சஞ்சுயுக்தா இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது…ஒரு பெரியவர் தன்னையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருக்கவும் ‘யாரிவர் என்னையே பார்த்து கொண்டே இருக்கார்…அவரைப் பார்த்தால் தப்பானவர் போலவும் தெரியலையே…!!’ என்று புருவம் சுருங்க யோசித்தாள்.
சஞ்சுயுக்தா அவரையே உற்று பார்க்கவும் அவர் தன் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டார்.அதன்பிறகு சஞ்சுயுக்தாவும் தன் கவனத்தைப் புத்தகத்தின் பக்கம் திருப்பினாள்.
சஞ்சுயுக்தா புத்தகத்தில் ஆழ்ந்துப் போய் கொண்டிருக்கும் போது “உன் பெயர் என்னம்மா…??” ஒரு கட்டை குரல் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தாள்.
அந்தப் பெரியவர் தான் அவளைப் பார்த்து அந்த கேள்வியைக் கேட்டிருந்தார்.
அவரை கண்கள் இடுங்க பார்த்த சஞ்சு அவரின் வயதை மனதில் வைத்து தன்மையாகவே “சஞ்சுயுக்தா” என்று பதிலளித்தாள்.
அவர் யோசனையாக “உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கும்மா…உனக்கு சொந்த ஊரு ஈரோடாம்மா…??” என்று தன் அடுத்த கேள்வி கணையைத் தொடுத்தார்.
அதற்கு அவளும் தன்மையாகவே “இல்லை…என்னோட சொந்த ஊரு கோயம்புத்தூர்…!!” என்று பதிலளித்தாள்.
அதற்கு அந்த பெரியவர் “ஓ…” என்று விட்டு மறுபடியும் “சரிம்மா…அப்புறம் உங்க அப்பா அம்மா அண்ணன் தங்கச்சியெல்லாம் எப்படி இருக்காங்க… உங்களையெல்லாம் சின்ன வயசிலே பார்த்தது…இருந்தும் உன் ஜாடையை வைச்சு தான் கண்டுப்புடிச்சேன்…!!” பெருமையுடன் கேட்கவும் சஞ்சுயுக்தாவிற்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.
அவள் எரிச்சலை உள்ளடக்கிய குரலில் “நீங்க வேற யாரோனு நினைச்சி…என்கிட்ட கேட்கிறீங்க…நான் ஒரு அனாதை இல்லத்தில் தான் வளர்ந்தேன்…அதனால் எனக்கு அப்பா அம்மாயெல்லாம் இல்லை…!!” என்று அத்துடன் அவரின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
அவர் ஏதோ பேச வரவும்,அதை கைநீட்டி தடுத்து “எனக்கு தூக்கம் வருது ஆங்கிள்…குட்நைட்…!!” நறுக்கு தெறித்தாற் போல் பதலளித்து தன் துயிலிடத்தில்(berth) படுத்து போர்வையை முகம் வரை இழுத்து போர்த்திக் கொண்டாள்.
அதன்பிறகு அவளுடன் எதுவும் பேசமுடியாமல் அவரும் படுத்துக்கொண்டார்.
சஞ்சுயுக்தாவிற்கு அவர் பெற்றோரைப் பற்றி பேசியவுடன் அவளுக்கு கோபம் வந்துவிட்டது.அதனால் தான் அவரின் பேச்சை வளர்க்காமல் அத்துடன் பேச்சை முடித்துக்கொண்டு படுத்துவிட்டாள்.
இருந்தும் அவளுக்கு மனது ஆறவில்லை.அவளுக்கு தன் பெற்றோர் தன்னை அந்த இல்லத்தின் முன் போட்டு சென்றது.வளரும் போதே அவர்களின் மேல் தீராத கோபத்தோடு தான் வளர்ந்து வந்தாள்.அதுவும் அவள் படிக்கும் பள்ளியில் அவளின் பெற்றோரை வைத்து கிண்டல் செய்வது இன்னும் அவளின் சினத்திற்கு தீனிப்போட்டது போலானது.
அதனால் யார் அவளின் பெற்றோர் பற்றி கேட்டாலும் பேசினாலும் அவளுக்கு கண்ணை மறைக்கும் அளவு கோபம் வந்தது.இப்போதும் அதேபோல் தான்…!!
