முகிழ்மதி 16
ரத்தினவேலின் அறையிலிருந்து கண்கள் கலங்க வெளியே வந்த முகிழ்மதியை தூரத்திலிருந்து தமயந்தி விசித்திரமாக நோக்கினாள்.
வெகு தொலைவிலிருந்து காண்பதினால் அவளின் கண்ணீர் அவளிற்கு புலப்படவில்லை.
‘இந்த முகிழ் அண்ணி எப்படி அண்ணா ரூமிலிருந்து வெளியே வர்றாங்க?’ என குழப்பத்துடனே அவள் யோசித்தாள்.
மேலும் ‘அவங்களுக்காக பர்மிஷன் கேட்டதுக்கு இந்த அண்ணா என்னை திட்டி அனுப்பனாங்க…இப்போ என்ன நடக்குது இங்கே?’ என நினைத்துக்கொண்டவளிற்கு திடீரென்று சந்தேகம் ஒன்று முளைக்க,
‘சம்திங் ராங்…கூடிய சீக்கிரம் என்னனு கண்டுப்பிடிக்கிறேன்’ என தனக்குள்ளே சூளுரைத்துக்கொண்டாள் தமயந்தி.
அதேப்போல் முகிழ்மதியோ ‘தோட்டத்தில் இருந்த என்னை இவர் தானே கூப்பிட்டாரு..அப்புறம் எதுக்கு என்னை திட்டறாரு?நான் தான் ஒண்ணும் பண்ணலையே’ என சிறுப்பிள்ளை போல் கவலையோடு எண்ணிக்கொண்டே மாடிப்படியின் விளம்பிற்கு வந்தவள்,சட்டென நிதானித்தாள்.
அதுவரை கண்ணீரோடு நடந்து வந்த முகிழ்மதி கீழே அமர்ந்திருந்த வீட்டு ஆட்களை பார்த்துவிட்டு தேங்கி நின்றாள்.
பெற்றோரின் பிழையை மறைக்க நினைக்கும் பெண் அவள்.
அவ்வாறு இருக்கையில் தன் தமக்கை திருமணம் செய்துக்கொள்ள போகும் வீட்டில் கலகத்தை ஏற்படுத்துவாளா என்ன?
ஆதலால்,அவசரமாக கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.
ரத்தினவேலை பற்றி யாரிடமும் குறை கூற விரும்பாமல்,வெகு சிரமப்பட்டு சிரிப்பை வரவழைத்தாள்.
போலி புன்னகையை பூசிக்கொள்ளவது ஒன்றும் அவளிற்கு சிரமமான விஷயமல்லவே?
அவள் கற்றுதேர்ந்த கலை என்பதால் இதழோடு ஒட்டிய புன்னகையோடு கீழிறங்கி வந்தாள் பேதையவள்.
அங்கு இரு வீட்டு பெரியவர்களும் கூடவே சந்திரமதியும் மட்டுமே அமர்ந்திருந்தாள்.
ஜித்தேந்திரன் அங்கு இல்லை.
அவளை கண்டவுடன் ரத்தினவேலின் தாய் வானதி “என்ன முகிழ்மதி வீட்டையெல்லாம் சுத்தி பார்த்திட்டியாம்மா?வீடெல்லாம் எப்படி இருந்துச்சு?” என கனிவுடன் விசாரிக்க,
அவளோ நடந்த எதையும் வெளிப்படுத்த விரும்பாமல் “எல்லாமே நல்லாயிருந்துச்சுங்க ஆன்ட்டி” என்றாள் மெல்லிய குரலில்.
அவள் சிரிப்பது போல் முகத்தை வைத்திருந்தாலும் அவளின் கண்களில் ஒரு சோகம் இழையோடியது.
அந்த சோகம் மற்றவரின் விழிகளுக்கு தெரியவில்லை என்றாலும்,இருவர் மட்டும் அவளின் வேடத்தை கண்டறிந்துவிட்டனர்.
அதில் ஒருவர்,அவளின் தாய் விஜயலட்சுமி.
மற்றொருவர்,காஞ்சனா மாலா.
வயதின் அனுபவம் அவருக்கு ஆட்களின் முகத்தை வைத்து,அவர்களின் எண்ணங்களை கணிக்கும் திறமையை கற்றுக்கொடுத்திருந்தன.
ஒரே பார்வையில் எதிரில் உள்ளவரை எடைப்போடும் வல்லமை படைத்தவர் அவர்.
எனவே,அவளின் வருத்தத்தை நொடியில் அறிந்துக்கொண்டார் மூதியவர்.
அதனை மெய்ப்பிப்பது போல் மெதுவாக தாயை நெருங்கிய முகிழ்மதி “அம்மா எனக்கு சோர்வா இருக்கு…நான் வீட்டுக்கு கிளம்பட்டுமா?” என்று கேட்டவளிற்கு மீண்டும் அழுகை வரும் போல் இருந்தது.
வேகமாக அதை இதழ்கடித்து அடக்கிக்கொண்டாள்.
ஆனால் மகளின் தவிப்பை உணர்ந்தும் அதற்கு சற்றும் ஆறுதல் கூற விரும்பாத விஜயலட்சுமியோ “ஏய் இப்போ எதுக்கு நீ வீட்டுக்கு போகணும்னு குதிக்கிறே…மூஞ்சிய வேற தூக்கி வைச்சிருக்கே?அப்படியென்ன கேடு வந்துச்சு உனக்கு?” என சிரித்துக்கொண்டே யாருக்கும் கேட்காத குரலில் அவளை சாடினார்.
தாயின் சொற்கள் அவளை அதிகமாய் காயப்படுத்தின.
ஆயினும்,முகம் மாறாமல் காக்க அரும்பாடுப்பட்டு புன்னகைக்க முயன்றாள் அவள்.
அவளின் இதழில் புன்னகை பூசினாலும்,அதற்கு மேலும் அந்த வீட்டிலிருக்க அவளால் முடியவில்லை.
அதனால் தாய் தன்னிடம் கோபம் கொண்டாலும் தன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தாள் முகிழ்மதி.
ஏனோ ரத்தினவேல் தன்னை அவமதித்த விதம் அவளின் சிறிய இதயத்தை கத்தியால் சொருகியது போன்ற வலியை கொடுத்தன.
அவளிற்கு அவன் யாருமே இல்லை தான்.இருப்பினும்,அவனது கோபம் அவளை அளவுக்கதிகமாய் பாதித்தன.
