உலக குத்துச்சண்டை கழகத்தின் உதவியுடன் ஹரியானாவில் இன்று உலக குத்துச்சண்டை போட்டி தொடர் ஒன்று சாய் நேஷனல் அகாடமியில் நடைபெற உள்ளது.
முதன்முறையாக இந்தியாவில் நடத்தப்பெறும் இந்த குத்துச்சண்டையில் பல்வேறு நாடுகளிலிருந்து வீரர்கள் பங்கேற்றனர்.அவர்களோடு போட்டிப் போட்டு அனைவரையும் வீழ்த்தி இந்திய வீரர்கள் கடைசி கட்டத்திற்கு முன்னேறியிருந்தனர்.
அதில் கடைசி போட்டியாக அதிக எடைக் கொண்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கான போட்டி சற்றுநேரத்தில் நடைப்பெற இருந்தது.அரங்கத்தில் ஒரு 10000 பேர் சூழ்ந்திருக்க,அனைவரும் ஒரு எதிர்ப்பார்ப்புடனும் ஒரு சுவாரசியத்துடனும் போட்டியிட போகும் வீரர்களின் வருகைக்காக அந்த போட்டி மேடையையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.
குத்துச்சண்டை ஒரு சண்டை விளையாட்டு.ஒரே எடைத்தரத்தில் உள்ள இரு வீரர்கள் கைமுட்டியுறை மற்றும் சில பாதுகாப்பு அணிகலங்கள் அணிந்து கை முட்டிகளால் மட்டும் சண்டை செய்வதே குத்துச்சண்டை ஆகும். ஒருவர் அடித்துத் தனது எதிரியை வீழ்த்திவிட்டால், விழுந்தவர் நடுவர் பத்து எண்ணுவதற்குள் எழும்பாவிட்டால் வீழ்த்தியவர் வெற்றி பெறுவார் அல்லது போட்டியின்போது ஒரு சண்டையாளரின் உடல் நிலைமை தொடர்ந்து போட்டியிட முடியாத நிலைமை வந்தாலும் எதிர்த்து நின்ற மற்ற சண்டையாளர் வெற்றி பெறுவார். இரு சண்டையாளர்களும் குறிப்பிட்ட சுற்றுகள் தொடர்ந்து சண்டையிட்டு, அதற்கு பின்னரும் நிலைத்து நின்றால் அவர்கள் பெற்ற புள்ளிகளை வைத்து வெற்றியாளர் நடுவர்களால் தேர்வு செய்யப்படுவார்.
சங்க இலக்கியத்தில் ஒன்றான பட்டினப்பாலையில் குத்துசண்டையைப் பற்றி கூறியது,
“மலர் தலை மன்றத்துப் பலர் உடன் குழீஇ,
கையினும் கலத்தினும் மெய் உறத் தீண்டி,
பெருஞ் சினத்தால் புறக்கொடாஅது,
இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர்”
காவிரிப்பூம்பட்டினத்தில் போர்தொழிலில் ஈடுப்படும் மக்கள் தங்களின் உடல் வலிமையை பெருக்குவதற்கு தங்களுக்குள்ளே மோதிக்கொண்டனர்.அந்த பயிற்சி களத்திற்கு முரண் களரி என்று பெயர்.முதிர்ந்த மரங்கள் சூழ்ந்த ஆற்றோர மணல்திட்டில் ‘முரண்களரி’ எனப்பட்ட போர்ப் பயிற்சிக்களம் இருந்தது.மலரும் தலைமுறையினரின் (இளைஞர்களின்) மன்றம் இந்த முரண்களரி.
இதில் மற்போர், குத்துச் சண்டை போன்ற சண்டைப் பயிற்சிகளில் பகையில்லாமல் உடலின் திணவைக் காட்டுவதற்காக கையால் மோதிக்கொண்டனர்.ஆகையால் சினங்கொண்டு பின்வாங்காமல் தாக்கினர்.ஆனால் நாளடைவில் இது போர்க்கள பயிற்சியாக இல்லாமல்,இதற்கு குத்து சண்டை,மல்யுத்தம் என்று பெயரிடப்பட்டு மக்களின் பொழுதுபோக்கிற்காக ஒரு விளையாட்டு போட்டியாக நடத்தி கொண்டிருக்கீறார்கள்.ஆனால் முதன்முதலில் இந்த விளையாட்டு நம் இந்தியர்களிடமிருந்து தான் சென்றது என்பது நம்மில் பலருக்கு தெரியாது.அதற்கு ஆதாரங்கள் சங்க இலக்கியங்கள் மட்டுமே.