8 மணி நேர இரயில் பயணத்திற்கு பிறகு அடுத்தநாள் அதிகாலை 4 மணிக்கு வண்டி சென்னையை அடைந்தது.
சஞ்சுயுக்தா சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோ பிடித்து சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு மகளிர் விடுதியை அடைந்தாள்.
அங்கே சென்று ஒரு சின்ன தூக்கத்தைப் போட்டு காலை 10 மணிக்கு எழுந்து உடலை சுத்தம் செய்து தனக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்காக பல்பொருள் அங்காடிக்கு சென்றாள்.
அங்கு சென்று தனக்கு தேவையான பொருட்களை வாங்கிய சஞ்சு காலை உணவை முடித்துக்கொண்டு தனக்கு பொழுது போவதற்காக பக்கத்தில் இருக்கும் பேரங்காடிக்கு(mall) சென்றாள்.
அங்கு சென்றவளின் பார்வை பேரங்காடி முழுவதையும் சுற்றி ஒரு முறை வலம் வந்து பின் அங்கே உணவகத்தின் முன்பு போட்டப்பட்டிருந்த இருக்கையில் நிலைத்தது.
அதில் சென்று அமர்ந்தவளின் கவனத்தை ஒரு இடத்தில் கூடியிருந்த பெண்களின் சலசலப்பினால் ஈர்த்தது.
அங்கே இருந்த இளம் பெண்கள் அனைவரின் பார்வையும் ஒரு இடத்தில் நிலைத்திருந்தது.சஞ்சுயுக்தாவும் அவர்களின் பார்வை சென்ற திசையை நோக்கி தன் பார்வையை ஓட்டினாள்.
அங்கே ஒரு அழகான ஆண்மகனின் கையைக் கோர்த்தவாறு ஒரு இளம்பெண் நடந்து வந்துக்கொண்டிருந்தாள்.தீடிரென்று அந்த பெண் பொது இடம் என்றும் பார்க்காமல் தன் நுனிக்காலில் எக்கி அவனின் கன்னத்தில் தன் இதழைப் பதித்தாள்.
அதைப்பார்த்த சஞ்சுயுக்தா வெறுப்புடன் முகத்தை சுழித்தாள்.அத்தோடு அவளின் மனதில் கனல் மூண்டது.
‘ஒரு பொது இடத்தில் இப்படி நடந்து கொள்கிற அறிவுக்கெட்ட ஜென்மங்கள்.இதையெல்லாம் வீட்டில் போய் வைச்சிக்க வேண்டியதை விட்டுட்டு பப்ளிக்கா குடும்பம் நடத்துவதைப் பாரு…அந்த பொண்ணுக்கு தான் அறிவில்லை…அவனுக்கு எங்க போச்சு அறிவு…அவள் இப்படி செய்ததிற்கு கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு இருக்கணும்…இல்லைனா குறைந்தப்பட்சம் அவளை கண்டித்தாவது இருக்கணும்…அதை விட்டுட்டு இவனும் ஈஈஈஈனு முப்பத்தி இரண்டு பல்லையும் காமிச்சிட்டு இருக்கான்…பொறுக்கி…!!’ யார் என்றே தெரியாதவர்களைப் பற்றி திட்டியவாறு முணுமுணுத்து பற்களைக் கடித்தாள்.
“எக்ஸ்கியூஸ் மீ…!!” என்று தன்னருகில் கேட்கப்பட்ட கம்பீரம் கலந்த சீண்டலான குரலில் தன் பார்வையைத் திருப்ப,அங்கே யாதிஷ் கிருஷ்ணகுமார் கால்சட்டை பையினுள் கைவிட்டு அலட்சியமாக நிற்கவும் அவனைப் பார்த்து ஒரு நொடி தடுமாறினாலும் சடுதியில் தன்னை சமாளித்த யுக்தா “என்ன வேணும் மிஸ்டர்…??” என்று ஒற்றை புருவம் உயர்த்தி திமிராக வினவினாள்.
