முகிழ்மதி 56:

அவளை தன் கூட்டிலிருந்து வெளிக்கொண்டு வர அவனும் பல வகையில் போராடுகிறான்.
அவளோ வெளியில் வர மாட்டேன் என வறட்டு பிடிவாதம் பிடிக்கும் போது அவன் என்ன தான் செய்வான்?
அவளின் கடந்தகாலம் அவளை இவ்வாறு நடக்க வைக்கிறது என்று அவனிற்கும் புரிந்தது.
ஆயினும்,ஆசைகளும் உணர்வுகளும் நிறைந்த சாதாரண ஆண்மகன் தானே அவனும்!
அவளிற்காக…அவளை நேசித்ததற்காக அவன் ஒவ்வொரு முறையும் தன்னிலையிலிருந்து இறங்கி வருகிறான்.
ஆனால் அவளின் அழுத்தம் அவனிற்குள் விரக்தியை கொடுத்தன.
அவளிடம் அதற்கு மேல் அவனால் போராட முடியவில்லை.
அதிலும்,அவள் அவனை அருகே வராதே என்று கூறியதிலே அவனின் மனம் காயப்பட்டிருந்தது.
அதனால் அவளின் முகத்தையே சில வினாடிகள் வெறித்து நோக்கிய ஆடவன் எதுவும் பேசாமல் திரும்பி இரண்டடி எடுத்து வைத்தான்.
தன்னவனது கசங்கிய முகத்தை ஓரக்கண்ணால் அவதானித்திருந்த பெண்ணவளிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
அதனால் மனம் வெறுத்து திரும்பிய ஆடவனிடம் “நா..ன் ப..யந்திட்டேன்” என்று ஒரு வழியாக தட்டுத்தடுமாறி கூறியிருக்க,அவளின் பேச்சில் அவனின் நடை தேங்கின.
அவன் மெதுவாக அவளின் புறம் திரும்ப,அவளோ அப்போதும் இதழ்கடித்து தலைக்குனிந்து நின்றிருந்தாள்.
‘ஷப்பா’ என சலித்த ஆடவன் “எதுக்கு உனக்கு பயம்?கிஸ் பண்ணதுக்கா?” என சீறலான குரலில் கேட்டவன் அவளை நெருங்க வில்லை.
அவளிடமிருந்து தள்ளி நின்றப்படியே அவன் உரையாடினான்.
அவனை அவள் அவமதித்ததால் உண்டான கோபம் அவனிடம்!!
அவளோ “இல்லை” என மெல்ல தலையை உருட்டினாள்.
இப்போது அவனின் நெற்றியில் முடிச்சு விழ “இல்லையா?வேற என்ன பயம்?” என குழப்பத்துடன் தாடையை நீவினான்.
அவளோ அவனிடம் அதை வெளிப்படையாக கூற முடியாமல் தயங்கினாள்.
கணவனோடு ஒன்றாக பல வருடங்கள் வாழ்ந்த பெண்களே பேச தயங்கும் ஒரு விடயத்தை அவள் மட்டும் எங்கனம் கூறுவாள்?
அதனால் அவள் அவற்றை பற்றி உரைக்க தடுமாற,அவனோ அவள் தேங்கியதின் காரணமறியாமல் அவளின் மேல் கோபம் கொண்டான்.
“ப்ச் முகிழ்…நான் உன்னோட புருஷன்…உன்கிட்ட பல தடவை சொல்லிட்டேன்…எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேசு… என்கிட்ட நீ எதுக்கும் தயங்க வேண்டிய அவசியமே இல்லைனு சொல்லிட்டேன்…ஆனால் நீ இப்படியே அழுத்தமா இருந்தால் நான் என்ன தான் செய்யட்டும்?” என கோபத்தோடு ஆரம்பித்தவன், இறுதியில் ஒரு வித அயர்ச்சியுடன் முடித்தான்.
அவளோ எச்சிலை கூட்டி விழுங்கி அவனை பார்த்து விழிக்க,
“ப்ச் இப்படி என்னை பார்க்காதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லறது?” என திட்டியவன் சிகையை அழுந்தக்கோதியவாறே வேறுப்புறம் திரும்பி ‘இப்படி பார்த்து பார்த்தே என்னை கொல்லுறாள்’ என இதழுக்குள் முணுமுணுத்து கொண்டான்.
அவன் அவளை வசைப்பாடியதும் அவனை பரிதாபமாக நோக்கினாள் அவள்.
அவளால் சொல்லவும் முடியவில்லை…சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.
ஆனால் கணவனது சினம் அவளை அதிகமாக பாதித்தது.
அதனால் அவனிடம் சொல்லிவிட போராடி திணறினாள்.
அவளின் அந்த பாவனையை பார்த்தவனிற்குள் எரிச்சல் தோன்றின.
உடனே அவளை நேருக்கு நேர் நோக்கிய ரத்தினவேல் “முகிழ் என்னடி பிரச்சனை உனக்கு?பேசறதா இருந்தால் பேசு…இல்லைனா நான் கிளம்பறேன்” என சிடுசிடுத்து தன் உரையாடலை முடித்துக்கொண்டான்.
ஆனால் அவளோ எங்கு அவன் சென்றுவிடுவனோ என பதறி “இ…ல்லை…நான்…அதை எப்படி சொல்லறதுனு தெரியலை…” என படபடப்பில் உளறிக்கொட்டியவளை அழுந்த பார்த்த ரத்தினவேல் “எப்படி சொல்லறதுன்னா?வாய் வழியா தான் சொல்லணும்…மூக்கு வழியாவா சொல்லுவே” என அவன் எரிச்சலுடன் பதிலடி கொடுக்க,
அவளோ அதற்கும் ‘என்ன பேசுவது’ என தெரியாமல் இதழ்கடித்தாள்.
ஒரு கட்டத்தில் “அடப்போடி” என சலித்துக்கொண்டே திரும்பியவனின் கரம் பற்றி நிறுத்தியது ஒரு மென் கரம்!
அவளின் பிடி ஒரு பூச்செண்டு தனக்கு ஒத்தடம் கொடுத்தது போலிருக்க,அவனோ ஆச்சரியமாக அவளை நோக்கி திரும்பினான்.
அவளோ அவனின் கரத்தை விட்டுவிட்டு வாயை திறந்து பேச தடுமாறினாள்.
அவளின் தவிப்பை கண்டவனிற்குள் ஏனோ இரக்கம் சுரந்தது.
அதனால் ஒரு பெருமூச்சுடன் “நீ இவ்வளவு கஷ்டப்பட்டு என்கிட்ட எதுவும் சொல்ல வேணாம் முகிழ்…நீ ஃப்ரீயா விடு…போய் தூங்கு” என்றான் சற்று குரலை தாழ்த்தி…
அவளோ “இல்லை நான் சொல்லறேன்” என்றவள் எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டாள்.
ஆடவனோ ‘யாருடா இவ சொல்லவும் மாட்டிக்கிறாள் சரி விடுன்னாலும் இல்லை நான் சொல்லுவேன்னு அடம் பிடிக்கிறாள்…ஆனால் வாயை மட்டும் திறக்கமாட்டிக்கிறாள்’ என உச்சக்கட்ட கடுப்புடன் எண்ணினான்.
அவளோ ஒரு வழியாக கணவனை சோதித்தது போதும் என்று முடிவெடுத்து வாயை திறந்தாள்.
குனிந்த தலை நிமிராமல் தனது துப்பட்டாவை முறுக்கியப்படியே “நீங்க கி…ஸ் பண்ணும் போது உ…ங்க…என் மேலே சாஞ்சிட்டு இருந்தீங்களா?அதை நான் ஃபீ...ல் பண்ணேன்…அதனாலே எ…னக்கு ஒரு மாதிரி…வயித்திலே தீப்பிடிச்ச மாதிரி இருந்துச்சு…அ…ப்புறம் உடம்பெல்லாம் சீவராகி எ..எனக்கு அது வ…ந்திடுச்சு…அதான் பயந்திட்டேன்…” என துண்டு துண்டாக அவள் பேசியதை கேட்டவனிற்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.
ஆனால் அவளின் தயக்கம்,படபடப்பு,கூச்சம் வைத்து அவளின் வெட்டியிருந்த பேச்சுகளை ஒன்றிணைத்து பார்த்தவனிற்கு பட்டவர்த்தனமாக அனைத்தும் புலப்பட்டது.
அவனிற்கு எல்லாம் புரிந்ததும் ‘ஓ காட்’ என தொண்டையை செருமி மீசையை முறுக்கிவிட்டு வேறுப்புறம் திரும்பிக்கொண்டான்.
ஆண்மகனான அவனிற்கே அந்த பேச்சு வெட்கத்தில் முகம் சிவக்க வைத்தது.
‘கடைசியா என்னால் தான் அவ பயந்திருக்காளா?’ என்றெண்ணியவன் இதழ்கடித்து சிரித்துக் கொண்டான்.
சில வினாடிகள் தன்னையே நொந்துக்கொண்ட ஆடவன் அவளின் புறம் திரும்பினான்.
அவளோ அனைத்தையும் சொல்லிவிட்டு அவன் தவறாக எடுத்துக்கொண்டானோ என தவித்துக் கொண்டிருந்தாள்.
கணவன் மனைவிக்கு இடையேயான சாதாரண உணர்வுகளை கூட புரிந்துக்கொள்ள முடியாமல் தவித்தவளை என்ன செய்வது என்று பார்த்தான் அவன்.
தாம்பாத்தியத்தின் அரிச்சுவடி கூட அறியாமல் இருந்த தன் மனைவிக்கு அவனே ஆசானாக மாறிவிட முடிவெடுத்தான்.
அவனை தவிர வேறு யாராலும் அதனை கற்ற தரமுடியாது என்று அவன் அறிவான்.
‘இதையும் நான் தான் கத்து தரணுமா?’ என நெற்றியை நீவிக்கொண்டாலும் தன் மனைவிக்கு அதனை கற்று தருவதில் அவனிற்கு இன்பம் தான்!
