முகிழ்மதி 62:

முகிழ்மதியின் கணவன் ஊருக்கு சென்று ஒரு நாள் ஆகிவிட்டது.
அவனில்லாத உலகு அவளிற்கு வெறுமையாக இருந்தது.
அவளிற்கு விபரம் அறிந்த வயதிலிருந்தே தனித்து தான் வாழ்ந்து வந்திருக்கிறாள் அவள்.
விஜயலட்சுமி தான் அவளை தமக்கையுடன் சேர விடுவதில்லையே?
ஆனால் இன்றோ என்றுமில்லாத ஒரு தனிமையுணர்வு அவளை சுட்டது.
அவன் அருகாமையின்றி அவளால் சுவாசிக்கவே முடியாது போன்ற ஒரு நிலை!
இப்படியான உணர்வுகளெல்லாம் அவளிற்கு புதிது!
அவனிற்கு பதிலாக தமயந்தி அவளுடன் இரவில் வந்து அவர்கள் அறையில் படுத்துக்கொண்டாள்.
அவையனைத்தும் அவளது தமையனின் கட்டளையே!
அதை உதாசீனம் செய்யாமல் அவனின் சேவகியாய் முகிழ்மதியுடன் உறங்க வந்தாள் தமயந்தி.
திடீரென்று தமயந்தி அவளுடன் படுக்கப் போவதாக கேள்வியுற்றதும் அவள் ஆச்சரியமுற்றாள்.
“நிஜமாவா அண்ணி?என் கூட தான் நீங்க படுக்கப்போறீங்களா?” என விழி விரித்து அவள் கேட்க,
அவளோ “அட ஆமா அண்ணி…சின்ன வயசிலிருந்து என் ஃப்ரெண்ட்ஸ் கூட இப்படி நைட் ஸ்டே பண்ணனும்னு எனக்கு ரொம்ப ஆசை…பட் நான் சீ.எம்மோட பொண்ணுன்றதாலே என்னை எங்கியுமே நைட் தங்கவே விட மாட்டாங்க…அதனாலே ஸ்கூல் ட்ரீப்,காலேஜ் ட்ரீப் எல்லாமே மிஸ் பண்ணிட்டேன்…ஆனால் இப்போ என்னோட பல நாள் கனவு நிறைவேறப்போகுது…பிகாஸ் எனக்கு புதுசா கிடைச்ச ஃப்ரெண்ட்டோட நான் நைட் ஸ்டே பண்ணப்போறேன்…கேட்கும் போதே எவ்வளவு சந்தோஷமா இருக்கு” என மகிழ்ச்சியில் துள்ளி குதிக்காத குறையாக பேசினாள்.
தமையனின் ஆணைக்கு உட்பட்டாலும் அவளிற்கு முகிழ்மதி தற்போது தோழியாகிவிட்டதால் அவளின் நெடு நாளைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ள உத்தேசித்தாள்.
முகிழ்மதியோ தன்னை அவள் தோழியாக நினைப்பதாக கூறியதுமே உச்சிக்குளிர்ந்துவிட்டாள்.
சிறு வயதிலிருந்து அவளிற்கு தோழி என்று ஒருவரும் அமைந்ததில்லை.
அவள் யாரேனும் ஒருவருடன் பேசுவதை பார்த்தாலே விஜயலட்சுமிக்கு பொறுக்காது.
உடன்பிறந்த சகோதரியிடம் பேச நினைப்பதற்கே இருவருக்கும் சேர்த்து தண்டனை கிடைக்கும்.
இதில் அவள் வெளியில் யாருடனாவது பேசிவிட்டால் அவர் மிருகமாய் மாறி அடி வெளுத்துவிடுவார்.
அவருக்கு அஞ்சியே அவள் யாருடனும் நெருங்கி பழகவில்லை.
இப்போது தமயந்தி தன்னை தோழியாக ஏற்றுக்கொண்டதும் அவளும் பரமானந்தம் அடைந்தாள்.
அதனால் அவளுமே தமயந்தியுடன் கைக்கோர்க்க,அச்சமயம் “அண்ணி உங்க கூட அவ படுக்கப்போறதை நினைச்சு ரொம்ப பெருமைப்படாதீங்க…பயப்புள்ள விடற குறட்டை எட்டூருக்கு கேட்கும்…” என ஜித்தேந்திரன் அவளை எச்சரிக்க,
அவனின் இதழில் ஒரு குறும்பு புன்னகை தவழ்ந்தது.
அதைக்கேட்டு கடுப்பான தமயந்தி “டேய் அண்ணா வேணாம்…தூங்கப்போற சமயம் என்னை டென்ஷன் பண்ணாதே…அப்புறம் உன் வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும்…பார்த்துக்கோ” என விரல் நீட்டி அவனிடம் சண்டைக்கு செல்ல,
இப்போது அவ்விடத்திலிருந்த காஞ்சனா மாலா “லட்டு என் பேரன் சொக்க தங்கமுடி…நீ என்ன வண்டவாளத்தை இழுத்திட்டு வந்தாலும் நாங்க எதையும் நம்ப மாட்டோம்…அக்மார்க் செல்லக்குட்டி அவன்” என அவனின் கன்னம் கிள்ளி கொஞ்ச,
அவனோ “ஐய்யோ டான்னா டான் தான்…யூ ஆர் சோ ஸ்வீட்டு பாட்டி” என அவனும் அவரை கட்டியணைத்து கன்னத்தோடு கன்னம் உரசிக் கொஞ்சினான்.
அதில் கடுப்பான தமயந்தி இடுப்பில் ஒற்றை கைவைத்து “போதும்…போதும் அப்படியே உரசி உரசி இரண்டு பேர் தோளும் தேய்ஞ்சிடப்போகுது…ரொம்பதேன் ஹும்” என தலையை சிலுப்பிக்கொள்ள,
காஞ்சனா மாலாவோ மெல்லியதாக புன்னகைத்து “லட்டு நீ இப்போ எதுக்கு சிலுப்பிக்கிட்டு இருக்கே?அவன் எனக்கு செல்லக்குட்டினா நீ எனக்கு வெல்லக்கட்டி…என் பேரனுங்க பேத்திங்க எல்லாமே தங்க கம்பி தான்…வாடி என் ராசாத்தி” என அவளை நோக்கி பாசமாக கை நீட்டினார்.
அவ்வளவு தான்!
அதுவரை முகத்தை தூக்கி வைத்திருந்த தமயந்தி அடுத்த கணமே “பாட்டி” என கத்தி ஓடி வந்தவள்,அவரின் கரங்களில் சரண்புகுந்திருந்தாள்.
இருவரையும் தன்னோடு சேர்த்தணைத்து உச்சிமுகூர்ந்தவரை விழிகள் பனிக்க பார்த்திருந்தாள் முகிழ்மதி.
அவளின் மனம் எப்போதுமே பாசத்திற்காக ஏங்கியிருக்கிறது.
இப்போதும் அவர்களின் பிணைப்பை பார்த்தவுடன் அவளின் இதயத்தில் ஒரு வலி எழுந்தது.
அதை கவனித்தவர் போன்று “அட நீ ஏன்மா அங்கியே நிக்கறே?பேரன் பேத்தினா நீயும் தான் அதிலே அடக்கம்…இங்க வா” என அவளையும் விடாமல் அருகே அழைத்தவர்,அவளருகே வந்ததும் நெற்றியில் இதழ்பதித்து தன் அன்பை காட்டினார் அந்த மூதாட்டி.
