ஜாக்சன் 2

சன்னல் திரையின் வழியாக சூரிய பகவானின் கதிர்கள் அவ்வறையினுள் விழுந்தது.

அந்நேரம் “சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக், கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில் வாகனனார்” அலைப்பேசியின் வழியாக கசிந்த கந்த சஷ்டி பாடல் உறங்கிக்கொண்டிருந்த பெண்களின் செவியை நிறைத்தது.

முதலில் அந்த சத்தம் கேட்டு கண் விழித்த ஷீலா “அடியே எருமை மாடு…உன் அலாரத்தை முதல்ல ஆஃப் பண்ணி தொலைடி” என தோழியை பார்த்து கத்தினாள்.

இருவரின் கட்டிலும் எதிரெதிரே போடப்பட்டிருந்தது. அதற்கு வளர்மதியோ “ம்ம்ம்…” என முனகிக்கொண்டே வேறுப்புறமாக திரும்பி படுத்தாள்.

அதைக்கண்டு கடுப்பான ஷீலா “அடியே வளரு…இப்போ மட்டும் நீ எந்திரிக்கலை…செவுல்லே வந்து அப்புவேன்டி” என அவ்வறையே கிடுகிடுக்க சீறியதோடு தலையணையை தூக்கி அவளின் மீது வீசியெறிந்தாள்.

“ப்ச் ஏன்டி இப்படி இம்சைய கூட்டுற…நிம்மதியா தூங்க கூட விடமாட்டியா நீ” என பதிலுக்கு இவளும் கத்தி அவளின் மீது தலையணையை வீசினாள்.

இதற்கிடையில் அலைப்பேசி மீண்டும் “சஷ்டியை நோக்க…” என பாட ஆரம்பித்திருக்க,

அப்போது தான் வளர்மதி அலைப்பேசியின் சத்தத்தை உணர்ந்தவளாய் “ஓ…அலாரம் அடிச்சிடுச்சா?அதுக்குள்ளவா மணி ஏழாகிடுச்சு” என கண்ணை தேய்த்துக்கொண்டே அலாரத்தை எடுத்து அணைத்தாள்.

“ஏன் டி ஞாயித்து கிழமை கூட என்னை நிம்மதியா தூங்கவிடமாட்டியா?இன்னைக்கும் எதுக்கு அலாரத்தை வைச்சு எழுப்பி தொலையற பன்னீ” என மெத்தையில் கவிழ்ந்து படுத்தவாறு வசைமொழி பொழிந்தாள் ஷீலா.

அப்போது தான் ஞாபகம் வந்தவளாய் “நான்?நேத்து அலாரமே வைக்கலையே…” என சொல்லும் போதே அவளிற்கு சிறிது சிறிதாக நேற்று இரவு நடந்த நிகழ்வுகள் எல்லாம் கண் முன் வந்துச் சென்றன.

தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன் என்பதில் தொடங்கி,கிணற்றில் அந்த அரூபம் தள்ளிவிட்டது வரை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக ஞாபகத்தில் எழுந்து அவளின் உயிரை உறைய வைத்தது.

உடனே “ஐய்யோ” என பயத்தில் அலறி அவள் வாயை பொத்திக்கொள்ள, அவளின் சத்தம் கேட்டு தலையை தூக்கி பார்த்த ஷீலா “இப்போ என்னடி?” என சலிப்பாக வினவினாள்.