அதன்காரணம் எதுவென்று அலசி ஆராயும் மனோப்பக்குவம் கூட அவளிற்கு இல்லை.
அவளின் உணர்வுகள் என்றோ மரித்து போயிருக்க,இப்போது மட்டும் எவ்வாறு அவள் தன் உணர்வுகளை ஆய்ந்து அறிந்துக்கொள்வாள்?
அப்படி ஒன்று நிகழ்ந்தால் அது உலக அதிசயத்தில் ஒன்றாக இருக்கக்கூடும்.
“அம்மா பிளீஸ்…எனக்கு தலை வலிக்குது…ஒரு மாதிரி மூச்சு முட்டற மாதிரி இங்க இருக்கு…நான் வீட்டுக்கு போறேன்மா” என தாய் தன்னை கண்டப்படி வசைப்பாடி அவமதிப்பார் என்று தெரிந்தும் அதனை பேசினாள் பெண்ணவள்.
அவள் எண்ணியது போலவே அவரின் முகம் ஒரே ஒரு கணம் விகாரமாய் மாறி,மீண்டும் சகஜநிலைக்கு மாறின.
“ஏன்டி சனியனே…உன் அக்கா வாழப்போற வீடு இது…இங்கியும் எங்க மான மரியாதையை குலைக்கவே வந்திருக்கியா?சரியான சுயநலம்பிடிச்சவடி நீ” என அமிலத்தை அவளின் முகத்தில் வாரியிறைத்தார் அவர்.
அவரின் பேச்சில் அவளிற்கு அழுகை முட்டிக்கொண்டு வரும் போலிருந்தது.
விட்டால் அவ்விடத்திலே அவள் வெடித்து அழுதாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
அந்த அளவு அவளுள் அன்று நடந்த சம்பவங்கள் அவளின் துக்கத்தை அதிகரித்து,அதை வெடித்து சிதற வைப்பதற்கான சந்தர்ப்பம் வேண்டி காத்திருந்தது.
காஞ்சனா மாலாவிற்கு அவர்களின் சம்பாஷணையை ஓரளவு புரிந்துக் கொள்ள முடிந்தது.
விஜயலட்சுமியும் முகிழ்மதியும் நன்றாக நடித்தாலும்,அவரின் கூரிய விழிகளிலிருந்து எதுவும் தப்பவில்லலை.
அதனால் முகிழ்மதியின் துக்கம் அவரை சுட்டன.
ஆகையால் மனம் கேளாமல் “விஜயலட்சுமி…” என குரலுயர்த்தி அழைக்க,
அதில் திடுக்கிட்டு அவரை நோக்கி திரும்பிய விஜயலட்சுமி “சொல்லுங்க பெரியம்மா” என்றார் குழைவாக.
அவரின் வழிசல் அங்கிருந்த பூபதி வீட்டினர் யாருக்கும் சிறிதும் பிடிக்கவில்லை.
அனைவரும் ஒன்று போல் முகத்தை சுளித்தனர்.
ஆனால் காஞ்சனா மாலா மட்டும் பேரனின் வாழ்விற்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டார்.
அதனால் தொண்டையை செருமிய மூதாட்டி “விஜயலட்சுமி புள்ளை இங்க வந்து ரொம்ப நேரமாகுது…உடம்பு சரியில்லாத பிள்ளை வேற…எவ்வளவு நேரம் களைப்போடவே இங்க இருக்கும்…பேசாமல் அவளை வீட்டுக்கு அனுப்பி வைச்சிடு” என்று கூறியவரின் விழிகள் முகிழ்மதியை பரிவுடன் வருடின.
அதற்கேற்றாற் போன்று பாவையவளின் விழிகளில் நன்றி பெருக்கு கரைப்புரண்டு ஓடியது.
அவரை நன்றியுடன் அவள் நோக்க,அதனை தலையசைத்து ஏற்று புன்னகைத்தார் பெரியவர்.
விஜயலட்சுமிக்கு கடுப்பாக வந்தாலும் “அட பெரியம்மா…புள்ளையும் அதான் சொன்னாள்…நான் தான் உங்ககிட்ட எப்படி கேட்கிறதுனு தெரியாமல் தயங்கினேன்…இப்போ நீங்களே சொல்லிட்டீங்களே அவளை நிச்சயம் வீட்டுக்கு அனுப்பிடலாம்…பாவம் புள்ளை ரொம்ப சோர்ந்துப்போச்சு” என சிரித்துக்கொண்டே கூறி,மகளின் தலையை பாசமாக வருடுவது போல் பாசாங்கு செய்தார்.
அதற்கே அவளின் மேனி நடுங்கிப்போனது.
வாழ்நாளில் ஒரு முறை கூட அவளிடம் அவர் இதுப்போல் நடந்துக்கொண்டதில்லை.புதிதாக அவரின் விரல் தன்னை பாசமாக தீண்டியதும் அவளிற்குள் அச்சம் தோன்றின.
அவளின் நடுக்கத்தை உணர்ந்த விஜயலட்சுமி ‘சண்டாளி இப்போ எதுக்கு இவளை நான் கொலைப்பண்ண போறே மாதிரி நடுங்கறாள்…பிசாசு இவளே எல்லாத்தையும் காட்டி கொடுத்திருவாள் போலே’ என மனதிற்குள் பொருமினார்.
காஞ்சனா மாலாவும் அதை அறிந்தே இருந்தார்.
அவருக்கு கோபமாக இருந்தாலும் அடக்கிக்கொண்டு “அப்போ சரி…புள்ளைய கூட்டிட்டு போய் விடறதுக்கு வீரை வர சொல்லறேன்” என மருமகளிடம் கண்ணை காட்டினார்.
“சரிங்க அத்தை” என வானதியும் அலைப்பேசியை எடுக்க எழுந்துக்கொள்ள,
அதற்குள் விஜயலட்சுமியோ “வானதி நில்லுங்க” என்றவர்,
காஞ்சனாவிடம் திரும்பி “பெரிம்மா அவருக்கு எதுக்கு சிரமம்?எங்க டிரைவர் தான் இருக்கானே?அவன்கிட்ட சொன்னால் அவனே புள்ளைய வீட்டுலே போய் விட்டுட்டு வந்திடுவான்…வேலையா இருக்க பையனை தொந்தரவு பண்ண வேணாம்” என சொற்களில் தேன் தடவியது போல் பேசினார்.
வேறு யாரேனும் என்றால் அவரின் நடிப்பை அப்படியே நம்பிவிடுவார்கள்.