அதில் அவளின் மேனி ஒரு முறை சிலிர்த்து அடங்கின.
அவளிற்கு புது விதமான உற்சாகம் சீறியெழ,அதனை விழி மூடி ஆழ்ந்து அனுபவித்த முகிழின் கன்னத்தை வருடி “என் பேரன் தங்கம்னா…நீ வைரம்…தங்கத்தோடு வைரம் இணைஞ்சா எப்பவுமே அதனுடைய மதிப்பும் மரியாதையும் உயர்ந்திடும்…இரண்டு பேரும் எப்பவும் ஒண்ணாவே இருங்க…எங்களுக்கு இந்த வைரம் எப்பவும் என் பேரனை அலங்கரிச்சிட்டே இருக்கணும்” என அவளிடம் நாசூக்காக இருவரும் இணைப்பிரியாமல் காலம் முழுவதும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதில் பட்டென விழி திறந்த மங்கைக்கு ‘என்ன புரிந்ததோ?’ “சரி” என தன்னை மீறி தலையாட்டியிருந்தாள்.
அவளின் விழியில் அந்த நினைப்பு தந்த உவகை மிகுந்திருந்தது.
அவளின் நெஞ்சிலோ ஒரு நெகிழ்வு!
அவளின் ஒத்துழைப்பில் அங்கிருந்த அனைவருக்கும் தான் பெரும் திகைப்பு!
வழக்கம் போல் எதுவும் புரியாமல் பிடித்து வைத்த களிமண் போல் மௌனமாக இருப்பாள் என்று அவர்கள் எண்ணியிருக்க,அவளின் இந்த மாற்றம் ‘அட பையன் வாழ்க்கை எப்படியோ தப்பிச்சதுடா சாமி’ என ரத்தினவேலிற்காக மகிழ்ச்சிக்கொண்டன.
தன்னை நோக்கி குனிந்திருந்த முகிழ்மதியின் கன்னம் தட்டியவர் “சரிடாம்மா நேரமாச்சு…நீங்க போய் தூங்குங்க” என பெண்கள் இருவரையும் அவர்கள் அறைக்கு அனுப்பி முயன்றார்.
அச்சமயம் ஜித்தேந்திரனோ மீண்டும் முகிழ்மதியிடம் “அண்ணி மறக்காமல் காதிலே பஞ்சை வைச்சிட்டு தூங்குங்க…இல்லை லட்டு விடறே குறட்டையிலே நீங்க தூங்கின மாதிரி தான்” என்றதும் ஒரு தலையணை வேகமாக அவனை நோக்கி பறந்து வந்தது.
அவை தன் மீது படுவதற்கு முன்பே அலேக்காக அதனை பிடித்திருந்த ஜித்து தங்கையை பார்த்து பளீச்சென்று புன்னகைக்க,அவளிற்கு ஆத்திரமாக வந்தது.
‘இவனை’ என பல்லைக்கடித்தவள்,குனிந்து நீள் விரிக்கையிலிருந்த மற்றொரு தலையணையை எடுக்க ஆயுத்தமாகியதும் “தமி” என அவளின் தாய் அதட்டியிருந்தார்.
உடனே தலையணையை கீழே வைத்தவள் “அம்மா அவன் தான் என்னை முதல்ல வம்பிழுத்தான்…அவனை என்னானு கேளுங்க” என சிணுங்கலாய் தமையனை பற்றி தாயிடம் குற்றப்பத்திரிகை வாசிக்க,
அவனோ அவளை வெறுப்பேற்றும் விதமாக நாக்கை கடித்து தலையாட்டி சிரிக்க “அம்மா அங்க பாருங்கம்மா….பழிச்சு காட்டறான் அண்ணன்” என சிறு குழந்தைப்போல் அவனை போட்டுக்கொடுத்தாள்.
அனைவரும் அவன் புறம் திரும்பியதும் அவனோ ஒன்றும் அறியாதவன் போல் முகத்தை வைத்து ‘நான் ஒண்ணும் பண்ணலையே?’ என தோளை குலுக்கி பாவமாக இதழை பிதுக்கி வைத்தான்.
அவனின் பாவமான பாவனையில் அப்படியே மதிமயங்கிய பெண்களும் “அவன் சிவனேனு தான் இருக்கான்…அவனை போட்டுக்கொடுக்கிறதை விட்டுட்டு நீ போய் தூங்கு” என அவளிடம் திரும்பி அதட்ட,
உடனே தமயந்தியோ இதழை சுழித்துவிட்டு ‘இருடா இரு…என்கிட்ட இந்த ஆட்டம் காட்டிறயில்லை…நாளைக்கு அப்பா வரட்டும் உன்னை அலறவிடறேன் பாருடா அண்ணா’ என முணுமுணுத்தவளின் குரல் அருகிலிருந்த முகிழ்மதியின் செவியிலும் விழுந்தது.
இதையெல்லாம் ஆர்வமும் குதூகலமுமாய் பார்த்திருந்தாள் அவள்.
அவளிற்கு இந்த அண்ணன் தங்கை சண்டை சுவாரசியமாக இருந்தது.
ஏனெனில்,அவனின் சேட்டையை பார்த்த ஒரே ஆள் முகிழ்மதி மட்டும் தான்!
அவர்கள் சண்டையிட்டாலும் அதில் சிறிதும் வன்மமில்லை.அவர்கள் இருவரது பாசப்பிணைப்பு மட்டுமே தெரிந்தன.
ஆகையால்,அவளின் இதழ்கள் இலேசாக விரியவும் செய்தன.
ஜித்தேந்திரன் யாவரும் அறியாமல் வெறுப்பேற்றி கொண்டே இருக்கவும் கடுப்பான தமயந்தி “டேய் அண்ணா…உன் க்யூட்நஸை நம்பி இந்த தாய்குலங்கள் வேணா ஏமாறலாம்…ஆனால் உனக்கு வரப்போற பொண்டாட்டி உன்னை அடக்கி வைக்கிறவாளா தான் வரப்போறாள்…அவ முன்னாடி நீ பேசறதுக்கே அலறிப்போவே…இது என்னோட சாபம்டா…உன் கனவுலே மோகினியா வரட்டும்” என சூளுரைத்து சாபமிட்டவளை பெரியவர்கள் அதட்ட,
ஜித்தேந்திரனோ “அண்ணி சீக்கிரம் கைதாங்கலா அவளை கூட்டிட்டு போயிடுங்க…இல்லை பாட்டியம்மாவுக்கு கோபத்தில் பிபி ஏறி மயங்கி விழுந்திடப்போகுது” என அப்போதும் அவளை விடாமல் கேலிச்செய்ய,
“அடேய்” என அதில் வெகுண்ட பெண்ணவள் மீண்டும் தலையணையை தூக்கியடித்தாள்.
அவனோ மீண்டும் அலேக்காக அதனை பற்றிக்கொண்டு அவளிடம் பழிப்புக்காட்டி சிரிக்க,
“டேய் பேராண்டி நீ தான் அவளை வம்பிழுக்கிறதா?” என செல்லமாக அவனின் காதை பற்றி பாட்டி திருக,
அவனோ வலிக்கவே இல்லையென்றாலும் “ஆ..” என அலறினான்.
அதைப்பார்த்து “நல்லா வேணும்டா அண்ணா உனக்கு” என நாக்கை துருத்தி அழகுக்காட்டினாள் தமயந்தி.
அவ்விடமே ஒரே கலகலப்பாக மாறிவிட,முகிழ்மதி அங்கு வெறும் பார்வையாளர் மட்டும் தான்!
