வாடைக்காற்று 2

யாமினி தன் தோழிகளோடு அரட்டையில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் போது, திடீரென்று அவ்விடத்தில் ஏற்பட்ட சலசலப்பில் கூட்டத்தினர் அனைவரின் பார்வையும் ஒரு சேர திரும்பியது.

அந்த இடத்திற்கு வருகை புரிந்த ஒரு புது முக இளம் இயக்குனரை கண்டு பெண்கள் பலரும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார்கள்.

நான்கு படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் அவரின் அனைத்து திரைப்படங்களும் மெகா ஹிட்.அதனால் தமிழ் திரைப்படங்களில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருகிறான்.

பிரபலமான நடிகர்கள் பலரும் அவனது இயக்கத்தில் ஒருமுறையாவது நடித்துவிட வேண்டும் என்ற வேட்கையோடு அவனையே வட்டமடித்து காத்திருக்கக்கூடிய அந்த திறமையான இயக்குனரின் வருகையால் அவ்விடமே விழாக்கோலம் பூண்டது.

அனைவரும் எழுந்து நின்று அவனிற்கு கைக்கொடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்க,அவனோ எவ்வித தலைக்கனமும் இல்லாமல் அனைவரிடமும் ஒரு புன்சிரிப்போடு பேசிவிட்டு தனக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் சங்கடத்துடன் அமர்ந்தான்.

மேடையில் நின்றிருந்த நாகதேவ்வை கண்டு “வாழ்த்துகள் ஜி” என்பது போல் தலையில் கை வைத்து தோரணையாக வாழ்த்து தெரிவிக்க,அந்த பிரபல திரைப்பட நடிகனும் அவனிடம் அதேப்போல் தலையில் கைவைத்து தோரணையாக நன்றி தெரிவிக்க,அந்த கண்கொள்ளாத காட்சியில் இளம் தலைமுறையினர் அனைவரும் சொக்கிப் போனார்கள்.

குறிப்பாக,மணமேடையில் தனது புது மனைவியோடு நின்றிருந்த நாயகனையும் விட்டு வைக்காமல்,இளம் பெண்கள் வாயை பிளந்து பார்த்திருந்தார்கள்.

அதில் யாமினியின் தோழிகள் மட்டும் விதிவிலக்கல்ல.

பெண்களின் வயிற்றில் பட்டாம்பூச்சியை பறக்க வைத்த அந்த பிரபலமான நபர்களின் மீது அனைவரின் பார்வையும் இருக்க,அந்த கூட்டத்திற்கு சற்றும் பொருந்தாத வகையில் யாமினியின் விழிகள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட நபரின் மீதே நிலைத்திருந்தது.

அவ்விடத்தில் கூடியிருந்த பரபரப்பான பல மனிதர்களை காட்டிலும் எந்த வித பகட்டும் பணக்காரத்துவமுமின்றி எளிமையான உடையில் இளமைக்கு உரிய கம்பீரத்துடன் வெகு சாதாரணமாக நின்றிருந்த இளைஞனை கண்டவளின் இதழ்கள் “இளங்கோ” என முணுமுணுத்து மெல்லியதாக முறுவலித்தது.

அவளது தமையனை திருமணம் செய்துக்கொண்ட பெண்ணின் சகோதரனே இளங்கோவன்.பார்ப்பதற்கு கண் கவரும் வகையிலான அழகை கொண்டிருக்கவில்லையெனினும், பெண்களை ஒரு முறையாவது திரும்பி பார்க்கும் வகையிலான கம்பீரத்தையும் தோரணையையும் கொண்டிருப்பவன்.

அனைவரும் அதிக விலைமதிப்பினாலான உடையணிந்து வந்திருக்க,இளங்கோவோ ‘இது தான் நான்’ என பிரகடனப்படுத்தும் வகையில் அவனது வசதிக்கு ஏற்ப எளிமையான வகையில் அடர் நீல நிற சட்டையும் கருப்பு நிற கால்சராயும் அணிந்து விழாவிற்கு வந்திருந்தான்.

