முகிழ்மதி 126

முகிழ்மதி 126


 

 

பெண்கள் மூவரையும் கடத்தி வந்திருந்தது ஆத்விக் தான்!

ரோகிணியின் தமையன் மற்றும் தமயந்தியின் கல்லூரி தோழன்…

அத்தோடு நல்லவன் என்ற போர்வையில் இருக்கும் நச்சுப்பாம்பு அவன்.

அதுமட்டுமின்றி அவனிற்கு வேறொரு அடையாளமும் இருக்கின்றது.

எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சதாசிவத்திற்கு தவறான உறவு முறையில் பிறந்தவன் தான் இந்த ஆத்விக்…

சிறு வயதிலே தாயினை இழந்ததினால் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தான்.

ஆசிரமத்தில் வளர்ந்தாலும் சதாசிவம் அவனது தொடர்பில் எப்போதும் இருந்தார்.

தனது மகனிடமும் “நீ இங்கியே இரு மகனே…இது தான் உனக்கு பாதுகாப்பு” என்று அறிவுறுத்தி அவனை அவ்விடத்தில் பாதுகாப்பாக தங்க வைத்திருந்தார்.

ஏனெனில்,ஆத்விக்கின் தாயுடன் உறவு உண்டாகுவதற்கு முன்பே அவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்தது.

தனக்கு முறையற்ற உறவில் மகன் இருப்பது யாருக்கேனும் தெரிந்தால் அவை தனது அரசியல் வாழ்க்கையை பாதிக்கும் என்று சமுதாயத்தினரிடமிருந்து நிஜத்தை மறைத்திருந்தார்.

அதேசமயம்,தனக்கென்று இருக்கும் ஒற்றை ஆண் வாரிசையும் இழக்க அவர் மனம் விரும்பவில்லை.

அதனால் அவ்வப்போது அவனை இரகசியமாய் சந்தித்து அவனிற்கு வேண்டியதை செய்துக்கொடுப்பார்.

அத்தகைய சூழ்நிலையில் ரோகிணியின் பெரிய தந்தைக்கு வெகு நாட்களாக குழந்தை பிறக்காததினால் ஆறு வயதான ஆத்விக்கை இல்லத்திலிருந்து தத்தெடுத்துக்கொண்டார்.

ஆத்விக்கிற்கு அவருடன் செல்ல சிறிதும் விருப்பமில்லை.

ஆனால் ரோகிணியின் பெரிய தந்தையான ஜீவன் மிகப்பெரிய செல்வந்தர் என்பதால் “டேய் மகனே…நீ எப்பவும் என் மகன் தான் அதிலே எந்த மாற்றமும் இல்லை…ஆனால் அந்த வீட்டுக்கு நீ தத்துப்போ…அவங்க இந்தியாவிலே பெரிய பணக்காரங்க…நீ அங்கப்போனால் இன்னும் சொகுசா வாழலாம்…இப்போ இருக்கிற அவங்களோட சொத்துப்பூராவும் பெரியவனானதும் உன் கைக்கு கிடைக்கும்…அதை மொத்தமா அபகரிச்சிட்டு அப்பாகிட்ட வந்திடு…நானும் அதுக்குள்ள அரசியல்ல ஒரு பெரிய நிலைக்குப்போயிடறேன்…நீ திரும்பி வந்ததும் உன்னை என்னோட அரசியல் வாரிசா அறிவிச்சிடறேன்…அப்புறம் இந்த மொத்த இந்தியாவும் நம்ப கன்ட்ரோல் தான்” என கண்களில் பேராசை மின்ன அந்த சிறாரின் மனதில் நஞ்சை கலந்திருந்தார்.

அத்துடன் “சொத்து கைக்கு கிடைக்கிற வரை நீ என் பையன்னு யாருக்கும் தெரிய வேணாம் மகனே…ஜாக்கிரதை” என அவனை எச்சரிச்சத்தோடு ஆரத்தழுவி சிறப்பாக வழியனுப்பியிருந்தார்.

ஆத்விக்கிற்கு சதாசிவத்திற்கு உரிய நஞ்சுக்குணம் அப்படியே இருந்தாலும்,அவரை விட அவன் மிகவும் புத்திசாலியானவன்.

ஆதலால்,அவனது தந்தை பற்றி யாரிடமும் அவன் மூச்சே விடவில்லை.

