நயனம் 1

“கெட்டிமேளம்…கெட்டிமேளம்” என புரோகிதர் ஒற்றை விரலசைத்து குரல் கொடுக்க,மங்கள வாத்தியங்கள் முழங்க சுற்றத்தாரின் ஆசிர்வாதத்தில் துருவ் அவளின் சங்கு கழுத்தில் தாலியை கட்டி தன்னில் சரிப் பாதியாக்கிக் கொண்டான்.

நாணை கர்வத்துடன் பூட்டிவிட்டு தன் இணையானவளின் முகத்தை பார்த்து ரசிப்பதற்காக புன்னகையுடன் திரும்பியவன்,அருகில் கருமை நிறத்தில் நெற்றியில் பெரிய வட்டவடிவ பொட்டு வைத்து மாங்காய் பிஞ்சு மூக்குத்தி அணிந்து வெண்ணிற பற்கள் பளீச்சென ஒளிர  ‘ஈ’ என்று இளித்த பெண்ணவளை கண்டு அதிர்ந்து “ஆஆஆஆஆ” என பயத்தில் அலறி துள்ளி குதித்து எழுந்தான் துருவ் விக்ரமாதித்தன்.

கட்டிலில் எழுந்து அமர்ந்தவனின் முகங்மெங்கும் வியர்த்திருக்க,பதட்டத்தில் இருந்தவன் அப்போது தான் ‘தாம் கண்டது கனவு’ என்பதை உணர்ந்து ஆசுவாசமடைந்தவனின் நிம்மதிக்கு ஆயுள் குறைவு என்பது போல், “மாமா என்னாச்சு??” என பதறியடித்துக்கொண்டு சமையல் கரண்டியுடன் அந்த அறைக்குள் ஓடி வந்தாள் அவனது மனைவி வடிவாம்பாள்.

அதன்பிறகே தனக்கு நடந்தேறிய திருமண நிகழ்வு தினந்தோறும் கனவாக வந்திருக்கிறது என்பதை உணர்ந்த துருவ்வின் தேகமெங்கும் சிவந்து இறுக, “ஏய் உன்னை யாரு என் ரூமுக்குள்ள வரச்சொன்னது?முதல்ல வெளிய போடி” என பற்களை கடித்து துப்ப,

அவனது சிம்மக்குரலில் மேனி தூக்கிவாரிப் போட்டாலும் இயற்கையில் துணிச்சலான பெண் வடிவாம்பாள் என்பதால் கரண்டியை இப்படியும் அப்படியுமாக ஆட்டி, “மாமா ஏதோ பயந்து கத்துனீங்கனு பாவம் பார்த்து வந்தால் ரொம்ப தான் சிலுப்பிக்கிறீங்க?” என்று இடுப்பை ஆட்டிக் கொள்ள,

வெகுண்டு கட்டிலிலிருந்து எழுந்து அவளின் கழுத்தை நெறிக்கச் சென்று இறுதியில் சுதாரித்து, “ச்சை” என முகத்தை சுழித்து கரத்தை பின்னோக்கி இழுத்த துருவ்,

ஒரு முறை தொடையை தட்டி, “ஆமாடி…ஆமா உன்னை என்னைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டேனோ அன்னையிலிருந்து என் நிம்மதியெல்லாம் போயிடுச்சு…பட்டிக்காடு…பட்டிக்காடு” என அவளின் தலையில் தட்டி திட்டியவன், அவள், “ஸ்ஆ” என வலியில் முகம் சுழிக்க அதனை கண்டுக்கொள்ளாமல்,

“உன்னை பார்த்தால் பதினெட்டு வயசு பொண்ணு மாதிரியா இருக்கு…நாற்பது வயசு ஆன்ட்டி மாதிரி பெரிய பொட்டு வைச்சு கண்டாங்கி சேலைக்கட்டி மங்காத்தா மாதிரியே இருக்க இடியட்…போயும் போயும் உன் கழுத்தில் தாலிக்கட்டினேன் பாரு என்னை செருப்பாலே அடிச்சிக்கணும்…சென்ட்டிமென்ட்டா அதையும் இதையும் பேசி உன்னை என் தலையில் கட்டி வைச்சிட்டாங்க…என் வாழ்க்கையிலிருந்து முதல்ல போய் தொலை டி எருமை மாடு” என வாயிற்கு வந்தது போல் கண்டப்படி மனைவி என்றும் பாராமல் அவன் வஞ்சிக்கொண்டிருக்க, இவளோ முகம் சோர்ந்து அறையிலிருந்து வெளியேறியவுடன் இவனிற்கு தான் பேசியது அதிகப்படி என்றே தோன்றியது.

