இலக்கணம் 2

வெளியில் தெரியும் அந்த அழகான காட்சிகள் யாவும் அவள் பார்வைக்கு பிழையாகிப்போக,இதயமோ கத்தியால் சொருகியது போல் வலியால் துடித்துக்கொண்டிருந்தது.

ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் விழிகள் அவ்வப்போது காரிகையை தொட்டு மீள்வதை அவள் சிறிதும் உணரவே இல்லை.

ஒரு கட்டத்தில் அவள் வந்து சேர வேண்டிய இடம் வந்த நொடியில் கண்ணீரை அழுந்தத் துடைத்து வண்டியிலிருந்து இறங்கினாள் சமந்தா.

மடமடவென நடந்துச் சென்று தன் இல்லத்தை தஞ்சமடைய துடித்த பாதங்களை கட்டுப்படுத்தி சில கணம் தயங்கினாள்.

ஏனெனில், அவளது பயணத்திற்கான பணத்தை செலுத்த வேண்டிய அவசியம் உணர்ந்து கண்மூடி அடிவயிற்றிலிருந்து ஒரு ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு அவன் புறமாக திரும்பினாள்.

திறந்திருந்த சன்னல் திரை நோக்கி குனிந்து,பணத்தை அந்த ஓட்டுனரிடம் நீட்டினாள்.

அவனோ அவள் கொடுத்த பணத்தை வாங்க மறுத்து,அழுகையால் சிவந்திருந்த அவள் முகத்தையே அழுத்தமாக பார்த்திருக்கவும்,

குழம்பிய காரிகையோ ‘ஏன்?’ என்பது போல் அவனை புருவம் சுருக்க ஏறிட, அவள் கையிலிருந்த பணத்தை ஒரு கணம் நோக்கிவிட்டு மீண்டும் அவளின் முகத்தை கூர்ந்த அந்த அநாமதேயன் “இது டாக்ஸியும் இல்ல…நான் உங்களுக்கு டிரைவருமில்லை” என நிறுத்தி நிதானமாக உரைத்தான்.

அதில் திடுக்கிட்ட சமந்தாவோ அவசரமாக விழிகளை சுழற்றி வாகனத்தை ஆராய்ந்தவளிற்கு தூக்கிவாரிப்போட்டது.

ஏனெனில்,அவன் கூறியது போல் ‘இது டாக்ஸி இல்லை’ என்ற விபரம் புரிய நெற்றியை நீவி தயக்கத்துடன் “சாரி…ஏதோ யோசனையில் இதில் ஏறிட்டேன்” என மன்னிப்பு வேண்டியவள்,

உடனே பெண்களுக்கே உரிய எச்சரிக்கை உணர்வு தலைத்தூக்க முகம் கடினமுற “திஸ் இஸ் யுவர் மிஸ்டேக் ஆல்சோ மேன்…நீங்க முன்னாடியே இத சொல்லியிருக்கணும்” என்ற வாக்கியத்தை அவள் முடிப்பதற்கு முன்பே குறுக்கிட்டான் அவன்.

குறுஞ்சிரிப்புடன் அவளின் விழியோடு விழி கலந்து “இன்னைக்கு காரோட்டியா இருக்க விருப்பமில்லைனு சொன்னனே தவிர காலம் பூராவும் உங்களுக்கு மட்டுமே காரோட்டியா இருக்க விருப்பமில்லைனு நான் சொல்லலையே மேடம்” என்றான் பூடகமாக.

அவளோ அவன் கூறிய சொற்களின் அர்த்தம் உணர்ந்தும் உணராத நிலையில் “வாட்!” என அதிர்ந்து விழி விரிக்கவும்,

அவனோ பின்னந்தலையை அழுந்த கோதி “நத்திங் மேம்… இப்போ நான் கிளம்பறேன்…மீண்டும் சந்திப்போம்” என கண்ணோரம் ரகசிய சிரிப்பில் சுருங்க இயம்பியவன்,

அவள் திகைத்து நின்ற இடைவெளியில் மகிழுந்தை எடுத்துக்கொண்டு சிட்டாய் பறந்துவிட்டான்.