ரோகிணியின் பெரிய தந்தை வீட்டில் அவர்களது மகன் போலவே தன்னை பாவித்துக்கொண்டு வளர ஆரம்பித்தான் ஆத்விக்.

தந்தையுடைய கோரிக்கையின் பெயரில் அவன் யாரிடமும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவே இல்லை.

அவன் வளர வளர சதாசிவம் அவருக்குள் விதைத்த நஞ்சும் விருட்சமாக தொடங்கின.

வெளியுலகத்திற்கு நல்லவன் போலவே தன்னை காட்டிக்கொண்டாலும் அவனிற்கும் தீயக்குணமும் கல்மிஷமும் அளவுக்கதிகமாக நிரம்பிக்கிடந்தன.

அந்த கொற்றை உள்ளம் வீணாக அவனது தந்தைக்கு அரசியல் எதிரியான பூபதி குடும்பத்தினரின் மீது வஞ்சமாக உருவெடுத்தன.

ஏனெனில்,ரத்தினவேல் அரசியலில் நுழைந்ததிலிருந்து அவனது தந்தையின் வாழ்வு அஸ்மானமாகியிருந்தது.

அதனால் விளைந்த கோபம் வன்மமாக தொடர்ந்தது.

இந்நிலையில் அவனது இருபதாவது அகவையில் முதன்முறையாக தமயந்தியைச் சந்தித்தான்.

ஏனென்றே தெரியவில்லை…பல பெண்களுடன் இரகசிய உறவில் ஈடுப்பட்டிருந்தவனிற்கு தமயந்தியில் ஒரு மயக்கம் ஏற்பட்டது.

தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடனே அவளை வைத்து வாழும் அளவு வேட்கை அவனிற்குள்!

முதலில் தமயந்தி தனது எதிரி குடும்பத்தின் பெண் வாரிசு என்று அறியவில்லை.

அறித்ததற்கு பிறகோ அவனது முடிவு இன்னும் தீரமுற்றது.

அவளிடம் தோழமையுடன் பேசிப்பழகினாலும் அவனை அவள் எட்ட நிறுத்தி விலக்கி வைத்துவிட்டாள்.

அவளை நேர்வழியில் அடைய முடியாது என்பதறிந்து அவன் வேறு சில குறுக்கு வழியை பின்பற்றினான்.

அதில் அந்த கடத்தல் நாடகமும் அடக்கம்…

ஆனால் அந்த கடத்தல் விடயம் அவனிற்கு எதிராக திரும்பும் என்று அவனே எதிர்பார்த்திருக்கவில்லை.

அவனுடைய திட்டப்படி தமயந்தியை அவனது ஆட்கள் கடத்தி செல்ல,அவன் அவளை காப்பது போல் அவளின் மனதில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும் என்று எண்ணினான்.

தமயந்திக்கு அப்போது பத்தொன்பது வயதுதான்.

முதலமைச்சரின் மகள் என்ற அடையாளத்தை விட, தன்னைச் சுற்றி எப்போதும் இருக்கும் அந்தப் பாதுகாப்பு வளையத்தை அவள் அளவுக்கதிகமாக வெறுத்தாள்.

“காலேஜுக்குப் போக எதுக்கு எனக்கு பத்து கார்ட்ஸ்?” என்று ஒவ்வொரு நாள் காலையிலும் சண்டையிடுவது அவளது வழக்கம்.

ஆனாலும் “அம்மாடி நீ ஒண்ணும் சாதாரண வீட்டுப்பொண்ணில்லை…சீ.எம் பொண்ணு…உனக்கு எந்த வகையிலே வேணும்னாலும் ஆபத்து வரும்…உன்னோட பாதுகாப்பு தான் இங்க முக்கியம்” என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசி அவளின் வாயை அடைத்துவிட்டார்.

அத்துடன் ரத்தினவேலும் கண்டிப்பாக அதையே தெரிவிக்கவும் அவளிற்கு வேறு வழி தெரியவில்லை.

அதனால் அந்த பாதுகாப்பு ஆட்களுக்கு அரைமனதாக ஒப்புக்கொண்டாள்.

கல்லூரி முடிந்து தன் தோழிகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டே வாசலுக்கு வந்தாள் தமயந்தி.

அவளிற்கான கார் சற்றுத் தொலைவில் காத்திருந்தது.

அதில் நான்கைந்து பாதுகாவலர்கள் அவளிற்காக காத்திருந்தனர்.

