சர்வம் 2

உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு விதத்தில் யாரேனும் ஒருவர் ஆறுதலளித்து துணையிருக்க,ஆனால் இங்கு ஒரு பெண் புறாவோ சிறக்கொடிந்து மண்ணில் வீழ்ந்த ஜீவனாய் மூச்சடைக்க துடித்துக் கொண்டிருந்தது.

தனக்கென்று இருக்கும் ஒற்றை ஜீவனையும் பறிக்கொடுத்துவிட்டு ஆதரவின்றி வீட்டிற்குள்ளே முடங்கி கிடந்த பெண்ணவளின் நிலையில் அக்கறை கொள்ள உறவினர் என்று எவருமில்லை.

தனது தமையனை இழந்த சோகத்தில் இத்தனை நாட்களில் தான் வாழும் ஆசையை கூட இழந்தவளாய் ஊண்,உறக்கம் அனைத்தையும் தொலைத்து பெற்றோரின் புகைப்படத்தின் முன் அமர்ந்து ‘என்னை உங்களுடனே கூட்டிக்கொண்டு செல்லாமல் ஏன் எதற்காக இந்த பூமியில் தனித்து விட்டுச் சென்றிருக்கிறீர்கள்?’ என வாழ்வில் பிடிமானமின்றி விரக்தியுடன் எண்ணி வெறித்து பார்த்திருந்தாள் அவள்.

சர்வத்மிகா என்னும் பெயருக்கு ஏற்றாற் போன்று சர்வமும் அவளிற்கு அவளே என்று ஆகிப்போனாள் கடந்து வந்த நாட்களில்!

தன்னுடைய பதினைந்தாம் அகவை வரை மனதிற்குள் எந்த வித கவலையுமின்றி அளவுக்கு மீறிய மகிழ்ச்சியுடன் பெற்றோரின் அரவணைப்பின் கீழ் அடைகாத்து வளர்க்கப்பட்ட சுட்டிப்பெண்.

ஆனால் ஒரே நாளில் அவளின் வாழ்வை ஒட்டுமொத்தமாக சுருட்டி,சுனாமியால் சுழன்றடிக்க விதி காத்திருந்ததை அந்த சிறுமி அப்போது அறியவில்லை.

வீட்டிற்குள் மகிழ்ச்சிக்கு துளியும் பஞ்சமின்றி ஒரு இளவரசியாக துள்ளி திரிந்த அதே இல்லத்திற்குள் இவ்வாறு தன்னுடைய கால்கள் இரண்டும் இழந்து முடமாகி மற்றவரின் உதவியை நாடும் நிலைக்கு தள்ளப்படுவதை முன்பே அறிய நேர்ந்திருந்தால் அத்துணை சந்தோஷமாக இருந்திருக்க மாட்டாளோ?

ஒரு திருமணத்திற்காக ஏற்காடு வரை தங்களுடைய மகிழுந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த அந்த அன்பான குடும்பத்திற்குள் இப்படியான கோர விபத்து நடக்கும் என்று எதிர்ப்பார்த்திராத‌ சமயத்தில் அந்த இனிமையான குடும்பத்தின் இன்பத்தை வேரோடு பிடிங்கிச்செல்ல வேண்டி விதி சரக்குந்து ரூபத்தில் காலனை அனுப்பி வைத்திருந்தது போலும்!

இவர்களது பயணம் இருள் சூழ்ந்திருந்த அதிகாலை நேரம் என்பதினால் உறக்க கலக்கத்துடன் சரக்குந்து ஓட்டுனர் வண்டியை செலுத்திக் கொண்டு வர,எதிர்ப்பாராத திருப்பத்தில் சரியாக வந்துக்கொண்டிருந்த இவர்களது மகிழுந்துவின் மீது மோதிவிட,அவர்களின் வாகனமோ மலைசரிவில் போடப்பட்டிருந்த தார் சாலையில் தலைகீழாக உருண்டோடியது.

சமப்பரப்பில் இந்நிகழ்வு ஏற்பட்டிருந்தால் உடனடியாக சக்கரத்திருப்பியையும் தடுப்புக்கருவியையும் பயன்படுத்தி வண்டியின் செயல்பாட்டை தடுத்து நிறுத்தியிருக்கலாம்.

