இரவு 11 மணி,
அதுவொரு பெண்கள் தங்கும் கல்லூரி விடுதி.
இருநூறுக்கும் மேற்பட்ட அறைகள் உள்ள அந்த கல்லூரியின் விடுதியில் ஒரே ஒரு அறையில் மட்டும் விளக்கு எரிந்துக்கொண்டிருந்தது.
அந்த அறையின் உள்ளே பத்தொன்பது வயது இளம் பெண்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.
“ஐய்யோ வளரு…என் செல்லம் இன் யூ வோப்பை பாரேன்…பட்டர் பிஸ்கெட் மாதிரி பையன் எம்புட்டு அழகா இருக்கான்…அப்படியே கடிச்சு தின்னலாம் போலே…” என மடிக்கணினி திரையில் தெரிந்த கொரியன் நாயகனை கிள்ளி முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தாள் ஷீலா.
அவளின் பேச்சை கேட்ட வளர்மதியின் விழிகளில் கொலைவெறி தாண்டவமாடியது.
‘அவ அவ அடுத்து என்னாகுமோனு பீதியில் கிடக்கா…இவளுக்கு இந்த சமயத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேட்குது’ என கோபத்தில் புலம்பியவளின் கையிலிருந்த மர்ம நாவல் கசங்கியது.
தோழியிடமிருந்து பதில் இல்லை என்றவுடன் ஷீலா அவளை திரும்பி ஏறிட்டாள்.
அவளின் விழிகளில் தெரிந்த வன்மத்தை பார்த்தவள் “அடியே… இப்போ ஏன் அந்த புக்கை அம்புட்டு லவ்வோட பார்த்திட்டு இருக்கவே?” என நக்கலாய் கேட்டாள் ஷீலா.
அதில் கடுப்பான வளர்மதி “பின்ன உன்னை மாதிரியா நான்?இந்த கருமத்தையெல்லாம் பார்க்கறதுக்கு பேசாமல் நான் அசீட் குடிச்சு சாவலாம்” என்று எரிச்சலாக முணுமுணுத்தாள்.
“நான் கொரியன் சீரிஸ் பார்க்கிறதுக்கு நீ ஏன்டி அசீட் குடிச்சு உயிரை விடறே?” என்று பதிலுக்கு நக்கலாய் கேட்க,
உடனே வெடுக்கென்று தலையுயர்த்திய வளர்மதி “அந்த கண்றாவிய என் முன்னாடி பார்க்காதேனு உனக்கு எத்தனை தடவை சொல்லறதுடி பக்கி?அவனுங்களும் அவனுங்க மூஞ்சியும் மேக் அப் போடற ஆம்பளைங்களை பார்த்தாலே எனக்கு அலர்ஜி…இதுலே நீ ரசிச்சு வேற பார்க்கற…எனக்கு வாந்தியே வருது…உவ்வே” என வெறுப்போடு முகம் சுழித்தாள்.
“நான் கூட தான் உன்னை க்ரைம் த்ரில்லர் படிக்காதே…சீக்கிரம் சைக்கோ கொலைகாரியா போயிடுவேனு சொன்னேன்.நீ கேட்டியா?” என பதில் கேள்வி கேட்டுக்கொண்டே முறுக்கை கடித்து சாப்பிட்டாள் அவள்.
மீண்டும் அவளை முறைத்த வளர்மதி “நைட் நேரத்திலே எந்த பைத்தியமாவது முறுக்கு சாப்பிடுமாடி?” என அதற்கும் தோழியை அரட்ட,
“முறுக்கு சாப்பிடறதுக்கு எதுக்குடி கால நேரமெல்லாம்…பசினு வந்துட்டால் காண்டாமிருகம் கண்ணு முன்னாடி வந்தால் கூட தின்றதை நிறுத்தக்கூடாது…ஃபுட் இஸ் ஆல்வேஸ் மேக் யூ ஹெவன் கேர்ள்” என சிலாகிப்போடு தத்துவம் பேசிக்கொண்டிருந்தவள்,
சடாரென்று “ஐய்யோ போடி…உன் கூட பேசி பேசி என் வோப்பை மறந்திட்டேன் பாரு…இன் வூ வோப்பா” என பரசவத்தோடு விழி விரித்து மீண்டும் கணினி திரைப்பக்கம் திரும்பிக்கொண்டாள்.
