கணவன் மாலை வீடு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை நன்றாக உறங்கி விட்டு எழுந்த வடிவு ‘ஹப்பாடி செம்ம வேலை…செம்ம தூக்கம்’ என உடலை முறுக்கி சோம்பல் முறித்து கடிகாரத்தில் மணி பார்த்தவளிற்கு தேகம் தூக்கிவாரிப்போட்டது.
‘ஆத்தாடி ஆத்தா…இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த கடங்காரன் வந்து சாப்பிட ஏதாவது கேட்பானே தின்னிபண்டாரம்’ என அவசரமாக பதறியடித்து எழுந்தவள் சமையலறை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள்.
கிராமத்தில் வளர்ந்தாலும் செல்லமாக வளர்க்கப்பட்ட பெண் என்பதாலும், அவளது வீட்டில் பணிப்புரிய நிறைய வேலையாட்கள் இருந்ததினால் இத்தனை நாட்கள் மெத்தனமாக இருந்து விட்டாள்.
ஆயினும்,மற்ற பணிகளை வேலையாட்கள் மேற்கொண்டாலும் சமையலை வீட்டு பெண்கள் மட்டுமே பார்ப்பதினால் சமையலில் நன்றாக கற்று தேர்ந்திருந்தாள் வடிவாம்பாள்.
அதனால் எந்த வித யோசனையுமின்றி விரைவாக முடிக்கக் கூடிய உணவுகளை சமைத்துக் கொண்டிருக்கையிலே வீட்டின் அழைப்பு மணி ஓசை எழுப்பியது.
‘அச்சோ மாமா வந்துட்டாரு போலவே’ என புலம்பிக் கொண்டே கதவை பதட்டத்துடன் திறந்தவுடன் அவளின் தலையில் நறுக்கென ஓங்கி ஒரு கொட்டு வைத்தான் துருவ்.
அதில் முகத்தை சுருக்கி மண்டையை தேய்த்துக்கொண்டே “எதுக்கு மாமா கொட்டினே??” என கோபமாய் வினவ,
அவனோ மீண்டும் இன்னொரு கொட்டு வைத்து, “ஏன் டி…உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்…வெளிய இருக்கிறது யாருன்னு கேட்டு கதவை திற னு…உனக்கெல்லாம் சொன்னா புத்தி வராது…பட்டா தான் புத்தி வரும்” வந்தவுடன் அவனது பல்லவியை பாடிக்கொண்டே உள்ளே நுழைந்தவன், “செம்ம பசி டி …நான் போய் குளிச்சிட்டு வந்திடறேன்…நீ சாப்பாடெல்லாம் எடுத்து வை” என்றவாறே அணிந்திருந்த சட்டையின் பொத்தானை அவிழ்க்க தொடங்கினான்.
பெண்ணவளோ அங்கிருந்து நகராமல் திருதிருவென விழிப்பதை கண்டு “என்னடி” என புருவம் சுருக்கி வினவியவுடன்,
தலையை சொறிந்து அசடு வழிந்துக்கொண்டே, “அது மாமா…இன்னும் சமையல் முடியலை” என மென்று முழுங்கியவள் அவனிடம் பேச்சு வாங்குவதற்கு தயாராய் மிரட்சியுடன் நிற்க,ஆனால் அவளே எதிர்ப்பாராத விதமாய், “சரி பரவாயில்லை…சீக்கிரம் ரெடி பண்ணிடு…சாப்பிட்டு வெளிய போகணும்” என தன்மையாக கூறிவிட்டு தன்னறைக்குள் நுழைந்துக்கொண்டான்.
செல்லும் அவனை விழி விரித்து பார்த்த பாவையவளிற்கு நடப்பது ‘கனவா?நினைவா?’ என குழப்பம் ஏற்பட,தன் கரங்களை தானே கிள்ளி பார்த்து, ‘ஹே வலிக்குது…அப்போ உண்மை தான்’ என மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் போதே, “ஏய் உன்னை எதுவும் சொல்லலைனு அட்வாண்ட்டேஜ் எடுத்துக்காதே…இன்னும் பதினைந்து நிமிஷத்தில் சாப்பாடு தயாராகலைனா இந்த துருவ்வோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி இருக்கும்…சீக்கிரம் போ டி” என பெரும் அதட்டல் போட்டவுடன்,
‘அடே பாவிபயலே கொஞ்ச நேரத்தில் உன்னை நல்லவன்னு நினைச்சிட்டேன்…நீயெல்லாம் திருந்தவே மாட்ட கடங்காரா’ என தன்னையே நொந்துக்கொண்டு சமையலறை ஓடியவள் அவன் குளித்துவிட்டு வருவதற்கு முன்பே உணவுகளை தயாரித்து மேசையின் மீது பரப்பி வைத்துவிட்டிருந்தாள்.