அதனால் அவளை நெருங்கிய ஆடவன் அவளின் நாடி பற்றி உயர்த்தினான்.
அவளோ மெதுவாக அவனை ஏறிட,அவளின் இதயத்துடிப்பு அதிகரித்தது.
அவளின் விழிகளை ஆழ்ந்து நோக்கிய ரத்தினவேல் “அந்த சமயம் என்னை நீ ஃபீல் பண்ணும் போது உனக்கு அது பிடிக்கலையா முகிழ்?” என சிறிது தயக்கத்துடன் விசாரிக்க,
அவளோ சில வினாடிகள் யோசித்துவிட்டு ‘இல்லை’ என்பது போல் தலையாட்டினாள்.
அதன்பிறகே அவனிடம் நிம்மதி பெருமூச்சு ஒன்று எழுந்தது.
அதனால் அவனின் அடுத்த கேள்வியாக “அப்போ பிடிச்சிருக்கா?” என கேட்டதும் அவளின் முகம் குப்பென்று சூடேறி சிவந்துவிட்டது.
‘ஐய்யோ என்ன இப்படி கேட்கிறாரு?’ என அவஸ்தையான உணர்வு ஒன்று அவளில் தோன்றிவிட,அவள் சட்டென இமைத்தாழ்த்தி இதழ்கடித்து கொண்டாள்.
அவள் இதழ் கடித்ததும் வெளிப்பட்ட அவளின் மச்சத்தை நோக்கிய ஆடவனின் உணர்வுகள் மீண்டும் பீறிட்டு எழுந்தன.
அவனின் பார்வை கள் குடித்த வண்டாய் மாறிட “சொல்லு முகிழ்” என அவளை சீண்டினான்.
அவளோ ‘என்ன பதில் சொல்வது?’ என தெரியாமல் திருதிருவென விழிக்கவும் அவனிற்கு சிரிப்பு தான் வந்தது.
அவளின் பாவனை அப்படியே ஆகர்ஷித்தது.
அதனால் தாடிக்குள் மறைத்த மந்தகாச புன்னகையுடன் “சரி விடு…உனக்கு பிடிச்சிருக்கா?பிடிக்கலையானு நான் டெஸ்ட் பண்ணி பார்த்துக்கறேன்” என்றவன் மெதுவாக அவளின் கழுத்தை பற்றி தன்னை நோக்கி உயர்த்தினான்.
அவளோ ‘ஏதே டெஸ்ட்டா?’ என்பது போல் விழி விரித்து அவனை ஏறிட,
ஆடவனோ அவளின் உணர்வுகளை பரிசோதிக்கிறேன் என்ற போர்வையில் குனிந்து அவளின் மென் இதழ்களை சிறைப்பிடித்திருந்தான்.
அதை சற்றும் எதிர்பாராத பெண்ணவளிற்கு தூக்கிவாரிப்போட்டது.
அவளோ அதிர்ச்சியில் விழிகளை பெரிதாக விரித்து,அவனை தள்ளிவிட முனைய,அந்த முரட்டு ஆடவனோ அவளின் கரங்களை பற்றி அலமாரியில் இருந்த துணிகளின் மீது வைத்து சிறைச்செய்திருந்தான்.
இப்போது பாவையவளால் அவனின் ஆளுகையிலிருந்து வெளிவரவே முடியவில்லை.
அவனின் தீண்டலிலே அவளின் மேனி மொத்தமும் துவண்டுவிடும்.
இப்போது அவனின் இதழ்முத்தத்தில் காரிகையே மொத்தமாய் அவனிற்குள் குத்தகைக்கு சென்றிருந்தாள்.
சற்று முன்பு அவளின் உடலில் ஏற்பட்ட மாற்றத்திற்கு தவித்த பெண்ணவளிற்குள் மீண்டும் அதே போலான உணர்வுகள்!
ஆனால் இம்முறை அவள் அவனிடமிருந்து பயந்து விலகவில்லை.
தன்னுள் ஏற்படும் மாற்றத்திற்கான ஆதிப்புள்ளி கணவனின் இதழ் முத்தம் என்று அறிந்து மௌனித்தாள்.
முதலில் ஒரு வித அசௌகரியத்துடன் நெளிந்த பெண்ணவளின் கரம் உணர்ச்சி பெருக்குடன் தன்னை சிறைசெய்திருந்த கணவனது கரத்தை இறுக்கிப்பற்றிக்கொண்டது.
அவர்களது கரம் பின்னி பிணைந்ததில் அங்கு அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புடவைகள் சிலது கீழே சரிந்து விழுந்தன.
சரிந்து விழுந்த புடவைகளை பற்றி இருவருக்கும் அக்கறைமில்லை.
இருவரின் தேகமும் ஒன்றோடு ஒன்று உரசி தீமூட்டி கொண்டிருந்த அதே வேளை இருவரின் இதழ்களும் ஒன்றிணைந்திருந்தன.
ஆடவனோ அவளின் இதழை தீண்டியிருந்தானே ஒழிய அவளின் இதழ்களை உள்வாங்கி அழுத்தமாக முத்தமிடவில்லை.
அந்த இலேசான இதழொற்றலிற்கே தன்னவள் துவண்ட விதம் கண்டவனின் இதழ்களை விரிய வைத்தன.
‘நான் இன்னும் அழுத்தமா கூட கிஸ் பண்ணலை…மேடம் இதுக்கே ஃபிளாட்டு…இன்னும் நிறைய இருக்கே…’ என ஒரு புறம் உற்சாகமாக எண்ணிக்கொண்டாலும்,
மறு புறம் ‘என்னடி இவ்வளவு சாஃப்ட்டா இருக்கே…உன்னை எப்படி தான் ஹேண்டில் பண்ணப்போறேனோ?’ என தனக்குள் கவலையோடு புலம்பியும் கொண்டான்.
அவளிற்கு இப்போது உணர்வுகளை பற்றி கற்று தராமல் விட்டால்,அதன்பிறகு அவளிற்கு தாம்பாத்தியத்தை நினைத்து பயம் உண்டாகும்.
அதற்காகவே தங்களுக்குள் நிகழும் மாற்றங்கள் அனைத்தும் இயற்கை என புரிய வைக்கும் விதமாக அவளை முத்தமிட்டிருந்தான்.
அவளின் இதழ்களில் மென்மையாக இதழொற்றிய ஆடவனின் அதரங்கள் சந்தடி சாக்கில் தன்னை கவர்ந்திழுக்கும் அவளின் மச்சத்தையும் ருசி பார்த்திருந்தன.
அவனின் அந்த செயலில் அவள் தன்னிலையை முழுமையாக இழந்து அவனின் மீதே தொய்ந்து விழுந்திருந்தாள்.
தன் நெஞ்சில் விழுந்தவளை ஆதரவாக தாங்கிக்கொண்டான் ஆடவன்.
அவளோ விழி மூடி அவனின் நெஞ்சிலே சாய்ந்துக்கொள்ள,அவளை ஆதுரத்துடன் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்ட கண்ணாளன் “ரிலாக்ஸ் கண்ணம்மா…ஒண்ணுமில்லை…இது ஜஸ்ட் ஹுயுமன் ஃபீலிங் தான்…என் மேலே உனக்கும் உன் மேலே எனக்கும் லவ் ஃபீல் அதிகரிக்கும் போது நம்மோட பாடி எக்ஸைட்மெண்ட்டாகி இப்படி நடக்கும்…இதுக்கு நீ பயப்பட வேண்டிய அவசியமேல்லை…இட்ஸ் ஆ ஃபீலிங்…கண்ணை மூடி ஜஸ்ட் ஃபீல் மட்டும் பண்ணும்மா…வேற எதையும் யோசிக்காதே” என அவளின் கூந்தலை வருடிவிட்டவாறே அவளிற்கு புரியும் வகையில் பாடம் கற்பித்தான்.
அவளிற்கு ஓரளவு அவன் சொல்ல வருவது புரிந்தது.
ஆனால் அவன் ‘காதல்’ என்று சொன்னதை மட்டும் அந்த குழந்தை உள்ளம் கொண்ட குமரியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
‘காதலா இது எப்போ?’ என ஒன்றும் புரியாமல் குழம்பிப்போனாள்.
அவளிற்கு அவனை பிடித்திருக்கிறது…அவனோடு அவள் இருக்கும் போது மகிழ்ச்சியாக உணர்கிறாள்.
அவனின் அருகாமை அவளிற்கு ஒரு பாதுகாப்பான உணர்வையும் கொடுத்தன.
அவனோடு இறுதி வரை இருக்கவே அவளிற்கும் விருப்பம்!
அந்த அளவு அவனை அவளிற்கு பிடிக்கும்.
ஆனால் அவனிற்கு?
தனது தமக்கையோடு அவனிற்கு நடக்கயிருந்த திருமணம் அவளின் சிந்தையில் தோன்றி மறைந்தவுடன் அவளின் மனம் சுணங்கின.
அவனிற்கு தன்னை பிடித்திருக்கிறது என்று அவளுள் ஒரு சந்தேகம்!
அத்தோடு அன்று தமயந்தியின் சொற்கள் வேறு அவளின் காதல் ஒலிக்க,அவனிற்கு தான் ஏற்ற ஜோடியில்லையோ என தனக்குள்ளே வைத்து அவளை மருக வைத்தது.
அவளின் சந்தேகத்தை அப்போதே அவனிடம் கேட்டு தெளிவுப்படுத்தியிருக்கலாம் அவள்!
விதி யாரை விட்டது…அவளின் வாழ்வில் அதை வைத்து விளையாட காத்திருந்தது.
விதியின் சதிராட்டத்தை அறியாத ஆடவனோ நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவளிற்கு தாம்பாத்தியத்தின் ஒவ்வொரு சுவையையும் பயிற்றுவிக்க ஆரம்பித்திருந்தான்.
அன்று அவளிற்கு உணர்வுகளை பயிற்றுவிப்பதிலே அவனின் பொழுது கழிந்துப்போனது.