ஆறடிக்கும் இரண்டு அங்குலம் குறைவான உயரம்,காருண்யம் பொருந்திய இரண்டு கண்கள்,அவனது ஆழ் மனதிலிருக்கும் சோகங்களை வெளிக்காட்டாத புன்னகையை அணிகலனாக அணிந்த வதனம்,சிரிப்பை மட்டுமே சிந்தும் அதரங்கள்,அலை அலையான அடர்த்தியான கேசம்,கூரான நாசி,இரண்டு நாள் சவரம் செய்யப்படாத தாடி மற்றும் மீசை,அதிகாலை நேர ஓட்டப்பயிற்சியின் பலனாய் விளைந்த நேர்த்தியான உடல்வாகு என சராசரி ஆண்மகனிற்கு உரிய அத்தனை அம்சங்களும் பொருந்திய கட்டிளம் காளை.

அவன் புன்னகைக்கும் போதும் பளிரீடும் முத்துபற்கள் அவனிற்கு தனி வசீகரத்தை கொடுத்தது.

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன் என்பதால்,அவனது தேவைகளை தானே ஏற்படுத்திக் கொள்ளும் வகையிலான ஒரு பணியில் இருக்கிறான்.

அவனது தாய் சீதாவும்,தந்தை குருசாமியும் வேறு ஊரில் குடியிருக்க,இவன் மட்டுமே சென்னையில் தனித்து ஒரு வீட்டில் தங்கியிருக்கிறான்.

யாமினியின் குடும்பத்தொழிலில் ஒன்றான பல்பொருள் அங்காடியில் மேலாளராக பணிபுரிகிறான்.

ஆனால் அவர்களது நிறுவனத்தில் பணிபுரியும் வேலையாளாக இருப்பினும்,பாண்டியன் குடும்பத்தினர் அனைவரும் அவனை கீழாக நினைக்காமல் உறவினராகவே மரியாதையுடன் நடத்துவார்கள்.

யாமினிக்கு இளங்கோவை சந்தித்து பேசும் வாய்ப்புகள் மிக குறைவு என்றாலும்,எதிர்ப்பாராமல் நேரில் சந்திக்கும் போது இரண்டொரு வார்த்தைகள் பேசி விலகிச்செல்வார்கள்.

அதற்கு மேல் சிறு புன்னகை தவிர இருவருக்குமிடையே எத்தகைய உரையாடலும் நிகழாது.

ஆனால் யாமினிக்கோ இளங்கோவின் நேர்மையும்,தனக்கு குறிப்பிட்ட பணி இது இல்லையென்று எதிலிருந்தும் ஒதுங்காமல் அனைத்து பணிகளையும் இழுத்துப் போட்டு செய்யும் அவனது பாங்கும் எப்போதுமே பிடிக்கும்.

அதனால் இளங்கோவின் மீது ஒரு நன்மதிப்பும் மரியாதையும் இருந்ததினால்,அவனது பாதாதி கேசம் வரை அனைத்தையும் தன்னுடைய ஊடுருவும் விழிகளால் ஒரு முறை கணக்கெடுத்தவள் ‘இளங்கோ இங்க எதுக்கு வந்திருக்கார்?’ என்ற யோசனையோடு புருவங்கள் இரண்டையும் நெறித்தாள்.

மணமகளின் தமக்கை மற்றும் மணமகனின் அண்ணியான குந்தவை இளங்கோவிடம் பேசுவதை கண்டுவிட்டு,அவளை தன் அருகழைத்தவள் “இளங்கோவுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?யார் அக்கா அவர்?” என அவனை பார்த்தவாறே அவளிடம் விசாரிக்க,

அவளோ சிந்தனையோடு “யாமினி இளாவை உனக்கு தெரியுமா?” என யாமினியிடம் பதில் கேள்வி எழுப்ப,

அவளின் ‘இளா’ என்ற பெயர் சுருக்கத்தை மனதில் குறித்துக்கொண்டவள் “அக்கா நான் உங்களை கேள்வி கேட்டால் நீங்க என்னையே திருப்பி கேட்கறீங்களா?நல்லது” என போலியான சினத்தோடு அவளை முறைத்தவள்,

“இளங்கோ என் அண்ணியோட தம்பி…அதுமட்டுமில்லாமல் எங்க பாண்டியன் சூப்பர் மார்க்கெட் எல்லாத்தையும் இவர் தான் பார்த்துக்கிறார்” என அவனை பற்றிய விபரம் தெரிவித்தாள்.