ஆனால் பூபதி குடும்பத்தில் உள்ள அனைவரும் மகா புத்திசாலியாயிற்றே?
அதனால் அவரை அருவருப்புடனே நோக்கினார்கள்.
இறுதியாக வேறுவழியின்றி முகிழ்மதியை வரவேற்றது போலவே அவளிற்கு அன்புடன் விடைக்கொடுத்தனர்.
அவர்களின் அன்பு அவளின் இதயத்தை நெகிழ செய்தன.
‘இவங்க மாதிரி ஏன் அவரில்லை?என்கிட்ட மட்டும் ஏன் கோபமா நடந்துக்கிறாரு?’ என ரத்தினவேலை பற்றி அவளால் அக்கணம் நினையாமல் இருக்க முடியவில்லை.
சந்திரமதிக்கும் அவளுடன் செல்லவே விருப்பம்!
ஏனெனில்,காலையிலிருந்து பத்து தடவை ஹரிஷிடமிருந்து அவளிற்கு அழைப்பு வந்திருந்தது.
அதை எடுத்து பேசக்கூட அவளால் முடியவில்லை.
அவன் அனுப்பியிருந்த தகவல்கள் ஒவ்வொன்றும் அவளின் அடிவயிற்றை கலங்க செய்வதாய் இருந்தது.
‘காட்…நான் ஏன் இவனை காதலிச்சு தொலைச்சேன்?இவனை காதலிச்ச பாவத்துக்கு தான் தண்டனைய அனுபவிக்கிறேன்…இவனாலே இந்த கல்யாணம் வேறு நின்னிடுமோனு பயமா இருக்கு’ என மிரட்சியோடு எண்ணிக்கொண்டு அவள் அங்கு அமர்ந்திருந்தாள்.
உள்ளுக்குள் இதயம் மட்டும் படுவேகமாக துடித்துக்கொண்டிருந்தது.
ஏனெனில்,ஹரிஷ் அவளை தேடி இங்கு வரை வந்திருந்தான்.
‘நீ என்னை பார்க்க வரலைனா கண்டிப்பா கல்யாணத்தை நிறுத்திடுவேன்’ என அவன் அனுப்பியிருந்த தகவல் அவளின் ஈரக்குலையை நடுங்க வைத்திருந்தது.
அவளின் துன்பத்தை அறியாத பெரியவர்களோ ‘நல்ல நேரத்திலே அவளை அழைச்சிட்டு வந்த மாதிரியே அதே நல்ல நேரத்தில் தான் அவளை வழியனுப்பணும்’ என கண்டிப்புடன் கூறிவிட்டனர்.
வேறுவழியின்றி அனலின் மேல் அமர்ந்திருப்பது போல் அவஸ்தையோடு தவித்துக்கொண்டிருந்தாள்.
அதேவேளை அறையிலிருந்த ரத்தினவேலிற்கு இறுதியாக கண்ணீரோடு வெளியேறிய முகிழ்மதியின் முகம் மனக்கண்ணில் வந்து சென்றன.
தான் செய்தது அதிகப்படி என்பது அவனிற்கு தெரிந்தாலும்,அந்த சிலையை அவள் பார்க்கக்கூடாது என அவன் எண்ணினான்.
அதற்காகவே அவளை அங்கிருந்து அனுப்ப வேண்டிய சூழ்நிலை!
அதன் பொருட்டே சற்று கடுமையாக பேசி அவளை துரத்திவிட்டான்.
இப்போது அவனின் மனம் அவளிற்காக தவித்தது.
மற்றவரின் முன்பு இரும்பாய் இறுகி நிற்பவனால் அவளின் முன்பு அவ்வாறு இருக்க முடியவில்லை.
அவளென்று வரும் போது அவன் நெஞ்சம் பாகாய் இளகி விடுகிறது.
அதனால் வேகமாக தன்னறையிலிருந்து அவளை காணும் வேட்கையோடு அவன் வெளியே வந்தான்.
அதேநேரம் முகிழ்மதி அனைவரிடமும் விடைப்பெற்று வாசலை நோக்கி சென்றுக்கொண்டிருந்தாள்.
முதன்மை வரவேற்பறையை தாண்டி படிக்கட்டில் அவள் இறங்க,அந்த சமயம் தான் அவளை மேலிருந்து பார்த்திருந்தான் ரத்தினவேல்.
அவளின் முதுகுப்புறத்தை பெருமூச்சுடன் கண்ட ரத்தினவேல்,அப்போது திடீரென்று லெஹன்காவின் பாவாடை தடுக்கி கீழே விழப்போன முகிழ்மதியை கண்டு பதறிப்போனான்.
உடனே ரத்தினவேலின் இதயத்துடிப்பு அதிகரிக்க ‘கீழே விழுந்துவிடுவாளோ?’ என தவித்துப்போனான்.
அவளை ஓடி சென்று காக்க நாடி நரம்புகள் துடித்தாலும்,அவன் அங்கிருந்து ஒரு அடி கூட நகரவில்லை.
அவன் தன் முன்னே இருந்த கம்பியை இயலாமையில் இறுகப்பற்றிக்கொண்டான்.
ஏனெனில்,இங்கு கீழே விழயிருந்தவளை தாங்கி பிடித்திருந்தான் ஒருவன்.
அந்த ஒருவன் வேறு யாருமில்ல,
ரத்தினவேலின் உயிர் நண்பன் வீர் தான்!
“டால் பார்த்து பார்த்து…” என பதறிப்போய் அவளின் கைப்பிடித்து நிறுத்தியிருந்தான் வீர்.
‘கீழே விழுந்துவிடுவோம்’ என்ற பயத்தில் கண்மூடிய முகிழ்மதி வீரின் குரல் கேட்டு பட்டென்று விழி திறந்தாள்.
“பார்த்து வரமாட்டியா டால்…இந்நேரம் நான் வரலைனா மண்டை தான் உடைஞ்சிருக்கும்” என மென்மையாக அவளை கடிய,
ஏனோ அவனை கண்டவுடன் அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் முட்டி மோதிக்கொண்டு வெளியே வந்தன.
கண்கள் கரித்துக்கொண்டு வர “வீர் அண்ணா…” என நா தழுதழுக்க அழைத்தவளின் கண்ணீர் ஆடவனின் இதயத்தை கசக்கி பிழிந்தது.
“டால் என்னாச்சு…ஏன் அழறே?” என கரகரத்த குரலில் கேட்டவன்,அதன்பிறகே தன்னை சுற்றி இருக்கும் ஆட்களை கவனித்தான்.