போட்டி தொடங்கவிருக்கும் நேரத்தில் ஒலிப்பெருக்கியில் ஒரு போட்டியாளரின் பெயரை அறிவித்து விட்டு “அடுத்து இந்த போட்டியாளாரோடு நேருக்கு நேராக சண்டையிட போகிறவர்.இரண்டு முறை பாக்ஸிங் பட்டம் வென்ற தி கிரேட் சாம்பியன் ஆதித்யா மௌரியன்” என்றவுடன் அரங்கத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் அனைவரும் “மௌரி….மௌரி….மௌரி…” என்று எழுந்து அந்த அரங்கமே அதிரும் அளவு உரக்கக்கூச்சலிட்டவாறு கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.
மேடையை நோக்கி வந்து கொண்டிருந்தவன் அவர்கள் அனைவரையும் பார்த்து ஒரு வசீகர புன்னகை ஒன்றை மட்டும் சிந்தி,குத்துச்சண்டை வளையத்திற்குள் சென்று சண்டைக்கு தயாராவது போல் நின்று கையால் காற்றைக் குத்துவது போல் சைகை செய்தான்.
அங்கிருந்த அனைத்து பெண்களும் அவனின் புன்னகையிலும் தோற்றத்திலும் மயங்கி,அவனின் மேல் உள்ள மயக்கத்தில் “மௌரி…ஐ லவ் யூ…ஐ லவ் யூ…” என்று கத்தி கூச்சலிட்டனர்.
மற்ற நாட்டை சார்ந்த அனைத்து ரசிகர்களும் ‘அப்படி இவனிடம் என்ன இருக்கிறது என்று இந்த பெண்கள் அவனிடம் மயங்கி காதலிக்கிறேன் என்று பிதற்றுகிறார்கள்’ என்று அலட்சியத்தோடு ஆதித்யாவைப் பார்வையிட்டனர்.
ஆதித்யா மௌரியன் ஆறு அடி இரண்டு அங்குல உயரம்,மாநிறத்திற்கு சற்று அதிகமான நிறம்.களையான முகம்,பழுப்பு நிற கண்கள்,கூரான நாசி,அழுத்தமான உதடுகள்.பறவையின் இறகைப் போன்று அகன்று விரிந்திருந்த தோள்கள்,அவன் அணிந்திருந்த கையில்லாத கொசவு சட்டை அவனின் உடலை இறுக்கிப்பிடித்திருக்க, உடற்பயிற்சியினால் முறுக்கேறிய அவனின் உடம்பை கச்சிதமாக படம் பிடித்து காட்டியது.
அத்தோடு அவன் சண்டைக்கு தயாராக நிற்கும் தோரணை வேட்டையாட தயாராக இருக்கும் சிங்கத்திற்கு நிகராக தோன்ற,அவனோடு போட்டியிடப்போறவனின் நிலைமையை நினைத்து இப்போதே அனைவரின் மனதிலும் ஒரு திகில் பரவியது.
அது முகத்திலும் தெரிய பதட்டத்தோடு அமர்ந்திருந்தனர்.ஆனால் இந்திய ரசிகர்கள் அவர்களின் நிலைக்கு எதிராக முகம் முழுவதும் மலர்ச்சியுடனும்,கையும் வாயும் அவனை ஊக்கப்படுத்தியவாறு இருக்க,பெண்கள் அனைவரும் விடும் ஜொள்ளில் கடல்நீரே தோற்றுவிடும் அளவிற்கு அவனை பார்வையால் பருகியப்படி அவனின் மொத்த அழகையும் கம்பீரத்தையும் ரசித்து கொண்டிருந்தனர்.
நடுவர் கையசைத்து போட்டியை ஆரம்பித்தவுடன் இரண்டு போட்டியாளர்களும் மோதினர்கள்.இரண்டே அடியில் எதிர் போட்டியாளரை அடித்து கீழே விழச்செய்திருந்தான் ஆதித்யா.
