வாடைக்காற்று 1

‘பார்க் பிளாசா’ அது ஒரு ஏழு நட்சத்திரங்களை உள்ளடக்கிய விடுதி.

அந்த விடுதியின் முன்பு உள்ளிருக்கும் பல வகையான மக்களின் செழுமையை பறைசாற்றும் வகையில் மகிழுந்துகள் அணிவகுத்து நின்றுக்கொண்டிருந்தது.

ஏனெனில்,அந்த விடுதியில் நடைப்பெறவிருக்கும் மிகப்பெரிய பிரபலம் ஒருவரின் திருமண வரவேற்பை முன்னிட்டு அவ்விடம் முழுவதும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

அந்த விழாவிற்காக பல தரத்துவப்பட்ட அரசியல் பிரமுகர்கள் முதல் திரைப்பட பிரபலங்கள்,கூடவே தொழிலில் கொடிக்கட்டி பறக்கும் வியாபாரி தந்திரிகளும் விருந்தினர்களாக வரவழைக்கப்பட்டிருந்தனர்.

அதனால் அவர்களின் பாதுகாப்பிற்காக திடகாத்திரமான கருப்பு உடையணிந்த பாதுகாவலர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர்.

அத்தோடு காக்கி உடையணிந்த காவலர்களும் தங்களது பணியை செவ்வனே செய்துக்கொண்டிருந்தார்கள்.

தமிழ் திரைப்படங்களின் முன்னணி நடிகராக வலம் வரும் ‘மக்களின் நாயகன்’ என மக்களால் பட்டம் சூட்டப்பட்ட நாகதேவ் பிரசாத்தின் திருமண வரவேற்பு கொண்டாட்டமே இது.

அந்தவொரு நிகழ்ச்சிக்காக தொழிலதிபர் பலருக்கும் அழைப்புச் சென்றிருக்க,தற்போது தமிழகத்திலே கொடி கட்டி பறந்துக்கொண்டிருக்கும் பாண்டியன் நிறுவனங்களுக்கும் அத்தகைய அழைப்புச் qசென்றிருந்தது.

அவர்களுடைய ஒட்டுமொத்த குடும்பத்தின் சார்பாக அந்த இல்லத்தின் முதல் பெண் இளவரசியாக வலம் வரும் யாமினி பாண்டியன் அந்த விழாவிற்கு வருகை புரிந்திருந்தாள்.

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாண்டியன் நிறுவனத்தை பற்றி தெரியாதவர்கள் ஒருவரும் இல்லை.

அந்த குடும்பத்தின் பெருமையை மட்டுமின்றி நிறுவனங்களின் தரத்தையும் உலகளவில் கொண்டுச் சென்று முன்னேற்றியதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் அதிருங்கழகோன் பாண்டியனை சேரும்.

ஆனால் தற்போது அதிருன் பாண்டியன் குழுமத்திலிருந்து விலகி வெளிநாட்டில் தொழில் செய்து வருவதால்,அவனது இடத்திலிருந்து தொழிலை யாமினி கவனித்து வருகிறாள்.

அதன்பொருட்டு இந்த விழாவிற்கு வந்திருந்தாலும்,மணப்பெண் இவளுடைய கல்லூரி தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரவேற்பு நிகழ்ச்சி நடைப்பெறும் அறையினுள் மெல்லியதாக கசிந்து வந்த மென்னிசையை ரசித்தவாறே யாமினி தன்னுடைய மற்றைய தோழிகளோடு மேம்போக்காக உரையாடிக் கொண்டிருந்தாள்.

ஒரு நிறுவனத்தின் முதலாளியாக பொறுப்பேற்றதினால் தனக்கென்று மிடுக்கும் அகந்தையும் கலந்த முகமூடியை அணிந்து வலம் வர வேண்டிய சூழ்நிலை அவளிற்கு உருவாகியிருந்தது.

பட்டாம் பூச்சியாய் உலகையே சுற்றி வந்துக்கொண்டிருந்தவளை பிடித்து ஒரு குறுகிய சிறைக்குள் தள்ளினால் மூச்சடைக்காமல் இருந்தால் அதிசயமே!!

