சர்வம் 1

நள்ளிரவு பதினொன்று மணியளவில் தெருவெங்கும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி இருக்க,அந்த இரவின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு ஒரு ஆட்டோ ஒன்று சாலையில் பயணித்துக்கொண்டிருந்தது.

அதில் ஒரு இளம் வயது பெண்ணும் ஆணும் யாரோ தங்களை பின்தொடர்வது போல் ஆட்டோவில் ஏறி சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு பரபரப்புடன் சென்றுக் கொண்டிருந்தனர்.

இருளை மீறிய விளக்கொளியை பாய்ச்சிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்த வண்டியில் அமர்ந்திருந்த அந்த இளம் வயது பெண்ணின் பெயர் சர்வத்மிகா.

பார்ப்பதற்கு சிறு பெண்ணை போல் காட்சியளித்தாலும் பத்தொன்பது வயது நிரம்பிய பருவ மங்கை.

எந்த வித ஒப்பனையுமின்றி சாதாரண மஞ்சள் நிற சுரிதாரிலே கொட்டி கிடக்கும் கொள்ளை அழகை கொண்டு பிறந்திருந்தாள்.

அவளிற்கு அருகே அமர்ந்திருக்கும் அந்த ஆண்மகன் அவளுடன் பிறந்த ஒரே சகோதரன் சுரேஷ்.

தாய் தந்தையை இழந்து தமையனின் கண்காணிப்பின் கீழ் வளர்ந்து வருவதினால் அவனை தவிர உறவு என்று கூறுவதற்கு அவளிற்கு ஒருவருமில்லை.

தற்போது தமையனின் முகத்திலிருந்த வழக்கத்திற்கு மாறான பதட்டம் ‘எதுவோ சரியில்லை’ என்று பெண்ணவளின் உள்ளுணர்வை எச்சரித்தது.

அதனால் அவனிடம் புருவம் சுருக்கி “அண்ணா நாம் இவ்வளவு வேகமாக எங்க போறோம்?” என்று குழப்பமாக அருகிலிருந்த சுரேஷிடம் வினவ,

அவனோ வண்டியிலிருந்து தலையை வெளியே விட்டு சுற்றுப்புறத்தை நோட்டமிட்டு இருந்தவன் தங்கையின் கேள்வியில் அவள் புறம் திரும்பி “சர்வா மும்பையில் எங்க கம்பெனி சார்பாக ஒரு முக்கியமான அவசர மீட்டிங் ஒண்ணு நடக்கவிருக்கு…மேனேஜர் என்னை அதில் கலந்துக்கொள்ள சொன்னார்…அதுக்குதான் நாம் போயிட்டு இருக்கோம்” என்று கூறிய தமையனின் குரலில் நிஜம் இருப்பதாக பெண்ணவளிற்கு தோன்றவில்லை.

கண்ணிற்கு முன்பு விழுந்த சுருள் முடியை தூக்கி செவிமடலிற்கு பின்னால் சொருகி “உன்னோட மீட்டிங்கிற்கு என்னை எதுக்கு அண்ணா கூட்டிட்டு போறே?” என சந்தேகமாக வினவியவளை கண்டு மனதிற்குள் ‘நீ இவ்வளவு புத்திசாலியா இருந்திருக்க வேணாம்’ என உள்ளுக்குள் மூண்ட எரிச்சலை மறைத்துக்கொண்ட சுரேஷ்,

“சர்வா எந்த கேள்வியா இருந்தாலும் பிளைட்டில் ஏறி உட்கார்ந்ததற்கு பிறகு கேளு…இப்போ கொஞ்சம் வாயை மூடி தூங்கு” என்றான் பொறுமையை இழுத்துப்பிடித்து.

அதில் அவளின் முகம் சுருங்கி பார்வையை வெளியே திருப்பி இருளை வெறித்தாலும் தங்களை சூழ்ந்திருக்கும் ஆபத்திற்கு நிதானமாய் தங்கையை சமாதானம் செய்வதற்கான சாத்தியம் தற்போது இல்லை என்பதினால் மீண்டும் சாலையை நோட்டம் விட ஆரம்பித்தான் அந்த கோபக்கார சகோதரன்.