சட்டென சுதாரித்த வீர் “முகிழ் இங்க பேசவேண்டாம்…வாம்மா நானே உன்னை கொண்டு போய் வீட்டுலே விடறேன்” என்று கூறி,அவளை பிடித்திருந்த கரத்தை அகற்றாமல் அப்படியே அழைத்து சென்றான்.
அவளின் கரத்தை பற்றி அவன் சிறுப்பிள்ளை போல் அழைத்து செல்லும் காட்சியை கண்ட இருவருக்கு வயிறு எரிந்தது என்றால்,ஒருவருக்கு மேனி முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
அந்த காட்சியை மேலிருந்து பார்த்த ரத்தினவேலின் முகம் இறுகி விட்டது.
அதேப்போல் அந்த வீட்டின் வேறொரு மூலையிலிருந்து கவனித்த தமயந்தியின் மனம் பொறாமையில் பொங்கியது.
தங்கள் மகிழுந்து ஓட்டுனரிடம் பேசுவதற்காக வெளியே வந்த விஜயலட்சுமியும் இந்த காட்சியை கண்டு எரிச்சலுடன் நின்றுவிட்டார்.
அதை பார்த்தவரின் மேனி மொத்தமும் தீப்பற்றி எரிந்தது.
அவள் ஒரு ஆணோடு பேசுவது கூட அவருக்கு பெரிதாக தெரியவில்லை.
ஆனால் முகிழ்மதியை ஒருத்தன் பூவை போல் தாங்குவதை தான் அவரால் ஏற்க முடியவில்லை.
அந்த அளவு அவருள் வன்மம் முகிழ்ந்திருந்தது.
‘ஆம்பளைங்க கூட பேசாதன்னு எத்தனை தடவை இந்த கழுதைக்கு சொல்லியிருக்கேன்…இன்னைக்கு வீட்டுக்கு போனப்பிறகு இருக்கு இந்த பொட்டக்கழுதைக்கு’ என வெஞ்சினத்துடன் எண்ணிக்கொண்டவரின் மனதிற்குள் விபரீதமான கற்பனைகள் எல்லாம் ஓடிக்கொண்டிருந்தது.
அவளை கைப்பற்றி வெளியே அழைத்து வந்தது எவ்வாறு அவனிற்கு வித்தியாசமாக தெரியவில்லையோ?
அவற்றை போலவே முகிழ்மதிக்கு அவனின் தீண்டல் ஒவ்வாமை உணர்வை கொடுக்கவில்லை.
இதுவரை யாரிடமிருந்தும் கிடைக்கப்பெறாத அன்பு,அரவணைப்பு,பாசம்,பாதுகாப்பு என அனைத்தும் அவனின் ஒரு தொடுகையில் அவளிற்கு கிடைத்திருந்தது.
அவளை முன்பு போல் தனது வாகனத்தில் ஏற்றிய வீர் அவர்கள் வீடு வந்து சேரும் வரையிலும் எதுவும் பேசவில்லை.
அவளை வீட்டின் முன் வாசலில் இறக்கிவிட்டவன் “டால்” என தலைகுனிந்து இருந்தவளை அழைத்தான்.
மீண்டும் அவனை கண்டதும் கலங்க துடித்த கண்களை அடக்கி “சொல்லுங்க அண்ணா” என அவள் புன்னகைக்க,
உடனே ஆடவனின் சிந்தையில் “அண்ணா” என அழைக்கும் அவனது தங்கையின் தோற்றம் கண்முன் தோன்றி மறைந்தது.
பட்டென விழி மூடி திறந்து தன் உணர்வுகளை கட்டுப்படுத்திய வீர் “உன்கிட்ட என்ன பிரச்சனைனு கேட்க மாட்டேன்மா…கேட்டாலும் நீ சொல்லமாட்டேன்னு எனக்கு தெரியும்” என்றவுடன்,
அவள் ஆச்சரியமாக அவனை நோக்கினாள்.
அவளை கண்ட ஒரே நாளில் அவளின் குணத்தை சரியாக கணித்து வைத்திருந்த வீரை அவள் நெகிழ்ச்சியுடன் காண,
அவனோ சிரித்துக்கொண்டே அவளின் சிரத்தை செல்லமாக ஆட்டினான்.
முன்பிருந்த தயக்கம் அவனிடம் இப்போது இல்லை.
அவளை தன்னுடைய தங்கையாகவே எண்ணிக்கொண்டான் அவன்.
அவளிற்குமே அவனது தீண்டல் ஒரு ஆறுதலை தருவதை கவனித்த ஆடவன் இப்போது தடுமாற்றமின்றி பேசி பழகினான்.
அவளை ஆதுரத்துடன் நோக்கிய வீர் “தங்கச்சிம்மா உனக்கு நான் அண்ணா தான். பட் ஒரே ஒரு கண்டிஷன்…உனக்கு என்ன நடந்தாலும் உன் அண்ணா நான் இருக்கேன்…மத்தவங்ககிட்ட நடிக்கிற மாதிரி என்கிட்ட நீ நடிக்கவேண்டாம்டா…இயல்பா இரு…உன் உணர்வுகளை என்கிட்ட மறைக்காதே…அதை மட்டும் எனக்காக நீ செய்யணும்?செய்யறீயா?” என அவனின் உருவத்திற்கு சற்றும் பொருந்தாத மென் குரலில் அவளிடம் அவன் கேட்க,
அந்த நாள் வரை துக்கத்தில் மட்டுமே கண்ணீர் சிந்திய பெண்ணின் கண் இப்போது முதல் முறையாய் ஆனந்தத்தில் கலங்கிப்போயின.
“ச..ரி அ..அண்ணா…” என தொண்டை குழி அடைக்க கூறியவளின் சிகையை பரிவுடன் வருடியவனின் நெஞ்சமும் கலங்கியிருந்தது.
சில வினாடிகள் மௌனமாய் கண்ணீர் உகுத்தாள் அவள்.
அந்த சில நிமிட நேர அவனது தொடுகை அவளிற்குள் ஆயிரம் யானையின் பலத்தை விதைத்தது போலிருந்தது.
அதேப்போல் ஜீவனின்றி இருந்த வீரின் வாழ்விலும் அவளின் வருகை உயிர்ப்பை அளித்திருந்தன.
அன்றொரு நாளிலே அவனின் வாழ்வில் வண்ணங்கள் சேர்ந்து அழகானது போல் உணர்ந்தான் அவன்.