“ஷீலு…ஷீலு…” என அச்சத்தோடு முகம் வெளிறிட ஓடி வந்து தோழியின் கையை பிடித்துக்கொண்ட வளர்மதி,

“ஷீலு நைட் என்னாச்சு தெரியுமா?நான் கிணத்துல விழுந்து செத்துட்டேன்டி…என்னை அந்த பேய் கிணத்துலே தள்ளி விட்டிருச்சு…நான் காத்துல பறந்தேன் தெரியுமா?அது என்னை கொன்னுடுச்சு” என சிறுப்பிள்ளை போல் துண்டு துண்டாக அச்சத்தோடு அவள் பிதற்றிக்கொண்டிருக்க,

அவளை மேலிருந்து கீழாக ஒரு மாதிரியாக பார்த்தவள் “அடச்சீ கைய விடு” என அவளின் கரத்தை உதறியவள்,

“மறுபடியும் உன் பேய் கதைய ஆரம்பிச்சிட்டியா?பேய் உன்னை கொன்னுடுச்சினா நீ எப்படிடி என்கிட்ட பேசிட்டு இருக்கிறீயாம்?” என இடக்காக கேட்டாள்.

அதன்பிறகே அவளிற்கு நிஜம் உறைத்தது.

‘அதானே…நான் எப்படி உயிரோடு இருக்கேன்…’ என தனது கன்னத்தை பிடித்து இழுத்து பார்த்தவள்,கை கால்களை எல்லாம் ஒரு முறை சரி பார்த்தாள்.

‘அப்போ நம்ம உயிரோடு தான் இருக்கோமா?இல்லையே நைட் கிணத்துல விழுந்த ஞாபகம் எனக்கு நல்லாவே இருக்கே’ என அவள் யோசித்துக்கொண்டிருக்கும் போதே,

“இந்தா புள்ள…நீயும் குழம்பி என்னையும் குழப்பி என் உசுரெடுக்காமல் இன்னைக்கு ஒரு நாளைக்கு எனக்கு லீவு கொடு…என்னால முடியலை” என சோர்வுடன் அலுத்துக்கொண்டு அவள் விழி மூட,

“ஏய்…ஏய் ஷீலு…இதை மட்டும் சொல்லு…நைட் என்னாச்சு?நான் எப்படி ரூமுக்கு வந்தேன்?” என விடாமல் தோழியை பிடித்து உலுக்க,

“வளருஊஊ” என கத்திக்கொண்டே எழுந்தவளின் முகம் பத்திரகாளியை போல் ஆக்ரோஷமாக இருந்தது.

அதையெல்லாம் அவள் கண்டுக்கொள்ளும் நிலையில் இல்லை. அவளிற்கு சில விஷயங்களை தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது.

“ஒழுங்கு மரியாதையா நைட்டு என்னாச்சுனு சொல்லற…இல்லைனா அடுத்த தடவை டேட்டா தீர்ந்திடுச்சுனு என் ஃபோனை கேட்டால் கொடுக்கமாட்டேன்” என அவளை தந்திரமாக மிரட்டினாள்.

அவளின் மிரட்டல் ஷீலாவிடம் நன்றாகவே வேலை செய்தது.

“அட ஏன்டி என்னை இம்சை பண்ணற ராங்கி…” என தலைச் சொறிந்து தோழியை திட்டியவாறே,

“நைட் இன் வூ ஓப்பாவை நான் ரசிச்சிட்டு இருந்தானா…நீ திடீர்னு நீ தற்கொலை பண்ணிக்கிறேனு போனீயா?போன வேகத்திலே திரும்பி வந்தவ நான் கூப்பிட கூப்பிட பெட்டுலே போய் விழுந்திட்டே…அப்போ விழுந்தவ அதுக்கு பிறகு இப்போ தான் எழுந்திரிச்சே…எழுந்திரிச்சவுடனே இதோ இப்போ என் உசிரை எடுத்திட்டு இருக்க” என நெஞ்சில் அடித்து ஆதங்கத்துடன் கூறினாள்.

அவளிற்கு அனைத்தும் குழப்பமாக இருந்தது.
கிணற்றில் விழுந்து மூர்ச்சையானது வரை அனைத்தும் அவளின் ஞாபக இடுக்கில் இருந்தது.