அதில் கவரப்பட்ட யாதிஷ் முறுவலுடன் அங்கு வந்து கொண்டிருந்த ஜோடியைக் கைகளால் காண்பித்து “நீங்க எதுக்கு அவங்களைத் திட்டனீங்கனு தெரிஞ்சிக்கலாமா…??” என்று நக்கலாக வினவினான்.
யுக்தாவும் அதே நக்கலுடன் “பொது இடத்தில் எப்படி நடக்கணும்னு தெரியாதவங்களை திட்டாமல்…தூக்கி வைச்சு கொஞ்ச சொல்லுறீங்களா மிஸ்டர்…??” என்று கூறி புருவத்தை ஏற்றி இறக்கினாள்.
நீண்ட காலமாக பழகியவர்களைப் போல் இருவரும் சரளமாக பேசி கொண்டிருந்தனர்.அதற்கு காரணம் சஞ்சுயுக்தாவிற்கு ஏற்கனவே தொலைக்காட்சியில் யாதிஷைப் பற்றி அறிந்ததாலும் அதன்பிறகு ஏற்கனவே இந்த கம்பெனியைப் பற்றி தெரிந்துகொள்ள ஒருமுறை சென்னை வந்தப்போது யாதிஷை நேரில் பார்த்திருப்பதினாலும் அவளுக்கு அவன் அந்நியன் என்ற உணர்வே ஏற்படவில்லை.
அதேபோல் யாதிஷீற்கும் அவளைப் பார்த்த உடனே பலகாலமாக அவளை கண்கொண்டு பார்த்த உணர்வு ஏற்பட்டதால் அவனும் தைரியமாக அவளிடம் பேச்சு கொடுத்தான்.அதுவும் அவளைப் பார்த்தவுடனே அவனுள்ளே ஒரு வித சுவாரசியம் எழ வந்ததிலிருந்து அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.
ஏனெனில் அங்கு இருக்கும் பெண்கள் அனைவரும் அந்த ஜோடியை ஒரு பொறாமையுடன் பார்த்து கொண்டிருந்தனர்.ஆனால் அவள் மட்டும் அவர்களைப் பார்த்தவுடன் ஒரு அருவருப்புடன் முகத்தை சுழித்து திரும்பிக்கொண்டாள்.அதுவும் அவள் முணுமுணுத்ததைக் கேட்டவுடன் இந்த காலத்தில் ‘இப்படி ஒரு பொண்ணா’ என்று ஆச்சரியமாக பார்த்தான்.ஏனெனில் இந்த காலத்தில் கன்னத்தில் முத்தம் கொடுப்பதெல்லாம் சகஜம்.ஆனால் அதைப் பார்த்து இவள் முகம் சுழித்து திட்டியவுடன் ஒரு நொடி ஆச்சரியமும் சுவாரசியமும் எழ,அடுத்த நொடி கோபமும் வந்தது.உடனே அவளை நெருங்கி இருந்தான்.
யுக்தா புருவத்தை ஏற்றி இறக்கிய அழகில் கவரப்பட்டாலும் யாதிஷூம் குரலில் நக்கலை தெளித்து “அவங்க எதுவும் வரம்பு மீறி நடந்த மாதிரி தெரியலையே…??லிமிட்டா தானே நடந்துக்கிட்டாங்க…அதுக்கே நீங்க இப்படி திட்டறீங்க…??ஒருவேளை உங்களுக்கு அந்த மாதிரி கிஸ் பண்ண ஆளில்லைனு பொறாமையா இருக்கோ” என்று பதிலுக்கு அவனும் புருவம் உயர்த்தி கேட்டவுடன்,
சஞ்சுயுக்தா பட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து நின்று எரிச்சலுடன் “புல்ஷிட்…அவங்களைச் சொன்னால் உங்களுக்கு என்ன வந்தது மிஸ்டர்…மைண்ட் யுவர் ஓன் பிஸினஸ்…!!” என்று அவனிடம் சீறினாள்.
இப்போது அவனுக்கும் கோபம் வந்தது.அதனால் “அவள் என்னோட சிஸ்டர்…அப்புறம் அந்த பையன் என்னோட பிரண்ட்…இப்போது நான் உங்களைப் பார்த்து கேட்கலாமா…யூ மைண்ட் யுவர் பிஸினஸ்னு…?” என்று அடக்கப்பட்ட சினத்துடன் கேட்டான்.