ஆனால் இதுவோ மலைச்சரிவான பகுதி என்பதினால் சரக்குந்து இடித்த வேகத்தில் ஓட்டுனரின் இருக்கையில் அமர்ந்திருந்த சர்வத்மிகாவின் தந்தையினால் மட்டுமின்றி வாகனமும் தன்னுடைய முழுகட்டுப்பாட்டையும் இழந்துவிட்டது.

இறுதியாக,ஒரு பெரிய மரத்தில் மோதி வாகனத்தின் சுழற்சி நின்றுவிட்டப்போதிலும்,வண்டி பந்துப்போல் உருண்டோடிய விதத்தினால் வாகனம் அப்பளம் போல் நசுங்கி உள்ளிருக்கும் ஆட்களின் உயிர் கேள்விக்குறியானது.

சர்வத்மிகாவின் தமையன் மற்றும் தாய் பின்னிருக்கையில் அமர்ந்திருந்ததால் வாகனம் தடம் பிரண்ட வேளையில் நடக்கவிருக்கும் விபரீதத்தை சடுதியாக யூகித்த அந்த அன்னையுள்ளம் மகனை காப்பாற்றும் பொருட்டு கதவை நோக்கி அழுத்தம் கொடுத்து அவனை ஆவேசமாக தள்ளிவிட,அவர் எண்ணியது போலவே அந்த பதினேழு வயது வாலிபன் சுரேஷ் வாகனத்தின் கதவை திறந்து வெளியே சுருண்டுப்போய் மலைமுகட்டின் ஓரம் சருகுகளுக்கு இடையே மயங்கி விழுந்துகிடந்தான்.

தாயின் உள்ளத்திற்கு சற்றும் சளைத்தது அல்ல தாயுமானவனின் இருதயம் என்பது போல் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த தந்தையும் தன்னுயிரை கிஞ்சித்தும் மதியாமல் தங்கள் பூ மகளை காப்பாற்றும் பொருட்டு அவரும் மனைவியை பின்பற்றி மகளை காப்பாற்றினார்.

ஆனால் அவர்கள் முற்றிலும் எதிர்ப்பாராத விதமாக சாலையினோரம் ஒதுங்கிப்போய் விழவேண்டிய மகள் சரியாக உருட்டிவிடப்படாததினால் சாலையிலிருந்து சற்று உட்புறமாக விழுந்து வைத்தாள்.

அதனால் அவர்களின் வாகனத்தை விபத்துக்குள்ளாக்கிய சரக்குந்து சரிவில் வந்துக்கொண்டிருந்ததால் அதனை தாண்டி முந்திச் செல்லும் பொருட்டு அசுரவேகத்தில் வந்த வேறொரு மகிழுந்துவின் சக்கரம் ஒன்று சர்வத்மிகாவின் காலின் மீது ஏறிச் சென்றதினால் தரையில் எப்போதும் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் பெண்ணவளின் கால்கள் இரண்டும் பறிப்போனது.

அச்சமயம் அந்த பேதையும் மயக்கமடைந்திருந்ததால் அவளிற்கு நேர்ந்த அந்த கொடூர தாக்குதலை பற்றி அறியாமலே போனது அந்த சின்னஞ்சிறிய சிட்டு.

ஆனால் மகளுக்கு நேர்ந்த கொடூரம் அறியாமலே பெற்றெடுத்த பிள்ளைகள் இரண்டையும் காப்பாற்றிய திருப்தியோடு தாய்,தந்தை இருவரின் இன்னுயிரும் இம்மண்ணுலகை விட்டு பிரிந்துச் சென்றிருந்தது.

அச்சின்னஞ்சிறு சிட்டுவின் சிறகை முறித்த அந்த வாகன ஓட்டியோ கண்முன்னால் நடந்த அகோரமான விபத்தில் பேரதிர்ச்சியாகி அவர்களின் நிலை அறியா பதட்டத்தில் ‘எங்கு தான் காவலரிடம் மாட்டிக்கொண்டு உண்மை நிலவரம் அறிந்து காலம் முழுவதும் சிறையில் இருப்போமோ?’ என்று அஞ்சி அவசரமாக தன் வாகனத்தை ஓட்டிக்கொண்டுச் சென்றுவிட்டான்.

