முகிழ்மதி 14,15

முகிழ்மதி 14

தாயின் சொற்படி சந்திரமதியை அழைத்துக்கொண்டு ஜித்தேந்திரன் வரவேற்பறைக்கு வந்து கொண்டிருந்தான்.

அவனின் விழிகள் அவளை தான் ஆராய்ச்சியாய் பார்த்துக்கொண்டிருந்தது.

அச்சமயம் சந்திரமதியின் அலைப்பேசிக்கு ஒரு தகவல் வந்தது.

‘யார்?’ என்று பார்ப்பதற்காக வேண்டி அலைப்பேசியை கையில் எடுத்தவள்,தன் பின்னால் வந்துக்கொண்டிருந்த ஜித்தேந்திரனை ஓரக்கண்ணால் கண்டுவிட்டு தன் முடிவை மாற்றிக்கொண்டாள்.

ஒருவேளை அந்த தகவலை அனுப்பியது அவளின் முன்னாள் காதலன் ஹரிஷாக கூட இருக்கலாம் என்று எண்ணினாள் அவள்.

அதனால் சடுதியில் சுதாரித்து அலைப்பேசியை மறைத்த பெண்ணவள் வேகமாக திரும்பி நடக்க ஆரம்பித்துவிட்டாள்.

அவளின் அந்த செயல் அவனிற்குள் சந்தேகத்தை வரவழைத்தது.

அதனால் “சந்திரமதி ஒரு நிமிஷம் நில்லுங்க” என்றான் கடுமையான குரலில்.

அவளோ ‘என்ன?’ என தெனாவெட்டாக அவனை ஏறிட,

அவளின் பாவனை அவனிற்கு அறவே பிடிக்கவில்லை.

ஆனால் அவளிடம் பேசியாகவேண்டிய கட்டாயம் அவனிற்கு!

தன் மனதில் அரித்த வினாவை அவளிடம் எந்த வித தயக்கமின்றி நேரடியாகவே தொடுத்துவிட்டான் அவன்.

அவளை அழுத்தமாக நோக்கி “உங்களுக்கு இந்த கல்யாணத்திலே இஷ்டமில்லைனா அப்புறம் எதுக்கு இந்த கல்யாணத்துக்கு ஓகே சொன்னீங்க?” என அவன் பட்டென்று கேட்டுவிட,

அவன் அதிரடியாக இப்படியொரு கேள்வியை எழுப்புவான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.

ஒரே ஒரு கணம் மட்டுமே அவனின் கேள்வியில் தடுமாறினாள் பெண்ணவள்.

ஆனால் சடுதியில் அவளின் இயல்பு குணம் தலைத்தூக்க “எக்ஸ்க்யூஸ்மி..இதெல்லாம் நீங்க ஏன் கேட்கறீங்க?முதல்ல உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு என்னை கேள்வி கேட்க…ஹான்” என உச்சக்கட்ட கோபத்துடன் சீறியவள்,

“இன்னொரு முறை என்கிட்ட இந்த மாதிரி பேசற வேலையெல்லாம் வைச்சுக்கிட்டீங்க…அப்புறம் நான் அமைதியா பேசிட்டு இருக்கமாட்டேன்…மைண்ட் இட்” என முகத்திலடித்தாற் போன்று பேசிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து சென்றுவிட்டாள் சந்திரமதி.

அவளின் அந்த பதிலில் அவனின் முகம் கறுத்து சிறுத்தது‌.

அவன் பிறந்திலிருந்து இதுப்போல் அவனை யாவரும் அவமதித்து பேசியதே இல்லை.

அவன் சகஜமாக பேசி பழகுவதால் அனைவருக்கும் அவனை பிடிக்கும்.

முதல் முறையாய் ஒரு பெண் அவனை எதிர்த்து பேசியதோடு மட்டுமின்றி அவனின் தன்மானத்தை இழிவுப்படுத்தி செல்லவும்,அவளின் மீது அவனிற்கு அப்பட்டமான வெறுப்பு தோன்றியது.

அதனால் செல்லும் அவளின் முதுகை வெறித்த ஜித்தேந்திரன் ‘பேசினால் என்ன பண்ணுவாளாம்?பெரிய விஜயசாந்தின்னு நினைப்பு…திமிருப்புடிச்சவாள்’ என திட்டிக்கொண்டே அவனும் தனது அறைக்கு சென்றுவிட்டான்.

இதேநேரம்,

ரத்தினவேல் மார்பிற்கு குறுக்கே கைகள் கட்டி தனது அலுவலக அறையின் சன்னல் திரையின் மீது சாய்ந்து நின்றிருந்தான்.

அவனது பிரத்யேக அறைக்கு அருகில் தான் இந்த அலுவலக அறையும் அமைந்திருந்தது.

அவனிற்கு நேரெதிரே அறையின் வாசலின் அருகே முகிழ்மதியும் பாதுகாவலன் ஒருவனும் நின்றிருந்தார்கள்.