இப்போது அவளின் முகம் சிறிது கறுத்தாலும் விடாமல் “நீங்க அவளோட அண்ணன்னு வெளியே சொல்லாதீங்க…ஒரு நல்ல அண்ணனாக இருந்தால்…இப்படி ஒரு காரியத்தை தங்கச்சி பண்ணறதைப் பார்த்தால் ஓங்கி ஒரு அறை விட்டு இருப்பான்… ஆனால் நீங்க அதை செய்யாமல் விட்டுட்டு பெருசா என்கிட்ட பேச வந்துட்டீங்க…??” என்று சீறியவள் பின்பு,
மெதுவான குரலில் ‘நீ ஒழுங்கா இருந்த தானே…உன் தங்கச்சியை கேள்வி கேட்பே…?’ என்றும் முணுமுணுத்தாள்.
அதைக்கேட்டவுடன் அவள் கூறியதின் பொருள் உணர்ந்த யாதிஷிற்கு கோபம் தலைக்கேறியது.
கோபத்தில் முகம் சிவக்க “உனக்கு எவ்ளோ திமிரு இருந்தால்…என்னை பத்தி என்கிட்டயே தப்பா பேசுவே…பொது இடம்னு பார்க்கறேன்… இல்லைனா உன்னை உண்டு இல்லைனு பண்ணிடுவேன்…ஜாக்கிரதை…!!” என்று உறுமினான்.
“ஏய்!மரியாதையாக பேசு மிஸ்டர்…இல்லைனா நடக்கறதே வேறே…!!” என்று அவளும் அவனுக்கு சலித்தவளில்லை என்பது போல் பதிலுக்கு உறுமினாள்.
“இல்லைனா என்ன பண்ணுவா…??” என்று நக்கலாக கேட்டு அவளை கண்களால் எரித்தான்.
அதில் கோபத்துடன் அவனை அடிக்க கை ஓங்கியவளின் செயலை யூகித்த யாதீஷ் அவளின் கையைப் பிடித்து தடுத்து “ஏய்!என்ன பழக்கம் ஆம்பிளைக்கிட்ட கை ஓங்கறது…மத்தவங்களை எப்படி மதிக்கணும்னு முதல்ல கத்துக்கோ…இதெல்லாம் என்கிட்ட வைச்சுக்காதே…அப்புறம் நான் வேற மாதிரி ரியாக்ட் பண்ண வேண்டியிருக்கும்…!!” என்று உறும,
சஞ்சுயுக்தா அவனின் பிடியில் இருந்த தன் கையை விடுவிக்க போராடியவாறு “டேய்…கையை விடுடா…இல்லைனா போலீஸ்க்கு போன் பண்ணுவேன்…!!” என்று சீறியவளைப் பொருட்படுத்தாமல்,
யாதிஷ் சற்றும் பயப்படாமல் சுற்றும் முற்றும் பார்த்து “போன் தானே பண்ணு…இந்தா…!!” என்று தன் கைப்பேசியை தானாக முன்வந்து கொடுத்தான்.
அவளும் சலிக்காமல் தன் கைகளைப் போராடி விடுவித்து “இருடா பண்ணறேன்…??” என்று அவன் நீட்டிய கைப்பேசியை விடுத்து தன் கைப்பேசியில் காவல்நிலையத்திற்கு போன் செய்து பேசினாள்.
பேசிவிட்டு நக்கலாக “இரு உன் மாமா…உன்னை கூட்டிட்டு போக வராங்களாம்…??” என்று உதட்டை வளைத்து சிரித்தாள்.