அடுத்த நாள் காலை தான் அவளிடம் அவன் வெளியூர் செல்வதை பற்றி தெரிவித்தான்.
அதைக்கேட்ட முகிழ்மதியின் முகம் சுருங்கிவிட்டது.
அவனை பிரிய வேண்டும் என்று எண்ணினாலே நெஞ்சம் சுருக்கென தைத்தது.
“முகிழ் உனக்கு எக்ஸாம் இல்லைனா உன்னையும் என் கூட கூட்டிட்டுப்போயிடுவேன்…பட் நீ எக்ஸாமை பாரு…இப்போ அது தான் முக்கியம்…இரண்டே நாள் தான் நான் சீக்கிரமா வந்திடறேன்” என அவளை தன்னோடு சேர்த்தணைத்து மனையாளை சமாதானம் செய்து கிளம்பியிருந்தான்.
அவன் தன்னிலிருந்து பிரிந்து சென்ற பிறகே தன் கணவன் அவளின் வாழ்வில் இன்றியமையாதவனாக மாறிவிட்டதை அவள் உணர்ந்தாள்.
ஆனால் உள்ளுக்குள் ஒரு நெருடல் இருந்துக்கொண்டே இருந்தது.
அவனிற்கும் தமக்கைக்கும் தானே திருமணம் நடக்கவிருந்தது.
அதனால் அவனிற்கு ஏற்ற பொருத்தமானவள் தமக்கை தானோ என்று எதை எதையோ எண்ணி குழம்பிக்கொண்டாள்.
அவன் அவளை விட்டு சென்றதோ இரண்டே நாள்!
அதற்குள் அவளிற்குள் இருநூறு கேள்விகள் முளைத்திருந்தது.
அத்தனை நாட்களும் அவனின் அருகாமையில் அவள் மறைத்துப்போனவைகள் யாவும் இப்போது அவளுள் விஸ்தரிக்க தொடங்கின.
அப்படி அவளுள் மறைந்துப்போன ஒரு விடயம் அவளின் தமக்கை சந்திரமதி.
அவளை பற்றிய சிந்தனைகள் தன்னுள் உதித்த கணமே அவளின் அலைப்பேசிக்கு தொடர்பு கொண்டாள்.
அவளின் அலைப்பேசியின் வழியே அந்த எண்ணிற்கு அழைத்து ஓய்ந்த பெண்ணவள் வேறுவழியின்றி “அத்தைம்மா உங்க ஃபோன் கொஞ்சம் தர்றீங்களா?” என வானதியிடம் கேட்க,
அவருக்கு ரத்தினவேலின் கட்டுப்பாடு பற்றி எந்தவொரு விஷயமும் தெரியாது என்பதால் “உனக்கு இல்லாததா முகிழ்…இந்தா” என அலைப்பேசியை தனது செல்ல மருமகளிடம் நீட்டியிருந்தார்.
அதனை வாங்கி அவள் முதலில் அழைத்தது என்னவோ தமக்கை யின் எண்ணிற்கு தான்!
அத்தனை நாட்களாய் அழைப்பே செல்லாமல் சதி செய்த அவளின் அலைப்பேசிக்கு மாறாக இந்த அலைப்பேசியில் மணியடிக்கும் ஓசைக்கேட்டது.
உடனே அவளின் புருவங்கள் சுருங்கிட,அச்சமயம் அந்த புறத்தில் அழைப்பு எடுக்கப்பட்டது.
ஆனால் அந்த புறத்திலிருந்து பேசியது அவளின் தமக்கை சந்திரமதி அல்ல.
அவளின் தாய் விஜயலட்சுமி!
ஏனெனில், சந்திரமதியை வீட்டிலிருந்து துரத்தி விட்டவர் அவளின் அலைப்பேசியை தன் கையகப் படுத்தி வைத்திருந்தார்.
அதேநேரம் ரத்தினவேலிற்கு சந்திரமதியை பற்றிய தகவல் கிடைத்திருந்தது.
முகிழ்மதி 57:
வீர் அந்த வாரம் மட்டும் நான்காவது முறையாக தாயை மருத்துவமனையில் கண்டுவிட்டு வருந்திருக்கிறான்.
ஏனெனில்,அன்று ‘நட்சத்திரா’ என்ற வார்த்தையை உதிர்த்ததிலிருந்து தாய் விரைவில் குணமடைந்துவிடுவார் என அவன் எண்ணியிருக்க,அதற்கு மாறாக,அவரின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகியது தான் மிச்சம்!
அதன் பொருட்டே மருத்துவமனை சென்று அவரை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தான் வீர்.
அதுவொரு பழங்கால முறைப்படி கட்டிய தனி வீடு!
இரண்டே அறைகள் கொண்டு மிகச்சிறிய அளவில் கட்டப்பட்ட வீட்டில் இருக்கும் பொருட்கள் அனைத்திலும் அவனது தாயின் கலைநயம் மிகுந்து இருந்தது.
சிறு வயதிலிருந்து ஓவியம் வரைவதிலும் சிலை வடிப்பதிலும் அவருக்கு விருப்பம் அதிகம்!
அதற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தார் என்றே கூறலாம்.
அதன் பலனாய் அந்த துறையில் சிறந்து விளங்கிய ஒரு சாதனை பெண்மணியும் ஆனார் தேவகி.
அச்சமயம் ஒரு கல்லூரியில் சிற்பக்கலை ஆசிரியராக பணிப்புரிந்து கொண்டிருந்தார் தேவகி.
அவரிடம் அந்த ஓவிய கலையையும் சிற்பக்கலையையும் கற்றுக்கொள்ள ஏராளமான மாணவர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
பொதுவாக,ஆண்கள் மட்டுமே அந்த கலையில் சிறந்து விளங்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.
அவை அனைத்தையும் முறியடித்துவிட்டு பெண்களாலும் அனைத்தையும் சாதிக்க முடியும் என நிரூபித்து காட்டியவர் தேவகி!
சமுதாயத்தில் மிகவும் பிரபலமானவரானார் அவர்.
அவரின் அந்த திறமையே அவரின் சொந்த வாழ்க்கையை நிர்மூலமாக்கியிருந்தது.
அதற்கெல்லாம் அவர் துவண்டு விடவில்லை.
இரண்டு குழந்தைகளையும் அவர் தன் கண்ணின் இமை போல் பாதுகாத்து காத்து வந்தார்.
ரத்தினவேலிற்கும் வீருக்கும் பழக்கமாகியது கூட அவனின் தாய் தேவகியின் வழியாக தான்!
அவரிடம் ஓவியம் மற்றும் சிற்பக்கலையை பற்றி கற்றுக்கொள்ள வந்த மாணவனே ரத்தினவேல்!
முதலில் பண தேவைக்காகவே விடுமுறை தினங்களில் கல்லூரி அல்லாமல் மற்ற பிற மாணவர்களுக்கு பாடம் எடுக்க ஆரம்பித்திருந்தார் தேவகி.
ஆனாலும் அவரிடம் தொழில் நெறிமுறை ஒன்று இருந்தது!
திறமையும் தகுதியில்லாத ஒருவரையும் அவர் தன்னுடைய மாணவர்களாக ஏற்றுக் கொண்டதில்லை.
ஏனெனில்,கலையில் ஈடுப்பாடும் அதன் மதிப்பும் தெரியாத நபர்களுக்கு கற்றுத்தருவது வீண் என்று எண்ணினார்.
அதனால் அவர் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் அனைவரும் அவர் விதித்த தகுதிக்குட்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவ்வாறு தேர்வான மாணவர்களில் ஒருவனே ரத்தினவேல்!
இப்போது வரை அவரிடம் இருப்பவர்களில் மிக சிறந்த மாணவன் ரத்தினவேல் தான்!
முதலில் அவரிடம் அவன் ஓவியம் கற்றுக்கொள்ளவே வகுப்பிற்கு வந்தான்.
கலையின் மீது அவனிற்கு இருந்த ஆர்வம் அவனின் புறமாக அவரை ஈர்த்தது.
அவன் ஓவியத்தை கூட ஆத்மார்த்தமான மனதுடன் தீட்டுவதை கண்டுவிட்டு அவராகவே சிற்பம் செய்யும் வழிமுறையையும் அவனிற்கு கற்று தந்தார்.
அவனிற்கும் அதன் மேல் அதீத ஈடுப்பாடு இருந்தது.
சுருங்கக்கூறினால்,ரத்தினவேலிற்கு கட்டிடக்கலையின் மீது விருப்பம் தோன்றுவதற்கு முழு முதற் காரணமும் தேவகி தான்!
அவரிடம் அவன் ஓவியம் கற்றுக்கொள்ள வந்த சமயம் அவனிற்கு வெறும் பன்னிரெண்டே வயது மட்டும் தான்!
தேவகி அவ்வளவு எளிதில் யாரையும் நம்பி தன் வீட்டிற்குள் அனுமதிக்கமாட்டார்.
ஆனால் ரத்தினவேல் மிகக்குறுகிய நாட்களிலே அவரின் மனதை வென்ற கையோடு குடும்பத்தில் ஒருவனாகவும் மாறியிருந்தான்.
அப்போது வீரும் அவன் வயதுள்ள சிறுவன் என்பதால் தானாகவே இருவருக்கும் ஒரு பிணைப்பு ஏற்பட்டிருந்தது.
அச்சமயம் நட்சத்திரா வெறும் இரண்டு வயது குழந்தை!
பொக்கை வாய் சிரிப்புடன் குண்டு கன்னங்களுடன் தன்னை பார்த்து சிரிக்கும் குழந்தையை யாருக்கு தான் பிடிக்காது.
ரத்தினவேலிற்கும் அவளை பார்த்தவுடனே பிடித்துவிட்டது.
அதனால் அவன் வகுப்பிற்கு வரும் நாட்கள் எல்லாம் அவளை தூக்கி கொஞ்சிவிட்டு அவளுடன் விளையாடாமல் அவன் சென்றதில்லை.