அவன் வந்து உணவு மேசையில் அமர்ந்தவுடன் “மாமா நீங்க சாப்பிடுங்க…நான் குளிச்சிப்புட்டு வேற உடுப்பு போட்டு தயாராகி வந்திடறேன்” என பரப்பரப்புடன் நெற்றியில் வழிந்த வியர்வையை புடவை தலைப்பால் துடைத்தப்படி கூறி தன்னறைக்குள் நுழைந்துக்கொண்டாள்.
சாப்பிடும் போது மனைவி அருகில் இருக்க வேண்டும் என்பது சில ஆண்களின் நியாயமான ஆசையாக இருக்கும்.
அதற்கு துருவ்வும் விதிவிலக்கு அல்ல.
பிடிக்காத மனைவி என்றப்போதிலும் அவளை தனக்கு பரிமாற விடாதப்போதிலும் ஏனோ அவ்விடத்தில் அவள் இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்த்தான்.
ஆனால் சடுதியாக தலையை உலுக்கி ‘துருவ் இதெல்லாம் நல்லதுக்கு இல்லை’ என்றெண்ணி உணவை தட்டில் வைத்து வயிறு நிறைய உண்டவன்,மறக்காமல் தட்டை எடுத்துச் சென்று தானே கழுவி வைத்துவிட்டு தயாராக தன்னறைக்குள் சென்றான்.
துருவ் தனக்கு பிடித்தமான வகையில் வெண்ணிற சட்டையும் வெளீர் நீல நிற ஜீன்ஸூம் அணிந்து முட்டிக்கு மேலே கைகளை மடித்துக்கொண்டே வெளியே வர,அதேசமயம் புடவையை நன்றாக சரிசெய்தப்படி வடிவும் அறையிலிருந்து வெளியே வந்தாள்.
அலங்கார மேசையின் மீதிருந்த வெள்ளி நிற பாசில் கை கடிகாரத்தை எடுத்து கையில் அணிந்துக்கொண்டு தலையை நிமிர்த்தியவனின் பார்வையில் விழுந்த மனைவியின் அலங்காரத்தை கண்டு வெறுப்போடு முகத்தை சுழித்தான்.
கிராமப்புற பெண்ணின் தாறுமாறான அலங்கோல தோற்றத்தை கண்டு ‘வெளிய கிளம்பினால் இவளுக்கு டிரஸ் எப்படி பண்ணனும்னு கூட தெரியலை…ச்சை’ என எரிச்சலோடு பற்களை நறநறவென கடித்துக்கொண்டிருந்த துருவ்வை கண்டுக்கொள்ளாமல் குளிர்சாதன பெட்டியிலிருந்து மல்லிகை பூவை எடுத்து ஒரு பெரும் குவியல் போன்று தலையில் சூட்டி,அவனை ‘ஐய்யோ’ என்று அலற வைத்தாள் நம் அதிரடி நாயகி.
அவனிற்கு வெளியே செல்வதற்கான மனநிலை இப்போது மாறி விட்டிருந்தாலும்,ஒவ்வொரு நாளும் அவனே கடைக்குச் சென்று வீட்டிற்கு தேவையான மூலப்பொருட்களை வாங்கி வர இயலாததால் அவளை கூட்டிச் சென்று கடையை காண்பித்து பழக்கப்படுத்துவதற்காகவே அவளை அழைத்துச் செல்ல முனைந்தான்.
அதனால் தன் சுயநலத்திற்காக அவளை வசைப்பாட துடித்த நாவை கட்டுப்படுத்தி “ஏய் பட்டிக்காடு…வீட்டை விட்டு வெளியே போன பிறகு நீ என் பக்கத்தில் வரக்கூடாது…பத்தடி தள்ளி பின்னாடி நடந்து வரணும்” என கட்டளையிட்டவனிடம் புரியாமல் “ஏன்?” என்று நாசி சுருக்கி காரிகை வினவ,
அவளை மேலிருந்து கீழாக ஒரு அருவருப்பான பார்வை பார்த்து, “கேவலமான டிரெஸ்ஸிங் சென்ஸ் இருக்கிற உன் கூட வந்தால் என் இமேஜ் தான் ஸ்பாயிலாகும்” என ஆணவத்துடன் கூறி வெளியேறி இருந்தான் துருவ்.
அவன் பாதி ஆங்கிலத்தில் கூறியப்போதும் அவனது பார்வையின் அர்த்தமே பாவையவளிற்கு அவனது எண்ணப்போக்கை வெளிச்சமிட்டு காட்டியது.
