முகிழ்மதி 48,49,50

முகிழ்மதி 48:


 

 

முகிழ்மதியின் வாழ்வு ரத்தினவேலின் வழிகாட்டுதலில் வண்ணமயமாக சென்றுக்கொண்டிருக்க,சந்திரமதி யின் வாழ்வு அதற்கு நேர்மாறாக துயரங்களும் துக்கங்களும் சுமந்த நரகமாய் மாறிப்போனது.

பல வருடங்களாய் அனுபவித்திராத கொடூரங்கள் அனைத்தும் கடந்த சில மாதங்களில் அவள் அனுபவித்திருந்தாள்.

அதிலும்,அன்று அவளின் தாய் வைத்த கோரிக்கைகளை அவள் மறுத்ததிலிருந்து அவரின் வதைகள் அதிகரித்திருந்தது.

அனைத்தையும் அனுபவிக்க நேர்ந்தப்போதிலும் அவர் சொல்வதை செய்வதற்கு அவள் தயாராக இருக்கவில்லை.

அவளின் மறுப்பு அவருள் மறைந்திருந்த மிருகத்தை ஒட்டுமொத்தமாய் வெளிகொணர வைத்து மனசாட்சி சிறிதுமற்ற அரக்கியாய் அவரை மாற்றியிருந்தது.

ஏனெனில்,அன்றொரு நாள் அவர் செய்த கொடுமைகள் தாளாமல் “உங்களுக்கு என்ன தான் வேணும்?ஏன் என்னை இப்படி உயிரோடு சித்ரவதை பண்ணறீங்க?” என உயிரை பறிக்கும் வலியுடன் அவள் கேட்டிருக்க,

அவரோ வில்லத்தனமாக சிரித்துக்கொண்டே “என்ன வேணுமா?எனக்கு பெருசா எதுவும் செய்ய வேணாம் மதி கண்ணு…ஒண்ணே ஒண்ணு மட்டும் தான் நீ செய்யணும்” என அவளின் கன்னத்தை தட்ட,

அவளோ முகத்தை சுழித்தாள்.

அவளை இளக்காரமாக நோக்கிய விஜயலட்சுமி “அவளை கொண்டு வந்து உன் இடத்திலே வைச்சுக்கிட்டு நீ அவ இடத்துக்கு மாறிடு…இது தான் வேணும்” என சர்வ சாதாரணமாக சொல்ல,

அவளிற்கோ அவர் கூறுவதிலிருந்து இம்மையும் புரியவில்லை…மறுமையும் புரியவில்லை.

“எ..ன்ன சொல்லுறீங்க?” என நடுங்கிய குரலில் வினவியவளின் நெஞ்சம் மட்டும் படபடவென அடித்துக்கொண்டது.

“என்ன கண்ணு புரியாத மாதிரி நடிக்கிறே?உன் தங்கச்சிய என்கிட்ட கொண்டு வந்து விட்டுட்டு நீ அவளை மாதிரி அங்கயிருந்து நடிக்கணும்…நான் சொல்லறதை மட்டும் தான் நீ செய்யணும்…நான் கேட்கிறப்போ எல்லாம் பணத்தை வாரி வாரி கொடுக்கணும்…இதுக்கெல்லாம் மேலே அந்த சனியன் நல்லாயிருக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லை” என்று சத்தமின்றி அவளின் தலையில் இடியை இறக்கினார் அவர்.

அவர் கூறியதை கேட்டு அவளின் ஒட்டுமொத்த மேனியும் நடுநடுங்கிப்போய் விட்டது‌.

இரக்கமின்றி பேசிய விஜயலட்சுமியை ஏறிட்டவளிற்கு ‘நிஜமாவே நீயெல்லாம் மனுஷி தானா?’ என கேட்டுவிட அவளின் நாவு துடித்தன.

ஆனால் அவளின் மனதில் நினைப்பது அனைத்தையும் அவளால் பேசவிட முடியாது.

ஏனெனில்,அவரை பற்றி பலரும் அறியாத இரகசியங்கள் யாவும் அவள் அறிவாள்.

வெளி உலகத்திற்கு தெரியாத பல உண்மைகள் இன்றும் அவளின் மனதில் பூட்டி வைக்கப்பட்டிருந்தன.

அவற்றினை பற்றி மற்றவரிடம் சொல்லிவிட தான் அவளின் நெஞ்சமும் தவித்தன.

ஆனால் யாரிடமும் சொல்லமுடியாத ஒரு உட்சபட்ச அச்ச நிலை அவளிற்கு!

அவரை பற்றி அவளிற்கு தெரியும் என்று தெரிந்தாலே அவளின் வாழ்வு இப்போது இருப்பது விட பல மடங்கு நரகமாய் மாறி விடும் என்று அறிந்தே இத்தனை நாட்களாய் மௌனம் காத்தாள்.

ஆனால் எப்போது அவர் தன் எல்லைகளை கடந்து தங்கையின் வாழ்வை சிதைக்க முடிவெடுத்திட்டாரோ இதற்கு மேலும் அமைதி காப்பது சரியல்ல என்றெண்ணிய பெண் “நீங்க சொன்னது எதையும் என்னாலே செய்ய முடியாது” என உறுதியாக மறுத்துவிட்டாள்.

தங்கை இத்தனை வருடங்கள் அனுபவித்த கொடுமைகள் அனைத்தும் போதும் என்று எண்ணியது அந்த சகோதரியின் மனம்!

அதுவரை இருந்த அவரின் தோரணை இப்போது அடியோடு மாறிப்போனது.

அவரின் ஒட்டுமொத்த சுயரூபம் அந்நொடி வெளிப்பட்டது‌.

அவளை குரூரமாக நோக்கிய விஜயலட்சுமி “ஓ…சொன்னதை செய்ய மாட்டியா?திடீர்னு என்ன தங்கச்சி மேலே பாசம் பொத்துக் கிட்டு வருது?முன்னாடி நடந்ததெல்லாம் மறந்திடுச்சாடி?” என உயிரை ஊடுருவும் குரலில் அவர் கேட்டதும் அவளின் விழிகள் மருட்சியில் மிரண்டன.

அவரின் முகத்திலிருந்த அந்த பாவனை அவளின் அடிவயிற்றை கலங்க வைத்திட,அவரை சற்று பயத்துடன் நோக்கினாள் அவள்.

அவள் எதுவும் பேசாமல் தன்னை பயத்துடன் பார்ப்பதை கண்ட விஜயலட்சுமியின் இதழில் ஒரு வக்கிர புன்னகை ஒன்று தோன்றின.

அதைப்பார்த்தவளின் மேனியில் உதறல் எடுக்க,

அவற்றினை திருப்தியாக நோக்கியவர் “என்னடி உன்கிட்ட கொஞ்சம் பாசமா நடந்தவுடனே குளிர்விட்டு போச்சா?முன்னாடி நடந்ததெல்லாம் மறந்திடுச்சுன்னு நினைக்கிறேன்?எல்லாத்தையும் மறுபடியும் ஒரு தடவை ஞாபகப்படுத்தட்டுமாடி…சொல்லு” என பல்லை கடித்து அவர் வெறித்தனமாய் கத்தியதும்,

அந்த பதினெட்டு வயது பாவையவளிற்கு  தூக்கிவாரிப்போட்டது.

சிறு வயதிலிருந்து இன்று வரை அவரின் மீது அவளிற்கு எப்போதும் பயம் இருக்கின்றது.

பயம் என்றால் சாதாரண பயமல்ல…

அவரின் மீதான அச்சத்தில் அவளது உயிரான சகோதரியை தன்னிலிருந்து விலக்கி வைக்கும் அளவு உயிர் பயம்!

அந்த அச்சத்தை பயன்படுத்தியே இருவரையும் ஒன்று சேர விடாமல் பல வருடங்களாக பிரித்து வைத்திருக்கிறார் விஜயலட்சுமி.

ஏனெனில்,சிறு வயதாக இருக்கும் சமயத்திலிருந்தே சந்திரமதி சகோதரியிடம் அன்பாக பேசினால் அவருக்கு அறவே பிடிக்காது.

எந்த அளவு பிடிக்காது என்றால் முகிழ்மதியிடம் அவள் பேசிவிட்டால் அன்றைய நாள் முழுவதும் சந்திரமதி பட்டினி வசத்தில் சிறைப்பட்டு கிடப்பாள்.

இப்படியாக ஒரு நாள் தாயின் பேச்சை மீறி தங்கையுடன் இணைந்து விளையாடியதற்காக அன்றைய நாள் முழுவதும் அவளை அறையில் அடைத்து பட்டினி போட்டிருந்தார் அவர்.

அவர் எதற்காக அவ்வாறு நடந்துக் கொண்டார் என்று கூட பாவம் அந்த சிறுமிக்கு தெரியவில்லை.

ஆறு வயதில் அவளிற்கு என்ன தெரிந்திருக்கும்?

அவளோ தாய் தன்னிடம் கடுமையாக நடந்துக்கொண்டதிற்கான காரணமறியாமல் “மம்மி கதவை திறங்க…பசிக்குது மம்மி…வயிறு இழுக்குது மம்மி…” என கதவை தட்டி கதறி அழுதும் கூட அவரின் மனம் இறங்கவில்லை.