நட்சத்திரா சிறு குழந்தை என்பதால் எல்லாருக்கும் அவள் என்றால் உயிர்!
வீருக்கு சொல்லவே தேவையில்லை அவள் தான் உலகம்!
தேவகிக்கு மகன் மற்றும் மகள் தான் உலகம்!
ஆனால் அவர்களோடு எந்தவொரு உறவுமில்லாத ரத்தினவேலிற்கோ நட்சத்திரா என்றால் கொள்ளை பிரியம்!
அந்த பிரியம் ‘ஏன்?எப்படி வந்தது?’ என்று எதுவும் அவனிற்கு தெரியாது.
இருவருக்குள்ளும் கண்ணிற்கு புலப்படாத ஒரு பந்தம் அக்கணமே உருவாகியிருந்தது.
அவளும் அவனை பார்த்துவிட்டால் ‘த்தூ மாமா’ என தளிர்நடையிட்டு அவனிடம் ஓடி வந்துவிடுவாள்.
அவனோ “ரத்தினவேலுன்றதை த்தூனு சுருக்கினது நீயா தான் இருப்பே ஸ்டார்” என செல்லமாக அவளை கடித்தவாறே அவளின் மூக்கோடு மூக்கு உரசி கொஞ்சி குழந்தையை கிளுக்கி சிரிக்க வைப்பான்.
நாட்கள் செல்ல செல்ல,வீர், நட்சத்திரா மற்றும் ரத்தினவேல் மூவருக்குமிடையேயான அந்த பந்தம் இறுகிக்கொண்டே சென்றது.
தன் குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்ட ரத்தினவேலுவை தேவகி தன் மகனாகவே வரித்து பாசம் காட்டினார்.
மொத்தத்தில் அந்த குடும்பத்திற்கு ரத்தினவேல் ஒரு இன்றியமையாதவனாக மாறிவிட்டான்.
அவனின்றி அந்த குடும்பம் முழுமையடையாத ஒரு நிலைக்கு மாறியிருந்த சமயம் அது…
அந்த சிறு கூட்டிற்குள் குழுமியிருந்த மகிழ்ச்சியை ஒட்டுமொத்தமாக குலைத்துப் போட்டது அந்த ஒரு விபத்து!
அந்த விபத்தின் வீரியம் பல வருடங்கள் கடந்தும் இன்று வரை ஓயவில்லை.
அதிலும்,வீர் மற்றும் தேவகியின் வாழ்வில் இப்போதும் அலையடித்துக்கொண்டே இருந்தது.
அவற்றின் சீற்றங்களை குறைக்காமல் மிகையுற செய்வது போல் இப்போது மீண்டும் தேவகியின் நிலை படுமோசமாகியிருந்தது.
மருத்துவமனையில் அவரை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த வீரின் மனதில் அவனது கடந்தகால வாழ்வு ஒரு நிழற்படமாக ஓடிக்கொண்டிருந்தது.
அவனிற்குள் மலையளவு சோகம் மண்டியிருந்தாலும் கடமை அவனை அழைத்தது.
அவன் அடுத்ததாக குளித்துவிட்டு கட்சி அலுவலகம் செல்ல வேண்டும்.
ரத்தினவேல் மற்றும் விஜயேந்திரன் இருவரும் இல்லாததால் பொறுப்பு அவன் தலை மேல் விழுந்திருந்தது.
ரத்தினவேல் அவனை விடுப்பு எடுத்துக்கொள்ள சொன்னான்.ஆனால் வீரோ ‘வேண்டாம்’ என மறுத்துவிட்டான்.
அவனிற்கு தாய் எந்த அளவு முக்கியமோ அதே அளவு அவனின் நண்பனும் முக்கியம்!
அவனின்றி அவனில்லை…இரண்டாம் முறையாக ஒரு வாழ்க்கையை அவனிற்கு அமைத்துக்கொடுத்தவனும் அவன் தான்!
அதனால் செய் நன்றி காட்ட வேண்டிய அவசியம் உணர்ந்து நடந்துக் கொண்டான் வீர்.
இருப்பினும் தாயை பற்றிய எண்ணியவுடன் அவனின் மனதில் பாரம் ஏறியது.
கலங்கிய மனதுடனே வீட்டின் வாசலில் தனது ஜீப்பில் வந்து இறங்கிய வீர் ஒரு பெருமூச்சுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.
வீட்டை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தோட்டம் மற்றும் வீட்டு வாசலில் படர்ந்திருந்த கொடி அனைத்தும் அவனது தாயின் கைவண்ணம்!
அதேப்போல் தோட்டத்தின் நடுவில் ஒரு வெண்ணிற ஊஞ்சல் போடப்பட்டு,அதற்கு முன்பு ஒரு தாய் இரண்டு குழந்தைகளை அரவணைப்பது போன்ற வெள்ளை நிற சிலை ஒன்று இருந்தது.
அந்த சிலையிலிருந்து தண்ணீர் கொட்டுவது போல் ஒரு நீர் ஊற்று அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
இவையும் கூட அவனது தாய் தேவகியின் கலைநயத்தில் உருவானது தான்!
அதில் குடும்பமாய் மூவரும் சிரித்து பேசி மகிழ்ந்த நாட்கள் கண் முன் வந்து செல்ல,அவனின் நெஞ்சில் ஒரு வலி எழுந்தது.
மனநல மருத்துவமனையில் நடந்த சம்பவங்களின் சுவடுகளிலிருந்து அவனது மனம் இன்னும் மீளவில்லை.
அவன் தாயின் நடுங்கும் குரல் இன்னும் செவிகளில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.
“நட்சத்திரா எங்கே?அவ வேணும்?அவளை ஏன் நீ கூட்டிட்டு வரலை வீர்?அவ வேணும்” என அந்த மருத்துவமனை வளாகமே அதிரும் வகையில் கத்தி தன்னை தானே காயப்படுத்திக்கொண்ட அன்னையை பற்றி சிந்தித்தவனிற்கு நெஞ்சே வெடித்தது.
அவன் தங்கை இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.
ஆனால் அவன் தாயின் மனமோ இன்னும் அந்தப் பழைய காலத்திலேயே உறைந்து போயிருந்தது.
நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர் சொல்லியிருந்தார்.
இதற்கு அவர் பேசாமல் ஊமையாகி அப்படியே இருந்திருக்கலாம் என்று கூட அவனிற்கு தோன்றியது.
அவர் மௌனமாக இருந்த சமயத்தில் கூட அவர் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் அவன் வாழ்ந்திருப்பான்.
ஆனால் இப்போதோ?
தினம் தினம் அவர் தன்னை தானே சித்திரவதை செய்வதை பார்க்கும் போது அவனால் தாங்கவே முடியவில்லை.
இதையெல்லாம் பார்க்க பார்க்க அவனின் விழிகள் ஏனோ கலங்குவது போலிருக்க ‘ப்ச் வீர்…டோன்ட் லூஸ் ஹோப்’ என தனக்கு தானே அறிவுறுத்தி சிகையை அழுந்தக்கோதியவாறு வீட்டின் வாசலை அடைந்தான்.
அப்போது தான் அவர்கள் வீட்டின் கதவு பாதி திறந்திருப்பதையே கவனித்தான்.
வீர் பாதி திறந்திருந்த அந்த கதவை மெதுவாகத் தள்ளி திறந்தான்.
வீட்டில் புதிதாக சில மாற்றங்கள்…அதேசமயம் வீடு முழுவதும் நிசப்தத்தில் மூழ்கிக்கிடந்தது.
கிளம்பும்போது சரியாக தான் பூட்டிவிட்டு சென்றான் என்பது அவனுக்கு தெளிவாக நினைவிருந்தது.
‘எப்படி இது?’ என்ற யோசனையினூடே மெல்ல அவன் அடி வைக்க,
அப்போது ‘டாங்’ என்ற சத்தம் அங்கிருந்த அமைதியை கிழித்துக்கொண்டு ஒலித்தது.
சமையலறையிலிருந்து ஏதோ பாத்திரம் உருளும் ஓசை பலமாகக் கேட்டது.
வீர் மெல்ல புருவம் சுருக்கி “யாரது?”
என கேட்டுக்கொண்டே அங்கிருந்த ஒரு மரப்பொம்மையை கையில் எடுத்துக்கொண்டான்.
ஆனால் அவனின் கேள்விக்கு உள்ளிருந்து எந்த வித பதிலும் வரவில்லை.
அவனிற்கு எதிரிகள் அதிகம் என்பதால் அவன் எப்போதும் கவனமாக இருப்பான்.
அதனால் மரப்பொம்மையை கையில் தூக்கியப்படியே வேகமாக சமையலறை நோக்கிச் சென்று உள்ளே எட்டிப் பார்த்தவன்,அப்படியே சிலையாகி உறைந்துவிட்டான்.
ஏனெனில்,அடுப்பிற்கு அருகில் நின்றிருந்தது வேறு யாருமல்ல தமயந்தி தான்.
அவனது ஆருயிர் நண்பன் பூபதியின் தங்கை.
இளஞ்சிவப்பு நிற சுரிதார் அணிந்து,அதனுடைய துப்பட்டாவை தலையில் கட்டி,கலைந்த தலைமுடி,மடித்துவிடப்பட்ட சுரிதாரின் கைகள் என ஏதோ யுத்தத்திற்கு தயாராவது போல் கையில் ஒரு கரண்டியைப் பிடித்து நின்றிருந்தாள் அவள்.
அத்தோடு சமையலறையும் ஒரு போர்க்களம் போலவே காட்சியளித்தது.
மேடையில் சிதறிக்கிடந்த மாவு… தரையில் உடைந்து கிடந்த முட்டை ஓடு… வாணலியில் ஏதோ ஒன்று கருகி கருப்பு நிறத்தில் காட்சியளித்தது.
வீர் தான் பார்க்கும் காட்சியை நம்ப முடியாமல் இமைசிமிட்டினான்.
உடனே அவனின் இமைகள் இரண்டும் இடுங்கின.