கீழே தள்ளியவுடன் நடுவர் 1..2..3…….10 வரை எண்ணியும் எழாதவுடன் ஆதித்யாவை வெற்றியாளராக கைத்தூக்கி அறிவித்தார்.
ஆதித்யா அப்போது முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல்,அங்கே மௌரி என்று கூச்சலிட்டவர்களை பார்த்து இதழ்பிரித்து புன்னகைத்தான்.
கீழே அடிப்பட்டு விழுந்தவன் முகம் முழுவதும் இரத்தம் வழிய வெகு சிரமத்துடன் கை ஊன்றி எழுந்து நின்றவன்,அவனை இரண்டு அடியில் அடித்து வீழ்த்தியவனையும் தனது பயிற்சியாளரையும் திரும்பி பார்த்தான்.அவரின் முகத்தில் அப்பட்டமாக வெறுப்பை காட்டி அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.மேலும் அவரின் அருகிலிருந்த தனது காதல் மனைவியின் முகத்தில் வெறுப்பைக் கண்டவன்,தன்னை இந்நிலைக்கு உட்படுத்திய ஆதித்யாவின் மேல் ஆத்திரம் வர,கோபத்தில் அங்கே ரசிகர்களின் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தவனின் முதுகின் பின்னால் ஓங்கி ஒரு குத்துவிட்டவன் “ஆல் பிகாஸ் ஆப் யூ…சன் ஆப் பி**” என்று இழிவான வார்த்தைகளால் திட்டினான்.
இதை எதிர்ப்பார்க்காத ஆதித்யா ஒரே ஒரு நொடி தடுமாறி,சடுதியில் தன்னை மீட்டெடுத்தவன் நடுவர் தடுத்தும் பொருட்படுத்தாமல் கண்கள் சிவக்க கோபத்தில் தனது கை உறையை கழட்டி தூர வீசிறிவிட்டு,கை மூஷ்டியை மடக்கி அவனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டான்.
அத்தோடு அவனின் சட்டையைக் கொத்தோடு பிடித்து தூக்கி நிறுத்தி “எதிரினா முன்னாடி நின்னு சண்டை போடணும்…முதுகில் குத்திற நீயெல்லாம் என் முன்னாடி நிற்கவே தகுதியில்லாதவன்டா…ராஸ்கல்…!!” என்று அருவருப்பை காட்டியவன் தொடர்ந்து,
“இப்படியே உன் மூஞ்சியைக் கொண்டு போய் கண்ணாடி முன்னாடி நின்னு பாரு…யாரு பி**னு தெரியும்…நீயெல்லாம் என்னை சொல்லுறே…பிளடி இடியட்” என்று கர்ஜித்து பொது இடம் என்றும் பார்க்காமல் அவனை புரட்டியெடுத்து குற்றுயுராக்கிய பின்பு தான் விட்டான்.
இப்படி ஒரு முரட்டுத்தனத்தை யாரும் எதிர்ப்பார்க்காகததால் அரங்கமே அதிர்ச்சியில் உறைந்து நிற்க,செய்தியாளர்களும் பத்திரிக்கை நிருபர்களும் அவனின் வெறித்தனமான சண்டையை தனது நிழற்படக் கருவியில் படம்பிடித்தார்கள்.
அவனை அடித்து வீழ்த்தி கண்கள் சிவக்க கைமூஷ்டி இறுக நிமிர்ந்து நின்றவனின் தோற்றம் அந்த நரசிம்ம அவதாரம் எடுத்த விஷ்ணுவைப் போலவே இருக்க,அத்தனை பேர் இருந்தும் யாரும் அவனை நெருங்க அஞ்சி அவ்விடத்திலே உறைந்து நின்றிருந்தனர்.
மேலும் இந்தியாவிலேயே மிகப்பெரிய புள்ளி ஆதித்யா என்பதும் அவனிடம் மற்றவரை நெருங்க விடாமல் செய்ததற்கு ஒரு முக்கிய காரணம்.
ஒரு பக்கம் பயமிருந்தாலும் இன்னொரு பக்கம் அவனின் வெற்றியை அறிந்து இந்திய ரசிகர்கள் அந்த அரங்கம் அதிரும் அளவு கரகோஷத்தை எழுப்பியும் “மௌரி…மௌரி…மௌரி” என்று கூச்சலிட்டு கத்தி ஆர்ப்பரித்தனர்.
