முகிழ்மதி 59,60,61

முகிழ்மதி 59:


 

 

சில நிமிடங்கள் அவளின் அணைப்பிலே கட்டுண்டு தன் துக்கம் அனைத்தையும் அவளிடம் கொட்டிய வீர்,அதன்பிறகே சிறிது சிறிதாக தானிருக்கும் நிலையை உணர்ந்தான்.

வெடுக்கென்று அவளிடமிருந்து விலகிய ஆடவன் விழிகளை அழுந்த துடைத்துக்கொண்டான்.

இப்போது அவனிற்குள் ஒரு சங்கடம்!

அவளை வேண்டாம் என்று கூறிவிட்டு அவளிடமே தன் கட்டுப்பாட்டை மீறி சரண் புகுந்ததை எண்ணி வெட்கியவனால் அவளின் முகத்தை ஏறிடவே முடியவில்லை.

அதனால் தொண்டையை செருமி “நான் ஜீப்பிலே வெயிட் பண்ணறேன்…நீ வா…” என அவளை பார்க்காமலே கூறிவிட்டு விறுவிறுவென வெளியேறிவிட்டான்.

‘மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சா?’ என சலிப்பாக எண்ணிக்கொண்ட தமயந்தி மெதுவாக எழுந்தாள்.

அவளின் விழியில் அவள் சமைத்து வைத்த உணவு கண்ணில் பட ‘ப்ச் கடைசி வரை இவரு நான் சமைச்சதை சாப்பிடவே இல்லை’ என சோகமாக எண்ணி,அவள் சமைத்த உணவை ஒரு வாய் வாயில் வைத்தாள்.

அடுத்த கணமே அவளின் முகம் அஷ்டக்கோணலாக “ச்சீ த்தூ த்தூ” என தட்டில் உணவை துப்பிய தமயந்தி “நல்லவேளை வீர் இதை சாப்பிடலை…இல்லைனா என் மேலே இருக்கிற கொஞ்ச நஞ்ச காதலும் வேணாம்னு ஓடியேப்போயிருப்பாரு…அடியே தமயந்தி இவ்வளவு கேவலமாவா சமைப்பே” என தனக்குள்ளே முனகிக்கொண்டு உணவை குப்பைத்தொட்டியில் கொட்டினாள்.

உணவையோ உணவு பொருளையோ வீணாக்கக்கூடாது என தாய் கற்று தந்த பாடம் அந்த நேரத்தில் நினைவில் எழ ‘சாரிம்மா எனக்கு வேற வழியில்லை’ என மானசீகமாக மன்னிப்பு வேண்டியவாறு அங்கிருந்த உணவு அனைத்தையும் குப்பையில் தூக்கிப்போட்டாள்.

அதற்கே அவளிற்கு மூச்சிறைத்தது.

‘ஷப்பா’ என நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டு திரும்பிய தமயந்தி அலங்கோலமாக இருந்த சமையலறையை பார்த்தாள்.

‘ஆத்தி…இதென்ன இப்படி கிடக்கு…’ என அதிர்ச்சியில் தலையில் கைவைத்து கொண்டாள்‌.

இவை அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு கிளம்பலாம் என்று எண்ணினால்,வீர் வேறு வாசலில் இருந்து ஹாரன் அடித்திருந்தான்.

‘போச்சு போ…வீருக்காகவே அம்மாகிட்ட கொஞ்சம் சமையல் கத்துக்கணும் போலே’ என தனக்குள்ளே ஒரு முடிவெடுத்து தனது கைப்பையுடன் புறப்பட்டாள்.

தன்னிடமிருந்த கள்ளச்சாவியை எடுத்து வீட்டை பூட்டிவிட்டு வந்தவளிடம் “சாவி கொடு” என அவன் கைநீட்டினான்.

இப்போது அவன் மீண்டும் சகஜ நிலைக்கு மாறியிருந்தான்.

அவளிடம் அனைத்தையும் கொட்டிவிட்டதினால் அவனின் மனம் இலேசாகியிருந்தது.

ஆனால் முகத்தை மட்டும் விறைப்பாக வைத்திருந்தான்.

அவளோ கைப்பையினுள் சாவியை போட்டுவிட்டு “ஹலோ மிஸ்டர் ரவுடி சார்…அது என் சாவி…உங்களுக்கு தரமுடியாது” என கூறிக்கொண்டே ஜீப்பில் ஏறி அமர்ந்தாள்.

அவள் முன்னால் அவனருகே அமருவதை பார்த்துவிட்டு “ப்ச் தமி பின்னாடி போய் உட்காரு…யாரும் பார்த்தால் என்ன நினைப்பாங்க” என அதட்டினான் அவன்.

அவளோ அவனை உற்று நோக்கி “யாரும் பார்த்தால் எனக்கென்ன?நான் என்ன செய்யறேன்னு தெளிவு எனக்கு இருக்கும் போது யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை வீர்” என அழுத்தமாக கூறிவிட்டாள்.

அவளின் பிடிவாதம் அறிந்து ‘அது சரி’ என தலையாட்டிக்கொண்ட வீர் வண்டியை எடுத்தான்.

அவன் வண்டியை ஓட்டிக்கொண்டே “நீ சாவிய எப்படி திருட்டுத்தனமா ரெடி பண்ணேனு தெரியாது தமயந்தி…பட் இனிமேல் என் வீட்டுக்கு வராதே…” என சட்டென அவளின் முகத்தில் அடித்தாற் போன்று உரைத்து விட்டான்.

அதில் அவளின் முகம் மாறிட,அவனிடம் பதில் கொடுக்க வாயை திறந்தவளை பக்கவாட்டாக திரும்பி நோக்கிய வீர் “இரு…இரு நான் பேசி முடிச்சிடறேன்…எல்லாத்துக்கும் பதிலுக்கு பதில் பேசணும்னு அவசியமில்லை லட்டு…கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பையனோட வீட்டுக்கு வர்றதெல்லாம் ரொம்ப தப்பு…நீ பூபதி சொல்லி வரலைன்னு எனக்கு நல்லாவே தெரியும்…ஆனால் இந்த விஷயம் அவனுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பான்?எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கு…அவ இப்படி பண்ணால் எனக்கு எப்படி வலிக்கும்…அதே மாதிரி தான் அவனுக்கும் உன்னை பெத்தவங்களுக்கும் வலிக்கும்…உனக்கு வேணா மத்தவங்களை பத்தி கவலையில்லாமல் இருக்கலாம்…ஆனால் எனக்கு நீங்க எல்லாருமே முக்கியம்…குறிப்பா நீ,உன் மேலே எனக்கு நிறையவே அக்கறை இருக்கு…உன்னை யாராவது ஏதாவது சொல்லிட்டால் என்னாலே தாங்கமுடியாது…அதனாலே கல்யாணம் நடக்கிற வரை கொஞ்சம் அமைதியா இரு” என அவன் நிறுத்தி நிதானமாக அனைவரின் பக்கங்களையும் அலசி ஆராய்ந்து ஒரு தெளிவான அறிவுரை கூறினான்.

ஆனால் அவளோ அவன் கூறிய மற்ற அனைத்தையும் புறக்கணித்துவிட்டு இறுதியாக சொன்னதை கப்பென்று பற்றி “கல்யாணம் வரைக்குமெல்லாம் உங்களை பார்க்காமல் இருக்க முடியாது…சீக்கிரம் என்னை வந்து கல்யாணம் பண்ணிக்கோங்க வீர்…எனக்கும் கள்ளச்சாவி போட்டு உங்க வீட்டுக்குள்ள வர்றதுக்கு ஒரு மாதிரியா தான் இருக்கு…நீங்க என்னை கல்யாணம் பண்ணிட்டால் உங்க பொண்டாட்டியா உரிமையா இந்த வீட்டுக்கு நான் எஜமானியாகிடுவேன்…அதுக்கு அப்புறம் யாரும் என்னை எதுவும் பேசமாட்டாங்க…இதெல்லாம் நினைக்கும் போதே எவ்வளவு சூப்பரா இருக்கில்லை” என இனிய கற்பனைகளுடன் விழிகளில் கனவு மிதிக்க கூறியவளை திரும்பி அவன் பலமாக முறைத்தான்.

“ஏன்டி நான் என்ன பேசிட்டு இருக்கேன்?நீ என்ன பேசறே?” என பல்லைக்கடிக்க,

அவளோ ‘இவரு ஒருத்தரு…ஆசையா பேச வந்தாலே உர்ருன்னு மூஞ்சிய தூக்கிவைச்சிட்டு…லவ் பண்ணவே தெரியமாட்டிக்குது…ஹும்’ என தலையை சிலுப்பிக்கொண்டு  வெளியே திரும்பியவள்,விட்ட இடத்திலிருந்து கனவு காண ஆரம்பித்துவிட்டாள்.

“தமி” என அவன் அழைத்து பார்க்க,

அவளோ “எனக்கு தூக்கம் வருது” என திரும்பாமலே விழி மூடி இருக்கையில் சாய்ந்துக்கொண்டாள்.

‘சரியான கேடி…இவளை எப்படி தான் சமாளிக்கிறதுன்னே தெரியலை’ என பெருமூச்சுவிட்டவனின் மனதில் வெகு நாட்களுக்கு பிறகு இதம் பரவியது.

ஏனோ அவனிற்கும் அவள் சொன்னதை கற்பனை செய்து பார்க்கவே தித்தித்திப்பாக இருந்தது.