அவளிற்கு அனைத்தையும் பார்ப்பதற்கு ஆசையாக இருந்தது.
கணவனின்றி வாடியிருந்த அவளின் மனம் கூட இலேசானது போல் உணர்ந்தாள் அவள்.
வானதியோ “ஜித்து தமி சும்மா இருங்க…காலையிலே முகிழுக்கு எக்ஸாம் இருக்கு…போய் தூங்கட்டும்…உங்க சேட்டையை அப்புறம் வைச்சுக்கோங்க” என அவர்களின் அன்னையாய் குரலுயர்த்தி கண்டித்ததும் “சரி…சரி எல்லாரும் போய் தூங்குங்க” என காஞ்சனா மாலாவும் எழுந்துக்கொண்டார்.
அதுவரை இருந்த விளையாட்டு பாவனை முற்றிலும் அகன்றவனாய் “அம்மா குட் நைட்” என தாயை அணைத்து அவரின் கன்னத்தில் முத்தமிட்டு விலகியவன் “லட்டு நாளைக்கு பீஜி ஃபார்ம் வாங்க காலேஜுக்கு போகணும்னு சொன்னீயாம்…நீ தனியா போகவேணாம்…உன் கூட வர்றேன்” என அவளிற்கு மூத்தவனாக பொறுப்பாக பேசினான்.
இது தான் ஜித்தேந்திரன்…அசட்டையாக குறும்புத்தனம் செய்தாலும் அவனது கடமையை சிறப்பாக என்றும் செய்துவிடுவான்.
அதன்பொருட்டே இருவருக்கும் எப்போதும் ஒத்துப்போகும்.
ரத்தினவேலுவை விட ஜித்தேந்திரனிடம் தான் அவளிற்கு நெருக்கம் அதிகம்!
தற்போதும் அவனின் பாசத்தில் கட்டுண்ட பெண் “அண்ணா நான் தனியா போய்கிறேன்…உனக்கு ஒர்க் இருக்கும்…நீ அதை பாரு” என தணிந்த குரலில் உரைத்தாள்.
அவனோ “வேலை எப்பவும் இருக்க தான் செய்யும் லட்டு…முதல்ல குடும்பம் தான் முக்கியம்…வீர் அண்ணா இருந்தால் கூட பரவாயில்லை…அண்ணா அண்ணிய கூட்டிட்டுப்போறாங்க…சோ நீ தனியா போக வேணாம்…உன் கூட நான் வர்றேன்” என அழுத்தமான குரலில் கூறி முடித்துவிட்டான்.
அவளும் வேறுவழியின்றி “சரி அண்ணா” என தலையாட்டி புன்னகைத்தவள் “குட் நைட்” என தங்கள் சண்டையை மறந்து இலகுவாக சொல்ல,
ஆனால் அவனோ அடுத்த கணமே விழியில் குறும்பு மின்ன “குட் நைட்…குட் நைட்…என் கனவுலே மோகினி வர மாதிரி உன் கனவுலே ஈவில் டெட் பேய் வரட்டும்” என சிரியாமல் உரைத்து அவளை சீண்டியிருந்தான்.
அவளோ “ஜித்து…” என பல்லைக்கடிக்க,
அவனோ வாய்விட்டு சிரித்து அவளின் கோபத்தை ரசித்தவனாய் “சரி சரி விடு…எனக்கொரு மோகினி மாதிரி உனக்கொரு மோகனன் வரட்டும்” என அவளின் தலையை பிடித்து ஆட்டி கூறியவன் முகிழ்மதியிடம் “அண்ணி குட் நைட்…உங்களுக்கு அண்ணா ட்ரீம்ஸ்” என்றான் கண்சிமிட்டி…
அவனின் பேச்சில் அவளின் முகமோ ஒரு கணம் திகைத்து பின்பு இயல்புக்கு வர,அவளருகே குனிந்தவன் “அண்ணி உங்க ரூமிலே பஞ்சு இருக்கில்லை…இல்லைனா சொல்லுங்க…நான் எடுத்திட்டு வர்றேன்” என மெதுவாக பேசுகிறேன் என்று தமயந்தி காதில் விழுவது போல் சத்தமாக அவன் பேச,
இப்போது தங்கையினுள் அடங்கிய புகை மீண்டும் சீறி எழ “டேய் போடா வெண்ணை” என முகத்தை சுழித்து திட்டியவள் “அண்ணி நீங்க வாங்க…நாம்ப போய் தூங்கலாம்” என அவளின் கரம் பற்றி இழுத்து சென்றாள்.
முகிழ்மதியோ ஜித்தேந்திரனிடம் திரும்பி “குட் நைட்” என மெல்லிய குரலில் சொல்ல,
அவனும் சிரித்துக்கொண்டே தலையசைத்து காதில் விரல் வைத்து காட்டி ‘பஞ்சு’ என இதழ்கடித்து சிரித்தப்படி கிசுகிசுப்பான குரலில் சொல்ல,
அவளின் புன்னகை பெரிதாகியது என்றால்,தமயந்தியோ தமையனின் திருகுத்தாளம் அறிந்தவளாய் “அம்மா” என பல்லைக் கடித்து தாயிடம் முறையிட,
“டேய் சும்மா இருடா” என அதட்டிய தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு “சரி தாய்க்குலமே” என பட்டென அடங்கியவன்,
பாட்டி தனியாக நடந்து செல்வதை கண்டுவிட்டு “பாட்டி இருங்க…அதுக்குள்ள என்ன அவசரம்?நான் வந்து உங்களை ரூமிலே விட்டுட்டு அதுக்கு பிறகு தூங்கப்போறேன்” என ஓடிச்சென்று அவரை தாங்கிக்கொண்டான்.
தனது பாட்டியை கைத்தாங்கலாக அழைத்து சென்ற மகனை கண்டு பெருமிதம் கொண்டார் வானதி.
சிறந்த மகனாய்…சிறந்த பேரனாய்…தங்கைக்கு சிறந்த அண்ணனாய் என ஒரு ஆண்மகனிற்கான அனைத்து லட்சணங்களும் கொண்ட ஜித்தேந்திரனை பார்க்கும் போது அவருக்கு நெஞ்சம் நிறைந்தது.
மற்ற இரு மக்களை காட்டிலும் அவனை பிடிப்பதற்கும் இது தான் காரணம்!
எப்போதும் தன்னை சுற்றி இருப்பவர்களை கலகலப்பாக வைத்துக்கொள்ள நினைப்பவன் அவன்!
அவனின் வாழ்வு செழிப்பாக அமைய வேண்டும் என அந்த தாயின் உள்ளம் பெரும் அவா கொண்டது.
உலகத்திலே அவனிற்கு சிறப்பான ஒரு பெண் ஒருத்தி கிடைக்க வேண்டும் என்று அவர் எண்ணினார்.
ஆனால் ரோகிணி அதற்கு ஏற்றவளாக இருப்பாள் என்று அவருக்கு சிறிதும் தோன்றவில்லை.
அவளை பற்றி எண்ணியவுடன் அவரின் முகம் சுருங்கிவிட்டது.
ஆயினும்,மகனே அவளை திருமணம் செய்துக்கொள்ள ஒப்புக்கொண்ட பிறகு அவரால் என்ன செய்திட முடியும்?
அதனால் கடவுளின் மீது பாரத்தை போட்டுவிட்டு இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.