அதன்பிறகு மற்ற அனைத்து நாடுகளின் ரசிகர்களும் அவனின் வீரத்தையும் கோபத்தையும் பார்த்து பிரம்மித்து போய் கரகோஷத்தை எழுப்பி தனது வாழ்த்தை தெரிவித்தார்கள்.
நடுவருக்கும் ஆதித்யா செய்தது தவறு என்று தெரிந்தாலும் அதேசமயம் எதிர் நாட்டு போட்டியாளர்,ஆதித்யாவை சென்று தாக்கியதும் தவறு என்பதால் ஆதித்யாவையே மன்னித்து வெற்றியாளராக அறிவித்தனர்.
ஆதித்யாவால் அப்போதும் தனது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தனது கைகளை மடக்கி தனது தொடையில் பலமாக குத்தியவன்,தனது கண்களை இறுக்கி மூடி தன்னைக் கட்டுக்குள் கொண்டு வர சில நிமிடங்களாகியது.
அவனிடம் கொடுக்கப்பட்ட பரிசை வாங்காமல் அனைவரையும் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு ஆதித்யா உறுதியான குரலில் “எனக்கு இந்த சாம்பியன் பட்டம் தேவையில்லை” என்று மறுத்துவிட்டு கம்பீரமாக அந்த வளையத்தைத் தாண்டி குதித்து அரங்கத்திலிருந்து வெளியேற முயன்றவனை பத்திரிக்கை நிருபர்கள் மற்றும் செய்தியாளர்கள் அனைவரும் சூழ்ந்துக்கொண்டனர்.
புருவத்தை சுருக்கி ‘என்ன’ என்பது போல் நிமிர்ந்து நோக்கினான் ஆதித்யா மௌரியன்.
அவர்கள் எடுத்தவுடனே “ஏன் சார் செம்பியன் பட்டம் வேண்டாம்னு சொன்னீங்க…??” என்று கேள்வி எழுப்பினார்கள்.
ஆதித்யா “என்னோட எதிரியாக இருப்பவர்களுக்கென ஒரு தகுதி வேணும்…அது கண்டிப்பாக இவனுக்கு கிடையாது” என்று அங்கே அடிப்பட்டு தூக்குப்படுகையில் தூக்கிக்கொண்டு சென்றிருப்பவனை காட்டியவன் தீவரமான குரலில்,
“என்னோட போட்டி போடுபவர்களுக்கு எனக்கு நிகரான பலம் இருக்கணும்…இப்படி ஒரே சுற்றில் என்னிடம் தோற்ற இவனுக்கு எந்த தகுதியும் இல்லை…தகுதியில்லாதவனிடம் பெற்ற வெற்றி எப்போதும் வெற்றியாகாது…அது நல்ல வீரனுக்கு அழகுமில்லை” என்று தெளிவாக கூறினான்.
அதைக்கேட்டவுடன் ஒரு நிரூபர் “அப்போ உங்களுக்கு நிகரான தகுதியில்லாதவன் உங்களை எதிர்த்தால் என்ன செய்வீங்க…?அப்பவும் தகுதியில்லாதவன்னு உங்களுக்கான தகுதியை விட்டுடுவீங்களா…??” என்று கேலியாக வினவினான்.
அதைக்கேட்ட ஆதித்யா எதுவும் கூறாமல் உதட்டை வளைத்து கோணல் சிரிப்பு சிரித்தான்.அதற்கு அர்த்தம் ‘என்ன எதிர்த்துவிட்டு அவர்களால் நிம்மதியாக வாழ்ந்துவிடமுடியுமா…இல்லை வாழ தான் விட்டுவிடுவேனா…??’ என்பது தான்.
ஆனால் அது அங்கு இருக்கும் யாருக்கு புரிந்ததோ இல்லையோ அவனுடைய பயிற்சியாளர் ஜெகதீஸிற்கு நன்றாகவே புரிந்தது.அவருக்கு தான் ஆதித்யாவைப் பற்றி நன்றாக தெரியுமே…அவனை எதிர்த்தவர்கள் யாரையும் இதுவரை சும்மா விட்டதாக சரித்திரமே கிடையாது என்று…அதற்கு சான்று சற்று முன்பு நடந்த நிகழ்வு.