தொடக்கத்தில் தொழிலை ஏற்று நடத்துகையில் உண்டான சலிப்பும், ஆற்றாமையும் நாட்கள் கடக்கையில் விரும்பி ஏற்கும் சிறையாக மாறிவிட்டது.

அதனால் அவள் பொறுப்பை ஏற்ற வேளையில் உண்டான நட்டங்கள் அனைத்தையும் இன்று நாட்டங்களாக உருமாற்றம் செய்து ஓரளவு முன்னேற்ற பாதையில் தன்னை இழுத்துச் சென்றுக்கொண்டிருக்கிறாள்.

அவளிற்கு உதவியாக அவளது தமையனின் முன்னாள் உதவியாளன் சுதாகர் உறுதுணையாக இருந்து அவளிற்கு தொழிலில் இருக்கும் அனைத்து நெளிவு சுளிவுகளையும் கற்று தரும் ஆசானாகியிருந்தான்.

ஆனால் சில வருடங்களிலே குருவை மிஞ்சிய சீடனாக தொழில் உலக சாம்பிராஜ்ஜியத்தில் இருக்கும் அனைத்து வித்தைகளையும் தந்திரங்களையும் பயின்று தேறியிருந்தாள்.

தற்போது அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியிலும் ஏறுமுகம் ஏற்பட்டது போல்,அவளுள் இருந்த சிறுப்பிள்ளைதனம் முற்றிலும் விலகி தூர ஓடியதோடு ஒரு முதிர்ச்சி அவளை ஆட்கொண்டு அவளுள் ஒரு இறுக்கத்தையும் கூடவே இறுமாப்பையும் மணிமகுடமாய் பரிசளித்திருந்தது.

அவள் வகிக்கும் அந்த பதவியும் உயரமும் தோழிகளோடு முன்பு போல் சகஜமாக உரையாட விடாமல் ஒரு எல்லைக்கு உட்பட்டு தடுத்து நிறுத்தியிருந்தது.

அதனால் ஏனைய தோழிகள் கீழிறங்கி ஒருவரை ஒருவர் கேலி செய்து கலகலப்போடு உரையாடிக் கொண்டிருக்க,யாமினி மட்டும் அனைத்திலிருந்தும் சற்றே ஒதுங்கி சிறுப்புன்னகையுடன் வெறும் பார்வையாளராக நின்றிருந்தாள்‌.

தோழிகளும் அவளின் செல்வச் செழிப்பையும் தொழிலில் தற்போதைய அசுர வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு அவளோடு முன்பு போல் சகஜமாக பேச இயலாமல் அவளை தங்களது வட்டத்திலிருந்து விலக்கியே வைத்திருந்தனர்.

ஒருவரது வாழ்வில் செல்வமும் பதவியும் உயர்ந்து விட்டால் உறவுகளுக்குள் விரிசல் உண்டாகிவிடுமோ?

அவர்களது அந்த விலகல் செயல் பெண்ணவளிற்குள் ஒரு வித எரிச்சலை கொடுத்தாலும்,தானாக வழியச் சென்று அவர்களோடு கேலியில் இறங்கி சரிக்கு சமமாக பேச விடாமல் ஏதோ ஒன்று தடுக்க மௌனமாக நின்றிருந்தாள்.

“ஏன்டி ஜனனி?போன மாசம் உன் ஆளு கூட ஊட்டி போனியே?என்னாச்சு?” என குறும்பாய் ஒருத்தி புருவம் உயர்த்த,

சம்பந்தப்பட்ட அந்த பெண்ணோ நாணத்தோடு தலைக்குனிய,அவளின் அருகே இருந்த மற்றவளோ “அந்த வயிற்றெரிச்சலை ஏன்டி அவகிட்ட கேட்கறே?என்கிட்ட கேளு?” என சலிக்க,

இப்போது அனைவரின் பார்வையும் அவளை நோக்கி திரும்ப,ஒரு வித ஆர்வத்துடன் “நீ ஏன்டி அப்படி சலிச்சுக்கிற?என்ன நடந்தது?” என அவளை சூழ்ந்துக்கொள்ள,