‘ஐய்யோ பாவம்’ என்பதைப் போல் அவளை ஒரு பார்வைப் பார்த்தவன் அதே நக்கலுடன் “உன் மாமா…” என்று ஆரம்பித்தவனை அவள் கண்களால் எரிக்கவும் யாதிஷ் உதட்டோரம் பூத்த சிரிப்புடன்,
“சாரி சாரி…என் மாமா வர வரைக்கும் என்னால் வெயிட் பண்ணமுடியாது…ஏனால் நான் உன்னை மாதிரி வேலை வெட்டி இல்லாதவன்…இல்லை பாரு…” என்று கூறி தனது பாக்கெட்டில் இருந்து விசிட்டிங் கார்டை எடுத்து அவள் கையில் திணித்து,
“என் மாமாவை இந்த அட்ரஸ்க்கு வர சொல்லு இந்தா…கீப் இட் சேப்!!” என்று அலட்சியமாக கூறி அவள் திட்ட வருவதைப் பொருட்படுத்தாமல் அவளை திரும்பி பார்க்காமல் மடமடவென்று அங்கிருந்து சென்றுவிட்டான்.
இருவருக்கும் அது பொது இடம் என்பது நினைவில்லை இல்லை.தங்களை மற்றவர்கள் வித்தியாசமாக பார்ப்பதைப் பற்றியும் அவர்களுக்கு துளியும் கவலையில்லை.
இங்கே இவளுக்கு தான் மனம் முழுவதும் உலைக்களமாக கொதித்து கொண்டிருந்தது.
கோபத்தில் அந்த கார்ட்டை கிழித்து குப்பையில் போட்டவள் “இருடா உன் கம்பெனியிலே வந்து ஜாயின் பண்ணி…உன்னை ஒரு வழி பண்ணலை…என் பேரு சஞ்சுயுக்தா இல்லைடா…!!” என்று மனதில் பழிவுணர்ச்சியுடன் சபதம் செய்தாள்.
ஒரு புயல் தன்னை நோக்கி தாக்க வருவதை அறியாமலும் இப்போது ஒருத்தியிடம் சண்டை போட்டதாக ஞாபகமில்லை என்பதை போலும் யாதிஷ் சந்தோஷமாக காரில் பாட்டு பாடிக்கொண்டே வாகனத்தை வீட்டை நோக்கி செலுத்தி கொண்டிருந்தான்.
செழியனிடம் தொலைபேசியில் பேசிவிட்டு வைத்தவுடன் மகிழாவின் வீட்டில் இங்கே ஒரு மாயான அமைதி நிலவியது.இப்போது பானுமதி அழுது அழுது சிவந்த முகத்துடன் இருந்த மகளின் அருகில் வந்து மண்டியிட்டு அவளின் தலையைத் தடவியப்படியே “மகிம்மா…என்ன நடந்தது…உண்மையைச் சொல்லு…!!” என்று தீர்க்கமான குரலில் வினவினார்.
மகிழா தன் தாயை அடிப்பட்ட பார்வை பார்த்து தவிப்புடன் “என்னை சந்தேகப்படுறீங்களாம்மா…??” என்று உயிரை உருக்கும் குரலில் வினவினாள்.
உடனே பானுமதி பதறி “அப்படி இல்லைம்மா…என்ன நடந்ததுனு தெரிஞ்சிக்கலாம்னு தான் கேட்டேன் …மத்தப்படி உன்னை சந்தேகப்பட்டு இல்லைம்மா…!!” என்று அதற்கு குறையாத தவிப்போடு கூற மகிழா சற்று நிம்மதியடைந்து நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள்.ஆனால் மறந்தும் ஓட்டுனர் தாமதமாக வந்ததைப் பற்றி கூறவில்லை.
உடனே பானுமதி அழுத தன் மகளை பரிவுடன் அணைத்துக் கொண்டு தன் கொளுந்தனாரை ஒரு குற்றம்சாட்டும் பார்வைப் பார்த்தார்.
இதை அனைத்தையும் கேட்ட சுந்தரம் செழியனை நினைத்து பயந்து நடுங்கினார்.
அவன் சொன்னதைச் செய்துவிடுவனோ நாம் தான் தேவையில்லாமல் அவசரப்பட்டுவிட்டோமோ என்று நினைத்தவரின் முகம் பயத்தில் வெளிறியது.
இங்கே செழியனின் கோபம் முழுவதும் மகிழாவின் மீது திரும்பியது.
ஒரு கோபத்தில் அவள் தான் தன் மனைவி என்று கூறினானே ஒழிய மனதில் அவனுக்கு அப்படி ஒரு எண்ணமேயில்லை ‘இனி ஒரு போதும் அவளை மட்டும் சந்திக்கவேக்கூடாது’ என்று உறுதியெடுத்தான்.