அதற்கு மேல் நிகழ்ந்தது எதுவும் நினைவில் இல்லை. ஒரு வேளை அந்த அரூபம் தான் தன்னை காப்பாற்றியிருக்குமோ என அவளுள் யோசனைகள் ஓடிக்கொண்டிருக்க,

“அம்மாடி வளரு…நீ கேட்ட விவரம் கிடைச்சதுனா செத்த நகர்ந்துக்கறீயா?நேருல தான் என் வி ஓப்பா கூட டூயட் பாட முடியலைனு கனவுல பாடிட்டு கிடந்தேன்…என் கனவை முதல்ல உன் முருகர் கெடுத்தார்…இப்போ நீ கெடுக்கற…இந்த கன்னிப் பெண்ணோட சாபம் உன்னை சும்மா விடாதுடி…பாவி மகளே” என வசைப்பாடியவள்,

“தயவுசெய்து இங்கிருந்து கிளம்புமா நீ…” என அவள் இரு கையெடுத்து கும்பிடவும்,

“ரொம்ப ஓவரா பண்ணாதே…வி னா கரடி கக்கா போறே வாய்ஸ்ல ஒருத்தன் பாடுவானே அவன் தானே” என அவள் பரிகாசம் செய்ய,

அதுவரை படுத்துக்கொண்டே பேசிய ஷீலா கொதித்தெழுந்து “அடிங்க…யாரை வேணா தப்பா பேசு…நான் பொறுத்துப்பேன்…என் ஓப்பாவை பத்தி ஏதாவது பேசின…சாவடிச்சிடுவேன்டி” என சீறினாள்.

“ம்க்கும்” என வளர்மதி நொடிக்க,

“ஏய் என் ‘வி’ பத்தி உனக்கு என்னடி தெரியும்?அவனுக்கு உலகம் ஃபுல்லா எவ்வளவு கேர்ள் ஃபேன்ஸ் இருக்காங்க தெரியுமா?” என சிலிர்த்துக்கொண்டு தோழியிடம் சண்டைக்குச் செல்ல,

“எனக்கு வி யும் தெரிய வேணாம்… பி யும் தெரிய வேணாம்…மூடிட்டு போய் இன்னைக்கு நீ தானே துணி துவைக்கணும்…ஒழுங்கு மரியாதையா போய் துணிய துவைச்சு வை போடி” என அதட்டி அவளை எழுப்பி விட்டாள்.

அதற்கு இதழை சுழித்த ஷீலா “வெட்கம்…வேதனை …அவமானம்…” என முத்து படத்தில் வரும் மீனா போல் கையை நெற்றியில் வைத்து பாவனை செய்து காட்டியவள்,

“நீ இருக்கியே?போடி டேஸ்ட்லெஸ் இடியட்” என‌ அவளின் தலையில் தட்டிவிட்டு அவள் தொங்கு தொங்கென்று நடந்துச் செல்ல,

‘அந்த முகரை கட்டைய பார்த்தாவே பிடிக்கலை…இதிலே அவனுங்க பாட்டை வேற நான் ரசிக்கணுமாம்…த்தூ’ என துப்பிவிட்டு தனது அலைப்பேசியின் வழியாக மீண்டும் கந்த சஷ்டி பாடலை ஒலிக்க விட்டாள் வளர்மதி.

“ஆரம்பிச்சிட்டா…சாமியாரிணி…இனி இது ரூமா மடமானே தெரியாது” என முனகிக்கொண்டே அவள் குளியலறைக்குள் நுழைந்தாள்.

அவள் செல்லும் வரை காத்திருந்த வளர்மதி அறையெங்கும் விழிகளை சுழற்றி “ஏய் பேயே…பேயே” என கிசுகிசுப்பான குரலில் அழைத்து பார்த்தாள்.

பதிலுக்கு எந்தவொரு சப்தமும் இல்லை.
அந்த அரூபம் அவள் அருகில் இருந்தால்,சட்டென அவளால் உணர முடியும். அந்த ஆன்மா அவளை நெருங்கினாலே அவளின் தேகமெல்லாம் சில்லிட்டு போகும்.