அதைக்கண்டு கடுப்பாகிய தமயந்தியோ ‘வந்துட்டானுங்க என் நிம்மதிய குலைக்கவே’ என உள்ளுக்குள் பொருமியப்படி “பை டியர்ஸ்…நான் கிளம்பறேன்” என நண்பிகளிடம் விடைப்பெற்று தனது வாகனத்தை நோக்கி நடந்தாள்.

ஆனால்,அவள் காரை நெருங்குவதற்குள்…

ஒரு கருப்பு நிற வேன் மின்னல் வேகத்தில் அவளருகே வந்து நின்றது.

அதன் கதவுகள் படாரெனத் திறக்கப்பட, உள்ளிருந்து இரண்டு ஆஜானுபாகுவான மனிதர்கள் கீழே குதித்தனர்.

அவள் ‘என்ன நடக்கிறது?’ என்று உணர்வதற்குள்,அதில் ஒருவன் அவளது கையைப் பலமாகப் பற்றி இழுத்தான்.

“ஹேய் கையை விடு” என தமயந்தி பயத்தில் திமிறினாள்.

அவர்கள் இருவரது முகமும் கைக்குட்டை கொண்டு மறைக்கப்பட்டிருந்தது.

“வாடி” என்றவனின் பிடி இன்னும் அதிகமாக இறுகிட,

மற்றொருவன் அவளை வேனை நோக்கித் தள்ளினான்.

தமயந்தியின் உடல் பயத்தில் வெலவெலத்துப்போக “காப்பாத்துங்க” என்ற அவளது அலறல் குரல் கேட்டு,அவளது தோழிகள் “தமி” என தமயந்தியைக் காக்க முன் வர,

சட்டென அந்த இருவரில் ஒருவன் கத்தியை தூக்கி அவர்களின் முன்பு காட்டியதும் அவர்கள் பயத்தில் பின்வாங்கிட,சுற்றியிருந்த மாணவர்களோ அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

எல்லாம் சில வினாடியில் நடந்து முடிந்ததினால் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.

பாதுகாவலர்கள் இதனை கண்டு வாகனத்திலிருந்து இறங்கி இவளை நோக்கி ஓடி வந்தார்கள்.

அவர்களை தடுப்பதற்கு மேலும் பத்து கடத்தல்காரர்கள் வந்துவிட,பாதுகாவலர்களால் அவர்களை சமாளிக்க முடியவில்லை.

இந்நிலையில் கடத்தல்காரர்களில் ஒருவன் “வாயை மூடுடி…இன்னைக்கு உன்னை யாராலையும் காப்பாத்த முடியாது…கத்தினே சாவடிச்சிடுவேன்” என கரடுமுரடான குரலில் கத்தி அவளது வாயைப் பொத்த முயல,

தமயந்தி எப்போதும் துணிச்சலான பெண் என்பதால் அவனது அதட்டலுக்கு அடங்கிப் போகாமல் அவனை காலால் ஓங்கி உதைத்தாள்.

அவன் “அம்மாஆஆ” என காலை உதறி அலற,

அவளோ “என்னை தொடாதே…விடுடா பிளடி ஸ்கௌண்டர்ல்ஸ்” என பல்லைக் கடித்து திட்டியப்படி அவன் முகத்தில் தன் கைமுட்டியினால் ஓங்கி ஒரு குத்துவிட்டாள்.

ஆனால் அதற்குள் அவளின் செயலை கண்டு மேலும் இருவர் வந்து “அமைதியா வாடி…இல்லைனா உன்னை இங்க கொன்னுப்போட்டிருவேன்” என அவளை கன்னத்தில் அறைந்து வேனை நோக்கி அவளை இழுத்துச் சென்றப்போது,தமயந்தியின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன.

தன் வாழ்நாளில் முதல்முறையாக, தான் எவ்வளவு பலவீனமானவள் என்பதை அவள் உணர்ந்த நொடி அது தான்.

அவளை வேனில் ஏற்றி கதவை ஏற்றுவதற்கு ஒரே ஒரு நொடி மட்டுமே இருந்த நிலையில் அவளின் மனம் நிராசையில் துவண்டன.

அச்சமயம் திடீரென்று அந்தப் பரபரப்புக்கு நடுவே ஒரு கம்பீரமான குரல் இடியென முழங்கியது.