அந்த ஆட்டோக்காரானோ அவன் தலையை வெளியே அரை முழத்திற்கு நீட்டுவதை முன்னாலிருந்த கண்ணாடியினூடே பார்த்துவிட்டு “இதோ பாரு அண்ணாத்தே!தலைய உள்ளுக்கு நீட்டு…உம்பாட்டுக்கு தலைய வெளிய நீட்டி எவனாவது கீச்சுட்டு போனாக்க என்ன போலீஸ் ஸ்டேஷனில் குந்த வைச்சு நொக்கறதுக்கா?கம்முனு உள்ள உட்காருய்யா கசுமாலம்” என சென்னை தமிழில் பெரும் அதட்டல் ஒன்றை போட,

இவனோ அதில் கடுப்பாகி “யோவ் அந்த கீச்சறதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்…முதல்ல வண்டியை நேரா பார்த்து ஓட்டுய்யா” உள்ளுக்குள் இருக்கும் அச்சம் அவனை காரணமின்றி அவ்வாறு எறிந்து விழ வைத்தது.

பல்லைக் கடித்து ‘இவன் வண்டியில் ஏறினது தப்பா போச்சு.வாய் தான் எட்டூருக்கு பேசுதே ஒழிய வண்டி ஆமை வேகத்தில் நகருது…உண்மையா இது வண்டியா இல்லை தகரடப்பாவானு தெரியலை’ என தலையிலடித்து முணுமுணுத்தவாறே அலைப்பேசியை எடுத்து யாருக்கோ தகவல் அனுப்பினான்.

அவன் முனகியதை கேட்ட அவன் தங்கை சர்வத்மிகாவோ ‘தன்னிடம் கடுமையாக நடந்துக்கொண்டாலும் என் அண்ணன் இவ்வாறு பார்ப்பவரிடத்தில் எல்லாம் கோபம் காட்டுபவன் கிடையாதே’ என‌ புருவம் சுருக்கி சிந்திக்க,சூழ்நிலை அவனை இவ்வாறு கோபம் கொள்ள வைத்திருப்பதை பெண்ணவள் அறியவில்லை.

அதற்குள் ஆட்டோக்காரன்‌ வண்டியை நிறுத்திவிட்டு சுரேஷின் புறம் திரும்பி ஆட்டோ மீட்டரின் மீது ஒற்றை கையை தோரணையாக வைத்து தீட்சண்ய பார்வையோடு நிதானமான குரலில் “தோ பாரு அண்ணாத்தே!நீ என்னைய என்ன வேணா சொல்லிக்க…ஆனாக்க என் ஆட்டோவை எதுனா சொன்னே ராத்திரி சமயம்னு கூட பாக்காமே வண்டிலிருந்து இறக்கிவிட்டுட்டு போயிட்டே இருப்பேன்” என விரல் நீட்டி வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசி எச்சரித்தவனை கண்டு கடுப்பாகினான் சுரேஷ்.

‘காசுக்காக ஆட்டோ ஓட்டுற நாயுக்கு இந்த எகத்தாளமா?’ என ஆணவத்தோடு எண்ணி அலைப்பேசியிலிருந்து பார்வையை உயர்த்திய சுரேஷின் முகம் கோபத்தில் செக்க செவேலென ஜொலித்தது.

“என்னய்யா ஓவரா துள்ளுறே?என்னை இறக்கிவிட்டு உன் வண்டி இங்கிருந்து ஒரு இன்ச் நகர்ந்திடுமா?நீயா நானா பார்த்துக்கலாமா?” என இவனும் கைமுஷ்டியை முறுக்கிக்கொண்டு எகிற,

சண்டைக்கு இழுக்கும் அந்த பாவனை ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஓட்டுனரின் ஆண்மையையும் சீண்டிவிட,கழுத்து நரம்புகள் புடைக்க பதிலுக்கு இவனும் சட்டையின் முதல் இரண்டு பொத்தானை அவிழ்த்துவிட்டு தோளுக்கு மேலேற்றி பல்லைக் கடித்தவன் “தோ பாரு வேணாம்…என்கிட்ட வைச்சுக்காதே, நம்ப ஏரியாவில் வந்து கேட்டு பாரு ஐயா இதுவரை பண்ண சம்பவத்தை விளக்கி விலாவாரியா நம்ப பசங்க சொல்லுவாங்க…இன்னா வரீயா?” என திமிராக பேசி சண்டைக்கு இழுத்தவனை கண்டு கொலைவெறியானான் மற்றவன்.

ஆனால் இரு ஆண்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட பெண்ணவளிற்கோ அச்சத்தில் முகமெல்லாம் வியர்த்து வழிய தொடங்கியது.