அவன் அங்கிருந்துச் சென்றதற்கு பிறகு சுய நினைவிற்கு வந்த காரிகையோ அவன் சென்ற பாதையின் சுவட்டை வெறித்து ‘யாரிவன்’ என்ற சிந்தனையோடு கையிலிருந்த பணத்தை ஒரு முறை நோக்கி ‘சரியான லூசு’ என திட்டிக்கொண்டாலும்,

அவனது சொற்கள் அவளின் இதயத்தில் அப்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

‘இடியட்’ என பல்லைக்கடித்து வசைப்பாடிக்கொண்டே தனது இல்லத்திற்குள் நுழைந்தவளின் மனநிலை முற்றிலுமாய் மாறிப்போனது.

துயரம் இருந்த இடத்தில் அவனை பற்றிய சிந்தனைகள் கவ்விக்கொண்டது.

அந்த அந்நிய ஆடவனுமே இதனை எதிர்ப்பார்த்தே அச்செயல்களை செய்தானோ?

அவன் அவ்வாறு எண்ணி இதை செய்திருந்தால் அவனின் எண்ணங்கள் பாவையவளின் விடயத்தில் வெற்றிகரமாக ஈடேறியிருந்தது.

அவன் நினைத்தது போல் கவினை பற்றிய ஞாபகங்கள் பஞ்சாய் பறந்து ஓடியிருக்க ‘நான் அட்ரஸ் சொல்லாமலே எப்படி சரியா என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தான்?திடீர்னு ஏன் என்கிட்ட அப்படி பேசினான்?அவன் சிரிப்பே வித்தியாசமா இருக்கே?இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?’ என அந்த புதியவனை பற்றிய ஆராய்ச்சியோடு கைப்பையை நீள்விரிக்கையில் வீசினாள்.

அதன் அருகில் தொப்பென்று அவள் அமர்ந்த அடுத்த நொடியே “மம்மி” என்ற மழலை குரல் ஒன்று துள்ளிக் கொண்டு வந்தது.

அந்த குரல் கேட்ட அடுத்த வினாடியே அவளின் சிந்தையெங்கும் ஆக்கிரமித்திருந்த அனைத்தும் கானல் நீராய் கரைந்துப்போக தாய்மையின் பூரிப்பு கிளர்ந்தெழுந்தது.

முகம் முழுக்க பரவசம் பொங்க “லக்ஷா” என ஆதுரத்துடன் அழைத்து எழுந்து நின்றவளின் காலை வெண்பனி ஒன்று ஓடி வந்து இறுக கட்டிக்கொண்டது.

அவள் மனதளவில் உயிர்மரித்து போன போது,அவளை மீண்டும் உயிர்ப்பித்து நிமிர்வுடன் நிற்க வைத்த ஒரு மந்திர உச்சாடனம்!

கவினிற்கும் அவளிற்குமான நான்கு வருட திருமண வாழ்வில் கிடைத்த ஒரே வரம்,அவள் மகன் லக்ஷன்!

அவளின் ஒரே உயிர் மூச்சு…

அவளின் அகிலம் அனைத்தும் அவன் மட்டுமே!

இனி தான் வாழும் காலம் யாவும் அவனிற்காக மட்டுமே என உறுதிப்பூண்டிருந்தாள்.

தற்போது ஓடி வந்து அவளது காலை கட்டிக்கொண்ட மகனை அள்ளி வாரியணைத்து முத்தமிட்டவளின் பெண்மை விம்மி தணிய “என்ன கண்ணா எழுந்திட்டீங்களா?” என அவனை இடுப்பில் சுமந்தவாறு கேட்க,

அவனோ அவளின் தோளில் தலை சாய்த்து தூக்க கலக்கத்திலே “மம்மி எனக்கு ஒரே தூக்கமா வது” என சோர்வுடன் கொட்டாவி விட்டப்படியே கூற,

அவன் கன்னத்தைப் பிடித்து “என் லக்ஷ் குட்டிக்கு இன்னும் தூக்கம் தெளியலையா?யாரு அவங்களை எழுப்பினது?” என கொஞ்சலாய் வினவினாள்.