ஆனால் மனித மனங்களில் இருக்கும் இரக்கம் இன்னும் உயிருடன் இருக்கிறது என்பது போல் அந்த சரக்குந்துவை இயக்கி வந்த வாகன ஓட்டியின் கண்முன் நிகழ்ந்த அந்த கோர சம்பவம் அவ்வப்போது வந்து அவரை இம்சித்தது.

அதன் பலனாய்,தன்னுடைய தவறினால் ஏற்பட்ட விபத்திற்கு தானே முழுப்பொறுப்பையும் ஏற்று காவல் நிலையத்திற்கும்,கூடவே அருகிலிருக்கும் மருத்துவமனைக்கும் அழைத்து விபரம் தெரிவித்து செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை பெற்றார்.

விபத்து நடந்தது புலராத அதிகாலை நான்கு மணி வேளை என்பதினால் காவலர்களும் அவசர ஊர்தியும் மலையேறி வர சிறிது தாமதமானதால் அச்சிறுப்பெண்ணின் உடலில் இருந்து குருதி ஏகத்திற்கும் வெளியேறியிருந்தது.

அதனால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து இரண்டு வார சிகிக்சை பிறகே கண்விழித்தாள் சர்வத்மிகா.

சிரம் மற்றும் காலில் பலத்த காயத்துடனும் உடலெங்கும் ஆங்காங்கே ஏற்பட்ட பலமான சிராய்ப்புகளினாலும் வலி உயிர்ப்போக பல்லைகடித்தவளின் கண்ணோரம் கண்ணீர் வழிந்தது.

அச்சமயம் அவளின் அருகே தமையன் சுரேஷ் மட்டுமே சொல்லில் அடங்காத வேதனையுடன் சிரத்தில் மெல்லியதான வெள்ளை கட்டுடன் அமர்ந்திருப்பதை வைத்தே நடந்திருக்கும் விபரீதத்தை அறிந்தவளால் துக்கத்தை அடக்க முடியாமல் விம்மி வெடித்து கதறியழ தொடங்கி விட்டாள்.

அவளது குறை பூதாங்கரமாக எழுந்து விஸ்வரூபம் எடுத்து பெண்ணவளை மிரட்டியது‌.

அதனால் விளைந்த அவளின் கதறல் அங்கிருந்த செவிலியரின் மனதையே ஆட்டிப்படைத்தது என்றால்,சுரேஷோ முகம் இறுக அழும் தங்கையை தேற்றக்கூட தோன்றாமல் பார்வையை எங்கோ திருப்பி அமர்ந்திருந்தான்.

அதற்கு காரணம்,இத்திருமணத்திற்கு செல்ல வேண்டாம் என மறுத்த தந்தையிடம் பிடிவாதம் பிடித்து நிச்சயம் போக வேண்டும் என கட்டாயப்படுத்தி அழைத்து வந்தது சர்வத்மிகா என்பதினால்,அவளால் தான் தன் பெற்றோரை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது என்பதினால் அவளின் மீது அடிமனதில் வெறுப்பு மட்டுமே மண்டியிருந்தது.

ஆனால் இறக்கும் தருவாயில் அவர்களின் தாய் “கண்ணா சர்வாவை பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு” என்று இறுதியாக கூறிய வாசகம் மட்டுமே அவனின் தங்கை தற்போது உயிருடன் இருப்பதற்கு காரணமானது.

பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறக்கவேண்டிய நிலையில் பெற்றவர்களை இழந்து பொறுப்புள்ள ஆண்மகனாய் தந்தை சேர்த்து வைத்திருந்த பணத்தை கொண்டு தன்னுடைய படிப்பை தொடர்ந்தவனுக்கு தங்கையை பற்றிய அக்கறை துளியுமில்லை.

அதேசமயம் அவளை ஒரேயடியாக ஒதுக்கியும் விடாமல் அவளிற்கு தேவையான பணிவிடைகளை செய்வதற்கு ஒரு பணிப்பெண்ணை நியமித்தான்‌.

ஆரம்பத்தில் தாய் தந்தையினரின் இறப்பில் மூழ்கி துயரத்தில் தவித்துக் கொண்டிருந்தவளிற்கு சகோதரனின் ஒதுக்கத்தை பற்றி அனுமானிக்க முடியவில்லை என்றப்போதிலும் காலப்போக்கில் தன்னுடைய வேதனையிலிருந்து மீண்டு வந்தவளிற்கு அவனின் நடவடிக்கையில் தெரிந்த வித்தியாசத்தை நன்றாகவே உணரமுடிந்தது.  