முகிழ்மதியோ அவனை ஏறிட தயக்கமுற்று கையை பிசைந்தப்படி நின்றிருந்தாள்.

ரத்தினவேலின் கூரிய விழிகளோ அவளை அங்குல அங்குலமாக அளந்துக்கொண்டிருந்தது.

சற்று நேரத்திற்கு முன்பு,

பாவையவளை தனது அறையிலிருந்து பார்த்திருந்த ரத்தினவேல் தனது உதவியாளனுக்கு அழைத்து,அவளை தனது அலுவலக அறைக்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டிருந்தான்.

அதன்படி, கீழே இயற்கையின் எழிலை ரசித்துக்கொண்டிருந்த முகிழ்மதியிடம் வந்த காப்பாளனும் “மேம் உங்களை சார் கூப்பிடறாரு” என்றழைத்தான்.

அவனது திடீர் அழைப்பில் அவள் திடுக்கிட்டாலும் ‘சாரா?’ என கேள்வியாக அவனை நோக்கினாள்.

அவனோ அவளின் கேள்விக்கு எவ்வித பதிலும் கூறவில்லை.

அவளை புன்னகையுடன் மட்டுமே பார்த்திருந்தான்.

ரத்தினவேல் அவனிற்கு கொடுத்த கட்டளையை நிறைவேற்ற மட்டும் தான் அவனிற்கு அனுமதி இருந்தது.

அதற்கு மேல் எதை பேசவும் அவனிற்கு உரிமையில்லை.

அவன் ஆணையை மீறி நடந்தால் 
அவனின் உஷ்ண விழிகளுக்கு பலியாக நேரிடுமே?

ஆதலால் தன் பயத்தை மறைத்து “பிளீஸ் கம் மேடம்” என சிரித்துக்கொண்டே அவன் அவளிற்கு வழிகாட்டினான்.

அவளுமே வேறுவழியின்றி அவனை பின்தொடர்ந்தாள்.

யாவருக்கும் தெரியாதது போல் அவளை மறைத்து வைத்து ரத்தினவேலின் அலுவலக அறைக்கு அழைத்து வந்திருந்தான் அந்த மெய் காப்பாளன்.

சுருங்கக் கூறினால்,ரத்தினவேல் அவளை தன் கைப்பாவையாக மாற்றி ஆட்டிவித்திருந்தான்.

முதலில் அவன் ‘சார்’ என்று கூறியதினால்,அந்த சார் விஜயேந்திர பூபதியாக இருக்கக்கூடுமோ என்று எண்ணியிருந்தாள் முகிழ்மதி.

ஏனெனில்,அவளை அழைக்க வந்திருந்தது கருப்பு உடை அணிந்த ஒரு மெய்க்காப்பாளன்.

அதுவும் முதலமைச்சரின் பிரத்யேக மெய்க்காப்பாளன் என்று அவளிற்கு அப்பட்டமாக தெரிந்தது.

அதன்பொருட்டே,தன்னை அழைத்தது சந்திரமதியின் வருங்கால மாமனார் என்று எண்ணியிருக்க,இங்கு நடந்ததோ வேறாக இருந்தது.

அவளை அங்கு வருவித்தது தமக்கையின் வருங்கால கணவர் என்று தெரிந்ததும் அவளிற்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.

புலியை கண்டு மருளும் மான் போல் மருண்டு விழித்தாள் அவள்.

ஏனோ அவனை கண்டாலே அவளின் நெஞ்சம் படபடத்தது.

அச்சமும் பதட்டமும் கலந்த உணர்வுடன் நின்றிருந்தவளை ரத்தினவேல் சில கணங்கள் ஆழ்ந்து நோக்கினான்.

பின்பு தலையை உலுக்கி அவளை அழைத்துக்கொண்டு வந்த மெய்க்காப்பாளனிடம் ‘போ’ என்பது போல் கட்டளையிட,முதலாளியின் கண்ணசைவை மீற முடியாமல் அவன் அங்கிருந்து விடைப்பெற்றான்.

அவன் செல்வதை கண்டு பதறிய காரிகையோ ‘ஐய்யோ அவரை எதுக்கு இந்த மான்ஸ்டர் அனுப்பறாரு?அவரும் இங்க இருக்கட்டுமே’ என சொல்லிவிட தான் துடித்தாள் அவள்.

ஆனால் மனதில் நினைப்பதை எல்லாம் பேசி விட்டால் அவள் முகிழ்மதி அல்லவே?

அவனை பார்க்கவே அஞ்சினாள் பேதையவள்.

இப்போது அந்த அறையில் அவளும் அவனும் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

தனித்து அவனுடன் ஒரு அறையில் என்று சிந்திக்கும் போதே அடி வயிறு கலங்கியது‌.

அவன் உடனிருக்கும் போதாவது சிறிது துணிச்சலுடன் நின்றிருந்தவளிற்கு இப்போது பயத்தில் உடல் வெடவெடக்க தொடங்கிவிட்டன.