அன்றைய நாள் முழுவதும் பட்டினியிலே வாடி வதங்கிவிட்டது அந்த இளம் குருத்து!

அடுத்த நாளில் சோர்ந்து படுத்திருந்த மகளை தூக்கி “அவ கூட இனிமேல்  பேசக்கூடாது…புரியுதா?” என கண்ணை உருட்டி மிரட்டியதும்,அந்த சிறுமியோ பயந்துக்கொண்டே “சரி” என தலையாட்டினாள்.

பசி கொடுமையில் அவளிற்கு எதுவும் புரியவில்லை.

தற்போது உணவு கிடைத்தால் போதும் என்ற நிலைமை தான் அவளிற்கு!

அதனால் தங்கையை பற்றி அவள் எண்ணவில்லை.

அவள் தலையாட்டிய பிறகே அவளிற்கு உணவு கொடுத்து அவளை நல்லவிதமாக நடத்த தொடங்கினார் விஜயலட்சுமி.

ஆறு வயதான அந்த குழந்தையவளிற்கு தாயின் செயல்களுக்கான அர்த்தம் விளங்கவில்லை.

அவர் அவளிற்கு உணவை பரிமாறி ஊட்டி விடுவதை முகிழ்மதி ஏக்கமாக நின்று பார்ப்பாள்.

அதனை கண்டு அந்த பிஞ்சு நெஞ்சம் துடிக்கும்.

ஆனால் தாயின் கோபத்திற்கு அஞ்சி எதுவும் பேசமாட்டாள் சந்திரமதி.

அதேசமயம் தாய் அறியாமல் அவ்வப்போது தன்னுடைய விளையாட்டு பொருட்களை தங்கையுடன் பகிர்ந்து விளையாடுவாள் பெரியவள்.

இந்நிலையில் முகிழ்மதியை எதற்கோ தாய் அடித்ததை கண்டுவிட்டு “மம்மி எதுக்கு அம்முவை அடிக்கிறீங்க?அடிக்காதீங்க மம்மி” என பதறிப்போய் தடுக்க முன் வர,

அவளிற்கு ஆதரவாக குறுக்கே புகுந்த அவளிற்கும் சேர்த்து பலமாக அடி விழுந்திருந்தது.

அன்று அவர் அடித்த அடியை அவளால் இன்று வரை மறக்கமுடியாது.

ஒரு பேய் போல் அவளை அடி வெளுத்துவிட்டார்.

அவர் அடித்த அடியில் அந்த குட்டி குழந்தைகளின் தோள்கள் தடித்து வீங்கிப்போனது தான் மிச்சம்!

அன்றைய நாள் முழுவதும் தேற்றுவதற்கு ஆளின்றி மூச்சு வாங்க கண்ணீரில் கரைந்துப்போனார்கள்.

இது தான் அந்த குழந்தையின் மனதினை பாதித்த முதல் சம்பவம்!

இதுப்போல் மேலும் சில சம்பவங்கள் அந்த வீட்டில் நிகழ்ந்தன.

அந்தவொரு நிகழ்வு தான் சந்திரமதியின் மாற்றத்திற்கு அடியோடு காரணமாய் அமைந்தது.

ஒரு நாள் சந்திரமதி செய்த தவறுக்கான பழி முகிழ்மதியின் விழுந்தது.

அதற்கான தண்டனையை அவள் அனுபவிக்க நேர்ந்தது.

அதனை கண்ட குழந்தையின் மனசாட்சி தனக்கு பதிலாக அவள் அடி வாங்குவதை ஏற்க முடியாமல் சாடிட,வேறுவழியின்றி குற்றத்தை ஒப்புக்கொண்டு முன் வந்தது.

“மம்மி நான் தான் தப்பு பண்ணேன்…முகிழு இல்லை” என தன் தவறை ஒப்புக்கொண்டு நேர்மையாக முன் வந்த குழந்தையை கண்ணை உருட்டி பார்த்த விஜயலட்சுமி “தப்பு நீ பண்ணீயா?அவ பண்ணாளா?” என அவர் கேட்ட தோரணையே அவளை விதிர்விதிர்க்க செய்தது.

அவள் பதில் எதுவும் கூறாமல் திருதிருவென விழித்தாள்.

கோழி குஞ்சுப்போல் தன் பின்னால் ஒடுங்கி நின்றிருந்த தங்கையையும் விட முடியாமல் அதேசமயம் விகாரமான முகத்துடன் நின்றிருந்த விஜயலட்சுமியை பார்த்து எதுவும் பேச முடியாமல் தவித்தாள் அந்த சின்னப்பெண்.

அவரோ “தப்பு நீ தான் பண்ணீயா சொல்லுடி…” என கர்ஜனையோடு கேட்டவாறு கையிலிருந்த மூங்கில் குச்சியால் அவளை அடி வெளுத்துவிட்டார்.

அடி விழுந்தது அவளிற்கு மட்டுமல்ல…முகிழ்மதிக்கும் சேர்ந்தே அடி விழுந்திருந்தது.

அன்று இருவரும் வாங்கிய அடியில் காய்ச்சலில் படுத்த சந்திரமதி மீண்டும் உடல்நிலை தேறி எழுவதற்கு ஒரு வாரம் கடந்திருந்தது.

இப்படி மேலும் சில பல சம்பவங்கள் நிகழ்ந்து அவளின் மனதில் ஒரு விடயத்தை ஆழப்பதிய வைத்திருந்தது.

முகிழ்மதிக்கு ஆதரவாக அவள் சென்றால்,தனக்கும் சேர்த்து அடியும் உதையும் கிடைக்கும் என்பது தான் அது!

ஆறு வயது குழந்தைக்கு பெரிதாக வேறு எதையும் யோசிக்க முடிக்கவில்லை.

தன்னை காத்துக்கொள்ள வேண்டி அந்த இளம் குருத்துவும் தங்கையிடமிருந்து ஒதுங்கிக்கொள்ளும் முடிவை எடுத்தது.

எப்போது முகிழ்மதியிடம் இருந்து அவள் விலகி வந்தாளோ அன்றிலிருந்து அவளிற்கு ராஜ உபசரிப்பு தாயிடமிருந்து கிடைத்தது.

ஆனால் உயிர் இருக்கும் வரையிலும் அவரால் அவளிற்கு உண்டான வலியையும் வேதனைகளையும் அவளால் மறக்கவே முடியாது.

முன்பாவது தங்கையிடம் தாய் அறியாமல் பேசிக்கொண்டிருந்த சந்திரமதிக்கு அதன்பிறகு தங்கையிடம் பேசுவதற்கே அச்சமாக இருந்தது.

அவள் பேசாமல் ஒதுங்கியதற்கு மற்றொரு காரணம் சந்திரமதி தங்கையை பாதுகாக்க முன் வரும்போதெல்லாம் விஜயலட்சுமியின் ஆத்திரம் பல மடங்கு அதிகரித்தது.

அந்த சீற்றத்தின் பலனாய் சந்திரமதிக்கு விழும் அடிகளை விட முகிழ்மதிக்கு இரண்டு மடங்கு அதிகமாக விழுந்தது.

சந்திரமதி எதிலும் தலையிடவில்லை என்றால் முகிழ்மதி வாங்கிய ஒரே ஒரு அடியோடு இருவரும் தப்பிவிடுவார்கள்.

அதனால் தன் தவறுக்கெல்லாம் பொறுப்பேற்று முகிழ்மதி ஏற்கும் தண்டனையை அவளும் பல்லை கடித்து பொறுத்துக்கொள்வாள்.

சந்திரமதியின் தவறுகள் அனைத்தும் தாயின் நயவஞ்சகத்தால் முகிழ்மதியின் மீதே சுமத்தப்பட்டன.

சந்திரமதி தவறை ஏற்க முன் வந்தாலும் கூட கிடைக்கும் தண்டனை அதிகரித்ததே ஒழிய குறையவில்லை.

முகிழ்மதியின் வயது தானே அவளிற்கும்!

அவளையும் குறை சொல்ல முடியாது…அந்த ஆறு வயது குழந்தையின் புரிதல் அது மட்டுமாக தான் இருந்தது.

சந்திரமதிக்கு புரிந்த விடயம் முகிழ்மதிக்கு தெரியாமல் இருக்குமா என்ன?

அதனால் அவளுமே “அக்கா அம்மாகிட்ட எனக்கு சப்போர்ட் பண்ணி பேசாதேக்கா…அடி அதிகமா விழுகுது” என கண்ணீர் விட்டு இறைஞ்சி கேட்கும் நிலைக்கு குழந்தைகள் இருவரின் மனநிலையையும் மாற்றியிருந்தார் விஜயலட்சுமி.

தங்கையின் கோரிக்கையும் அவளை ஒதுங்கிப்போக வைத்தது.

முடிந்தவரை சந்திரமதியும் தவறுகள் செய்வதை குறைத்துக்கொண்டாள்.