இங்கு அவளுடன் அறைக்குள் வந்த தமயந்தி அவளது தமையனை போல் நீள்விரிக்கைக்கு சென்று படுக்கவும் “ஏன் அண்ணி?பெட்டிலே வந்து படுத்துக்கோங்க” என முகிழ்மதி அவளிடம் அழைப்பு விடுக்க,
“இல்லை அண்ணி…கப்பிளிஸ் கட்டிலே படுக்கிறது எனக்கு சரிவராது…இது அவங்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு இடம்…நீங்க படுங்க” என விளக்கம் சொல்லிவிட்டு நீள்விரிக்கையில் படுத்துக்கொண்டாள்.
அவளின் அந்த பூடகமான பேச்சை கேட்ட முகிழ்மதிக்கு அப்போது தான் ஒன்று உறைத்தது.
கணவன் இதுவரை தன்னுடன் ஒரு நாளும் இங்கு படுத்ததில்லை என்பது!
முதல் நாள் இரவுக்கு பிறகு அவளுடன் ஒன்றாக ஒரே கட்டிலில் படுக்காதது ஏனோ வித்தியாசமாக தோன்றியது.
அவளும் அவனை ஒரு முறை அழைத்ததோடு சரி…அதன்பிறகு அவனை அவள் அழைக்கவில்லை.
‘ஒருவேளை நான் கூப்பிடணும்னு தான் அவர் காத்திருக்காரோ?’ அவளிற்குள் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்க தமயந்தி ‘குட் நைட்’ என்று சொன்னது கூட அவளின் காதில் விழவில்லை.
இயந்திரத்தனமாய் கட்டிலில் ஏறி படுத்துக்கொண்ட முகிழ்மதியின் சிந்தையெங்கும் அவளின் மணாளன் வந்து ஆக்கிரமித்திருந்தான்.
அவன் ஊருக்கு சென்றதலிருந்து அவளிற்கு அவன் ஒரு முறை கூட அழைக்கவில்லை என்று அப்போது தான் புரிந்தது.
‘ஏன் அவர் கூப்பிடவே இல்லை?’ என்று எண்ணியவளின் அகமும் முகமும் சுருங்கிவிட்டன.
காலையிலிருந்து அவளும் அவனுடன் பேச முயற்சிக்கவில்லை என்பதை வசதியாக மறந்திருந்தாள் பாவையவள்.
வழக்கமாய் மெத்தையில் படுத்தவுடனே நித்திரையில் ஆழ்ந்துவிடும் பெண்ணவள் அன்றோ வெகு நேரம் கணவனை பற்றி எண்ணியப்படியே உறங்காமல் விழித்திருந்தாள்.
இரவு எப்போதும் உறங்குவதற்கு முன்பு அவன் சொல்லும் ‘இரவு வணக்கம்’ இல்லாமல் அவளிற்கு உறக்கம் வர மறுத்தது.
இரவு வணக்கத்தை விட அவளின் மனம் அதிகமாக ஏங்கியது, அவளிற்கு அவன் கொடுக்கும் இரவு முத்தத்தை எண்ணி தான்!
அந்த முத்தத்தில் அவள் மோகத்தை மட்டும் உணரவில்லை…அவனது அன்பையும் சேர்த்தே அவளின் பெண் நெஞ்சம் உணர்ந்திருந்தது.
அதனால் அச்சமயம் அவனிற்கு அவள் ஈடானவள் இல்லை என்ற உணர்வுகள் எல்லாம் அவளின் ஆழ் மனதில் புதைந்துப்போயிருந்தன.
அவளின் நெஞ்சிலும் சிந்தனையிலும் நீக்க மற நிறைந்துப்போயிருந்தான் முகிழ்மதியின் கண்ணாளன்!
அவனை பார்த்தற்காக…அவனிடம் பேசுவதற்காக அவளின் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் துடித்தன.
ஆனால் அவனை அழைத்து பேசுவதற்கான துணிச்சல் மட்டும் அவளிற்கு வரவில்லை.
அவளை போலவே அவளின் மணாளனும் தன்னவளை காணும் வேட்கையில் தவித்துக்கொண்டிருந்தான்.
அவனிற்கும் அவளை முத்தமிடாமல் உறக்கம் வர மறுத்தது.
ஒரு காரணமாகவே அவன் அவளை அழைக்கவில்லை.அவளாகவே தன்னை தேடி தனக்கு அழைக்கிறாளா என்று பரிசோதிக்க அவன் மனம் விரும்பியது.
ஆனால் அவனின் மனையாள் கல் நெஞ்சம் கொண்டவள் போலும்!
அன்று முழுவதும் அவளின் அழைப்பிற்காக அவன் காத்திருந்தும் அவனிற்கு கிட்டியது ஏமாற்றம் மட்டும் தான்!
அன்பை அள்ளி கொடுப்பது மட்டும் காதல் அல்ல…மற்றவரிடம் அதற்கு இணையான அன்பை பெறுவதும் காதல் தான்!
அவனும் எத்தனை நாட்கள் அவனின் காதலை மட்டும் கொடுத்துக்கொண்டே இருக்க முடியும்?
அவளிடமிருந்து அன்பை பெறவும் அவன் ஏங்கினான்.
தற்போது அவை கிடைக்கவில்லை என்றவுடன் ‘அதற்கு கூட நான் தகுதியற்றவனா?’ என அவனின் நெஞ்சம் விம்மி தணிந்தது.
அவளின் துயரங்கள்,குணங்கள் அனைத்தும் அவன் அறிவான் தான்!
ஆனால் அவளை மட்டுமே உயிராய் நேசிக்கும் அவனின் எதிர்பார்ப்பை அவனால் தடுக்க முடியவில்லை.
அவளிடம் அன்பை எதிர்பார்த்து ஒவ்வொரு முறையும் அவன் தோற்றுக்கொண்டே இருந்தான்.
இந்த முறை அவனின் ஏமாற்றம் அவனுள் ஒரு விரக்தியையும் சினத்தையும் அதிகரிக்க வைத்திருந்தது.
அதனால் அவனும் இம்முறை எக்காரணத்தை கொண்டும் அவளிற்கு அழைத்து பேசவே கூடாது என தீர்க்கமான முடிவெடுத்திருந்தான்.
இவர்களது வாழ்வில் ஒரு புறம் அலையடித்து கொண்டிருந்தது என்றால்,
தமயந்தியின் சொப்பனத்தில் ஜித்தேந்திரன் சொன்னது போல் அவளின் மோகனன் வந்து வீசிகரமாய் புன்னகைத்துக்கொண்டிருந்தான்.
அதேப்போல் ஜித்தேந்திரனின் கனவிலோ மெய்யாகவே ஒரு மோகினி தான் வந்து அவனை கோபமாய் முறைத்துக்கொண்டிருந்தாள்.
அந்த முகம் அவனின் கனவில் தோன்றியதும் அலறியடித்து எழுந்து அமர்ந்த ஜித்தேந்தரனிற்கு முகமெல்லாம் வியர்த்துவிட்டது.
‘ச்சை அவ எதுக்கு என் கனவுலே வர்றாள்?’ என விழிகளை அழுந்த தேய்த்துவிட்டவனின் மனக்கண்ணிலும் அவளின் பிம்பமே?
மைவிழி காரிகையின் தீட்சண்ய விழிகள் அவனை மேலும் அவளிற்குள் இழுப்பது போன்ற ஒரு உணர்வு எழ ‘ஷிட்…எனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு’ என தலையிலடித்துக்கொண்டு மடிக்கணினியை திறந்து அமர்ந்துவிட்டான்.