“தமயந்தி நீ என்னோட கிச்சன்ல என்ன பண்ணிட்டு இருக்கே?” என பொம்மையை கீழிறக்கியப்படி கேட்டவனின் குரலில் ஸ்ருதி ஏறி இருந்தது.
அவளோ மெதுவாக அவனை நோக்கி திரும்பினாள்.
அவளின் முகத்தில் அச்சமோ ஒரு சங்கடமோ எதுவுமில்லை.
அவளிற்கு மிகவும் உரிமையான ஒரு இடத்தில் இருப்பது போல் இருந்தது அவளின் பாவனை!
அவளின் விழிகள் அவனது கையிலிருந்த மரப்பொம்மையை பார்த்துவிட்டு “என்ன வீர் திருடன்னு நினைச்சு அடிக்க இதை எடுத்திட்டு வந்தீங்களா?” என்று கேட்டவளிற்கு சிரிப்பு பீறிட்டது.
“ப்ச் தமி என்ன விளையாட்டு இது?நீ முதல்ல உள்ள எப்படி வந்தே?” என எரிச்சலாக வினவியவாறே பொம்மையை அருகிலிருந்த மேசையில் வைத்தான்.
அவளோ திமிராக ஒற்றை புருவம் உயர்த்தி “வேற எதுக்கு வருவாங்க…என் புருஷன் களைச்சுப்போய் வருவாரு…அவருக்கு நாலு வாய் ருசியா சமைச்சு போடலாம்னு வந்தேன்” என தெனாவெட்டாக அவனின் முன்பு கரண்டியை ஆட்டிக்காட்ட,
அவள் பேசியதை கேட்ட வீருக்கு சுறுசுறுவென கோபம் வந்துவிட்டது.
“புருஷன் அது இதுன்னு சொன்னே…அடிச்சு பல்லை கழட்டிட்டுவேன்…முதல்ல வெளிய போ நீ” என பல்லைக் கடித்து சீற,
அதற்கெல்லாம் அசரக்கூடியவளா அவள்.
அதனால் மார்ப்பிற்கு குறுக்கே கைகள் கட்டி “இருங்க வீர்…ஏன் இப்போ இவ்வளவு டென்ஷனாகிறீங்க?கூல் டவுன் பாய்” என இதழ்கடித்து கேலியாக கூறி அவனின் இரத்தத்தழுத்தை எகிற வைத்த கையோடு,
“நீங்க சொன்னாலும் சொல்லலைனாலும் என்னாலே இங்க இருக்கமுடியாது…அதுக்குன்னு ஒரு நேரங்காலம் இருக்கில்லை வீர்…சோ உங்களை நான் சாப்பிட வைச்சிட்டு கிளம்பிடுவேன்…ஓகே” என அசால்ட்டாக தலையாட்டியப்படி பாவனையாக உரைத்தாள் அவள்.
அவளின் பேச்சில் கடுப்பான வீர் “ஏய் உன் மனசுலே என்ன நினைச்சிட்டு இருக்கே?நான் சாப்பிட்டா என்ன?சாப்பிடலைனா உனக்கு என்ன?நீ முதல்ல கிளம்பு” என விரல் சொடுக்கி அவளை ‘வெளியே போ’ என்னும் விதமாக அவன் வாசலை காட்டினான்.
அவளும் இப்போது கோபத்தில் “ஹலோ ரொம்ப ஓவரா பண்ணாதீங்க…அண்ணா சொல்லி தான் நான் இங்க வந்தேன்” என்றாள் சிடுசிடுப்பாக.
அவனோ “பூபதியா?” என புருவம் சுருக்கி சந்தேகமாக வினவ,
“ஆமா…ஆமா உங்க பூபதி தான்” என இதழை சுழித்து நொடித்தவளின் முகத்தில் எரிச்சல் மண்டியிருந்தது.
உடனே “ஓ” என தாடையை நீவிய வீர் ”ஆனால் எதுக்கு?” என குழப்பமாக விசாரித்தான்.
அவளோ “நீங்க என்ன பண்ணறீங்கனு பார்த்திட்டு அப்படியே உங்களை சாப்பிட வைச்சிட்டு என்னை வரச்சொன்னாரு” என வாயிற்கு வந்ததையெல்லாம் அவன் நம்பும்படியாக கோர்வையாக உரைத்தாள்.
ஆம்,அவன் காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை.
அவனின் குரலை வைத்தே தோழன் அதனை கணிக்கும் வல்லமை கொண்டவன் என்றறிந்து வீர் சற்று அமைதியுற்றான்.
ஆயினும்,தமயந்தி சரியான கேடி என்பதால் அவ்வளவு எளிதில் அவளை நம்பவும் முடியவில்லை.
அதனால் அவளை மேலிருந்து கீழாக நோக்கி “இதை என்னை நீ நம்ப சொல்லுறீயா?” என அவன் நம்பாமல் வினவ,
அவளோ தலையில் கைவைத்து “அட நிஜமா தான் வீர்…நம்பலைனா அண்ணாவுக்கு கால் பண்ணி தர்றேன்…நீங்களே பேசறீங்களா?” என அலைப்பேசியை கையில் எடுத்தாள்.
அப்போதும் நண்பன் தன் நலனிற்காக இவ்வாறு செய்யக்கூடியவன் என்று எண்ணினாலும்,அவன் எதற்காக இவளை அனுப்பியிருக்கிறான் என்று அவனின் மனம் இடித்துரைத்தது.
ஆனால் தற்சமயம் தோழனை தொந்தரவு செய்ய விரும்பாத வீர் “சரி…சரி விடு நம்பறேன்” என கடுப்பாக மொழிந்தவன்,
ஒற்றை புருவத்தை நடுவிரலால் நீவியப்படி “அவன் முக்கியமான வேலையாக இருப்பான்…தொந்தரவு பண்ணாதே…நீயே சமை” என ஆற்றாமையுடன் சொல்லி முடித்தான்.
இருப்பினும் அவனது மூளையிலிருந்து சந்தேகம் மட்டும் அகல மறுத்தது.
அவனை மேலிருந்து கீழாக ஒரு மார்க்கமாக நோக்கியவள் “நண்பன்னு சொன்னா தான் என்னை நம்பறீங்க?இருக்கட்டும்…இருக்கட்டும்…இன்னும் எத்தனை நாளைக்குனு பார்க்கறேன்…ஹும்” என இதழ்கடித்து தலையை சிலுப்பியப்படி சமையல் மேடை புறமாக திரும்பிக்கொண்டாள்.
ஆனால் அடுப்பின் புறமாக திரும்பிய தமயந்தியின் இதழில் ஒரு ரகசிய புன்னகை ஒன்று ஊதியமானது.
ஏனெனில்,வீரிடம் அவள் கூறியது அனைத்தும் அப்பட்டமான பொய்!
ரத்தினவேல் நண்பனிற்காக வருந்தியது நிஜம் தான்!
ஆனால் ஜித்தேந்திரனிடம் தான் வீரை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்திருந்தான்.
இவர்களது உரையாடலை ஓரமாக அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த தமயந்தியிற்கோ வீரின் நிலை அவளை வேதனையில் உருக வைத்தது.
அதனால் தன்னவனிற்காக அவளின் நெஞ்சம் விம்மி தணிய,அடுத்த கணமே அவனை தேடி புறப்பட்டுவிட்டாள்.
ஜித்தேந்திரன் அன்று மாலை ரோகிணியை பார்ப்பதாக இருந்தது.
ஆகையால் அதையே தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணிய தமயந்தி “அண்ணா நீ போய் ரோகிணிய பாரு…வீரை நான் பார்த்துக்கிறேன்” என அவனிற்கு சந்தேகம் வராத வகையில் பேசி வீரின் வீட்டிற்கு புறப்பட்டு வந்துவிட்டாள்.
இங்கு வந்தவளிற்கு மனம் கேளவில்லை.
முதலில் அவனிற்காக உணவை வெளியிலிருந்து வாங்கிக்கொள்ளலாம் என்று எண்ணினாள்.
பின்பு தன்னவனிற்காக தானே சமைத்து விடலாம் என களத்தில் குதித்து விட்டாள்.
அவளது சமையலின் லட்சணம் அங்கே சமையலறையில் சிதறிக்கிடந்த பொருட்களை வைத்தே கணித்துவிடலாம்.
அவளிற்கு சமைக்கவே தெரியாது என்று வீருக்கும் நன்றாகவே தெரியும்.
அதனால் அவன் மெதுவாக வாணலியை எட்டி பார்த்தான்.
அச்சமயம் தான் அவள் காயை தூக்கி சட்டியில் போட்டிருக்க,உடனே அதிலிருந்து குப்பென்று தீ மூன்று அடி உயரத்திற்கு மேலெழுந்து அடங்கியது.
அதைப்பார்த்து பதறிப்போய் அவள் இரண்டடி பின்னால் நகர “ஹே பார்த்து” என வேகமாக அவளை பற்றி தன் புறமாக இழுத்துக்கொண்டான் வீர்.
இப்போது தமயந்தி முழுமையாக அவனின் கை வளைவில் நின்றிருந்தாள்.
“ஏன்டி என் வீட்டை கொளுத்த பிளான் பண்ணி தான் இதெல்லாம் செய்யறீயா நீ?” என தன் கை வளைவில் இருந்தவளிடம் அவன் கத்த,
அவளிற்கோ அவனின் அருகாமையிலும் அவனின் மீதிருந்த வந்த ஆண்மையின் வாசனையிலும் பேச்சே வரவில்லை.
அவள் தன்னையே மறந்து அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள்.
அவனது சண்டைக்கோழியிடமிருந்து பேச்சு வரவில்லை என்றவுடன் குனிந்து அவளை நோக்கியவனிற்கு அவளின் பார்வை என்னவோ செய்தது.
அத்தோடு தாங்கள் இருவரும் அணைத்து நிற்பது போன்ற நிலையை கண்டவுடன் அவசரமாக அவளை விலகி தள்ளிவிட்டு நின்றுக் கொண்டான்.