அதிலும் ரத்தினவேலின் விழிகள் அவளின் மீது அழுத்தமாக பதிவதை அறிந்ததும்,அவளிற்கு அச்சத்தில் மேனியெங்கும் வியர்வை அரும்புகள் பூத்தன.

‘நான் என்ன சிங்கமா புலியா?எதுக்கு என்னை பார்த்து இப்படி பயப்படறாள்?’ என சலிப்பாக எண்ணிய ரத்தினவேல் மெதுவாக அவளை நெருங்கினான்.

அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அவளது இதயத்தின் தாளம் தப்பியது.

விட்டால் அவளின் இதயம் எகிறி துடித்து வாயின் வழியே வந்துவிடும் போலும்.

அப்படியொரு அச்சம் அவளுள்!

“முகிழ்மதி…” என முதன்முறையாய் அவனது இதழிலிருந்து அவளின் பெயர் வெளிவந்திருந்தது.

அவனது முரட்டு தேகத்திற்கு சற்றும் பொருந்தாத ஒரு மென்மை அவன் குரலில்!

சட்டென விழி உயர்த்தி அவனை ஏறிட்டாள் பாவையவள்.

அவனது குரலில் இருந்த மென்மை அவனது முகத்தில் மருந்திற்கும் இல்லை.

உணர்வுகளை முகத்தில் காட்டாமல் இருக்கும் வித்தை அறிந்தவன் அவனாயிற்றே?

அதனால் அவன் அகத்தில் நினைப்பது எதுவும் அவனது முகத்தில் வெளிப்படவில்லை‌.

ஆனால் அவனது மென்மை பொருந்திய குரல் பாவையவளின் நெஞ்சத்தை ஊடுருவி செல்ல,அவளிற்கு மூச்சடைப்பது போல் இருந்தது.

அவளது மூச்சு சீரற்ற நிலைக்கு செல்லும் முன் வேகமாக அவளை நெருங்கிய ரத்தினவேல் “ரிலாக்ஸ்…எதுக்கு இப்போ இவ்வளவு டென்ஷனாகிறே?” என அவளை வந்து தாங்கிப்பிடித்தான்.

அவளை அவன் தீண்டிய நொடியே இருவரின் தேகத்திலும் மின்சாரம் பாய்ந்த ஓர் உணர்வு!

சட்டென அவன் தனது கைகளை விலக்கிக்கொள்ள,

அவளோ துடித்த தன் நெஞ்சத்தை கரத்தால் பற்றி அவனை படபடப்புடன் ஏறிட்டாள்.

அவளிற்கு இப்போதும் மூச்சிறைத்துக்கொண்டு தான் இருந்தது.

இது அவளின் சுவாச கோளாறினால் உண்டான மூச்சிறைப்பு இல்லை.

இதயத்தின் தாளம் தப்பியதினால் உண்டான பதட்டம் மூச்சிறைப்பை கொடுத்திருந்தன.

அதையறியாத பெண்ணவளோ தன்னுடைய வியாதி தன்னை வாட்டிகிறது என்றெண்ணி சுவாச உள்ளிழுப்பனை அவசரமாக எடுத்தாள்‌.

லெஹன்காவின் பாவாடையில் சுருக்கு பாய் போல் ஒன்றை மாட்டியிருந்தாள்.

அதில் அவளது சுவாச உள்ளிழுப்பனை பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்.

இப்போது அதை எடுத்து காற்றை உள்ளிழுத்து சுவாசித்தாள் அவள்.

ஆனாலும் அவளின் மூச்சிறைப்பு அடங்குவதாக இல்லை.

அவளிற்கு மட்டும் தான் அதன் காரணம் தெரியாமல் இருந்தது.ஆனால் அவளையே விழி அகற்றாமல் பார்த்திருந்த ரத்தினவேலிற்கு அவளின் நிலை என்னவென்று நன்றாகவே புரிந்தது.

அதனால் கண்மூடி ஒரு முறை இதழ் குவித்து ஊதிக்கொண்டவன்,மெதுவாக விழி திறந்து “முகிழ்மதி நான் உன்னை ஒண்ணும் பண்ணப்போறதில்லை…நீ என்னோட ரூம் இன்டீரியரை பார்க்க கேட்டேனு தமயந்தி சொன்னாள்…வேற எந்த ஒரு இன்டென்ஷனும் எனக்கில்லை…சோ ஜஸ்ட் ரிலாக்ஸ்” என நிறுத்தி நிதானமாக கூறி,அவளின் அச்சத்தை நீக்க முயற்சித்தான்.

அவன் பொறுமையாக பேசியதற்கு பிறகே அவளின் மனதிலிருந்த அச்சம் சிறிது சிறிதாக அவளிடமிருந்து விடைப்பெற்றன.

உள்ளிழுப்பனை தனது பையில் வைத்துவிட்டு அவனை ஏறிட்டவளின் விழியில் பல வர்ண ஜாலங்களின் கலவைகள்!