நெற்றி சுருங்க யாமினியை நோக்கிய குந்தவை “ஓ…அப்படியா யாமினி” என்றவளின் முகம் சாதாரணமாக “இளாவோட அம்மா சீதாவும் என் மாமியாரும் ஒன்று விட்ட அக்கா தங்கச்சி…அதுமட்டுமில்லாமல் என்னோட அப்பாவுக்கும் சீதா அத்தை தங்கச்சி முறை வரணும்…அதனால் தான் இளா இந்த ரிசப்ஷனுக்கு வந்திருக்கான்” என்றதோடு நிறுத்தாமல்,

“இளா ரொம்ப நல்ல பையன்…அவனை சின்ன வயசிலிருந்தே எங்க எல்லாருக்கும் தெரியும்…எங்க அப்பா அம்மா கூட என் கடைசி தங்கச்சியை இவருக்கு கல்யாணம் பண்ணி தரலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க” என மேலும் சில தகவல்களை அள்ளி வழங்கினாள்.

அதில் யாமினியின் முகத்தில் அதிர்ச்சி அலைகள் பரந்து விரிந்ததை அறியாத அந்த பெண் ஆர்வமாக “இளாக்கூட…” என அவள் ஆரம்பிக்கும் போதே எங்கிருந்தோ “குந்தவை” என மாமியாரின் குரல் ஓங்கி ஒலிக்கவும்,

தன் பேச்சை நிறுத்திவிட்டு “யாமினி என் மாமியார் கூப்பிடறாங்க…இதோ வந்திடறேன்” என பரபரப்புடன் அங்கிருந்து கிட்டத்தட்ட விழுந்துவிடாத குறையாக ஓடினாள்.

யாமினியோ குந்தவை கூறிய விஷயங்களை கேட்டு திகைப்பில் சிலையாய் சமைந்து நின்றிருக்க,இதயமோ அதிவேகத்தில் படபடத்தது.

‘இளங்கோவோட இந்த கல்யாணம் நடக்கக்கூடாது…நடக்கவும் விடமாட்டேன்’ என உள்ளுக்குள் தோன்றிய தீவிரத்தோடு அரற்றிக்கொண்டிருந்தாள்.

அவளிற்கும் அவனிற்குமான உறவு பூஜ்ஜியமாகினும்,ஏனோ அவனது திருமண செய்தி அவளிற்குள் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது.

தலையை உலுக்கி ‘நோ…நோ…நான் நடக்கவிடமாட்டேன்’ என தனக்குள்ளே உருப்போட்டுக் கொண்டிருந்தவளின் செயலுக்கான அர்த்தம் அவளின் ஆழ்மனம் மட்டுமே அறிந்தது.

அதுவரை யாமினி மற்றும் குந்தவையின் உரையாடலை அமைதியாக கண்டிருந்த தோழிகள்,பெண்ணவளின் முகம் வெளுத்துப்போய் பேயறைந்தது போல் நின்றிருந்த விதம் கண்டு “யாமி என்னாச்சு?ஆர் யூ ஓகே?” என பல குரல்கள் செவியில் ஊடுருவி இதயத்தில் அதிர்வை ஏற்படுத்தியதற்கு பிறகே நிகழ்விற்கு வந்தாள்.

தோழிகள் தன்னை மிரட்சியோடு கைகள் பிசைய பார்த்திருப்பதை கண்டதற்கு பிறகே தன்னுடைய நிலைப்பாட்டை அறிந்தாள்.

அதனால் தன் மனதிற்குள் இருந்த பதட்டத்தை மறைத்து “யா…ஐயம் ஓகே” என சிரித்து மழுப்பியவள் “கைஸ் டைமாச்சு…இதுக்கு மேலே டிரிங்க்ஸ் பார்ட்டி ஆரம்பிச்சிடும்…நம்ம சாப்பிட்டு கிளம்புவோம்…வாங்க” என அவசரமாக மொழிந்து,அவர்கள் இளங்கோவை பற்றி மேற்கொண்டு எந்த கேள்விகளும் கேட்காதவாறு உணவு கூடத்தை நோக்கி இழுத்துச் சென்றாள்.

தோழிகளும் அவள் நாசூக்காக அவ்விஷயத்தை பற்றி பேசுவதை தவிர்ப்பதை வைத்து,அப்போதைக்கு அதனை விட்டனர்.