“அவளை விடுங்கடா” என அவ்விடமே அதிர கர்ஜித்தவனின் குரல் கேட்டு கடத்தல்காரர்கள் திடுக்கிட்டுத் திரும்பினார்கள்.

ஒரு உயரமான உருவம் அவர்களை நோக்கி ஆவேசமாக ஓடிவருவதை காணும் போது அவர்களின் அடிவயிறு கலங்கின.

ஒரு சிங்கமே தனது பிடரி மயிர்கள் சிலும்பிட ஆக்ரோஷமாக ஓடி வருவதை போலிருக்க,அதில் மிரண்டவர்களோ “ஹே சீக்கிரம் அவளை உள்ளே ஏத்துடா” என ஒருவன் கத்த,

மற்றவனும் அதேப்போல் அவளை ஏத்த முயல அதுவரை பலவீனமாகியிருந்த பாவையவளின் விழிகள் மீண்டும் உயிர்ப்பெற்றது.

“வீர்” என நலிந்தக்குரலில் அழைத்தவளின் கன்னத்தில் பதிந்திருந்த கைத்தடத்தை பார்த்த வீருக்கு வெறி ஏறியது.

அவ்வளவு தான்?

கண் மூடி திறக்கும் நொடியில் கயவர்களின் கையிலிருந்த தமயந்தியை மீட்டு அனைவரையும் பந்தாடியிருந்தான்.

மற்றைய பாதுகாவலர்கள் முன்னெச்சரிக்கையாக முன்பே வீரிடம் “சார் எங்களுக்கு ஏதோ தப்பா தோணுது…இரண்டு மூணு நாளா ஒரு வேன் சம்பந்தமே இல்லாமல் மேடம் காலேஜ் வாசலுக்கு வந்து வந்து போயிட்டு இருக்கு” என சந்தேகமாக தெரிவிக்க,

அதைக்கேட்டு நெற்றிய சுருக்கிய வீரோ “அப்போ உங்க வண்டிய கொஞ்சம் தள்ளி பார்க் பண்ணி கண்காணிங்க…நானும் மறைஞ்சிருந்து வாட்ச் பண்ணறேன்…அவனுங்க யாரா இருந்தாலும் அவனுங்களை பிடிச்சே ஆகணும்” என பாதுகாவலர்களுக்கு ஆணைப்பிறப்பித்தான்.

அதன்படி,இன்றும் யாவருக்கும் தெரியாமல் அவளது கல்லூரிக்கு எதிரில் உள்ள சாலையிலிருந்து நடப்பதை கண்காணித்தவன்,இப்போது அனைவரையும் துவம்சம் செய்ய வந்துவிட்டான்.

அவை மட்டும் கல்லூரியாக இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் அத்துணை கடத்தல்காரர்களும் அவனது துப்பாக்கி ரவைக்கு இரையாகி இருந்திருப்பான் வீர்.

இப்போது அனைவரையும் தன் தீரத்தால் புரட்டியெடுத்த வீரோ மயங்கி விழ தயாராக இருந்த தமயந்தியை கவனித்து “தமி” என ஓடி வந்து அவளை தாங்கிக்கொண்டான்.

அவளை தன் கரங்களில் ஏந்தி சென்றவனின் இதயத்துடிப்பு எக்கச்சக்கமாக எகிறிய விதம், அவனது இதயத்தின் அருகே தலை வைத்திருந்த தமயந்திக்கு நன்றாகவே கேட்டது.

அவளின் விழிகள் இலேசாக திறந்து அவன் முகத்தை ஏறிட,அவனது முகத்தில் தெரிந்த தனக்கான பதட்டமும் தவிப்பும் அவளை ஆச்சரியத்தில் உறைய வைத்தன.

அவளின் பூ விதழ்கள் அவளையும் மீறி “வீர்…” என மெல்ல முணுமுணுத்திருக்க,அதேகணம் அவளின் சிந்தையும் மூர்ச்சையாகியிருந்தது.

வீர் அவளை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று காரிகையின் உயிரை காத்திருந்தான்.

அதேசமயம் பாதுகாவலர்களின் உதவியுடன் அந்த கயவர்களை தங்களது கையகப்படுத்தியிருந்தான்.

ரத்தினவேலிற்கு மட்டும் வீர் விஷயத்தை தெரியப்படுத்தியிருக்க,அவள் கண் திறக்கும் சமயம் ரத்தினவேல் அவளின் முன்பு இருந்தான்.