ஆச்சரியம்,ஆர்வம்,ஆர்ப்பரிப்பு ஆகிய ஒட்டுமொத்த உணர்வுகளும் அவளது மனதில் முகாமிட்டிருந்தன.

அதன் வெளிப்பாடு தான் அவள் கண்ணில் தெரிந்தது.

அவன் தன்னை அவனறைக்கு அழைத்து செல்லப்போகும் பரபரப்பில் “உங்க ரூமை காட்டப்போறீங்களா எனக்கு? நிஜமாவா?” என மெல்லியதாக என்றாலும் துள்ளலாக வெளிவந்திருந்தது அவள் குரல்.

ரத்தினவேலின் புருவம் ஒரு கணம் ஏறி இறங்கின.

உட்புற வடிவமைப்பின் மீது அவளிற்கு இருந்த ஆர்வம் அவனிற்கு தெளிவாக தெரிந்தது.

இருப்பினும்,அவளின் கேள்விக்கு அவன் எவ்வித பதிலும் கூறவில்லை.

ஏனெனில்,அவனோ அவளின் பொன் நிற மேனியில் துளிர்த்திருந்த வியர்வை துளிகளின் மீது பார்வையை பதித்திருந்தான்.

ரோஜா இதழின் மீதிருக்கும் பனித்துளி போல் அவளின் சிவந்த சருமத்தின் மீதிருந்தது அந்த வியர்வை துளிகள்!

அதையே சில வினாடிகள் ஆழ்ந்து பார்த்திருந்த ரத்தினவேல் “கர்ச்சீப் எடுத்து உன் முகத்தை துடை” என அவளின் இடையில் சொருகியிருந்த கைக்குட்டையை கண்ணால் குறிப்பு காட்டி சொன்னான்.

அவனின் விழிகள் தன் இடையில் உரிமையை பதிந்து மீண்டதை கண்ட முகிழ்மதிக்கு நெஞ்சம் படபடத்தது.

சட்டென விழி தாழ்த்தி “ம்” என்றவாறு தனது கைக்குட்டையால் முகத்திலிருந்த நீரை ஒற்றியெடுத்தவளிற்கு அப்போதும் பதட்டம் விலகவில்லை.

ஏனோ அவன் தன் இடையின் மீது பார்வை பதித்த விதம் அவளிற்கு ஒரு மாதிரியாக இருந்தது.

அதனால் வியர்வையை துடைத்துவிட்டு மீண்டும் கைக்குட்டையை தனது இடையில் சொருகப்போன முகிழ்மதி பின்பு ‘என்ன நினைத்தாளோ?’ கைக்குட்டையை தன் உள்ளங்கைக்குள் பத்திரமாக வைத்துக்கொண்டாள்.

அவளின் முகம் மட்டும் செவ்வானமாய் சிவந்திருந்தது.

அது வெட்கத்தினாலா அல்லது சங்கடத்தினாலா என்பதை காரிகையவள் மட்டுமே அறிவாள்‌.

அவளின் முகச்சிவப்பை ஒரு கணம் உற்று நோக்கிய ரத்தினவேல் சடுதியில் தலையை உலுக்கிக்கொண்டு “சரி வா” என்றப்படி முன்னே நடக்க தொடங்கிவிட்டான்.

சில அடிகள் அவனை பின்தொடர்ந்த பெண்ணவள் சட்டென நின்றுவிட்டாள்.
 

முகிழ்மதி 15

 

திடீரென்று அவளின் அரவம் நின்றதும் அவன் பின்னால் திரும்பி ‘என்ன?’ என்று வினவ,

அவளோ தயக்கத்துடன் “தமயந்தி அக்கா…” என பின்னால் கைகாட்ட,

அவனிற்கு சட்டென கோபம் வந்துவிட்டது.

“தனியா வந்தால் நான் என்ன உன்னை கடிச்சு தின்னவா போறேன்…எதுக்கு இப்போ பயப்படறே நீ” என அவன் அடிக்குரலில் சீற,

அவளோ மிரண்டு ஓரடி பின்னால் சென்றாள்.

அதைக்கண்டு “ப்ச்” என சலித்துக்கொண்ட ரத்தினவேல் ஆழ்ந்து மூச்சை இழுத்து கோபத்தை கட்டுப்படுத்தியவன் “வா” என மென்மையாக கூற,

அவளோ தலைகுனிந்து முந்தாணியை பிடித்து கசக்கியவாறு
“ப…பயமா இருக்கு” என்றாள் திக்கி திணறி,

அவனோ இமைகள் இடுங்க “பயமா?யாரை பார்த்து பயம்?” என கணீர் குரலில் கேட்க,

அவள் மௌனமாக எதுவும் பேசாமல் தலைக்குனிந்து நின்றிருக்க,

அதில் கடுப்பானவன் “உன்னை தான் கேட்கிறேன்…யாரை பார்த்து பயம்?” என குரலுயர்த்தி அதட்ட,

அவளிற்கோ மேனி தூக்கிவாரிப்போட்டது.

விட்டால் அழுது விடுவாள் போலும்!