இங்கு இளங்கோவோ குந்தவையின் மாமியார் பாண்டியம்மாளிடம் வேண்டா வெறுப்பாக உரையாடிக்கொண்டிருந்தான்.

அவர் தனக்கே உரிய நக்கலோடு “டேய் எங்கடா உன் ஆத்தாக்காரியும்… அவ பு…புருஷனும் காணலை…வரவேற்புக்கு வந்தாங்களா இல்லையா?” என இழுவையாக இழுக்க,

அதில் சுறுசுறுவென கோபம் வந்தாலும் பல்லை கடித்து சிரித்த முகமாக “பெரியம்மா அப்பான்னு சொன்னால் ஆகாதா?அதென்ன அவ புருஷன்” என அவருக்கு பதிலடி கொடுத்ததோடு,

“அப்பாவுக்கு இன்னைக்கு பேங்கில் கணக்கு முடிக்கணும்…அதனால் வரலை.‌‌..அம்மாவால் தனியா அங்கிருந்து இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வரமுடியாது” என்னும் போதே,

முகத்தை கோணி “பெரிய சீமையில் இல்லாத ஊரிலே இருக்கவே…தோ இங்குட்டு இருக்க சிவகங்கையிலிருந்து சென்னைக்கு வர முடியாதாக்கும் உன் ஆத்தாக்காரிக்கு…வர வர ரொம்பதேன் பண்ணறா உன் ஆத்தா” என கழுத்தை நொடித்துக்கொண்டு அவனோடு வம்பு வளர்த்தார்.

இளங்கோவிற்கு அவரின் பேச்சுக்களில் எப்போதும் பிடித்தம் இருந்ததில்லை.

ஆனால் அவர்களது மகன்கள் மற்றும் அவரின் தம்பி குடும்பத்திலுள்ள அனைவரும் இவர்களிடம் நன்முறையில் நடந்துக்கொள்வதினாலே அவர்களை மதித்து இங்கு வந்திருக்கிறான்.

அதேசமயம் தன் தாயிடமும் இதுப்போல் ஏதாவது ஏடாக்கூடமாக பேசி அவமானப்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதினாலே அவரை இங்கு வரவிடாமல் தடுத்திருந்தான்.

இப்போது அவனது பெரிய அன்னையின் கேள்வியில் உள்ளுக்குள் சுறுசுறுவென பொங்கினாலும் நெற்றியை நீவி “பெரியம்மா…இப்போ உனக்கு என்ன பிரச்சனை?அதான் அவங்களுக்கு பதிலா நான் வந்திருக்கேனே?” என்றான் சிடுசிடுப்புடன்.

அவரின் அருகிலிருந்த மருமகளான குந்தவையோ இயலாமையுடன் அவ்விடத்தில் கைகள் பிசைய நின்றிருக்க,அவளை முறைப்பாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு பல்லைக் கடித்தவர் “ஆமா வந்த” என இழுவையாக ஆரம்பித்தவரின் விழிகள் இப்போது இளங்கோவின் மீது இளக்காரமாக பதிந்தது.

“விழாவுக்கு வரக்குள்ள நல்ல உடுப்பு உடுத்திட்டு வரக்கூடாது…பார்த்தில்ல.‌‌..எம் மவன் கல்யாணத்துக்கு எம்புட்டு பெரிய சினிமா ஸ்டாரெல்லாம் வந்திருக்காங்கன்னு…நீ என்னடானா ஒண்ணுமே இல்லாதவனாட்டம் இதைப்போய் உடுத்திட்டு வந்திருக்கே…ஆமா…உன் முதலாளி சம்பளம் தரானா இல்லையா?” என வியாக்கியானம் பேச,

இளங்கோவின் மனதிற்குள் எரிமலை வெடித்து சிதற காத்திருந்தும்,அதனை ‘கூல்…கூல்…’ என தன்னையே ஒரு நிலைப்படுத்தி அடக்கியவன்,

அவரை நேருக்கு நேர் பார்த்து “பெரியம்மா உங்க பையன் சினிமா ஹீரோ ஆகிட்டதால் அவனுக்கு கொம்பு முளைச்சிடுச்சா என்ன?காசு,பணத்தை வைச்சு மட்டும் தான் எல்லாரையும் மதிப்பிடுவீங்கன்னா?நம்மயெல்லாம் மனுசங்களா இருக்கவே அருகதை இல்லாதவங்க…” என பட்டென்று முகத்திலடித்தாற் போன்று கூறவும்,