அவனும் அவளிடம் நன்றாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினாலும் அவனால் அவளின் வடிவத்தை கண்டு சகித்துக்கொண்டு வாழ முடியவில்லை.

உண்மையில்,அவன் நினைப்பது போல் வடிவாம்பாள் அத்தகைய மோசமான தோற்றம் கொண்டவள் இல்லை.

வயதிற்கு மீறிய வளர்ச்சி என்றாலும் கோதுமை நிறத்தில் ஐந்தரை அடி உயரத்தில் லட்சணமாக இருக்கக்கூடியவள் தான் வடிவு.

ஆனால் கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண் என்பதினால் தினந்தோறும் முகமெல்லாம் மஞ்சள் பூசி குளிப்பதினால் அவளது நிறம் சற்று மட்டுப்பட்டு இருப்பது போல் தோன்றியது.

அத்தோடு நடுத்தர அளவில் செந்நிற வட்டவடிவ பொட்டு வைத்து, நீண்ட கூந்தலை எண்ணெய் வைத்து வழித்து சீவி,மாங்காய் பிஞ்சு மூக்குத்தி அணிந்திருந்தாலும் இவையனைத்தும் அவளிற்கு ஒரு தெய்வீகமான அழகையே கொடுத்தது.

‘வேண்டாத பொண்டாட்டி கைப்பட்டால் குத்தம்…கால்பட்டால் குத்தம்’ என்ற பழமொழியில் வரும் கணவனை போன்று பார்த்த முதல் பார்வையில் இருந்தே அவளின் மீது அவனிற்கு விருப்பமின்றி இருந்ததினால் அவள் என்ன செய்தாலும் குறை கூறிக்கொண்டே இருப்பான் துருவ் விக்ரமாதித்தன்.

அதற்கு அவர்களது வாழ்வில் நடந்தேறிய திருமண நிகழ்வும் அவனது பிடித்தமின்மைக்கு ஒரு காரணமாய் அமைந்தது.

இதற்கெல்லாம் மேலாக மற்றொரு காரணமாய்,அவள் சிறு வயதிலேயே பள்ளி படிப்பில் நாட்டமின்றி பாதியிலே படிப்பை நிறுத்தியது வேறு அவளின் மீதான அவனின் வெறுப்பிற்கு தூபம் போட்டது.

இதுப்போல் அழகு,தோற்றம்,படிப்பு என்று எதிலும் தனக்கு நிகரில்லாத பெண்ணை எந்தவொரு சராசரி ஆண்மகனால் எளிதாக ஏற்றுக்கொள்ள இயலும்.

இவர்களுக்கு திருமணம் நடந்தேறி மூன்று மாதம் கடந்த நிலையிலும் வடிவாம்பாள் மீது அவனிற்கு எந்த வித நேசமும் விருப்பமும் தோன்றவில்லை.

ஏனெனில் படிப்பில் மட்டுமின்றி அழகிலும் மற்றவரை வசீகரிக்கும் கவர்ச்சி மிகுந்தவன் துருவ் விக்ரமாதித்தன்.

ஆம்,ஆறடி உயரத்தில் பாலும் வெண்ணையும் குழைந்தெடுத்த நிறத்தில் கூரான நாசி,வசீகரிக்கும் கண்கள்,அழுத்தமான இதழ்கள் மற்றும் உடற்பயிற்சியினால் உருண்டு திரண்ட தசைக்கோளங்கள் என ஆண்மகனிற்கு உரிய இலக்கணத்துடன், நிலையான உத்யோகத்தில் கைநிறைய சம்பாதிக்கும் அனைத்து புருஷ லட்சணத்துடன் பார்க்கும் அனைத்து பெண்களையும் கவர்ந்திழுக்கும் வல்லமை கொண்ட வாலிபன் அவன்.

அவனது திருமணத்தில் நடந்தேறிய குளறுப்படியால் அவனிற்கு கொஞ்சமும் தகுதியில்லாத வடிவாம்பாளை திருமணம் செய்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை.

பெரியவர்களுக்காக மணம் புரிந்துக்கொண்டாலும் இருவரின் குணத்திற்கும் என்றுமே ஒத்துப்போனதில்லை.