அந்த ஜனனியோ முகமெல்லாம் குப்பென்று சிவக்க “ச்சூ…ரம்யா அமைதியா இருடி” என இதழ்கடித்து சிணுங்க,

“ஏய் என்னடி இவ வெட்கமெல்லாம் படறா…இதெல்லாம் பார்த்தால் எங்களுக்கே சந்தேகமா இருக்கே?” என நெஞ்சம் படபடக்க அவளை குறுகுறுவென பார்த்தவாறு வினவ,

அந்த ரம்யாவோ “என்னடி சொல்லவா?” என தோழியிடம் கண்சிமிக்ஞை செய்ய,

அந்த ஜனனியோ பதட்டத்தோடு “ஏய்…ஏய்…சொல்லாதப்பா?” என கண்களால் இறைஞ்ச,

அதைக்கண்டு தோழிகளுக்குள் இன்னும் பரபரப்பு கூடிவிட ரம்யாவோ நமுட்டுச் சிரிப்புடன் “ஊட்டியில் ரொம்ப குளிரா இருக்கு இல்லை” என ராகம் இழுக்க,

“ஆமா…” என மற்றைய தோழிகளும் ஜனனியை பார்த்தவாறே பின்பாட்டு பாட தொடங்கினார்கள்.

“அந்த குளிரை அணைக்க வெப்பம் வேணுமில்லை…”

“ஆஆஆமா…”

“அதனால் அவ லவ்வர்…அதான் அந்த லோ பட்ஜெட் ஜெயம் ரவி குளிரை அணைக்கிறதுக்கு இவளை அணைச்சட்டார்…மேட்டரை முடிச்சிட்டார்” என உண்மையை பட்டென்று போட்டு உடைக்க,

மற்றவர்கள் அனைவரும் “ஏதே!” என அதிர்ச்சியில் வாயை பிளக்க,

அதில் ஒரு பெண் மட்டும் அவள் கூறியதின் அர்த்தம் உணராமல் “சரி…அப்புறம்…” என ஆவலாக கேட்க,

அவளின் தலையில் கொட்டு வைத்து “அடியே மக்கு…அப்புறம் என்ன?நம்ப ஜனனியை அணைச்சு நெருப்பை கொளுத்திட்டார்…அதுக்கு மேலையும் அவருக்கு குளிருமா என்ன?” என ரம்யா கண்சிமிட்டி கேட்க,

வலியில் முகத்தை சுழித்து தலையை தேய்த்துக்கொண்டே “அதெப்படி டி…அணைச்சா நெருப்பு வருமா என்ன?இப்போ நான் உன்னை அணைச்சா நெருப்பு வ…” என வாய் திறந்து கேள்வி கேட்க விளைந்தவளின் வாயை கப்பென்று மூடி “ஏய் இந்த 90’s கிட்டை எவடி உள்ளவிட்டது…அணைச்சா நெருப்பு வருமா?முத்தம் கொடுத்தா குழந்தை வருமான்னு சில்லித்தனமா கேட்டுக்கிட்டு…வாயை மூடிட்டு நில்லு…இப்போவே உன்னை கொளுத்தி நெருப்பு எப்படி வருதுன்னு காட்டுவேன்” என சிடுசிடுத்தாள் ஒருத்தி.

“சந்து நீ அமைதியா இருடி…இந்த அம்மாஞ்சியை பிறகு கவனிப்போம்…முதல்ல இந்த கேடி ஜனனியை என்னானு கேட்போம்…வா” என அவளை அமைதிப்படுத்தினாள்.

இப்போது அனைவரின்‌ பார்வையும் ஜனனியின் மீது பதிய,அவளோ முகமெல்லாம் சிவக்க பூமிக்குள்ளே புதைந்து விடுவது போல் தலைக்குனிந்தாள்.

“அதிரி புதிரியா இருக்கவளுங்களை கூட நம்பிடலாம்டி…ஆனால் இந்த அம்மாஞ்சி மாதிரி இருக்கவங்களை மட்டும் நம்பக்கூடாது” என இதழை சுழித்தாள்.