அவளின் கண்ணீர் ஒரு வழியாக நின்றதும் சட்டென நடப்பை உணர்ந்த பெண்ணவள் திடுக்கிட்டு அவனிடமிருந்து விலகிக்கொண்டாள்.
அவனை கண்டு மருண்டு ஓரடி பின்னால் நகர்ந்தாள் அவள்.
அவனிற்கு அது வலிக்கவே செய்தது.
‘சூடு கண்ட பூனையல்லவா அவள்?’
முன்பு அவளின் வாழ்வில் நிகழ்ந்திருந்த கசப்பான அனுபவங்கள் யாரையும் நம்ப விடாமல் அவளை தடுத்தன.
பெற்றோரே அவளை வெறுத்து ஒதுக்கும் போது அவன் மட்டும் எம்மாத்திரம்?
அவனும் ஒரு நாள் தன்னை வெறுத்து ஒதுக்குவான் என எண்ணிக்கொண்டது அந்த சின்னஞ்சிறு இதயம்!
காயப்பட்ட மனதின் ரணத்தை ஆற்றுவது அவ்வளவு எளிதில் நடக்கக் கூடியது அல்லவே?
அதை உணர்ந்த வீரும் “இட்ஸ் ஓகேம்மா…ஒரே நாளில் நீ என்னை நம்பறது கஷ்டம்னு எனக்கு தெரியும்…ஆனால் உனக்கு எந்த ஆபத்தும் வந்தாலும் உடனே இந்த அண்ணா ஞாபகம் வரணும்…சரியா?” என பரிவுடன் கூறி,அவளின் கன்னத்தை வருட எழுந்த கரத்தை அடக்கிக்கொண்டான் அவன்.
அவளோ எதுவும் பேசாமல் அவனையே வெறித்து பார்த்திருக்கவும் “சரி டா….” என்றவன் ஒரு கணம் நிறுத்தி அடைத்த தொண்டையை செருமி “சரி வர்றேன் முகிழ்” என்று கூறி தனது அலைப்பேசி எண்ணை அவளிடம் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டான்.
அவனின் வருத்தம் அவளையும் வாட்டவே செய்தன.
ஆனால் அவளால் திடீரென்று ஒருவனை தன் வாழ்வினுள் நுழைக்க முடியவில்லை.
நெருங்கி சென்றப்பிறகு அவனும் தன்னை காயப்படுத்திவிடுவான் என்றே எண்ணினாள் அவள்.
அவனை பற்றி எண்ணிக்கொண்டே படியேறி வந்தவளை யாரோ ஒருவர் “டால்” என அழைப்பது போன்ற ஒரு மனப்பிரம்மை!
சட்டென அந்த குரல் கேட்டு திரும்பி பார்த்தால் அவ்விடத்தில் யாருமில்லை.
அவளை ‘டால்’ என அழைத்த வீரும் கூட எப்போதோ சென்றிருந்தான்.
உடனே அவளின் சிந்தையில் வழக்கமாக தோன்றி மறையும் மங்கலான காட்சிகள் கண்முன் வந்து சென்றன.
அவள் கனவில் தோன்றும் காட்சிகள் இப்போது விழித்துக்கொண்டிருக்கும் போதே மூளையில் பளீச்சிட தொடங்கின.
அடுத்த கணமே அவளிற்கு தலை வலிப்பது போலிருக்க ‘அம்மா’ என முனகி தலையை பிடித்துக்கொண்டாள் முகிழ்மதி.
அவளிற்கு பயத்தில் உடல் வெடவெடக்க மூச்சிறைக்க தொடங்கின.
வழக்கம் போல் சுவாச உள்ளிழுப்பானின் உதவியுடன் அறைக்கு வந்து கட்டிலில் விழுந்தவள்,ஒரு கட்டத்தில் தானாகவே உறங்கிப்போனாள்.
மீண்டும் அதே கனவு அவளின் சிந்தையில் ஊடுருவ ஆரம்பித்தன.
அதே இரத்தம் படிந்த கைகளுடன்…
முகிழ்மதி 17

சந்திரமதிக்கும் ரத்தினவேலிற்கும் இன்று திருமண நிச்சயம் நடக்கவிருந்தது.
இரண்டு நாட்களில் திருமணம் என்றாலும்,முறையாக நிச்சயத்தை வைத்தப்பிறகே திருமணம் என்று முடிவெடுத்திருந்தனர்.
ஆனால் திருமண நிச்சயத்தை தங்களது குலத்தெய்வ கோவிலின் சன்னிதானத்தில் நடத்த வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார் காஞ்சனா மாலா.
அதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் அவர்களது கோவிலில் நடைப்பெற்று கொண்டிருக்க,விழாவிற்காக மணமக்களின் குடும்பத்தினர் அனைவரும் தயாராகி கொண்டிருந்தனர்.
இந்த விழாவிற்கு நெருங்கிய உறவுகள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்ததினால்,ஆட்களின் கூட்டம் சிறிது குறைவாக இருந்தது.
விழா காலை பத்து மணிக்கு என்பதால்,எட்டு மணிக்கெல்லாம் மணமகன் வீட்டினர் தங்களது இல்லத்திலிருந்து புறப்பட்டுவிட்டனர்.
ஏனெனில்,அங்கிருந்து கோவிலுக்கு செல்வதற்கு குறைந்தது ஒரு நேரம் எடுக்கும்.
ஆனால் மணமகளின் வீட்டு ஆட்களோ முன்பே கோவிலிற்கு வந்திருந்தனர்.
கோவிலிற்கு சொந்தமான ஒரு மண்டபம் ஒன்றில் சந்திரமதி ஆயுத்தமாகி கொண்டிருந்தாள்.
அவளிற்கு பிரத்யேகமாக அலங்காரம் செய்வதற்கென்று ஒப்பனை கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
பெண் தயாராகுவதற்கு நேரமெடுக்கும் என்பதால் மணமகளின் இல்லத்தினர் முன்பே அங்கு வந்திருந்தனர்.
காலை ஒன்பது மணியளவில் எல்லாம் சந்திரமதியை ஆயுத்தமாக்கிவிட்டு அந்த ஒப்பனை கலைஞர்கள் அறையிலிருந்து வெளியேறிவிட்டனர்.
அவள் கருஞ்சாந்து நிற பட்டுப்புடவை மற்றும் தங்க ஆபரணங்கள் அணிந்து மிதப்பான ஒப்பனையில் தயாராகியிருந்தாள்.