ஆனால் அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள அவனின் அழுத்தம் தடுத்தது.

சில நிமிடங்கள் இருவருக்குள்ளும் ஒரு கனத்த அமைதி நிலவ,அந்த நீண்டப்பயணம் இன்னும் நீளாத என்ற ஏக்கம் கூட இருவருக்கும் தோன்றின.

நீண்ட நேரம் நீடித்த அந்த மௌனத்தை விரும்பாத தமயந்தி 
“ப்ச் வீர் ஒரு விஷயத்தை நாம்ப மறந்திட்டோம்” என்றாள் போலியான திகைப்போடு..

‘என்ன?’ என புருவம் உயர்த்தி அவன் கேட்க,

அவளோ “கடைசி வரை நான் கஷ்டப்பட்டு சமைச்சதை சாப்பிடவே இல்லை நீங்க சோ சேட்” என அப்பாவியாக விழி விரித்து சொல்ல,

அதைக்கேட்டு கடுப்பான வீர் “அடிங்க…ஏன்டி நீ சமைச்சதெல்லாம் தயவு செஞ்சு சாப்பாடுனு சொல்லாதே…அது விஷம்…அதை யாராவது சாப்பிட்டால் செத்திடுவாங்கடி” என காட்டமாக உரைக்க,

அவளோ “வீர்…” என இடுப்பில் கைவைத்து அவனை முறைத்தாள்.

அவனோ அவளின் முறைப்பை கண்டுவிட்டு “உனக்கு அவ்வளவு கவலையா இருந்தால் பார்சல் கட்டி எடுத்திட்டு போய் நீ சாப்பிடு” என எள்ளலாக கூறியதும் அவளிற்கு தூக்கிவாரிப்போட்டது.

‘ஆத்தி அந்த சாப்பாடா? ஒரு வாய் வைச்சதுக்கே இப்போ வரை குமுட்டிட்டு வருது…இந்த லட்சணத்திலே பார்சல் வேறய்யா’ என பீதியில் எச்சில் கூட்டி விழுங்கினாள்.

ஆனாலும் தன்னை விட்டுக்கொடுக்காமல் “அதை எப்படி நான் எடுத்திட்டு போறது அது உங்களுக்காக ஸ்பெஷலா செஞ்சது…எனக்கு வேணாம்ப்பா” என பதிவிசாக கழண்டுக்கொள்ள முயன்றாள்.

அவனோ அவளை மேலிருந்து கீழாக பார்த்து “சரியான கேடிடி நீ” என வெளிப்படையாகவே திட்டிவிட்டு ஒரு உணவு விடுதியின் முன்பு வந்து வாகனத்தை நிறுத்தினான்.

அதுவொரு பிரபலமான உணவு விடுதி!

அந்த உணவகத்தை பார்த்துவிட்டு “இங்க எதுக்கு?” என அவள் குழப்பமாக கேட்க,

அவனோ “உன் கூட போராடி போராடி எனக்கு பசியே வந்திடுச்சு இறங்கு” என்றவாறு தனது அலைப்பேசியை கையில் எடுத்தான்.

அவளிற்கு நன்றாக தெரியும்…பசி அவனிற்கில்லை…அவளிற்காக தான் அவன் உணவகத்தில் நிறுத்தியிருக்கிறான் என்று!

ஏனெனில்,அவளும் காலையில் உணவருந்தியோடு சரி…அதன் பிறகு வீரின் வீட்டிற்கு வந்துவிட்டதால் அவளும் இப்போது வரை எதுவும் சாப்பிடவில்லை.

அவளின் முகத்தில் இருந்த சோர்வை வைத்தே அவளின் பசியை அறிந்து செயல்பட்ட தன்னவனின் மேல் மையல் கொண்டாள் அவள்.

அவள் கீழே இறங்காமல் அவனையே குறுகுறுவென பார்த்திருப்பதை கண்ட வீர் ‘என்ன’ என புருவம்‌ உயர்த்தி வினவினான்.

அவளோ “வீர் உங்க சிக்ஸ் பேக்கிலே எப்போ என் டாட்டூவை போட போறீங்க?எனக்கு பார்க்க ஒரே ஆர்வமா இருக்கு” என ஏக்கமான குரலில் கூறிக்கொண்டே அவனின் படிக்கட்டு தேகத்தை தொட்டு பார்த்தாள்.

அதில் தடுமாறிய ஆடவன் “ஹே என்ன செய்யறே?கையை எடுடி” என அவளின் கரத்தை தட்டிவிட்டான்.

அவளோ “ரொம்ப பண்ணாதீங்க?” என இதழை சுழித்தவள் “எப்படியிருந்தாலும் இது என் பிராப்ர்டி…நான் எங்க வேணா தொடுவேன்” என வேகமாக அவனின் இடுப்பில் கிள்ளிவிட்டு கீழே இறங்கிவிட்டாள்.

அவனோ “ஹே” என கூச்சத்தில் துள்ளிக்குதித்து அவளை முறைக்க,

அவளோ அவனை நோக்கி திரும்பி “ஹாஹாஹா நீங்க என்ன பொம்பளையா?இப்படி வெட்கப்பட்டு துள்ளறீங்க?” என வாய்விட்டு கலகலவென சிரிக்க,

அவனோ அவள் சிரிக்கும் போது வெளிப்பட்ட பல்வரிசையை கண்டு எச்சில் கூட்டி விழுங்கினாலும்,தன்னை சமாளித்து “அடச்சீ போடி…” என நாக்கை கடித்து அவன் மிரட்டவும் ”எஸ்கேப்” என அங்கிருந்து ஓடியே விட்டாள்.

‘என்னை கட்டியே பிடிச்சிட்டாராம்…இப்போ போய் கூச்சப்படுது இந்த அம்பி’ என அவள் சிரித்துக்கொண்டே உணவகத்தில் நுழைய,

அவள் சிரித்தப்படி ஓடிய வேகத்தை பார்த்த வீரின் இதழ்களும் தானாக மலர்ந்தன.

‘நான் பண்ண வேண்டியதெல்லாம் இவ பண்ணறாள்…இவளை என்ன தான் செய்யறது?’ என சிகையை அழுத்தக் கோதி சிரித்துக்கொண்டே கீழிறங்கினான் வீர்.

அதுநாள் வரை அவனை அழுத்தியிருந்த பாரமெல்லாம் அவள் கொடுத்த ஆதரவில் தொலைதூரம் ஓடிப்போயிருந்தது.

இன்று போல் என்றும் அவளுடனே இருந்துவிடக்கூடாதா என மனம் ஏங்கவும் செய்தன.

ஆனால் அது நடப்பதற்கு சாத்தியமில்லாத ஒன்று எண்ணியவனின் முகம் மீண்டும் வாடி விட்டன.

உடனே தலையை உலுக்கி மீண்டும் தன் குளிர்க்கண்ணாடியை அணிந்து உணர்வுகளை மறைக்க முயன்றான்.

அவனால் முயல மட்டுமே முடிந்தது…

ஏனெனில்,அவனது காதல் ராட்சசி என்றோ அவனின் இதயத்தில் ஆழமாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தாள்.

******
ரோகிணியின் தோழிகளை சந்திக்க வந்த ஜித்தேந்திரனிற்குள் எதற்காக இங்கு வந்தோம் என்ற அசௌகரிய உணர்வு தான் மேலெழுந்தது‌.

அவனால் வெகு நேரம் அவர்களுடன் அமரவே முடியவில்லை.

ஏனெனில்,அவர்கள் அனைவரும் பார்ப்பதற்கு அவளின் தோழிகள் போல் தோன்றினாலும் அவர்களின் பேச்சிலோ தோரணையிலோ அது வெளிப்படவில்லை.

‘ரோகிணி இப்படி?ரோகிணி அப்படி?’ என ரோகிணியை பற்றி புகழாரம் வாசித்ததோடு உலகத்திலே அவள் ஒருவள் மட்டுமே நல்லவள் என்ற பிம்பத்தை அவனுள் பதிய வைக்க முயல்வது போல் அவனிற்குள் ஒரு பிம்பம்!

‘ஐய்யோ தெரியாத்தனமா வந்து சிக்கிட்டோமோ?’ என மானசீகமாக தலையில் கைவைத்து அமர்ந்த ஜித்தேந்திரனிற்கு அங்கு சிரித்தப்படி அமர்ந்திருப்பது அவஸ்தையாக இருந்தது.

அதிலும் ஒரு பெண் “ஜித் சார் எங்க ரோகிணி இருக்காளே…அவ ரொம்ப கைண்ட் ஹார்ட்டெட் தெரியுமா?அவ அப்படியே பலாப்பழம்‌ மாதிரி” என இளித்துக்கொண்டே சொல்ல,

அவனோ கடுப்பான குரலில் “ஏதே பலாப்பழமா?அப்போ பலாப்பழம் மாதிரி பிசுபிசுனு இருப்பாளோ?” என்று சொல்லிவிட்டு ரோகிணியை கேலியாய் பார்க்க,

உடனே அந்த பெண்ணோ “ஐய்யோ சார்…உங்களுக்கு குட் சென்ஸ் ஆஃப் ஹூயுமர்…” என அவனின் கரத்தை தட்டி சிரிக்க,

அவனோ சிரிப்பை வரவழைக்க பெரிதாக முயற்சி செய்துக்கொண்டிருந்தான்.