ஆனாலும்,அவள் செய்யும் சிறிய தவறுகளுக்கு கூட முகிழ்மதிக்கு தண்டனை கிடைத்தன.

இதையெல்லாம் பார்த்துவிட்டே அடுத்த முறை அவளின் தந்தை வீட்டிற்கு வந்த சமயம் “அப்பா நான் ஹாஸ்டல் சேர்ந்து படிக்கிறேன்பா…” என அவளை சொல்ல வைத்தது.

அவருக்கு நடந்த எந்தவொரு விஷயமும் தெரியாது.

அவர் வேறொரு ஊரில் இருப்பதினால் திட்டமிட்டு அனைத்தையும் விஜயலட்சுமி மறைத்திருந்தார்.

அந்த விடயத்தில் விஜயலட்சுமி பயங்கரமான கில்லாடி!

“அப்பாகிட்ட யாராவது ஏதாவது சொன்னீங்க?இரண்டு பேர் தோளையும் உரிச்சு தொங்கவிட்டிருவேன்” என முன்பே பிள்ளைகள் இருவரையும் மிரட்டி வைத்திருந்தார் அவர்.

மகள் ஆசையாக கேட்டதும் வேறு வழியின்றி சிவராமனும் மகளை பள்ளி விடுதியில் சேர்ப்பித்து படிப்பித்தார்.

விஜயலட்சுமிக்கும் இருவரையும் பிரிப்பதே முதன்மையாக இருந்ததால் அவருக்கு இந்த முடிவு மகிழ்ச்சியை மட்டுமே கொடுத்தன.

ஒருவரை ஒருவர் பிரிந்திருப்பது சகோதரிகள் இருவருக்கும் வருத்தமாக இருந்தாலும்,இருவரும் அப்படியே வாழ பழகிக்கொண்டனர்.

சூழ்நிலை கைதியாய் மாறிய இந்த சகோதரிகளின் உறவு விஜயலட்சுமியால் முறிக்கப்பட்டது.

சந்திரமதி இல்லாததினால் முகிழ்மதிக்கும் பெரிதாக கொடுமைகள் அரங்கேறவில்லை.

இருவரும் தனித்தனியாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

முகிழ்மதியை உடல்ரீதியாக துன்புறுத்தவில்லை என்றாலும் அவளை வார்த்தையாலே குத்திக்காட்டி கொன்றுக்கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் அனைத்தும் அந்த சிறிய பெண்ணிற்கு வலியை கொடுத்தாலும் நாட்கள் செல்ல செல்ல அதுவே பழக்கமாகிவிட்டது.

அனைத்தும் ஓரளவு மிருதுவாக சென்றுக்கொண்டிருக்க சந்திரமதி வீட்டிற்கு வந்துவிட்டால்,மீண்டும் அவரின் கொடுமைகள் ஆரம்பித்துவிடும்.

ஏனெனில்,சகோதரிகள் இருவரும் ஒன்றாக சிரித்து பேசுவது தப்பித்தவறி அவரின் கண்ணில் விழுந்தால் சந்திரமதி திரும்பி செல்லும் வரை இருவருக்கும் நரகத்தை காட்டிவிடுவார்.

அதிலும்,முகிழ்மதிக்கு சற்று அதிகமாக கொடுமைகள் நடந்தேறும்!

இதையெல்லாம் கண்டு மனதளவில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தங்கையிடம் பேச தோன்றுமா என்ன?

முன்பே தங்கையிடமிருந்து ஒதுங்கியே போனவள்,காலங்கள் செல்ல செல்ல அவளிடமிருந்து முற்றிலுமாக ஒதுங்கியே விட்டாள்.

ஆனால் ஒரே ஒரு முறை அவள் படும் துன்பம் கண்டு “நீயும் பேசாமல் ஹாஸ்டெல் போய் படி” என்று மட்டும் சந்திரமதி அறிவுரை கூறியிருக்க,

அவளும் “சரிக்கா” என தலையாட்டியிருந்தாள்.

அதைப்பற்றி தந்தையிடம் அவள் கேட்க,அவர் சம்மதம் தெரிவிப்பதற்கு முன்பே “ஏங்க ஒரு புள்ளைய தான் என்னை விட்டு பிரிச்சிட்டிங்க…இவளையும் ஹாஸ்டெல்ல சேர்த்துட்டீங்கன்னா நான் என்னங்க செய்யறது?” என நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் போட்டதும் அவளின் சிறு வெளிச்சமும் ஊதி அணைக்கப்பட்டிருந்தது.

அதன்பிறகு முகிழ்மதியின் வாழ்வில் ஒளி என்பதை கிடைக்காமல் செய்துவிட்டார் அவர்.

முகிழ்மதியை வருத்தி அழ வைப்பதில் அவருக்கு அப்படியொரு சிற்றின்பம்!

அதனை நன்கு அறிந்த இருவர் பட்டம்மாவும் சந்திரமதியும் மட்டுமே!

தாயிற்காக பிரிந்து வாழ பழகியவர்களுக்கு காலப்போக்கில் அதுவே பழக்கமாகிற்று!

வெளியில் தங்கி படிக்க ஆரம்பித்ததினால் சந்திரமதியின் நடவடிக்கையும் மாறிப்போனது.

சுயநலத்தின் மொத்த உருவமாய் அவள் மாறி நின்றாள்.

அவள் அவ்வாறு மாறியதற்கு முழுமுதற்காரணம் விஜயலட்சுமி மட்டுமே?

விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தாலும் அவள் உண்டு…அவள் வேலையுண்டு என்று மட்டுமே இருப்பாள்.

தங்கையிடம் அவளாக ஒரு வார்த்தை பேச மாட்டாள்.

அவளாக வந்து பேசினாலும் ஒன்றிரண்டு சொற்கள் பேசி ஒதுக்கி வைத்துவிடுவாள்.

சிறு வயதில் அவர்கள் வாங்கிய அடியும் அனுபவித்த வேதனைகளும் அவளை பேச அனுமதிக்கவில்லை.

வளர்ந்து பதினெட்டு வயதாகிய பிறகும் தாயின் மீதிருக்கும் அச்சம் சந்திரமதிக்கு துளியும் நீங்கவில்லை.

ஏனெனில்,இப்போதும் அவரின் கட்டுப்பாட்டில் தான் அவளும் இருக்கிறாள்.

அதிலும்,அவரின் ஒட்டுமொத்த சுயரூபத்தையும் முழுமையாக அறிந்துக் கொண்ட பிறகு அவளின் அச்சம் அதிகரித்ததே ஒழிய குறையவில்லை.

அதன் பொருட்டே,விரைவாக இங்கிருந்து தப்பி செல்ல வேண்டும் என்று விரும்பினாள் அவள்.

இங்கிருந்து சென்றாலும் அவள் வாழ்வாதாரத்திற்கான எந்தவொரு அடிப்படை வசதியும் அவளிடமில்லை.

அதற்காகவே பல்லை கடித்துக்கொண்டு விஜயலட்சுமியின் நிழலில் தங்கியிருந்தாள்.

தங்களை காத்து செல்ல யாரேனும் வரமாட்டார்களா என்று அவளின் மனமும் ஏங்கி தான் தவித்துக்கொண்டிருந்தன.

அவளின் ஆழ் மனதில் அன்பிற்கான ஒரு தேடல் இருந்துக்கொண்டே இருந்தது.

வீட்டில் அவளிற்கு கிடைக்காத அன்பை அனைத்தையும் அள்ளி தரவும் தன்னை அந்த நரகத்திலிருந்து காக்கவும் ஒருவன் கிடைப்பான் என்று எண்ணியிருந்தவள்,சிக்கியது என்னவோ ஹரிஷின் காதல் வலையில் தான்!

குழம்பு சட்டியிலிருந்து தப்பித்து கொதிக்கும் எண்ணெயில் விழுந்த கதையாய் அவளின் வாழ்வு தலைகீழாக மாறிப்போனது‌.

 

முகிழ்மதி 49:

 


 

 

அவனை நேசிக்க ஆரம்பித்த பிறகே அவன் ஒரு சைக்கோ என்று அவளிற்கு தெரிந்தன.

அவனை விட்டு வேறு யாரிடமும் பேசினால் அவனிற்கு பிடிக்காது…அவன் சொன்னதை அனைத்தையும் செய்ய வேண்டும்.

இல்லையென்றால்,தன்னை தானே அவன் காயப்படுத்திக்கொள்வான்.

அதற்காகவே அவனின் மேல் உள்ள அன்பால் அவன் கூறியதை எல்லாம் செய்தாள் அவள்.

அவளிற்கு பெரிதாக கேளிக்கை விடுதி,பார்ட்டி இதுப்போல் இடங்களுக்கு செல்வது பிடிக்காது.

ஆனாலும்,அவனிற்காக அனைத்து இடங்களுக்கும் செல்லுவாள்.

அவளை கவர்ச்சியாக உடை அணிய வற்புறுத்தியதும் அவன் தான்!

அவன் நினைத்தது போல் எல்லாம் அவளை ஆட்டிப்படைத்தான்.

ஒரு கட்டத்தில் அவளிற்கு வெறுப்பே வந்துவிட்டது.