வெடுக்கென்று தாயின் தோளிலிருந்து தலையை தூக்கி கண்ணில் மிரட்சியுடன் “ஆரும் என்ன வேக் பண்ணல மம்மி…நான் திதிர்னு கண்முச்சு பாத்தனா நீங்க காணோம்…சுத்தி பாத்தா இதுத்து(இருட்டு)…பாத்தியும் காணோம்…கண்ணாவுக்கு பயந்து வந்திடுச்சு” அழுகுரலில் இதழை பிதுக்கி உடைந்த மொழியில் பேசிய மகனின் பாவனையில் உருகியவள்,

“அச்சோ என் செல்ல கண்ணா” என அவனின் தலையை தன் மார்போடு கட்டியணைத்து சிறாரின் அச்சத்தை துரத்த முனைந்தாள் அந்த இளம் தாய்.

அவனும் தாயின் கழுத்தை கட்டிக்கொண்டு அவளின் நெஞ்சில் மேலும் புதைய,தன்னை காணாமல் மகன் ஐயம் கொண்டிருப்பதை அறிந்து ‘இந்த அம்மா எங்க போனாங்க?’ என இமைகள் இடுங்க யோசிக்கும் போதே,

அவர் கழிவறையிலிருந்து வெளிவருவதை வைத்தே,விபரம் அறிந்தாள் அவள்.

வெளியே வந்தவரோ மகளை நன்றாக முறைத்தார்.

தன்னுடைய பேச்சை மீறி அவள் அங்குச் சென்று வந்ததினால் உண்டான கோபம் அது!

அதனால் அவளை உறுத்துவிழித்தவாறே பேரனை நெருங்கியவர் “லச்சு குட்டி அதுக்குள்ள எந்திரிச்சிட்டீங்களா?வாங்க பாட்டி பூஸ்ட் ஆத்தி தரேன்” என செல்லமாய் கொஞ்சியவாறே அவனை தூக்க முற்பட,

அவனோ உள்ளுக்குள் ஒட்டியிருந்த அச்சத்தின் மிச்சத்தால் உடல் நடுங்க “நோ…நோ மம்மி வேணும்” என சிணுங்கி தாயின் கழுத்தை இறுக்கி கட்டிக்கொள்ள,

மகனின் நிலையை உணர்ந்த சமந்தா அவனின் தலையை வருடி “அம்மா அவன் கொஞ்சம் பயந்திருக்கான்…அதனால் அவன் என்கிட்டயே இருக்கட்டும்…நீ போய் பூஸ்ட் எடுத்திட்டு வா” என்று பணித்தாள்.

அவளை இமைகள் இடுங்க முறைத்தவாறே “இதோ பாட்டி வந்திடறேன் கண்ணா” என சமையலறை நோக்கிச் செல்லும் தாயை பார்த்து ‘குழந்தையை கூட சமாளிச்சிடலாம் போல…என்னை பெத்தவள சமாளிக்க முடியலடா சாமி’ என இருபுறமும் தலையசைத்து பெருமூச்சு விட்டவாறே மகனோடு குளியலறைக்குள் நுழைந்தாள்.

மகனின் காலை கடன்களை முடிக்க உதவிக்கரம் நீட்டி அவனை முழுமையாய் சுத்தம் செய்து அழைத்து வந்தவள்,உணவு மேசையின் மீது அமர வைத்தாள்.

அவனிற்கு எதிராக உள்ள இருக்கையில் தானும் அமர்ந்து “கண்ணா!நீங்க இப்போ பிக் பாய் ஆகிட்டீங்க…சோ எதுக்கெடுத்தாலும் பயப்படக்கூடாது…சோட்டா பீம் மாதிரி தைரியமா இருக்கணும்னு மம்மி உங்ககிட்ட சொல்லிக்கொடுத்திருக்கேனே…தென் நீங்க ஏன் பயப்பட்டீங்க?” என ஒரு தாயாக மிகப்பொறுமையாக அவனிற்கு புரியும் விதமாக எடுத்துரைத்தவள்,

அவனின் கன்னத்தை கிள்ளி “சூப்பர் ஹீரோ நீங்களே இவ்வளவு பயந்தா மம்மியையும் பாட்டியையும் யார் மான்ஸ்டர்கிட்டயிருந்து காப்பாத்துவா?” என கண்களை உருட்டி விரித்து மகனிற்கு ஏற்ற விதமாக நயமாக பேசி பயத்தை தெளிய வைக்க முனைந்தாள்.

