அதுவொரு குளிர்க்காலம்!!
ஊரிலுள்ள ஏனையவர்களின் உள்ளமும் சரீரமும் பனிக்காற்றால் குளிர்ந்திருக்க,இங்கோ ஒரு பெண்ணவளின் மனம் மட்டும் கோடையில் சுட்டெரிக்கும் வெப்பநிலையை போல் அனலாய் தகித்துக்கொண்டிருந்தது.
அந்த அதிகாலை வேளையில் அவளின் நெஞ்சம் எதையோ நினைத்து குமுற,ஆனால் அதற்கு எதிர்விதமாக அவளின் வதனமோ நிர்மூலமாக உணர்ச்சிகளின்றி இருந்தது.
கண்ணாடியின் முன்பு நின்று அணிந்திருந்த சேலை முந்தானையை சரிசெய்து வெளியில் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்த மகளை கண்ட தாயின் உள்ளம் பரிதவித்தது.
ஆனால் அவளோ என்றோ தனது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அடியோடு மண்ணில் புதைத்துவிட்டதினால் தாயின் தவிப்பை கண்டும் காணாதவளாய் புடவை மடிப்பெடுத்து பின் குத்தினாள்.
அவள் சமந்தா.இருபது வயதுடைய தோற்றத்தை கொண்டிருந்தாலும் அவள் இருபத்தி ஆறு அகவையுடைய நவநாகரீக யுவதி!
மணமாகி மூன்று வயது சிறுவனிற்கு அன்னை என்று கூற முடியாத வகையில் சதைப்பற்றில்லாத எழில் வளைவுகளையும் தோற்றத்தையும் கொண்டிருந்தாள்.
ஆயினும்,அவளின் இருதயத்திலிருந்த துயரமும் அவள் அணிந்திருந்த விலை உயர்ந்த பருத்தி சேலையும் அவளை சற்றே முதிர்ச்சியுடன் காட்டியது.
பெண்களுக்கே உரிய மிடுக்கும் தீட்சண்யப்பார்வையும் உடையவளாததால்,அவளின் அந்த நிமிர்வு மற்றவர்களை அவளிடமிருந்து தள்ளி நிறுத்தியது.
அந்த நிமிர்வு,அது தானாக அவளிற்கு வந்ததில்லை.
அவளது வாழ்வில் சமீபத்தில் நடந்தேறிய சில கசப்பான சம்பவங்களால் அவளிற்கு மணிமகுடமாக கிடைத்திருந்தது.
ஒருவரின் வாழ்வில் ஏற்படும் ஏற்றங்களும் இறக்கங்களுமே அவனை சிற்பமாய் செதுக்கி உயர் நிலைக்கு இட்டுச்செல்லும் என்று கூறுவார்கள்.
அதைப்போலவே சமந்தாவும் தன் மேல் பட்ட அடிகளை வெற்றிப்படிகளாக மாற்றும் வித்தை அறிந்தவளாக இன்று தனியொருத்தியாக சமுதாயத்தினர் முன்பு போராடிக்கொண்டிருக்கிறாள்.
ஆனால் மற்றவரின் முன்பு போலியான முகமூடியை அணிந்து வேடமிட்டாலும்,அவளிற்குள் புதைந்திருக்கும் மனசாட்சியை ஏமாற்றிட முடியுமா?
ஆகையால்,சமந்தாவின் கரங்கள் தன் போல் ஒப்பனை செய்துக்கொண்டிருந்தாலும்,அவளின் ஒவ்வொரு அணுவிலும் உள்ள வலியை இதயம் மட்டுமே ரகசியமாய் அறிந்திருந்தன.
ஊசியாய் குத்தி குத்தி ரணமாக்கும் அந்தவொரு சம்பவத்தின் நினைவுகள் அவள் கண்முன் நிழலாடியது.
‘அந்த நாள் என் வாழ்வில் ஏன் வந்தது?’ என நினைத்து வருந்தும் அதேவேளையில் ‘அந்த நிகழ்வு மட்டும் ஏற்படவில்லை என்றால் ஒரு பச்சோந்தியின் உண்மை சுயரூபம் அறியாமலே நீ வாழ்ந்துக்கொண்டிருப்பாய்?’ என மனசாட்சி இடித்துரைக்க,சட்டென்று அவளின் முகம் கடும்பாறையென இறுகிவிட்டது.