அவரின் முகம் கறுப்பதை கண்டு ஒரு நொடி நிதானித்து இதழ்கடித்து விடுவித்தவன்,அவரின் அருகே குனிந்து “நம்ம கொஞ்ச காலத்துக்கு முன்னாடி எந்த நிலைமையில் இருந்தோம்னு‌ கொஞ்சம் யோசிச்சு பாருங்க பெரியம்மா…நம்ம எந்த உயரத்துக்கு போனாலும் பழசை மறக்காமல் இருந்தால் தான் உங்களுக்கும் நல்லது…எனக்கும் நல்லது…எல்லாருக்கும் நல்லது” என வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல் அவருக்கு தக்கப்பதிலடி கொடுத்துவிட்டு அவ்விடத்திலிருந்து அகன்றான்.

அவனின் பதிலில் அவமானத்தில் அவரின் நீள் வடிவ முகம் சுருங்கி கறுத்தாலும் ‘கீழே விழுந்தாலும் மண் ஒட்டாத குறையாய்’ முகத்தை மாற்றி அருகிலிருந்த பெரிய மருமகள் குந்தவையிடம் “இவன் குடும்பமே சரியான பொறாமை பிடிச்சதுங்க…பார்த்தியா எப்படி பேசிட்டு போறான்னு…பெரியவங்கன்னு ஒரு மட்டு மரியாதை வேணாம்…முதல்ல வீட்டுக்கு போனவுடனே இவனோட காலடி மண்ணெடுத்து குடும்பத்துக்கே சுத்திப்போடணும்…பொல்லாத கொள்ளி கண்ணு” என அப்போதும் அடங்காமல் துவேசத்தோடு பேசினார்.

குந்தவையும் அவரின் பேச்சை ஆற்றாமையோடு வெறும் பார்வையாளராக மட்டுமே இளங்கோவை மனம் வருந்தி பார்த்திருந்தாள்.

எதேச்சையாக அந்த பக்கம் வந்த யாமினியின் செவியில் இவர்களது சம்பாஷணைகள் அனைத்தும் விழுந்திருந்தது.

அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் செவியில் விழுந்து,அவளின் இரத்தத்தை கொதிக்க செய்தது.

இளங்கோவின் செவியிலும் இறுதியாக அந்தம்மாள் பேசிய சொற்கள் விழுந்ததற்கு அடையாளமாய் முகம் கசங்கி அவன் ஓரிடத்தில் நின்றிருப்பதை அவனிற்கு எதிரே வந்த யாமினியும் கண்டுவிட்டாள்.

‘ச்சை…இந்த பொம்பளை எப்படி பேசுது பாரு…காட்டேரி’ என மேனி விறைக்க அவரை தீயாய் உறுத்து விழித்தாள்.

இளங்கோவோடு பெரிதாக பிணைப்பு இல்லாதப்போதிலும் அவனது அடிப்பட்ட முகம் அவளின் இதயத்தை பிசைவது போல் இருந்தது.

ஆடவனும் யாமினியின் முன் நேர்ந்த அவமானத்தில் உள்ளுக்குள் சிறுத்தாலும்,வெளியே சிரித்த முகத்துடன் அவளை கடந்துச்சென்றுவிட்டான்‌.

அவனது அந்த ஒரு நொடி முகமாற்றம் அவளிற்கு கோபத்தை விளைவிக்க ‘இந்தம்மாவுக்கு தக்க பாடத்தை கற்றுக்கொடுத்தாகணும்’ என்ற வெறியே தோன்றியது.

உடனே அவளின் மூளை பளீச்சிட அவளிற்கே உரிய மிடுக்கான நடையோடு பாண்டியம்மாள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கிச் சென்றவள்,தெரியாமல் அவரின் மீது கையிலிருந்த சூடான கொட்டை வடிநீரை கொட்டி விடுவது போல் அனைத்தையும் அவரின் மீதே அபிஷேகம் செய்துவிட்டாள்.