அதனால் எரிச்சலுடன் முகம் சுழித்து ‘இவன் என்னவோ ஆணழகன் மாதிரியும்…நம்மை என்னவோ குரங்கு மாதிரியும் சித்தரிச்சிட்டு போறான்…எங்க ஊரிலே அழகான பொண்ணு நான் தான்னு அப்பத்தா சொல்லும்…இவனுக்கு எங்க தெரியப்போகுது என்னோட அழகு’ என இவளும் பதிலுக்கு முணுமுணுத்து திட்டிக்கொண்டே வெதும்பிப் போய் வெளியே வந்தாள்.
“உள்ளிருந்து வெளியே வரதுக்கு இவ்வளவு நேரமா யூஸ்லெஸ்” என அதற்கும் அவளை தேளாய் கொட்ட,இவளிற்கு வாழ்க்கையே வரவர வெறுத்துப்போனது போல் இருந்தது.
இருப்பினும்,பதினெட்டு வயது நிரம்பிய போதிய அளவு முதிர்ச்சியில்லாத விளையாட்டு பெண் என்பதாலும்,ஏற்கனவே கவலையில் வாடும் தன்னுடைய பெற்றோரை மேலும் கலங்க வைக்க வேண்டாம் என்று மனதை தேற்றிக்கொண்டு அவனின் பின்னோடு நடந்தாள்.
கவனமாக பத்தடி விலகியே மின் தூக்கியிலும் பயணித்த தம்பதியினர் அந்த குடியிருப்பின் விளையாட்டு திடலை கடக்கும் போது “அம்மாடி வடிவு” என்ற குரலோசை கேட்டு முகம் மலர்ந்திட வாயெல்லாம் பல்லாக திரும்பியவளை தன்னருகே அழைத்தார் ஒரு வயதான மூதாட்டி.
அந்த குரல் கேட்டு துருவ்வும் அவரை பார்த்தப்படி திரும்பினாலும் அவரை நெருங்க நினைக்கவில்லை.
அவனிற்கு அதுப்போல் மற்றவரிடம் நின்று பேசும் வழக்கமுமில்லை.
ஆனால் அவனது மனைவியோ சகஜமாக, “என்ன பாட்டி?எதுவும் வேணுமா??” என கனிவுடன் விசாரித்தப்படி அவர் அருகே சென்று குனிந்தவளின் கன்னம் வழித்து, “அதெல்லாம் ஒண்ணுமில்லை கண்ணு…இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கே” என்றவுடன் நாணத்துடன் புன்னகைத்தவளிடம் மேலும், “தம்பிக்கூட முதல் முறையாய் வெளிய போறே…பிறகு ஏன் கூட போகாமல் பத்தடி தள்ளி வர” என பாட்டி சந்தேகம் கேட்க,
அதில் ஒரு நொடி முகம் சுருங்கினாலும் விரைவாக உணர்வுகளை மாற்றி அழகாக பற்கள் தெரிய புன்னகைத்து எந்த வித கர்வமும் இன்றி அவர் முன்பு மண்டியிட்டவள், “அது ஒண்ணுமில்லை பாட்டி…என்ற மாமாவுக்கு சொறி சிரங்கு…எங்க அவர் பக்கத்திலே போனால் எனக்கும் ஒட்டிக்குமோன்னு தள்ளியே வரேன்” என அப்பாவியாக சிரியாமல் கூற,அவளது கணவன் என்றால் அவளின் பொய்யை ஒரே நொடியில் கண்டறிந்திருப்பான்.
இவரோ அவளது பாவனையில் அதனை உண்மை என்று நம்பி துருவ்வை நோக்க,அவனோ அப்போது தான் கடித்துவிட்டு சென்றுக்கொண்டிருந்த கொசுவை தூற்றியப்படி கையை சொறிந்துக்கொண்டிருக்க,அதனை கண்டு திடுக்கிட்டு முகம் சுழித்த பெரியவர், “அய்யோ ஆமா கண்ணு…நீ சொன்ன மாதிரி தம்பிக்கிட்ட இருந்து தள்ளியே இரு” என்ற பாட்டி அவளது காதில், “நைட்டு புருஷனை தள்ளியே படுக்க வைச்சிடு கண்ணு…அவரோட ஒரு கட்டில்ல சேர்ந்து உறங்காதே” என அவளுக்கு அறிவுரை வேறு வழங்க,
அவளிற்கோ சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.இருப்பினும் அதே பாவமான பாவனையுடன், “சரி பாட்டி” என தலையாட்டி விடைப்பெற்றவளால் தொண்டை வழியாக வெளி வர துடித்த சிரிப்பை கட்டுப்படுத்த முயலாமல் “ஹாஹாஹா” என்று வாய்விட்டு பற்கள் தெரிய இடிஇடியென சிரித்தாள்.
கொசுவை ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்த துருவ்,அவளது விகாரமான சிரிப்பு சத்தத்தில் திகைத்து விழியை உயர்த்த,அதே சமயத்தில் அங்கு கூடியிருந்த சிலரின் பார்வையும் அசூசையுடன் அவளின் மீது விழுவதை கண்டு அவமானமடைந்த துருவ் அவளை பார்வையால் சுட்டெரித்தான்.