‘தாய் அறியாத சூள் உண்டோ’ சாதாரணமாக இருக்கும் மகள் உள்ளுக்குள் படும்பாட்டை அறிந்த அவள் அன்னை “சமி நீ அங்க போய் தான் ஆகணுமாடி?” என தவிப்புடன் கேட்டு கைகளை பிசைந்தார்.
ஒரு கணம் கண்ணாடியின் வழியே தெரிந்த தாய் ராஜியின் முகத்தை ஏறிட்ட சமந்தா “கண்டிப்பாம்மா” என்றாள் அழுத்தம்திருத்தமாக.
இத்தோடு ஆயிரமாவது முறையாக இந்த வினாவை அவர் தொடுக்க,அவளோ அதே பிடிவாதத்தோடு தனது முடிவில் நிலையாக நின்றிருப்பதில் மனக்கிலேசமடைந்தார் ராஜி.
‘அங்குச் செல்ல வேண்டாம்’ என்றவரின் கெஞ்சல்,அழுகை,அதட்டல்,கோபம் எதற்குமே அவளிடமிருந்து ‘கண்டிப்பாக நான் அங்குச் செல்வேன்’ என்ற ஒற்றை வசனம் மட்டுமே பதிலாக கிடைத்தது.
அவளின் இந்த உறுதியும் இறுக்கமும் அந்த தாயின் அடிவயிற்றை கலங்க வைத்தது.
பெற்ற மனம் அல்லவா?
அதனால் உடனடியாக துவண்டுவிடாமல் கஜினி முகமது போல் மகளின் மீது கோப அஸ்திரம் செலுத்த விளைந்தார் ராஜி.
“சமி உன் அம்மா நான் சொல்லறேன்…நீ அங்க போகக்கூடாது” என ஒற்றை விரல் நீட்டி மிரட்டலாக உரைக்க,
ஆனால் அதற்கெல்லாம் அசரக்கூடிய சாதாரண பெண் அவள் இல்லையே!
அழுத்தத்தின் மொத்த விம்பமாய் மாறி நிற்கும் பாறையல்லவா அவள்!
அதனால் தாயை இதழை வளைத்து ஒரு விரக்தியான புன்னகையினூடே நோக்கியவளோ அவருக்கான பதில் கூற விளையவில்லை.
அதைக்கண்டு வெதும்பியவருக்கு இப்போது உண்மை கோபம் உருவாக “நான் தான் அங்க போக வேணாம்னு சொல்லறேன் இல்ல…அப்புறமும் அங்க போயே ஆவேன்னு ஏன்டி அடம் பிடிக்கிற?அகம்புடிச்ச கழுத” என பல்லைக் கடித்து சீறியவர்,
அவளின் அருகே வந்து கையிலிருந்த சீப்பை வெடுக்கென்று பிடுங்கியெறிந்து “நான் உன்னை அங்க போகவிடமாட்டேன்” என்றவரின் முகத்தில் அவளிற்கு இணையான அழுத்தம் குடியேறியிருந்தது.
அவளோ தாயின் புறமாக திரும்பி மார்பிற்கு குறுக்காக கைகள் கட்டி நின்று ‘என்ன பிரச்சனைமா உனக்கு?’ என்பது போல் ஒற்றை புருவம் உயர்த்தினாள்.
அத்தோடு அவர் தூக்கியெறிந்த சீப்பை ஒரு கணம் பார்த்துவிட்டு மீண்டும் தாயின் முகத்தை கூர்ந்து நோக்கி “அம்மா…சீப்ப ஒளிச்சு வைச்சிட்டால் கல்யாணம் நடக்காதுன்னு உனக்கு யார் சொன்னது?” என நிதானமான குரலில் வினவ,அவளின் ‘கல்யாணம்’ என்ற அந்த வார்த்தை அவரின் இதயத்தை சுருக்கென்று தைத்தது.
அதில் நெஞ்சம் பதைபதைக்க அடிப்பட்ட விழிகளோடு அவளை ஏறிட்டவர் “சமிம்மா…செல்லம்…அந்த கல்யாணத்துக்கு நீ போக வேணாம்டா…ஏற்கனவே காயம்பட்டிருக்க உன் மனசை அங்கப்போய் ரணமா மாத்தணுமா?” என மகளின் கைப்பிடித்து உருக,
ஆனால் அவளோ அவரின் கைப்பிடியிலிருந்த தனது கரத்தை உருவி மௌனமாக கண்ணாடியின் புறம் திரும்பிக்கொண்டாள்.