தன்னுடைய பாரத்தை அவன் மீது சுமத்தியதால் வந்த சினம் என்று அவளாகவே தவறான காரணத்தை யூகித்து தன்னை தானே வறுத்திக்கொண்டு பணிப்பெண்ணை வேண்டாம் என்று கூறி தன்னுடைய வேலையை தானே செய்துக்கொள்ள முனைந்தாள்.

ஆனால் மற்றவரின் உதவியின்றி எதுவும் செய்யமுடியாத காரணத்தினால் தன் விதியை நொந்துக்கொண்டு பணியாட்களின் உதவியை நாட வேண்டிய நிலைமையை அறவே வெறுத்தாள்.

சர்வத்மிகா இயல்பாகவே துணிச்சலான பெண் என்றப்போதிலும் பெற்றோரின் இழப்பு,சகோதரனின் புறக்கணிப்பு,உறவினர்களின் அனுதாப பார்வை மற்றும் பள்ளியில் மாணவர்களின் கேலி அனைத்தும் அவளின் சிறிய இதயத்தை ரணமாக்கியது.

அத்தோடு அந்த வீட்டில் இருக்கும் மற்ற உயிரற்ற பொருட்களை போல் தன்னை நடத்தும் சகோதரனின் பாராமுகம் அவளை மிகவும் வருத்தினாலும்,காலங்கள் உருண்டோட அனைத்தையும் சகித்துக்கொண்டு வாழ பழகினாள்.

இதுநாள் வரை தன்னை வெறுத்து முகம் திருப்பியப்போதிலும் அவனுக்கான கடமையை செய்வதில் இருந்து ஒரு நாளும் தவறியதில்லை என்பதே அவளிற்கு பெரும் ஆறுதலாய் இருந்தது.

அத்தோடு தனக்கென்று ஒரு உறவு இருப்பதே அவளிற்கு போதுமானதாக இருப்பதினால் நெஞ்சுரத்தை வரவழைத்து படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினாள்.

அவ்வாறு இருப்பினும் அவர்களுடைய தந்தை சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள் முழுவதும் கரையத்தொடங்கிய வேளையில் தான் சுரேஷிற்கு தங்களது எதிர்காலத்தை பற்றிய கவலை வரத்தொடங்கியது.

‘குந்தி தின்றால் குன்றும் மாளும்’ என்பதற்கு ஏற்ப சுரேஷ் கல்லூரியில் இரண்டாவது வருடம் படிக்கையில் அவர்களுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட வேறுவழியின்றி தங்கையிடம் ‘இந்த வீட்டை விற்றுவிடலாம்’ என்று கூறியதற்கு பிறகே தங்கள் இருவரது நிதி நிலைமையே சர்வாவிற்கு சிறிது சிறிதாக புரியத்தொடங்கியது.

மனதில் பெரும் பாரமேற “அண்ணா இதுக்கு மேலே அப்பா சேர்த்து வைச்ச காசு எதுவுமில்லையா?” என்றாள் கலக்கத்துடன்.

அவனோ உணர்ச்சியில்லாத குரலில் “அப்பா, அம்மா பேரில் போட்டிருந்த இன்ஸ்சுரன்ஸ் பணத்தை வைச்சு தான் இத்தனை நாள் ஓட்டினோம்… இப்போ அதிலிருந்து இரண்டு லட்சம் தான் மீதியிருக்கு… அது என்னுடைய அடுத்த இரண்டு வருட படிப்பிற்கும் வீட்டு செலவிற்கும் சரியாக இருக்கும்…ஆனால் உன்னுடைய படிப்பிற்கான செலவிற்கும் நர்ஸிற்கும் தேவையான பணத்தை தருவதற்கு இந்த பணம் போதாது… குறைந்தது மூன்று லட்சத்திற்கு மேல் தேவைப்படும்” என பட்டென்று கூறிவிட,

தான் இந்த வீட்டிற்கு வேண்டாத பொருள் என்றாலும் தனக்காக ஒன்றை யோசித்து செய்த தமையனின் வார்த்தையில் மனதிற்குள் சிறிது இனிமை பரவிய அதேவேளையில் ‘உனக்கு தான் நிறைய வீண்செலவு செய்ய வேண்டி இருக்கிறது’ என்ற சலிப்பு வெளிப்படையாய் தமையன் கூறிய சொற்களில் இருப்பதை அறிந்து மனதில் கசப்புணர்வும் தோன்றியது‌.