அதனை சற்றும் எதிர்ப்பாராதவரோ துள்ளிக்குதித்து எழுந்தவர் “ஐய்யோ…வலிக்குதே…எந்த சண்டாள சிறுக்கி மவ இப்படி பண்ணது…எரியுதே…” என வலியில் கத்தி கூப்பாடு போட,

யாமினியோ வன்மத்தோடு ‘வலிக்குதா?நல்லா வலிக்கட்டும்’ என பல்லை கடித்தவள் அவ்விடத்தை நோக்கி அவர்களது மகன்கள் ஓடிவருவதை கண்டு சட்டென்று முகப்பாவனையை மாற்றி “அச்சச்சோ ஆன்ட்டி வலிக்குதா?ஐயம் சாரி…தெரியாமல் பண்ணிட்டேன்…ரொம்ப சூடா இருக்கா?” என போலியான பதட்டத்துடன் இமைக்கொட்டி வினவினாள்.

அந்த பாண்டியம்மாளிற்கோ அவள் அணிந்திருந்த உடையிலிருந்த செல்வ செழிப்பு வாயை திறக்கவிடாமல் செய்ய பல்லை கடித்து மனதிற்குள்ளே அவளை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்தார்.

அதற்குள் அவர் அருகே வந்துவிட்டிருந்த மகன்கள் நடந்திருக்கும் விபரீதம் அறிந்து “அம்மா என்னாச்சு?” என அவரை‌ கவலையோடு தாங்கிப் பிடிக்க,

“நொன்னாச்சு…முதல்ல என்னைய ஆஸ்பத்திரி தூக்கிட்டு போங்கடா மரமண்டைகளா?ஐய்யோ…உள்ளயெல்லாம் கொதிக்குது…கொப்பளம் போட்டிடப்போகுது…தூக்கு…தூக்கு” என தொடையை பற்றியவாறே சூடு தாங்காமல் புலம்ப,

அவரது பெரிய மகன் இவளை இமைகள் இடுங்க பார்க்க,யாமினியோ “சாரி சார்…நான் தான் தெரியாமல் காபி கொட்டிட்டேன்” என அப்பாவியாக முகத்தை வைத்து கூற,

அவனோ பெருமூச்சோடு “இட்ஸ் ஓகே” என தாயை தூக்கிக் கொள்ள,

அந்நிலையிலும் “எங்க அந்த சனியன் பிடிச்ச உன் பொண்டாட்டி…மவராசி என்னைக்கு இந்த வீட்டுக்கு காலடி எடுத்து வைச்சாளோ…விளங்காமலே போயிடுச்சு…ஒவ்வொரு நாளும் என் உயிரை குடிக்கிறா?” என தனது பெரிய மருமகளை வாயிற்கு வந்தது போல் வசைப்பாட தொடங்கி விட்டார்.

தாயின் அந்த புலம்பல் கேட்டு அவரின் பெரிய மகன் அவரை தூக்கிக்கொண்டு வெளியே ஓட,மனைவியை பற்றிய அவரின் பேச்சை அவன் ரசிக்கவில்லை என்பதற்கு அடையாளமாய் “அம்மாஆ” என கோபமாய் ஒரு அதட்டல் போட,

“நான் இங்க வலியில் துடிக்கிறேன்…இப்பவும் உன் பொண்டாட்டிக்கு வக்காலத்து வாங்கிட்டு வர…அவ மட்டும் என் கூட இருந்தால் எந்த சண்டாள சிறுக்கியாவது காப்பியை என் மேல ஊத்தியிருப்பாளா?ஆ… ஐய்யோ…” என அப்போதும் அனைவரையும் கரிச்சுக்கொட்டியவரின் குரல் அவ்வறையை விட்டு வெளியேச் சென்றதற்கு பிறகு தேய்ந்து மறைந்தது.

யாமினியோ வாயை பிளந்து ‘அம்மாடி…இந்த கிழவிக்கு இருக்கிறது என்ன வாயா?இல்ல…கால்வாயா?வண்டி இழுக்காத குறையா இம்புட்டு பேச்சு பேசுது’ என அங்கலாய்த்தவள்,

மேலும் “நந்தினிக்கு இருக்கிற வாய்க்கு இந்தம்மாவை துவைச்சு காயப்போட்டிருவாள்…ஆனால் குந்தவை அக்கா தான் பாவம்…வாயில்லா பூச்சி” என குந்தவைக்காக பரிதாபம் கொண்டாள்.