‘என்ன சொன்னாலும் கேட்கமாட்டிக்கிறாளே?’ என கடுப்பானவர்,கண்ணாடியின் வழியாக மகளை மேலிருந்து கீழாக நோக்கி “இந்த கூத்தெல்லாம் எங்கேயாவது நடக்குமாடி?கட்டின புருஷன் கல்யாணத்துக்கு யாராவது இப்படி அலங்கரிச்சிட்டு போவாங்களா?” என ஆதங்கத்துடன் சீற,
தாயின் வார்த்தை அவளை காயப்படுத்தினாலும்,வெளியே அதை சிறிதும் பொருட்படுத்தாமல் தனது அழகிய கயல் விழிகளுக்கு மைதீட்டி செழுமைப்படுத்திக்கொண்டிருந்தாள்.
ஆம்,அவளின் கணவனான கவினிற்கு இன்று வேறொரு பெண்ணோடு திருமணம்!!
காதலித்து முறையாக பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது திருமணம் நடைப்பெற்றிருந்தாலும்,இப்போது எதற்காக இந்த திடீர் உறவு முறிவு மற்றும் வேறொரு திருமணம் என்று சமந்தாவிற்கு இன்று வரை புரியாத ஒன்று!
அதற்கான நியாயமான விளக்கமும் அவ்விடயத்தை கிரகிக்கப்பதற்கான சந்தர்ப்பமும் அவளிற்கு அவள் கணவன் கொடுக்கவில்லை.
திடீரென்று ஒரு நாள் அவள் முன்பு வந்து நின்றவன் ‘நம்ம டிவோர்ஸ் பண்ணிக்கலாம் சமி…எனக்கு உன்னை பிடிக்கலை…வேறொரு பெண்ணை தான் பிடிச்சிருக்கு’ என்றான் அதிரடியாக.
அவனது அந்த கூற்றில் அவளிற்கு உலகமே தட்டாமாலை சுற்ற மொத்தமாய் இடிந்துப்போனாள்.
இத்தனைக்கும் இருவரது வாழ்வும் மற்ற ஆதர்ஷ தம்பதியினரை போல் ஒரு மனநிறைவுடனே இருந்தது.
அப்படியென்று அவளாக கற்பனை செய்திருந்தாள் போலும்!
ஏனெனில்,சமந்தா அவனுடனான தாம்பத்திய உறவிலும் சரி,காதலிலும் சரி அள்ள அள்ள குறையாத அட்சயப் பாத்திரமாய் உடலும் உள்ளமும் சுணங்காமல் என்றும் அவனிடம் தன்னை ஒப்புவித்து அடிமையாய் இருந்து வந்திருக்கிறாள்.
தனக்கு பிடித்த விஷயங்களை கூட கணவனிற்காக தியாகம் செய்து வாழ்ந்த தர்மபத்தினி அவள்!
சில மாதங்கள் முன்பு வரை நேசத்தை வாரிவழங்கிக்கொண்டிருந்த பாரி வள்ளல் தான் அவனும்!!
ஆனால் அந்த தெகிட்டாத காதலும் அன்புமே இப்போது அவளிற்கு வினையமாக மாறியிருந்தது.
நேர்க்கோட்டில் செலுத்திக்கொண்டிருந்த இந்த தம்பதியினரின் வாகனத்தை சரக்குந்து மோதி விபத்துக்குள்ளாக்கியது போல் இவர்களது அழகான வாழ்வு சிதைந்துப்போயிருந்தது.
ஒரே நாளில் அழகான கோலம் அலங்கோலமாகியிருக்க,
‘ஏன்?எதற்கு?’ என்று சுதாரித்து எதிர்கேள்வி கேட்பதற்கு கூட யாவருக்கும் அவகாசம் கொடுக்காமல் அதற்கு முன்பே திருமண விலக்கு பெற்றிருந்தான் கவின்.
ஆம்,மனமுடைந்து இருந்தவளின் சூழ்நிலையைப் பயன்படுத்தி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்தை நயமாக வாங்கியிருந்தான் வஞ்சகன்.
‘என்ன நடக்கிறது?’ என்று அவள் முழுமையாக தன்னிலை உணர்ந்து சிக்கியிருந்த வலையிலிருந்து வெளிவருவதற்குள் இதோ இன்று வேறொரு பெண்ணோடு அவனிற்கு திருமணம் என்ற நிலை வந்திருந்தது.