அதனால் ஒரு கசந்த முறுவலை கொடுத்தவள் “அண்ணா நம்ப அப்பா அம்மா ஞாபகமா அவங்க வாழ்ந்த வீட்டை விற்காதே…வேண்டுமென்றால் நான் இனிமேல் ஸ்கூலிற்கு போகவில்லை…அதேமாதிரி அந்த நர்ஸையும் வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிடு…என்னோட வேலையை நான் செய்ய பழகிக்கிறேன்…இனியும் நான் யாருக்கும் பாரமாய் இருக்க விரும்பவில்லை” என்றாள் தொண்டையடைக்க.

முகம் ஜிவ்வென்று சிவக்க பல்லைகடித்து “சர்வா ஏற்கனவே நான் செம்ம கடுப்பில் இருக்கேன்…நீயும் தேவையில்லாததை பேசி என்கிட்ட வாங்கி கட்டிக்காதே…உன்னை இங்க யாரும் பாரமா நினைக்கலை முதல்ல அதை புரிஞ்சுக்கோ.நீ என் தங்கச்சி… ஒரு அண்ணனா உனக்கு தேவையானதை செய்யவேண்டிய கடமை எனக்கு இருக்கு.ஆனால் இப்போ சந்தர்ப்பம் சரியில்லை.அவ்வளவு தான்” படபடவென பொரிந்து தள்ளியவன், அவளின் முன் ஒரு கோப்பை நீட்டி “சரி நீ சொன்ன மாதிரி இந்த வீட்டை விற்கலை…ஆனால் இந்த வீட்டை அடகு வைச்சா தான் நம்மால் இரண்டு வருஷம் சமாளிக்க முடியும்…வேற வழியில்லை.வீட்டு மேலே கடன் வாங்கிறதுக்கு உன் கையெழுத்து வேணும்…போடு…இன்னும் இரண்டு வருஷம் தான்…அதுக்கு அப்புறம் நான் வேலைக்கு போயிட்டால் இந்த வீட்டை மீட்டிடலாம்…நமக்கு எந்த பிரச்சனையும் வராது” சிறிது தன்மையாகவே கூறிய தமையனை விழி விரித்து பார்த்த பெண்ணவளின் மனமோ ‘அண்ணன் நம்மை ஒரேயடியாக ஒன்றும் வெறுத்துவிடவில்லை’ என ஆறுதலாய் எண்ணி மகிழ்ச்சியடைந்தது.

அதன்படி அவன் காட்டிய இடத்தில் எல்லாம் கையொப்பமிட்டாள் சர்வத்மிகா.

தான் நினைத்ததை பெற்றுக்கொண்ட சுரேஷ் அன்றைய நாட்களுக்கு பிறகு அவளிடம் சில வார்த்தைகள் உரையாட தொடங்கியிருந்தான்.

ஏனெனில் தங்கையின் முகம் வாடியிருந்த விதமும் தன்னுடைய பாசத்திற்காக ஏங்கும் அவளின் வார்த்தைகளும் கண்டு மனமிறங்கினான்.

அதில் அத்தனை மாதங்களாய் அவளது மனதில் இருந்த மனக்கசப்பு முழுமையாய் குறைய ஆரம்பித்துவிட,தன்னுடைய பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்தினாள்.

அச்சமயத்தில் காலம் வேகமாக உருண்டோடியதில் சுரேஷிற்கு படிப்பு முடிந்து ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்துவிட,அவர்களது துன்பமனைத்தும் தீர்ந்து விடும் என்று இவள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் முன்பு இருந்ததற்கு முற்றிலும் எதிர்ப்பாராத விதமாக அவனது நடவடிக்கையில் மாற்றங்கள் வரத்தொடங்கியது.

மீண்டும் தன்னிடம் எறிந்து விழத்தொடங்கிய தமையனின் செய்கைகள் அவளை காயப்படுத்தியது என்றால்,அவனது செயலில் தோன்றிய மாறுதல்கள் அந்த சிறுப்பெண்ணை நிலைக்குலைய வைத்தது.