சந்திரமதி உறங்க பிடிக்காமல் அன்று தன்னை சந்திக்க வந்த நபரை பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
வீரோ நள்ளிரவு என்றும் பாராமல் தாயை காண்பதற்காக மனநல மருத்துவமனைக்கு சென்றுக்கொண்டிருந்தான்.
முகிழ்மதி 63:

தன் தாயை காண்பதற்காக மருத்துவமனை சென்றிருந்த வீரின் உள்ளமோ தாய் இருந்த கோலத்தை கண்டு கலங்கிப்போனது.
சுத்தமான பருத்தி புடவை அணிந்து அதற்கு ஏற்றாற் போன்று கழுத்து வரையிலான கைசட்டை,நெற்றியில் நடுத்தரமான பொட்டு மற்றும் கூந்தலை தூக்கி கொண்டையிட்டு ஒரு கம்பீரமான தோரணையில் வலம் வருபவர் தேவகி!
அவரை காண்போருக்கு அவரின் மேல் உள்ள மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
அப்படியான தெய்வ கடாட்சம் உள்ள பெண் அவர்.
விபத்து நடந்தேறிய சமயம் அவருக்கு வயது 33 மட்டுமே!
அவரின் அழகு பார்க்கும் அனைவரையும் சுண்டியிழுத்தது.
வயது முப்பதை கடந்திருந்தாலும் பார்ப்பதற்கு 25 வயது பெண் போலவே இளமையாக இருப்பார்.
அப்படியான அழகும் அறிவும் சேர்ந்த தோற்றத்தில் பார்த்த பெண்மணியை இவ்வாறு மனநல மருத்துவமனையில் காண்பதே ஒரு வலி தான்!
அதிலும் தலைவிரி கோலமாய் கசங்கிய ஆடையில் இருப்பவரோ “ஆ…” என ஆக்ரோஷமாக மூடியை இழுத்துபிடித்து கத்திக்கொண்டு இருந்தார்.
அவரை சுற்றி நின்ற மருத்துவர் மற்றும் செவிலியர் யாராலும் அவரின் ஆவேசத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
விரலிலிருந்த நகத்தால் தன் முகத்தை கீறி வெறிப்பிடித்தாற் போன்று கத்தியவரை அவனால் கண்கொண்டு காணவே முடியவில்லை.
இறந்துப்போன நபரை மீட்டெடுத்து வரக்கோரினால் அவனும் என்ன தான் செய்வான்?
அவரிடம் அவள் இந்த உலகத்தில் இல்லை என்று கூறினாலும்,அவரின் சிந்தைக்கு எதுவும் எட்டவில்லை.
தன் வயிற்றில் பத்து மாதம் சுமந்தெடுத்த மகளை காண அந்த தாயுள்ளம் தவித்தது.
தாயின் நிலைமையை கண்டு அவனிற்கு இதயமே வெடிக்க “அம்மா…” என நாதழுதழுக்க அவரை அழைத்துக்கொண்டு வேகமாக நெருங்கியவனை பார்த்தவுடன் அவரின் விழிகள் மின்னின.
“வீ…ர்…வீ..ர் நட்ச…த்திரா எங்கே?” என அனைவரையும் ஒரே நேரத்தில் உதறி தள்ளிவிட்டு அவனிடம் ஓடி வந்தார்.
அவருக்குள் எப்படி அப்படி ஒரு ஆவேசம் வந்ததோ தெரியவில்லை…சுற்றியிருந்த நால்வரை பிடித்து தள்ளியிருந்தார்.
அவர்களோ ஆளிற்கு ஒரு புறம் சிதறி விழுந்ததை பார்த்தவனிற்கு பெரும் திகைப்பு!
இப்பூவுலகிலே மிகச்சிறந்தது தாய் பாசம் என்பார்கள்.
அதற்கிணங்க மகள் என்றதும் வலிமை இழந்து கிடந்த பெண்மணியிற்கு யானை பலம் வந்திருந்தது.
தன்னிடம் ஓடி வந்தவரை தன் முரட்டுக் கரங்களில் தாங்கி பிடித்த வீர் “அம்மா ஒண்ணுமில்லை…ஒண்ணுமில்லைம்மா நான் வந்திட்டேன்” என அவரை அணைத்து சமாதானம் செய்தான்.
சில வினாடிகள் அவனின் அணைப்பில் கட்டுண்டு மௌனம் காத்த தேவகியோ சட்டென அவனை சீற்றத்துடன் பிடித்து தள்ளிவிட்டிருந்தார்.
அதில் பலம் பொருந்திய ஆடவனான அவனே சிறிது தடுமாறிவிட்டான்.
“வீர்…” என அனைவரும் அவனை தாங்கி பிடிக்க வர,
அவனோ அனைவரிடமும் ஒற்றை கரம் நீட்டி ‘வேண்டாம்’ என தலையசைத்து தடுத்து நிறுத்திவிட்டான்.
அவரோ அவனை தள்ளி விட்டதை பற்றிய சிந்தையின்றி “நட்ச…த்திரா வேணும்…” என சிறு குழந்தை போல் தன் கூந்தலை இழுத்து பிடித்து தன்னை தானே காயப்படுத்திக் கொண்டார்.
அவரின் பிடியில் வேரோடு சில மூடிக் கற்றைகள் வந்திருந்தது.
அதைப்பார்த்தவனிற்கு இதயத்தை யாரோ குத்தி கிழிப்பது போல் வலி உண்டாக பதறிப்போய் அவரிடம் வந்தான்.
அவரை மீண்டும் தன் கைவளைவிற்கு கொண்டு வந்த வீர் “அம்மா பிளீஸ்ம்மா…நீங்க உங்களை காயப்படுத்தாதீங்க…நாளைக்கு வரும் போது கண்டிப்பா நட்சத்திராவை கூட்டிட்டு வர்றேன்…இப்போ நீங்க வாங்க தூங்குங்க” என அவரை தோளோடு அணைத்து கூட்டி சென்றவனின் கண்ணில் நீர் வழிந்தது.
மகனின் கண்ணில் நீர் வழிந்தால் கூட அவரின் உள்ளத்தில் உதிரம் கொட்டும்.
இன்றோ அவை எதுவும் அறியாத நிலையில் சித்தம் கலங்கியிருந்தார் அவர்.
அவரின் இதழ்கள் மட்டும் “நட்சத்திரா…நட்சத்திரா” என முணுமுணுத்து கொண்டிருந்தன.
அவனோ அவரை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு “நாளைக்கு தங்கச்சியை கூட்டிட்டு வர்றேன்மா…நீங்க தூங்கு” என கண்ணில் வழிந்த கண்ணீரை நடு விரலால் சுண்டிவிட்டு அவரை தட்டிக்கொடுத்து உறங்க வைத்தான்.
அவரும் சிறிது சிறிதாக கண்ணயரத் தொடங்கியதும் கட்டிலை சுற்றி நின்றிருந்த அனைவரையும் வெளியே போகுமாறு கண்சிமிக்கை செய்தான்.
அவர்களும் ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து வெளியேறினார்கள்.
தேவகி ஆழ்ந்த நித்திரைக்கு சென்றதும் அவரின் களைந்த கூந்தலை வருடி சரிசெய்த வீர்,அவரின் முகத்தில் கீறியிருந்த காயத்திற்கு விரல்கள் நடுங்க மருந்திட்டான்.
‘உலகத்திலே இல்லாத ஒருத்தியை எங்கயிருந்தும்மா நான் கூட்டிட்டு வருது…தங்கச்சி என்னை விட்டுட்டு போன மாதிரி நீங்களும் என்னை விட்டுட்டு போயிடாதீங்கம்மா’ என மனமுருகி அவரிடம் அவன் வேண்டிக்கொண்டான்.