அதைப்பார்த்து தலையிலடித்த வளர்மதி வலுக்கட்டாயமாக தன் கவனத்தை புத்தகத்தினுள் புதைத்தாள்.
இது தான் வளர்மதி…அவளின் வாய் ஒரு நொடி கூட மூடாது. அதுவும் திரையில் கொரியன் நபர்களை பார்த்துவிட்டால் அவளிற்கு ஆகவே ஆகாது.
ஷீலாவிற்கோ அனைத்தும் தலைகீழ்…கொரியன் சம்பந்தப்பட்ட எது என்றாலும் ஆவென வாயை பிளந்து பார்ப்பாள். இதன்பொருட்டே இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும்.
அதிலும்,தோழியை திட்டுவது என்றால் வளர்மதிக்கு அல்வா சாப்பிடுவது போல் தித்திப்பாக இருக்கும்.
அதனை ஷீலாவும் அறிந்து தோழியிற்கு தக்க பதிலடி கொடுப்பாள்.
இவள் வாயால் அடிக்க…பதிலுக்கு அவள் வாயால் அடிக்க… உடனே இவள் தலையணையை தூக்கி அடிக்க…பதிலுக்கு அவள் தலையணையை தூக்கி அடிக்க…
அவர்களின் அறை எப்போதும் ஒரே கலாட்டாவாக இருக்கும். சண்டை நடக்கும் போது அருகிலிருக்கும் அறையிலிருந்து ஒருவரும் வந்து இவர்களை தடுக்கமாட்டார்கள்.
அந்த அளவு சேட்டை பிடித்தவர்கள் வளர்மதியும் ஷீலாவும்!
வளர்மதி மீண்டும் புத்தகத்தினுள் முகம் புதைத்திருந்தாலும்,அவளினுள் ஒரு அசாதாரணமான மனநிலை நிலவியது.
அதற்கு ஏற்றாற் போன்று திறந்திருந்த சன்னல் திரையின் வழியாக பலத்த காற்று வீசிட,திரைச்சீலைகள் இலேசாக அசைந்தன.
அதனுடன்,அவளின் முதுகுத் தண்டை சில்லிட வைக்கும் விதமாக ஒரு குளிர்காற்று அவளை தீண்டிச் சென்றன.
உடனே பெண்ணவளின் தேகம் சிலிர்த்தது.
சட்டென இருக்குமிடம் மறந்து இரண்டொரு நிமிடம் விழி மூடி அமர்ந்துவிட்டாள் வளர்மதி.
கிட்டத்தட்ட ஒரு மோன நிலை!
அவளின் அந்த மோன நிலையை கலைக்கும் விதமாக,அவளின் காதோரம் “கிம் ஜி வோன்” என உயிரை சில்லிட வைக்கும் ஒரு குரல்.
அந்த குரல் அவளை சீண்டிய அடுத்தநொடியே புத்தகத்தை தூக்கி வீசிவிட்டு,படீரென்று எழுந்து நின்றுவிட்டாள் வளர்மதி.
அதில் பயந்துப்போய் “ம்மாஆஆ” என அலறிக்கொண்டே எழுந்து அமர்ந்த ஷீலா “ஏய் இப்படி பேய் மாதிரி பயமுறுத்தாதேனு உனக்கு எத்தனை தடவை சொல்லறது?அறிவுக்கெட்ட முண்டம்” என திட்ட,
அதையெல்லாம் கண்டுக் கொள்ளாத வளர்மதி எங்கோ வெறித்தவாறு “இதுக்கு மேலே முடியாது…நான் ஒரு முடிவு பண்ணிட்டேன் ஷீலா” என்றாள் வெகு தீவிரமான குரலில்.