‘இப்போது என்ன நடக்கிறது?’ என்று ஒன்றும் புரியாமல் கைகளை பிசைந்து மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தாள்.

‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பது போல் தங்கையின் அச்சமறியாத சுரேஷோ வெடுக்கென்று மற்றவனின் சட்டை காலரை கொத்தாக பற்றி உறுத்து விழித்தப்படி “என்னடா சம்பவம் சம்பவம்னு உதார் விட்டுட்டு இருக்கே?உன்னோட பெரிய பெரிய சம்பவமெல்லாம் பார்த்தவன் நானு…ஏறி மிதிச்சேன்னு வை…ஒரே உதையில் குறுக்கெலும்பு உடைஞ்சிடும்” அவனிற்கு ஈடாக தரம் தாழ்ந்து வார்த்தைகளை உதிர்க்க,பதிலுக்கு வாகன ஓட்டியும் சண்டையிட இங்கு ஒரு குட்டி கலவரமே வெடித்தது.

சாதாரண உரையாடலில் ஆரம்பித்த இவர்களின் வீண் வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றிப்போய் கை கலப்பு என்னும் அளவிற்கு சென்றது.

அதில் மனமுடைந்த அந்த சிறுப்பெண் சர்வத்மிகா முதன்முறையாக அவளது கண் முன் தமையன் இழிவான வார்த்தைகளை பிரயோகிப்பதை கண்டு கழிவிரக்கத்துடன் “அண்ணா பிளீஸ் வேணாம்” என கண்ணில் நீருடன் இறைஞ்ச,

அவளை ஆத்திரத்தோடு பார்த்த சுரேஷ் “சும்மா இருடி…எப்போ பாரு என்னோடு பிசின் மாதிரி ஒட்டிக்கிட்டு நைய்யு நைய்யுனு…இவனை மாதிரி ஆட்களையெல்லாம் உண்டு இல்லைனு பண்ணிடணும்” என்றவன் வண்டியோட்டியை ஆவேசத்தோடு அடிக்க செல்ல,அவர்களை விலக்க நினைத்தாலும் முடியாமல் தனது இயலாமையை எண்ணி வண்டியினுள்ளே புழுவாய் துடித்துப்போய் அமர்ந்திருந்தாள் சர்வத்மிகா.

தனது சகோதரன் தன் பேச்சை கேட்கவில்லை என்ற இயலாமையில் தன்னையே நொந்துக்கொண்டவளிற்கு‌ இத்தனை வயதானதிற்கு பிறகும் மற்றவர்களின் உதவியை எதிர்ப்பார்த்து இருக்கும் தன் நிலையை எண்ணி மௌனமாய் கண்ணீர் சிந்தினாள்.

ஏனெனில் சிறு வயதில் நடந்த விபத்து ஒன்றினால் மான் குட்டியாய் துள்ளி திரிந்தவளின் கால்கள் இரண்டும் செயலிழந்துப்போயின.

கால் முட்டிக்கு கீழே எந்த வித உணர்ச்சியுமில்லாமல் இருப்பதினால் அவளால் எழுந்து நடக்க முடியாது.

காலம் முழுவதும் அந்த சின்னஞ்சிறு பறவையின் வாழ்க்கை சக்கர நாற்காலி தான் என்பது இறைவன் விதித்த சாசனம்!!

தன்னுடைய உடல் உபாதைகள் முதற்கொண்டு அன்றாட பணிகளை செய்வதற்கு கூட மற்றவரின் உதவியை நாட வேண்டிய தன் இழிநிலையை எண்ணி பாவையவள் ஒவ்வொரு நாளும் துடித்துக்கொண்டிருந்த இந்நிலையிலும் தனக்கே உரிய தன்னம்பிக்கையுடன் தான் நாட்களை கடத்திக்கொண்டிருந்தாள்.

பெண்ணவளிற்கு தன்னால் நடக்கமுடியாது என்ற நிதர்சனத்தை கூட ஏற்றுக்கொள்ள முடிந்தவளால், மற்றவரின் பரிதாபமான பார்வைகளும் இரக்கமும் அவளால் சிறு துளியளவு கூட ஏற்கமுடியாது.

அதைவிட மற்றவரின் கேலி பார்வைகள் அவளை மனதினோரம் ஒடுங்க வைத்தாலும் துவண்டு போகாமல் உலகத்திலுள்ள ஒவ்வொரு நயவஞ்சகம் படைத்தவர்களிடமும் எதிர்த்து போராடிக் கொண்டிருந்தாள்.