“ஆமாடி…நமக்கெல்லாம் வாய் மட்டும் தான்…நம்ம ஏ பிளஸ் கன்டென்ட் பத்தி பேசினால் கூட காதை பொத்தி சாமி மாதிரி இருந்துட்டு ஆசாமி வேலை பார்த்திருக்கிறா பாரேன்” என மற்றொருத்தி அங்கலாய்க்க,

“ஏன்டி ஜனனி…இத்தனை வருஷமா நீயும் நானும் ஒரே ரூமில் சேர்ந்து தானே இருக்கோம்…ஒரு முத்தம் கொடுத்தால் கூட ‘ச்சீ எச்சி’னு கன்னத்தை அழுத்தி அழுத்தி துடைப்பியே…அதோ அந்த லோ பட்ஜெட் ஜெயம் ரவி ஒண்ணு இல்லை நிறைய முத்தம் கொடுத்திருப்பானே என்ன செய்தே?” ஆளாளுக்கு அவளிடம் வயிற்றெரிச்சலோடு எகிற,

திடீரென்று ஒருத்தி “சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்ததே…” என சோகமாக பாட,

மதுப்போதையில் தள்ளாடுவது போல் “ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்…உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி…என் கண்மணி” என மற்றொருத்தி ஜனனியின் கன்னத்தை நிமிண்டி அழுவது போல் இதழை பிதுக்க,அதை பார்த்த அவளின் தோழிகள் கூட்டம் கொல்லென்று சிரித்து வைத்தார்கள்.

இப்படி ஒவ்வொருவரும் ஜனனியை சுற்றி வளைத்து அவளை கேலி கணைகளால் அவளை கூச்சமடைய செய்துக்கொண்டிருக்க,அந்த கூட்டத்திற்கு சற்றும் பொருந்தாத வகையில் யாமினி அவர்களை நெருப்பில்லாமல் பார்வையாலே பொசுக்கிக் கொண்டிருந்தாள்.

காதலனாக இருந்தாலும் திருமணத்திற்கு முன்பான உடல்ரீதியான உறவை அவள் எப்போதும் விரும்புவதில்லை.

பாரம்பரியம் சார்ந்த பழமையான கலாச்சார குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவளிற்கு ‘கற்பு’ என்பது உயிரினும் மேலென்னும் நெறி என்று சிறு வயதிலிருந்தே பயிற்றுவித்து வளர்க்கப்பட்டிருப்பவள்.

அதனால் அவள் தோழி ஜனனியின் செயல் அவளிற்கு திகைப்பை மீறி ஒரு ஒவ்வாத உணர்வை கொடுக்க ‘இவ மேலே நம்பிக்கை வைச்சிருக்கிற பெத்தவங்களுக்கு துரோகம் பண்ண எப்படி இவளுக்கு மனசு வந்தது…ச்சை’ என அவளை வெறுப்போடு முகத்தை சுழித்தவாறு பார்த்திருந்தாள்.

அதற்குள் ரம்யா “கன்னத்தில் என்னடி காயம்…” என குறும்பாய் பாடியவாறே ஜனனியின் தாடையை பிடித்து இருப்புறமும் திருப்பி பார்வையிட,

“மும்தாஜின் காதலன் வீராசாமி செய்த மாயம்” என மற்றொரு தோழி நக்கலாய் பாட,

அந்த ஜனனியிற்கு இவர்களது கேலி தனது காதலனுடனான தனிமை களியாட்டத்தை நினைவுறுத்தி ஒரு கட்டத்தில் அடிவயிற்றில் நெருப்பு மூள வைத்தது.