“ப்ச்…” என சிகையை அழுந்த கோதி சலித்த ரத்தினவேல் “முகிழ்மதி இத்தனை பேரு இருக்க வீட்டிலே நான் உன்னை என்ன பண்ணிடுவேன்னு நினைக்கிறே?அப்படி என்ன பயம் உனக்கு?” என இடையில் ஒற்றை கைக்குற்றி எரிச்சலாக வினவ,

அவளோ இப்போது மெதுவாக நிமிர்ந்து “உ…உங்களை பார்த்தாலே பயமா இருக்குது” என்றாள் தழுதழுத்த குரலில்.

அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது என்று இதுவரை யாரும் வெளிப்படையாக கூறியதில்லை.

சற்று முன்பு மெய்க்காப்பாளன் கூட அவனை கண்டு அஞ்சுக்கிறான் தான்.

அவன் கூட இந்த அளவு துணிச்சலோடு அவனின் முகத்திற்கு நேரெதிரே சொல்லிவிட மாட்டான்.

முதல் முறையாய் தன்னை பார்த்தால் பயமாய் இருக்கிறது என்று ஒருத்தி கூறுகிறாள்.

அதிலும்,ஒரு பெண்!

சட்டென அவனுள் ஒரு இளக்கம்!

‘துணிச்சல் தான்’ என எண்ணி மீசையை நீவிக்கொண்ட ரத்தினவேல் தொண்டையை செருமி “நான் என்ன சிங்கமா புலியா?இல்லை பார்க்கவே கொடூரமா இருக்கேனா என்ன?எதுக்கு பயப்படறே நீ?” என இலகுவான குரலில் அவன் வினவ,

அவளோ குனிந்த வாக்கிலே “இல்லை” என மெல்ல தலையாட்ட,

“இல்லைனா என்ன அர்த்தம்?முதல்ல என்னை நிமிர்ந்து பாரு…தப்பு செய்யறவங்க மட்டும் தான் என் முன்னாடி தலைக்குனிஞ்சு நிக்கணும்” என்று அவன் அதட்டி சொன்னதும் அவள் அவனை தயக்கமாக ஏறிட,

அதற்காகவே காத்திருந்தாற் போன்று “நான் பார்க்க கொடூரமா இருக்கேனா என்ன?” என புருவம் உயர்த்தி கேட்க,

அவளோ அவனை மெதுவாக தலை முதல் பாதம் வரை அளவிட்டாள்.

ஆறடி இரண்டு அங்குல உயரம்,அவர்களது கட்சி கொடி நிறத்தில் கரையிட்ட வெண்ணிற வேட்டி,வெண்ணிற சட்டை,அடர்ந்த மீசை தாடி,பரந்து விரிந்த தோள்கள்,புடைத்து முறுக்கேறிய புஜங்கள்,தங்கத்தினலான புலி முகம் பதித்த காப்பு என முரட்டுத்தனமான கதாநாயகனை ஒத்திருந்தான் அவன்.

அவனை தன் விழிகளால் அளந்த முகிழ்மதியை ஒற்றை புருவம் உயர்த்தி கண்ட‌ ரத்தினவேல் “என்னை முழுசா பார்த்து முடிச்சிட்டியா?பார்க்க மான்ஸ்டர் மாதிரி இருக்கானா என்ன?” என இதழை வளைத்து நக்கலாக கேட்க,

அவளோ ஏதோ ஒரு ஞாபகத்தில் ‘ஆம்’ என தலையாட்டிவிட,

“வாட்” என அவன் சீறியதும் விலுக்கென்று தலையுயர்த்திய முகிழ்மதி திருதிருவென விழித்தாள்.

அவளை அவன் கொலைவெறியோடு முறைக்கவும்,அவளோ எச்சிலை கூட்டி விழுங்கி “நீ…நீங்க மான்ஸ்டர் மாதிரியெல்லாம் இல்லை…ரக்கெட் ஹேண்ட்சமா இருக்கீங்க” என பயத்தில் உளறிக்கொட்டினாள்.

அவள் பேச்சை கேட்ட ரத்தினவேலின் இதழோரம் சிறு கீற்றாய் ஒரு புன்னகை.

ஆனால் அந்த புன்னகை கூட வந்த வேகத்திலே மறைந்தும் போனது.

புன்னகைக்க மறந்த அந்த அழுத்தக்காரனையே ஒரு நொடி என்றாலும் சிரிக்க வைத்துவிட்டாள் அவள்.

அதிலும் பயந்துக்கொண்டே துணிச்சலாக தன்னை முரட்டு அழகன் என்று அவள் விமர்சித்த விதம் அந்த ஆறடி உயர மனிதனை ஈர்க்கவே செய்தது.

ஆனால் அவளை மனமாற வாய்திறந்து பாராட்ட அவனது ஆணவம் ஒப்புக்கொள்ளுமா என்ன?