ஆரம்பத்தில் தன் குறை அறிந்து சுயபட்சாதாபத்தில் மனதளவில் மட்டுமின்றி உடலளவிலும் ஒடுங்கிப்போனவளிற்கு மற்றவரின் உதவி வேப்பங்காயாய் கசந்திட செய்ததோடு அதீத சினத்தையும் உருவாக்கியிருந்தது.

ஆனால் காலப்போக்கில் ‘இது தான் என் வாழ்க்கை…இதை ஏற்று தான் ஆகவேண்டும்’ என்று அவளிற்குள்ளே புது வைராக்கியம் பிறக்க,தன்னுடைய உடல் ஊனத்தை ஒரு குறையாக நினையாமல் மற்றவர்களை போல் சாதாரணமாக இருக்க பழகிக் கொண்டாள்.

ஆயினும்,இதுப்போல் அமையும் கடும்சூழ்நிலையில் தான் அவளின் பலவீனத்தின் வீரியம் வெளிவந்து இதயத்தில் உயிர் வலியை உருவாக்கி அவளது குறையினால் உண்டான கையாலாகாதத்தனத்தை தெரியப்படுத்தும்.

‘நீ மற்ற மனிதர்களை போல் சாதாரணமானவள் இல்லை…உலகத்தில் வாழ தகுதியற்ற குறையுள்ளவள்’ என்பதை தலையில் சம்மட்டியால் அடித்து புரிய வைக்கும்.

இப்போதும் அந்த மாதிரியான ஒரு கொடூம் சூழலில் ஆட்பட்டிருந்த சர்வத்மிகா சுரேஷிடம் “அண்ணா சொன்னால் கேளு…வேண்டாம் பிளீஸ்” என அந்த வாகனத்திலிருந்து இறங்க முடியாமல் தவித்தாள்.

சகோதரனோ அதை ஒரு பொருட்டாக கூட மதியாமல் “சம்பவம் பண்ணுவேன்னு சொன்னியே இப்போ பண்ணுடா” என அந்த ஓட்டுனரை சீண்டி வம்பிழுக்க,

ஆட்டோக்காரனும் தனது புஜங்களை இறுக்கிக்கொண்டு “இருடா வரேன் உங்க அப்பன் மவனே…இன்னைக்கு உன் குடலை உருவி மாலையா போட்டுக்கலை…நான் ஒரு அப்பனுக்கே பொறக்கலை” இவ்வாறாக இருவரும் தரையில் உருண்டு பிரளாத குறையாக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள வாழ்க்கையில் நடக்க முடியாமல் போன தன் நிலையை லட்சமாவது முறையாக எண்ணி சுயப்பட்சாதாபத்தில் கண்ணீர் வழிய “அண்ணா பிளீஸ் வேணாம்” என அழுகையோடு கூக்குரலிட்டு கெஞ்சினாள்.

அத்தோடு உருவத்தில் சுரேஷை விட முறுக்கிய மீசையுடன் ஆறடி இரண்டு அங்குல சற்றே பெரிதான உயரத்தில் முரட்டுத்தனமான தோற்றத்துடன் இருந்த வாகன ஓட்டியின் ஒவ்வொரு அடியும் இடி மாதிரி சுரேஷின் மீது விழுவதை கண்டு ‘ஐய்யோ…இப்படியே போனால் எனக்காக இருக்கும் இந்த உறவும் நிலைக்காது’ என மிரண்டுப்போனாள்.

‘சாட்சிக்காரனின் காலில் விழுவதை விட சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்’ என யோசித்து,

தமையன்‌ தன் சொல் கேட்கவில்லை என்ற தவிப்புடன் ஆட்டோ இருக்கையின் நுனிவரை உந்தி வந்து தலையை வெளியே நீட்டி கண்ணில் தாரை தாரையாக நீர் வழிய சற்றே உரத்த குரலில் “ஆட்டோக்கார அண்ணா பிளீஸ் நீங்களாவது என் பேச்சை கேளுங்க…சண்டை வேணாம்” என‌ இருகரம் குவித்து இறைஞ்ச,

அவளது தமையனை விட அவனது நெஞ்சில் சிறிது ஈரம் இருந்திருக்க வேண்டும்,அதனால் சண்டையை நிறுத்திவிட்டு களைந்திருந்த சட்டையை இழுத்து சரி செய்தப்படியே “பாப்பா உன்னாலே இன்னைக்கு உன் அண்ணன் தப்பிச்சான்…ஒழுங்கா இவனை கூட்டிப்போயிடு…இல்லை அடிச்சே சாவடிச்சிடுவேன்” என்றான் சுரேஷை தன் கனல் விழிகளால் முறைத்தப்படி.