ஆனால் ரோகிணியோ அந்த பெண் அவனை தொட்டு பேசியதை கண்டு விழியாலே அவளை எரிக்க,அவளோ பயந்துப்போய் தன் கரத்தை பின்னுக்கு இழுத்துக்கொண்டாள்.

அவளின் சிரிப்பு மறைந்துப்போனதை பார்த்து ரோகிணியை திரும்பி அவன் சந்தேகமாக ஏறிட,அவளோ சிரித்துக்கொண்டு “அட ஜித் அவ சொல்ல வர்றது என்னன்னா பலாப்பழம் மாதிரி வெளிய ஹார்டா இருந்தாலும் உள்ளிருக்க ப்ரூட் இனிப்பா இருக்கிற மாதிரி நானும் ஸ்வீட் கேர்ள்னு சொல்லறாள்…அப்படி தானே லில்லி” என அந்த பெண்ணை பார்த்து ஒரு மாதிரி குரலில் கேட்கவும்,

அவள் மட்டுமின்றி சுற்றியிருந்த பெண்கள் அனைவரும் “ஆமாம்…ஆமாம்…” என கோரசாக தலையாட்டினார்கள்.

அதைப்பார்த்து ‘நிஜமாவே இவங்க இவ ஃப்ரெண்ட்ஸ் தானா?இல்லை காசு கொடுத்து எதுவும் கூட்டி வந்திருக்காளா?இப்படி பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டுதுங்க’ என தாடையை நீவி இளக்காரமாக எண்ணிக்கொண்டான்.

ஒரு கட்டத்தில் இவர்களது ரோகிணி துதியை கேட்டு ஜித்தேந்திரன் காது புளித்துப் போனது தான் மிச்சம்!

தன்னையே நொந்து சலிப்பாக அமர்ந்திருந்த ஆடவனிற்கு அதற்கு மேல் அவர்களின் நாடகத்தில் பங்குக்கொள்ள முடியவில்லை.

அதனால் “எக்ஸ்க்யூஸ் மீ…எனக்கொரு முக்கியமான மீட்டிங் இருக்கு…நான் கிளம்பறேன்…பில் நான் செட்டில் பண்ணிட்டேன்…யூ கேரி ஆன் கைஸ்” என அவர்களிடம் சிரித்தப்படி விடைப்பெற்று அவன் அந்த பிரத்யேக அறையிலிருந்து வெளியேறினான்.

ஏனெனில்,அவர்கள் உணவருந்துவதற்காக ஒரு தனியறையை தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

பெரிய நட்சத்திர விடுதியில் இதுப்போலான ஒரு வசதி இருந்தது.

ஆனால் அவ்விடத்தில் பணத்தில் கொழுத்து செழித்த செல்வந்தர்களால் மட்டுமே உணவருந்த முடியும்‌.

பொதுவான உணவகத்தில் வரும் காசை விட இந்த பிரத்யேக அறையில் வரவழைக்கப்படும் உணவிற்கு வரும் பணம் பல மடங்கு கூடுதலாக இருக்கும்.

அவன் அந்த அறையை விட்டு வெளியேறியதும் ரோகிணியின் பாவனை அப்படியே மாறிப்போனது.

அங்கிருந்த பெண்களை ஆத்திரத்தோடு உறுத்து விழித்த ரோகிணியை பார்த்து அவர்கள் மிரண்டு விழித்தார்கள்.

“ஏய் கொடுத்த காசுக்கு மேலே எதுக்கு ஓவர் ஆக்ட்டிங் பண்ணறீங்க?எனக்கே நீங்க பண்ணறது ஆக்ட்டிங்கனு தெரியுது? அவனுக்கு தெரியாதா முட்டாளுங்களா?” என கண்டப்படி அவர்களை பேசியவளிடம் எதுவும் பேச முடியாமல் திணறிப்போனார்கள்.

அவளின் வாயிலிருந்து வந்த சொற்கள் யாவும் இதுவரை அவர்கள் கேட்டிராத ஆங்கில கெட்ட வார்த்தைகளால் நிறைந்திருந்தன.

அதை கேட்கும் போதே அவர்களின் காதுகள் இரண்டும் கூசிப்போயின.

அவளின் நண்பர்கள் யாவரும் அவளை போலவே ஆணவம் பிடித்தவர்கள்!

பணத்திமிரில் அவனிடம் ஏதேனும் உளறி விட்டால் என்ன செய்வது என்றெண்ணி வேறு ஆட்களை தோழிகள் போல் ஏற்பாடு செய்து அழைத்து வந்திருந்தாள்.

ஆனால் அவர்களோ அப்பட்டமாக சொதப்பி வைத்திருந்தார்கள்.

அவள் திட்டியதை கேட்டு ‘ஐய்யோ பணத்துக்காக ஆசைப்பட்டு தெரியாமல் ஒரு சைக்கோகிட்ட சிக்கிட்டமோ’ என பீதியுடன் அவர்கள் அமர்ந்திருக்க,

அதுவரை அனைவரையும் பொதுவாக வறுத்தெடுத்த காரிகை இப்போது ஒரு பெண்ணை பார்த்து “ஹே யூ…எவ்வளவு தைரியம் இருந்தால் என் ஜித்துவையே நீ தொட்டு பேசியிருப்பே?” என அவளை கொலைவெறியோடு முறைத்தவள்,அந்த பெண் சற்றும் எதிர்பாராத வேளையில் அருகிலிருந்த முட்கரண்டியை எடுத்து அவளின் கையில் குத்தியிருந்தாள்.

அவள் ஆவேசமாக குத்தியதில் கையிலிருந்த இரத்தம் அந்த மேசையின் மீது பீய்ச்சி அடித்தது.

“அம்மா” என்ற அந்த பெண்ணின் அலறல் அந்த தனியறையையே நடுநடுங்க வைத்தன‌.

உயிரற்ற அந்த இடமே பயத்தில் நடுங்கியது என்றால்,பணத்திற்காக அங்கு நடிக்க வந்த பெண்களின் மேனியோ உச்சக்கட்ட திகிலோடு வெடவெடக்க ஆரம்பித்தன.

ரோகிணியோ அத்தோடு நிறுத்தாமல் ஒவ்வொருவராக தனித்தனியாக வதைத்தெடுத்தாள்.

அதன்பிறகே அவளின் மனம் சிறிது சாந்தமடைந்தது.

ஆனால் இவள் மற்றவரை வதைக்கும் காட்சியை ஒரு அலைப்பேசி காணொளியாக பதிவு செய்யப்பட்டதை அவள் அறியவில்லை.

அந்த அலைப்பேசிக்கு உரிய நபரோ காணொளி எடுத்த கையோடு அங்கு வந்த தடம் தெரியாமல் ஓடியே விட்டிருந்தார்.

ரோகிணியோ அசால்ட்டாக தன் கையில் படிந்திருந்த இரத்தத்தை பணியாளின் உதவியுடன் கழுவிக்கொண்டாள்‌.

இந்த நட்சத்திர விடுதி அவளது தந்தையின் நெருங்கிய தோழனின் விடுதி என்பதால்,இங்கு நடந்த விபரீதம் அப்படியே மறைக்கப்பட்டது.

கழிவறைக்கு சென்று தனது கரங்களை கழுவிக்கொண்டு வெளியே வந்த ஜித்தேந்திரனின் விழியில் சந்திரமதி விழுந்தாள்.

அவளை கண்டவுடனே அவனிற்கு நன்றாக அடையாளம் தெரிந்தது.

அவள் முகிழ்மதியை போன்று தோற்றத்தில் இருந்தாலும் திருமணமான பெண்ணிற்குரிய எந்தவொரு அடையாளமும் இல்லாமல் அவள் இருப்பதை வைத்தே சந்திரமதியை கண்டறிந்துவிட்டான்.

அவளோ தன் வயதை விட அதிகமான அகவையுடைய ஒரு ஆடவனிடம் வெகு தீவிரமாக பேசிக்கொண்டிருப்பதை கண்டு புருவம் சுருக்கினான்.

‘இவ இங்க என்ன செய்யறாள்?’ என அவளை அவன் குழப்பமாக நோக்கியவனிற்குள் ஏதோ ஒன்று உறுத்தியது.

சந்திரமதியை பற்றி எதுவும் அவனிற்கு கூறப்படவில்லை.

ஆயினும் ஏதோ ஒரு நெருடல் அவனிடம்!

எப்போதும் கரைப்படியாத உடையுடன் சுற்றி வரும் பெண்ணின் இந்த கந்தல் தோற்றம் அவனிற்கு விசித்திரமாக பட்டது.
 

முகிழ்மதி 60:


 

 

சில நாட்களுக்கு முன்பு,

விஜயலட்சுமி இரண்டு நாளுக்கு ஒரு முறை சந்திரமதியின் நலனை விசாரித்த கையோடு,அவளிற்கு தேவையான பணத்தையும் கொடுத்துவிட்டு செல்வார்.

அவளிற்கு தேவையான அடிப்படை பொருட்கள் தொடங்கி அனைத்திற்கும் அவரே செலவு செய்தார்.

விடுதியில் அவளை சேர்த்துவிட்டதோடு தன்னுடைய பொறுப்பு முடிந்தது என்று அவர் அவளை கைவிடவில்லை.

தன் மகளாகவே பாவித்த அந்த பெண்மணி மனதாரவே அவளிற்கு அனைத்தையும் செய்தார்.