வாடிப்போயிருந்த தங்கையை பார்த்தவுடன் அவனிற்குள் அப்படியொரு ஆத்திரம்!

அவளின் இத்தகைய நிலைக்கு காரணமான ஒவ்வொருவரையும் அழிக்கும் பழிவெறி உருவாகியது.

தங்கையின் நலனை உறுதிப்படுத்திய ரத்தினவேலோ “உனக்கு ஒண்ணுமில்லை தமி” என அவளை அணைத்து ஆறுதல்படுத்தியவன் “இந்த விஷயம் வீட்டுக்கு தெரிய வேணாம்…தெரிஞ்சா பயந்திடுவாங்க” எனவும் வேண்டுக்கோள் முன்வைக்க,

“சரி அண்ணா” என்ற தமயந்தியும் அண்ணனது சொல்லை தவறாமல் பின்பற்றினாள்.

தங்களது இடத்தில் அடைத்து வைத்திருந்த கயவர்களை பல வகையில் துன்புறுத்தி கொடுமை செய்தும்,அவர்களுக்கு யார் இந்த காரியத்தை செய்ய அனுப்பியது என்ற விபரம் தெரியவில்லை என்றார்கள்.

உயிர் பறிக்கொடுக்கும் நிலையிலும் கூட “ஐய்யோ சாரு…எங்க புள்ளை குட்டி மேலே சத்தியமா எங்களுக்கு இதை யாரு செய்யச்சொன்னதுனு தெரியாது…இது மாதிரி ஒரு ஃபோனிலிருந்து இதை செய்ய சொல்லி தகவல் மட்டும் வரும்…வேலைய முடிச்சவுடனே எங்க வூட்டு முன்னாடி காசு வைச்சிட்டு போயிடுவாங்க…வேற எதுவும் தெரியாது சாரே…எங்களை நம்புங்கள்” என கண்ணீர் விட்டு கதறி வீர் மற்றும் ரத்தினவேலின் காலை பற்றி கெஞ்சியும் சிறிதும் இரக்கம் தோன்றவில்லை அவர்களுக்கு!

தமயந்தியின் கன்னத்தில் பதிந்திருந்த கைத்தடம் அவர்களை மிருகமாக்கியிருந்தது.

அவர்களது கைகால்களை ஒடித்து மூடமாக்கியிருந்தார்கள்.

வீரும் அவர்களது அலைப்பேசி மற்றும் வங்கி கணக்கில் தொடங்கி அனைத்தையும் அலசி ஆராய்ந்தப்போதும் அவர்களுக்கு ஒரு துப்பும் கிடைக்கவில்லை.

அத்துணை கனக்கச்சிதமாக ஆத்விக் காயை நகர்த்தியிருந்தான்.

இப்போது அவர்களது சந்தேகம் அரசியல் எதிரியான சதாசிவத்தின் மீது திரும்பின.

ஆனால் தவறு அவர் செய்யவில்லை என்பதால் எங்கு திரும்பினாலும் விடை என்னவோ பூஜ்ஜியம் தான்!

ஆத்விக்கோ தமயந்தியை அடையும் தன்னுடைய முயற்சியில் தோல்வியடைந்ததை எண்ணி கொதித்துப்போய் இருந்தான்.

கல்லூரி வளாகத்தினுள் படத்தில் நடப்பது போன்ற காட்சிகள் நடந்தேறியிருந்தாலும் அனைத்தும் அவர்களது அரசியல் செல்வாக்கை கொண்டு மண்ணில் புதைக்கப்பட்டது.

அதேசமயம் அவளை பற்றிய இரகசியம் கசிந்ததினால் தமயந்தியை வேறொரு கல்லூரிக்கு மாற்றிவிட்டனர்.

அன்றிலிருந்து வீர் அவளிற்கு ஆஸ்தான பாதுகாவலனாக மாறியிருந்தான்.

அவன் இல்லாத சமயத்தில் சம்பத் என்பவன் தமயந்தியின் பாதுகாப்பிற்காகவே பிரத்யேகமாக நியமிக்கப்பட்டான்.

அதனால் ஆத்விக்கால் தமயந்தியை எவ்வகையிலும் நெருங்க முடியவில்லை.