விஜயலட்சுமியோ வழமை போல் பெரிய தங்க நிற கரை வைத்த பச்சை நிற பட்டு உடுத்தி,தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் அனைத்தையும் அள்ளிப்போட்டு பகட்டாக காட்சியளித்தார்.
மணமகளின் ஒப்பனையில் பேரழகியாக திகழ்ந்த சந்திரமதியை ரசித்த விஜயலட்சுமி “என் அழகு செல்லம்…தேவதை மாதிரி இருக்கடி” என அவளின் கன்னம் வழித்து திருஷ்டி கழித்தார்.
“ப்ச் மம்மி…மேக்கப் போயிடும்” என சந்திரமதி முகத்தை சுழிக்க,
“சரி கண்ணு” என சிரித்துக்கொண்டே சொன்னவர்,
மெதுவாக குனிந்து மகளின் அலங்காரங்களை ஆராய தொடங்கினார்.
சந்திரமதி மிக எளிமையாக அணிந்திருந்த ஆபரணங்களை கண்டு முகத்தை சுழித்தவர் “என்ன கண்ணு இரண்டே இரண்டு நகை தான் போட்டிருக்கே?மம்மி மாதிரி நிறைய அள்ளிப்போட்டுக்கிட்டால் தானே நம்ப குடும்பத்துக்கு கௌரவமா இருக்கும்” என சலிப்புடன் சொல்ல,
அவளோ “ப்ச் மம்மி நீ சொன்ன மாதிரி போட்டேன்னு வை…பிச்சைக்காரிக்கு வாழ்வு வந்தால் நகையெல்லாம் அள்ளிப்போட்டுப்பாளே…அது மாதிரி ஒரே எம்பாரிசிங்கா இருக்கும்” என்று இதழை சுழித்து கூறியவளின் விழிகளோ அவளின் அன்னையை தான் இளக்காரமாக நோக்கியிருந்தது.
அதை விஜயலட்சுமி சற்றும் அறியவில்லை.
அவரை நேரடியாக விமர்சிப்பதற்கு அவளிற்குள் ஒரு பயம்!
அதனால் சட்டென அவர் கவனிப்பதற்கு முன்பாக விழிகளை விலக்கிய சந்திரமதி “எனக்கு சிம்பிளிசிட்டி தான் மம்மி பிடிக்கும்…அந்த பூபதிக்கும் இப்படி இருந்தால் தான் பிடிக்குமாம்” என தகவல் சொல்லிவிட்டு,கட்டிலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்துவிட்டாள்.
அவரோ மகள் தன்னை இழிவாக கண்டதை கூட அறியாமல் “நீ சொல்லறதும் சரி தான் மதி…அந்த கிழவி கூட ஒரே ஒரு நகை தான் போட்டிருக்கும்…அந்த வானதியும் அப்படி தான்…பேசாமல் நானும் நகை எல்லாத்தையும் கழட்டிட்டு ஒண்ணே ஒண்ணு போட்டுக்கட்டுமா?” என தாம் அணிந்திருந்த நகையை குனிந்து பார்த்தப்படி கேட்க,
‘நீ நகையை கழட்டினா மட்டும் அப்படியே ஸ்ரீ தேவி மாதிரி இருக்கப்போறீயா மம்மி?உன் புடவையே பட்டிக்காடுனு அப்பட்டமா காட்டிட்டும்’ என நக்கலாக எண்ணியவள் “உன் இஷ்டம் மம்மி” என தோளை குலுக்கிவிட்டு அலைப்பேசியை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
“சரி விடு…நகை இருக்கட்டும்…இம்புட்டு நகைப்போட்டா தானே நம்ப ஆளுங்க மதிப்பாங்க” என தன்னையே சமாதானம் செய்து கொண்டவரின் புருவங்கள் இரண்டும் இடுங்கின.
“ஆமா…உன் தங்கொச்சிக்காரி எங்கே?இன்னுமா மினுக்கிட்டு திரியறாள்?அதுக்கெல்லாம் ரூமு ஒரு கேடு…இங்கவே ஒரு ஓரமா தயாரானால் பத்தாது” என அஷ்டக்கோணலாக முகத்தை சுழித்தப்படி கேட்க,
சந்திரமதிக்கே சலிப்பாக வந்தது.
‘அவளை இழுக்கலைனா உனக்கு தூக்கமே வராதா மம்மி?’ என கேட்க அவளின் வாய் துடித்தது.
நினைத்ததையெல்லாம் பேசமுடியாது என்பதை அவள் அறிவாள்.
அதனால் “தெரியலை மம்மி…காலையிலே இங்க வந்தப்போ பார்த்ததோடு சரி” என்றவளிற்கு ஆயாசமாக வந்தது.
“சரி மதி கண்ணு…அந்த சனியன் எங்குனு நான் போய் பாக்கறேன்…நீ இங்கவே இரு” என மகள் என்றும் பாராமல் முகிழ்மதியை இழிவாக பேசியவர் “இந்த கிழவி வேற மாப்பிள்ளைக்கு அவ தான் ஆராத்தி எடுக்கணும்னு ஆர்டரு போட்டிருக்குது…இந்த சனியன் வேற தயாராச்சா இல்லையான்னு தெரியலையே” என சத்தமாக முணுமுணுத்துக்கொண்டே அறையிலிருந்து வெளியேறினார்.
செல்லும் தாயின் முதுகை வெறித்த சந்திரமதி பெருமூச்சறிந்தாள்.
முகழ்மதியிடம் அவளிற்கு பெரிதாக பாசமெல்லாம் இல்லை தான்.
ஆனாலும் தாயின் செயல்கள் வரம்புகள் மீறுகையில் அவளிற்கு கோபமாக வரும்.
ஆயினும்,எதுவும் செய்யமுடியாத கையறு நிலை அவளிற்கு.
தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பார்கள்.ஒரே உதிரத்தில் உருவான குழந்தைகள் என்பதால் மனதினோரம் முகிழ்மதியின் மீது சிறிது அன்பு ஒட்டிக்கொண்டிருந்தது போலும்.
அதனால் முகிழ்மதிக்கு தாய் செய்யும் கொடுமைகளை பார்க்க சகிக்காமல் விலகி ஓடிவிடுவாள்.
தந்தையை போல் எப்போதும் பிரச்சனைகளை கண்டு ஓடும் குணம் அவளிற்கு!
இங்கு நடக்கும் அநீதிகளையும் கண்களில் கருப்புத் துணி கட்டி வாழ பழகிக் கொண்டாள்.