அதனால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அவளை வந்து பார்த்து சென்றுவிடுவார்,அந்த பெண்மணி.

அவளை காண வரும்போதெல்லாம் அவளிற்கு ஏதேனும் ஒன்றை வாங்கி வந்துவிடுவார்.

அவரின் இந்த எதிர்பாராத அன்பில் அவளின் மனம் நெகிழ்ந்தது.

அவ்வப்போது அவளையும் அறியாமல் அவளின் மனம் ஒரே பெயர் கொண்ட இரு வேறு பெண்மணிகளின் குணங்களை ஒப்பிட்டு பார்த்துவிடும்.

தாயை பற்றி எண்ணியவுடன் சிறு வயதிலிருந்து சகோதரிகள் அனுபவித்த கொடுமைகளும் அவரால் ஏற்பட்ட மன உளைச்சலும் மட்டுமே நினைவிற்கு வந்தது.

அதையெல்லாம் எண்ணியவுடன் அவளின் இதயத்தை யாரோ ஒருவர் கத்தியால் குடைந்தெடுப்பது போன்ற வலி ஒன்று உருவாகின.

அதிலும்,அவள் காணாமல் போய் பல நாட்களுக்கு மேல் கடந்தும் இப்போது வரை அவளின் தந்தை அவளை தேடி வராதது நெஞ்சிற்குள் நெருஞ்சிமுள்ளாய் குத்திக் கொண்டிருந்தது.

தன் வாழ்வு ஒரு சில நாட்களில் திசைமாறிப்போனதை பற்றி எண்ணும் போதே அவளின் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவிலும் வாதை அவளை வாட்டியெடுத்தன.

இதையெல்லாம் தன்னுடைய சகோதரியிடம் உரைத்து அவளின் தோள் சாய்ந்து கத்தி அழ வேண்டும் போல அவளுள் ஒரு உணர்வு பீறிட்டது.

ஆனால் அவளின் வாழ்வில் தன்னால் எவ்வித புயலும் வீச வேண்டாம் என்று தன் துயரங்கள் அனைத்தையும் தன்னோடு புதைத்துக்கொண்டு வாழ தயாராகிவிட்டாள்.

தற்சமயம் அவளின் மனதில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்தாய் அமைந்தவர் தான் விஜயலட்சுமி!

பார்க்க முரட்டுத்தனமாக இருந்தாலும் இளகிய உள்ளம் கொண்டவர்.

அவர் காட்டும் பாசத்திற்கு முன்பு அவளின் தாய் விஜயலட்சுமியெல்லாம் வெறும் தூசு!

அவரை பற்றி நினைக்கும் போதே அவள் அனுபவித்த இன்னல்களும் உடன் ஞாபகத்தில் எழ,அதனால் அவரை பற்றிய நினைப்பை அறவே துடைத்தெறிந்துவிட்டாள்.

‘ப்ச் அவரை பத்தி நினைக்காதே மதி’ என தனக்கு தானே அறிவுறுத்தி தனித்து நின்று தன் வாழ்வை வாழ பழகிக்கொண்டாள்.

ஆனால் அங்கும் விடாமல் அவளை துரத்திக்கொண்டு வந்தது, பிரச்சனைகள்!

ஏனெனில்,விஜயலட்சுமியிடம் அவள் நெருங்கி பேசுவதை அறிந்து விடுதியிலிருந்த பெண்கள் அனைவரும் அவளை விட்டு விலகிக்கொண்டனர்.

அவரின் தோற்றத்தை கண்டு சந்திரமதியையும் இளக்காரமாக எண்ணினார்கள் அவர்கள்.

முதலில் அவளிற்கு அதைப்பற்றி எதுவும் தெரியவில்லை.

அவள் அந்த விடுதிக்கு வந்து மூன்றாம் நாள் அவளின் பக்கத்து அறையிலிருந்த ஒரு பெண் அவளிடம் வந்தாள்.

அங்கு வந்தவளோ “உன்னை பார்க்க ஒரு லேடி அடிக்கடி வருதே?அது யாரு?” என அலட்சியமாக வினவினாள்.

அவளின் மரியாதையற்ற விளிப்பில் அவளிற்குள் சினம் மூண்டது.

ஆகையால்,அவளிடம் பேசவே அவளிற்கு பிடிக்கவில்லை.

இருப்பினும் தன்னை தானே அடக்கி “என்னோட கார்டியன் அவங்க” என தணிந்த குரலில் பதிலுரைத்தாள்.

“கார்டியனா?” என அவளை ஏற இறங்க பார்த்த பெண்ணின் தோரணையில் இளப்பம் மட்டுமே மிகுந்து இருந்தது.

அவளின் பாவனையில் தெரிந்த இளக்காரம் அவளையும் தூண்டிவிட “கார்டியன் மட்டுமில்லை…அவங்க என்னோட அம்மா…பேசி முடிச்சிட்டீங்கன்னா முதல்ல கிளம்புங்க” என அவர்களுக்கு தக்கப்பதிலடி கொடுத்திருந்தாள்.

அப்போதும் அந்த பெண் “ஏதே அம்மாவா?” என அருவருப்புடன் முகத்தை சுளித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அவளின் முகத்திலிருந்து வெறுப்பை கண்ட சந்திரமதிக்கு கடுப்பாக வந்தது.

‘அவங்களும் மனுஷங்க தானே…ஏன் இப்படி எல்லாரும் அவங்களை வெறுக்கறாங்க’ என தனக்குள்ளே கேள்வி எழுந்த சமயம் ‘நீயும் ஒரு காலத்தில் அப்படி தான் இருந்தன்றதை மறந்திட்டியா?’ என்று அவளின் மனசாட்சி இடித்துரைத்தது.

அந்த நிஜத்தை உணர்ந்த அடுத்த கணமே அவளின் முகமும் வாடிப்போயின‌.

இனி ஒரு நாளும் வெளித் தோற்றத்தை வைத்து மற்றவரை ஒதுக்கக் கூடாது என்று தனக்குள்ளே முடிவெடுத்துக்கொண்டாள் சந்திரமதி.

அந்த பெண்ணிற்கு பதிலடி கொடுக்க அவரை அவள் தாய் என்று குறிப்பிட்டிருந்தாலும்,காலப்போக்கில் அவரே அவளிற்கு அன்னையாகிப்போனார்.

அடுத்தமுறை அவளை அவர் சந்திக்க வரும் போது “அம்மா” என்றுழைத்து எப்போதும் போலவே அவள் பேசினாள்.

ஆனால் முன்பில்லாத ஏதோ ஒன்று இன்று இருப்பது போல் அவர் உணர்ந்தார்.

அது தான் உயிர்ப்பு!

முன்பு உதட்டளவில் மட்டுமே அவரை ‘அம்மா’ என்றழைத்த சந்திரமதி அன்று மனமாற அதனை உணர்ந்து அழைத்திருந்தாள்.

தானாக உருவாகும் பந்தத்தை விட,உணர்வால் பிணைந்து உருவாகும் பந்தம் என்றுமே தனிச்சிறப்பு!

அதிலும்,சகமனதியாக கூட மதிக்காத இந்த நாட்டில் இவரை போல பெண்மணிகளுக்கு பந்தம் கிடைப்பதெல்லாம் நிஜமில்லாத ஒரு கனவு போலே தான்!

அதனால் தான் கண்ட கனவு மெய்யாகியதை உணர்ந்த அந்த பெண்ணின் மேனியோ ஒரு முறை சிலிர்த்து அடங்கிட,ஏனோ அவருக்கு கண்கள் கரித்துக்கொண்டு வந்தன.

அவருக்கு தாய்மையென்னும் பதவியை அளித்த பெண்ணவளை பார்த்தவருக்கு நெஞ்சம் நெகிழ்ந்துப்போனது.

வறண்ட பாலை வனமாய் இருந்தவரின் வாழ்வில் சோலையாய் வந்த சந்திரமதி அவருக்கு ஒரு வரம்!

இதற்காகவே காலம் உள்ளவரை தனக்கு கிடைத்த வரத்தை போற்றி பாதுகாக்க முடிவு செய்துவிட்டார்,அந்த பெண்மணி.

முன்பாவது அவளிடம் சில நேரங்களில் தயக்கம் காட்டி பழகுபவர்,அவளின் திண்ணம் அறிந்த பிறகு அவளிடம் எவ்வித நெருடலுமின்றி அன்னையாகவே பாசம்காட்ட ஆரம்பித்திருந்தார்‌.

ஆனால் அவளிடம் விசாரித்துவிட்டு சென்ற பெண் மற்றவர்களிடம் என்ன கூறினாளோ அடுத்த நாளிலிருந்து அவளை பார்க்கும் போதெல்லாம் மற்ற பெண்கள் அனைவரும் தங்களுக்குள் கிசுகிசுத்தனர்.

அவளை தயவுத்தாட்சண்யம் சிறிதுமின்றி முற்றிலும் ஒதுக்கிவிட்டனர்.

நாட்கள் செல்ல செல்ல,அவர்களின் நிராகரிப்பு எதனால் என்று அவளிற்கு நன்றாகவே புரிந்தது.

அதையறிந்து கொண்டவளிற்கு ஆத்திரமாக வந்தது.

தற்போது அவளிருக்கும் நிலைமையில் யாரிடமும் சென்று சண்டையிட மனமற்று விலகி இருந்துக்கொண்டாள்.