“என்ன முடிவு?” என புருவம் சுருக்கி கேட்டவள், அப்போதும் முறுக்கு தின்பதை மட்டும் நிறுத்தவில்லை.
“நான் தண்ணீலே குதிச்சு சாகப்போறேன்டி” என இறுக்கமான முகத்துடன் அறிவித்தாள் வளர்மதி.
அவளை இளக்காரமாக நோக்கிய ஷீலா “குதிக்கிறது தான் குதிக்கிற…நம்ம ஹாஸ்டல் கிணத்திலே குதிக்காதே…அப்புறம் பேயா வந்து என் உசிரை எடுப்ப…சுவர் ஏறி குதிச்சு வெளிய போய் சாவு” என அசால்ட்டாக கூற,
சட்டென தோழியின் புறம் திரும்பியவள் “அடியே நான் சாகப்போறேன்னு சொல்லறேன்…நீ என்னடானா என்னை தடுத்து நிறுத்தாமல் சாகுனு சொல்லற…என் மேலே உனக்கு கொஞ்சம் கூட பாசமே இல்லையா?” என வருத்தம் தொய்ந்த குரலில் கேட்க,
“பாசமாவது மண்ணாவது…போடி பைத்தியம்…முதல்ல போய் சாகுடி…உன் இம்சை இல்லாமல் நானாவது நிம்மதியா இருக்கேன்” என சிடுசிடுத்தாள் அவள்.
ஏனெனில்,சில நாட்களாக வளர்மதி செய்த அட்டகாசங்கள் அப்படியானது. அவளின் விசித்திரமான நடவடிக்கையில் மிகவும் அதிகமாக பாதிப்புற்றிருந்தாள் ஷீலா.
“ஷீலா…” என பாவமாக வளர்மதி இழுக்க,
அவளோ திரையிலே பார்வையை பதித்தப்படி “செத்திட்டு மறக்காமல் எனக்கு சேதி அனுப்புடி” என்றாள் சிறிதும் இரக்கமின்றி.
“ஏய் உண்மையாவே நான் சாகப் போறேன்” என அவள் கத்த,
அவளோ போர்வையை முகம் வரை மூடிக்கொண்டு “நானும் சாகுன்னு தான்டி சொல்லறேன்…போ உன் பேய் கூடவே நீயும் சாவு” என்றாள்.
அதில் ரோஷம் பெற்றவள் ‘செத்து ஆவியா வந்து உன்னை வைச்சிக்கிறேன் உங்கப்பன் மவளே’ என கறுவிக்கொண்டு விறுவிறுவென அறையிலிருந்து வெளியேறினாள்.
அவள் அங்கிருந்து சென்றப்பிறகு போர்வையை விலக்கியவள் ‘கொரியன் ஹீரோயினை விட…இவ பண்ணற அலப்பறை தாங்க முடியலை…கிறுக்கி மவ…விட்டால் இவ பத்து பேரை தண்ணீலே தள்ளி கொல்லுவா…இவ சாகப்போறாளாம்…ம்க்கும்’ என நொடித்துக்கொண்டவள்,தோழியின் சொற்களை பெரிதாக மதிக்கவில்லை.
வளர்மதி இதுப்போல் கிறுக்கத்தனமாக பேசி ஷீலாவை கடுப்பேத்திக் கொண்டிருப்பது வழக்கம் என்பதால்,இதையும் விளையாட்டாகவே எடுத்துக்கொண்டாள் வளர்மதியின் தோழி.
ஆனால் அவளிடம் பேசிவிட்டு வந்த வளர்மதி விறுவிறுவென கல்லூரி விடுதிக்கு பின்புறம்,பல நாட்களாக மூடி வைத்திருந்த கிணற்றின் அருகே வந்துவிட்டாள்.
தற்கொலை செய்துக்கொள்ளும் முடிவுடன் வந்தவளிற்கு ஏனோ ஒரு தயக்கம்!