அவனிற்குள் ஏனோ ஒரு படபடப்பு தோன்றி மறைந்தன.
உடனே அவனின் மனசாட்சி ‘வீர் இது தப்பு’ என சரியான நேரத்தில் இடைப்புகுந்த அவனை எச்சரிக்க,
அதனால் இதழை குவித்து ஊதி தொண்டையை செருமிய ஆடவன் “நீ எதுக்கு தேவையில்லாமல் சமைக்கிறே?வெளிய ஆர்டர் பண்ண வேண்டியது தானே?” என சாதாரண குரலில் கேட்க,
அவளோ இடுப்பில் கைவைத்து “ஏன் நான் சமைச்சதை நீங்க சாப்பிட மாட்டிங்களா?” என அவனை முறைத்தாள்.
அவளிற்கு அவன் தன்னை விலக்கிவிட்டதால் உண்டான கோபம்!
அவனோ எட்டி வாணலியில் இருந்த வஸ்துவை ஒரு பார்வை பார்த்தான்.
அந்த உணவு இருந்த நிலையை பார்த்தவனிற்கு அடிவயிறு கலங்கியது.
‘நிஜமா இது சாப்பாடு தானா?’ என பீதியில் அவன் எண்ணிக்கொள்ள,
அவனின் முகத்தை பார்த்த தமயந்தியின் மனம் வாடிவிட்டது.
“வீர் உங்களுக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டு சமைச்சேன் தெரியுமா?” என சிணுங்கலாக சொல்ல,
‘அதுக்கு நான் தான் கிடைச்சேனாடி?’ என சிகையை அழுந்தக்கோதி எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டான் அவன்.
அவன் வாயை திறந்து எதுவும் பேசவில்லை.
ஆனால் அவளோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.
ஏனெனில்,அவள் சமைத்த உணவின் மீது அவ்வளவு நம்பிக்கை.
அதனால் இதழை அலட்டலாக பிதுக்கி “சரி விடுங்க…நான் சமைச்சு முதல் முறையாக சாப்பிடப்போற ஆளே நீங்க தான்…ரொம்ப கொடுத்து வைச்சவாரு” என தன்னை பற்றி பெருமைப்பீற்றிக்கொண்டே சமைத்தவளை மேலிருந்து கீழாக பார்த்து தலையசைத்துக்கொண்டான்.
‘இதை சாப்பிட்ட பிறகு தான் எனக்கு என்ன நிலைமைனு தெரியும்…இதிலே பெருமை வேற’ என முகத்தை சுழித்தான்.
அவன் அந்த உணவையே மிரட்சியோடு பார்ப்பதை கண்டுவிட்டு “ப்ச் வீர்…ஓவரா பண்ணாதீங்க…நீங்க போய் ஃப்ரெஷாகிட்டு வாங்க…அதுக்குள்ள நான் சமைச்சு முடிச்சிடறேன்” என உரிமையாக அவனை அதட்டினாள்.
அவனோ ‘ஆமா…ஆமா என் கதையும் முடிஞ்சது’ என நெற்றியை நீவியப்படியே தன் அறைக்குள் சென்று குளித்துவிட்டு வந்தான்.
அவளும் அதேநேரம் சரியாக அவனிற்கு உணவை தட்டில் போட்டு எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.
தட்டிலிருந்து உணவுகள் அத்தனையும் ஒரே நிறத்தில் இருந்தது.
அனைத்தும் கருப்பாக இருக்க அவனிற்கு பகீரென்றது.
முகிழ்மதி 58:

கையிலிருந்த தட்டை பார்த்தவனிற்கு ’எது என்ன உணவு?’ என்ற வித்தியாசமே தெரியவில்லை.
பாவம்,அனைத்தும் கருப்பாக இருந்தால் அவனும் என்ன தான் செய்வான்?
சில கணங்கள் அதையே வெறித்த வீர் மெதுவாக அவளை நோக்கி நிமிர்ந்து “அதான் சமைச்சிட்ட இல்லை…நீ முதல்ல கிளம்பு…நான் சாப்பிட்டுக்கிறேன்” என எப்படியாவது அவளை துரத்திவிட்டு உணவின் சாபத்திலிருந்து தப்பிக்கலாம் என்று எண்ணினான்.
ஆனால் அவளோ விடாக்கண்டியாக “அதெல்லாம் முடியாது…அண்ணா உங்களை சாப்பிட வைச்சிட்டு தான் கிளம்பணும்னு சொல்லியிருக்காங்க…முதல்ல சாப்பிடுங்க” என மிரட்டிக்கொண்டே அவனருகே வந்து நீள்விரிக்கையில் அமர்ந்தாள்.
அவளது சமையல் கலையின் மீது அவளிற்கு நம்பிக்கை இருக்கலாம்.ஆனால் அவனிற்கு?
‘இன்னைக்கு இதை சாப்பிட்டு வீர் அசந்துப்போய் ஐ லவ் யூ சொல்லிடுவாரு’ என அவள் அதற்குள் கனவு உலகத்திற்கு எல்லாம் சென்றிருந்தாள்.
ஆனால் வீர் தான் தட்டிலிருந்த கருப்பு உணவையும் அவளையும் மாறி மாறி பார்த்து விழித்துக்கொண்டிருந்தான்.
சில நிமிடங்கள் கடந்தும் அவன் உணவை கையில் எடுக்கவில்லை என்றவுடன் “ப்ச் வீர்…கலர் தான் ஒரு மாதிரி இருக்கும்…சாப்பிட்டு மட்டும் பாருங்க…டேஸ்ட் சும்மா அள்ளும்” என மூன்று விரலை காட்டி நாக்கு சொட்டி சிலாகித்து அவள் சொல்ல,
இப்போது அவளின் பெருமை பீற்றலை கேட்ட அவனிற்கே கோபம் வந்துவிட்டது.
அதனால் தட்டை நொங்கென்று மேசையில் வைத்துவிட்டு “ஏன்டி விளையாடறீயா?இதை சாப்பிட்ட பிறகு நான் உயிரோடு இருப்பேனானு தெரியலை…இதிலே டேஸ்ட் அள்ளுமாம்” என அவளை போலவே எரிச்சலாக பேசிக்காட்ட,
அவளோ பதிலுக்கு “தேவையில்லாமல் எதையாவது பேசி திசை திருப்பலாம்னு பார்க்காதீங்க…ஒழுங்கா சாப்பிடுங்க…நான் உங்களுக்காக கையெல்லாம் சுட்டுக்கிட்டு கஷ்டப்பட்டு சமைச்சேன் தெரியுமா?” என பாவமாக சொல்லிக்கொண்டே அவனிடம் தன் கரத்திலிருந்த சிறு தீக்காயத்தை காட்டினாள்.
அவ்வளவு தான்?
அதுவரை ஒரு இறுக்கத்துடன் இருந்த வீரின் உள்ளம் அப்படியே பாகாய் உருகிவிட்டது.
அவனிற்கு தான் பெண்கள் யாரேனும் கஷ்டப்பட்டாலே தாங்காதே?
அதனால் அவளின் காயத்தை கண்டு இரக்கமுற்ற வீர் “உன்னை யாரு சமைக்க சொன்னது?பாரு இப்போ கை எப்படி சுட்டிருச்சு…ஆயுன்மெண்ட் ஏதாவது போட்டியா நீ?” என அவளின் கரம் பற்றி கவலையாக கேட்டவனை பார்த்தவளின் இதழ்கள் தானாக விரிந்தது.
அவனின் இந்த இரக்க குணம் அவளை மிகவும் கவர,அவனின் மீது காதல் அதிகரித்தது.
அவனின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்தின் மீது அவளிற்கு நேசம் பொங்கி வழிந்தன.
அதனால் கன்னத்தில் கைவைத்து அவனையே விழி அகற்றாமல் பார்த்திருந்த பாவை “எனக்கு இதெல்லாம் பெருசில்லை வீர்…உங்களுக்காக சமையல் என்ன?எதுவும் செய்ய நான் தயாரா இருக்கேன்…நீங்க மட்டும் ஒரு வார்த்தை சொல்லுங்க எனக்கு அது போதும்…என்னோட வாழ்க்கையை உங்ககிட்ட ஒப்படைச்சிடறேன் வீர்” என அவனின் விழியோடு விழி கலந்து தழுதழுத்த குரலில் கூறியவளின் முகத்தில் உயரிய நேசத்தின் சாயல் மிகுந்திருந்தது.
ஒரு கணம்…ஒரே ஒரு கணம் அவளின் விழி வீச்சில் கட்டுண்ட ஆடவனின் மனமோ அவளின் வார்த்தை ஜாலத்தில் மயங்கிவிட்டது.
அவனிற்கு அவளை பிடிக்காமலில்லை…ஆனால் அவர்களுக்கு இடையே இருந்த மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம் அவனை அவளிடமிருந்து தடுத்து நிறுத்தியது.
அதனால் தனக்குள்ளே ஒரு வளையத்தை போட்டுக்கொண்டு வாழ்ந்துக்கொண்டிருந்தவனின் விலங்கை அவள் சிறிது சிறிதாக தகர்க்க ஆரம்பித்தாள்.
சற்று முன்பு கூட தனக்கென்று யாருமில்லை என்று வருந்திக்கொண்டிருந்தவனிற்கு ‘தனக்காக எதையும் செய்ய தயார்…உன்னிடம் என் வாழ்வை ஒப்படைக்கிறேன்’ என்று ஒரு பெண் தானாக முன் வந்து கூறினால் எந்தவொரு ஆண்மகனால் தான் அவளை விடமுடியும்.
அவளில்…அவளின் பேச்சில் ஒரு நொடி சிந்தை மறந்து நெகிழ்ந்து மயங்கிவிட்டான்.
ஆனால் அடுத்த கணமே ‘தாம் யார்?அவள் யார்?’ என்பது உறைக்க,உடனே தீச்சுட்டாற் போன்று அவளின் கரத்தை உதறியவன் “நீ கிளம்பு தமயந்தி” என்றான் இறுகிய குரலில்.