‘ஆனாலும் இந்த கிழவிக்கு நல்லா வேணும்…சுடாதா?நல்லா சுடட்டும்…உன் பேச்சும் இது மாதிரி தானே எல்லாருக்கும் சுடும்’ என முனகியவளின் இதழோரம் வெஞ்சினம் கலந்த புன்னகை தோன்றியது.

அதே இதழ் வளைவு புன்னகையோடு திரும்பியவளுக்கோ அவ்விடத்தில் மார்பிற்கு குறுக்கே கைகள் கட்டி அவளையே குறுகுறுவென பார்த்திருந்த இளங்கோவை கண்டவுடன் பக்கென்று இருந்தது.

ஆயினும்,சடுதியில் தன்னுணர்வுக்கு மீண்டவள் ‘என்ன?’ என்பதாய் அவனை பார்த்து திமிராய் புருவம் உயர்த்த,

அவளது விழிகளில் தெரிந்த தீட்சண்யம் அவனை தடுமாற வைக்க ‘ஒண்ணுமில்லை’ என அவசரமாக தலையாட்டினான்.

‘அது’ என அவளிற்கே உரிய தெனாவட்டுடன் ஒற்றை புருவத்தை தூக்கி மிதப்பான நடையுடன் அவனை தாண்டி தோழிகளை நோக்கிச் சென்றாள்.

அவள் சென்றதற்கு பிறகு தலையை ஒரு முறை குலுக்கி ‘ஆத்தாடி…இவ சரியான கேடி தான்…தப்பு செய்தது அவள்…ஆனால் ஒண்ணுமே செய்யாத மாதிரி போறதை பாரு ராணி மங்கம்மா’ என அவளை எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்தெடுத்தவன்,

‘யாரை பகைச்சாலும் இவளை மட்டும் பகைச்சுக்கூடாதுடா சாமி’ என உள்ளுக்குள் அரற்றினாலும் அவனையும் மீறி இதயத்தில் ஒரு இதம் பரவியது.

தோழிகளும் அவளின் செய்கையை பார்த்திருந்ததால் “யாமி…என்னடி செய்திட்டு வர?” என அவளையே குறுகுறுவென சந்தேகமாக நோக்க,

அவளோ கைகளை ஒரு முறை உதறி தட்டிவிட்டு தன்னிருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து ‘என்ன?’ என்பது போல் அழகாய் புருவம் உயர்த்த,

துடுக்குத்தனமான தோழிகளில் ஒருத்தியான ரம்யா “என்னடி யாமி?அந்த இளங்கோ மேல லவ்ஸா?” என கேலியாக விசாரிக்க,

அவளோ கண்ணாடி கோப்பையில் இருந்த பழச்சாறை உறிஞ்சுவிட்டு “அவன் மேல காதலா?ப்ச்” என இதழை பிதுக்கி சலித்தவள்,

“லவ்ஸூம் இல்லை…ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை…இளங்கோவை என் தங்கச்சி ரொம்ப வருஷமா காதலிக்கிறாள்…அதுமட்டுமில்லாமல் அவர் எங்க கம்பெனியில் வேலை செய்யற ஒரு வேலைக்காரர்…என் ஒர்க்கருக்கு நடந்த அவமானம் எனக்கு நடந்த மாதிரி இல்லையா?அதுக்காக மட்டும் தான் அந்தம்மாவை பழி தீர்த்தேன்…அதுமட்டுமில்லாமல் அந்தம்மாவை வந்ததிலிருந்து பார்க்கறேன்…ஓவர் அதிகாரம்…குந்தவை அக்கா ரொம்ப பாவம்…அவங்களுக்காகவும் தான் இந்த குட்டி தண்டனை” என சிறிது கோபத்துடனே பேசியவளின் விழிகளை உற்றுநோக்கிய ரம்யா “நிஜமா?அவ்வளவு தானா?” என அப்போதும் விடாமல் கேட்டாள்.

