்மினிப் பூச்சிகளைப் போல ஆங்காங்கே மங்கலாக ஒளிர்ந்தன.

மழைநீர் பளபளக்கும் வெள்ளி வரிகளாய் சாலைகளில் வழிந்தோடியது.

சென்னை மாநகத்தின் இறைச்சலும் ஆரவாரமும் இல்லாமல் நிசப்தமாய் இருந்தது.

கூடவே,இலேசாக குளிரவும் செய்தன.

அவளிற்கு ஏனோ அவசர அவசரமாக எழுந்து இலக்கே இல்லாமல் தன் பணிக்கு செல்லும் அந்த பைத்தியக்காரத்தனமான உலகத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பது போலான ஒரு உணர்வு!

முற்றிலும் மாறுப்பட்ட ஒரு உலகமாய் அவளிற்கு காட்சியளித்தது.

பேருந்து நிலையத்திலிருந்து மெதுவாக நடந்து வந்தவளின் விழிகள் ஏற்காட்டின் இயற்கை எழிலை ரசிக்க ஆரம்பித்தன.

ஆனால் சிறிது தொலைவு நடந்ததும் அவளிற்கு தொண்டை வறண்டன.

தொண்டைக்கு இதமாக ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றிட,சுற்றிலும் பார்வையை சுழற்றினாள் யாழினி.

அந்நேரம் மீண்டும் மழை தூறல் போட தொடங்கின.

அந்த மழையின் ஊடே,ஒரு சிறிய தேநீர் கடை ஒன்று இதமான மஞ்சள் நிற ஒளியில் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

மரத்தாலான சுவர்கள்,தொங்கும் மஞ்சள் விளக்குகள்,வெளியே மெல்லக் கசிந்து வரும் பழைய மெல்லிசைப் பாடல்கள்.

அதுவும் இளைய ராஜாவின் இசையுடன்…

காற்றில் அந்த கடையின் பெயர்ப்பலகை மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது.

அதனை உற்றுப்பார்க்க முனைந்து அதில் வெற்றிப்பெற்றாள் யாழினி.

மெதுவாக அவளின் இதழ்கள் அந்த கடையின் பெயரை உச்சரித்தன.

“கட்டன் சாயா வித் காதல்” 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top