ஆனால் அடுத்த நாளே அவளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை அவன் கனவிலும் நினைக்கவில்லை.
மகிழாவின் அப்பா பிரபாகரன் ஊரிலிருந்து வந்தவுடன் அவரிடம் பானுமதி நடந்த அனைத்தையும் கூறினார்.அவருக்கு தன் தம்பியின் மீது கோபம் முழுவதும் திரும்பியது.இருந்தும் கூடப்பிறந்தவனை கண்டிக்க முடியாத காரணத்தினால் வேறு வழியில்லாமல் சாட்சிக்காரனிடம் பேசுவதை விட சண்டைக்காரனின் காலில் விழுவதே மேல் என்று நினைத்து நெடுஞ்செழியனிடம் பேச முடிவெடுத்தார்.
அதன்படி அவனைச் சந்திக்க செழியன் குடியிருக்கும் போலீஸ் குடியிருப்புக்கு சென்றார்.
காலை 6 மணிக்கு எழுந்திருக்கும் மகிழா இன்று 8.30 மணியாகியும் எழுந்திருக்காமல் இருக்க பானுமதிக்கு ஏதோ சரியில்லை என்று மனது படப்படவென்று அடிக்க பயத்துடன் அவள் உறங்கும் அறைக்குள் சென்று பார்த்தார்.
மகிழா அங்கே போர்வையை முகம் வரை மூடிப்படுத்திருந்தாள். போர்வையை இழுத்து பார்க்க அவள் காய்ச்சலில் அனத்திக் கொண்டிருக்கும் மெல்லிய முனகல் ஒலி கேட்கவும் பதட்டத்துடன் அவளின் நெற்றி மற்றும் கழுத்தைத் தொட்டுப்பார்த்தார்.உடம்பு அனல் போல் கொதித்தது.உடனே என்ன செய்வது என்று அறியாமல் வேகமாக சமையல் அறைக்கு சென்றார்.
பானுமதி நேற்று நடந்த நிகழ்வினால் மகிழாவிற்கு உடம்பு சரியில்லாமல் போனது என்று நினைத்து வருந்தினார்.
சமையலறையிலிருந்து தண்ணீரைக் கொண்டு வந்து வெள்ளை துணியை நீரில் நனைத்து நெற்றியில் பத்துப் போட்டார்.நடுவில் அவளுக்கு கஞ்சிக் காய்ச்சி கொடுத்தார்.அரை மணி நேரம் கழித்து நெற்றியைத் தொட்டு பார்த்தார்.அப்போதும் சிறிதளவு கூட உடலின் சூடு குறையாமல் இருக்கவும் என்ன செய்வது என்று தவிப்புடன் கைகளைப் பிசைந்துக் கொண்டிருந்தார்.
ஏனெனில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் இங்கிருந்து 10 கி.மீ காரில் பயணிக்க வேண்டும்.வீட்டில் இருந்த ஒரு காரையும் பிரபாகரன் எடுத்து சென்றுள்ளார்.
இப்போது பதட்டத்தில் பானுமதிக்கு கைகால் எல்லாம் உதற ஆரம்பித்தது.சரி மறுபடியும் பத்து போட்டு பார்ப்போம் என்று நினைத்து மறுபடியும் அதையே செய்து கொண்டிருந்தார்.அப்போதும் அவளின் அனத்தல் சத்தம் நிற்காமல் வந்துக்கொண்டே இருக்கவும்,அவளின் உடம்பின் சூட்டை அறிய எண்ணி தொட்டுப்பார்க்க அது குறையாமல் இருக்க வேறுவழியின்றி தனது கொளுந்தனார் சுந்தரத்தின் வீட்டு எண்ணிற்கு அழைத்தார்.
அங்கேயும் அவர் வெளியூர் சென்றிருக்கிறார் என்ற தகவலே பதிலாக கிடைக்க ஏமாற்றமாக இருந்தது.இப்போது வீட்டில் வேலைச் செய்யும் முனுசாமியை அழைத்து மாட்டுவண்டி கட்ட சொன்னார்.அவனும் “சரிங்கம்மா” என்று பவ்யமாக கூறி வண்டி கட்டினான்.