‘என்னடா வாழ்க்கை இது?’ என விரக்தியில் மனம் விம்மியது.

அவனிடமிருந்து அவளால் விலகவும் முடியவில்லை.

அவன் சைக்கோ என்று தெரிந்தாலும் கூட தன் மீது அன்பை பொழிப்பவனை முழுமையாய் வெறுக்க முடியவில்லை.

ஏனெனில்,அன்பிற்காக ஏங்கும் குழந்தை அவள்!

கற்பனை கதைகளில் வரும் ராஜகுமாரனை போல் அவளை காக்க‌ வரும் இளவரசனிற்காக காத்திருக்கும் பேதையவள்!

மொத்தத்தில் முகிழ்மதி விஜயலட்சுமியிடம் மன உளைச்சலில் துவண்டிருந்தால் என்றால்,இங்கு அவளின் சகோதரியோ காதல் என்ற வலையில் சிக்கி அவனிடம் மன ரீதியாக பல கொடுமைகளை அனுபவித்திருந்தாள்.

கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல் அவனிடம் தன் பெண்மையை இழக்க மட்டும் அவள் உடன்படவில்லை.

அவளையும் அறியாமல் அவளிற்குள் ஊறிப்போயிருந்த நெறிமுறை அவளை தன் நெறி தவறாமல் காக்க வைத்தது.

அதில் ஹரிஷிற்கு ஏக கடுப்பு!

“பப் வரைக்கும் வந்திட்டு பெரிய உத்தமி மாதிரி எதுக்குடி இப்படி நாடகம் போடறே?” என அவளின் இதயத்தை வலிக்க செய்யும் சொற்களால் அவளை சாடியிருந்தான்.

அவனின் சொற்கள் அவளின் இதயத்தை நெருஞ்சி முள்ளாய் குத்தினாலும் அவள் தன் முடிவிலிருந்து பின் வாங்கவில்லை.

இந்நிலையில் தான் ஹரிஷிற்கு பல பெண்களோடு தொடர்பு இருப்பதை அறிந்த சந்திரமதி மொத்தமாய் இடிந்துப்போனாள்.

அவன் தன்னை என்ன பேசினாலும் பொறுத்துக்கொண்டவளால் அவன் மற்ற பெண்களோடு பழகுவதை அவளால் ஏற்க முடியவில்லை‌.

அவள் துக்கத்தில் துவண்டுப்போய் இருந்தது எல்லாம் இரண்டு நாட்கள் தான்.

இது நாள் வரை அவன் செய்தது அனைத்தையும் அவள் பொறுத்துக்கொண்டதற்கு காரணமே அவன் அவளிற்கு உண்மையாய் இருக்கின்றான் என்ற காரணம் மட்டுமே?

என்று அவளிற்கு அவன் துரோகம் செய்திருக்கிறான் என்பது தெரிய வந்ததோ அப்போதே அவள் தன் நிதானத்தை கைவிட துணிந்து விட்டாள்.

வழக்கமாக அவன் செல்லும் கேளிக்கை விடுதிக்கு சென்ற பெண்ணவள் வேறொரு பெண்ணோடு இணைந்து ஆடிக்கொண்டிருந்தவனின் கன்னத்தில் அறைந்து “தூ இப்படியொரு கேவலமான ஜென்மமா நீ இருப்பேன்னு எனக்கு தெரியாதுடா சைக்கோ நாயே” என உச்சக்கட்ட அருவருப்போடு பேசிவிட்டு வந்துவிட்டாள்.

ஆனால் அனைவரின் முன்பும் அவள் அவமானப்படுத்தியதினால் ஹரிஷின் மனதில் வஞ்சம் உருவெடுத்தது.

அடிப்பட்ட பாம்பு அவ்வளவு எளிதில் எதிரியை விடாது என்று பாவையவள் அறியவில்லை.

அன்றிலிருந்து அவனின் மிரட்டலும்,கொடுமைகளும் விடாமல் தொடர ஆரம்பித்தன.

ஏற்கனவே காதலில் தோல்வி என்று ஏமாற்றத்தில் துவண்டுப்போயிருந்த பெண்ணவளிற்கு ஆறுதல் அளிக்க என்று ஒருவருமில்லை.

இந்நிலையில் அவளின் மானத்தை கூறுப்போடும் விதமாக அவளும் அவனும் இணைந்திருந்த புகைப்படம் மற்றும் காணொளி என்று அவனது முகத்தை மட்டும் மறைத்துவிட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்திருந்தான்.

அந்தவொரு காணொளி அவளின் வாழ்வையே அடியோடு புரட்டிப்போட்டது.

கல்லூரி முழுவதும் அந்த காணொளி பரவியதோடு ‘ஸ்லட்’ என்ற தலைப்போடு அவளின் எண்ணும் அனைவரின் அலைப்பேசியிலும் பரிமாறப்பட்டன.

இணையத்தில் அவளின் புகைப்படத்தை கண்ட சந்திரமதிக்கு உயிரே போய்விட்டது.

அவளை காணும் ஒவ்வொருவரின் முகத்திலும் தெரிந்த அருவருப்பையும் வக்கிரத்தையும் பார்த்தவள் அவமானத்தில் கூனி குறுகிப்போனாள்.

‘நான் அந்த மாதிரி பெண் இல்லை…அப்படி பார்க்காதீங்க‌’ என கத்த வேண்டும் போல் இருந்தது அவளிற்கு!

ஆனால் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

கல்லூரிக்கு செல்லவே அஞ்சியவளாய் விடுதிக்குள்ளே பல நாட்கள் அடைப்பட்டு கிடந்தாள்.

சித்தம் கலங்கி பித்துப்பிடித்து அமர்ந்தவளின் மனம் தாய் மடி தேடி அலைந்தது.

ஆனால் அவளிற்கென்று ஆதரவளிக்க ஒருவருமின்றி தவித்தது,அந்த சின்னஞ்சிறிய இதயம்!

அவளிற்கு ஆறுதல் அளிப்பதற்கு நண்பர்கள் என்று கூட ஒருவருமில்லை.

அவளிடம் பேசுபவர்கள் அனைவரும் அவளிற்காக தோழமை பாராட்டவில்லை.

அவளிடமிருந்த பணத்திற்காக மட்டுமே அவளிடம் பேசி பழகியிருந்தனர்.

இப்போது அவளிற்கு கிடைத்த அவப்பெயரினால் அவளை அசிங்கத்தை பார்ப்பது போல் ஒதுக்கி தள்ளிவிட்டனர்‌.

அவளின் அறையில் தங்கியிருந்த பெண்ணும் விடுதி காப்பாளரிடம் பேசி வேறு அறைக்கு சென்றுவிட்டாள்.

சந்திரமதிக்கு அவை எதுவுமே கருத்தில் பதியவில்லை.

அவள் உலகத்தில் அவள்…அவள்…அவள் மட்டுமே?

ஒரே ஒரு கணம் அவளின் மனம் தங்கையை தேடி அலைப்பாய்ந்தது.

ஆனால் அடுத்தகணமே தாயை நினைத்து பயந்து அந்த எண்ணத்தை துடைத்தெறிந்துவிட்டாள்.

எத்தனை நாட்கள் அவள் அறைக்குள்ளே அடைந்து கிடந்தாளோ அவளின் வாழ்வே அஸ்தமானமாகியிருந்தது.

இதற்கிடையில் அவளது அலைப்பேசிக்கு பல விதமான ஆண்கள் அழைத்து ‘ஒரு நாள் நைட் ஸ்டேவுக்கு எவ்வளவு?’ என அவளின் மனதை மட்டுமின்றி கற்பையும் கூறுப்போட தொடங்கியிருந்தனர்.

இவர்கள் ஒரு புறம் அவளை உயிரோடு கொன்று புதைத்துக்கொண்டிருக்க,மற்றொரு புறம் ஹரிஷும் அவளிற்கு அழைத்து மிரட்டிக்கொண்டிருந்தான்.

தற்போது அவளிருக்கும் நிலையில் அவளிற்கு இந்த உலகத்தில் வாழவே பிடிக்கவில்லை.

தன்னுயிரை மாய்த்துக்கொள்ளலாம் என்ற முடிவிற்கே வந்துவிட்டிருந்தாள் காரிகை.

அவள் துணிச்சலான பெண் தான்…

ஆனால் அனைத்தும் அவளின் வெளித்தோற்றத்தில் மட்டுமே?

அவளும் இரத்தமும் சதையுமுள்ள சாதாரண ஒரு மனிதி தானே?

அதையறியாமல் அனைவரும் அவளை கத்தியின்றி இரக்கமின்றி சொற்களால் கொன்றுக்கொண்டிருந்தனர்.

அவளை அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றி வெளியில் கொண்டு வருவதற்கு இறைவன் அனுப்பி வைத்த தேவதை தான்,அவளின் விடுதி தலைவி.

நல்லவர்கள் கெட்டவர்கள் என்று அனைவரும் நிறைந்தது தானே இந்த உலகம்?

அதனால் அவளின் நிலையை பார்த்துவிட்டு அவளிற்கு முதலில் ஆதரவு கரம் நீட்டியவர் அவர் தான்!