தேகமெல்லாம் தீப்பற்றிய உணர்வில் அந்த பெண்ணோ தோழிகளிடம் “ஏய் பிளீஸ்ப்பா…செத்த சும்மா இருங்க…நாங்க பாவம்” என குழைவோடு கெஞ்ச,

மற்றவர்களோ “ஓ…” என கோரசாக குரல் கொடுக்க,

அங்கு வந்திருந்த விருந்தினர் பலரின் பார்வை இவர்களை நோக்கி திரும்புவதை கண்டு ஜனனியோ சங்கடமாக “அடப்பாவிகளா?எல்லாரும் நம்மையே பார்க்காறீங்கடி…கொஞ்சம் அமைதி…” என கீழாக குனிந்து நலிந்த குரலில் தோழிகளை அடக்கப்பார்க்க,

“என்னடி சொன்ன நீங்க பாவமா?தப்பை தப்பில்லாமல் செய்த நீங்க பாவம்…உங்க தப்பை தட்டி கேட்கற நாங்க அடப்பாவியா?என்னடி இது லாஜிக்” சந்து என்றவள் மீண்டும் தோழியை கேலியால் ஒரு வழி செய்ய, மீண்டும் அவ்விடத்தில் ஒரு சிரிப்பலை பரவியது.

தோழிகளின் எல்லையில்லாத வார்த்தை பிரயோகங்களால் ஜனனிக்கு நாணத்தில் தேகம் சூடேற,யாமினிக்கோ தோழிகளின் நாராசமான வார்த்தைகளை கேட்டு மேனி கொதித்தது.

அதனால் ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் “ஹே கேர்ள்ஸ்…ஜஸ்ட் ஸ்டாப் இட் ஐ சே” என மெல்லிய மேனி அதிர குரலை உயர்த்தி அவர்களின் பேச்சை தடுக்க,

ரம்யா என்ற அவளின் தோழி முகத்தை ஒரு மாதிரி வைத்து “எவ அவ..?” என பேச்சுவாக்கில் வார்த்தையை விட்டுவிட,

அதில் மேலும் கடுப்பான யாமினி அனைவரையும் தன் தீட்சண்ய விழிகளாலே சுட்டெரித்து “இங்க என்னங்கடி நடக்குது?நீங்களாம் என்ன செய்திட்டு இருக்கீங்கன்னு உங்களுக்கு கொஞ்சமாவது புரியுதா?” என்றாள் கடுமையான குரலில்.

அத்தோடு அவளின் கோபத்தில் பயந்து திருதிருவென விழித்துக்கொண்டிருந்த ஜனனியை நோக்கி திரும்பியவள் ஆவேசமான குரலில் “ஜனனி நீ எவ்வளவு பெரிய தப்பு செய்திட்டு வந்து இருக்கன்னு உனக்கு புரியுதா இல்லையா?உன்கிட்ட இருந்து இப்படியொரு விஷயத்தை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை…ரியலி ஷேம் ஆன் யூ” என அருவருப்புடன் முகத்தை சுழித்தாள்.

அவளின் கேள்வியில் ஜனனி முகம் இருள கூனி குறுகி தலைக்குனிந்தாள்.

உடனே அவளின் தோழிகளில் சிறிது துணிச்சலானவள் என பெயர் பெற்ற ரம்யா என்றவள் “யாமி எதுக்கு இப்போ இவ்வளவு ஹார்ஷா பேசிட்டு இருக்க…ஜனனி ஒண்ணும் காலேஜ் படிக்கிற டீனேஜ் பொண்ணு கிடையாது…இருபத்தைந்து வயசாகிடுச்சு…கை நிறைய சம்பாதிக்க செய்யறாள்…அவளது வாழ்க்கைக்கு எது நல்லது எது கெட்டதுன்னு பிரித்து பார்க்க தெரியும்…அதனால் நீ அவள் விஷயத்தில் எதுவும் பேசாதே” என அவளும் பதிலுக்கு அழுத்தமாக தன் கருத்தை தெரிவித்து தோழியின் கரத்தை ஆதரவாக பிடித்தாள்.

அதில் வெகுண்டெழுந்தவளின் வயிற்றிலிருந்து சுறுசுறுவென நெருப்பு பந்து மேல்நோக்கி உருண்டு எழ,அவளின் கண்கள் இரண்டும் உக்கிரத்தோடு சிவந்தது.