விழியில் அவனது அனலை உணர்ந்து கப்பென்று வாயை புடவை முந்தானையால் பொத்தி சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டு ஒரு வழியாக கட்டுப்படுத்தினாள் வடிவு.
அப்போதும் அவன் முறைப்பு தீராமல் அவளை சாம்பாலாக்கியவன் ‘உன்னை வீட்டுக்கு வா வைச்சுக்கிறேன்’ விழிகளாலே திட்டி ‘அவளை பின்னால் வரும் படி’ கண்சிமிக்கை செய்தான்.
‘ஐய்யோ வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சே’ என மனதிற்குள் அலறிய மங்கையும் அவனை உர்ரென்ற முகத்துடன் பின்தொடர்ந்தாள்.
கடிவாளமிட்ட குதிரை போல் அவனது காலடியை பார்த்தப்படியே நடந்துக் கொண்டிருந்தவள்,சில நிமிட நேர நடைக்கு பிறகு அவன் ஓரிடத்தில் நின்றப்போதும் அதனை சரியாக கவனிக்காமல் அவனில் வந்து மோதி “ஆஆஆ” என்று அலறி தடுமாறி நின்றாள்.
அதில் கடுப்பான துருவ்வின் முகம் இறுகியிருக்க, “கண்ணு என்ன பிடரியிலா இருக்கு…பார்த்துக்கூட நடக்க தெரியாதா?பட்டிக்காடு… பட்டிக்காடு” என வசைப்பாடியவுடன்,அவளது முகம் அவமானத்தில் சிவந்து கறுத்தது.
ஆனால் அவனோ அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் “மசமசன்னு நிற்காமல் உள்ளே வந்து தொலை” என சிடுசிடுத்தான்.
‘இவனிற்கு தன்மையாவே பேச தெரியாதா நாசமத்தவன்’ வெளிவரத்துடித்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு அவனை பின்தொடர்ந்து கடைக்குள் நுழைந்தாள்.
உள்ளே நுழைந்தவுடன் அந்த பல்பொருள் அங்காடியின் பிரம்மாண்டத்தில் தன் துக்கம் மறந்து ஆச்சரியத்துடன் விழி விரித்தவளை ஏளனத்துடன் நோக்கி அவளின் காதருகே குனிந்து, “உங்க ஊரில் இதெல்லாம் பார்த்திருக்க மாட்ட…நல்லா பார்த்துக்கோ பட்டிக்காடு…இது தான் சூப்பர் மார்க்கெட்…இங்கு வீட்டுக்கு என்னென்ன பொருட்கள் எல்லாம் வேணுமோ?எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்கும்” என நக்கலாக எடுத்துரைத்தவுடன்,
அதில் எரிச்சலடைந்தவள், “மாமா எங்க ஊருலையும் சுப்பர் மாருகெட்டு இருக்கு” என ரோஷத்துடன் கூற,
அவனோ குளிர்காற்றினால் அசைந்தாடிய சிகையை அழுந்தக்கோதி கண்சிமிட்டி “எது அந்த பத்து பன்னிரெண்டு ரூமுக்குள்ள மீந்த பொருளெல்லாம் கவருக்குள்ள அடைச்சு வைச்சு விக்கறாங்களே?அந்த ரூமையா சூப்பர் மார்க்கெட்டுன்னு சொல்ற” என கேலி செய்து இகழ்ச்சியாக சிரித்தான்.
அதில் அவமானமாக உணர்ந்த பாவை, ‘உனக்கு இருக்குடா மாமா’ என மனதில் வஞ்சிக்கொண்டு அமைதியாய் அந்த பல்பொருள் அங்காடியை சுற்றி பார்வையால் வலம் வந்தாள்.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு இடத்திற்கும் வரும்பொழுதும் “இங்கு தான் கிராஸரிஸ் இருக்கும்…ஐ மீன் சமைக்க தேவையான மளிகை பொருளெல்லாம் கிடைக்கும்…இங்கு தான் வெஜிடபிள்ஸ் இருக்கும்…இங்கு தான் கேட்பரீஸ் இருக்கும்…இங்கு தான் பேக்கரி ஐட்டம்ஸ் இருக்கும்…” என்று குழந்தைக்கு கூறுவது போல் ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்கம் கொடுத்து அவளின் பொறுமையை சோதித்து எரிச்சலடைய செய்தான்.
வேண்டுமென்றே அவளிற்கு ஆங்கிலம் தெரியாது என்ற காரணத்தினால் விபரங்களை ஆங்கிலத்தில் கூறி நக்கல் செய்து அதற்கு தமிழில் விளக்கம் கொடுத்து அவளது அறியாமையை குத்திக்காட்டியதை அந்த பேதை உணர்ந்தே இருந்தாள்.