மன உளைச்சலில் துவண்டுப்போய் குற்றுயிராய் கிடந்தவளை சிறிது சிறிதாக அதட்டி உருட்டி அன்பால் பேசி அவளை தேற்றியிருந்தார் அவர்.

அவரின் பெயரே ஜான்சி ராணி தான்!

பெயருக்கு ஏற்ற தீரமும் வீரமும் கொண்ட பெண்மணி அவர்!

“இங்க பாரு சும்மா இப்படி ரூமுக்குள்ளவே அடைஞ்சு கிடந்தால் எல்லாமே சரியாகிடுமா?உன்னை இப்படி ஒடுங்கி வைக்க தானே இதெல்லாம் அந்த ராஸ்கல் பண்ணறான்…அந்த அயோக்கியனுக்கு நீ பயப்படலைனு நிமிர்ந்து நின்னு காட்டறதை விட்டுட்டு இப்படி முடங்கிப்போவியா?எழுந்திரி முதல்ல…” என அவளை அதட்டி பேசியே காரிகையை தேற்றிக்கொண்டு வந்தார்.

ஆரம்பத்தில் அவள் முரண்டு பிடித்தாலும் அவர் தன் வார்த்தையின் மூலம் அவளிற்கு தேவையான துணிச்சலையும் ஆறுதலையும் கொடுத்து அவளை ஓரளவு பழைய நிலைக்கு மாற்றியிருந்தார்.

அவளின் வாழ்வை மாற்றிய தேவதை பெண் அவர்!

அவளின் உடல் தேறிய போதும் ஹரிஷின் கொடுமைகள் மட்டும் அடங்க மறுத்தன.

அவள் மீண்டும் தடுமாற ஆரம்பித்ததும் “சந்திரமதி இங்க பாரு…நீ இங்கேயே இருந்தால் சரிவராது…கொஞ்ச நாள் உன் ஊருக்கு போயிட்டு வா…உன் பேரண்ட்ஸோட ஆதரவு இருந்தால் கொஞ்சம் மனசு நல்லாயிருக்கும்” என ஆதுரத்துடன் அவர் கூற,

சட்டென தலையுயர்த்திய பெண் “எனக்கு அப்படி யாருமில்லை…” என தன்னை மீறி கூறியிருந்தாள்.

அவள் ஏன் அவ்வாறு கூறினால் என்றே தெரியவில்லை.

அவளின் வாயிலிருந்து வார்த்தைகள் தானாக வந்துவிழுந்திருந்தது.

அவளின் கண்களில் ஜீவனில்லை.

முகத்தில் ஒளியில்லை…

அவள் கூறியதை கேட்டு ஒரு கணம் திகைத்தவர் “சரி..சரி…அப்பா அம்மா இல்லைனா என்ன?உனக்குனு கண்டிப்பா யாராவது இருப்பாங்க…அவங்க பக்கத்திலே இருந்தால் உனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்” என அவளின் தோள் தட்டிச்சொல்ல,

அவளிற்கு மனக்கண்ணில் மின்னி மறைந்தது என்னவோ முகிழ்மதியின் முகம் தான்!

அதனால் அவள் தனக்குள்ளே மௌனித்துப்போனாள்.

ஆனால் ஏனோ அவளிற்கும் தங்கையை பார்க்க வேண்டும் என்பது போல் தோன்றவே மனதில் சுமந்த வலிகளுடனும் காயங்களுடனுமே அவள் அங்கு வந்து சேர்ந்தாள்.

அவள் வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் பட்டம்மாவின் மூலம் அவளிற்கு விஷயம் தெரிந்து அதிர்ச்சியாகிவிட்டாள்.

ஏனெனில்,அவளது கல்லூரியின் தலைவர் அவளின் காணொளியை தாயின் எண்ணிற்கு அழைத்து அனைத்து விஷயங்களையும் தெரிவித்திருந்தார்.

அதையெல்லாம் விட அவளிற்கு அதிர்ச்சியளித்தது,தன்னுடைய காணொளியை தங்கையின்‌ காணொளியாக தந்தையிடம் காட்டி முகிழ்மதியை அடிவாங்க வைத்திருக்கிறார் என்று!

‘இவர் இன்னும் திருந்தலையா?’ என்று தோன்றிய அதேசமயம் சிறு வயதில் நிகழ்ந்த சம்பவங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நினைவில் எழுந்ததும் அவளின் சர்வ அங்கமும் ஆடிப்போனது.

அதன்பொருட்டே,தங்கையை அவசரமாக அழைத்து சென்று தவறு நீ செய்ததாகவே இருக்கட்டும் என பேசியிருந்தாள்.

முகிழ்மதியும் கூட செய்யாத பிழையை ஏற்றுக்கொண்டதும் அதே காரணம் தான்!

அதன்பிறகே சந்திரமதிக்கு ஆசுவாசம் தோன்றின.

அவளிற்கு மற்றொரு விடயமும் தெள்ள தெளிவாக புரிந்தது.

வருடங்கள் பல கடந்தப்போதும் சகோதரிகள் இருவரும் இணைவதை விஜயலட்சுமி விரும்பவில்லை என்று புரிந்துக்கொண்டவளிற்கு நெஞ்சம் பிசைந்தது.

அதனால் தன்னுடைய மன அமைதிக்காக சகோதரியை தேடி வந்த சந்திரமதிக்கு தான் நிம்மதி பறிப்போனது.

அதனால் தனக்குள் நிறைந்த வேதனையை உள்ளுக்குள் போட்டு புதைத்துக்கொண்டு நலமாக இருப்பது போல் வலம் வந்தாள்.

அத்தோடு தன்னுடைய நிலைமையை விட அவளின் நிலை மோசமாக இருப்பதறிந்து அவளும் தங்கையிடமிருந்து ஒதுங்கிக் கொண்டாள்.

ஏனெனில், சந்திரமதி அவளிற்கு ஆதரவாக பேசினால் தான் அவருக்கு பிடிப்பதில்லையே?

அதனால் அவரின் முன்பு அவளும் சிடுசிடுவென நடந்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை!

சிற்சில நேரங்களில் தன்னை மீறி அவளிற்காக பேசினால் அவரின் முகம் மாறுவதை பார்ப்பவளிற்கு நெஞ்சில் நீர் வற்றிப்போகும்.

தந்தையிடம் அவரின் உண்மை சுயரூபத்தை வெளிப்படுத்தலாம் என்று எண்ணினால்,அவரோ தாயின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதறிந்து பின்வாங்கி விட்டாள்.

அவர் ஆட்டி வைக்கும் பொம்மையாய் சுற்றி திரிந்தவரிடம் என்ன பேசமுடியும் அவளால்?

தங்கையோ அதற்கும் மேல்!

பாசத்திற்கு அடிப்பணியும் கோழை அவள்!

அவளை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்பது வேறு அவளை அனைத்திலிருந்தும் ஒதுங்க வைத்தது.

இங்கிருந்து எவ்வாறு தப்பி செல்வது என காத்திருந்த நிலையில் தான் ரத்தினவேல் வீட்டிலிருந்து பெண் கேட்டு வந்திருந்தனர்.

முதலில் ஹரிஷை எண்ணி திருமணமே வேண்டாம் என முடிவெடுத்தவளை சம்மதிக்க வைத்தது ரத்தினவேலின் சொற்கள் தான்!

அவன் அவளிற்கு கொடுத்த சத்தியத்தில் ஈர்க்கப்பட்டே திருமணத்திற்கு சம்மதித்தாள்.

கூடவே,முகிழ்மதிக்காகவும் இந்த திருமணத்தை ஏற்றிருந்தாள்.

அவள் திருமணம் வேண்டாம் என்றால் முதலில் பாதிக்கப்படுவது தங்கையாக இருக்கும் என்பது அவளிற்கு சர்வ நிச்சயம்!

இவரிடமிருந்து தப்பி செல்வதற்கும் ஹரிஷிடமிருந்து தப்பி செல்வதற்கும் ஒரே வழி இந்த திருமணம் என்று அவள் கட்டி வைத்திருந்த கனவுகள் எல்லாம் சரிந்துப்போயிருந்தன.

அவளின் கனவு கலைந்ததினாலே அன்று கோவிலில் தங்கையிடம் கூட கோபம் கொண்டு பேசியிருந்தாள்.

ரத்தினவேல் அவளை பாதுகாத்து அரவணைத்த விதமே அவனிற்கு அவளை பிடித்திருக்கிறது என்று அவளிற்கு புரிய வர,தங்கைக்கு இனிமேலாவது நல்லதொரு வாழ்வு கிடைக்கட்டும் என்று பெருந்தன்மையாக விலகிக்கொண்டாள்.

அதேசமயம் தன்னை கடத்தியவர்களின் மீது அவளிற்கு தீரா கோபம் கனன்றுக்கொண்டிருந்தன.

தங்கையின் திருமணத்திற்கு பிறகு,தாயின் நடவடிக்கை அப்படியே மாறிப்போயின.

ஏனெனில், அவருக்கு சந்திரமதி முகிழ்மதி இருவரும் ஒன்று போல் தான்!