பழிவெறி ஊறிப்போயிருந்த ரத்தினவேலின் முகம் மீண்டும் இறுக்கமாகிவிட “சரி வா…எனக்கு 2 மணிக்கு ஒரு மீட்டிங் இருக்கு” என்றவனின் குரலில் இப்போது மீண்டும் ஒரு கடுமை வந்திருந்தது.

அதன்பிறகு அவளிடம் அவன் எந்தவொரு வார்த்தையும் பேசவில்லை.

வேகமாக அவளை தன்னறைக்கு அழைத்து சென்றான்.

அவளோ புது மணப்பெண் அவனறைக்கு செல்லும் சஞ்சலத்துடனே கால்கள் பின்ன மெதுவாக அவனிற்கு பின்னால் நடந்து சென்றாள்.

அவள் ஒரு அடி எடுத்து வைக்கும் நேரத்தில் அவன் ஐந்தடி வைத்துவிட்டான்.

அத்துணை தூரம் மெதுவாக நடந்து வந்தாள் அவள்.

அவள் தன்னருகே வரும் வரை அவளிற்காக அவன் பொறுமை காத்து நின்றான்.அவளிடத்தில் வேறு யாரேனும் இருந்திருந்தால் கண்டப்படி திட்டியிருப்பான்.

அவள் என்பதால் மட்டுமே இந்த நிதானமும் கூட!

எதனால் தன்னுள் இந்த மாற்றம் என்று அவன் ஆழ்ந்து யோசிக்க முயற்சிக்கவில்லை.

ஏனெனில்,அவனிற்கு தான் அதற்கான விடை தெள்ள தெளிவாக தெரியுமே?

ஆனால் அதை ஏற்றுக்கொள்ள அவனது கர்வம் பிடித்த உள்ளம் தடுத்தது.

அவனது பழிவெறிக்கு முன்னால் அவனின் அன்பின் தராசு கீழிறங்கி சென்றன.

அவன் அலமாரிக்குள் பூட்டி வைத்திருந்த அவளின் கால் சலங்கையை போல்…

அவன் மனதையும் பூட்டி வைத்திருந்தான்,அந்த மூர்க்கன்.

ரத்தினவேல் அவளை அழைத்துச் சென்ற அறை ஒரு சாதாரண அறையல்ல.அரசனின் சிறு மாளிகை போல் தோற்றமளித்தது அவனது அறை.

அவன் கதவை திறந்த நொடியே அவளது கண்கள் இரண்டும் கூசின.

ஒரு முறை இமை மூடி திறந்தவளின் விழிகள் அறையின் உட்புற வடிவமைப்பை கண்டதும் பிரம்மிப்பில் விரிந்தன.

தங்க நிற விளக்கொளியில் அவனறை தகதகவென மின்னியது.

அவனது அறையின் வாசலில் கலம்கரி வேலைபாடுகள் கொண்ட ஒரு பெரிய மென் கம்பளம் ஒன்று விரிக்கப்பட்டிருந்தன.

ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்தி வடிவ விளக்குகள்,அவற்றின் ஒளியில் பளபளக்கும் தங்க நிற நாற்காலிகள் மற்றும் நீள் விரிக்கைகள்,அவற்றின் மேலிருந்த சிவப்பு நிற வெல்வெட் துணிகள்,இருக்கையின் முகப்பில் வடிவமைக்கப்பட்ட புலி முகம்,சிவப்பு நிற வழவழப்பான திரைச்சீலைகள்,தங்க நிறத்தில் உருவங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட கட்டில்,சிவப்பு நிற மெத்தை,அறையின் நடுவே பொருத்தப்பட்டிருந்த பிரம்மாண்டமான மஞ்சள் நிற மேற்கூரை விளக்கு,அறையின் நடுவே ஆங்காங்கே விரிக்கப்பட்டிருந்த அதே கலம்கரி வேலைப்பாடு கொண்ட கம்பளம் இவை அனைத்தும் பழங்கால அரச மரபினை நினைவூட்டின.

இவ்வாறு அவ்வறையில் நிறைந்திருந்த ஒவ்வொரு பொருளும் அவனது கலை தாகத்திற்கு ஒரு சான்றாய் அமைந்திருந்தன.

அவனோ “நீ போய் சுத்திப்பாரு…” என்றவாறு அங்கிருந்த நீள்விரிக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்துக்கொள்ள,அவளோ சிறுப்பிள்ளையின் உற்சாகத்துடன் தலையாட்டி நடக்க ஆரம்பித்தாள்.

அவள் மெதுவாக விழிகளை சுழற்றி ஒவ்வொரு பொருளாக தொட்டு பார்த்து அதன் அழகினை கண்ணால் ரசிப்பதோடு அதனை உணர்வும் செய்தாள்.

முதலில் ‘எதையும் தொடாதே’ என எச்சரிக்க எண்ணியவன்,பின்பு அவளின் விழிகளில் மின்னிய ஒளியை பார்த்துவிட்டு மௌனம் காத்தான்.

அவள் அவனது அறையை ரசிக்க,அவனோ அவளையும் அவளது முகத்தில் தெரிந்த உணர்வுகளையும் தான் அவதானித்திருந்தான்.