இரவு முழுவதும் அவர் அருகே உறங்காமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான் வீர்.
விடிய விடிய அவரை கண்ணின் இமைப் போல் வீர் பார்த்துக்கொண்டிருக்க,வெய்யோனின் கதிர்கள் பூமியில் தன் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியிருந்தான்.
அச்சமயம் மருத்துவர் அவனை தனியாக அழைத்தார்.
அவனோ ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் அன்னையை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் வெளியேறினான்.
அவனின் நெஞ்சம் பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல் பாரமாகியிருந்தது.
அவன் வெளியே வந்தவுடன் மருத்துவர் அவனிடம் “வீர் இப்படியே போனால் அவங்களோட கண்டிஷன் கிரிட்டிக்கலாகிடும்…அது அவங்களோட உயிருக்கே ஆபத்து” என்றதும் அவனின் தேகம் விறைத்துப்போனது.
அவனிற்குள் அந்நொடி புயல்…சூறாவளி…சுனாமி என அனைத்து இயற்கை பேரிடர்களும் ஒரே நேரத்தில் அவனை வந்து தாக்கியது போலிருந்தது.
ஆயினும்,தன் நெஞ்சில் தங்கையின் பெயர் இருக்கும் இடத்தில் கைவைத்து தன்னை தானே ஆசுவாசப்படுத்தியவன் மருத்துவரிடம் “பழைய நிலைமைக்கு அவரை மாத்த வேற வழியே இல்லையா டாக்டர்?” என்று கேட்டவனின் குரல் அவனையும் அறியாமல் நடுங்கின..
அவனின் வலி அவருக்கும் வேதனையை கொடுத்தாலும் வேறுவழியின்றி “நோ அதர் வே வீர்…சமீபமா அவங்க நிலைமையை நீங்களே பார்க்கறீங்கயில்லை….உங்களை தவிர வேற யாருலையும் அவங்களை சமாளிக்க முடியாது வீர்…இப்படி தான் ரொம்ப வயலெண்ட்டா நடந்துக்கிறாங்க…ஒண்ணு அந்த பொண்ணு நட்சத்திராவை கொண்டு வந்து இவங்க முன்னாடி நிறுத்தணும்…அதுக்கு பாசிபிளிட்டி இல்லை…அடுத்து,அவங்க கொஞ்சமா அடங்கிப்போறது உங்ககிட்ட மட்டும் தான்…நீங்க அவங்க பக்கத்திலே இருந்தால் கொஞ்சம் குணமாக வாய்ப்பிருக்கு…உங்களுக்கு வேணும்னா ஒரு நர்ஸை ஹெல்ப்புக்கு அனுப்பறேன் வீர்…நான் சொல்லற சமயம் மட்டும் அவங்களை ட்ரீட்மென்ட்டுக்கு இங்க கூட்டிட்டு வந்திடுங்க…வேற எதுவும் பண்ணமுடியாது” என தன் முடிவை தெரிவித்து அவனின் பதிலுக்காக அவர் எதிர்பார்த்து காத்திருக்க,
அவனும் ஒரு பெருமூச்சுடன் “சரி ஓகே டாக்டர்…அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க…அதே மாதிரி அவங்களை பார்த்துக்க ஒரு நர்ஸை ஏற்பாடு பண்ணிட்டு எனக்கு சொல்லுங்க” என கனந்த குரலில் கூறியிருந்தான்.
அவரும் “சரி வீர்” என தலையாட்டியவர் அவனின் தோளில் ஒரு முறை ஆறுதலாக அழுத்திவிட்டு சென்றார்.
வீருக்கு தாய் தன்னுடன் வருவதில் அலாதி சந்தோஷம் தான்!
ஆனால் அவனை சுற்றி ஆபாயங்கள் பல சூழ்ந்திருக்க,இந்நிலையில் உள்ளவரை எவ்வாறு தன்னுடன் வைத்துக்கொள்வது என்று அவன் கலங்கினான்.
அவன் விழி மூடி அருகிலிருந்த சுவற்றில் ஒற்றை காலை குற்றி அப்படியே சில வினாடிகள் தலைசாய்த்து நின்றுவிட்டான்.
இதயத்தில் நிரம்பியிருந்த வலி அவனின் முகத்தில் பிரதிபலித்தது.
அவனிற்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை.
நள்ளிரவு மருத்துவமனைக்கு வந்திருந்தான் அவன்.
இப்போது விடியலே வந்திருந்தது.அவனிற்கோ எப்போது என் வாழ்வில் விடியல் வரும் என்ற ஏக்கம் தோன்றியது.
அவனின் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டு வருவதற்காக ஒருத்தி பல வருடமாய் காத்திருக்கிறாள்.ஆனால் அவன் தான் அதற்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறானே?
அவன் வெளியில் மட்டுமே அவளின் அன்பை வெறுத்து ஒதுக்குகிறான்.ஆனால் அவனின் உள்ளமோ அந்நொடி அவளின் மடியிற்காக ஏங்கி தவித்தன.
அவனையும் அறியாமல் அவனிதழ்கள் “தமி” என முணுமுணுத்திருந்தன.
அவனின் அழைப்பு அவளிற்கு கேட்டதோ இல்லையோ அவளின் தமையன் ரத்தினவேலிற்கு கேட்டிருந்தது போலும்!
தன் ஆரூயிர் நண்பனின் கவலையை அறிந்த ஆபத்பாந்தவனாய் அவனிற்கு அழைத்தான்.
அவனின் அலைப்பேசி கிண்கிணித்ததும் விழிகளை அழுந்த துடைத்துக்கொண்டு இமை திறந்த வீர் அலைப்பேசியை தனது கால்சட்டை பையிலிருந்து எடுத்தான்.
அதில் ஒளிர்ந்த நண்பனின் பெயரை கண்டதும் அவனின் மனம் கலங்கிப்போயின.
தன் குரலை வைத்தே அவன் அனைத்தையும் அறிந்துவிடுவான் என்பதறிந்து இதழை குவித்து ஊதி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அவனின் அழைப்பை ஏற்றான்.
“சொல்லு பூபதி?என்ன காலையிலே எனக்கு கூப்பிட்டிருக்கே?” என உரையாடலை அவன் வெகு சாதாரணமாக ஆரம்பித்தான்.
அவனோ “அங்க என்ன நடக்குது வீர்?அம்மா இவ்வளவு கிரிட்டீக்கலா இருக்காங்க…நீ என்கிட்ட எதுவும் சொல்லவே இல்லை…முதல்ல என்னாச்சு சொல்லு” என அலைப்பேசியின் வழியே இரைந்தவனின் குரலில் கோபம் கொப்பளித்தது.
அவனோ “பெருசா ஒண்ணுமில்லை…” என அப்போதும் சமாளிக்க முற்பட,
“வீர் எனக்கு தேவையானது உண்மை மட்டும் தான்” என அழுத்தம் திருத்தமாக உரைத்ததும்,அலைப்பேசியின் வழியே அவனின் சீறலான சுவாசத்தை அறிந்த வீர் வேறுவழியின்றி இங்கு நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் கூறியிருந்தான்.
இடை இடையே அவனையும் அறியாமல் அவனின் குரல் கரகரத்தது.
அவன் பேசி முடித்த கணமே எதிர்புறம் ஒரு ஆழ்ந்த மௌனம்!
அவனின் வேதனை இங்கிருந்த வீருக்கும் நன்றாகவே தெரிந்தன.