ஆனால் அவளின் விலகலை கண்டு வேண்டுமென்றே ஒரு சிலர் அவளின் முன்னாலே அவளை சீண்டி பேசவும் தொடங்கியிருந்தனர்.

அனைத்தையும் பல்லைக்கடித்துக்கொண்டு வாழ பழகிக் கொண்டாள் சந்திரமதி‌.

அவளின் பொறுமையை சோதிப்பது போல் மேலும் சில சம்பவங்கள் நிகழ்ந்து அவளை வெடித்து சிதற வைத்தது.

அப்படியாக ஒரு நாள் அவளிற்காக உடைகளை வாங்கி வந்திருந்த விஜயலட்சுமி “பாப்பா நீ போடற மாதிரி நல்ல துணிய என்னாலே வாங்க முடியலை பாப்பா…அடுத்த முறை காசு கூட வந்தாக்கா இன்னும் நல்லதா வாங்கிட்டு வர்றேன்” என சங்கடமாக உரைத்தார்.

அவளோ அதிலிருந்த ஐந்து சுரிதார்களை பார்த்துவிட்டு “அம்மா ஒரு காலத்திலே பந்தாவுக்காக நான் டிரஸ் போட்டது உண்மை தான்…ஆனால் இப்போ நான் இருக்கிற நிலைமையிலே மானத்தை மறைக்க ஏதோ ஒரு டிரஸ் இருந்தா போதும்…இப்போவே நீங்க அஞ்சு செட் வாங்கியிருக்கீங்க…இதுக்கு முன்னாடி ஒரு மூணு செட்…இப்போ என்கிட்ட எட்டு செட் இருக்கு…நான் இருக்கிற நிலைமைக்கு இதுவே எனக்கு அதிகம் தான்” என விரக்தி கலந்த குரலில் சோர்வாக கூறியவள்,

பின்பு தொண்டையை செருமி அவரின் கரத்தை ஆதுரத்துடன் பற்றியவள் “இதுக்கு மேலே எனக்கு எதுவும் வாங்காதீங்கம்மா…இதுவரை எனக்கு நீங்க செஞ்சதே போதும்…இனி காசு சேர்த்து வைச்சு உங்களுக்கு ஏதாவது வாங்குங்க…பாருங்க இந்த வாரத்திலே நீங்க இரண்டாவது முறையா இந்த புடவையை கட்டிட்டு என்னை பார்க்க வர்றீங்க?எனக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு…முதல்ல நீங்க நல்ல சாரியா வாங்கி கட்டுங்க…எனக்கு எதுவும் வேணாம்…அதையும் மீறி எதையாவது வாங்கிட்டு வந்தீங்க…நீங்க அவ்வளவு தான்” என கறாராக பேசி,அதே சமயம் செல்லமாக அவரை மிரட்ட செய்தாள்.

அவரோ பதிலுக்கு சிரித்துக்கொண்டு “அட பாப்பா…எனக்கு எதுக்கு புதுத்துணி எல்லாம்?நீ தான் நாலு எழுத்து படிச்சவே…நல்ல உடுப்பு போட்டுட்டு வெளிய போகணும்…நான் அப்படியா?ஏதோ கிடைக்கிற வேலைய செஞ்சிட்டு குப்பையோட குப்பையா கிடக்கிறேன்…எனக்கு எதுக்கு புதுத்துணி?” என சாதாரணமாக சொன்னாலும் அவரின் வாழ்வில் மறைந்து கிடக்கும் சோகம் அவளின் மனதை உருக்கியது.

அவரின் உருவ மாற்றத்தை பார்த்து பெரிதாக யாரும் அவருக்கு வேலை கொடுப்பதில்லை.

மனுதர்மம் என்பதே பலரின் மனதிலிருந்து அழிந்து விட்டது போலும்!

அதையும் மீறி ஏன் வேலை கொடுப்பதில்லை என்று நியாயம் கேட்டால் ‘இவர்களை போன்ற ஆட்களை நம்பி வேலையை கொடுக்கமுடியாது…அவர்களின் மேல் நம்பிக்கை இல்லை’ என கண்மூடிக்கொண்டு உரைத்து அவரை நிராகரித்துவிடுகிறார்கள்.

அதனால் அவ்வப்போது கிடைக்கும் ஏதேனும் ஒரு பணியை செய்து பிழைப்பை ஒட்டிக்கொண்டிருக்கிறார் விஜயலட்சுமி.

அவரின் வயிற்றை கவனிப்பதே அவருக்கு பெரும் சிரமம்…இதில் அவளின் பாரமும் அவரின் தலையில் விழுந்திருந்தது.

இதையெல்லாம் அவர் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும் அவரின் பேச்சிலிருந்து அவள் கணித்திருந்தாள்.

‘ஏன் தான் இந்த சமுதாயம் இப்படி இருக்கோ?உருவம் மாறினால் மட்டும் அவங்க மனுஷங்க இல்லையா என்ன?நம்பிக்கை அது இதுனு பேசி இவங்களை ஒதுக்கறாங்க…மத்த மனுஷங்க எல்லாம் ரொம்ப நம்பிக்கையானவங்க…நல்லவங்க தான்’ என மனதிற்குள் சில நேரங்களில் பொருமியும் கொண்டாள் சந்திரமதி.

அதனை பற்றி அவரிடம் அவளால் வெளிப்படையாக பேச முடியாது‌.

தன்னுடைய சொற்கள் ஏதேனும் அவரை காயப்படுத்திவிடுமோ என்று எண்ணி தவிர்த்தாள்.

அதேசமயம் அவளுள் வேறொரு தீர்க்கம் உருப்பெற தொடங்கியிருந்தது.

ஒரு பணியில் சேர்ந்து அவரின் தலையில் இருக்கும் பாரத்தை தான் சுமந்து அவருக்கான அங்கீகாரத்தையும் சமுதாயத்தில் வாங்கி கொடுக்க வேண்டும் என்று உறுதியான முடிவெடுத்திருந்தாள்.

அவள் எடுத்த முடிவின் படி,பணிக்கான தேடுதல் வேட்டையில் இறங்கிய பெண்ணவளிற்கு கிடைத்ததெல்லாம் தோல்வி மட்டுமே.

ஏனெனில்,அவள் இன்னும் கல்லூரி படிப்பை கூட முழுதாக முடித்திருக்கவில்லை.

இரண்டாம் வருடம் படித்திருக்கும் சமயத்தில் தான் அவளிற்கு ஹரிஷின் பிரச்சனைகள் வர,அவள் சில காலம் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்து சேர்ந்தாள்.

அதன்பிறகு பல விபரீதங்கள் நிகழ்ந்து இங்கு வரை வந்திருக்கிறாள்.

பல நிறுவனங்கள் ஏறி இறங்கினாலும்,அவளின் முற்றுப்பெறாத கல்வியை சுட்டிக்காட்டி அவளை நிராகரித்துவிட்டார்கள்.

நாளுக்கு நாள் அதுவே அவளிற்கு ஒரு மன அழுத்தத்தை கொடுத்தன.

இதில் விடுதியில் ஒரு புறம் மறைமுகமாக அவளை குத்தி பேசிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் நேரடியாகவே அவளை பேச தொடங்கிவிட்டனர்.

அவளை மட்டுமின்றி அவளை காண வரும் விஜயலட்சுமியிடமும் அத்துமீறி பேசினார்கள்.

“என்ன பாப்பா சோர்வா இருக்கே?இன்னைக்கும் வேலை கிடைக்கலையா?சரி பரவாயில்லை விடு பாப்பா…உனக்கு தான் அம்மா நான் இருக்கானே” என அவளிற்கு அவர் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்.

நமக்கு துன்பம் வரும் வேளையில் ஒருவர் ஆறுதலாக இருப்பதே வரம் என்றால்,அவளை இறுதி வரை பார்த்துக்கொள்ள கூடிய ஒரு நபர் இருந்தால் அவர் தான் கடவுள்!

இடிந்துப்போன அவளின் வாழ்வில் மீண்டும் ஒளியேற்றிய விஜயலட்சுமி அவளிற்கு ஒரு இறைவியாக தான் தெரிந்தார்.

இந்நிலையில் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது “அட யார்றா ஆம்பளைக்கு சேலை கட்டி விட்டிருக்கிறது?அப்படியே காஞ்சனா படத்திலே வர சரத்குமார் மாதிரி இருக்கு”என ஒருவள் இகழ்ச்சியாக கூற,

அவளை தொடர்ந்து,

“ஆமாடி இது பார்க்க அப்படி தான் இருக்கு…செம்ம காமெடியா இருக்கு”

“ஏய் அப்படியெல்லாம் பேசாதீங்க டி…இது அவளுக்கு அம்மாவாம்…அப்புறம் சந்திரமதிக்கு கோபம் வந்திடப்போகுது”

“ஏதே அம்மா?அது எப்படி திமிங்கலம்?எப்படி பார்த்தாலும் செட்டாகலையே?”

“அட பைத்தியம் மத்தவங்களுக்கு தான் குழந்தை பொறக்க இரண்டு பேர் தேவை?இதுங்களுக்கு…” என அதற்கு மேலும் அவர்கள் ஏதேதோ பேசி சிரிக்க,அதுவரை மௌனமாக இருந்த சந்திரமதி அவர்களின் இழிவான பேச்சில் வெகுண்டு எழுந்துவிட்டாள்.