மாளிகையின் வெளிப்புற தோற்றம் வெண்ணிறத்தில் ஜொலித்தது என்றால்,அதற்கு நேரெதிராக தங்கத்தில் ஜொலித்தது அவனறை!

கீழிருந்து மேல் வரை அனைத்தும் அவனது கைவண்ணம்.

அறையில் வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு சிற்பங்களும் சுவற்றில் மாட்டிருந்த ஓவியங்களும் அனைத்தும் ஒரு உயிர்ப்புடன் இருந்தது.

அதிலும் அந்த கண் கவர் ஓவியங்கள் அவளின் மனதை கவர “இது கூட நீங்க தான் வரைஞ்சீங்களா?” என ஓவியத்தை சுட்டிக்காட்டி ஆர்வமாக அவனிடம் வினவ,

அவனோ “ஆம்” என்று மட்டும் தலையசைத்தான்.

உடனே அவளின் நெஞ்சில் ஒரு நெகிழ்ச்சி!

அவனின் மீதிருந்த அபிப்பிராயம் முதல் முறையாய் அவளுள் மாறிய தருணம் அது தான்!

இரண்டு நிமிடங்களுக்கு முன்பு வரை கொலைக்காரன்,முரடன் என்றெல்லாம் மனதிற்குள் செதுக்கி வைத்திருந்த அவனின் விம்பம் இப்போது உடைந்து தூள் தூளாக நொறுங்கிப்போனது.

ஏனெனில்,சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் இரண்டிற்கும் உயிர் கொடுப்பது என்பது அத்துணை எளிதான காரியமல்ல.

பலராலும் சாத்தியமில்லாத ஒன்று!

அந்த சாத்தியமில்லாத ஒன்றை ஒருவன் நடத்திக்காட்டுகிறான் என்றால் அவன் ஒரு சிறந்த வித்தைகாரன்.

அதுமட்டுமின்றி ஒரு கலையை உயிராய் நேசிப்பவனால் மட்டுமே அதற்கு உயிர்ப்பை கொடுக்க முடியும் என்பதை அவள் நன்கு அறிவாள்.

‘நிஜமாவே நீங்க தான் இதெல்லாம் செஞ்சீங்களா?’ என அவனிடம் கேட்க வாயை திறந்தாள்.

ஆனால் அவன் தவறாக எண்ணிக்கொள்வனோ என அஞ்சி வாயை மூடிக்கொண்டாள்.

அவளின் விழிகள் நம்பாத பாவனையில் சுருங்கியதை கவனித்த ரத்தினவேல் “உயிருள்ள மனுஷனுக்கு யார் வேணுமானாலும் உணர்ச்சியை கொடுக்க முடியும்…பட் உயிரற்ற பொருளுக்கு உயிரை கொடுக்கணும்னா அது ஒரு கலைஞனாலே தான் முடியும்” என்று தீர்க்கமான குரலில் கூறியதும்,

“ஹே நீங்களும் ‘ஸ்டார்’ அவரோட பிளாக் ஃபாலோ பண்ணறீங்களா?” என கண்கள் விரிய ஆர்வமாக அவள் வினவ,

அவனோ அவளை ஒரு கணம் ஆழ்ந்து நோக்கியவன் “ஏன்?உனக்கு அவர் யாருனு தெரியுமா?” என்று விசாரித்தான்.

அவளோ உற்சாகம் பொங்க “ஆம்” என ஆமோதிப்பாக தலையசைத்தவள்,

“அவர் ஒரு ஃபேமஸ் ஆர்க்கிடெக்ச்சர்…அவர் கட்டிடக்கலை பத்தி எழுதின எல்லா பிளாக்ஸையும் நான் படிச்சிருக்கேன்…இப்போ நீங்க சொன்னது‌ கூட அவர் எழுதின வரி தான்…எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்…அவரை பார்த்து தான் எனக்கு ஆர்க்கிடெக்சர் படிக்கணும்னு ஆசை வந்துச்சு” என முதன்முறையாய் தன் மனதில் நிறைந்திருந்த ஆசையை அதிக ஆர்ப்பாட்டமின்றி அவளிற்கே உரிய பாணியில் நிதானமாக வெளிப்படுத்தினாள் முகிழ்மதி.

அவனோ “ஓ” என நெற்றியை நீவியதோடு எதுவும் கூறவில்லை.

அவன் ஏதேனும் கூறுவான் என அவனையே ஆர்வமாக பார்த்தவளிற்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது‌.

அவனே ஒரு அழுத்தக்காரன்.அவனிடமிருந்து எதையும் எதிர்பார்க்கமுடியாது என்று தெரிந்துக்கொண்டாளோ அல்லது மீதிமுள்ள அவன் அறையை சுற்றிப்பார்க்க அவா கொண்டாளோ என்னவோ மிச்சமிருந்த இடத்தை பார்வையிட தொடங்கிவிட்டாள் அவள்.