அடிப்படை மனிதனுக்குரிய மனசாட்சி கூட இல்லாதவனாய் ஒரு வாரம் முன்பு வந்து “எனக்கு அடுத்த வாரம் கல்யாணம்…எக்காரணத்தை கொண்டும் நீ அந்த கல்யாணத்துக்கு வந்திடாத சமி” என எச்சரிக்கை போல் அவளிடம் உரைத்துவிட்டுச் சென்றிருந்தான் அவன்.
அதுவரை தன்னுடைய அவலநிலையை எண்ணி ஒடுங்கியிருந்த பெண்ணவள் முதன்முறையாய் வீறுக்கொண்டு கொதித்தெழுந்தாள்.
‘இவனையா உருகி உருகி காதலித்தேன்…இவனிற்காகவா தனது பரிசுத்தமான பெண்மையை இழந்தேன்…இவனை நம்பியா காலம் முழுவதும் இவன் காலடியில் விழுந்துகிடக்க நினைத்தேன்…இந்த துரோகிக்காகவா காதலின் சாட்சியாக பிள்ளை பெற்றுக்கொண்டேன்’ என்றெல்லாம் எண்ணும் போதே அவளிற்கு அருவருப்பான ஒரு உணர்வு தோன்றியது.
கோபம்,அழுகை,துரோகம்,ஏமாற்றம்,வலி பல கலவையான உணர்வுகள் அவளை ஆக்கிரமித்தாலும் ‘இத்தனை வருட வாழ்க்கையை பொய்யாக்கி அவளது நேசத்தை மண்ணுக்குள் புதைத்த மகாப்பாதகனுக்காக தான் எதற்காக குறுக வேண்டும்?’ என அவளுள் சிறுப்பொறி ஒன்று கிளர்ந்து விஸ்வரூபமடைந்து வேள்வியானது.
“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்” என மகாகவி பாரதியின் கொள்கையை பின்பற்றும் புதுமை பெண்ணாகியவளும் அவரது கூற்றை நெஞ்சிலிருத்தி எரிதழலாய் தலை நிமிர்ந்தாள்.
அன்றே அவனின் மீதிருந்த நேசத்தை ஒட்டுமொத்தமாய் தீயிலிட்டு பொசுக்கியவளாய் அவனது திருமணத்திற்கு வராதே என எள்ளலாய் உரைத்தவனின் ஆணவத்தை வேரோடு அழித்தாக வேண்டிய வெறி அவளுள் கொளுந்துவிட்டு எரிந்தது.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல் அவனிற்கு அடிமையாய் இருந்தவளை அவனிற்கு பகையாளியாக்கியிருந்தது அவனது துரோகம்!
‘நீ சொல்லி நான் கேட்கணுமாடா?’ என்ற வீம்பும் திமிரும் சீறி எழ,தாயின் சொல்லை மீறி அவனின் திருமணத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் சமந்தா.
‘அவன் என்ன என்னை வேணாம்னு சொல்லறது எனக்கு அவன் வேண்டாம்’ என நெஞ்சில் துணிச்சலை வரவழைத்து திடமான முடிவெடுத்தாள் அந்த வீரமங்கை.
அத்தோடு ‘நீ விட்டுப்போனதால் நான் ஒண்ணும் கெட்டுப்போகவில்லை’ என அவனின் முன்பு தலை நிமிர்ந்து நின்று அவனை அவமானத்தில் கூனிகுறுக வைப்பதற்காகவே அதீத ஒப்பனையுடன் திருமணத்திற்கு தயாராகியிருந்தாள்.
முகம் இறுக கைப்பையை எடுத்து தோளில் மாட்டி புறப்பட ஆயத்தமானவளின் முன்பு ஒற்றை கரம் நீட்டி “சமி நான் சொல்லி தான் கேட்க மாட்ட…ஆனால் உன் பையனுக்காக இந்த கல்யாணத்துக்கு போகணுமானு ஒரு முறை யோசிச்சு பாருடி” என அவளது மகனை வைத்து தனது கடைசி அஸ்திரத்தை வீசிப்பார்த்தார் ராஜி.
அவள் தூண்டிலில் சிக்காத மீனின் நிலைக்கு எப்போதோ மாறியிருக்க அலட்சியமாக அவரின் கரத்தை பிடித்து விலக்கிவிட்டு அவரை இகழ்ச்சியாக ஏறிட்டு “அம்மா நீ போடற எமோஷனல் டிராமாவுக்கெல்லாம் உருகற பழைய சமி நானில்லை” என்றாள் மரத்தக்குரலில்.