எப்போது இருந்தாலும் அவர் தனக்கு எதிராக திரும்புவார் என்று அவள் நன்கு அறிவாள்.

அதற்கு முன்பே அவரிடமிருந்து தப்பிச்செல்ல எண்ணியிருந்தாள்.

ஆனால் இப்போது வசமாக அவரிடமே சிக்கியிருந்தாள்.

அதனால் அவரின் இரக்கமற்ற செயலில் அவளிற்கு பெரிதாக ஆச்சரியமில்லை.

அவளிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது என்னவென்றால் தான் தங்கையை விட்டு விலகிய சமயமும் கூட அவர் அவளை விடாமல் கொடுமை செய்துக்கொண்டிருந்தார் என்பது தான் அது!

அதிலும்,அவர் சூடு வைத்ததை கேட்டதிலிருந்து அவரின் மனம் ஆறவே இல்லை.

இருவருக்கும் ஒன்றும் நேரக்கூடாது என்று தான் செய்த காரியம் தங்கையை மேலும் வருத்தப்படுத்தியிருக்கிறது என்று எண்ணி குற்றவுணர்வில் தவித்தாள்.

இந்நிலையில் சகோதரியின் வாழ்வை கெடுக்கும் விதமாக அவர் செய்ய உரைத்த காரியத்தை கேட்டவளிற்கு ஈரக்குலை நடுங்கிப்போயின.

அவரை அருவருப்புடன் நோக்கிய சந்திரமதி “உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா?இத்தனை வருஷமா அந்த புள்ளைய படுத்தினப்பாடு போதாதா உங்களுக்கு?ஏன் அவ மேலே இவ்வளவு வன்மம் உங்களுக்கு?” என சீற்றத்துடன் ஆரம்பித்தவளின் குரல் இறுதியில் கலங்கிப்போனது.

அவரோ “ஏய் என்னடி வாய் நீளுது…சின்ன வயசிலே வாங்கின அடி மறந்திடுச்சா உனக்கு” என அவர் கை ஓங்கியதும் அந்த நினைவுகள் எல்லாம் மனதில் எழுந்து அவளை நடுங்க வைத்தன.

ஆயினும்,இதற்கு மேலும் அவரிடம் அடங்கிப் போக மனமின்றி “நீங்க என்ன வேணா பண்ணிக்கோங்க…நீங்க செய்ய சொல்லற காரியத்தை ஒரு நாளும் செய்யமாட்டேன்” என அவரை நேருக்கு நேராக பார்த்து கூறியிருந்தாள்.

அவளின் துணிச்சல் இவருக்கு ஆத்திரத்தை வரவழைக்க “மூணு வேளை திங்கிறதுக்கு சோறு…சொகுசா வீடு இருக்கிறதாலே தானே நீ இந்த வாய் பேசறே?வயிறு காஞ்சா தன்னாலே நீ வழிக்கு வருவே” என அவளை இழுத்து சென்று அறைக்குள் அடைத்துவிட்டார்.

அவள் எந்த விதமான தண்டனையை கொடுத்தாலும் அவர் கூறியதை மட்டும் அவள் செய்ய தயாராகயில்லை.

இரண்டு நாட்கள் அவள் குளிப்பதற்கு கூட தண்ணீர் தராமல் அழுக்கு உடையுடன் அடைத்து வைத்திருந்தார்.

அவளும் பிடிவாதமாக எதையும் உண்ணாமல் அறையினுள்ளே அடைந்து கிடந்தாள்.

முன்பிருந்த வேலைக்காரர்களாவது சிறிது இரக்கமுள்ளவர்களாக இருந்தனர்‌.

இப்போது உள்ளவர்களோ விஜயலட்சுமியால் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் எதையும் கண்டுக் கொள்ளவில்லை.

விஜயலட்சுமிக்கு அவளை பற்றி நன்கு தெரியும்.

சந்திரமதி சுயநலமிக்கவள்…

தன்னலத்திற்காக எதையும் செய்ய தயாராக இருப்பாள் என்று அவளை பட்டினி போட்டிருந்தார்.

ஆனால் அவர் ஒன்றை அறிய தவறியிருந்தார்.

அவளது தன்னலத்தில் முகிழ்மதியும் அடக்கம் என்று!

உயிர் மட்டும் தானே இருவருக்கும் வேறு…உருவம் ஒன்று தானே?

சகோதரிகளை அவர் பிரிக்க நினைத்தாலும் அவர்களுக்குள் புதைந்திருக்கும் பாசம் என்றும் மறையாது.

இரண்டு நாட்கள் அவளை அறைக்குள்ளே வைத்து கொடுமை செய்த விஜயலட்சுமி குற்றுயிராய் கிடந்தவளை தூக்கி நிறுத்தி “இப்போ சொல்லு…நான் சொல்லறதை ஒத்துக்கிறீயா?ஒத்துக்கிட்டால் அடுத்த நிமிஷமே முன்னாடி மாதிரி ராணி வாழ்க்கை வாழலாம்…என்ன சொல்லறே?” என்று இளக்காரமாக தட்டிலிருந்த உணவை காட்டி அவர் கேட்க,

அரை மயக்க நிலையில் இருந்தாள் பாவையவள்.

உணவை கண்டவுடன் அவளின் வயிறு பசியில் ஓலமிட்டது.

ஆயினும்,அவளின் பிடிவாதம் மட்டும் குறையவில்லை.

“நீ…ங்க சொல்லறது எதையும் செய்யமுடியாது…” என திக்கி திணறி என்றாலும் அழுத்தமாக அவள் கூறியிருக்க,

அவருக்கு வந்ததே ஆத்திரம்.

அடுத்த கணமே அவளின் முடியை கொத்தாக பற்றியவர் “உன்னை யெல்லாம் இத்தனை வருஷம் சோத்தை போட்டு வளர்த்துக்கு தெருவுலே தூக்கிப்போட்டிருக்கணும்…இரண்டுமே நன்றிகெட்ட ஜென்மங்க…சோறு தண்ணீ இல்லாமல் பிச்சை எடுத்தால் தான் உனக்கெல்லாம் புத்தி வரும்…நீயும் அந்த கழிச்சடையோட போய் சேரு…போடி” என அவளை தரதரவென இழுத்து சென்று வெளியே துரத்தி அடித்தார்.

அவள் அப்போதும் “இது என் வீடு…நான் எதுக்கு போகணும்?” என சற்றே துணிச்சலாக கேட்க,

“உன் அப்பன்கிட்ட என்ன சொல்லணும்னு எனக்கு தெரியும்…போடி” என வீட்டின் முக்கிய நுழைவாயிலை இழுத்து சாற்றிவிட்டார்.

அவளிற்கு செருப்பால் அடித்த உணர்வு!

இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருந்ததே வேறு மயக்கம் வரும் போல் இருந்தது.

இப்போது அவளிடம் போட்டிருந்த உடை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.

நடுத்தெருவில் ஒன்றும் இல்லாமல் நிராதரவாய் தள்ளாடியப்படியே நின்றிருந்தாள் சந்திரமதி.
 

முகிழ்மதி 50:

 

அன்று முகிழ்மதிக்கு ஒரே படபடப்பாக இருந்தது.

பொதுவாக,இரட்டையர்கள் பெரும்பாலும் வலுவான,பிரிக்க முடியாத உணர்ச்சிக்கரமான பிணைப்பை கொண்டுள்ளார்கள் என்று உளவியல் ரீதியாக கூறப்படுக்கின்றது‌.

அதை நிரூபிக்கும் விதமாக இரட்டை சகோதரியின் வேதனையை உணர்ந்தவளாய் இங்கு முகிழ்மதியின் நெஞ்சம் துடித்தது.

அவள் தனது நெஞ்சில் கைவைத்தப்படி சன்னல் திரையின் அருகே நின்று இருளை வெறித்து பார்த்திருந்தாள்.

அவளிற்கு ஏனோ மனம் பிசைந்தது.

உள்ளூற ஒரு அச்சம் பரவி அவளை மொத்தமாய் ஆக்கிரமித்தன.

அச்சமயம் அவளின் அறைக்கு வந்த ரத்தினவேல் “முகிழ்…முகிழ்..” என இரண்டு முறை அவளை அழைத்து பார்த்தும் அவளிடம் அசைவில்லை.

அவளின் சிந்தை யாவிலும் தமக்கை மட்டுமே நிறைந்திருக்க,அவளின் இதழ்கள் துக்கத்தில் துடித்தன.

அவளை அழைத்து பார்த்துவிட்டு அவளருகே வந்த ரத்தினவேல் “முகிழ்” என அவளின் தோள் தொட்டு உலுக்கினான்.

அவனின் தொடுகையில் விலுக்கென்று திரும்பிய பாவையவள் திடீரென்று கணவனை கண்டு திடுக்கிட்டாள்.

அவள் வழக்கம் போல் மிரட்சியுடன் விழித்தாலும் அவளின் கவலை அப்பட்டமாக முகத்தில் தெரிந்தன.

அவளின் நெற்றி சுருங்கியிருப்பதை பார்த்தவனின் புருவங்கள் இலேசாக சுருங்கின.