ஜெகதீஸ் தனது மனதில் ‘மௌரி சும்மா இருந்தாலும் இவனுங்க சும்மா இருக்க மாட்டானுங்கன்னு நினைக்கிறேன்…மௌரியைப் பத்தி தெரியாமல் வாய்க்கொடுக்கறாங்க…என்ன நடக்கப்போகுதோ’ என்று நினைத்து பதட்டத்தோடு இருந்தார்.
ஆதித்யா பதில் சொல்லாமல் உதட்டை வளைத்து கோணல் சிரிப்பு சிரிக்கவும் ஒரு நொடி உள்ளுக்குள் நடுங்கினாலும் ‘இத்தனை பேர் இருக்கும் போது நாம் எதுக்கு பயப்படணும்…??’ என்று நினைத்து வெளியில் “சார் நீங்க இன்னும் பதில் சொல்லலை…??” என்று ஒருவாறு தைரியத்தை வரவழைத்து வினவினான்.
ஆதித்யா அந்த சிரிப்பை மாற்றாமல் அலட்சியத்துடன் “இங்கு நடந்ததை வைத்தே தெரியலையா என்ன நடக்கும்னு…ஹூம்…??” என்று பதிலுக்கு புருவம் உயர்த்தி வினவியவுடன் அந்த நிரூபருக்கு நம்மை ஏதாவது செய்துவிடுவனோ என்று பயத்தில் உடலெல்லாம் வியர்க்க ஆரம்பித்தது.
அவருக்கு மட்டுமில்லாமல் அங்கிருந்த அனைவருக்கும் அப்படியே என்பது போல் அதற்கு அடுத்து யாரும் ஒரு கேள்வியும் கேட்க விரும்பவில்லை.
அதைக்கண்டு பெரிதாக புன்னகைத்த ஆதித்யா “உங்களுடைய கேள்விகள் முடிந்தது என்றால் நான் இந்த இடத்தை விட்டு போகலாம் என்று நினைக்கிறேன்…” என்று புருவம் உயர்த்தி வினவியவுடன் அனைவரும் பயத்தில் வேறு ஒன்றுமில்லை என்று அவசரமாக தலையாட்டினார்கள்.
அங்கிருந்த அனைவருக்கும் ஒன்று மட்டும் தோன்றியது…இவன் மிகவும் ஆபத்தானவன் என்று.இவனிடத்தில் நட்பு கொள்ள நினைப்பது கூட மதில் மேல் பூனை இருப்பது போல் தான் என்றே தோன்றியது.
அங்கிருந்து பெண்கள் அனைவரும் ஆதித்யாவின் தைரியமும் தோரணையும் பிடித்திருக்க “மௌரி ஷால் வீ மேரி” என்று கூச்சலிட்டு கத்தினார்கள்.
ஆதித்யா அவர்களை நோக்கி ஒரு வசீகர புன்னகையை மட்டும் வெளிப்படுத்தி விட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டான்.அவன் வாழ்க்கையில் இதைப்போல் எத்தனை பெண்களைக் கண்டிருக்கிறான்.இதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே கிடையாது.இதே இப்பெண்களில் ஒருவள் தனியாக வந்து ஆதியிடம் பேசியிருந்தால்,அவனின் நடவடிக்கை வேறாக இருந்திருக்கும்.
அவனுக்கு எப்போதும் கல்யாணப்பந்தத்தில் நம்பிக்கை இருந்ததில்லை.அதுவும் குறிப்பாக பெண்களின் மேல் நல்லெண்ணமில்லை.அதற்கு காரணம் வாழ்க்கையில் அவன் சந்தித்த பெண்கள்…அவனுக்கு அவன் தாய் மட்டுமே சிறந்த பெண்…இப்போது அவனது தங்கையும் அவ்வளவே…!
அரங்கத்தில் இருந்த அனைவருக்கும் சிறிது நேரத்திற்கு முன்பு வெறித்தனமாக ஒருவனை அடித்து வீழ்த்தி அனைவரையும் பயத்தில் ஆழ்த்தி,பத்திரிக்கை நிரூபர்களையே கதிகலங்க வைத்து கேள்வி கேட்காமல் செய்த ஆதித்யாவா இது என்று நினைக்கும் அளவு இருந்தது அவனின் வசீகர புன்னகை.