எதுவும் பேசாமல் அமைதியாக அவனை பின்தொடர்ந்து வீட்டிற்கு தேவையான பொருட்களை எல்லாம் இருவருமாக சேர்ந்தே எடுத்தனர்.
அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு பொருட்களுக்கான பணம் செலுத்தும் முகப்பிற்கு வந்தவுடன் தள்ளுவண்டியிலிருந்து பொருட்களை எடுத்து அந்த முகப்பு இடத்தில் வைத்தவுடன்,கடையின் சிப்பந்தி வேகமாக விலையை கணினியின் வழியாக கணக்கீடு செய்தாள்.
இங்கு அதை பற்றி மனைவிக்கு பாடமாக இவன் எடுத்துக்கொண்டிருக்க, அனைத்தையும் விழிப்புடன் மனதிற்குள் குறிப்பெடுத்து கவனித்துக்கொண்டிருந்த பாவையவளின் கவனத்தை ஒரு இளம் நவநாகரீக யுவதி கலைத்தாள்.
மேலே கருப்பு நிற சட்டையும் கீழே தொடையை இறுக்கிப்பிடித்திருந்த பென்சில் ஜீன்ஸூம் அணிந்திருப்பதை கண்டு பாவையவள் முகம் சுழித்த வேளையில், அவளோ “ஹாய் துருவ்” என்றப்படி அவளது கணவனை எதிர்ப்பாராத விதமாக அணைத்துக்கொண்டாள்.
பதிலுக்கு அவனும் அந்த பெண்ணை அணைத்து “ஹாய் நயனி…வாட் ஆ பிளசண்ட் சர்ப்ரைஸ்…! எப்படி இருக்கே?” என ஆவலாக விசாரித்தான்.
அதில் வயிறு எரிந்து காதில் புகைவராத குறை தான் வடிவாம்பாளிற்கு!!
சேலையின் தலைப்பை ஆத்திரத்தோடு கைகளால் சுற்றிக்கொண்டே ‘அவ மூஞ்சையும் முகரையும் பாரு…அடுத்தவ புருஷனை கட்டிப்பிடிச்சிட்டு நிக்கறா… விளங்காதவ…அவளுக்கு தான் அறிவில்லைனா இந்த ஆளுக்கு எங்க போச்சு புத்தி…விவஸ்தை கெட்ட மனுஷன்…இவளையெல்லாம் என் அம்மாகிட்ட சொன்னா அம்மியில் வைச்சு அரைச்சுப்புடும் அரைச்சு’ என மனதிற்குள் இருவரையும் வசைப்பாடி கொண்டிருந்தவளை கண்டுக்கொள்ளாமல் அணைப்பிலிருந்து வெளிவந்த இருவரும் தங்களுக்குள் சகஜமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.
அவ்வப்போது தன் கணவனை தொட்டு பேசும் பெண்ணை காளி அவதாரம் எடுத்து முறைத்த வடிவு ‘இந்த கல்லால இருக்கிற அக்கா கூப்பிடறது கூட தெரியாமல் அந்த பொம்பளைக்கிட்ட பேசிட்டு இருக்கிறதை பாரு கடங்காரன்’ என திட்டி “யக்கா அந்த பில்லு சீட்டை என்கிட்ட கொடுங்க” என வெடுக்கென்று பிடுங்கி,இருவரின் பேச்சை தடுக்கும் விதமாக, “மாமா அந்த அக்கா கிட்டயிருந்து பில்லு சீட்டை நான் வாங்கிட்டேன்…இந்தாங்க காசு கொடுங்க” என தன்னுடைய கணவனை வேண்டுமென்றே இடித்துக்கொண்டு நின்றாள்.
அதில் தன்னை முறைத்த கணவனை கண்டுக்கொள்ளாமல் அந்த பெண்ணை ‘இது என் கணவன்’ என திமிராக அவளை ஒரு பார்வை பார்த்து வேறு வைத்தாள்.
‘இவ வேற என் இமேஜை ஸ்பாயில் பண்ணவே கிராமத்திலிருந்து கிளம்பி வந்திருக்கா…கன்ட்ரீ ப்ரூட்’ என திட்டிக்கொண்டே வெளியே சிரிப்பது போல் உதட்டை இழுத்து வைத்து “இதோ வந்திடறேன் நயனி” என கூறிவிட்டு தன் மனைவியிடமிருந்து நன்றாக விலகி கட்டணத்தை செலுத்தினான்.
அந்த பெண்ணோ வடிவாம்பாளை மேலிருந்து கீழாக இளக்காரமாக முகம் சுழித்து பார்த்தப்படியே, “இட்ஸ் ஓகே துருவ்…நான் வெளிய வெயிட் பண்றேன்” என பதிலளித்து வெளியேறினாள்.