“என்னாச்சு?உன் மண்டையிலே என்ன யோசனை ஓடிட்டு இருக்கு?” என்று பரிவுடன் கேட்டவாறே அவளின் நெற்றியில் இருந்த சுருக்கத்தை மென்மையாக வருடி சரி செய்தான்.

அவளிற்குள் அவனிடம் தன் மனதில் இருக்கும் பயத்தை பற்றி தெரிவிப்பதா வேண்டாமா என்ற தயக்கம் உருவாகின.

அவளின் விழி வழியே காரிகையின் சிந்தனைகளை படித்த ரத்தினவேல் “ஸ்பீக் அப் முகிழ்” என்றான் அழுத்தமாக.

அதற்கு மேலும் அவனிடம் நிஜத்தை மறைக்க முடியாமல் ஒரு வித தவிப்புடன் “ஏன்னு தெரியலைங்க…காலையிலிருந்து ஒரே படபடப்பா இருக்கு…ஏதோ கெட்டது நடக்கப் போற மாதிரி மனசெல்லாம் அடிக்குது…ஒரு வேளை அக்காவுக்கு…” என தொண்டை அடைக்க பேச முடியாமல் நிறுத்தினாள் அவள்.

அவள் பேசி முடித்ததும் ‘என்ன பெண் இவள்?’ என்று தான் அவனிற்கு தோன்றியது.

இத்தனை நடந்ததற்கு பிறகும் அவளின் தமக்கையை பற்றியே சிந்திக்கும் அவளின் பாசத்தை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

அதேசமயம் சிறு கோபமும் அவனுள் துளிர்த்தது.

ஆயினும்,நகமும் சதையுமுமாய் இருக்கும் சகோதரிகளை தானே நினைத்தாலும் பிரிக்க முடியாது என்று அறிந்து பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான் அவன்.

தன் மனையாளின் மன திருப்திக்காக இருவரையும் சந்திக்க வைப்பதற்கான ஏற்பாட்டை தொடங்க முடிவெடுத்தான்.

இதுவரை யாருக்காகவும் தன் முடிவினை மறு பரிசீலனை செய்யாதவன் முதல் முறையாய் மனைவிக்காக இறங்கி வந்தான்.

ஆனால் விஜயலட்சுமி விஷயத்தில் அவன் இறுக்கத்தை தளர்த்திக்க சிறிதும் விருப்பமில்லை.

அதனால் “இங்க பாரு முகிழ்…உன் அக்காவை பார்க்கறதுக்கு நான் ஏற்பாடு பண்ணறேன்…ஆனால் அதுக்கடுத்து அம்மாவை பார்க்கறேன் ஆடுக்குட்டியை பார்க்கறேன்னு என்கிட்டயிருந்து வேறு எதையும் எதிர்பார்க்கக்கூடாது…காட் இட்” என ஒற்றை புருவத்தை ஏற்றி அவன் தீர்க்கமான குரலில் மொழிய,

அவன் பேசிய தோரணையே அவளிற்கு ஒரு வித எச்சரிக்கையை கொடுத்தன.

அவளிற்கு தாய் தந்தையை பார்க்க வேண்டும் என்று தோன்றினாலும்,அதற்கு மேல் சலுகையை எதிர்பார்த்தால் தமக்கையை பார்க்க முடியாதோ என்று அஞ்சி “இது போதுங்க” என தலையை உருட்டினாள்.

“குட்…” என அவளின் தலையை பிடித்து செல்லமாக ஆட்டிய ரத்தினவேல் “சரி நீ போய் நிம்மதியா தூங்கு…நானே எப்போ உங்க அக்காவை மீட் பண்ணலாம்னு சொல்லறேன்…” என்றதும் “சரி” என தலையாட்டிவிட்டு திரும்பி நடந்தாள் அவள்.

ஒரு ஐந்தடி தான் எடுத்து வைத்திருப்பாள்.

அதற்குள் “ஹே முகிழ் எங்கப்போறே?” என விரல் சொடுக்கி அவளை அழைத்திருந்தான் ஆடவன்.

அடுத்த அடி எடுத்து வைக்கப்போன மங்கை அவனை நோக்கி மெதுவாக திரும்பி “நீங்க தானே தூங்கப்போக சொன்னீங்க?” என குழப்பமாய் நலிந்த குரலில் கேட்டாள்.

அவனோ அங்கிருந்த சன்னல் திரையில் சாய்ந்து நின்று “உன்னை தூங்க போக சொன்னேன் சரி…பட் டெயிலி ரொட்டினை மறந்திட்டியா என்ன?” என ஒற்றை புருவம் உயர்த்தி அவன் கேட்க,அவனின் இதழோரம் குறுஞ்சிரிப்பு ஒன்று தவழ்ந்தது.

அவளோ ‘டெயிலி ரொட்டினா?’ என ஒன்றும் புரியாமல் யோசித்தவளிற்கு சிறிது சிறிதாக அனைத்தும் விளங்கியது.

தினந்தோறும் உறங்குவதற்கு முன்பு அவனின் கன்னத்தில் முத்தமிட்டு ‘இரவு வணக்கம்’ சொல்ல வேண்டும் என்பது அவனது அன்பு கட்டளை!

இதையறிந்து அவள் தயங்கினாலும் அவளின் முகம் சிவந்தது.

அவனோ சிறிதும் இரக்கமின்றி ஒற்றை விரலை நீட்டி “வா..” என்பது போல் அவளை அருகே அழைத்தான்.

அவளோ ‘ஐய்யோ’ என்பது போல் இதழ்கடித்து அவஸ்தையுடன் நெளிய “வாடினு சொல்லறே…வா” என ஒரு அதட்டல் போட்டதும் மேனி தூக்கிவாரிப்போட பயத்துடனே அவனை நோக்கி நடந்து வந்தாள்.

“பார்த்து…பார்த்து தரைக்கு வலிக்கப்போகுது…மெதுவா வா…” என அவளை அவன் சீண்ட,

அவளோ அவனை சிணுங்கலாய் பார்த்தப்படி அருகே வரவும்,அவள் அருகே வரும் வரை நிதானமில்லாத ஆடவன் “ஒரு கிஸ்ஸுக்கு இவ்வளவு அக்கப்போராடி” என கேட்டு அவளின் இடைப் பற்றி வெடுக்கென்று இழுத்திருந்தான்‌.

அவனது அதிரடியில் காரிகையவள் படபடப்புடன் அவனை ஏறிட,அவனோ அவளின் இதழை ரசித்துக்கொண்டே “கிஸ் மீ” என கட்டளையாக மொழிந்தவனின் புருவம் கேலியாய் ஏறி இறங்கியது.

ஏனெனில்,அவளிருக்கும் உயரத்திற்கு அவனிற்கு அவள் முத்தமிட வேண்டும் என்றால் ஒரு ஏணியை போட்டு தான் ஏற வேண்டும்.

ஆனால் அவனோ அவளிற்கு சற்றும் வளைந்துக் கொடுக்காமல் விறைப்புடன் நின்று அவளை அதிகாரம் செய்தான்.

காரிகைக்கோ அவனது பிடியே மூச்சு முட்டும் உணர்வை கொடுத்தது.

இதில் அவனின் கன்னத்தில் முத்தமிட வேண்டும் என்று எண்ணும் போதே ஒரே வெட்கமாக வந்தது.

அதிலும்,அவனது சீண்டும் பார்வையும் குறும்பு சிரிப்பும் பாவையவளை என்னவெல்லாமோ செய்தது.

அவள் நாணத்தில் சிவந்த முகத்துடன் தலைக்குனியவும்,

அடுத்த கணமே “கீழே குனிஞ்சே இரண்டு கிஸ் தரணும்” என்றான் அதிகாரமாய்…

அதில் அதிர்ச்சியில் விழி விரித்து ஏறிட்டவளை கண்ட ரத்தினவேல் “இப்படி நீ கண்ணை விரிச்சு விரிச்சு பார்த்தா நாம்ப இன்னைக்கு நைட் தூங்கின மாதிரி தான்…எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை…விடியற வரை இப்படியே இருக்கலாம்” என மெத்தனமாக கூறினான் முகிழ்மதியின் கண்ணாளன்.

ஆனால் அவனின் மனையாளிற்கு தான் ‘ஐய்யோ’ என்றானது.

அவனின் நெருக்கமும் ஸ்பரிசமும் அவளிற்கு ஓரளவு பழக்கமாகிவிட்டதால் முன்பு போல் பயம் ஏற்படவில்லை.

ஆயினும்,ஆடவனின் சரீரத்திற்கும் அவளிற்கும் இடையே இடைவெளி இல்லாத அந்த அண்மை ஏதேதோ உணர்வுகளை கொடுத்தன.

அவனது அடர்ந்த தாடியுள்ள கன்னத்தை பார்த்து எச்சிலை கூட்டி விழுங்கியவளிற்கு உள்ளுக்குள் ஒரு இனிய குறுகுறுப்பு உண்டாக்கின.