யாமினியோ பதிலுக்கு தன் கூர்மையான விழிகளை அவளின் விழிகளுக்குள் செலுத்தி “அவ்வளவு தான்” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

அதில் ஏமாற்றமடைந்த தோழிகளோ “அடச்சே…இப்படி புஸ்ஸூன்னு போயிடுச்சே…நாங்கலாம் என்ன என்னவோ நினைச்சோம்” என பெருமூச்சு விட,

“அதெல்லாம் ஒண்ணும் நினைக்க வேண்டாம்…ஒழுங்கா எல்லாரும் சாப்பிட்டு சீக்கிரம் கிளம்பற வழியை பாருங்க…மணி ஒன்பதாகிடுச்சு” என அனைவரையும் அதட்டி கவனத்தை திசைத்திருப்பி உணவருந்த வைத்தாள்.

இரவு பத்து மணியளவில் மணமக்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட யாமினியை தவிர்த்து மீதமுள்ள பெண்கள் அனைவரும் உள்ளூர் என்பதினால் அவரவர் இல்லம் நோக்கி புறப்பட்டார்கள்.

ஆனால் யாமினி விழா முடிவடைய நேரம் கடந்துவிடும் என்பதால்,அந்த இருள் சூழ்ந்த நேரத்தில் வாகனத்தை ஊருக்கு ஓட்டிச் செல்வது இயலாத காரியம் என்பதை முன்பே கணித்து,அந்த விழா நடைப்பெறும் நட்சத்திர விடுதியிலே ஒரு அறைக்கு ஏற்பாடு செய்திருந்தாள்.

அதனால் தனது தோழி நந்தினியிடம் கூறிவிட்டுச் சென்றவளிற்கு,திடீரென்று தண்ணீர் தாகமெடுக்க,ஒரு பணியாளரை அழைத்து நீரை வாங்கி பருகியவள், தனக்கென ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி நடைப்போட்டாள்.

அந்த குடிநீர் பானம் அவளின் கற்பை சூரையாடப்போகும் திறவுகோல் என்பதை அறியாமல் ஒரு மனநிறைவோடு அறையின் கதவை திறந்து நுழைந்தாள்.

அறைக்குள் நுழையும் வரை அனைத்தும் சரியாக இருக்க,குளித்துவிட்டு படுக்கலாம் என குளியலறைக்குள் நுழைந்தவளின் மேனி இலேசாக தள்ளாடியது.

*************

வெளியில் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஒருவனிடம் “டேய்…நான் சொன்ன வேலைய சரியா செய்தியா இல்லையாடா?” என உறும,

அவனோ மிரட்சியுடன் “சார் நீங்க சொன்னதை கரெக்ட்டா செய்துட்டேன்…இந்நேரம் அந்த மருந்து வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கும்” என,

“நான் சொன்ன மாதிரி வீரியமிக்க மருந்து தானேடா வாங்கினே?இந்த விஷயத்தில் ஏதாவது சொதிப்பினே…உன்னை உயிரோடு குழித்தோண்டி புதைச்சிருவேன்” என தன் வயதை மீறி கர்ஜிக்க,

“சார்…சார்…வெளிநாட்டு மார்க்கெட்டிலே ரொம்பவும் பவர் ஃபுல்லான மருந்தை தான் நான் வாங்கியிருக்கேன்…இந்த மருந்தை சாப்பிட்டவங்களால் அடுத்த நாற்பத்தெட்டு மணி நேரத்துக்கு எந்த லோகத்தில் இருக்கோம்ன்றதையே கண்டுப்பிடிக்கவே முடியாது அளவு வீரியமிக்க மருந்து இது” என பதட்டத்துடன் அவசரமாக மொழியவும்,

அதைக்கேட்டு இடிஇடியென சிரித்தவரோ “எனக்கு அது தான் வேணும்” என கர்ண கொடூர குரலில் கூறியவர்,

மகிழுந்திற்கு வெளியே இருக்கும் வெற்றிடத்தை நோக்கி “ஹே அதிரா…உன் குடும்பத்தோட குலவிளக்கு நாளையிலிருந்து தரித்தர விளக்கா தான் இருக்கப்போகுது…அவளோட நிலைமைய பார்த்து நீங்க எல்லாரும் ஒவ்வொரு நொடியும் சாகணும்…அதை பார்த்து நான் ரசிக்கணும்…ஹாஹாஹா…” என வாகனமே அதிர சிரித்தவரின் கணீர் குரலில் அவரின் அருகே இருந்தவனின் தேகமோ பயத்தில் வியர்வை வழிய வெடவெடத்தது.

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top