அதனால் நாசி விடைக்க “ரம்யா நீங்கயெல்லாம் இப்போ பண்ணிட்டு இருக்கிற விஷயம் ரொம்ப தப்பானது…நம்முடைய ஃப்ரெண்ட் ஒரு தப்பு பண்ணால் அதை எடுத்து சொல்லி புரிய வைக்கணும்…அதை விட்டுட்டு அவளுடைய தப்பை ஒத்து பேசினால் அவளுக்கு நம்ம செய்யறது எப்படி தப்புன்னு தெரியும்?” என கண்டிக்க,

மற்ற தோழி ஒருத்தி “யாமி நீ ஏன் பூமர் ஆன்ட்டி மாதிரி பேசற?இந்தப் காலத்தில் லவ் மேக்கிங் எல்லாம் ரொம்ப சகஜம்…நிறைய ஹீரோ ஹீரோயின்ஸிலிருந்து சாதாரண ஆட்கள் வரை எல்லாருமே லிவ் இன் ரிலேஷன் ஷிப்பில் இருக்காங்க…அவ்வளவு ஏன் இப்போலாம் நம்முடைய உடல் தேவைக்காக கூட மனமொத்து ஒன் நைட் ஸ்டாண்ட் இருக்காங்க…இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் நம்ம ஜனனி அவளோட காதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்திட்டு போறதுக்காக தன் காதலனோடு இணைந்திருந்தாள்…இதை எப்படி நீ தப்புன்னு சொல்லற?” என அந்த வயதிற்கே உரிய வேட்கை கலந்த சலனத்தோடு இளமையின் வேகத்தில் படபடவென பேசினாள்.

யாமினியும் இந்த காலத்து நவ நாகரீக யுவதி என்பதினால் அவள் கூறுவதில் இருந்த மெய் புரிந்தே இருந்தது.

ஆனால் இவர்களின் எல்லை மீறலினால் பின்னால் ஏற்படும் விளைவை மனதினுள் இருத்தி நிமிர்ந்து நின்று “சிவா நீ பேசறது ரொம்ப தப்பு…நாகரீகம்ன்ற பேரில் இந்த காலத்து இளைஞர் கூட்டம் உடல் தேவைக்காக ஏதேதோ பழக்கவழக்கத்தையெல்லாம் வெளிநாட்டிலிருந்து இங்கு கொண்டு வந்திருக்காங்க…அந்த நாகரீக போதைக்கு அடிமையாகி பல குடும்பத்து பெண்கள் கெட்டு சீரழிந்து போறதை தினந்தோறும் ஏதாவது செய்தியில் பார்த்திட்டே தான் இருக்கோம்…முன்னாடியெல்லாம் ஒரு பான் பராக் போட்டால் கூட பக்கத்தில் இருக்கவங்க முகத்தை சுழிப்பாங்க…இப்போலாம் கூல் லிப்ன்ற ஒரு போதை வஸ்துவை பொது வெளியில் துணிச்சலா பயன்படுத்தறாங்க…மக்களும் இப்போலாம் அதை ஈஸியா எடுத்திட்டு கடந்துப்போறாங்க…காலம் மாறிடுச்சு ஒத்துக்கிறேன்…ஆனால் நமக்குன்னு ஒரு கலாச்சாரம் இருக்கு…அதை ஒரேடியா சீரழியறதை அதிலும் என் கண்ணு முன்னாடியே என் தோழியோட வாழ்க்கை நாசமாகறதை பார்த்து என்னால் பொறுத்திட்டு இருக்கமுடியாது…இப்போலாம் எந்த நல்லதை சொன்னாலும் உடனே அவங்களை பூமர்னு சொல்லி கிண்டல் பண்ணி அடக்கி வைச்சிடறது…” என உணர்ச்சி பெருக்கோடு பேசிக்கொண்டிருக்கும் போதே,