அவள் ஆத்திரத்தில் முகம் சிவக்க அவர்கள் முன்பு வந்து நின்றவள் “ஹே என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?நானும் போனால் போகுது ஏதோ தெரியாமல் பேசறீங்கனு பொறுமையா இருந்தால் நீங்க எல்லை மீறி பேசறீங்க?உங்களையெல்லாம் சும்மாவே விடமுடியாது…இருங்க…அபியூஸிவா பேசறீங்கன்னு உங்க மேலே போலீஸ் கம்பளைண்ட் கொடுத்து உங்களை உள்ள தள்ளறேன்” என விரல் சொடுக்கி கர்ஜனையாக கூறி அலைப்பேசியை எடுத்தாள்.

“பாப்பா வம்பு வேணாம்” என அவளை அவர் தடுக்க வர,

சந்திரமதியோ “நீங்க சும்மா இருங்கம்மா…இதுங்களுக்கெல்லாம் மன்னிப்பே கொடுக்கக்கூடாது…பார்த்தீங்கயில்லை எப்படி பேசுதுங்கன்னு” என அவர்களை விழிகளால் உறுத்து விழித்தப்படி கூறியவள் அலைப்பேசியில் எண்களை தட்ட ஆரம்பித்துவிட்டாள்.

அதுவரை தெனாவெட்டாக அவளை வம்பிழுத்துக்கொண்டு இருந்து பெண்களுக்கு உடல் வெடவெடக்க தொடங்கின.

ஆனால் அப்போதும் ஒரு பெண் “போலீஸ் கேஸ் தானே போய் கொடு…உன்கிட்ட நாங்க பேசினதுக்கு என்ன ஆதாரம் இருக்கு” என துணிச்சலை வரவழைத்து பேச,

சந்திரமதியோ அவளை மேலிருந்து கீழாக இளக்காரமாக நோக்கி “ஹலோ எனக்கெல்லாம் எந்த ஆதாரமும் தேவையில்லை…புதுசா அலெக்ஸ் பாண்டியன்னு ஒரு ஆசிட் டென்ட் கமிஷ்னர் வந்திருக்காரு தெரியுமா?அவர்கிட்ட ஒரு வார்த்தை நான் போய் சொன்னால் போதும்…உங்களையெல்லாம் முட்டிக்கு முட்டி தட்டி உண்மையை கக்க வைச்சிருவாரு…அவர் நம்பர் என்கிட்ட இருக்கு…போனை போடட்டடுமா?” என கேட்டுக்கொண்டே அலைப்பேசியை எடுத்து அவர்களின் முன்பு காட்ட,

சமீபத்தில் தான் அவரை பற்றி அவர்கள் கேள்வியுற்றிருந்தார்கள்.

அவனின் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் அறிந்தவர்கள் ‘ஆத்தி உன் வம்பே வேண்டாம்…ஆளை விடுடா’ என்றெண்ணி “சாரி சந்திரமதி” என அவளிடம் மன்னிப்பு வேண்ட,

அவளோ “என்கிட்ட எதுக்கு கேட்கறீங்க?இவங்ககிட்ட கேளுங்க” என விஜயலட்சுமியை சுட்டிக்காட்டி சொல்ல,

அவர்களும் வேறுவழியின்றி ”சாரி…இனிமேல் இப்படி பேசமாட்டோம்” என விஜயலட்சுமியிடம் மன்னிப்பு வேண்டி விட்டு ஓடியே போனார்கள்.

சந்திரமதியோ கசடு உள்ளம் படைத்த மனிதர்களை மன்னிப்பு வேண்ட செய்தாலும் அவளின் குமுறல் மட்டும் அடங்க மறுத்தது.

அவளின் உள்ளம் எரிமலையாய் வெடித்து சிதறிக்கொண்டிருந்தது‌.

ஆனால் விஜயலட்சுமிக்கு தான் அவர்களின் பேச்சு ஒரு வித வருத்தத்தை கொடுத்தன.

தன்னை பற்றி பேசினால் அவர் கண்டுக்கொள்ள மாட்டார்.

ஆனால் தன்னால் அவளிற்கும் இந்த அவப்பெயர் கிட்டியதை பார்த்து அவரின் உள்ளம் மருகிப்போயின.

அவர் கலங்கிய குரலில் “என்னை மன்னிச்சிடு பாப்பா…இனி உன்னை நான் பார்க்க வரலை…என்னாலே தான் உனக்கு…” என அதற்கு மேல் பேச முடியாமல் அந்த ஆறடி உயர பெண்மணி கலங்கி நிற்க,

அவர் கலங்கி நிற்பதை பார்க்கவே சந்திரமதியின் மனம் பிசைந்தது‌.

அதனால் அவளோ “ப்ச் அம்மா…ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவாங்க…அவங்களுக்காக நாம்ப பயந்து பயந்து வாழணுமா என்ன? அப்படி வாழ்ந்தால் நமக்கும் நிம்மதி இருக்காது…நம்மை சுத்தி இருக்கவங்களுக்கும் நிம்மதி இருக்காது…எதுவா இருந்தாலும் துணிச்சலா முடிவெடுத்து வாழணும்மா…அதுவும் நமக்கு பிடிச்ச மாதிரி வாழணும்…அதையே இவ்வளவு வருஷம் கழிச்சு இப்போ தான் நானே கத்துக்கிட்டேன்…என்னோட கோழைத்தனத்தாலே எனக்கு வேண்டிய ஒருத்தரை இழந்திட்டேன்…இனியொரு முறை இன்னொருத்தரையும் அதே கோழைத்தனத்தாலே என்னாலே இழக்க முடியாது…அதனாலே தயவு செஞ்சு நீங்க என்னை விட்டு விலகியிருக்கணும்னு நினைக்காதீங்க…எனக்குன்னு இப்போ இருக்கிறது நீங்க மட்டும் தான்…இன்னொரு இழப்பை தாங்கிக்கிற சக்தி எனக்கு இல்லைம்மா” என துணிச்சலாக பேச ஆரம்பித்தவளின் குரல் இறுதியில் தங்கையை நினைத்து உடைந்தது.

அவளின் துன்பம் அறிந்த பெண்மணியும் “பாப்பா நீ அழாதே கண்ணு” என அவளின் கண்களை துடைத்துவிட்டவர்,

“நான் இப்போ கூட உனக்காக தான் கண்ணு பேசினேன்…எனக்கு இதெல்லாம் புதுசில்லை…நான் கேட்டு கேட்டு பழகிட்டேன்…ஆனால் என்னாலே உன்னையும் தப்பா பேசறீங்களே…அதனாலே தான் அப்படி சொன்னேன் பாப்பா” என துக்கம் துளிர்த்த குரலில் கண்கள் கலங்க சொன்னவரை அழுத்தமாக நோக்கிய பாவை “அம்மா இதுக்கு முன்னாடி இதை விட மோசமான வார்த்தையெல்லாம் நான் கேட்டிருக்கேன்…இதெல்லாம் எனக்கு புதுசில்லை…அதனாலே யாரோ என்னவோ பேசிட்டு போகட்டும்…எனக்கு அதை பத்தி கவலையில்லை…நீங்க மட்டும் என் கூட எப்பவும் இருங்க…அது போதும்” என அவரின் கரத்தை இறுக பற்றிக்கொண்டாள் அவள்.

தன் ஆதரவை நாடும் குழந்தையை அந்த தாய் வேண்டாம் என்றா கூறுவார்.

தன்னில் அடைக்கலம் புகுந்தவளை அன்போடு அரவணைத்துக்கொண்டார் அவர்.

அதன்பிறகு அவளின் வேலைக்கான தேடுதல் வேட்டை தீவிரமாகியது.

ஏனெனில்,ஒரு வேலைக்கு சென்றுவிட்டால் அதில் வரும் வருமானத்தை கொண்டு தனி வீடு பார்த்து விஜயலட்சுமியை தன்னோடு வைத்துக்கொள்ளலாம் என்று எண்ணினாள்.

அதற்காகவே தன் தீரத்துடன் துவண்டுவிடாமல் பணியை தேடியவளின் விழியில் ஏதேச்சையாக அவளின் கல்லூரி நண்பன் ஜஸ்வந்த் விழுந்தான்.
 

முகிழ்மதி 61:


 

 

ஜஸ்வந்த் சந்திரமதி இருவருக்குமிடையே ஆழமான நட்பு எதுவுமில்லை.ஆனால் அவளது தோழமை வட்டாரத்தில் சிறிது நல்லவன் என்றால் அவன் ஒருவன் மட்டுமே?

அவளை கண்டு அவன் தான் முதலில் பேசினான்.

அவனிடம் பேசுவதற்கு அவளிருக்கும் நிலை தயங்க வைத்தது.

ஆனால் அவனோ அவளிடம் சகஜமாகவே உரையாட,அவளும் சிறிது இறுக்கம் தளர்ந்து பேச தொடங்கினாள்.

தன் வாழ்வில் நிகழ்ந்த எதை பற்றியும் தெரிவிக்காமல் அவள் வேலை தேடிக்கொண்டிருப்பதாக தெரிவிக்க “நீ இன்னும் படிச்சே முடிக்கலை…என்ன வேலை கிடைக்கும்னு நினைக்கிறே?பேசாமல் உன் படிப்பை நீ கன்ட்ன்யூ பண்ணு சந்து” என யோசனை கூறினான் ஜஸ்வந்த்.