தற்போது அத்தகைய உணர்வு அவளுள் ஏற்படவில்லை என்றானவுடன் ‘எங்க போயிடுச்சு இந்த பேயு…காலையிலே வாக்கிங் எதுவும் போயிருக்குமோ?’ என அபத்தமாக எண்ணிக் கொண்ட பேதையவள்,அவளின் கட்டிலுக்கு அடியில் இருந்த ஒரு இழுப்பறையை திறந்தாள்.

அதனுள் மடித்து வைக்கப்பட்டிருந்த துணிகளுக்கு இடையில் ஒரு தங்க நிற பெட்டி ஜொலித்தது.
அந்த பெட்டியின் ஜொலிப்பில் அவளின் கண்கள் கூசியது‌.

கூடவே,அபூர்வமான வேலைப்பாடுகளால் வடிவமைக்கப்பட்ட அந்த பெட்டியை கையில் எடுத்து வருடியவளின் உடலில் ஒரு சிலிர்ப்பு!

அந்த ஆன்மா அவளை தீண்டும் போது உண்டாகும் அதே உணர்வு இந்த பெட்டியை தொடும் போதும் அவளுள் ஏற்பட்டது.

ஒரு முறை விழி மூடி திறந்த பெண்ணவள் ‘இந்த பெட்டி என் கைக்கு வந்த பிறகு தான் என்னை சுத்தி பல அமானுஷ்ய விஷயங்கள் நடக்குது…ஒரு வேளை இந்த பெட்டி தான் எல்லாத்துக்கும் காரணமா?’ என அதை கையில் ஏந்தியப்படியே அவள் யோசித்தாள்.

அக்கணம் அந்த பெட்டி அவளின் கையை வந்தடைந்த அத்தருணத்தை நோக்கி அவளின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.

இரண்டு மாதங்களுக்கு முன்பு,

கல்லூரியில் அவளிற்கு விடுமுறை அளித்தவுடன்,ஊருக்குச் சென்றிருந்தவளை அவளின் பாட்டி வசுந்தரம்மாள் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.

அவளது தந்தை சீனிவாசனின் தாயார் அவர்.
சீனிவாசனின் மனைவியான காத்தாயினிக்கும் வசுந்தராம்மாளிற்கும் எப்போதும் ஒத்துவராது.

வீட்டில் என்றும் மாமியார் மருமகள் குடுமிப்பிடி சண்டை தான்!

அதனால் வசுந்தரம்மாள் தன் தனயன் அதே ஊரில் இருந்தப்போதிலும் தன் கணவர் கட்டிக்கொடுத்த வீட்டில் தனித்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.

வளர்மதிக்கு வசுந்தரம்மாளை மிகவும் பிடிக்கும்.
அதனால் விடுமுறைக்கு ஊருக்கு வந்துவிட்டாலே அவளின் வாசம் எல்லாம் அவரது வீட்டில் தான்!

அதைக்கண்டு காத்தாயினி முணுமுணுத்தாலும் அவளோ அதை சிறிதும் பொருட்படுத்தமாட்டாள்.

“வசுந்தராம்மா…வசுந்தராம்மா…மிசஸ். முனியாண்டி…ஏய் கிழவி” என பல்வேறு பாணியில் அழைத்துக்கொண்டே வசுந்தராம்மாளின் வீட்டிற்குள் நுழைந்தாள் வளர்மதி.

‘இந்த புள்ளைக்கு இருக்க ஏத்தத்தை பாரேன்’ என வசுந்தராம்மாள் புலம்பினாலும்,பேத்தியின் அழைப்பில் அவரின் இதழில் புன்னகை மலர்ந்தது.

“வளரு இங்கின வா கண்ணு…ஆயா உள்ளற இருக்க அறைக்குள்ள இருக்கேன்” என உள்ளிருந்து அவர் குரல் கொடுத்தார்.

“அங்க என்ன ஆயா பண்ணிட்டு இருக்க…?” என்று கேட்டவாறு அந்த வீட்டினுள் கடைசியாக இருந்த அறைக்குள் நுழைந்தாள் பேத்தி.