ரம்யா அவளை இடைமறித்து ஏதோ பேச வருவதற்குள் அவளின் முன்பு ஒரு கரம் நீட்டி “ஒரு நிமிஷம் இருடி…நான் பேசி முடிச்சிடறேன்…அவளுடைய வாழ்க்கையை டிசைட் பண்ணற அதிகாரம் அவளுக்கு இருக்கு..‌.எது நல்லது எது கெட்டதுன்னு அவளுக்கு புரியும்னு நீ சொல்ல வரது எனக்கு நல்லாவே புரியுது…இருந்தாலும் ஒரு தோழியா அவளுக்கு நல்லதை எடுத்து சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு…அதனால் என் மனதில் பட்டதை சொல்லிடறேன்” என்றவள்,

கண்கள் கலங்க இதழ்கடித்து நின்றிருந்த ஜனனியை நோக்கி திரும்பியவள் “ஜனனி நான் பேசினது தவறா இருந்தால் ஐயம் ரியலி சாரி…நீ காதலிக்கிறது தவறில்லை…ஆனால் அந்த காதலுக்குன்னு ஒரு புனிதம் இருக்கு…அதை உங்களோட உடல் வேட்கைகாக அசிங்கப்படுத்தறதை தான் என்னால் ஏற்க முடியவில்லை…உங்க இரண்டு பேருக்கும் உங்களோட உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்திட்டு போகணும்னு தோணுச்சுன்னா உங்க இரண்டு பேர் வீட்டிலும் பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்க…ஒரு சில விஷயங்கள் கதவு பின்னாடி இருக்கிற வரை தான் நல்லது…அந்த கதவை திறந்து ‘பின்னாடி என்ன இருக்குன்னு’ பரிச்சித்து பார்க்க ஆசைப்பட கூடாது…அது ரொம்ப ஆபத்தானது” என தோழியின் தவறை சுட்டிக்காட்டினாள்.

கூடவே “பெண் சுதந்திரத்தின் மீதான தவறான புரிதல் தான் இந்த மாதிரியான ஒரு நிலைமைக்கு காரணம்…ஆண்கள் நிறைய தவறெல்லாம் செய்யலாம்…பெண்கள் நாங்களும் அவர்களுக்கு குறைந்தவர்கள் இல்லைனு அதற்கு ஈடாக தவறு செய்யறது பெண் சுதந்திரம் கிடையாது…பெண்கள் இனத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுச் செலுத்தி அடிமைத்தனத்தை ஒழித்து அனைவரையும் தங்களோடு சேர்த்து கை தூக்கி விடறது தான் பெண் சுதந்திரம்…அவர்களை குழிக்குள் போட்டு மண்ணை போட்டு புதைப்பது சுதந்திரமில்லை” என ஒரே போடாக போட்டு தோழிகள் அனைவரின் வாயையும் அடைத்தாள்.

யாமினியின் மிக நீளமான உரையாடல் நின்றதற்கு பிறகு நண்பர்கள் குழுவில் சில நிமிடங்களுக்கு அவ்விடத்தில் மௌனம் மட்டுமே நிலவியது.

ஜனனி மட்டும் தன் தவறை உணர்ந்து மெதுவாக யாமினியின் கரம் பற்றி “யாமி ஐயம் சாரிடி…நான் எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்னு இப்போ தான் புரியுது…என் வீட்டில் காதலை பத்தி சொல்லி சீக்கிரம் அர்ஜுனை கல்யாணம் செய்துக்கிறேன்” என மனமுவந்து மன்னிப்பு வேண்டிட,

யாமினியோ மெல்லியதாக புன்னகைத்து அவளின் தோள் தட்டி “சில் ஜனனி…எந்தவொரு செயலையும் செய்யறதுக்கு முன்னாடி ஆயிரம் முறை யோசிக்கணும்…ஒரு வேளை உனக்கு அர்ஜூனோட கல்யாணமாகி ஏதாவது ஒரு சண்டையில் ‘கல்யாணத்துக்கு முன்னாடி என் கூட இருந்தவ தானே நீ’னு ஒரு வார்த்தை அவன் சொன்னால் உன்னால் தாங்க முடியுமா?” என்றவுடன் ஜனனிக்கு பகீரென்றது.