வெளியூருக்கு சென்றவனை வருத்த வேண்டாம் என்று எண்ணியே அவன் எதையும் அவனிடம் கூறவில்லை.
இப்போது நண்பனின் கவலையறிந்து “பூபதி நீ ஒண்ணும் கவலைப்படாதே…எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்…நீ நாளைக்கு ஊருக்கு வா…மீதிய அப்புறம் பேசிக்கலாம்” என வீர் மொழிய,
“நீ எதையும் தனியா பார்க்கணும்னு அவசியமில்லை வீர்…ஷீ இஸ் மை ரெஸ்பான்சிபிளிட்டி…நீ போய் அம்மா கூட இரு…மீதிய நான் பார்த்துக்கிறேன்” என அதிகாரமாய் அவனிற்கு கட்டளையிட்டான் ரத்தினவேல்.
வீரோ தனது தோழனை தொந்தரவு செய்ய மனமற்று “இல்லை பூபதி…நானே…” என பேச தொடங்கியதும்,
“நான் சொன்னதை மட்டும் நீ செய்” என குரலுயர்த்தி கட்டளையிட்டிருந்தான்.
அதற்கு மேல் அவனின் ஆணையை மீற முடியாமல் “சரி” என தலையாட்டி சம்மதம் தெரிவித்தான் வீர்.
ஆபத்தில் உதவுபவனே நல்ல நண்பன்!
அவனிற்கு தேவையான சமயம் வீரும்…இவனிற்கு தேவையான நேரம் ரத்தினவேலும் என்று ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாக இருந்த விதமே அவர்களின் ஆழமான நட்பை எடுத்துக்காட்டின.
நண்பனின் ஆதரவில் வீர் உருகிய சமயம் அதனை தடைச்செய்யும் விதமாக தாயின் அறையிலிருந்து மீண்டும் கூச்சல் ஒலிக்க தொடங்கின.
வீரோ அன்னையின் குரல் கேட்டதும் அலைப்பேசியை துண்டிக்காமல் அப்படியே எடுத்துக்கொண்டு ஓடினான்.
அவரோ உறங்கி எழுந்ததும் “நட்சத்திரா…” என அழுது ஆர்ப்பாட்டம் செய்துக்கொண்டிருந்தார்.
“அம்மா…” என வீரின் தவிப்பான குரல் கேட்டதும் “வீர் வீர் நட்சத்திரா…” என இதழை பிதுக்கி அவர் அழ ஆரம்பித்துவிட்டார்.
தாயின் அழுகை அவனின் இதயத்தை கசக்கி பிழைய வேகமாக ஓடிச்சென்று அவரை அணைத்துக்கொண்டவனின் கையிலிருந்த அலைப்பேசி நழுவி அவரின் மடியிலே விழுந்தது.
அலைப்பேசி தன் மடியில் விழுந்ததும் கவனம் களைந்த தேவகி திரையில் ஒளிர்ந்த ரத்தினவேல் மற்றும் முகிழ்மதியின் புகைப்படத்தை பார்த்து கையிலெடுத்தார்.
அவரின் அழுகை நின்றதும் வீரின் கவனமும் களைந்திட “அம்மா” என அழைத்துக்கொண்டே தாயினை நோக்கி திரும்பினான்.
அவரோ தன் கையிலிருந்த அலைப்பேசியையே வெறித்து பார்த்திருப்பதை கண்டுவிட்டு திரையை நோக்கினான்.
அப்போது தான் அவன் ரத்தினவேலின் அழைப்பை துண்டிக்கவில்லை என்பது உறைக்க ‘காட்’ என அவசரமாக அவரிடமிருந்து அலைப்பேசியை பறிக்க முற்பட்டான்.
ஆனால் அவரோ அலைப்பேசியை அவனிடம் தராமல் இறுக்கிப்பிடித்து “நட்சத்திரா…நட்சத்திரா…” என பிதற்ற,
அவனிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
நண்பன் வேறு இங்கு நடக்கும் அனைத்தையும் கேட்டு வருந்துவானே என்றெண்ணி “அம்மா கொடுங்க…” என அலைப்பேசியை வேகமாக பறிக்க முயன்றான்.
அவரோ பிடிவாதமாக தன் நெஞ்சில் வைத்து அழுத்திக்கொண்டு “நட்சத்திரா…நட்சத்திரா…” என தர மறுத்து அழவும்,
அதுவரை அவனிடமிருந்த பொறுமை அனைத்தும் காற்றில் பறந்துப்போனது.
“அம்மா நட்சத்திரா உயிரோடவே இல்லை…அவ எப்பவோ செத்திட்டாள்…அவளை நினைச்சு என்னை உயிரோடு கொன்னுட்டு இருக்கீங்கனு உங்களுக்கு புரியுதா இல்லையா?ஏன்மா என்னை புரிஞ்சுக்கவே மாட்டிக்கிறீங்க” என தன்னை மீறி அன்னையிடம் வெடித்தவன் இறுதியில் உடைந்து அழவே ஆரம்பித்துவிட்டான்.
திடக்காத்திரமான அந்த ஆடவனின் அழுகையை கண்டு அங்கிருந்த அனைவரின் கண்களும் கசிந்தன.
பல வருடங்களாய் அவனை பார்த்து வரும் அனைவருக்கும் தெரியும்…அவன் அவ்வளவு எளிதில் உடைந்துவிடக்கூடியவன் அல்ல என்பது!
அப்படியான மனிதன் உடைந்து அழவும் அங்கு உயிரற்று இருந்த பொருட்கள் கூட கண்ணீர் சிந்தின.
ஆனால் அவனின் அன்னையோ எந்த வித உணர்வுகளும் பாதிக்காதவராய் “நட்சத்திரா…” என சிறுப்பிள்ளை போல் பிதற்றிக்கொண்டே அலைப்பேசியை கண்கள் பனிக்க பார்த்திருந்தார்.
அவனிற்கு மனமே வெறுத்துப்போனது.
“அ..ம்மா…” என அழைத்து அவரிடம் நிதர்சனத்தை புரிய வைக்க முயல,
அவரோ ஆத்திரத்தோடு “நீ போ…” என அவனை பிடித்து தள்ளிவிட்டவர் ”என் பொண்ணு ஒண்ணும் சாகலை…நட்சத்திரா இங்க இருக்கா பாரு” என அலைப்பேசியின் தொடுத்திரையில் தெரிந்த முகிழ்மதியை காட்டினார்.
‘என்ன உளருறாங்க அம்மா?’ என அலைப்பேசியை எட்டி பார்த்தான்.
அதிலிருந்த முகிழ்மதியை அவர் காட்டி ‘நட்சத்திரா’ என்றதும் அவன் உலகம் அதிர ஸ்தம்பித்துவிட்டான்.
*******
அதேநேரம் சந்திரமதியோ காலையில் எழுந்தவுடனே நேற்று தன்னை சந்திக்க வந்த நபரை பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
அவளை காண வந்தது வேறு யாருமல்ல,சாட்சாத் வீர் தான்!
ரத்தினவேலிற்கு தகவல் தெரிந்த அடுத்த கணமே வீரிடம் அவன் தெரிவித்திருந்தான்.
ஏற்கனவே அவளை இழந்த குற்றவுணர்வில் தவியாய் தவித்துக்கொண்டிருந்த வீர் சந்திக்க மார்க்கம் கிடைத்ததும் அவளை காண வந்துவிட்டான்.