அந்த அறையினுள் சிறிய மஞ்சள் நிற மின் விளக்கு மட்டுமே ஒளிர்ந்துக்கொண்டிருந்தது.

கதவை திறந்து உள்ளே நுழைந்தவளிடம் வசுந்தராம்மாள் “வெரசா கதவை தாழ் போட்டு இங்கின வா கண்ணு” என்றார் ரகசியக்குரலில்.

அவரின் குரல் அவளுள் குறுகுறுப்பை கொடுக்க “கிழவி எனக்கு ஏதாவது பொக்கிஷம் தரப்போறீயா என்ன?” என ஆவலாக கண்கள் மின்ன கேட்டுக்கொண்டே,கதவை தாழிட்டு அவரை நெருங்கினாள்.

அவர் ஒரு பழைய பாழடைந்த அலமாரியின் முன்பு நின்றிருப்பதை பார்த்தாள் பெண்ணவள்‌.

“இங்கின வா…வெரசா இந்த அலமாரியை திற” என இடுப்பில் சொருகியிருந்த சாவிக்கொத்தை அவளிடம் நீட்டினார்.

உடனே அவளின் புருவங்கள் இரண்டும் சுருங்கின. ஏனெனில்,அந்த அலமாரியை பலமுறை திறந்து காட்டும் படி அவரிடம் அவள் கேட்டிருக்கிறாள். ஆனால் ஒரு முறை கூட அவளிற்கு அதை திறந்து காட்டியதில்லை அவர்.

“வளரு அந்த அலமாரி பக்கம் போவக்கூடாது ஆத்தா” என அவளை அதட்டி வெளியே அழைத்துச் சென்றுவிடுவார்.

அவளிற்காவது அந்த அறைக்குள் வருவதற்கு உரிமை இருந்தது. ஆனால் மற்றவரை அந்த அறைப்பக்கம் வருவதற்கு கூட அனுமதிக்க மாட்டார் வசுந்தராம்மாள்.

அந்த அளவு கெடுப்பிடி இருந்தது. அவளின் தாய் தந்தையர் உட்பட,ஒருவருக்குமே அவ்விடத்திற்கு அனுமதியில்லை.

இன்றோ அவர் தன்னிடம் சாவியை கொடுத்து அலமாரியை திறக்கும் படி பணிக்கவும்,அவள் திகைப்புற்றாள்.

“ஆயா நிசமா தான் சொல்லறீயா நீ?” என அப்போதும் வளர்மதி நம்பாமல் சந்தேகமாக வினவவும்,

“நெசம் தான் ஆத்தா…திற” என்று கூறி அந்த மூதாட்டி கதவுப்பக்கமிருந்து தள்ளி நின்றார்.

அவள் குழப்பத்துடனே அந்த அலமாரியை திறக்க,அலமாரியின் கதவு கீறிச்சிடும் சப்தத்தோடு திறந்தது.

கதவை திறந்தவுடன் சட்டென கதவிலிருந்த தூசி அவளின் கண்ணில் பறந்து விழ, ஒரு முறை கண்களை அழுந்த தேய்த்தவளிற்கு தும்மல் வேறு வந்தது.

“அச்…அச்” என துப்பட்டாவை வைத்து இரண்டு முறை தும்மியவளிற்கு கடுப்பானது.