அந்தவொரு நினைவே அவளின் இதயத்தை வேரோடு பிடிங்கியெறிய தோழியை அடிப்பட்ட பார்வை பார்த்தவளிடம் “இன்கேஸ்…உங்க கல்யாணத்துக்கு உங்க வீட்டில் ஒத்துக்காமல் வேறொரு மாப்பிள்ளையோடு கல்யாணமாகுதுன்னு வைச்சுக்கோ…உன்னால் இதையெல்லாம் மறந்திட்டு அவனோடு அந்த மாதிரி சந்தோஷமா இருக்க முடியுமா?” என வலித்த இதயத்தில் கத்தியால் சொருகுவது போன்ற கேள்வியை கேட்டவுடன் ஜனனியின் கண் இமைகள் வீங்கி சிவந்தது.

உடனே ரம்யா தோழி அழுவதை கண்டு வருத்தமாக “யாமி” என அழுத்தி அழைத்தவுடன்,

அவளை நேருக்கு நேராக பார்த்து “நெருப்புன்னு சொன்னால் வாய் வெந்திடாது ரம்யா…பின் விளைவுகள் எல்லாத்தையும் முன்னாடி யோசித்து சிந்தித்து செயல்படணும்னு சொல்லறேன்…டோன்ட் மிஸ்டேக் மீ…பட் பிராக்டிக்கலா யோசிக்கணும்” என தனது உரையை அத்தோடு முடித்துக்கொண்டாள்.

கூடவே கலக்கம் சுமந்து முகம் வெளிற நின்றிருந்த ஜனனியை அணைத்து “ஜனனி அழாதே…சீக்கிரம் உனக்கும் அர்ஜூனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறது என் பொறுப்பு…அர்ஜூனோட அப்பா எங்க பெரியப்பாகிட்ட தான் வேலை செய்யறாங்க…அவரை அர்ஜூன் அப்பாகிட்ட பேச சொல்லறேன்…அவர் வந்து உங்கப்பாகிட்ட பேசுவார்…சோ பீ கூல்” என காயத்தையும் பரிசளித்து அதற்குரிய மருந்தையும் அவளாகவே கொடுத்தாள்.

அதன்பிறகே ஜனனியின் முகம் தெளிய மெல்லிய புன்னகையுடன் “தேங்க்ஸ் யாமி” என அவளை கட்டியணைத்து தனது நன்றியை தெரிவித்தாள்.

இவர்களின் இந்த அதிரடி மாற்றத்தில் ‘இங்க என்னடி நடக்குது’ என்பது போல் மற்ற தோழிகள் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து ‘ஙே’ என விழித்துக்கொண்டிருந்தார்கள்.

கூட்டத்தில் இருந்த ஒருத்தி “ஏன்டி எப்போடி இந்த ஜெனிலியா ரூல்ஸ் மங்கம்மாவா உருமாறினா?” அருகில் இருந்தவளின் காதை கடிக்க,

உடனே யாமினி “இங்க என்ன சத்தம்?” என,

அந்த பெண்ணோ பதறிப்போய் “பேசிட்டு இருக்கேன் மாமா” என வடிவேலு பாணியில் பதில் சொல்ல,அந்த நிமிடமே அங்கிருந்த சூழ்நிலை அப்படியே பிம்பம் மாறி மீண்டும் அவ்விடத்தில் கலகலப்பு பரவியது.

யாமினியும் தன் இறுக்கம் தளர்ந்து தோழிகளோடு எந்த வித பேதமும் இல்லாமல் சகஜமாக உரையாட தொடங்கினாள்.

மற்றவர்களிடம் கலாச்சாரம், பண்பாடு, மனக்கட்டுப்பாடு என பிரசங்கம் நடத்திக்கொண்டிருந்தவளின் கன்னித்தன்மை தன் விருப்பமின்றி இன்னும் சில மணி துளிகளில் கற்பூரமாய் காற்றில் கரைந்து செல்லவிருக்கிறதை அவள் அறியாமல் போனாள்.

கற்பு காளையனின் கையில் களவு போக,காலன் காம தேவனின் பொம்மையானான்.
 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top