‘நான் செய்யறது சரியா?’ என அவளின் மனசாட்சியிடம் இறுதி முறையாக கேட்க,
‘சாவறதுனு முடிவுப்பண்ணிட்டு உனக்கு என்ன தயக்கம் வேண்டி கிடக்கு…சீக்கிரம் குதிடி’ என அவளின் மனசாட்சி அதற்கும் மேலாக அவளை வெறுப்பேற்றியது.
இதற்கு தன் தோழியே மேல் என்று தோன்றிவிட்டது வளர்மதிக்கு!
‘யாருக்கும் என் மேலே அக்கறையே இல்லை…போ…நான் குதிக்கிறேன்…தினம் தினம் அதுக்கிட்ட மாட்டி சாகறதுக்கு இது எவ்வளவோ பெட்டர்’ என கிணற்றின் மீது ஏறி நின்று விட்டாள்.
ஒரு வழியாக கிணற்று சுவரின் மீது ஏறி நின்றாலும்,வளர்மதிக்கு அச்சத்தில் உடல் நடுங்கின.
‘ஐயைய்யோ தண்ணீய பார்த்தா பயமா இருக்கே…அவசரப்பட்டுட்டமோ’ என விழி பிதுங்கி அவள் கைகளை பிசைய, ‘கிணறு ரொம்ப ஆழமோ…குதிச்சா எலும்பு தேறுமா?’ என பீதியடைந்த பெண்ணவள் மெதுவாக கிணற்றினுள் எட்டி பார்த்தாள்.
நிலா வெளிச்சத்தில் பளீரிட்ட கிணற்றின் ஆழத்தை பார்த்தவளிற்கு தலை கிறுகிறுத்தது.
உடனே சர்வ அங்கமும் நடுங்க இதயம் படபடத்தன. பதட்டத்தில் அவள் தலையை பிடித்துக்கொண்டு அப்படியே சில நிமிடங்கள் கிணற்று சுவரின் மீது அமர்ந்துவிட்டாள்.
அச்சமயம் அந்த குளிர்காற்று மீண்டும் அவளை தழுவிச் செல்ல,அவள் பீதியில் உடல் விறைத்தாள்.
“கிம் ஜி வோன்” மீண்டும் மீண்டும் அதே குரல்!
இது தான் அவளின் பிரச்சனையே?
சில நாட்களாக ஒரு குரல் பெண்ணவளை ஆட்டிப்படைத்தது.
அந்தோ பரிதாபம்!
இரவில் கூட உறங்க விடாமல் அவளை தொந்தரவு செய்துக் கொண்டிருந்தது அந்த உருவமற்ற வெண்பனி!
பெண்ணவளால் அதன் குரலை மட்டுமே கேட்க முடிந்தது. அவளிற்கு ஏன் அவ்வாறு நடக்கிறது என்று தெரியாத ஒரு பாவமான நிலை.
அந்த வெண்பனி ‘ஆணா?பெண்ணா?’ என்று கூட அவளிற்கு தெரியாது.
ஏன் அவளை விடாமல் துரத்துகிறது என்றும் அவளிற்கு தெரியாது. அந்த உருவமில்லா அரூபம் பேசும் தமிழ் சிறிது வித்தியாசமாக இருந்தது.
அதனால் அது வேறு மொழியை சார்ந்த ஆவி என்று மட்டும் புரிந்துக்கொண்டாள் அவள்.
அவளால் அதை தவிர வேறு ஒன்றையும் கண்டறிய முடியவில்லை.
“கிம் ஜி வோன்” என்ற அழைப்போடு அவளின் கன்னத்தை மீண்டும் அந்த வெண்பனி தழுவியது.
குரல் வந்த திசையை நோக்கி குத்துமதிப்பாக திரும்பிய வளர்மதி “மறுபடியும் வந்திட்டியா?சாகும் போது கூட என்னை நிம்மதியா விடமாட்டியா நீ?” என அவள் ஆற்றாமையுடன் கேட்க,
“சாகப்போறீயா கிம் ஜி வோன்?” என்று கேட்ட அந்த ஆன்மாவின் குரலில் நக்கல் வழிந்தது.