அவளோ “என்னாலே இப்போதைக்கு படிப்பை பத்தியெல்லாம் யோசிக்க முடியாதுடா…என்ன?ஏதுன்னு என்னை எதுவும் கேட்காதே” என அழுத்தமாக சொன்னவள்,

வேறுவழியின்றி “எனக்கு நீ உதவி செய்யணும்னு நினைச்சால் எனக்கொரு வேலை மட்டும் வாங்கி கொடு…அது போதும் எனக்கு” என அவனிடம் உதவியை தயக்கமாகவே கேட்டாள்.

ஏனெனில்,அவளால் தனித்து எதுவும் செய்யமுடியவில்லை.

வேலை தேடி தோற்று அவளின் உடலும் மனமும் சோர்ந்துவிட்டிருந்தது.

அவளின் தோற்றத்தை பார்த்தவனிற்கு மனதில் இரக்கம் சுரக்க “சரி உன் நம்பர் கொடுத்திட்டு போ சந்து…ஏதாவது வேலை இருக்கானு நான் விசாரிச்சு சொல்லறேன்” என அவளிடமிருந்து அலைப்பேசி எண்ணை வாங்கிக்கொண்டான்‌.

அவளிடமிருந்த பழைய அலைப்பேசியை பார்த்தவனிற்கு அவளின் தற்போதைய நிலை தெள்ளத்தெளிவாக புரிந்துவிட்டது.

அதனால் அவளிற்கு உதவி செய்யவேண்டும் என்று முடிவெடுத்தவன்,அடுத்த நாளே அவளை அந்த மிகப்பெரிய நட்சத்திர விடுதிக்கு வேலைக்காக வரவழைத்திருந்தான்.

அங்கு அவனுடைய மாமா விடுதியின் மேலாளராக இருப்பதை தெரிவித்தவன் “நீ போய் அவரை பாரு சந்து…கண்டிப்பா ஒரு வேலை போட்டு தர்றேன்னு மாமா சொல்லியிருக்காரு” என ஜஸ்வந்த் மொழிந்ததும்,

அவளோ கண்கள் மின்ன “ரொம்ப தேங்க்ஸ்டா…இந்த உதவியை மட்டும் எப்பவுமே நான் மறக்கவே மாட்டேன்” என மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க பேசினாள்.

“இட்ஸ் ஓகே…நீ போய் பாரு” என அவனும் அவளை சிரித்துக்கொண்டே வழியனுப்பி வைத்தான்.

அவனின் சொல்லில் நெஞ்சம் நிறைய நம்பிக்கையுடன் உள்ளே சென்ற பெண்ணவளோ கொதித்துப்போய் தான் வெளியே வந்தாள்.

அவள் வரும் வேகத்தை பார்த்துவிட்டு பதறிப்போய் பின்னே வந்த ஜஸ்வந்த் “ஹே சந்து…சந்து நில்லுடி…” என கத்திக்கொண்டே அவன் பின்னே ஓடி வர,

அவளோ அவனின் புறம் திரும்பி நின்று அவனை நன்றாக முறைத்தாள்.

அவனும் அவளின் முன்பு வந்து நின்றவன் “சந்து உனக்கு இப்போ என்ன தான்டி பிரச்சனை?” என சலிப்பாக வினவ,

அவளோ “என்னை பார்த்தால் அந்த ஆளுக்கு எப்படி தெரியுது?” என சீறியவளின் குரல் தன் நிலைமையை நினைத்து வருத்தத்துடன் கீறிச்சிட்டது.

அவளின் மரியாதையற்ற விளிப்பில் கடுப்பான ஆடவனும் “ப்ச் மதி இப்போ எதுக்கு டென்ஷன்?நீ இன்னும் படிப்பையே முடிக்கலை…மாமா உனக்கு வேலை தர்றேன்னு சொன்னதே பெருசு…இதிலே அவரையும் சேர்த்து திட்டறே?“ என்றான்‌ சிடுசிடுப்பாக.

அவளோ தொண்டை அடைக்க “இந்த வேலையை தர்றதுக்கு அவர் வேலை தரமுடியாதுன்னு நேரடியாவே சொல்லியிருக்கலாம்டா…அதை விட்டுட்டு எப்படி இந்த வேலையை தரலாம்?” என ஆதங்கமாய் கேட்டவளிற்கு அந்த வேலையை பற்றி நினைத்தாலே மனம் கசந்தது.

ஆனால் அவனோ சிகையை கோதி “ப்ச் இங்க பார் சந்து…பார் அட்டென்ட்டர் ஒண்ணும் நீ நினைக்கிற அளவு மோசமில்லை…எத்தனை பொண்ணுங்க அங்க வேலை செய்யறாங்கனு நீயே போய் பாரு…” என மிகவும் பொறுமையாக அவளிடம் எடுத்துரைத்தான்.

ஆம்,அவளிற்கு அவர்கள் கொடுப்பதாக இருந்த வேலை கேளிக்கை விடுதியில் பானம் பரிமாறும் ஊழியர் பணி தான்!

அதைக்கேட்டே பெண்ணவள் கொதித்துப்போயிருந்தாள்.

ஆதலால் “எனக்கு இது பிடிக்கலை ஜஸ்…எனக்குள்ள கொஞ்சுண்டு மான மரியாதை ஒட்டிட்டு இருக்கு…அதை அங்க வேலை செஞ்சு என்னாலே கெடுத்துக்க முடியாது” என நிச்சலத்துடன் மறுத்துவிட்டாள்.

அதில் கடுப்பாகிய ஜஸ்வந்த் “சந்து ஹரிஷ் கூட நீ எத்தனை தடவை அங்க போயிருக்கே?இப்போ எதுக்கு புனிதாத்மா மாதிரி ஓவரா ஆக்ஷன் பண்ணறே?” என முகத்திலடித்தாற் போன்று அவன் கேட்டதும்,அவளின் முகம் அப்படியே வதங்கி அழுகையில் சிவந்துவிட்டது.

அவளின் முகத்தை கண்ட பிறகே தன் தவறை உணர்ந்த ஜஸ்வந்த் “ஐயம் சாரி சந்து…கோபத்திலே வாயிலே வந்திடுச்சு…நீ ரொம்ப கேட்டதாலே தான் நான் மாமாகிட்ட கெஞ்சு கேட்டு இந்த வேலைய வாங்கினேன்… நீ கொஞ்சம் யோசிக்கலாமில்லை” என அவளிடம் பொறுமையாக சொல்லி பார்க்க,

அவளோ அப்போதும் “இல்லைடா…முன்னாடி அங்கு வரவே எனக்கு பிடிக்காது…ஹரிஷ் தான் கட்டாயப்படுத்தி கூட்டிட்டுப்போவான்…இப்போ நான் வேற ஒரு பாதையிலே போகணும்னு நினைக்கிறேன்…இது வேணாம்” என மனம் ஒப்பாமல் பேசவும்,மீண்டும் கடுப்பாகிவிட்டான் அவன்.

“ஏய் சந்து நீ கொஞ்சம் ஓவரா பண்ணறடி?நீ சொல்லறதை பார்த்தால் அங்க வேலை செய்யறவங்க எல்லாம் தப்பானவங்க மாதிரியே பேசறே?ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோ…ஒயின் ஷாப் கடை வைச்சிருக்கவன் டீ டூட்டலராவும் இருந்திருக்கான்…பக்தி சாமான் விக்கறவன் மொடா குடிக்காரனாவும் இருந்திருக்கான்…எல்லாமே அவங்க அவங்க குணத்தை பொறுத்தது…நீ எப்படி வாழணும்னு நீ தான் முடிவு பண்ணனும்” என அவன் அவளிற்கு தெளிவான விளக்கவுரை கூற,

அவள் அப்போதும் தயங்கியதை பார்த்த ஜஸ்வந்த் “அடியே நீ யோசிக்கிறதை பார்த்தால் உன்னை ஏதோ என் மாமா பாரிலே டேன்ஸ் ஆட கூப்பிட்ட மாதிரியும் ரூமுக்கு போக சொல்லற மாதிரியும் இந்த முழி முழிக்கிறே?” என கேலியாக அவன் உரைத்ததும்,

அதில் வெகுண்ட பெண்ணவள் “ஹான் அப்படி மட்டும் அந்த ஆளு சொல்லியிருந்தாரு அவரை செருப்பாலே அடிச்சிருப்பேன்…ஆளையும் மூஞ்சியும் பாரு சொட்டை தலையன்” என பல்லை கடித்தப்படி சீறியிருந்தாள்.

அவளின் பேச்சில் அதிர்ந்த ஜஸ்வந்த் “ஹே அவர் என் மாமாடி” என பதறிப்போய் சொல்ல,

அவளோ “அடப்போடா அந்த ஆள் பெரிய மனுஷன் மாதிரியா பேசறாரு…இப்போவே அவருக்கு நான் அடிமை மாதிரியே பேசி வைக்கிறாரு…எடுத்தவுடனே பார் அட்டென்ட்டர் வேலைய யாராவது கொடுப்பாங்களா?எனக்கு இந்த வேலை வேணாம்” என்றாள் சினம் மிகுந்த குரலில்.

அதற்கு மேல் அவளிடம் விவாதம் செய்ய அவன் விரும்பில்லை.