அதனால் அவளை பார்க்கும் போதெல்லாம் அவளை வார்த்தைகளால் வதைப்பவன்,இப்போது அவளை திட்டிவிட்டு வருந்திக்கொண்டிருந்த வேளையில் வடிவு மீண்டும் அந்த அறையினுள் நுழைந்தாள்.

அவன் தவறை உணர்ந்து வருத்தத்தில் இருந்ததினால் அவளை நிதானமாக நெற்றி சுருங்க ஏறிட,அவளோ தன் முதுகிற்கு பின்னால் மறைத்து வைத்திருந்த பொருளை எடுத்து அவனிற்கு முன்பு நீட்டி “இந்தாங்க மாமா” என்றாள் அப்பாவியாக தலைச்சரித்து.

அவள் எடுத்துக்காட்டிய பொருளை கண்டு குழப்பமடைந்த துருவ் விக்ரமாதித்தன் கழுத்தை நீவி, “எதுக்கு டி இது?” என புருவம் சுருக்கி வினவ,

“இல்லை மாமா…என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு செருப்பாலே அடிச்சிக்கணும்னு சொன்னீங்களே…அதான் உங்களுக்கு எதுக்கு கஷ்டம்னு நானே செருப்பு கொண்டு வந்திருக்கேன்…ஹூம் அடிச்சிக்கோங்க” என அப்பாவியாக இமைக்கொட்டியப்படி பேசி அவனிடம் காலணியை நீட்டியவளை கண்டு ஒரு நொடி அதிர்ந்தவன், சடுதியில் அவள் கூறிய சொற்களின் அர்த்தம் உணர்ந்து “ஏய்” என கர்ஜித்து அடிக்க கை ஓங்க,

“ஐய்யோ” என கண்களை மூடி அலறிய வடிவும் காலணியை கையில் எடுத்துக்கொண்டு, “வேணாம் மாமா” என அங்கிருந்து ஓட,

முகம் சிவக்க “ஏய் நில்லு டி” என துரத்திக்கொண்டு அவனும் அவளின் பின்னோடு கொலைவெறியோடு ஓடினான்.

அவளோ தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து கதவை சாற்ற விளைய,அதற்கு முன்பே ஆடவன் விவேகம் கொண்டு கதவில் ஒற்றை கரம் வைத்து தடுத்து நிறுத்தியிருந்தான்.

அப்போதும் வலுக்கட்டாயமாக முழுவலிமையையும் திரட்டி கதவை மூட பிரயத்தனம் செய்தவளின் முயற்சியை முறியடித்து உள்ளே நுழைந்து கதவை சாற்றினான் துருவ்.

அவளோ கதவின் மீது அதிக வலுச்செலுத்தியதினால் அவனது இந்த அதிரடியில் தடுமாறி வலதுப்புறம் இருந்த சுவற்றில் முதுகுப்பகுதி இடித்து “ஆவ்வ்வ்” என உச்சஸ்தானியில் கத்த,

வீடே அதிர கத்தியவளின் குரலில் அங்கமெல்லாம் அதிர வேகமாக வந்து “ஏய் எதுக்குடி…இப்படி ரேப் பண்ற மாதிரி கத்துற…வாயை மூடுடி” என அவளின் இதழை தன் கரங்களால் பொத்தி சிடுசிடுக்க,

அவளின் மான் விழிகளோ சினத்தில் பளபளக்க “ஹூக்கும்” என அவனது கரங்களுக்குள் புலம்பிக்கொண்டே அவனிடமிருந்து விடுப்பட முயற்சித்தாள்.

ஆனால் அவனோ அவளை மேலும் சுவற்றில் சாய்த்து நிறுத்தி தன் தேகம் கொண்டு அங்கிருந்து அசைய முடியாதது போல் அவளை சிறைப்பிடித்தவன், ஆடவனது நெருக்கத்தில் ஒரு மாதிரி நெளிந்த பாவையவளை கண்டுக்கொள்ளாமல் “என்ன டி முறைக்கிறே??உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்கிட்டயே செருப்பை எடுத்திட்டு வந்து கொடுத்திருப்ப…உனக்கு ரொம்ப தான் கொழுப்பு டி” என வஞ்சித்தவனின் கரமோ அதற்கு தண்டனை அளிக்கும் விதமாக அவளது இடையை நறுக்கென கிள்ளி வைத்தது.