ஆயினும்,அவன் மனம் தளராமல் அலைப்பேசியின் வழியே தமயந்தியிடம் எதுவும் நடக்காதது போல் நலன் விசாரித்தான்‌.

அவளுடன் இருந்த அந்த தோழமையை அவன் எவ்வகையிலும் துண்டிக்கவில்லை.

இந்நிலையில் வீர் மற்றும் ரத்தினவேலின் தேடுதல் வேட்டை தீவிரமாகியதை உணர்ந்து,இங்கு இருந்தால் எளிதாக மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருந்ததால் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டான்.

சதாசிவத்துடன் அவன் நேரடி தொடர்பில் இருந்திருந்தால் எளிதாக அவனது கயமைத்தனத்தை கண்டறிந்து இருக்கலாம்.

ஆனால் அவனோ எவ்வகையிலும் அவருடன் தொடர்பு இல்லாததால் ஆத்விக் அப்போது தப்பியிருந்தான்.

மீண்டும் அவன் இந்தியா வந்த சமயம் அவளை நெருங்க அவன் முயற்சிக்க,

அவளிற்கான பாதுகாப்பு அரண் பலமாகியிருந்ததால் அவனால் அவளை நெருங்கவே முடியவில்லை.

அதில் அவனிற்குள் வெஞ்சினம் வளர்ந்தது.

‘தமயந்தி எனக்கு தான்’ என தினந்தோறும் அவனிற்குள் உருப்போட்டுக்கொண்டே இருந்தவன் அறியவில்லை,அவன் யாரின் மீது பித்தம் கொண்டு காத்திருக்கிறானோ அவளின் மனம் எப்போதோ வேறொருவரின் புறம் சாய்ந்திருந்தது என்று!

வீர் அவளை காப்பாற்றிய அந்த நொடியிலிருந்து தான் அவன் மீது அவளிற்குள் நேசம் தோன்ற ஆரம்பித்தன.

சிறு வயதிலிருந்து அவனின் மீது அவளிற்குள் ஒரு ஈர்ப்பு இருந்து வந்தது.

ஆனால் காதலாக மலரத் தொடங்கிய தருணம் அது தான்!

தனக்கான அவனது தவிப்பும் எகிறிய இதயத்தின் துடிப்பும் கலங்கிய கண்களும் அவனில் அவளை மொத்தமாய் விழச் செய்திருந்தது.

அதன்பின்பு ஒவ்வொரு நொடியும் அவனது நினைவுகள் மட்டுமே அவளிற்குள்!

வீருக்கோ நண்பனின் தங்கையை காத்த நிம்மதி உணர்வு மட்டுமே இருந்தது.

அதற்கு காரணம் அவனது நண்பனிடம் அவனிற்கு இருந்த விசுவாசமும் நட்பும் அவளை வேறு விதமாக பார்க்க விடவில்லை.

அதனால் அவளின் நெருக்கம் அறிந்து அவன் விலகியப்போதும் அவள் விடாமல் அவனை துரத்தி,அவனை நேசிக்கவும் செய்திருந்தாள்.

தமயந்தியை நெருங்கவிடாமல் பாதுகாத்த அனைவரையும் கொன்று குவிக்க அவன் உள்ளம் வஞ்சத்தில் தகித்தது.

இதற்கிடையில் அவனது தந்தையை அரசியலில் தோற்கடித்த ரத்தினவேலை பழிவாங்க சந்தர்ப்பம் தேடி அவன் காத்திருக்க,அவனது திருமணம் அவனிற்கு பழித்தீர்க்க பெரும் வாய்ப்பாக அமைந்தன.

அதன் பொருட்டே,அவனது குடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்க சந்திரமதியை ஜித்து கடத்தி வைத்திருப்பதை அறிந்து அவளை விடுவித்திருந்தான்.

அவளால் அங்கு பெரிய களேபரம் நடக்கும் என்று அவன் எதிர்பார்த்ததற்கு எதிராக ரத்தினவேல் முகிழ்மதி திருமணம் நன்முறையில் நடந்து முடிந்திருக்க,அவனது திட்டத்தில் அவனிற்கு படுத்தோல்வி கிடைத்தன.

ஆனால் அதற்கெல்லாம் அவன் சோர்ந்துவிடவில்லை.

தனது தங்கை ரோகிணியை வைத்து சதிராட்டத்தை அந்த குடும்பத்தில் தொடங்கி வைத்திருக்க,அதனை கெடுக்கும் விதமாக சந்திரமதி குறுக்கே புகுந்திருந்தாள்.