“சரி உன் இஷ்டம் இரண்டு நாள் டைம் எடுத்துக்கோ…அப்புறம் வந்து சொல்லு…ஜஸ்ட் ஃபைவ் ஹவர்ஸ் பார் டென்ட்டரா வேலை செஞ்சால் மாசம் பத்தாயிரம் சம்பளம்…அதுவும் சேஃப் அவுர்ஸ் தான்…உனக்கு எந்த பிரச்சனையும் வராது நான் கேரண்டி…இந்த வேலைக்காக நிறைய பேர் லைனிலே நிக்கறாங்க…நீ யோசிச்சு முடிவு சொல்லு…” என முடிவை அவளிடம் அவன் ஒப்படைத்துவிட்டான்.

அவன் கூறியதை செவியில் உள்வாங்கியவள் “ம்” என்று மட்டும் சொன்னாள்.

அவள் கல்லூரி படிப்பை முடிக்காததினால் அவளின் தகுதிக்கு ஏற்றாற் போன்ற வேலை அவளிற்கு கிடைக்கவில்லை.

அதன் பொருட்டே ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் என்று நண்பன் அழைத்தவுடன் இங்கு வந்துவிட்டாள்.

ஆனால் அவளிற்கு கிடைத்த அந்தவொரு பணியும் இவ்வாறு ஏடாக்கூடமாக இருக்கவும்,அவளிற்கு என்ன முடிவெடுப்பது என்றே தெரியவில்லை.

இயலாமை,கோபம்,துக்கம் என அனைத்து உணர்வுகளும் ஒரு சேர வந்து அவளை தாக்க அவளிற்கு தலை கிறுகிறுத்தது.

இந்த வேலையை விட்டால் வேறு வேலை அவளிற்கு கிடைப்பது சாத்தியமே இல்லை.

ஆனாலும் இந்த பணியை ஒப்புக்கொள்ள அவளிற்கு மனமும் இல்லை.

அவள் இருதலைக்கொள்ளி எறும்பாய் துடித்தாள்.

இவர்கள் இருவருக்குமிடையேயான உரையாடலை தான் ஜித்தேந்திரன் தூரத்திலிருந்து பார்த்திருந்தான்.

அவர்கள் பேசுவது எதுவும் அவனின் காதில் தெளிவாக விழவில்லை.

ஆனால் இருவருக்குமிடையேயான அந்த காரச்சாரமான உரையாடல் அவனை கவர்ந்திழுத்ததை விட சந்திரமதியின் தற்போதைய தோற்றம் அவனை அதிகமாகவே ஈர்த்தது.

அவளை முதல் முறை பார்த்ததிலிருந்தே அவளின் நடை,உடை,பாவனை அனைத்தும் அவனிற்கு அத்துப்படி!

நகத்தில் கூட அழுக்கு படியாமல் இருக்கும் பெண்ணின் கந்தலான உடை அவனின் ஆர்வத்தை தூண்டின.

அவளிடமிருந்த எட்டு சுரிதாரிலே மிகவும் அழகான நீல நிற சுரிதாரை தான் அவள் அங்கு அணிந்து வந்திருந்தாள்.

வழக்கமாக அவள் அணியும் பகட்டான உடைகளை போல் அல்லாமல் பல முறை துவைத்து வெயிலில் காய வைத்ததினால் அதன் நிறம் சிறிது மட்டுப்பட்டிருந்தது.

அவளின் உடையின் ஓரத்தில் ஒரு சிறிய கறை இருந்தது.

பேருந்தில் இங்கு பயணம் செய்து வரும் போது அந்த கறை ஏற்பட்டிருந்தது.

அதைக்கூட அவள் அறியவில்லை.

அவள் காதில் சிறிய நீல நிற நெகிழி ஜிமிக்கி,நெற்றியில் சிறிய நீல நிற வட்ட பொட்டு வைத்து,தனது கூந்தலை பின்னலிட்டு இருந்தாள்‌.

அவளின் உடையலங்காரமே அவ்வளவு தான்!

அவளின் கழுத்து,கை,கால் எதிலும் எந்தவொரு அணிகலனும் இல்லை.அவளை பார்ப்பதற்கே ஏழ்மையை விட சற்று கீழான நிலையில் இருப்பது போன்று அவனிற்கு தோன்றியது.

அந்த எளிமையான உடையில் கூட அவள் பேரழகியாகவே திகழ்ந்தாள்.

அவளை அன்று மண்டபத்தில் பார்த்த பிறகு இன்று தான் முதல் முறையாக பார்க்கிறான் ஜித்தேந்திரன்.

அதனால் அவளின் மாற்றம் அவனிற்கு வித்தியாசமாக இருந்தது.

‘என்னாச்சு இவளுக்கு?இப்படி இருக்கா?ஏதாவது பிராப்ளமா?’ என அவனை அறியாமலே அவனின் இளகிய மனம் அவளை நோக்கி அவனை இழுத்தது.

அதனால் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த இடத்திற்கு அவனின் கால்கள் தானாகவே வந்தடைந்திருந்தன.

அவர்கள் இருவரும் ஒரு பெரிய மரத்தடுப்புக்கு அந்த புறமாக நின்று பேசியதினால் அவன் மற்றொரு புறம் நின்றுக்கொண்டான்.

அவன் அங்கு நின்றிருப்பது மற்ற இருவருக்கும் தெரியாது.

அதனால் அவர்கள் பேசுவது அனைத்தையும் அவன் முழுமையாக கேட்டிருந்தான்.

‘வேலையா இவளுக்கு எதுக்கு வேலை?அதுவும் பார் அட்டென்ட்டரா?’ என அவன் யோசிக்கும் போதே அவனுள் வேறொரு கேள்வி உதயமானது.

‘ஆமா…அந்த விஜி பேய் எங்கே?செல்லம் வெல்லம்னு இவளையே சுத்தியே வருமே?ஒரு வேளை இவளை வீட்டை விட்டு துரத்திடுச்சோ?’ என குழப்பமாக அவன் தன்னுடைய குளிர்க்கண்ணாடியை தன் கண்களோடு சேர்த்து அழுத்தினான்.

அவர்கள் பேசி முடிக்கும் வரை அங்கு நின்று அனைத்தையும் கேட்டவனின் மனசாட்சியோ ‘உன் வாழ்க்கையே இங்க அந்தரத்திலே தொங்கிட்டு கிடக்கு…நீ அடுத்தவளுக்காக கவலைப்படறே?அவ எப்படி போனால் உனக்கு என்ன?போடா டேய்’ என காறி உமிழாத குறையாக அவனை திட்ட,

‘அதுவும் சரி தான்…முதல்ல இந்த ரோகிணிய சமாளிப்போம்’ என பெருமூச்சுடன் கூறி அங்கிருந்து செல்ல திரும்பிய ஜித்தேந்திரனை யாரோ ஒருவர் பலமாக இடித்திருந்தார்கள்.

அவனின் மீது மோதி தடுமாறிய நபரை தன் நரம்போடிய கரத்தால் தாங்கி நிறுத்தியிருந்தான் ஆடவன்.

அவனின் மீது மோதிய நபர் வேறு யாருமல்ல.

சந்திரமதி தான்!

தன் முகத்தருகே தெரிந்த அவளின் பளிங்கு முகத்தை கண்டு அவன் வியப்பில் விழி விரிக்க,அவளோ அவனின் முகத்தை கூட பார்க்காமல் அவன் அணிந்திருந்த கருப்பு நிற சட்டையை மட்டும் பார்த்துவிட்டு “சாரி சார்…தேங்க்ஸ்” என படபடப்புடன் கூறிவிட்டு அவனிடமிருந்து விலகி நடக்க தொடங்கிவிட்டாள்.

அவளே ஒரு பெரும் குழப்பத்தில் இருந்ததால் சுற்றி நடக்கும் எதுவும் அவளின் சிந்தையில் பதியவில்லை‌.

ஆனால் ஆடவனோ அவளை தாங்கி நின்ற வாக்கிலே அசையாமல் சில வினாடிகள் உறைந்து நின்றுவிட்டான்.

அவனிற்குள்ளும் இப்போது ஆயிரம் குழப்பங்கள்!

‘அவ என்னை பார்த்தாளா?பார்க்கலையா?பார்த்தும் ஏன் எதுவும் தெரியாத மாதிரி போறாள்?இங்க எதுக்கு வேலை கேட்டு வந்திருக்காள்?ஒண்ணுமே புரியலையே’ என அவனின் தலையே வெடிக்கும் அளவு கேள்வி அம்புகள் அவனின் மூளையை குடைந்தன.

அவனது வாழ்வே இங்கு நிலுவையில் இருக்க அவனோ மற்றொரு பெண்ணிற்காக கவலைக்கொள்கிறான்.

அவனை எண்ணி அவனிற்கே வித்தியாசமாக தோன்றியது.

அதனால் தற்சமயம் அவளை பற்றி எதுவும் யோசிக்க வேண்டாம் என தலையை உலுக்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

சந்திரமதியோ பல விதமான யோசனைகளுடனே பேருந்தில் ஏறி தனது விடுதி இருக்கும் தெருவில் நுழைந்தாள்.

அவளிற்கு சுற்றி நடக்கும் எதுவும் கண்ணில் பட்டும் கருத்தில் பதியவில்லை.

தன் சிந்தை மறந்து அப்படியே தெருவில் நடந்துக்கொண்டிருந்தவள் தன் முன்னே நின்றிருந்த யாரோ ஒருவரின் மீது மோதி நின்றாள்.

இப்போது அவளின் விழிகளுக்கு நீல நிற ஜீன்ஸ் கால்சராய் அணிந்த இரண்டு நீண்ட கால்கள் மட்டுமே கண்ணிற்கு புலப்பட்டன.
 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top