சில நொடிகள் கன்னத்தில் கைவைத்து யோசித்த மகனின் அழகில் கவரப்பட்டாலும் மௌனமாய் அவன் சிந்திக்க நேரம் கொடுக்க,

அவனோ கண்கள் பளிச்சிட “எஸ் மம்மி…யூ ஆர் ரைத்…சுப்பர் ஹீரோலாம் பயப்பத மாட்டாங்க…கண்ணா ஒரு சுப்பர் ஹீரோ…நான் பயப்பத மாத்தேன்…லச்சன் இஸ் பிக் பாய்” என கைகளை உயர்த்தி கண்களை விரித்து தலையை ஆட்டி பேசிய மகனின் அழகில் சொக்கிப்போனவள்,

குனிந்து லக்ஷனின் கன்னத்தில் முத்தமிட்டு “ஐ நோ… கண்ணா இஸ் வெர்ரி வெர்ரி பிரேவ்” என அவனின் புஜங்களை மடக்கி காட்டினாள்.

அவனோ குதூகலத்துடன் “மம்மி கண்ணா வெர்ரி வெர்ரி பேவா?” என விழி விரிக்க,

அவள் மென்புன்னகையுடன் “ஆம்” என்பது போல் ஆமோதிப்பாக தலையசைக்க,

“ஐய் கண்ணா இஸ் பேவ்…பேவ்” என அமர்ந்த நிலையிலே அவன் துள்ளிக்குதிக்க,

எங்கு அவன் கீழே விழுந்துவிடுவானோ என அஞ்சி “லக்ஷ் கண்ணா பார்த்து பார்த்து” என பதறிப்போய் அவனை தன்னோடு இறுக்க,அவனும் மகிழ்ச்சியில் அவளை கட்டியணைத்து தாயின் கன்னத்தில் முத்தமழை பொழிந்தான்.

இவ்வாறு அன்னையும் தனயனுமாக கொஞ்சிக்கொண்டிருப்பதை கனத்த மனதுடன் பார்த்துக்கொண்டே குவளையுடன் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தார் ராஜி.

தங்கள் உலகத்தில் பயணித்திருந்தவர்களை திசைத்திருப்பும் விதமாக விறைப்புடன் “சமி இந்தா பூஸ்ட்” என உரக்க குரல் கொடுத்து குவளையை நீட்டினார்.

உடனே தாயை ஒரு கணம் ஏறிட்ட சமந்தாவின் விழிகள் அவரின் முகத்திலிருந்த வருத்தத்தை சரியாக படம்பிடித்தது‌.

ஆயினும்,எதுவும் கூறாமல் மகனை நோக்கி திரும்பி நாக்கு சொட்டி “ஐய் நம்ம கண்ணாவுக்கு பூஸ்ட் வந்தாச்சு” என உற்சாகத்துடன் மொழிந்து குவளையை வாங்கி மகனின் வயிற்றை நிரப்ப ஆரம்பித்தாள்.

அவனும் பசியோடு இருந்ததால் ஒரு சொட்டு மீதமின்றி நாக்கு சொட்டி அனைத்தையும் குடித்து முடித்து குட்டி ஏப்பம் விட்டான்.

அதைக்கண்டு அன்னையும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்து வாய்விட்டு சிரிக்க,அதை பார்த்த சின்னவனும் எதற்கு சிரிக்கிறார்கள் என்று தெரியாமலே வெள்ளை உள்ளத்தோடு பற்கள் பளீரிட “ஈ” என்று சிரித்தான்‌.

அவனது புன்னகையில் இருந்த வசீகரத்தில் மனம் கொள்ளைப்போக “என் அழகு கண்ணப்பா” என தனது பேரனின் கன்னம் வழித்து திருஷ்டி கழித்தார் ராஜி.

சமந்தாவும் இதழ்கள் விரிந்து நன்றாக முறுவலித்தாள்.

முன்பிருந்த அந்த மனநிலைக்கு முற்றிலும் எதிர்விதமாக சின்னஞ்சிறிய பட்டாம்பூச்சியால் அவர்களின் கனத்த மனம் இலேசானது.

அன்றைய நாள் குட்டிப்பையனின் கலாட்டாவோடு கலகலப்பாக கடந்துச் செல்ல,அவர்களின் துக்கமும் இருந்த இடம் தெரியாமல் மாயமாகியிருந்தது.

தாய் மகளிற்கு இடையே இருந்த மனத்தாங்கலும் விடைப்பெற்றிருந்தன.