அவள் அனைத்தையும் ஆழ்ந்து நோக்கும் போது ஒரே ஒரு சிலையில் மட்டும் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள்.

ஏனைய சிற்பங்களில் இல்லாத ஒரு வேற்றுமை அதனிடமிருந்தது.

ஏனெனில்,அந்த சிலையின் ஒரு கரம் மட்டும் மற்ற சிற்பங்களிலிருந்து வேறுப்பட்டு இருக்க,

உடனே ஆர்வ மிகுதியில் “இது என்ன?” என்று அவனின் புறம் திரும்பிக் கேட்டுக்கொண்டே அந்த சிலையின் கரத்தை தொட்டு கீழ்நோக்கி திருப்பியிருந்தாள்.

அவள் அடுத்ததாக செய்யவிருக்கும் செயலை அறிந்து “ஹே அதை தொடாதே” என அவன் கடுமையாக எச்சரித்து தடுப்பதற்குள் அதை செய்து முடித்திருந்தாள் மங்கையவள்.

அவள் அந்த சிலையின் கரத்தை திருப்பிய அடுத்த கணமே அவளிற்கு வலதுப்புறம் இருந்த ஒரு ரகசிய அறையின் கதவு திறக்கப்பட்டிருந்தது.

படீரென்று சத்தம் வந்த திசையை நோக்கி மிரட்சியுடன் திரும்பியவளிற்கு அதிர்ச்சியில் மூச்சே நின்றுப்போனது‌.

ஏனென்றால்,அங்கிருந்தது ஒரு பெண்ணின் உருவ சிலை.

அந்த பெண் அப்படியே உயிருடன் எழுந்து வந்ததை போல் இருந்தது.

அவள் அதிர்ச்சியில் வாயில் கைவைத்துக்கொண்டாள்.

அந்த சிலையின் கவர்ச்சியான தோற்றத்தை கண்டு “ச்சீ” என முகத்தை சுழித்து சட்டென இமைத்தாழ்த்தினாள் மங்கையவள்.

அதன் காரணம் பெண்களின் அபாயகரமான வளைவுகளை எடுத்துக்காட்டும் விதமாக கவர்ச்சியாக செதுக்கப்பட்டிருந்தது அந்த சிலை!

மன்னர் காலத்தில் அந்தப்புறத்தில் வாசிக்கும் பெண்கள் அணிந்திருக்கும் உடைகளை தான் அந்த சிலையிலிருந்த பெண்ணும் உடுத்தியிருந்தாள்.

திடீரென்று பாவையவளிற்கு ஏதோ உறுத்த,சட்டென இமை உயர்த்தி அந்த சிலையை காண முனைந்தாள்.

ஆனால் அவள் இமை உயர்த்திய நொடியே அவளை வெடுக்கென்று தன் புறம் திருப்பியிருந்தான் ரத்தினவேல்.

அவனது அதிரடியில் அவள் அதிர்ந்து விழிக்க,

தன் முன்னே நின்றிருந்தவளின் தோளை இறுக்கிப்பிடித்த ஆடவன் “முதல்ல வெளியே போ” என அறையே அதிர கர்ஜித்திருந்தான்.

அவனின் கர்ஜனையில் பூவை விட மெல்லியாளின் மேனி தூக்கிவாரிப்போட “அது..” என அவள் மிரட்சியுடன் பின்னால் கைகாட்ட,

அவளை உறுத்து விழித்தவன் “ஐ சேட் கெட் அவுட்…என் ரூமை பார்க்கணும்னு சொன்னே பார்த்திட்டயில்லை…முதல்ல கிளம்பு நீ” என அவளை பிடித்து வாசல் புறமாக தள்ளியிருந்தான்‌.

அவனது முரட்டுத்தனத்தில் தடுமாறிய பாவையவளின் கண்கள் கலங்கிப் போனது.

அழுகையில் அவளின் உதடுகள் நடுங்கின.

அவனை பின்னால் திரும்பி ஏறிடவே அவளிற்கு அச்சமாக இருந்தது.

‘இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தாரு…இப்போ எதுக்கு என்னை திட்டறாரு’ என ஒன்றும் புரியாமல் அழுதுக்கொண்டே வாசலை நோக்கி நடந்த பாவையவளின் மனம் ரணமாய் வலித்தது.

அவளை காயப்படுத்தி அனுப்பிய ஆடவனது உள்ளமும் அவளிற்காக துடிக்கவே செய்தது.

ஆயினும்,மனதை கல்லாக்கிக்கொண்டு சிலையை திரும்பி ஏறிட்ட ரத்தினவேலின் கண்களில் சிவப்பேறியது.

உடனே சிலையின் கரத்தை நேராக்கி அந்த ரகசிய அறையின் கதவை மூடியிருந்தவனின் நெஞ்சில் சொல்ல முடியாத ஒரு வலி!

அதீத வேதனையுடன் இமை மூடிக்கொண்டவனின் இதழ்கள் ‘ஸ்டார்’ என முணுமுணுத்தன.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top