சந்திரமதியை அவன் வழியில் இருந்த அகற்றுவதற்கு ரோகிணிக்கு திட்டம் தீட்டிக்கொடுத்தவனும் அவன் தான்!

அதிலும்,அவன் தங்கை படுதோல்வி அடைந்திருந்தாள்.

இனி வேறு வழியின்றி தானாகவே அந்த குடும்பத்தில் நுழைய வேண்டியது தான் சரியான வழி என்று அதனையும் தமயந்தி அடியோடு தரைமட்டமாக்கியிருந்தாள்.

வீரை நேசிக்கும் விடயம் அவனிற்கு முன்பே தெரிந்திருந்தாலும் அவளின் இந்த ஸ்திரத்தன்மையை அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

முன்பே ரத்தினவேல்,ஜித்து மற்றும் வீரின் மீது கடும் கோபத்தில் இருந்தவனிற்குள் இப்போது இன்னும் ஆத்திரம் மிகையுற,மூவரையும் வேரோடு பிடுங்கியெறிய வேண்டும் என்ற வெறி வந்தது.

அவன் அதற்கான திட்டத்தை வகுத்துக்கொண்டிருந்த சூழ்நிலையில் ரோகிணி குடும்பம் மொத்தமும் சிறைக்கு சென்றிருக்க,மற்றொரு பக்கம் அவனது தந்தை சதாசிவம் அரசியல் நெருக்கடியில் சிக்கித்தவிக்க,அவனிற்கு பைத்தியம் பிடிக்காத குறை ஒன்று தான்!

தேர்தலில் வென்ற கணமே சதாசிவத்தை கட்டம் கட்டி தூக்கிட ரத்தினவேல் ஒரு வலுவான திட்டம் திட்டியிருந்தான்.

அதன்படி,சதாசிவத்தின் கடந்தகாலம் முழுவதும் அலசி ஆராயப்படத் தொடங்கின.

அவரின் கடந்தகாலம் பற்றி தோண்டினால் அவனை பற்றிய தகவல்களும் வெளிவரும் என்பதால் அதனை தடுக்க மும்முரமாக முயன்றிருந்தான்.

அடிக்கு மேல் அடியாக அடுத்ததாக அவனது தற்போதைய தொழிலிலும் அவனிற்கு பலமான நெருக்கடி உண்டாக்கியிருந்தார்கள்.

அதற்கு காரணம்,அவன் நேரடியாக எந்தவொரு விடயத்திலும் பங்கேற்கவில்லை என்றாலும், ரோகிணியின் நேரடி உறவு குடும்பம் என்பதால் அவர்களை விட்டுவைக்க ரத்தினவேல் விரும்பவில்லை.

அவன் கொடுத்த குடைச்சல்களை எவ்வாறு சரிசெய்வது என தெரியாமல் ஆத்விக் திணறிக்கொண்டிருந்தான்.

அவன் அனைத்தையும் சரிசெய்யும் முயற்சியில் தீவிரமாக இருந்த சமயம் ஜித்து சந்திரமதி திருமணம் மற்றும் வீர் தமயந்தி திருமணம் அனைத்தும் வெற்றிகரமாக நடந்தேறியிருந்தன.

இவையனைத்தும் ஆண்கள் மூவரின் கைங்காரியம் என்று அவன் நன்கு அறிவான்.

இதற்கெல்லாம் மேலாக தமயந்தி திருமணமாகி கருவுற்றிருப்பதை கேள்வியுற்றவன் தன்னிலையை மொத்தமாய் இழந்துவிட்டான்.

இதுநாள் வரை அனைத்திற்கும் பின்புலமாக நின்று இயங்கிக்கொண்டிருந்த ஆத்விக்கின் அரக்கத்தனம் இப்போது மொத்தமாக வெடித்து வெளியே வந்தது.

‘தனக்கு கிடைக்காத எதுவும் வேற யாருக்கும் கிடைக்கக்கூடாது’ என தீராத வன்மத்தில் தமயந்தியைக் கொல்ல முடிவெடுத்தான்.

அதேப்போல் தன் அழிவிற்கு காரணமாக இருந்த மூன்று ஆண்களையும் ஒட்டுமொத்தமாக பழித்தீர்க்க அவர்கள் மூவரது இல்லாளையும் சேர்த்து கடத்தியிருந்தான்.