இரவு வெகு நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு வருவது,சில நாட்களில் மது அருந்திவிட்டு நிதானம் தவறி சுய உணர்வின்றி இருப்பது,அத்துடன் தவறான நபர்களின் சகவாசம் என அவளை கதிகலங்க செய்திருந்தது.

மேலும்,அந்த இழிவான தோழர்கள் நடமாட முடியாத பெண் என்று கருணை காட்டாமல் அவளிடம் தவறாக நடந்துக்கொள்ள துணியும் பொழுது அதனை தடுக்கக்கூடிய நிலையிலின்றி எந்நேரமும் ஒரு வித மயக்கத்திலே உடன்பிறந்தவன் திரிவதை கண்டவளிற்கு உள்ளுக்குள் பக்கென்று இருந்தது.

அதில் அச்சம் கொண்டு அவனிடம் பேச முயற்சித்த வேளையில் “நீயே நொண்டி உன்கிட்ட எவன் டி தப்பா நடந்துக்கிறான்?” என அவளை வார்த்தையால் கொன்று புதைத்தவன் “என் ஃப்ரெண்ட்ஸை பத்தி நல்லா தெரியும்…நீ உன் வேலையை பாரு” என முகத்தலடித்தாற் போன்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான்.

தன்னை பிடிக்காத தமையனாகியப்போதும் ஒழுக்கத்தில் சிறந்தவனாய் திகழ்ந்தவனின் செயல்முறை அவளை அடியோடு கலக்கமுற செய்ததோடு, மற்றவர்களுக்காக உடன்பிறந்த சகோதரியை பற்றி துளியும் அக்கறையின்றி பேசுவதை கேட்டவளிற்கு மனதிற்குள் உதிரம் கொட்டியது.

தன்னுடைய கற்பை தானே காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கல்லூரி விட்டு வந்தவுடனே தன்னுடைய அறையினுள்ளே புதைந்து கிடந்தாள்.

இப்போதெல்லாம் சகோதரனுடன் வரும் அந்த நபர்களின் பார்வையில் இருந்த காம வெறியும் தன்னை மேலிருந்து கீழாக உடலில் அலைப்பாயும் துகிலுரியும் பார்வையையும் பார்த்ததற்கு பிறகு அவளின் மனம் பெரும் திகிலுடன் தற்காத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்து வலையொளியின் வழியாக தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள ஆரம்பித்ததோடு,கூடவே தன்னோடு உயிரற்ற ஆயுதங்கள் சிலதையும் அறைக்குள் வைத்துக்கொண்டாள்.

இந்நிலையில் கல்லூரியின் இரண்டாவது வருடம் அடியெடுத்து வைத்திருந்த நிலையில் தான் அவளது தமையன் அன்று அவசரமாக தங்கையை கூட்டிக்கொண்டு விமானநிலையத்திற்கு சென்றுக்கொண்டிருந்தான்.

அப்போது தான் ஆட்டோக்காரனிற்கும் சுரேஷிற்கும் வாய் தகராறு ஏற்பட்டு அது கொலை செய்யும் அளவு வெடித்திருந்தது.

தமையனை குருதி வெள்ளத்தில் பார்த்த அடுத்த நொடியே மூர்ச்சையாகிப்போனவள் கண்விழித்து பார்க்கையில் தன்னுடைய வீட்டில் அநாதரவான நிலையில் மெத்தையில் அமைதியாக வீற்றிருந்தாள்.

‘தான் எவ்வாறு அவ்விடத்திலிருந்து வீட்டிற்கு வந்தோம்?எதற்காக அந்த ஆட்டோ ஓட்டுனர் தமையனை கொன்றான்?தமையனின் கரத்தில் துப்பாக்கி எங்கிருந்து வந்தது?துப்பாக்கி ரவை உடலை துளைத்ததினால் சுரேஷின் நிலை என்னவானது?’ என்ற கேள்விகள் எதுவும் அவளின் மனதை ஆக்கிரமிக்காமல் விழிப்பு வந்தவுடன்,உடனடியாக எழுந்து அமர்ந்தவளிற்கு கண்ணிலிருந்து நீர் சரசரவென வழிய தொடங்கியது.