வடிவோ இதையெல்லாம் பெரிதாக எடுக்காமல் ‘நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா?’ என எகத்தாளமாக நினைத்து வாங்கிய பொருட்களை ஒரு முறை சரிப்பார்த்தாள்.
அதற்குரிய பணத்தை செலுத்திவிட்டு வந்த துருவ் “என் பக்கத்தில் வந்து நிக்கற வேலையெல்லாம் வைச்சுக்கிட்ட மவளே…தொலைச்சிடுவேன்” என விரல் நீட்டி அவளின் காதோரம் சீறியவன், “மசமசன்னு நிற்காமல் சீக்கிரம் வாடி” என சிடுசிடுத்துக்கொண்டே அவனும் சிறிது பொருட்களை எடுத்துக்கொண்டு அங்காடியிலிருந்து வெளியேறினான்.
வடிவும் செல்லும் அவனின் முதுகை வெறித்தப்படியே வெளியே வந்தவளின் காதில் “அது சரி துருவ்…அந்த வில்லேஜ் இடியட் யாரு?” என்ற நயனிகாவின் நக்கலான கேள்வி விழுந்தது.
வடிவும் ‘என்ன கூறப்போகிறான்?’ என்று செவியை கூர்த்தீட்டி காத்திருந்த நேரத்தில் அவனோ கொஞ்சமும் தயங்காமல், “இது என் மாமா பொண்ணு…வீட்டுக்கு வேலைக்கு கூட்டி வந்திருக்கேன்” என்றவுடன் ‘அடப்பாவி!’ என வாயை பிளந்தாள் வடிவு.
“அப்படியா?ஆனால் கழுத்தில் தாலி இருக்கே??” என சந்தேகமாக அந்த பெண் வினவவும்,
“அது கல்யாணமான அன்னைக்கே பொண்ணை பிடிக்கலைனு மாப்பிள்ளை ஊரை விட்டு ஓடிப்போயிட்டான்” என்றான் அலட்சியமாக தோளை குலுக்கி.
அதில் சிறிதும் பாவம் பார்க்காமல் “ரியலி” என்று வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்த அந்தப்பெண், “இந்த அருக்காணியை பார்த்து அவன் ஓடி போகாமல் இருந்தால் தான் அதிசயம்” என்று துருவ்வின் தோள் தட்ட,அவனோ அவள் பெரிய ஹஸ்திதம் கூறியது போல் அவனும் வாய்விட்டு சிரித்தான்.
வடிவோ இருவரின் உரையாடலில் தேகமெல்லாம் தீப்பற்றிய உணர்வுடன் கணவனை நன்றாக உறுத்து விழித்தாள்.
அத்தோடு மட்டுமின்றி அவளின் கோபத்தை அதிகரிக்கும் விதமாக “ஊரிலே எல்லாரும் ரொம்ப கிண்டல் பண்ணறாங்கனு பாவம் பார்த்து கூட்டிட்டு வந்து வைச்சு சோறு போட்டுட்டு இருக்கேன்” என்றான் பெரிய தியாக செம்மலாக.
அதற்கும் அப்பெண் வாய்விட்டு சிரித்து வடிவை மேலும் அவமானப்படுத்தினாள்.
அத்தோடு மட்டுமின்றி அவனின் காதருகே குனிந்து “எல்லாம் சரி துருவ்…ஆனால் நீ ஜாக்கிரதையா இரு…உன் மேலே விழுற அவளோட பார்வையே சரியில்லை…நம்மை மாதிரி ஹைகிளாஸ் ஆளுங்கயெல்லாம் அந்த மாதிரி லோகிளாஸ் பொண்ணுங்ககிட்டயிருந்து தள்ளியிருக்கிறது தான் பெட்டர்…இல்லைனா நமக்கு தான் கேவலம்” என உடலை கூசும் வார்த்தைகளை உபயோகித்தாள்.
தன் மனைவியின் நடத்தையை பற்றிய ஞானம் இருப்பினும் ஏனோ அவ்விடத்தில் வடிவிற்கு சாதகமாக எதையும் கூறாமல் ‘சரி’ என தலையசைத்து வைத்து மிகப்பெரிய தவறு செய்தான்.
மூன்றாம் மனிதரின் முன்பு மனைவியை இழிவுப்படுத்துகிறோம் என்ற எந்த உறுத்தலுமின்றி அவளின் மென்மையான மனதை காயப்படுத்திக் கொண்டிருந்தான் துருவ்.
வடிவிற்கோ உடல்கூசி அழுகையும் ஆத்திரமும் ஒரு சேர தோன்ற,ஒரு கல்லை தூக்கி இருவரின் மண்டையிலும் போட்டு கொன்றுவிடும் வெறியும் உருவாகியிருந்தது.