ஆனால் அந்த இதமான சூழ்நிலை அனைத்தும் உறங்கும் வேளையில் லக்ஷன் அன்னையின் கன்னம் பற்றி “மம்மி தாடி எப்போ வதுவாரு?” என்று கேட்கும் வரையிலும் மட்டுமே நிலைத்திருந்தது.

அவ்வளவு தான் அத்தனை நேரமாக அவளுள் குடிக்கொண்டிருந்த இன்பம் முற்றிலும் தொலைந்துப்போக,

அவளுள் ஒரு இனம் புரியாத வலியும் இறுக்கமும் ஆட்கொள்ள தொடங்கியது.

கவின் அவர்கள் இருவரையும் ‘வேண்டாம்’ என்று வெறுத்து ஒதுக்கிச் சென்றதை இந்நிமிடம் வரை மகனிடம் கூறவில்லை.

நிதர்சனம் புரிந்தாலும் அவனிடம் சொல்லும் துணிச்சல் அவளிற்கில்லை.

‘தகப்பன் ஒரு துரோகி’ என்று தெரிந்தால் இந்த சின்னஞ்சிறிய இதயம் என்ன பாடுப்படுமோ என அஞ்சியே இவ்விடயத்தை மறைத்திருந்தாள்.

ஆனால் ஒவ்வொரு நாளும் கண்ணில் ஏக்கத்துடன் “மம்மி தாடி எப்போ வதுவாரு?” என்ற மகனின் கேள்விக்கு நேரடியாக பதில் கூற இயலாமல் ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள் மரித்துக்கொண்டிருப்பதை அவள் மட்டுமே அறிவாள்.

அடிவயிற்றிலிருந்து ஒரு துக்கப்பந்து மேலெழுந்து அவளின் தொண்டையை அடைத்தது.

வாயிலிருந்து ஒரு சொல் மேல் எழாமல் அவளிற்கு எதிராக தாய்மை சதிச்செய்தது.

உயிரணு கொண்டு உருவாகுவதற்கு மட்டும் காரணமாக இருந்தவனிற்குள் வேண்டுமானால் பிள்ளையின் மீது அக்கறை இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் தன் உதிரத்தையே மொத்தமாய் தியாகம் செய்து கூட்டுக்குள் அடைக்காத்து பெற்றெடுத்த அன்னையானவளிற்கு பிள்ளையின் நலன் மட்டுமே முதன்மை.

ஆகையால்,அவனிடம் தகப்பனின் நிஜ சுயரூபத்தை மறைத்திருக்க,தற்போது அவனின் கேள்விக்கு பதிலுரைக்க முடியாமல் நெஞ்சம் அடைக்க மௌனமாய் இருந்தாள்.

அதற்குள் லக்ஷன் அழுகுரலில் “மம்மி பிளீச்…தாடிய நா பாத்து லாங் தேஸ் ஆச்சு…அவ(ர்) எப்போ குட்டி கண்ணாவ பாக்க வதுவாரு…கண்ணாக்கு அவத பக்கணும்…தாடி கூத ப்ளே பண்ணனும்…ஐ மிஸ் தாடி மம்மி” என இதழை பிதுக்கி பாவமாக சொல்லிய மகனை பார்த்தவளிற்கு கண்கள் கரித்தது.

‘ஐய்யோ என் கண்ணே!’ என அவனை வாரியணைத்து கதறியழ அவள் சரீரத்தில் உள்ள ஒவ்வொரு அணுவும் துடிக்க,முகத்தை வேறுப்புறம் திருப்பிக்கொண்டாள்.

நெஞ்சம் வெடித்து சிதறும் ஒரு உணர்வு அவளுள்!!

ராஜிக்கோ பேரனின் பேச்சை கேட்க கேட்க,உள்ளத்தில் பெரும் வலி ஒன்று தோன்றி,அவை தன்னையும் மீறி ஒரு விம்மலை உற்பத்தி செய்தது.

அந்த சப்தம் கேட்டு தன்னை சுதாரித்த சமந்தாவோ திரும்பி தாயை கண்டிக்கும் பார்வை பார்க்க,அவரோ மகளின் எச்சரிக்கையால் பேரனின் முன்பு அழவேண்டாம் என்று முடிவெடுத்து புடவை முந்தானையால் வாயை பொத்தியவாறு அறையிலிருந்து வெளியேறினார்.