அதையறியாத பெண்ணவளோ “ஆமா…உன் இம்சை தாங்காமல் தான் சாகலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என மூக்கை உறிஞ்சினாள் அவள்.
அதுவோ “சரி சீக்கிரம் செத்து என்கிட்ட வா” என்றது அசால்ட்டாக. அதன் குரலில் அளவுக்கு அதிகமான சிரிப்பும் கேலியும் மிகைந்து இருந்தது.
அதைக்கேட்டு “ஏதே” என அவள் நெஞ்சை பிடித்து அலற,
“ஜி வோனா சரியா குதிச்சிடுவியா?முன்ன பின்ன வெல்ல குதிச்சு உனக்கு பழக்கம் இருக்கா?” என மீண்டும் அதே நக்கல் தொனி.
அப்போது தான் அது அவளை ஏளனம் செய்துக்கொண்டிருப்பதையே அறிந்த வளர்மதி “ஹலோ என்ன நக்கலா?” என சூடான குரலில் வினவ,
“இல்லை விக்குலு” என மீண்டும் அதே கேலி அதனிடம்!
உடனே உருவமற்ற அந்த வெண்பனியை அவள் முறைக்க, அதுவோ தோளை குலுக்கி “சரி சீக்கர்ம் குதி…என்க்கு டைமில்லை…” என்றது.
அதில் வெகுண்டவள் “ஏய் பேயே… நான் குதிப்பேன்…இல்லை இப்படி மல்லாக்க படுத்து காலாட்டுவேன்…உனக்கு என்ன?…ச்சை பே” என ஆவி என்றும் பாராமல் அதனிடமும் சண்டைக்கோழியாய் சிலிர்த்துக்கொண்டு சண்டைக்கு கிளம்பினாள் நம் நாயகி.
அந்த வெண்பனியோ “நீ செத்தா தானே எனை பாக்க முடியும் ஜாகியோ?” என கொஞ்சலாக அவளின் கன்னத்தை மீண்டும் தீண்டியது.
அதன் தொடுகையை உணர்ந்தவள் “அடச்சீ கையை எடு” என காற்றிலே அவற்றின் புறமாக குத்துவிட்டவள்,
“ஏய் பேயே…இங்க யாரும் உன்னை பார்க்க ஒண்ணும் நாக்கை தொங்கப் போட்டு அலையலை…ஐ ஹேட் யூ” என கொலைவெறியோடு சீறினாள்.
அதுவோ சிரித்துக்கொண்டே “சராங்கே ஜி வோனா” என்றது.
“ஏதே சரங்கா…ஏய் எனக்கு சரங்கு இருக்கிறதை நீ பார்த்தியா?விளக்கமாறு பிஞ்சிடும்” என பல்லை கடித்து எகிறினாள்.
“விளக்குமாறு…வாட் இஸ் விளக்குமாறு…கொஞ்சா விளக்கு” என அது புரியாமல் வினவிட,
“ம்க்கும்…உனக்கு விம் போட்டு விளக்கறது தான் என் வேலை பாரு” என நொடித்த பெண்ணவள்,
“நீ முதல்ல கிம் ஜி வோன்னு கூப்பிடறதை நிறுத்து…இல்லை நடக்கறதே வேற” என விரல் நீட்டி எச்சரிக்க, அந்நிலையிலும் அவள் நிதானமாக அந்த ஆன்மாவுடன் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்தாள்.
அந்த உருவமற்ற அரூபமும் அதனை விரும்பியது போல் மேலும் உரையாடலை தொடர்ந்தது.
“நிறுத்த முடியாது ஜி வோனா…நீ என்னோட கிம் ஜி வோன்…உன்னை அப்படி தான் கூப்பிடுவேன்…அப்படி தான் கூப்பிடணும்” என்றது அழுத்தமான குரலில்.