இறுதியில் அவளை அங்கு போக வேண்டாம் என வலியுறுத்தி தோற்ற ராஜியோ கடுப்பில் “என்னைக்கு நீ என் பேச்சை கேட்டிருக்க?அவனை கல்யாணம் செய்யவேணாம்னு சொன்னேன்…அன்னைக்கும் நீ நான் சொன்னதை கேட்கலை…இன்னைக்கும் நீ நான் சொல்லறதை கேட்கலை…என்னமோ பண்ணு போடி” என மனம் தாளாமல் அரற்றி அவரது அறைக்குள் நுழைந்து கதவை அடித்து சாற்றினார்.
தாயின் சொற்கள் காரிகையின் இதயத்தை வாள் கொண்டு அறுத்த போதிலும்,செவியில் விழாதது போல் இல்லத்திலிருந்து வெளியேறியிருந்தாள் சமந்தா.
சமந்தா ஒரு புரியாத புதிர்.
அவளின் மனம் அந்த சமுத்திரத்தின் ஆழியை விட ஆழமானது.
அவள் ‘என்ன நினைக்கிறாள்?’ என்பது அவளை தவிர ஒருவரும் அறியார்.
இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால்,முன்பு தனது காதலுக்காக பிடிவாதமாய் நின்றிருந்தவள்,இப்போது அவனை பழிவாங்குவது ஒன்றே தன் இலக்கு என்பதில் பிடிவாதமாய் இருக்கிறாள்.
தனக்கு துரோகம் இழைத்தவனை சில நிமிடங்களாவது தலைக்குனிய வைத்துவிட வேண்டும் என்ற வெஞ்சினத்தோடு வீறுக்கொண்ட பெண் சிங்கமாய் ஒரு டாக்ஸி பிடித்து திருமண மண்டபம் வரை சென்றுவிட்டாள்.
ஆனால் மண்டபத்தின் வாசலில் இறங்கி நிற்கும் வரை அவளிடமிருந்த அந்த வஞ்சமும் திடமும்,அங்கிருந்த திருமண பெயர்பலகையை கண்டவுடன் உடைந்து தூள் தூளாய் நொறுங்கிப்போனது.
இதேப்போன்றதொரு பலகையில் அவனது பெயரோடு இணைந்திருந்த அவள் பெயரின் நினைவுகளும்,அதனை தொடர்ந்து வந்த அவர்களது திருமண வாழ்க்கையும் கண்முன் நிழலாடி அவளை உடைந்துப்போக வைத்தது.
சில நிமிடங்கள் அதையே வெறித்து பார்த்திருந்த சமந்தாவின் இதயத்தை துடிக்க துடிக்க வேரோடு பிடிங்கி எறிவது போன்று ரணத்தை அனுபவித்து வந்த நிலையில் “ஏய்…நீ இங்க எங்கடி?” என்ற நாராசமான குரல் கேட்டு தேகம் விறைத்தாள் அவள்.
அந்த குரலில் இருந்த எரிச்சலில் அதுவரை அவளோடு ஒட்டியிருந்த வேதனை விலகி தூர ஓடிவிட்டது.
இறுகிய முகத்தோடு ஒரு அலட்சிய பார்வையுடனே திரும்பியவளின் முன்பு நின்றிருந்த அந்த மனிதரை உறுத்து விழித்தவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவர் “என்னடி அலங்காரமெல்லாம் பலமா இருக்கு…என்ன பிரச்சனை பண்ணவே இங்க வந்திருக்கியா?” என சிடுசிடுத்தவாறே அவளருகே வந்தார் முன்னாள் கணவனின் அன்னை சுலோச்சனா.
இப்போது தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றவள் “பின்ன நீங்க செய்த துரோகத்தை நினைச்சு ஒரு ஓரமா அழுதிட்டு இருப்பேன்னு நினைச்சீங்களா மிசஸ் சு…லோ…ச்…ச…னா” என தெனாவட்டாக பதில் உரைத்ததோடு மட்டுமின்றி நேற்று வரை ‘அத்தை’ என மரியாதை பன்மையுடன் அழைத்தவள் இன்று வேண்டுமென்றே அவரின் பெயரை அழுத்தி உச்சரித்தாள்.