“ஹே கிழவி…நீ சரியான உஷாரு…கண்ணுல தூசி விழும்ன்னு தெரிஞ்சு தான் என்னைய திறக்க சொன்னீயா?நீ திறக்க சொன்னப்போவே நான் சுதாரிச்சிருக்கணும்” என இடையில் கைவைத்து அவரை முறைக்க,

“அப்படியே உன் ஆத்தாகாரி மாதிரியே நசநசனு பேசாதேடி…காரியத்தை பாரு” என மூதாட்டி அதட்ட,

“ம்க்கும் அப்படியே உனக்கு மட்டும் வாயு குறைச்சலோ” என அவள் கடுப்புடன் நொடித்துக்கொள்ள,

“உன்னையெல்லாம் உன் அப்பன் பெத்தானா செஞ்சானாடி?” என பொறுமையிழந்து அவர் வசைய,

அவளோ சிறிதும் அடங்காமல் “தெரியலையே…என் அப்பனுக்கு போன் போடறேன் பேசறீயா?” என்றவாறு அலைப்பேசியை சுரிதார் பையிலிருந்து எடுக்க,

“அடி ஆத்தா” என அவளின் கையிலே ஓங்கி ஒரு அடி வைத்தவர் “செல்ல முதல்ல உள்ள வைடி…சரோஜாவை கடைக்கு அனுப்பியிருக்கேன்…அவ வரதுக்குள்ள இந்த அறையிலிருந்து வெளிய போவணும்…வாயை மூடிட்டு இந்த அலமாரிக்குள்ளற ஒரு பெட்டி இருக்கும் அதை கை விட்டு எடுடி” என பேத்தியின் மண்டையில் ஒரு தட்டு தட்டினார்.

“ஏய் கிழவி நீ ரொம்பதேன் ஓவரா பண்ணற” என இதழை சுழித்துக்கொண்டே அலமாரியின் உள்ளுக்குள் இருந்த சிறிய பெட்டகத்தை திறந்து,அதிலிருந்து ஒரு பெட்டியை வெளியே எடுத்தாள்.

மிதமான வெளிச்சத்திலும் அந்த தங்க நிற பெட்டி பளபளவென மின்னியது.

அந்த பெட்டியை வாங்கி சட்டென ஒரு கருப்பு பைக்குள் வைத்து பத்திரப்படுத்தியவர் “இந்தா கண்ணு…இது நம்ம பரம்பரை பெட்டி…” என்றவர் மேலும் சில இரகசியங்களை அவளிடம் உரைக்க,
அவளோ விழி விரித்து அனைத்தையும் ஒரு வித பிரம்மிப்புடன் கேட்டிருந்தாள்.

“எக்காரணத்தை கொண்டும் இந்த பெட்டி வேற யாரு கைக்கும் போயிடக்கூடாது வளரு…உன் அம்மாகிட்ட கூட காட்டாதே…பெட்டி பத்திரம்” என்றவர், உடனே தனது முந்தானையில் மறைத்து வைத்திருந்த ஒரு கயிற்றை கையில் எடுத்தார்.

“வளரு போன தடவை வரப்போ கையிலே ஒரு கயிறு கட்டிவிட்டேனே…அது மாதிரி இதையும்  கட்டிக்கோ” என சொல்ல,

“ஏதே அந்த கயிறா கருமம்…அதெல்லாம் நான் கழட்டி வீசி பல காலமாகுது” என்றதும் அவளின் வாயிலே பட்டென ஒரு அடி வைத்தார் வசுந்தராம்மாள்.

அவளிற்கு சுள்லென்று கோபம் வந்தது.

“எதுக்கு கிழவி இப்போ என்னை அடிக்கிற?” என வலியில் வாயை தேய்த்துக்கொண்டே அவரிடம் அவள் எகிற,

“பின்ன என்னடி?பல பேருக்கிட்ட போய் மந்திரிச்சு வாங்கின கயிறை கழட்டி வீசிட்டேன்னு அசால்ட்டா சொல்லற” என முறைத்தார் அவர்.

“ஏய் கிழவி…அதை கட்டிக்கிட்டு போனால் காலேஜிலே என்னை பட்டிக்காடுனு அம்புட்டு பசங்களும் கிண்டல் பண்ணறானுங்க…இனி இது மாதிரி கயிறெல்லாம் கட்டிவுடாதே நீ…கட்டினே செம்ம காண்டாகிடுவேன்” என்றாள் நாசி விடைக்க.