தன் சொற்களுக்கு கட்டுப்பட்டு அமைதியாகியவனிடம் “ரொம்ப தேங்க்ஸ் அண்ணா” கண்ணீர் மல்க கரம் கூப்பியவளை கண்டு எரிச்சலடைந்த அவளது தமையனோ அருவருப்புடன் முகத்தை சுழித்து “அடச்சீ வெட்கமாயில்லை…தெருவுலே போற கண்டவனையெல்லாம் அண்ணா-னு கூப்பிடறீயே…அவன் என்ன உன் கூட பொறந்தவனா இல்லை உன் அப்பன் கூ****க்கு பொறந்தவனா?” நஞ்சை அள்ளி வார்த்தையில் தடவி தேய்த்தவனை கண்டு “ஏய்” என அந்த ஆட்டோக்காரன் ஆக்ரோஷமாக அவன் மீது பாயும் வேங்கையாய் பாய்ந்தான் என்றால்,

அவனது தங்கையோ “அண்ணாஆஆஆஆ” அந்த சாலையே கிடுகிடுக்கும் குரலில் அலறி நடுங்கிய கரங்கள் கொண்டு செவிகள் இரண்டையும் பொத்திக்கொண்டாள்.

இத்தனை நாட்களாய் தன்னை வார்த்தையால் மட்டுமே குத்திப்பேசிக்கொண்டிருந்த தமையனின் இதழின் வழியே கக்கிய விஷம் நிஜமா என்பதை நம்ப முடியாத திகைப்பில் நெஞ்சத்தை ஈட்டியில் குத்திய உணர்வில் திக்பிரம்மை பிடித்து சிலையாய் இருந்தாள்.

இங்கோ இருவருக்குமிடையேயான மல்யுத்தம் குருதி கசியும் அளவிற்கு சென்றிருந்தது.

அதற்குள் சுய உணர்விற்கு வந்த பாவையவளிற்கோ தமையனின் மீது ஆதங்கமும் கோபமும் நிரம்பியிருந்த போதிலும் சகோதரனின் முகத்தில் வழிந்த குருதியை கண்டு மனம் தாளவில்லை.

‘தான் ஆடவிட்டாலும் தன் சதை ஆடும்’ என்பது போல் ஒரே தாயின் வயிற்றில் பிறந்து வளர்ந்த சகோதரனின் சிவந்த நிற உதிரம் அவளின் இதயத்தை துடிக்க வைத்தது.

அதனால் ‘கடவுளே!இந்த சண்டையை எப்படியாவது நிறுத்துப்பா’ என அவசர வேண்டுதலை கடவுளின் முன் வைத்தாள் அவள்.

தூய்மையான உள்ளம் கொண்டவளின் வேண்டுதலை இறைவன் கேட்டதன் பலனாய் அச்சமயம் சாலையில் எந்தவொரு வாகனமும் செல்லாமல் வெறிச்சோடி இருந்தாலும் இருளின் நிசப்தத்தை மீறி ஒரு ஆண்மகனின் அபாயகரமான அலறல் குரலும் கூடவே உடலை துளைத்து உயிர்க்குடிக்கும் துப்பாக்கி குண்டின் ஓசையும் காது சவ்வை கிழித்துக்கொண்டுச் சென்று அனைவரின் நெஞ்சையும் உறைய வைத்தது.

எதிர்ப்பாராமல் கேட்ட துப்பாக்கியின் முழக்கமும் கூடவே ஒலித்த ஒரு மனிதனின் கூப்பாடும் சர்வாவிற்கு இதயத்தை தடதடக்க வைத்தது.