அவளோ அவன் தன் கரத்தை வெடுக்கென்று விட்ட கோபத்தில் நீள்விரிக்கையில் சாய்வாக அமர்ந்துக்கொண்டு “முடியாது” என்றாள் திமிராக.
அதில் புருவம் சுருக்கிய வீர் பக்கவாட்டாக அவளை நோக்கி திரும்பி “தமயந்தி நேரமாகிடுச்சு…நீ முதல்ல வீட்டுக்குப் போ” என்றான் கறார் குரலில்.
அவளோ கைகளைக் கட்டிக்கொண்டு “ஹலோ மிஸ்டர் ரவுடி சார் நீங்க ஒண்ணும் எனக்கு ஆர்டர் போடாதீங்க…வந்த எனக்கு போகவும் தெரியும்…நீங்க முதல்ல சாப்பிடுங்க” என இகழ்ச்சியாக கூறி ஆணை பிறப்பித்தாள்.
அவளின் பேச்சில் வீருக்கு சுறுசுறுவென கோபம் உருவாகின.
ஆயினும்,தன்னை கட்டுப்படுத்திய வீர் பெருமூச்சுவிட்டவாறே
“உங்க அண்ணாவே சொன்னாலும் இதையெல்லாம் நீ செய்யணும்னு அவசியமே இல்லை தமயந்தி…நீ சீ.எம்மோட பொண்ணு…உங்க அண்ணன் என்னோட பாஸ்…நான் உங்க வீட்டிலே வேலைச்செய்யற வேலைக்காரன்…நீ என் வீட்டுலே இருக்கிறதை யாராவது பார்த்தால் பெரிய பிரச்சனையாகும்.முதல்ல நீ கிளம்பு” என மனதினை கல்லாக்கிக்கொண்டு பேசியவனின் முகம் மட்டும் உணர்ச்சிகள் துடைத்திருந்தது.
தமயந்தியோ அணுவளவும் அசையவில்லை.
மாறாக, அவனை நெருங்கி அமர்ந்த மங்கையவள் “வீர் ரொம்ப நடிக்காதீங்க…உங்க மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்றாள் உறுதியான தொனிக்கும் குரலில்.
அவனிற்கு வெகு தெரிந்த பெண்ணவளின் முகம் ஒரு புறம் அவனை தடுமாற வைத்தது என்றால்,அவளின் பார்வை ஆடவனின் விழிகளை தான் துளைத்து அவனை தடுமாற வைத்தது.
கூடவே,அவளின் பார்வை ஏதோ ஒரு உணர்வு அவனை கட்டியிழுப்பது போன்ற ஒரு மாயை அவனுள்!
அவளின் அந்த ஒரு பார்வை அவனின் பொய்யை உடைத்து உண்மையை ஊடுருவியது போல் இருந்தது.
அதனால் அவளின் பார்வையை சந்திக்க திரணற்று தவிர்த்தவன் “நீ இங்கயிருக்க வேண்டியவளே இல்லை…உன்னுடைய பாதம் கூட இந்த வீட்டிலே படக்கூடாது தமயந்தி…நீ முதல்ல கிளம்பு” என சிகையை அழுந்தக்கோதியவாறு முணுமுணுத்தான்.
அந்தவொரு வாக்கியம் அவளை பெரிதாய் காயப்படுத்தியது.
அவன் வேண்டும் என்று அவனையே அவள் சுற்றி வர,அவனோ அவளை புரிந்துக் கொள்ளாமல் விலக்கி வைப்பதை அறிந்து மனம் வருந்தியது.
கூடவே,அவனின் மனதை மறைத்து நடிப்பவனின் மேல் கோபமும் உருவாகின.
அதனால் கோபத்தில் வெகுண்ட பெண்ணவள் “அப்படியா வீர்? நான் இங்கியிருக்க வேண்டியவ இல்லைனா?நான் என்ன ஏலியனா?வேணும்னா ஸ்பெஸுக்கு கிளம்பிப்போயிடட்டுமா?” என எகத்தாளமாகக் கேட்டாள்.
சட்டென விழி உயர்த்தி அவளை நோக்கிய வீர் “தமயந்தி…” என அழுத்தமாக அழைக்க,
அவளோ அவனின் பார்வையை தாங்கி நின்று “வீர் ஜஸ்ட் ஸ்டாப் இட்…உங்களோட முகமூடி கிழிஞ்சு விழுந்து ரொம்ப நாளாச்சு…இனியும் நீங்க நடிக்கணும்னு அவசியமில்லை…இன்னும் எத்தனை நாளைக்கு என்கிட்டயிருந்து விலகிப்போறீங்கன்னு நான் பார்க்கறேன்” என கோபத்தில் மூச்சிறைக்க உரைத்தவள்,
பின்பு ‘என்ன நினைத்தாளோ?’ ஒரு முறை இமை மூடி திறந்து “இங்க பாருங்க வீர்…மத்தவங்ககிட்ட எப்படி வேணா நடிங்க…அட்லீஸ்ட் என்கிட்டயாவது உண்மையா இருங்க…உங்க அம்மாவை பத்தி எல்லா விஷயமும் எனக்கு தெரியும்” என்றதும் அவன் அதிர்ச்சியுடன் அவளை ஏறிட்டான்.
இதுவரை விளையாட்டுத்தனமாக பேசிய தமயந்தி அவள் அல்ல.
வீரை மட்டுமே உயிராய் நேசிக்கும் உறுதியான பெண்ணாய் மாறி நின்றாள்.
அவளோ அவனின் முகத்தை வேதனையுடன் நோக்கி “இந்த விஷயம் கேள்விப்பட்டவனே எப்படி துடிச்சுப்போயிட்டேன் தெரியுமா?நீங்க எந்த நிலைமையிலே இருக்கீங்களோ?என்ன ஏதுன்னு தெரியாமல் பதறிப்போய் ஓடி வந்தேன்…நீங்களா என்கிட்ட ஏதாவது உங்க அம்மாவை பார்த்து சொல்லவீங்கனு நினைச்சேன்…நீங்க வாயே திறக்கமாட்டிக்கிறீங்க?ஏன் வீர் இப்படி பண்ணறீங்க?நான் உங்களுக்காக…உங்களோட சுக துக்கங்களை பகிர்ந்துக்க தான் வாழ்ந்திட்டு இருக்கேன்…ஆனால் நீங்க என்னை எப்போ தான் புரிஞ்சுக்கப்போறீங்க” என ஆதங்கமும் அழுகையும் கலந்தக்குரலில் அவள் வினவ,
அவனின் தாடை சட்டென இறுகிப்போனது.
அவளிடம் அவன் எதையும் வெளிப்படுத்த விரும்பவில்லை.
ஆனால் அவளின் துக்கம் நிறைந்த குரல் அவனிற்கு வலியை கொடுத்த அதே வேளை,அவனது தாயின் நிலை அவனை துயரக்கடலில் மூழ்கடித்திருந்தது.
அவன் அப்போதும் மௌனமாக இருப்பதை பார்த்தவளிற்கு நெஞ்சில் அப்படியொரு வலி!
அவனை அடிப்பட்ட பார்வை பார்த்த தமயந்தி “ஜித் அண்ணா என்கிட்ட எதுவும் சொல்லலைனா…எனக்கு கடைசி வரை எதுவுமே தெரியாமலே போயிருக்கும்…வீர் எனக்காக ஒரே ஒரு வாய்ப்பு தாங்களேன்…உங்க வலியை நான் சுமக்கறான்…உங்களுக்கு எந்த கஷ்டமும் வராமல் நான் பார்த்துக்கறேன்…என்ன நடந்தாலும் கடைசி வரை உங்களுக்காக நான் இருப்பேன்…பிளீஸ் ஒரே ஒரு வாய்ப்பு தாங்களேன் வீர்…” என கையேந்தி அவனின் காதலை யாசகம் கேட்டவளை பார்த்தவனின் இதயத்தில் பல நூறு கத்திகள் சொருகியது போன்ற ஒரு ரண வலி!
இதுவரை ஒரு ஆடவன் தான் ஒரு பெண்ணிடம் இப்படியெல்லாம் உருகி காதலை யாசித்திருக்கிறான்.
ஆனால் இங்கோ ஒரு பெண்ணவள் தன் கர்வத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு அவனின் காதலை பெற வேண்டி இறைஞ்சுகிறாள்.
அவளின் மன்றாடலை அவனால் கண்கொண்டு காணவே முடியவில்லை.
அவனின் பிடிவாதம் சிறிது சிறிதாக தளர்வது போலிருந்தது.
அதனால் அவன் சட்டென வேறுப்புறம் திரும்பி “உன்னை வீட்டுக்குப் போன்னு சொன்னேன் தமயந்தி…கிளம்பு நானே உன்னை கொண்டு விட்டுட்டு வர்றேன்” என எழுந்து நின்றுக்கொண்டவனின் குரல் தன்னை மீறி பிசறிடித்தது.
அவனின் முகம் வேதனையில் கசங்கி சிவந்திருந்தது.
இத்தனை யாசித்தும் அவன் இறங்கி வராதது கண்டு மனம் வெறுத்துப்போனாலும்,அவள் சிறிதும் தளரவில்லை.
அவனிடம் தன் காதலுக்காக போராடுவது ஒரு புறம் என்றால்,கடந்த சில வருடங்களாக அவன் தனியொருவனாக எவ்வளவு துயரங்களை சந்தித்திருக்கிறான் என்பதை கொண்டு வந்தவளால் அவனை விட்டு செல்லமுடியாது.
அதனால் முகத்தில் ஒரு தீர்க்கும் தோன்றிட “மாட்டேன்” என்றாள் பிடிவாதமாக.
அவனோ அவளை குனிந்து பார்த்தான்.