இதே வேளை முகிழ்மதியோ கண்ணாடியின் முன்பு நின்று தன் உருவத்தை வெறித்து பார்த்திருந்தாள்.
அவளிற்கு தன்னை நினைத்து அவமானமாக இருந்தது.
துயரம் அவளது உடலின் ஒவ்வொரு அணுவையும் சிதைத்துக்கொண்டிருந்தது.
அவளின் மனசாட்சியே ‘நீயெல்லாம் இத்தனை அடியையும் உதையையும் வாங்கிட்டு எதுக்கு உயிரோடு இருக்கே?நீயெல்லாம் உலகத்தில் வாழறதுக்கு தகுதியில்லை…செத்துப்போடி’ என்று அருவருப்புடன் காறி உமிழ்ந்தது.
வாழவும் வழியில்லை…வாழ்வை முடித்துக் கொள்ளவும் அவளிற்கு துணிச்சலில்லை.
‘அவள் ஏன் உயிருடன் இருக்கிறாள்?யாருக்காக வாழ்கிறாள்?எதற்காக வாழ்கிறாள்?’ இப்படி பலவகையில் தன்னையே கேள்விக்கேட்டும் அவளிற்கான பதில் மட்டும் கிடைக்கவில்லை.
உயிர் வாழ்வதற்கான பிடிப்பே இல்லாமல் வேர் அறுந்த கொடி போல் நின்றிருந்தாள் அவள்.
நேற்றைய நிகழ்வு அவளை அப்படியே நொறுக்கியிருந்தது.
மெதுவாக கால் புறமாக குனிந்து அணிந்திருந்த சேலையை தூக்கியவள் “ஸ்ஆ” என வலியில் அலறினாள்.
அவளின் வெண்ணிற முழங்காலில் ஒரு பெரிய தீ காயம்!
தோசை கரண்டியால் அவள் தாய் வரைந்த வண்ணக்கோலம் அது!
காயத்திற்கு மருந்திடாமல் அது பார்ப்பதற்கே விகாரமாய் காட்சியளித்தது.
பட்டம்மா இருந்திருந்தால் அவளிற்கு மருந்திட்டிருப்பார்.
இங்கு அவருமில்லை…சில நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு தனது கர்ப்பமான மகளை கவனிக்க சென்றிருந்தார்.
அதனால் அவளின் காயம் கூட மருந்திட ஆளின்றி கேட்பாரற்று அனாதையாய் குமுறியது.
இப்போது அந்த காயத்தில் கட்டியிருந்த சேலை உரசியதினால் உண்டான ரணம் உயிர் போகும் வலியை கொடுத்தன.
கண்களிலிருந்து கண்ணீர் வரும் போல் ஒரு உணர்வு!
ஆனால் அழுவதற்கு நீரின்றி வறண்டிருந்தது அவளின் சரீரம்.
நேற்றிலிருந்து அழுதழுது சரீரத்திலிருந்த மொத்த நீரும் காலியிருக்க,அழக்கூட தேம்பில்லாமல் அந்த காயத்தையே வெறித்து பார்த்திருந்த பாவையவளின் நெஞ்சத்தில் மரண பிணி!
உடலின் வலிமை கூட பொறுத்துக்கொள்வாள்.ஆனால் அந்த காயத்தை கொடுத்ததிற்காக அவர் எடுத்துரைத்த காரணம் அவளை உயிரோடு சாய்த்தது.
ஆம்,வீருக்கும் அவளிற்குமான புனித பந்தத்தை கொச்சைப்படுத்தி பேசியதோடு,அதற்கு தண்டனையும் வழங்கியிருந்தார்.
தமையன் ஸ்தானத்தில் உள்ளவனோடு சேர்த்து வைத்து பேசினால் எந்த ஒரு பெண்ணிற்கு தான் ஏற்றுக்கொள்ளமுடியும்?
அதிலும்,அவளின் பெண்மையை இழிவுப்படுத்தி பேசி,அவளிற்கு காயத்தை கொடுத்திருந்தார்.
அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை அந்த சின்னஞ்சிறு இதயத்தால்!
வெறுமையான உள்ளத்தோடு அவள் காயத்தை ஆராய்ந்து கொண்டிருக்கும் போதே “ஏன்டி முகிழு…உள்ளுக்க என்ன செய்யறே?தயாராகிட்டயா இல்லையா?மாப்பிள்ளை வூட்டுக்காரங்க வந்திட்டாங்க…வாடி” என கதவை தட்டிக்கொண்டே கத்தினார்.
அவருக்கு பதில் கொடுக்க கூட அவள் உடலில் தெம்பில்லை.
தொண்டைக்குழியிலிருந்து குரலும் எழவில்லை.
அதனால் சேலையை இழுத்துவிட்டு மெதுவாக விந்தி விந்தி நடந்துக் கொண்டே கதவை திறந்தாள் முகிழ்மதி.
கதவை திறந்த அடுத்த கணமே “வாயிலே என்ன கொல்லுகட்டையா வைச்சிருக்கே…வாயை திறந்து பதில் சொல்லறதுக்கென்ன?” என அவளின் நெற்றியிலே ஒரு தட்டுத்தட்டினார்.
“தயாராகிட்டியா இல்லையாடி?” என சிடுசிடுப்பாக கேட்டுக்கொண்டே அவளை மேலிருந்து கீழாக அளவிட்டார்.
இளஞ்சிவப்பு நிற பட்டுப்புடவையில் மிதமான ஒப்பனையில் அவள் தயாராகியிருந்தாள்.
அவளின் அழகை காண்பதற்கே காண கண்கோடி வேண்டும்.ஆனால் அவளின் கண்ணிலோ சிறிதும் ஜீவனில்லை.
அவளின் அழகு அவரின் அடிவயிற்றை வெந்து நொந்துப்போக செய்தது.
‘என்ன பண்ணாலும் இவ அழகு மட்டும் குறைய மாட்டிக்குது…ம்க்கும்’ என நொடித்துக்கொண்டவர் “ரெடியாகிட்டியா சரி வா” என உதாசீனமாக கூறி திரும்பினார்.
படீரென்று அவளின் புறம் திரும்பியவர் “அடியே முகிழு…அப்புறம் இன்னொரு விஷயம்?பார்க்கற எவன்ட்டியாவது நீ இளிச்சிட்டு நிக்கறதை பார்த்தேன்…பிள்ளையே வேணாம்னு மண்ணோடு மண்ணாக்கிடுவேன்” என பல்லை கடித்து அவர் அடிக்குரலில் எச்சரிக்க,அவளிற்கு பயத்தில் ஒரு கணம் உயிரை உடலை விட்டு நீங்கி மீண்டும் வந்தது.