அத்தனை வசீகரமாக இருந்தது அந்த புன்னகை.அந்த புன்னகையைக் கண்டு இளம்பெண்களைத் தவிர,கூட்டத்திலிருந்து மற்ற அனைவருக்கும் அவன் சிரிக்காமல் இருப்பதே நல்லது என்றே தோன்றியது.
ஆதித்யா மௌரியன் இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் செம் என்று தொழில்வட்டாரத்தில் பெயர் கொண்ட நெடுஞ்செழியனின் ஒரே ஆண்வாரிசு.
‘தந்தை எவ்வழியோ தனயன் அவ்வழியே’ என்ற பழமொழிக்கு ஏற்றவாறு செம் எவ்வாறோ அவரின் மகனும் அவ்வாறே இருந்தான்.இல்லையில்லை அதைவிட அதிகமான அழுத்தமும் கோபமும் கொண்டவன்.ஆனால் அவனின் தாய் மகிழா ஶ்ரீ சந்தமான குணம் உடையவர்,யாரையும் அதட்டி பேச தெரியாதவர்.
ஆதித்யாவிற்கு ஒரே ஒரு தங்கை மட்டுமே,அவள் பெயர் சஞ்சுயுக்தா.அவளும் திருமணமாகி புகுந்த வீடு சென்றுவிட்டாள்.அவளும் ஒரு நேர்மையான காவல் அதிகாரி.அவளும் தகப்பனை போலவே அதீத கோபகுணம் கொண்டவள்.
ஆதித்யாவிற்கு ஒரே ஒரு தந்தை வழிப்பாட்டி மட்டுமே இருக்கின்றார்.அவரின் பெயர் மல்லிகா.
ஆதித்யா பெயருக்கேற்றப்படியே சுட்டெரிக்கும் சூரியன்.தன்னுடைய எதிரிகளையும் தன்னை எதிர்க்க நினைப்பவர்களையும் நொடியில் அழித்துவிட்டு தான்,தன்னுடைய அடுத்த வேலையில் கவனத்தை செலுத்துவான்.அவனின் இரண்டாம் பெயரான மௌரியன் என்னும் பெயர் இந்தியர்களை நெடுங்காலமாக திறமையுடன் ஆட்சி புரிந்த ஒரு பேரரச வம்சத்தவரின் பெயராகும்.
அதன்படி அவனிடம் ஒரு அரசருக்கான ஆளுமை நிறைந்திருந்தது.கம்பீரத்திலும் அழகிலும் வீரத்திலும்,தப்பு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவதிலும்,தன்னை எதிர்க்க நினைப்பவர்களை முளையிலேயே கிள்ளி எரியும் விதத்திலும்,தனக்கு எதிராக தொழிலில் போட்டியிடும் எதிரிகளையும் அடியோடு அழிக்கும் வல்லமையிலும்,அத்தோடு தன்னிடம் விசுவாசமாக வேலை செய்பவர்களுக்கு தேவையான அத்தனை உதவியையும் செய்யும் குணமும் அப்படியே அரசர்களுக்கு தேவையான அத்தனை தகுதியும் நிரம்பியிருந்தது ஆதித்யாவிடம்…!!
ஆதித்யா வீட்டிலிருப்பவர்களுக்கு ‘ஆதி’,அதே வெளியில் இருப்பவர்களுக்கு அவன் என்றும் ‘மௌரி’…!!
அரங்கத்தை விட்டு வெளியேறியவன் தனது குத்துச்சண்டை உடையிலிருந்து சாதாரண உடைக்கு மாறினான்.மாறியவன் தனது காரை நோக்கி வேக எட்டுகள் வைத்தான்.
அப்போது அவனின் கைப்பேசி அலறல் ஒலி கேட்க,அதை எடுத்துப்பார்த்தவன் அதில் ஒளிர்ந்த தாயின் பெயரில் அவனது முகத்தில் சிறு புன்னகை பூக்க,அதற்கு உயிர்க்கொடுத்து காதில் வைத்தான்.
புன்னகையுடன் பேச ஆரம்பித்த ஆதித்யாவின் முகம் சிறிது நேரத்திலேயே ரௌத்திரத்தைத் தத்தெடுக்க “யாரை கேட்டு முடிவு பண்ணீங்க…??” என்று சிம்மகுரலில் கர்ஜித்தான்.