அந்த வலியில் துள்ளிக்குதித்த காரிகையவளிற்கு முன்பு இருந்த உணர்வுகள் இப்போது தொலைத்தூரம் செல்ல,அவன் தன்னை கிள்ளிய வலியில் தன் வாயை மூடியிருந்த அவனது கரத்தை அரிசி பற்களால் கடித்து வைத்துவிட,அதை எதிர்ப்பாராத துருவ் “ஆஆஆஆஆ” என்று அலறி அவளிடமிருந்து விலக,

அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வெளிவந்த வடிவு, “யோவ் மாமா…எதுக்குய்யா என்னை கிள்ளினே…எனக்கு வலி உயிர்ப்போகுது” என உரக்க கத்தியவள் வேண்டுமென்றே அங்கிருந்து நகருவது போல் அவனது காலை ஓங்கி மிதித்துவிட்டு செல்ல,அது தந்த வலியில் மீண்டும் “ஸ்ஆ” என்று காலை தூக்கிக்கொண்டு துருவ் குதித்து, “எருமை மாடு நல்லா தின்னு தின்னு உடம்பு பெருக்க வைச்சு என் காலை புண்ணாக்கி வைச்சிருக்கியே…உனக்கெல்லாம் அறிவில்லை” என வாயிற்கு வந்தப்படி அவளை வறுத்து தன்னிடமிருந்து தப்பி செல்ல விளைந்தவளை ஒரு கையால் அழுத்தமாக பிடித்து நிறுத்தினான்.

பின்பு என்ன நினைத்தானோ அவளை பட்டென்று விட்டுவிட்டு வேகமாக அறையின் முற்றத்திற்கு சென்று வெளியே யாரேனும் இருக்கிறார்களா என்று பரிசோதித்து கதவை அழுந்த சாற்றி ஆத்திரத்தோடு பெண்ணின் அருகே வர,இவளோ இப்போது பயத்தையெல்லாம் தூக்கியெறிந்து நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு, ‘வாடா வா…நீயா நானா என்று ஒரு கை பார்க்கலாம்’ என்பது போல் விறைப்பாக நின்றிருந்தாள்.

அவளது அந்த துணிச்சல் அவனிற்கு மேலும் சீற்றத்தை கொடுக்க ‘உனக்கு அவ்வளவு துணிச்சலாடி…அதை வேரோடு பிடுங்கறேன்’ என்று கறுவியவன்,

“ஏன் டி??தினமும் தின்றதுக்கு சாப்பாடும்…போடறதுக்கு உடுப்பும் உனக்கு வாங்கி தரதால் தானே உனக்கு கொழுப்பு கூடிப்போச்சு…உன்னுடைய அலங்கோலமான சதையில் மறைஞ்சிருக்கிற கொழுப்பை குறைச்சேயாகணும்…நாளையிலிருந்து இந்த வீட்டில் வேலை செய்யற வேலைக்காரி கட்…அவள் செய்யற எல்லா வேலையையும் நீ தான் செய்யணும்…துணியை கூட வாஷிங்மிஷினில் போடக்கூடாது…உன் கையில் துவைச்சு தான் காயப்போடணும்…தினமும் ஒரு வேளைக்கு மூன்று விதமான சாப்பாடு இருக்கணும்…வீட்டையெல்லாம் கூட்டி துடைச்சு பளபளன்னு வைக்கணும்…அப்படி எங்கேயாவது ஒரு தூசி தெரிந்தாலும் தொலைச்சிடுவேன்…அப்புறம் தினமும் பாத்ரூமை சுத்தம் பண்ணியிருக்கணும்…பெட் உறையை தினமும் கழட்டி மாத்தி துவைச்சிருக்கணும்…சமையலறையில் ஒரு பொருள் இடம் மாறி இருக்கக்கூடாது…இதில் ஒரு தவறு நீ செய்திருந்தாலும் உனக்கான பனிஷ்மெண்ட் வேற மாதிரி இருக்கும்…அப்படி இதெல்லாம் செய்ய பிடிக்கலைனா வீட்டை விட்டு வெளியப்போயிடு…நானாவது உன் தொல்லை இல்லாமல் நிம்மதியா இருப்பேன்” என ஆக்ரோஷமாக பேசிக்கொண்டே கட்டளையிட்ட துருவ்வை காளி ஆவதாரம் எடுத்து இடுப்பில் கை வைத்து முறைத்தவளை கண்டு இகழ்ச்சியாக புன்னகைத்து “என்ன டி முறைப்பு…நான் சொன்னதெல்லாம் செய்தா இங்கே இரு…இல்லாட்டி போ டி” என எகத்தாளமாக கூறிவிட்டு வெளியே செல்லப்போனவன் ஒரு நொடி நின்று கோபம் என்ற போர்வையில் இடையில் கை வைத்து நின்றிருந்த மனைவியின் கரத்தை வெடுக்கென்று தட்டிவிட்டான்.