நிச்சயம் தமையனை நினைத்து அவளிற்கு கண்ணீர் வரவில்லை.

ஒருவருக்காக சிந்தும் கண்ணீர் கூட விலைமதிப்பானது என்பதை அறிந்திருந்த பெண் உள்ளத்திற்கு பிடிமானமில்லாத தன்னுடைய வாழ்க்கையை எண்ணி சுயப்பட்சாதாபத்தில் மனம் கலங்கிட,அது கண்ணீராய் வெளிப்பட்டது.

தேவையின்றி வீண் வாக்குவாதங்களாலும் தேவையற்ற செயலாலும் இன்று தன்னுயிரை பலிக்கொடுத்தது மட்டுமின்றி தங்கையின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி சென்றிருந்தவனிற்காக சிந்தும் சிறிதளவு கண்ணீர் கூட வீணானது என்பதுப்போல் அன்றைய நாட்களுக்கு பிறகு தமையனின் நிலையை பற்றி கூட எண்ணி பார்க்க விளையவில்லை.

ஆயினும்,இதுநாள் வரை தன்னை ஒரு தமையனாய் சரியான பாதையில் வழிநடத்தவில்லை என்றப்போதிலும் தனக்கென இருந்த ஒரு உறவும் இந்த உலகத்தில் இல்லாமல் சென்றதோடு,இதற்கு மேல் தன்னுடைய வாழ்க்கை பாதையை எவ்வாறு அமைத்துக்கொண்டு செல்வது என்ற அச்சம் விஸ்வரூபம் எடுத்திட,முதல் முறையாய் அவளின் மனதிற்குள் அபாய மணியடித்திட ‘இதற்குமேலும் இந்த மண்ணில் என் உயிர் இருக்க வேண்டுமா?’ என்ற வினா பூதாங்கரமாக எழுந்து நிற்க,அவளால் எந்த வித உறுதியான முடிவிற்கும் வர இயலாமல் தவியாய் தவித்துக் கொண்டிருந்தாள்.

பெற்றோரை இழந்த அந்த நான்கு வருடங்களில் ஒரு நாள் கூட தன்னுயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்று அவள் எண்ணியதில்லை.

ஏனெனில் அவளது தந்தை அடிக்கடி ‘தற்கொலை செய்துக் கொள்வது கோழைத்தனம்’ என சிறு வயதிலிருந்தே கூறி வளர்த்ததினால் அதனை பற்றி ஒரு நாளும் சிந்தித்தது இல்லை.

தமையனிற்கு பாரமாக இருக்கிற காலத்தில் கூட இந்த வீட்டிலிருந்து சென்று தனக்கென இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்று தன் வாழ்வை பார்த்துக்கொள்ள வேண்டும் என எண்ணினாளே தவிர,ஒரு நாளும் வாழ்வை மறுத்து இறக்க வேண்டும் என்று யோசனை செய்தது இல்லை.

இந்த வீட்டில் வேண்டாத தங்கையாய் இருந்தப்போதிலும் ஒரு நாளும் தன்னுடைய தேவையை நிறைவேற்ற தவறாத தமையனின் இழப்பு அவளின் மனதிற்குள் அதிகமாய் வலித்தப்போதிலும்,அதைவிட எந்த வித உறவும் இல்லாமல் தனிமையில் இந்த ஒரு வீட்டை மட்டும் வைத்து ‘என்ன செய்யவேண்டும்’ என்ற எந்த தகவலும் அறியாமலும், ’வாழ்வில் அடுத்து என்ன?’ என்ற சிந்தனையும் இல்லாமல் நெஞ்சம் முழுவதும் விரவிய துயரத்தோடு தாய் தந்தையினரின் புகைப்படத்தின் முன்பு அமர்ந்து அவர்களையே வெறித்துக்கொண்டிருந்தாள்.

பத்தொன்பது வயதிற்குள்ளாகவே வாழ்வில் அனுபவிக்க முடியாத வலிகள் அனைத்தையும் சந்தித்து போராடி உயிர்ப்புடன் இருந்தவளிற்கு உச்சக்கட்ட அதிர்ச்சியை அளிப்பது போல் இந்த வீட்டின் மேல் தமையன் வாங்கிய கடன் தொகையை திருப்பி அளிக்காத காரணத்தினால் இவர்களின் வீட்டை வங்கி நிர்வாகமே எடுத்துக்கொள்ள போவதாக ஒரு அறிவிப்பு கடிதம் ஒன்று வந்திருப்பதை அறிந்து தலையில் இடி இறங்கிய உணர்வில் பேரதிர்ச்சியடைந்தாள் பாவையவள்.