ஒரு வழியாக அந்த பெண் கிளம்பிய பிறகு கதவருகே நின்றிருந்த மனைவியை கண்டு எந்த வித குற்றவுணர்வுமின்றி “சீக்கிரம் வாடி…நேரமாச்சு” என்று நடையை கட்டினான்.
இதற்கு மேலும் அவனை அண்டி வாழ்வதில் அவளிற்கு தன்னை நினைத்தே அவமானமாக இருந்தாலும்,தன்னுடைய தந்தை தாயினருக்காகவும் தன்னுடைய மாமாவிற்காகவும் அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டு அவனோடு சென்றாள்.
துருவ்வோ ஒரு சிறுப்பெண்ணின் மனதை சிறிது சிறிதாக உடைத்து பெரும் பாதகம் விளைவித்து கொண்டிருக்கிறோம் என்ற எந்த குறுகுறுப்புமின்றி நிதானமாக இருந்தான்.
வாங்கிய பொருட்களை இருவரும் சரி சமமாக பங்கிட்டு நெகிழி பையில் எடுத்துக்கொண்டு பத்தடி இடைவெளியில் நடந்துக்கொண்டிருந்த நேரத்தில் ஓரிடத்தில் கூட்டமாக இருந்தது.
அதனை கண்டு புருவம் சுருக்கிய துருவ்,அவ்விடத்தை நோக்கி நகர்ந்தான்.
கிராமத்தில் வாழும் மக்கள் மற்றவரின் பிரச்சனைகளை கண்டு ஓடி ஒதுங்காமல்,அதில் களமிறங்கி ஒரு கைப்பார்க்கும் குணமுடையவர்கள் என்பதால் வடிவும் அந்த கூட்டத்தை நோக்கி நடந்தாள்.
துருவ் திரளை விலக்கிவிட்டு உள் சென்று பார்த்தப் போது ஒருவன் அடிப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்துக்கொண்டிருந்தான்.
அதில் அதிர்ச்சயடைந்த துருவ் சடுதியாக நிகழ்காலத்திற்கு வந்து தன் கையில் இருக்கும் பொருட்களை அவ்விடத்திலே வீசிவிட்டு ஆபத்பாந்தவனாய் ஆபத்தில் இருந்தவனிற்கு உதவிப்புரிய அவனை நோக்கி ஓடினான்.
அதற்குள் கூட்ட நெரிசலை கடந்து உள்ளே வந்த வடிவும் நடந்ததை நினைத்து வருந்தி அவனிற்கு உதவி செய்ய அருகே வர நினைக்க,அதற்குள் துருவ் அந்த வாலிபனின் நாடியை பரிசோதிக்க ஆரம்பித்திருந்ததினாலும் கூட்டத்தினர் ஆளுக்கொன்றாக ஏதேதோ பேசியதிலும் அவ்விடத்திலே நின்றாள்.
அங்கிருந்தவர்களில் ஒருவன், “சார் ஹிட் அன்ட் ரன் கொலை கேஸ்…கிட்ட போகாதீங்க” என துருவ்வை பார்த்து கத்த,
அவனை தொடர்ந்து மற்றவர்களும் “ஆமாம் சார்…தொடாதீங்க…எங்க கண்ணாலே பார்த்தோம்…ஒரு கார்காரன் வேணும்னே இவன் மேலே வேகமாக வந்து மோதினான்” என குரல் கொடுக்க,
ஒரு சில இளம் வாலிபர்களோ காயப்பட்டு இருந்தவனோடு தாங்கள் இருப்பது போல் அலைப்பேசியின் வழியாக தாமி எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அனுதாபம் தேடிக்கொண்டிருக்க, மற்றவர்களோ அவனிடம் நெருங்கி உதவி செய்வதற்கு கூட அஞ்சு விலகியே இருந்தனர்.
“சார் போலீஸூக்கும் ஆம்புலன்ஸூக்கும் இன்பார்ம் பண்ணியாச்சு…நீங்க தொட்டால் பிரச்சனையில் மாட்டிப்பீங்க” என எச்சரிக்கை கொடுத்து அவனை கடுப்பேத்திக் கொண்டிருக்க,
அவனோ எதையும் சட்டை செய்யாமல் அவனிற்கு உதவுவதிலே குறியாக இருந்தான்.