அதில் தடுமாறி கீழே விழப்போனவளின் இடையை ஒற்றை கையால் பிடித்தி அழுத்தி நிறுத்தியவன் குனிந்து சேலை விலகியதினால் அதன் வழியாக வெட்டவெளிச்சமாகிய கோதுமை நிற இடுப்பை கண்டு, “இது என்ன டி ப்ரீஷோவா?இல்லை என்னை மயக்கற பிளானா?” என்று மீண்டுமொருமுறை நறுக்கென அவளின் இடுப்பை கிள்ளி அவள் துள்ளி விலகியதை பொருட்படுத்தாமல், “நாளையிலிருந்து இடுப்பு தெரியற மாதிரி சேலைக்கட்டக்கூடாது…அப்படி கட்டினே அதற்கும் தண்டனை கிடைக்கும்” என்று கூறிக்கொண்டே இடையில் சொருகியிருந்த புடவையை மேலே இழுத்து இடையை தானே சரிச்செய்தவன் ‘இப்படி தான் இருக்கணும்’ என கண்ணால் ஆணையிட்டு சென்று விட்டான்.

செல்லும் கணவனின் முதுகை வெறித்த பாவை வலித்த இடையை தடவிக்கொண்டே ‘இவன் பெரிய மன்மதன்…இவனை நான் மயக்கிறனாம்…இவன் தப்பு தப்பா பார்த்திட்டு என்னை குறை சொல்றான் மாக்கான்’ என திட்டிக்கொண்டவளிற்கு அந்த வீட்டை விட்டு செல்லும் மார்க்கம் மட்டுமில்லை.

இருவரின் விருப்பமின்றி திருமணம் நடந்தேறி இருந்தாலும் ஏனோ அவன(ள)து இம்சைகளை பொறுத்துக்கொண்டு பிரிந்துச் செல்லும் முடிவை எடுக்க தோன்றாமல் இருவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.

துருவ் விக்ரமாதித்தனும் வடிவாம்பாளும் திருமணத்திற்கு பிறகு குடியேறியது ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு.

சென்னையில் பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் பதினைந்தாவது மாடியில் இருக்கும் வீட்டில் குடிப்பெயர்ந்தாலும் கிராமத்தில் பாசமான உறவினர்களால் வளர்க்கப்பட்ட வடிவாம்பாளால் முகம் கொடுத்து அக்கம்பக்கத்தினரிடம் கூட பேச முயலாத கலாச்சாரத்தில் வசிக்கும் மனிதர்களோடு சகஜமாக வாழ இயலவில்லை.

ஆயினும்,தன்னுடைய குறும்புகுணத்தினால் வயதான இரண்டு தம்பதியினரிடமும் அங்கு வாழும் குடும்பத்தினரின் சிறு வாண்டுகளிடமும் தன் நட்புறவை வளர்த்துக்கொண்டாள்.

அந்த சிறு தோழமைகளின் பலனாக அவர்களது பெற்றோரும் அவளிடம் சின்ன சின்ன வார்த்தைகள் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

அவர்களின் கடும்பாறை மனதில் மாற்றங்கள் தோன்றியப்போதும் ஏனோ அவளை தொட்டு தாலிக்கட்டிய மணாளனின் நெஞ்சத்தில் சிறு சலனப்பூக்களும் மலரவில்லை.

இப்போது தன்னுடைய பணிக்குச் செல்ல தயாராகி வெளியே வந்த துருவ்,குறுகிய நேரத்தில் உணவு மேசையின் மீது அவள் செய்து வைத்திருந்த ஆகாரங்களை கண்டு விழி விரித்து ஆச்சரியமடைந்தாலும் அவளை கண்டுக்கொள்ளாமல் தானே உணவு பரிமாறி உட்கொள்ள தொடங்கினான்.