மூவரையும் கொலை செய்யும் முயற்சியில் அவன் கடத்தியிருக்க,தங்களை கடத்தியது ‘யார்?’ என்று தெரிந்ததும் தமயந்தி பேரதிர்ச்சியுற்றாள்.

அவன் தன்னை பற்றிய அனைத்து உண்மைகளையும் அவளிடம் தெரிவித்ததும்,பெண்கள் மூவரும் பயத்தில் உறைந்துப்போனார்கள்.

அவனோ கைகள் கட்டப்பட்டு தரையில் படுத்துக்கிடந்த தமயந்தியின் அருகே வந்தவன் “நீ என்னை கல்யாணம் பண்ணாமல் ரொம்ப பெரிய தப்புப்பண்ணிட்டே தமி…என் காதலை அவமதிச்சதுக்கான தண்டனை தான் இது” என கண்கள் சிவக்க உறுத்துவிழித்தப்படி அவன் கூறியதை கேட்டு அவளின் நெஞ்சில் குளிர்ப்பரவியது.

அதேநேரம் மூன்று பெண்களையும் கண்டு குரூரப்புன்னகையை உதிர்த்த ஆத்விக் “மூணு பேரும் கொஞ்சம் கொஞ்சமா சாகப்போறீங்க…கெட் ரெடி பேபிஸ்” என கொடூர குரலில் கூறியவன்,தனது ஆட்களுடன் அங்கிருந்து வெளியேறியிருந்தான்.

அவன் வெளியேறிய அடுத்த கணமே அந்த சிறிய அறையின் வெப்பநிலை குறைந்து சிறிது சிறிதாக குளிர்பரவ ஆரம்பித்தன.

நேரம் செல்ல செல்ல அந்த அறையின் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் குறைவாக சென்றதும் பெண்களின் மேனியில் நடுக்கம் பரவின.

அதையுணர்ந்து மூவரின் மனதிலும் மரணப்பயம் சூழ்ந்துக்கொள்ள,அங்கிருந்து தப்பிச்செல்ல மார்க்கம் தேடி முயன்றும் அவர்களால் எதுவும் செய்யமுடியில்லை.

மூவரது உடலும் கட்டிப்போடப்பட்டிருப்பதோடு பெண்கள் இருவரும் கர்ப்பமாக இருப்பதால் அவர்களால் எதுவும் செய்ய முடியாத துர்பாக்கிய நிலை!

ஏனெனில்,அவர்கள் சிறிது அசைந்தாலும் வயிறு பகுதி இறுக்கப்பட குழந்தைகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் ஒரு புறம்,குளிரினால் அவர்களது உடல் விறைத்து பலவீனமாகியிருந்தன.

மீதுமுள்ள முகிழ்மதி மிகவும் பலவீனமான பெண்!

தற்போது அவளாக ஏதாவது முயற்சித்தால் மட்டுமே அவர்கள் இருவரையும் காக்க முடியும்?

அவளிற்கு ‘என்ன செய்வது?’ என்றே தெரியாத பரிதாப நிலை…

தமியோ “அண்ணி உங்களாலே மட்டும் தான் ஏதாவது செய்ய முடியும்…ஏதாவது பண்ணுங்க…பிளீஸ்..” என மிகவும் நலிந்த குரலில் அவளிடம் மன்றாட,

சந்திரமதியோ பேசக்கூட முடியாமல் இப்போது மயக்கநிலைக்கு சென்றுக்கொண்டிருந்தாள்.

‘கடவுளே…நாங்க மூணு பேரும் இன்னைக்கு சாகப்போறமா?கூடவே இந்த குழந்தைகளும்…’ என்று எண்ணும் போதே அவர்களின் விழியோரம் கண்ணீர் கசிய தொடங்கின.

முகிழ்மதியோ தனது இயலாமையை எண்ணி கண்ணீர் வடித்தாள்.

அவள் பல வகையில் முயற்சித்தும் அவளால் அந்த கயிற்றை அசைக்கக்கூட முடியவில்லை.

இப்போது பெண்கள் மூவரின் உயிரும் எமனின் பாசக்கயிற்றில் சிக்கிக்கொள்ள ஆண்களோ தங்களது மனைவியை எங்கிருந்து தேடுவது என தெரியாமல் சித்தம் கலங்கி அமர்ந்திருந்தனர்.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top