தான் உயிர் வாழ்வதற்கென தனக்கென இருந்த ஒரு பற்றுக்கோலும் இன்று இல்லை என்று தெரிய வருகையில் ஒரு சிறு பெண்ணால் அண்ட சராசரத்தையே கட்டியாள நினைக்கும் மனித மிருகங்களிடமிருந்து அவளை தற்காத்துக்கொள்ள இயலுமா??

இருப்பினும்,தந்தையின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு மனம் தளராமல் துணிச்சலுடன் வெகுண்டெழுந்தவள்,தன் தந்தையின் தோழர் ஒருவரின் உதவியுடன் தாய் தந்தையினரின் நினைவாக இருக்கும் இந்த இறுதி சின்னமான வீட்டையும் விற்று அதன் மூலம் கிடைத்த பெரும் தொகையை கொண்டு வங்கியின் கடனை திருப்பியளித்தவள் மீதிமிருக்கும் காசுகளை தன் கையோடு எடுத்துக்கொண்டு எதிர்காலத்தை நோக்கி பயணத்தை மேற்கொள்ள தீர்க்கமான முடிவெடுத்தாள்.

கால் போன போக்கில் நடப்பதற்கு அவளிற்கு வெள்ளி கொலுசுகள் அணிந்த பாதங்கள் இயக்கத்தில் இருக்க வேண்டும் அல்லவா?

அதனால் தன்னுடைய குடும்பத்தினரின் புகைப்படத்தையும் தனக்கென உரிய உடைகளையும் மட்டும் தன்னுடைமைகளாக எடுத்துக்கொண்டு எங்கு செல்லப்போகிறோம் என்ற அந்தம் அறியாமலே இறுதியாக தான் வாழ்ந்த வீட்டை ஒருமுறை திருப்பி பார்த்து கண்ணீருடன் விடைக்கொடுத்து தந்தையின் தோழர் ஒருவரின் உதவியுடன் வாடகை மகிழுந்துவில் ஏறிக்கொண்டாள்.

உறவினர்கள் என்று இருக்கும் எவரிடமும் உதவி தேடிச் செல்ல மனம் விரும்பாததால் யாரிடமும் கூறாமலே வண்டியில் ஏறி அமர்ந்த அடுத்த வினாடியே வண்டி புறப்பட்டது.

கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கன்னத்தில் வழிய தன் எதிர்க்கால வாழ்வை எண்ணி அழுதுக்கொண்டிருந்தவளின் இதழ்களோ வேதனையில் துடித்துக்கொண்டிருந்தது.

அவள் எங்கு செல்லவேண்டும் என்று கூறாமலே சரியாக வண்டியை செலுத்திக்கொண்டிருந்த ஓட்டுனர் சேலத்தில் ஒரு பிரபலமான குடியிருப்பு ஒன்றின் முன்பு தன் வண்டியை நிறுத்தி “இறங்கு சர்வத்மிகா” என்றான் கம்பீரமான குரலில்.

அதுவரை துக்கத்தில் கண்ணாடி திரையில் சாய்ந்து எங்கோ வெறித்தப்படி அழுதுக்கொண்டிருந்தவளின் செவியில் நுழைந்து இதயத்தை உறைய வைத்த அந்த குரலுக்கு சொந்தக்காரன் ‘யார்?’ என்பதை அறிந்த பெண்ணவளின் மெல்லிய மேனி தூக்கிவாரிப்போட்டது.

முன்னால் திரும்பி அவனை காண முனைந்த சர்வத்மிகாவிற்கு விழியில் தேங்கியிருந்த நீர் முன்னால் இருப்பவனின் உருவத்தை மறைத்தாலும்,அவசரமாக கண்களை கசக்கிக்கொண்டு தன்னை நோக்கி திரும்பியிருந்த அந்த ஆளை கண்டு ‘நீயா?’ என்று தீச்சுட்டாற் போன்று அதிர்ந்து கதவோடு ஒன்றினாள் சர்வத்மிகா.

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top