அவள் பரிமாற முன்னே வர ‘வேண்டாம்’ என ஒற்றை கரம் நீட்டி தடுத்து நிறுத்த,

‘ரொம்பத்தேன்’ என கழுத்தை நொடித்துக் கொண்டு புடவை முந்தானையை சுற்றிக்கொண்டே சமையலறை வாசலில் நின்று வீட்டை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

‘வேண்டாம்னு சொன்னவுடனே இது தான் சாக்குனு நின்னுக்கறா, யூஸ்லெஸ்’ என மனதிற்குள் வசைப்பாடிக்கொண்டே சாப்பிட்டான்.

அவன் வயிறார உண்டு கைக்கழுவ எழுந்துச் சென்றவுடன்,கணவன் முன்பு அமர்ந்திருந்த இருக்கையில் உட்கார்ந்து அவனது தட்டில் இட்லியை வைக்க கரம் தூக்கியவுடன் வெடுக்கென்று அவளின் முன்பிருந்த தட்டு பறிக்கப்பட்டது.

கணவனின் தட்டில் மனைவி சாப்பிடுவது புண்ணியம் என்று அவளது தாய் படிப்பித்ததினால் அவளும் இதனை மேற்கொள்ள நினைத்து தொடங்கியவுடனே அவன் தடுத்து விடுவான்.

‘இது தினமும் நடக்கும் நிகழ்வு’ என்பதினால் அவள் சாவகாசமாக வேறு தட்டை எடுத்து வைத்து உணவு உண்ண தொடங்க “ஏய் எத்தனை தடவை சொல்றது?என்னுடைய எச்சில் தட்டில் சாப்பிடதேன்னு…ஒரு தடவை சொன்னால் உனக்கு கொஞ்சமும் அறிவு இருக்காதா??” தன்னுடைய வசைப்படலத்தை தொடங்க,

அவளோ ‘ஆமா…இவர் எச்சில் படாமலே புள்ளை பெத்திடுவாரு’ என முனக,

அவனது காதில் பாதி விழுந்தும் விழாத நிலையில், “பட்டிக்காடு என்ன சொன்னே?என்ன சொன்ன?மறுபடியும் சொல்லு” என எகிறிக்கொண்டே அவளை நெருங்க,

வடிவோ இட்லியை மைய்ய பிசைந்து குழிப்பறித்து அதன் நடுவில் சாம்பாரை ஊற்றி, “மாமா என்னை நிம்மதியா சாப்பிட விடு…என்கிட்ட மல்லுக்கு நிற்காம நீயும் மொத வேலைக்கு கிளம்பு” என்றாள் சலிப்புடன்.

துருவ் அதில் கடுப்பாகி அவளை நன்றாக முறைத்தவன், “எல்லாம் என் நேரம் டி” என தலையிலடித்துக்கொண்டு தன்னுடைய தட்டை கழுவி வைத்து விட்டு வெளியே வந்தவன் அவள் ஒவ்வொரு விரலாக வாயினுள் விட்டு சப்பி சாப்பிட்டுக் கொண்டு இருப்பதை கண்டு அவன் அருவருப்புடன் முகம் சுழித்து ‘இவளுக்கு எப்படி டீசெண்டா சாப்பிடணும்னு கூட தெரியாது போல…ச்சை’ என திட்டிக்கொண்டவன், “ஏய் பட்டிக்காடு…நீ இங்க வா…எப்படி கதவை சாத்தணும்னு உனக்கு சொல்லிக்கொடுத்திட்டு நான் கிளம்பறேன்” என்றான் வேண்டா வெறுப்பாக.

“அய்யோ மாமா…தினமும் எப்படி கதவு சாத்திறதுன்னு சொல்லிக்கொடுக்க நான் என்ன சின்னக்குழந்தையா?எனக்கு கதவு சாத்த தெரியும்…நீ கிளம்பு” என்றாள் சிணுங்கலாக.