அதன்பிறகே,இந்த நொடியே வெளி வந்துவிடுவேன் என்பது போல் முகம் சிவக்க இதழ் பிதுக்கி அழுகைக்கு தயாராக இருந்த மகனின் புறம் திரும்பியவளிற்கு உள்ளம் ரணமாகியது.

தொண்டைக்குள் சிக்கிய முள் போல் வார்த்தை வெளி வராமல் அவளிற்கு எதிராய் சூழ்ச்சி புரிந்தாலும்,அதனை மகனின் மீதான அவளின் பாசம் வென்றது.

அதனால் ஒரு வழியாய் தன்னை சமாளித்து “கண்ணா நீங்க பிக் பாய் அழக்கூடாது…பயக்கூடாதுன்னு மார்னிங் தானே மம்மி சொன்னேன்…மறுபடியும் இப்படி அழுதீங்கன்னா ஸ்கூல்ல எல்லாரும் உங்களை பேட் பாய் சொல்லிருவாங்க…கண்ணா குட் பாயா?பேட் பாயா?” என தலைசரித்து வினவி அவனின் கண்களில் வழிந்த நீரை துடைக்க,

அவளின் பேச்சு அந்த குழந்தையிடம் சரியாக வேலை செய்ய அழுகையை நிறுத்தி பரபரப்புடன் “நோ…நோ…கண்ணா குத் பாய் மம்மி” என கத்தி கூச்சலிட,

அதில் மென்மையாய் புன்னகைத்து “ஐ நோ கண்ணா இஸ் குட் பாய்” என கன்னம் தட்ட,குழந்தையும் வாய்விட்டு சிரித்தது‌.

உடனே அதன் முகம் தந்தையை நினைத்து மருகுவதை பார்த்து விஷயத்தை யூகித்த சமந்தா மனதை கல்லாக்கிக் கொண்டு “கண்ணா… டாடியோட அம்மா…சுலோ பாட்டிக்கு ரொம்ப உடம்பு சரியில்லையாம்…அன்னைக்கு கண்ணாவை ஒரு மான்ஸ்டர் பிடிச்சு காய்ச்சல் வந்திச்சு இல்லை…‌அது மாதிரி சுலோ பாட்டியையும் ஒரு மான்ஸ்டர் பிடிச்சிடுச்சு…அப்போ உன்னைய பார்த்துக்க மம்மி,ராஜீ பாட்டியெல்லாம் இருந்தோமில்லை…ஆனா சுலோ பாட்டிய பார்த்துக்க யாருமில்லை…அதனால் தான் டாடி பாட்டி கூடவே இருந்து அந்த மான்ஸ்டரை விரட்ட ஃபைட் பண்ணிட்டு இருக்காரு…டாடி இங்க வந்திட்டா அந்த மான்ஸ்டர் பாட்டிய தூக்கிட்டு போயிடும்” என கவினை விட்டுக்கொடுக்காமல் வாயிற்கு வந்தது போல் ஒரு கதை புனைந்து கூற,

குழந்தையோ வாயில் கைவைத்து “அச்சோ மம்மி…ஸ்லோ பாட்டி வெரி பித்தியில்ல(பிட்டி)” என அந்த பாதகர்களுக்காக வருத்தம் கொள்ளும் மகனின் செயலில் இவளிற்கு ஆத்திரமாக வந்தது.

‘ச்சை…இந்த பிஞ்சு மனசை கஷ்டப்படுத்தி தூக்கியெறிந்துட்டு போக எப்படி அவங்களுக்கு மனசு வந்தது?’ என வெஞ்சினத்துடன் அவர்களை கெட்ட வார்த்தைகளால் மனதிற்குள்ளே அர்ச்சித்தவளை கலைக்கும் விதமாக,

எட்டி அவளின் கன்னம் பற்றிய குழந்தை “தாடி மான்ஸ்தர்கிட்ட ஃபைட் பண்ணி ஸ்லோ பாத்திய சேவ் பண்ணத்தும்…நான் மம்மி அன்த் பாத்தி டூ பேரையும் மான்ஸ்தர்கிட்டயிருந்து காப்பாத்துதேன்” என மழலை குரல் என்றாலும் மாவீரன் போல் வீர வசனம் பேசிய மகனின் வார்த்தையில் அவளின் நெஞ்சம் அப்படியே உருகிவிட்டது.