அச்சத்தில் விழிகள் விரிய முகத்தில் திகில் படிய நடுக்கத்துடன் உதடு துடிக்க “அ…ண்ணா” என கையை அவன் புறம் நீட்டி அழைக்க,

அவனிற்கும் அதே அளவு மிரட்சி தோன்றியிருக்க வேண்டும் என்பது போல் முகத்தில் பீதியுடன் “யோவ் சீக்கிரம் வண்டியை எடுய்யா” என அந்நேரத்திலும் ஆட்டோகாரனிடம் சிலும்ப,

இப்போது இகழ்ச்சியாக ஒரு புன்னகையை உதிர்த்து கீழே விழுந்து புரண்டதினால் சட்டையில் ஒட்டியிருந்த மண்ணை உதறிக்கொண்டு தடுமாறி எழுந்து நின்றவன் “முடியாது” என அலட்சியமாய் தோளை குலுக்கி பிகு செய்வது அவன் முறையானது.

அத்தோடு அவனது முகத்தில் அச்சம் என்ற உணர்வே சிறிதும் தென்படவில்லை என்பதை பதட்டத்தில் இருந்த இருவரும் கவனிக்கவில்லை.

சுரேஷோ வாகன ஓட்டியின் பதிலில் சர்வ அங்கமும் ஒடுங்கிப்போனாலும் அதை மறைத்து “ஏய் இப்போ வண்டியை எடுக்குறீயா இல்லையாடா?” என தொண்டையை கிழித்து கத்த,

அவனோ ‘முடியாது’ என தலையசைத்து சட்டமாய் நின்றிருந்தவனை கண்டு கடுப்பாகியவன்,இதுவரை தன் துணி பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து முற்றிலும் எதிர்ப்பாராத விதமாக அவனது நெற்றிப்பொட்டில் வைத்து “இப்போ எடு வண்டியை” என மிரட்டியவுடன்,

அதுவரை தூரத்தில் ஒலிக்கும் துப்பாக்கி குண்டின் ஓசையிலே பீதியில் உறைந்திருந்த பெண்ணவளோ தன் தமையனின் கரங்களில் தீடிரென்று முளைத்த ஆயுதத்தை கண்டவுடன் “அண்ணாஆஆஆ என்ன செய்யறே?” என நடுக்கத்துடன் அவனது கரம் பற்றி தடுக்க வர,

“ஏய் சும்மா இரு டி சனியனே” என அவளின் கரத்தை தட்டிவிட்டு அதட்டியவன் ஆட்டோகாரனின் கரத்தை முறுக்கி பின்பக்கமாக மடக்கிவிட்டான்.

சுரேஷின் அலட்சியத்தை பொருட்படுத்தாமல் கடகடவென கண்ணீலிருந்து நீர் வழிய “அண்ணா இதெல்லாம் தப்பு…விடு அண்ணா அவரை” என ஆட்டோவிலிருந்து குதிக்க முடியாமல் உள்ளுக்குள்ளே முட்டி மோதி துடிக்க,

“சர்வா லூசுத்தனமா எதையும் பண்ணி தொலையாமல் ஆட்டோக்குள்ள உட்காரு டி” என்று சீறியவன் வாகன ஓட்டியை பிடித்து இருக்கையில் தள்ளிவிட்டு “ஏய் இப்போ வண்டியை எடுக்கறீயா?இல்லை தலை வெடிச்சு சாகப்போறீயா?” என கூறி நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து அழுத்த,அவனது முகத்திலோ அந்த ஆயுதத்தினால் உண்டான பயம் துளியுமில்லை.

அதேசமயம் வேறு எந்தவித உணர்வுகளும் வெளிப்படவில்லை என்றாலும் குனிந்து வாகனத்தின் இயக்கி பொத்தானை அழுத்த விளைந்தவன்,சட்டென்று யாவரும் எதிர்ப்பாராத வகையில் தன் கரத்தை பின்னோக்கி கொண்டுச் சென்று மின்னல் வேகத்தில் அவன் கரத்தில் இருந்த துப்பாக்கியை தன் கைப்பற்றினான்.

நடக்கக்கூடிய விபரீதம் அறியாமல் தமையனும் தங்கையும் திகிலுடன் விழி விரித்து அதிர்ச்சியில் உறைந்து நின்றிருக்க,அந்த வாகன ஓட்டியோ நொடியும் தாமதிக்காமல் மற்றவனின் தலையில் சரமாரியாக குண்டை இறக்கினான்.

அவனது தலையிலிருந்து குருதி பீய்ச்சி அடித்து அது சர்வத்மிகாவின் முகத்தில் பட்டு தெறிக்க,அவளோ கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த நிகழ்வில் எதுவும் புரியாமல் உலகமே ஸ்தம்பிக்க மயங்கி விழுந்தாள்.

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top