அவனின் நெஞ்சிலே மோதி நின்ற சந்திரமதி வேகமாக அவனிடமிருந்து விலகி அவனை ஏறிட்டாள்.
வீரை அவ்விடத்தில் கண்டதும் “நீ…நீங்க வீர் தானே?” என திக்கி திணறி அவள் கேட்க,
அவனோ “வீர் இல்லை…அண்ணா…” என அவளை திருத்திய கையோடு “ரோட்டிலே கவனமில்லாமல் என்ன யோசனை உனக்கு?யாராவது வண்டிக்காரன் இடிச்சிட்டு போயிட்டால் என்னாகும்” என தமையனாக மாறி அவளை கண்டித்தான்.
அவளோ கண்ணில் நிராசையின்றி “இடிச்சாலும் கேட்கிறதுக்கு நாதியில்லாத அனாதைக்கு என்ன நடந்தால் என்ன?அனாதையா போய் சேர வேண்டியது தான்” என தன்னை மீறி விரக்தியுடன் பேசியிருந்தாள்.
அவளின் பேச்சை கேட்ட வீரின் நெஞ்சிலோ சுருக்கென்று ஒரு வலி!
அவளிற்குமே தான் பேசியது அதிகப்படி என்று தோன்றியதால் கண்ணோரம் துளிர்த்த நீரை சுண்டிவிட்டவள் “சாரி தெரியாமல் வாயிலே வந்திடுச்சு…இனிமேல் கவனமா இருக்கேன்…உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி சார்” என அவனிற்கு நன்றியுரைத்தவள்,
“சரி நான் கிளம்பறேன் சார்” என்று கூறி அவனை தாண்டி செல்ல முயன்றாள்.
அவளிற்கு சட்டென அவனை ‘அண்ணா’ என்று அழைக்க வரவில்லை.
முகிழ்மதியிடம் அவன் பாசத்தில் உருகுவதை ஒரு சில சமயங்களில் பார்த்திருக்கிறாள்.
அவளிற்கும் உள்ளுக்குள் ஏக்கம் தோன்றினாலும் விஜயலட்சுமிக்கு அஞ்சி தன்னை கட்டுப்படுத்திக்கொள்வாள்.
இன்றும் அவன் சாலையில் ஏதேச்சையாக சந்தித்திருக்கிறான் என்றே அவள் எண்ணினாள்.
ஆனால் அவளை தேடியே அவன் வந்திருக்கிறான் என்று அவள் அறியவில்லை.
அவள் தன்னை கடந்து செல்லவும் “சந்திரமதி நில்லும்மா…உன்னை பார்க்க தான் நான் வந்தேன்” என வேகமாக அவன் உரைத்தான்.
அவளோ அவனின் புறம் திரும்பி “என்னையா எதுக்கு?” என தன்னை சுட்டிக்காட்டி குழப்பமாக கேட்டாள்.
அவளை ஆழ்ந்து நோக்கிய வீர் “ஆமா சந்திரமதி உன்னை பார்க்க தான் வந்தேன்…உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…எங்க போய் பேசலாம்?” என கேட்டுக்கொண்டே தனது குளிர்க்கண்ணாடியை கழட்டி வைத்தான்.
அவளோ “என்கிட்ட பேசறதுக்கு உங்களுக்கு என்னயிருக்கு?” என புருவம் சுருக்கி வினவ,
“உன்கிட்ட பேசினால் தானே என்ன பேசயிருக்குனு உனக்கு தெரியும்?பேசலாமா?” என்று கேட்டு அவன் மெல்லியதாக புன்னகைத்தான்.
அவனையே சில வினாடிகள் ஆழ்ந்து பார்த்த சந்திரமதி “சரி வாங்க…பக்கத்திலே ஒரு பார்க் இருக்கு…அங்கப்போய் பேசலாம்” என முன்னே நடந்தாள்.
அவனும் அவளுடன் இணைந்து நடந்தவாறே “உன்னை பார்த்தால் ரொம்ப டையர்டா இருக்க மாதிரி தெரியுது சாப்பிட்டியாம்மா நீ?” என ஆதுரத்துடன் விசாரிக்க,
அவளோ அவனிற்கு பதில் எதுவும் தரவில்லை.ஆனால் அவனின் அக்கறையான கேள்வி அவளின் நெஞ்சை நனைய வைத்தது.
அவனோ அவள் பதில் தரவில்லை என்றாலும் பின் வாங்காமல் “உன்னை பார்த்தாலே தெரியுது நீ எதுவும் சாப்பிடலைனு…பக்கத்திலே ஏதாவது ஹோட்டல்ல சாப்பிட்டு வந்து பேசலாமா?” என அவன் நிதானமாக கேட்க,
அவளோ அவனை பக்கவாட்டாக திரும்பி நோக்கி “வேணாம் சார்…நான் சாப்பிட்டேன்…நீங்க என்ன சொல்லணுமோ சொல்லுங்க” என அவனிடம் பொய் கூறி அங்கிருந்த மரப்பலகையில் சென்று கைகட்டி அமர்ந்துவிட்டாள்.
இவள் முகிழ்மதி போல் பழகுவதற்கு எளிமையானவள் இல்லை என்று அவன் நொடியில் புரிந்துக்கொண்டான்.
இருவருக்குமிடையே ஆயிரம் வித்தியாசங்கள் இருப்பதாக அவனிற்கு தோன்றின.
முகிழ்மதியால் அதிர்ந்து கூட பேச முடியாது.ஆனால் சந்திரமதியோ மனதில் இருப்பதை நேரடியாக பேசி விடும் அழுத்தம் நிறைந்த பெண்!
தன்னை ஒரு சில முறைகளே பார்த்திருந்ததால் அவளால் சட்டென அவனை நம்ப முடியவில்லை.
அதன் பொருட்டே அவனை அருகிலிருந்த சிறுவர் பூங்காவிற்கு அழைத்து வந்திருந்தாள்.
ஆனால் அவளின் இந்த எச்சரிக்கையான தொனியும் ஒரு விதத்தில் நல்லது தான் என்றெண்ணி புன்னகைத்தான்.
அவனும் அவளருகே சிறிது இடைவெளிவிட்டு அமர்ந்தவன் “இந்த சாரை மட்டும் எடுத்திட்டு அழகா அண்ணானு கூப்பிடலாமே சந்திரமதி” என சொல்ல,
அவளோ நிதானமாக “எனக்குன்னு நெருக்கமா இருக்கவங்களை மட்டும் தான் உரிமையா கூப்பிட முடியும் சார்” என மனதில் நினைப்பதை அவனின் முகத்திற்கே எதிரே கூறிவிட்டாள்.
அவனிற்கு அவளின் இந்த வெளிப்படையான பேச்சு பிடித்துப்போனது.
அதனால் “சரி விடும்மா…உனக்கு எப்போ அண்ணானு கூப்பிட தோணுதோ அப்போ கூப்பிடு…அதுவரை நான் வெயிட் பண்ணறேன்” என சிரித்துக்கொண்டே கூறிய வீர்,
தொண்டையை செருமி “நான் உன்கிட்ட சுத்தி வளைச்சு எல்லாம் எதுவும் பேச விரும்பலை சந்திரமதி…நேரடியாவே விஷயத்துக்கு வர்றேன்…நீ என் தங்கச்சியா என்னோட என் வீட்டிக்கு வந்திடறீயாம்மா?” என்று பளீச்சென்று கேட்டிருந்தான்.
அவனின் பேச்சை கேட்டு பெண்ணவளின் இதயம் தாறுமாறாக துடித்தன.