அவனின் கன்னம் பற்றி நெற்றியில் இதழ்பதித்து கண்கள் கலங்க “என் கண்ணா நீ இருக்கும் போது எனக்கு பயமேது செல்லம்” என நெக்குருகி அவனை அணைத்துக்கொண்டாள் சமந்தா.

தனக்கென்று ஒரு ஜீவன்…அதிலும் மகனின் வார்த்தை அவளிற்கு ஆயிரம் களிறுகளின் பலத்தை கொடுக்க மீதமுள்ள காலங்களை சமுதாயத்தை துணிந்து எதிர்க்கொள்ளும் உத்வேகம் கொண்டாள் சமந்தா.

அதற்கு பிறகு வந்த நாட்கள் யாவும் அந்த சிறிய ஜீவனின் சந்தோஷம் மட்டுமே அவளின் வாழ்க்கை என்றாகிப்போனது.

அவள் அகராதியில் அன்பு என்ற சொல்லுக்கு தாய் பாசம் மட்டுமே இலக்கணமாகியிருக்க,நேசம் என்ற பொருளை அடியோடு அழித்துவிட்டாள்.

‘காதல்’ என்ற பாகமே அவள் வாழ்வின் பக்கங்களில் இல்லை.

அதிலும் ‘காதல்’ என்ற சொல்லை யாரேனும் பயன்படுத்தினால் அவர்களையும் வெறுக்கும் நிலைக்கு மாறியிருந்தாள்.

மொத்தத்தில் பூவாய் இருந்தவளை புயலாய் மாற்றியிருந்தது அவளது காதல் அத்தியாயங்கள்!!

ஆனால் சருகாகியிருந்த நேசப்பூவை மீண்டும் துளிர்க்க வைக்கவும் ஒருவன் வந்தான்.

அவன்??!

சென்னையில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர விடுதி ஒன்றில் மது அருந்திய இளைஞன் தனது தந்தையுடன் அலைப்பேசியில் உரையாடிக்கொண்டிருந்தான்.

கண்ணாடி குவளையை கையால் சுழற்றியவாறே “டாட் இன்னைக்கு நான் ஒரு பெண்ணை பார்த்தேன்…இன்ஃபேக்ட் நான் அவளை பார்க்கும் போது அவ அழுதிட்டு இருந்தா…பட் அழுகையில் கூட அவள் என் கண்ணுக்கு ஏஞ்சலா தான் தெரிந்தா…அழகுன்னா அழகு அப்படியொரு அழகு…அவ உச்சி முதல் பாதம் வரை எல்லாமே அவ்ளோ அழகு…கண்ணா அது ஹப்பா…” என அவனின் தந்தையிடம் அந்த பெயர் அறியாத மங்கையின் தோற்றத்தை சிலாகித்து வர்ணித்தவன்,

திடீரென்று கண்ணில் ஒரு தீவிரத்துடன் “எனக்கு அந்த பொண்ணு வேணும் டாட்” என்றான் அழுத்தமான குரலில்.

அந்தப்புறம் இருந்தவரோ மகன் இதுவரை எந்த பெண்ணின் மீதும் இத்தனை ஆர்வம் காட்டியிராததால் மெல்லியதாக புன்னகைத்து “யார் அந்த பொண்ணு வர்மா?” என மகனிடம் விசாரிக்க,

இவனோ இதழை பிதுக்கி “ஐ டோன்ட் நோ டாட்…ஆனால் அவளோடு வீட்டு அட்ரஸ் எனக்கு தெரியும்” என்றவாறே மது குவளையை வாயில் சரித்தவனின் கண்ணில் அவளை அடையும் வெறி தாண்டவமாடியது.

பிள்ளைகள் கேட்டது கேட்டவுடன் மறுக்காமல் கிடைக்கும் பணக்கார வர்க்கத்தை சேர்ந்த தந்தையே இவரும் என்பதால்,அவனிடமிருந்து அவளது வீட்டின் முகவரியை அறிந்த கணமே அந்த பெண்ணை பற்றிய தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தார் அந்த மாமனிதர்.

அவரின் தேடுதலுக்கான விடையாக அடுத்த சில நிமிடங்களில் சமந்தா தொடர்பான அனைத்து தகவல்களும் அவரின் மேஜையை அலங்கரித்திருந்தது.
 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top