அதன்பிறகு மெதுவாக மாட்டுவண்டியில் அவளைப் படுக்க வைத்து அவளின் அருகில் அமர்ந்து கொண்டார்.முனுசாமி தன் சின்னம்மாவிற்கு உடம்பு சுகமில்லை என்று வண்டியை “ட்ரா…ட்ரா” என்ற சத்தம் எழுப்பி வேகமாக ஓட்ட ஆரம்பித்தான்.
அங்கே பிரபாகரன் செழியனைப் பற்றி விசாரித்து ஒரு வழியாக அவனது வீட்டை கண்டறிந்து வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார்.அது ஒரு பழங்கால வீடு இருந்தும் மிகப்பெரிய அளவில் நன்றான வசதியுடன் கூடியதாக இருந்தது.
வெளியே சின்னதாக ஒரு தோட்டம் போல் இருந்தது.அது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் கண்களைக் கவரும் வகையில் இருந்தது.அதை ரசித்துக்கொண்டிருக்க,கதவு திறக்கும் ஒலி கேட்டு இங்கே தன் கவனத்தைத் திருப்பினார்.
கதவை திறந்த செழியன் போலீஸ் உடையில் இல்லாமல் ஒரு பச்சை நிற கதர் சட்டையும் காக்கி பேண்டும் அணிந்து இருந்தான்.அவன் ‘இவரை யார்’ என்பது போல் கண்கள் இடுங்க கூர்ந்து ஆராயும் பார்வை பார்த்தான்.அவனின் தோற்றத்தைப் பார்த்து ஒரு நொடி பிரபாகரே தடுமாறினார்.
அதற்கு காரணம் பிரபாகர் பெரிய மீசை வைத்து முரட்டு தனமான தோற்றம் உடையவர்.ஆனால் அவனின் அடர் மீசையும் முரட்டு தனமான தோற்றமும் அதுவும் அவனின் ஆளை ஊடுருவும் பார்வையும்… இவனிடம் எப்படி இந்த விசயத்தைப் பற்றி பேசுவது என்று யோசிக்க அவரின் நெஞ்சு கூட்டில் ஒரு குளிர்ப்பரவியது.
அதற்குள் செழியனே “யார் நீங்க…??” என்று கம்பீரமான குரலில் வினவினான்.
ஒரு நொடி தடுமாறி தன்னை சமாளித்து “நான் பிரபாகரன்… மகிழாவின் தந்தை…!!” என்று கூறியும் அவன் புரியாத பார்வைப் பார்க்கவும் அவர் என்ன சொல்வது என்று யோசிக்கையிலே செழியன் அவரின் பெரிய மனிதர் தோரணையைப் பார்த்து…
“சரி…உள்ளே வந்து சொல்லுங்க…!!” என்று அவரை வரவேற்றான்.
அவரும் தனது காலணியை வெளியில் விட்டு உள்ளே சென்று அவன் காட்டிய நாற்காலியில் அமர்ந்தார்.
வீட்டில் வேலைச் செய்யும் கனகாம்பிகை அம்மாவை அழைத்து அவருக்கு காபி கொடுக்குமாறு ஏவினான்.அவர் “வேண்டாம்” என்று மறுத்தும் அவரைக் காபி குடிக்கச் செய்து தான் விட்டான்.
அவரும் வேறுவழியில்லாமல் குடித்துவிட்டு பேச்சை ஆரம்பித்து நேற்று தனது வீட்டில் நடந்தது அனைத்தையும் கூறியவர் தொடர்ந்து “சாரி தம்பி…என் தம்பி தெரியாமல் பண்ணிட்டான்…அதுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கிறேன்…!!” என்று கையெடுத்து கும்பிட்டார்.
அவரிடம் என்ன சொல்லுவது என்று ஒரு நிமிடம் யோசித்தவன் “பரவாயில்லை விடுங்க சார்…நான் அப்போதே அதெல்லாம் மறந்துவிட்டேன்…அவரும் கொஞ்சம் அதிகமாக பேசினார்…அதனால் தான் நானும் அதிகமாக பேச வேண்டியதாகப் போய்விட்டது…சாரி சார்…!!” என்று இவன் மன்னிப்பு கேட்டவிதமே இவனுக்கு இதற்கு முன்பு யாரிடமும் மன்னிப்பு கேட்டு பழக்கம் இல்லை என்பதை பிரபாகரன் புரிந்துக் கொண்டார்.