“நீ சாத்தின லட்சணத்தை தான் நேத்து நான் பார்த்தேனே?பக்கத்து வீட்டு நாய்க்குட்டி நடுவீட்டில் அசிங்கம் பண்ணது கூட தெரியாமல் குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்கே…ஒழுங்கா எழுந்து வா டி” என அதட்டல் போட,

‘இவரோட இம்சை’ என முனகிக்கொண்டே தொப்தொப்பென்று சாப்பிட்ட கையுடன் நடந்து வந்தவளை எரிச்சலுடன் நோக்கி, “ச்சை கருமம்…போய் முதல்ல கை கழுவிட்டு வா டி…எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்கே உனக்கு இது கூட தெரியாதா??” என தன் தலையில் அடித்துக்கொண்டு திட்ட,

‘நீ தான்டா எருமை மாடு’ என நன்றாக வாய்விட்டு திட்டிக்கொண்டே அவளும் அசூசையுடன் கைகழுவிவிட்டு வந்தவுடன் அவளிற்கு எப்படி கதவை உட்புறமாக பூட்ட வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தவன் “எங்கையும் ஊர் சுத்த கிளம்பாதே…ஈவினிங் நானே உன்னை வெளிய கூட்டிட்டு போறேன்” என அறிவுரை வழங்கிவிட்டு திரும்ப முயன்றவன் சடாரென்று அவளின் புறம் திரும்பி, “இப்படி தொறந்துப்போடுட்டு வந்து நிற்காதன்னு எத்தனை தடவை உனக்கு சொல்றது” என கோபமாக கூறி அவளது இடையில் நறுக்கென கிள்ள,

அது தந்த வலியில் துள்ளிக்குதித்து விலகியவளின் இடையை ஒற்றை கையால் பிடித்திழுத்து புடவையை தானே சரி செய்தவன், அவள் தன்னை முறைப்பதை கண்டுக்கொள்ளாமல், “நான் வரேன்…முதல்ல கதவை பூட்டிட்டு உள்ள போ” என்று கட்டளையிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

அவளோ மனதிற்குள் தோன்றிய கெட்ட வார்த்தைகளால் அவனை சொல்லபிஷேகம் செய்தவள்,அவன் கூறியப்படி கதவை மூடிவிட்டு சிவந்த இடையை தடவிக்கொண்டே உள்ளேச் சென்று,விட்ட இடத்திலிருந்து உணவை உட்கொள்ள தொடங்கினாள்.

பத்து மணிக்கு வேலைக்காரம்மா வந்தவுடன், “அம்மா நாளையிலிருந்து நான் வேலைக்கு வரவேண்டாம்னு ஐயா சொல்லிட்டாங்க” என்றவுடன்,

‘இந்த கடங்காரன் சும்மா சொல்றான்னு பார்த்தால் உண்மையாவே எல்லா வேலையும் நானே செய்யணுமா?’ என அதிர்ந்தாலும்,சடுதியில் சுய உணர்விற்கு மீண்டவள் வேலைக்கார அம்மாவிடம் ஒரு மாதத்திற்கு தேவையான வேலையை இன்று ஒரே நாளில் வாங்கி அவரது இடுப்பு வளைவை நிமிர்த்தி விட்டாள்.

அந்த வேலைக்கார பெண்மணியோ ‘விட்டால் போதும்’ என்று நொந்துப்போய் ஓரளவு வேலை முடிந்தவுடன், “அம்மா என் புள்ளைக்கு காய்ச்சல் நான் சீக்கிரம் வூட்டுக்கு போகணும்” என்று கூறியதற்கு பிறகே அவரின் பால் இரக்கம் கொண்டு விட்டாள்.

அவரோ பேயை கண்டது போல் அடித்துபிடித்து ‘நீயும் வேண்டாம்…உன் வேலையும் வேண்டாம்’ என்று ஓடியே விட்டார்.

செல்லும் முன் அப்பாவியாக, “அக்கா இன்னைக்கு வேலை செய்து உடம்பு அலுத்துப்போச்சு…நாளைக்கு ஒரு நாள் மட்டும் வந்து அடுப்பங்கரையை ஒதுங்க வைக்க உதவி செய்திட்டு போறீங்களா?” என தலைசரித்து வினவ,

அதில் அந்த வேலைக்காரம்மா அரண்டுப்போய் அவளை பார்த்து, “வரேன்…வரேன்” வாயிற்கு வந்ததை உளறிக்கொட்டி அவளிடமிருந்து தப்பித்து செல்ல,

‘எல்லா வேலையும் செய்து உடம்பெல்லாம் வலிக்குது…இந்த அக்கா என்னமோ எல்லா வேலையும் தானே செய்த மாதிரி வியர்வையில் நனைஞ்சு கருவாடா போகுது’ என இதழை சிலுப்பிக்கொண்டு ‘முதல்ல நாம் போய் ஒரு தூக்கத்தை போடுவோம்…ஆஆஆ’ என கொட்டாவி விட்டப்படி மெத்தையில் விழுந்தாள்.

 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top