“அடேய் என் அப்பா எவ்வளவு அழகா வளர்மதினு பேரு வைச்சிருக்காங்க…நீ ஏன் பேயே கிம் கி கும்கினு கூப்பிட்டு என்னை சாகடிக்கிற” என அவள் உச்சஸ்தானியில் கத்தினாள்.
அந்த இரவின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு அவளின் குரல் ஒலித்தது.
“நான் இன்னும் உன்னை சாகடிக்கலை ஜி வோனா…இனி தான் சாகடிக்கப்போறேன்” என ஒரு மார்க்கமான குரலில் கூறியது,அந்த வெண்பனி.
அதைக்கேட்டு அதிர்ந்தவள் “ஏதே சாகடிக்கப்போறீயா?” என பீதியோடு வாயில் கை வைக்க, அதுவோ சிறிதும் தயக்கமின்றி “ஆமாம்…” என்றது.
அதில் கொதிப்புற்றவள் “ஏய் என் மேலே கைய வைச்சிடுவியா நீ…நீ மட்டும் என் மேலே கை வைச்சு பாரு…மவனே உன்னை…” என அவள் வீரவசனம் பேசிக்கொண்டிருக்கும் போதே,அவள் திடீரென்று காற்றில் மிதந்தாள்.
அதுவும் கிணற்றுக்கு நேரே அந்தரத்தில் அவள் தொங்கிக்கொண்டிருக்க,அவளிற்கு ஒரு கணம் மூச்சே நின்றுவிட்டது.
உதிரம் கூட பயத்தில் உறைந்துவிட,அவளை பார்த்து “ஹாஹாஹா” என சத்தமாக சிரித்தது அந்த உருவமற்ற குளிர்காற்று.
அதன் சிரிப்பு சத்தத்தில் நிகழ்விற்கு வந்த பெண்ணவள் தான் இருக்கும் நிலையறிந்து “ஏய் ஏய் முதல்ல என்னை விடு…பயமா இருக்கு பேயே” என சுற்றிலும் விழிகளை புரட்டியவாறு கெஞ்சினாள்.
அதன் உருவம் தான் அவளின் கண்களுக்கு புலப்படவில்லை.
அதுவோ “விடவா ஜி வோனா?” என விஷமச்சிரிப்புடன் கேட்க,
“அதான் விடுனு சொல்லறேன்னில்லை…அப்புறமென்ன விடவா நொடவானு கேட்கற?அட விடு சைக்கோ பேயேஏஏஏஏ” என அவள் எகிறினாள்.
இறப்பின் வாயிலை தொட்டுக்கொண்டிருக்கும் அந்நிலையிலும் அவளின் வாய் மட்டும் அடங்குவேனா என்றது.
“சரி ஜி வோனா நீ ஆசைப்பட்டு நான் ஏதாவது இல்லைனு சொல்லியிருக்கேனா?” என காதலோடு அது கேட்க,
“இந்த பைத்தியக்கார பேயோடு ஒரே இம்சைடா ஹப்பா” என தலையிலடித்து முனகியவள்,
“விடு பேயே” என அவள் அவ்விடமே அதிர கத்த,
“விட்டறேன் ஜி வோனா” என ஒரு மாதிரி குரலில் கூறிய அந்த அரூபம்,அடுத்த கணமே அவளை ஒரேயடியாக விடுவித்திருந்தது.
அதுவும்,இந்த உலகத்திலிருந்தே முழுதாக அவளிற்கு விடுதலை கொடுத்திருந்தது.
ஆம்…தற்போது வளர்மதி அந்த ஆழமான கிணற்றுக்குள் சென்றுக்கொண்டிருந்தாள்.
அதனை அறிந்த பெண்ணவள் உச்சக்கட்ட பயத்தோடு “லூசு பேயே என்னை எதுக்குடா விட்டேஏஏஏ” என அலறிக்கொண்டே கால் கையை ஆட்டியப்படி கிணற்றினுள் விழ,சில நொடிகளுக்கு பிறகு அவளின் குரல் சிறிது சிறிதாக தேய்ந்து மறைந்துப்போனது.