அவளோ அவனை அழுத்தமாக ஏறிட்டு “கடந்த ஒரு வாரமா எல்லாத்தையும் நீங்க உள்ளுக்குள்ளேயே அடக்கி வைச்சுட்டு கலங்கிட்டு இருக்கீங்க வீர்…உங்களை அப்படியே விட்டுட்டு என்னால் போகமுடியாது” என திட்டவட்டமாக உரைத்துவிட,
அவளின் இந்த பிடிவாதமும் அழுத்தமும் கூட ஆடவனை ஈர்க்கவே செய்தது.
ஏனெனில்,அவளின் இந்த அடம் அவனிற்காக அல்லவா?
ஆயினும்,அதை ஒப்புக்கொள்ள மனமின்றி “நான் நல்லா தான் இருக்கேன்…நீ கிளம்பு” என அவளிற்கு மீறிய அழுத்தத்துடன் கூறியவனின் குரல் தன்னை மீறி கரகரத்தது.
அவளோ “இல்லை… நீங்க நல்லாவே இல்லை” என அவனின் விழிகளை ஆழ்ந்துப்பார்த்தப்படி கூற,
அதுவரை அவளிடம் கோபத்தை வெளிப்படையாக காட்டாமல் அமைதியாக இருந்த வீர் இப்போது “நான் நல்லா இருக்கேன்னு சொன்னேன்லே…அப்புறமும் எதுக்குடி நொய் நொய்யுனு என்னை டார்ச்சர் பண்ணறே?முதல்ல வீட்டை விட்டு வெளியப்போடி” என இயலாமை கலந்த ஆத்திரத்துடன் நரம்புகள் புடைக்க கத்தியிருந்தான்.
அவன் கத்தியதில் ஒரு கணம் அந்த வீடே நிசப்தமானது.
அதற்கு பிறகே அவனிற்கு தன்னுடைய செயலே உறைக்க ‘ஷிட்’ என கைமுஷ்டியை இறுக்கி தொடையில் குத்திக்கொண்டான்.
தமயந்தி அவனை கண்டு அஞ்சவில்லை…மாறாக,அவனையே இரக்கம் சுரக்க பார்த்திருந்தாள்.
அவனும் மெதுவாக குற்றவுணர்வுடன் அவளை குனிந்து பார்க்க,
இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் சில கணங்கள் ஆழ்ந்து நோக்கியிருந்தன.
அவனில் விழிகளில் இழையோடிய சோகத்தை கண்ட தமயந்தி மிக மெல்லிய குரலில் “என்கிட்ட நீங்க தைரியசாலி மாதிரி நடிக்க வேண்டாம் வீர்…கோபமா பேசணுமா பேசுங்க…என்னை அடிக்கணுமா அடிங்க…உங்க மனசிலே இருக்கிறதை பகிர்ந்துக்கணுமா பகிர்ந்துக்கோங்க…என் மடியிலே படுத்து அழணுமா…அழுதிடுங்க…எல்லாத்துக்கும் நான் ரெடியா தான் இருக்கேன்” என உள்ளம் உருக்கும் குரலில் பேசியவளின் சொற்கள் ஆடவனது நெஞ்சே பலமாக சென்று தாக்கியது.
வீரோ சட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டான்.
அவனது இதயம் சிறிது சிறிதாக அவளின் வார்த்தையில் உடையத்தொடங்கின.
அவனின் தொண்டை அடைக்க,அவனின் விழிகளோ கலங்க ஆரம்பித்தன.
அவன் கை முஷ்டியை இறுக்கி தொடையில் அழுத்தமாக பதித்துக்கொண்டான்.
அவனும் உயிரும் உணர்வுகளும் கலந்த சாதாரண மனிதன் தானே?
அவன் ஒருவன் மட்டும் எத்தனை துன்பங்களை தான் தாங்கிக்கொள்வான்.
அதிலும்,அவனிற்குள் புதையுண்டு இருந்த உணர்வுகள் அனைத்தும் இன்று உடைப்பெடுக்க ஆரம்பித்தன.
அவளில் சரணடைய அவனது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் துடித்தன.
ஆனாலும் ஒரு அழுத்தம் அவனிற்குள்!
இருவருக்குமிடையே உள்ள அந்த வித்தியாசம் அவனை தடுத்து நிறுத்தின.
இருப்பினும் அந்த அழுத்தத்தை மீறி அவளின் அன்பு அவனது இதயத்தை துளைக்க,அதற்கு மேல் முடியாமல்
“போதும்..” என உச்சக்கட்ட வலியோடு முணுமுணுத்தான் அவன்.
ஆனால் அவள் நிறுத்தவில்லை.
அவனின் இறுக்கத்தை உடைத்து அவனை வெளிக்கொணரும் முடிவுடன் அவள் காத்திருந்தாள்.
அதனால் மெல்ல எட்டி நின்றிருந்தவனின் இறுக மூடிய கரத்தை ஆதரவாக பற்றினாள்.
அவளின் ஸ்பரிசம் பட்டதும் அவனது தேகம் விறைத்தன.
அவளோ கண்ணில் நீருடன் “எல்லா நேரமும் எல்லாராலையும் ஸ்ட்ராங்கா இருக்க முடியாது வீர்…சில நேரங்களிலே நாம்ப உடைஞ்சு போகலாம்…அதிலே ஒரு தப்புமில்லை…என்கிட்ட வாங்க” என இருகரம் நீட்டி அழைத்தவளை திரும்பி அவன் வெறித்து பார்த்தான்.
அந்த ஒரு வாக்கியம், அவனிற்குள் அவன் எழுப்பி வைத்திருந்த கடைசிச் சுவரையும் தரைமட்டமாக்கியது.
சில நொடிகள் அப்படியே உறைந்து நின்றான்… தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயன்றான்.
ஆனால் அவனால் முடியவில்லை.
சட்டென்று அவளருகே அமர்ந்த வீர் ‘என்ன நினைத்தானோ?’ தன்னவளின் கரங்களுக்குள் குழந்தை போல் சரண்புகுந்திருந்தான்.
அவளின் தோள்களில் முகத்தை அழுந்த புதைத்த வீர் அப்படியே உடைந்து அழ ஆரம்பித்துவிட்டான்.
பல வருடங்களாக தொடரும் வலி… குற்ற உணர்ச்சி… இயலாமை… எல்லாம் ஒரே நொடியில் வெளியேறியது.
அவளுமே அந்த நொடி,தாம் ஒரு பெண் அவன் ஒரு ஆண் என்று அனைத்தையும் மறந்துவிட்டாள்.
அவனிற்கு அவள் ஒரு தாய்,அவளிற்கு அவன் ஒரு சேய் என்ற உணர்வு மட்டுமே…
அதை தாண்டிய எந்தவொரு உணர்ச்சிகளுக்கும் அங்கு இடமளிக்கவில்லை அவர்கள்.
ஒரு சேயாய் மாறி தன்னை அணைத்துக்கொண்டவனின் சிகையை மென்மையாக வருடிவிட்டவளின் இமையோரம் ஓர் நீர்த்துளி!
அவளின் தோளில் முகம் புதைத்திருந்த ஆடவனின் கண்ணீர் மெதுவாக அவளின் சுரிதார் ஆடையை மீறி அவளின் மேனியை சுட்டது.
சில நிமிடங்களுக்கு அவ்விடத்தில் எந்தவொரு சப்தமும் இல்லை.
அவன் வாயை திறந்து பேசவில்லை என்றாலும்,அவனின் அழுகை அவனின் நெஞ்சத்திலிருந்த அனைத்து குமுறல்களையும் அவளிடம் கொட்டியிருந்தன.
அந்த ஆறடி உயர வளர்ந்த குழந்தையின் முதுகை அவளின் பிஞ்சுக்கரங்கள் ஆதரவாக தடவி தேற்றின.
“எல்லாம் சரியாகிடும்…உங்களுக்கு நான் இருக்கேன் வீர்” என மெதுவாக அவனின் காதோரம் முணுமுணுத்தவளின் குரல் அவனின் செவி வழியே நுழைந்து இதயத்தை சென்று தாக்கின.
இப்போது இன்னும் அதிகமாக அவளுள் அவன் புதைந்துப்போனான்.
அவளின் இடையை சுற்றி வளைத்திருந்த ஆடவனது கரம் அவளை தன்னுடன் சேர்த்து இறுக்கின.
ஆடவனது அந்த நெருக்கம் அவளிற்குள் புதிதாக சில உணர்வுகளை தோற்றுவித்தன.
அது தாபத்தினால் உண்டான உணர்வுகள் அல்ல…ஒரு பரவசம்…ஒரு மகிழ்ச்சி…ஒரு ஆர்ப்பரிப்பு!
ஆண்டாண்டு காலமாக அவனை ரகசியமாகக் காதலித்துக் கொண்டிருக்கும் தமயந்திக்கு, அவன் தன்னைத் தேடுகிறான் என்பதை விட, தான் அவனிற்கு தேவைப்படுகிறது என்ற உணர்வே ஒரு பரவசத்தை கொடுத்தன.
அனைத்தையும் தனக்குள்ளே பூட்டி வைத்திருந்தவனின் இந்த மாற்றம் அவளிற்குள் ஒரு நிம்மதியை அளித்தது.
அவளிற்கு வேண்டியதும் அது தானே…
அவனை அவள் காதலிப்பது அவனின் நற்குணங்களுக்காக மட்டுமல்ல…அவனின் சிரிப்பின் பின்னிருக்கும் வலியை பார்த்தும் தான்!
யாருமின்றி தனியொருவனாக தனித்து வாழ்வும் அவனின் வாழ்வில் ஒரு அர்த்தத்தை கொண்டு வர எண்ணினாள் பாவையவள்.
அவனது கஷ்டக்காலங்களில் அவனிற்கு தோள் கொடுத்து அரவணைக்கவே அவள் ஆசையோடு காத்திருந்தாள்.
அவளது காத்திருப்பிற்கான பலன் அன்று கிடைத்ததும் அவளின் கண்களும் உணர்ச்சி பெருக்குடன் கலங்கிப்போயின.
அவளின் விழியிலிருந்து நீர் வழிந்துக்கொண்டிருக்க,அவளின் இதழ்களோ மகிழ்ச்சியில் புன்னகைத்தன.