அதன்படி அவரும் பெருந்தன்மையாக சிரித்த முகத்துடனே “பரவாயில்லை தம்பி…என் தம்பி மேலே தான் தப்பு…” என்று தப்பை ஒத்துக்கொண்டார்.
அதன்பிறகு இருவரும் சுமூகமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பார்த்து தன் வீட்டு வேலைக்காரன் முனுசாமி வேகமாக ஓடி வருவதைப் பார்த்த பிரபாகரன் எழுந்து வெளியில் வந்து “என்னடா முனுசாமி…??” என்று தனது கட்டை குரலில் வினவினார்.அவரை பின் தொடர்ந்து செழியனும் வெளியில் வந்தான்.
ஓடிவந்தவன் துண்டை எடுத்து தனது அக்கிளில் வைத்து விட்டு குனிந்த தலையுடன் “ஐயா…நம்ம…சி…சின்னம்..மாக்கு மேலுக்கு முடியாமல்…இங்க இருக்கிற டவுன் ஆஸ்பித்…திரியில் சேர்த்…திருக்கோம்மய்யா…!!” என்று ஓடி வந்ததில் மூச்சு வாங்க திக்கி திக்கி பேசி முடித்தான்.
அதைக்கேட்ட பிரபாகரன் பதட்டமடைந்து செழியனிடம் “சரி தம்பி…நான் வரேன்…!!” என்று தவிப்புடன் கூறி அங்கிருந்து விரைந்தார்.
செழியன் அவர் சென்ற திசையை சிறிதுநேரம் பார்த்து கொண்டிருந்துவிட்டு ‘என்ன நினைத்தானோ இனிமே அவளைப் பார்க்கவே கூடாது’ என்று தான் எடுத்த உறுதியான முடிவையும் பொருட்படுத்தாமல் அவனும் தனது புல்லட்டை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டான்.
அங்கே சென்று பார்த்தால் பிரபாகரன் கசங்கிய முகத்துடன் உட்கார்ந்திருந்தார்.அவருக்கு அருகில் அவரது மனைவி பானுமதியும் கண்ணீர் சிந்தியப்படி அமர்ந்திருந்தார்.
செழியன் இவர்கள் இருவரையும் விடுத்து மகிழாவைச் சென்று ஒரு பார்வை பார்க்க அவள் காய்ச்சலில் முகம் சிவக்க முனங்கிக் கொண்டிருக்கவும் மகிழாவைப் பற்றி விசாரிக்க மருத்துவரிடம் சென்றான்.
மருத்துவரிடம் “டாக்டர் ஐயம் நெடுஞ்செழியன்…இப்போ அந்த பொண்ணு எப்படி இருக்காங்க டாக்டர்…!!” என்று வினவினான்.
அவனின் பேச்சு மற்றும் நடையிலே,அவன் ஒரு காவல் அதிகாரி என்று புரிந்து கொண்டார் மருத்துவர்.
“அவங்க ரொம்பவும் பயந்து போய் இருக்காங்க மிஸ்டர் செழியன்… அதனால் தான் இந்த காய்ச்சல் வந்து இருக்கிறது…!!” என்று கூறியவர் தொடர்ந்து ஒரு நிமிடம் தாமதித்து சொன்ன பதிலில் செழியனின் கண்கள் இரண்டும் கோவ்வைப் பழம் போல் சிவந்தது.
அதை நினைக்க நினைக்க அவனின் இரத்தம் கொதித்தது.அதனால் அருகில் இருக்கும் கதவில் ஓங்கி ஒரு குத்துவிட்டான்.
அதனைக் கண்ட மருத்துவர் அவனை கண்டு பயந்து கலக்கம் கொண்டார்.செழியன் கோபத்துடன் மகிழாவின் பெற்றோரை நோக்கி ருத்ரமூர்த்தியின் மறு அவதாரமாய் அவர்களை நோக்கி படையெடுத்தான்.