“கண்ணு ஆயா உன் நல்லதுக்கு தான் இதெல்லாம் சொல்லறேன்…நம்ம குடும்பத்து பொம்பளை பிள்ளைங்க மேலே ஏதோ சாபம் இருக்காம் கண்ணு…அதுக்கு தான் வழிவழியா இந்த சம்பிரதாயமெல்லாம் தொடர்ந்திட்டு இருக்கோம்…எனக்கு எங்க அம்மா இதெல்லாம் பண்ணாங்க…உனக்கு நான் சொல்லறேன்…உன் அம்மாக்காரிக்கு இதெல்லாம் தெரியாது…எங்க பரம்பரைக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம் இது…பார்த்து சூதானமா இரு” என அவளிடம் நிதானமாக அறிவுரை கூற, அவளோ வேண்டாவெறுப்பாக கேட்டுக்கொண்டிருந்தாள்.

இந்த காலத்தில் உள்ள பிள்ளைகளுக்கு யாருக்கு தான் அறிவுரை கூறினால் பிடிக்கும். அதனால் வளர்மதியும் அவர் கூறியதை துளியும் பொருட்படுத்தவில்லை.

அதற்கான தண்டனைகளை அவள் வெகு விரைவிலே உணர்ந்துக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பமும் அமையும் என்பதை அவள் அந்நொடி அறியவில்லை.

அவர் கூறி முடித்ததும் “சரி நான் கிளம்பறேன் ஆயா” என அவள் புறப்பட ஆயத்தமாகியதும்,

“அட இரு புள்ள…எதுக்கு இப்போ கால்ல வெந்நீய ஊத்தின கணக்கா குதிக்கிறவே…கையை காட்டு…இது கருப்பனோட கயிறு…உன்னை எல்லா ஆபத்திலிருந்தும் காப்பாத்தும்” என அவளின் கையில் அந்த கருப்பு கயிற்றை கட்டினார்.

“ஏன் பாட்டி?எனக்கு ஒரு டவுட்…ஏன் எப்போ பாரு…கருப்பனோட கயிறே கட்டறீங்க…வெள்ளையனோட கயிறு கட்டினா கருப்பன் கோவிச்சுப்பானா?” என நக்கலாக இதழ்கடித்து சந்தேகம் கேட்க,

“ஏய் இப்படியெல்லாம் பேசாத புள்ள கருப்பனுக்கு கோவம் வந்திடும்…ஒழுங்கா இரு. இந்த கயித்தை மட்டும் எக்காரணத்தை கொண்டும் கழட்டாதே கண்ணு…பெட்டியும் பத்திரம்” என அவளை எச்சரித்து அனுப்பியவரின் குரலில் ஒரு நடுக்கம் விரவி கிடந்தது.

அதனை அவள் துளியும் சட்டை செய்யவில்லை.
அவள் விளையாட்டுத்தனமும் துடுக்கத்தனமும் நிறைந்த நவநாகரீக யுவதி அவள்!

அதனால் அவளிற்கு இதுப்போல் சடங்கு,சம்பிரதாயம் இதில் எல்லாம் பெரிதாக நம்பிக்கையில்லை.

ஏனோ முருகனை மட்டும் அவள் உடல் பணிந்து வணங்கும். அது மட்டும் ஏனென்றே அவளிற்கு தெரியவில்லை.

தனது பாட்டியிடமிருந்து பெற்று வந்த பெட்டியை கல்லூரி விடுதிக்கு எடுத்துச் செல்லும் துணிப் பையில் வைத்ததோடு சரி!

அதற்கு பிறகு அந்த பெட்டியை அவள் அடியோடு மறந்துவிட்டாள். பாட்டி கட்டிய கயிற்றையும் அன்றே அறுத்தெறிந்துவிட்டாள்.

அதற்கான பலனை தான் அவள் கடந்த இரண்டு மாதங்களாக அனுபவித்துக்கொண்டிருக்கிறாள்.

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Select your currency
INR Indian rupee
Scroll to Top