அவளின் இதயத்தின் துடிப்பு அதிகரிக்க,அவளின் மேனி வெடவெடக்க ஆரம்பித்தன.

பெரும் அவஸ்தையான உணர்வோடு ‘பிளீஸ்’ என்பது போல் இமைகள் சுருக்கி அவள் காண,

அந்த அழுத்தக்காரனோ தனது முடிவிலிருந்து சற்றும் இறங்கவில்லை.

“முகிழ்மதி இட்ஸ் கெட்டிங் லேட்…காலையிலே ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு…சீக்கிரம்…” என்று முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு அவளை அவசரப்படுத்தினான்.

ஆனால் அவனின் கண்ணோரம் மட்டும் சிரிப்பில் சுருங்கியிருந்தன.

கணவன் அவளை அதட்டுவது போல் பேசியதும் வேறுவழியின்றி தன்னை தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு விழி மூடி அவனை முத்தமிடுவதற்கு நுனி காலில் எம்பினாள்.

அந்தோ பரிதாபம்…

அவள் நுனிக்காலில் எம்பியும் கூட அவனின் கழுத்தை வரை மட்டுமே அவளின் இதழ்கள் எட்டியது.

அவளின் அவஸ்தையை அவன் சிரித்தப்படியே ரசித்துக்கொண்டிருக்க,ஒரு கட்டத்தில் முயன்று பார்த்து தோற்ற பாவையவள் “அம்மா” என அவனின் மீதே சரிந்து விழுந்தாள்.

கீழே விழுந்து அவனின் நெஞ்சில் பலமாக மோதியிருந்தது அவளின் நெற்றி!

அதுவரை அவனின் தோளில் கைகளை வைக்காமல் பக்கவாட்டில் விரித்து வைத்திருந்தவளின் கரம் இப்போது தானாக மேலெழுந்து அவனின் சட்டையை இறுகப்பற்றியிருந்தது.

அவனின் தேக்கு மர தேகத்தில் மோதியதால் அவளின் நெற்றியில் பலத்த அடி விழ “ஸ்ஆ” என வலியில் முனகினாள்.

உடனே பதறிப்போய் அவளின் முகத்தை பற்றி நிமிர்த்திய ஆடவன் “ஏன்டி ஒரு முத்தம் தானேடி கேட்டேன்…அதுக்கு ஏன் சர்க்கஸ் பண்ணி அடி வாங்கிட்டு இருக்கே” என கடிந்துக்கொண்டு அவளின் நெற்றியை அழுந்த தேய்த்துவிட்டான்.

எப்போதும் போல் அவனின் அக்கறையிலும் அன்பிலும் அவளின் நெஞ்சம் நனைந்தது.

அவனின் முகத்தில் தோன்றிய பதட்டத்தையே விழி அகற்றாமல் பார்த்திருந்தவளின் விழிகள் சட்டென பளீச்சிட்டன.

தன் முகத்திற்கு நேரெதிரே குனிந்திருந்த அவனது தாடி அடர்ந்த கன்னத்தையே குறுகுறுவென பார்த்தவள்,இது தான் தனக்கான சந்தர்ப்பம் என கருதியவளாய் வேகமாக அதை சமயம் பட்டும் படாமல் அவனிற்கு முத்தமிட்டு விலகியிருந்தாள்.

அதை சற்றும் எதிர்பாராத ரத்தினவேல் திகைப்பில் விழி விரித்தான்.

அடுத்த கணமே அவளை நோக்கி திரும்பிய ஆடவனிடம் “குட் நைட்” என படபடப்புடன் கூறிவிட்டு வேகமாக சென்று தனது மெத்தையில் ஏறி படுத்துக்கொண்டாள் முகிழ்மதி‌.

இங்கு அவளின் மணாளானோ ‘அமுக்கணி மாதிரி இருந்திட்டு வாய்ப்பை எப்படி யூஸ் பண்ணிக்கிறாள் பாரு…சரியான கேடி’ என மனதிற்குள் எண்ணியவனின் இதழ்கள் தானாக விரிந்தது.

அவளிற்கு மெதுவாக அவனின் கன்னத்தில் இதழ் ஒற்றி எடுத்ததற்கே இதழில் தீப்பிடிக்கும் உணர்வு ஏற்பட,அவளிற்கு அதுவே அவஸ்தையாக இருந்தது.

அதனால் போர்வையால் தன் முகம் வரை மூடிக்கொண்டு விழிகளை இறுக்கி மூடிக்கொண்டவளின் நெஞ்சம் மட்டும் அசுரவேகத்தில் துடித்தது.

அவளின் இதயம் விட்டால் இக்கணமே தன் துடிப்பை நிறுத்திக்கொள்வது போல் இருக்க,அவளோ தவிப்போடு இதழ் கடித்து கொண்டாள்.

ஆடவனோ மனையாளின் அவஸ்தையை உணர்ந்தவனாய் “நீ கனவு காண்டறது போதும்…காலையிலே சீக்கிரமா எழுந்திரிச்சு படிக்கிற வேலைய பாரு…தூங்குடி” என குரலுயர்த்தி அதட்டி,வானத்தில் பறந்துக்கொண்டிருந்த பெண்ணவளை தரையில் இறக்கினான்.

அவளுமே ‘ஆமா…ஆமா படிக்கணும்’ என தனக்குள்ளே உருப்போட்டப்படி சிறிது நேரத்தில் தூங்கியே போனாள்.

இங்கு அவளின் முத்தத்தில் தூக்கத்தை தொலைத்து அலைந்தவன் ரத்தினவேல் தான்!

பட்டும் படாமல் அவள் கொடுத்த ஒற்றை முத்தத்திற்கே ஆடவனது உணர்ச்சிகள் எல்லாம் தாறுமாறாக பொங்கி பெருகின.

‘நானே தெரியாமல் முத்தம் கேட்டு மாட்டிக்கிட்டனோ?’ என நெற்றியை வருடியப்படி நீள்விரிக்கையில் சென்று படுத்தவனிற்கு அன்று சிவராத்திரியாகிப்போனது.

அவளின் ஸ்பரிசம் வேண்டும் என்று அவனின் ஆண்மை துடித்தாலும்,தன்னவளின் நலன் கருதி தன் உணர்ச்சிகளை நீர் ஊற்றி அணைத்துவிட்டான்.

அவனின் மனையாளோ எவ்வித கவலையுமின்றி ஆழ்ந்த நித்திரைக்கு சென்றிருந்தாள்.

அவள் இப்போதெல்லாம் நடு இரவில் கண்விழித்து அலறுவதில்லை.

அதற்காக முற்றிலுமாக அந்த தவிப்பு நீங்கிவிட்டதா என்று கேட்டால் இல்லை.

ஆனால் தினந்தோறும் அவளின் வழக்கம் இப்போது என்றாவது ஒரு நாள் அளவிற்கு குறைந்திருந்தன.

இரவில் அவள் உறங்கும் போது அவளின் எண்ணம் முழுவதையும் அவன் புறம் திருப்பிவிட்டால்,கணவனுடனான அந்த இனிய கற்பனைகளுடனே அவளும் உறக்கத்தை தழுவி செல்கிறாள்.

அதன்பலன் அவளிற்கு வேறு விதமான அச்சமூட்டும் சொப்பனங்கள் எதுவும் வருவதில்லை.

அவற்றின் பொருட்டே உறங்குவதற்கு முன்பு தன் ஆதிக்கம் முழுவதையும் அன்பால் செலுத்தி அவளின் நித்திரையிலும் அவனே ஆட்சி செய்ய கற்றுத்தேர்ந்தான்.

மருத்துவரிடம் அலைப்பேசியில் இதைப்பற்றி அவன் தெரிவிக்க “இது ரொம்ப குட் நியூஸ் மிஸ்டர் ரத்தினவேல்…அவங்களோடு கண்டிஷன் கொஞ்சம் கொஞ்சமா தேறிட்டு வருதுன்னு நினைக்கிறேன்…நீங்க முடிஞ்ச வரை அவங்களுக்கு சந்தோஷம் தரமாதிரி விஷயங்களை மட்டும் பண்ணுங்க…அதுவே இப்போதைக்கு போதும்…நெக்ஸ்ட் வீக் நான் இந்தியா வந்திடுவேன்…அவங்க மென்டல் கன்டிஷனை டயகானிஸ் பண்ணி என்ன பிரச்சனைனு பார்ப்போம்” என அவனிடம் கூறினார்.

அதற்காகவே தன் மனையாள் கேட்டதற்கிணங்கி சந்திரமதியை சந்திப்பதற்கு அவன் ஒப்புக்கொண்டான்.

ஆனால் சந்திரமதியை தொடர்புகொள்ள முயன்ற நிலையில்,அவள் வீட்டை விட்டு அடித்து துரத்தப்பட்டாள் என்ற விபரம் தான் அவனிற்கு தெரிய வந்தது.

கூடவே,தற்போது அவள் எங்கியிருக்கிறாள் என்ற தகவல் யாவருக்கும் தெரியவில்லை.

அதைக்கேட்ட ரத்தினவேலின் நெற்றியில் ஆழமான முடிச்சுகள் விழுந்தன.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top