அதற்குள் காவலர்கள் அங்கு வந்து துருவ்வை பார்த்து “ஏய் நீ இங்க என்ன செய்திட்டு இருக்கே?முதல்ல எழுந்திரி” என அதட்டி அவனின் தோள் மீது கைவைக்க,
அவனோ அவரை நன்றாக முறைத்து “ஆக்ஸிடென்ட் கேஸ்னா இன்பார்ம் பண்ண அடுத்த இரண்டு நிமிஷத்தில் ஒரு ஆம்புலன்ஸோட போலீஸ் ஸ்பாட்டில் இருக்கணும்னு உங்களுக்கு தெரியாதா சார்?” என உறுமியவன்,
கீழே இருந்தவனின் நாடியை பரிசோதித்து “அதுமட்டுமில்லாமல் ஐந்து நிமிஷத்தில் இவருக்கு முதலுதவி பண்ணலைனா இறந்திடுவாரு…ஆம்புலன்ஸ் வரவரைக்கும் நாம வெயிட் பண்ணமுடியாது…சீக்கிரம் இவரை தூக்குங்க…பக்கத்தில் ஒரு ஜி.எச் இருக்கும்…நாம் அங்க கொண்டு போயிடலாம்” என்றவனின் வார்த்தையை மதியாமல் அவன் தன்னை எதிர்த்து பேசியதிலே எரிச்சலில் இருந்த அந்த காவலர், “டேய் எவ்வளவு தைரியம் இருந்தால் நீ என்கிட்ட ரூல்ஸ் பேசுவே??யாருடா நீ??” என கத்தி அவனின் சட்டையை பிடித்தார்.
அவனிற்கோ கோபம் சுறுசுறுவென பொங்கினாலும் தற்சமயம் அதை அடக்கி கோபத்தை விட காரியமே பெரிது என்றெண்ணி, “சார் ஐயம் டாக்டர் துருவ் விக்ரமாதிதத்தன்…இங்க பக்கத்தில் இருக்கிற ஜி.எச்சில் டாக்டரா வேலை செய்யறேன்” என தன்னை பற்றிய தகவலை எடுத்துரைத்தவுடன்,
அவரோ அதில் அதிர்ச்சியுற்று “ஓ சாரி…நீங்க டாக்டரா?மன்னிச்சிடுங்க…யூ மே புரோஸீடு” என்று அந்த காவலர் விலகிக்கொள்ள,அவரை போலவே அங்கு சூழ்ந்திருந்த மக்களும் அவன் மருத்துவர் என்பதில் அதிர்ச்சியுற்று தங்களுக்குள் சலசலத்தனர்.
அவனது மனைவி வடிவுமே ‘எது மாமா டாக்டரா?’ என வாயை பிளந்தாள்.
அவளிற்கு இந்த நிமிடத்திற்கு முன்பு வரையிலும் அவன் ‘என்ன வேலை செய்கிறான்?’ என்று பாவையவளிற்கு கூறப்படவில்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை.
அவள் யோசனையோடு நிற்கும் போதே,அவசரசிகிச்சை ஊர்தி அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தது.
அதிலிருந்து இறங்கிய மருத்துவ உதவியாளர் நெருப்பு பிழம்பாய் நின்றிருந்த துருவ்வை கண்டு மிரண்டு, “குட் ஈவின்ங் சார்” என அச்சமயத்திலும் பவ்யமாக அவனிற்கு வாழ்த்து தெரிவிக்க,
அவனோ அவர்களை விழிகளாலே எரித்து “ஷட் அப்…எப்போ எதை செய்யணும்னு விவஸ்தையே இல்லை…முதல்ல பேஷண்ட்டை தூக்குங்க…புரூட்டஸ்” என கர்ஜித்தவுடன்,
அதில் பயந்து நடுங்கியவர்கள் “எஸ் சார்” என மரியாதையுடன் அடிப்பட்டு இருந்தவனை வண்டியில் ஏற்ற,தானும் அதில் ஏறி அவர்களுடன் பயணிக்க தொடங்கினான்.
ஆனால் அந்த நோயாளியை ஏற்றும் வரை தன் மனைவியின் ஞாபகம் வராமல் இருந்தவனிற்கு ஏறிய பிறகு கதவு மூடும் இடை வேளையில் அவளை பார்த்தவன் ‘ஐய்யோ இவளை கூட்டிட்டு வந்ததை மறந்திட்டோமே’ என நெற்றியை தட்டி கவலைக்கொண்டாலும் சடுதியாக ‘எருமைமாடு மாதிரி வளர்ந்திருக்காயில்லை…வீடு கண்டு பிடிச்சு போய் சேரட்டும்…இல்லை எங்கோ போய் தொலைந்தாலும் நமக்கு நிம்மதி தான்’ என எகத்தாளமாக எண்ணியவன் ஆபத்தில் இருப்பவனிற்கு முதலுதவி செய்தான்.
மற்ற உயிர்களின் மீது இவன் வைத்திருக்கும் கருணை கூட அவன் தொட்டு தாலிக்கட்டிய மனைவியின் மேல் இல்லை.
அவன் நினைத்தது போலவே அந்த அப்பாவி பெண்ணவளிற்கு எவ்வாறு எவ்வழியில் வீடு செல்ல வேண்டும் என்ற பாதை நினைவிலின்றி நடுத்தெருவில் விழித்துக்கொண்டு நின்றிருந்தாள்.