அது அவளின் உடல் அதிர்வில் தெரிய ‘அது’ என திமிராக பார்த்தவர் “சரி வாடி” என அவளின் கையை பிடித்து தரதரவென இழுத்துச்சென்றார்.
அவளிற்கோ காலில் உண்டான காயத்தால் நடக்கவே முடியவில்லை.
அதை வெளிப்படுத்தினால் அதற்கும் தன்னை நோகடிப்பார் என்றெண்ணி வலியை இதழ்கடித்து பொறுத்துக்கொண்டாள்.
ஆயினும்,அந்த காயம் அவளின் நடையை சோர்வாக்கியது.
“வேகமா நடக்க தெரியாதா?வெரசா நடடி” என்று அதற்கும் திட்டு விழுந்தது.
ஒருவழியாக பல விதமான வசைப்படலங்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கியதற்கு பிறகே அவளிடம் ஆராத்தி தட்டு ஒப்படைக்கப்பட்டன.
“நான் கூப்பிடும் போது வந்தோமா ஆராத்திய எடுத்தோமான்னு திரும்ப வந்திட்டு இருக்கணும்…அதை விட்டுட்டு அங்க யாருக்கிட்டயாவது கொஞ்சி குலாவிட்டு இருந்தே…அவ்வளவு தான்…” என மிரட்டியே அவளை அங்கு செல்ல அனுமதித்தார்.
*************
மணமகள் அறை,
அறைக்குள் இருந்த சந்திரமதியின் அலைப்பேசி திடீரென்று ஒலித்தது.
அதிலும்,தெரியாத ஒரு எண்ணிலிருந்து அவளிற்கு அழைப்பு வரவும் அவள் அழைப்பை ஏற்றாள்.
“ஹலோ…யாரு பேசறீங்க?” என சந்திரமதி குழப்பமாக கேட்கவும்,
“அதுக்குள்ள என்னை மறந்திட்டியா மதி டார்லிங்” என எதிர்புறமிருந்து ஒரு குரல் கேட்டதும்,பட்டென்று மெத்தையிலிருந்து எழுந்து அமர்ந்துவிட்டாள் சந்திரமதி.
“ஹ…ரி..ஷ்” என அவள் திக்கி திணறி அழைக்க,
அவனோ கடகடவென சிரித்து “அட பரவாயில்லை என்னை ஞாபகம் வைச்சிருக்கியே…நான் கூட என்னை மறந்திட்டியோன்னு நினைச்சேன்…” என்றான் நக்கலாக.
சந்திரமதிக்கு முகமெல்லாம் வியர்த்து வழிந்தாலும் அதை சமாளித்து “ஹரிஷ் என்னை மிரட்டறதை இத்தோடு விட்டுரு…எனக்கு கல்யாணமாகப்போகுது…இனிமேல் எனக்கு கூப்பிடாதே” என துணிச்சலாக கூறி அலைப்பேசியை துண்டிக்க முனைந்தாள்.
அவனோ “கட் தானே தாராளமா பண்ணு பேபி…இன்னும் இரண்டு நிமிஷத்திலே நம்ப இரண்டு பேரோட ஃபோட்டோவை இந்த உலகமே பார்க்கும்” என குரோதத்துடன் மிரட்டியதும் அவளின் முகம் பயத்தில் வெளிறிப்போனது.
அவள் கட்டி வைத்திருந்த கனவுக்கோட்டை அவனால் நொறுங்கிப்போவதில் அவளிற்கு சிறிதும் விருப்பமில்லை.
அதிலும்,அவளின் கற்பு சபையின் முன்பு கூறுப்போடுவதையும் அவள் விரும்பவில்லை.
அவனை நேசித்ததை தவிர அவள் வேறு எந்த குற்றமும் செய்யவில்லை.
அவளின் இமையோரம் நீர் துளிர்க்க “உனக்கு இப்போ என்ன தான்டா வேணும்?ஏன் இப்படி டார்ச்சர் பண்ணறே” என இயலாமையுடன் வினவ,
“அப்படி வா தங்கம் என் வழிக்கு” என நினைத்ததை சாதித்த மகிழ்ச்சி அவன் குரலில் தாண்டவமாடியது.
அவளிற்கு இப்போதே அவனை கொல்லும் வெறி வந்தாலும்,அவனை கொன்றுவிட்டு தன் எதிர்காலத்தை கெடுத்துக்கொள்ள அவளிற்கு சிறிதும் விருப்பமில்லை.
அதனால் அவள் மௌனம் காக்க “செல்லம் நீ என்ன பண்ணறே?இப்போவே மண்டபத்துக்கு பின்னாடி ஒரு தோட்டம் இருக்கு…அங்க வா” என கூற,
“அங்கியா அங்க எதுக்கு?” என குழப்பமாக கேட்க,
“அங்க வந்தால் உனக்கே தெரியப்போகுது வா பேபி…உனக்கு ஒரு அரை மணி நேரம் தர்றேன்…அதுக்குள்ள வந்திடணும்..
வரலைனா….” என எகத்தாளமாக சிரித்துக்கொண்டே அழைப்பை துண்டித்தான்.
அவள் இடிந்துப்போய் மொத்தமாய் அமர்ந்துவிட்டாள்.
வேறு ஊருக்கு தப்பி சென்றுவிட்டால் அவன் அமைதியாகிவிடுவான் என்று எண்ணியிருக்க,இப்போது நடந்ததோ வேறாக இருந்தது.
அவனை பல முறை தவிர்க்க நினைத்தாலும் புது புது வழியில் வந்து அவளிற்கு இம்சை கொடுத்தான்.
அவன் ஒரு பைத்தியக்காரன் என்று அவள் அறிவாள்.
அவன் சொன்னதை செய்யவில்லை என்றால் அந்த பைத்தியக்காரன் எது வேண்டுமானாலும் செய்வான் என்று அறிந்து ‘என்ன செய்வது?’ என அறியாமல் தவித்துக்கொண்டிருந்தவள், ஏதேச்சையாக அருகிலிருந்த கண்ணாடியில் தன் விம்பம் கண்டாள்.
உடனே கண்ணாடியை சில வினாடிகள் ஆழ்ந்து ஊன்றியவளின் மூளையில் புது திட்டம் ஒன்று உதியமாக அவளின் முகம் பளீச்சிட்டது.