அதில் வெகுண்டவர் “ஏய்…மரியாதையா பேசுடி” என பல்லை கடிக்க,
“ஓ…மரியாதை” என இதழை பிதுக்கி ஒற்றை புருவத்தை எள்ளலாய் உயர்த்தியவள்,
கனல் கக்கும் விழிகளோடு அவரின் முகத்தருகே குனிந்து “நான் மரியாதை கொடுக்கணும்னா அதுக்கு ஒரு தகுதி வேணும்…ஆனால் அந்த தகுதி உனக்கோ உன் பிள்ளைக்கோ சுத்தமா இல்ல” என முகத்தை அருவருப்புடன் சுழித்தவாறு கூறியவள் “இதுக்கு மேல என்கிட்ட வந்து பேசுற வேலை வைச்சுக்கிட்டீங்க…என்னை குடும்பமா டார்ச்சர் பண்ணறீங்கன்னு போலீஸ் கம்பளையண்ட் கொடுத்து உள்ள தள்ளிடுவேன்…ஜாக்கிரதை” என பல்லைக் கடித்து சீறினாள்.
அக்னி பிழம்பாய் உக்கிரத்துடன் தன்னை வேட்டையாடும் வெறியோடு நின்றிருந்த காரிகையை பார்த்து அவரின் நெஞ்சில் குளிர்ப்பரவியது.
அதனால் மிரட்சியோடு ஓரடி பின்னே வைத்தவரை ‘அது’ என்பது போல் இகழ்ச்சியாக நோக்கிவிட்டு மண்டபத்தினுள் நுழைந்தாள் சமந்தா.
போகும் அவளின் முதுகை அச்சத்தோடு பார்த்திருந்தவருக்கு ‘தனது மகனது திருமணத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமோ?’ என்ற பயம் இருந்ததே ஒழிய,அநியாயமாய் ஒரு பெண்ணின் வாழ்வை அழித்துவிட்ட குற்றவுணர்வு சிறிதும் ஏற்படவில்லை.
இப்போதும் ‘திருமணத்தை நிறுத்திவிடுவாளோ?’ என்ற பதைபதைப்புடன் அவசரமாக அவளின் பின்னால் ஓடினார் சுயநலத்தின் மறுவுருவான சுலோச்சனா.
அவள் மண்டபத்தினுள் நுழைந்த அடுத்த வினாடியே அவ்விடத்தில் சிறு சலசலப்பு உண்டாக தொடங்கியது.
ஆனால் அதை யாவும் செவியில் வாங்காமல் நேர்க்கொண்ட பார்வையோடு நடையில் மிடுக்குடன் ஒரு மகாராணியின் தோரணையில் நடந்துச் சென்று முன்னிருக்கையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தாள்.
மண்டபத்தின் பாதையில் நடந்து வரும் போதே அவளது கூரிய விழிகள் இரண்டும் மணமேடையில் அமர்ந்திருந்த கவினை பல துண்டுகளாக கூறுப்போட்டது.
அவளை அவ்விடத்தில் சற்றும் எதிர்ப்பாராத கவினோ அதிர்ச்சியில் உறைந்திருந்தான்.
ஆனால் சடுதியில் தலையை உலுக்கி வெளியே வந்த கவினிற்குள் சிறு மிரட்சி தோன்றினாலும்,அவளின் முகத்தை எகத்தாளமாக நோக்கினான்.
அதையும் மீறி அவளது கண்களின் தீட்சண்யம் அவனிற்குள் ஒரு பூகம்பத்தை விளைவித்தது.
கண்ணாலே ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் ஒரு சேர அவனை தாக்கிய உணர்வு எழ,சட்டென்று விழிகளை ஓமக்குண்டத்தின் மீது திருப்பியவனிற்கு நெஞ்சம் அசுரவேகத்தில் படபடத்தது.
புரோகிதர் கொடுத்த பொருளை அக்னிக்குண்டத்தில் போட்ட கவினின் கைகளிலோ பெரும் நடுக்கம்!
மனதிற்குள் ஒரு தடுமாற்றம்!
தன்னை ஊடுருவி துளைத்த விழிகளின் கணைகளினால் இயல்பாக இருக்க முடியாமல் படபடப்பு உண்டாக,நெற்றியில் வியர்வை அரும்புகள் முளைக்க தொடங்கின.
அதேநேரம் மணப்பெண் கவிதா மணமேடைக்கு அழைத்து வரப்பட்டு அவனருகே அமர வைக்கப்பட்டாள்.
நாணத்தில் தலைக்குனிந்து அமர்ந்திருந்த அந்த பெண்ணின் மீது இப்போது பார்வையை திருப்பிய சமந்தாவிற்கு அவளை அப்படியே தூக்கி நிறுத்தி ‘இன்னொருத்தி புருஷன் தான் உனக்கு வேணுமாடி?’ என கன்னம் கன்னமாய் அறைந்து தள்ளும் ஆவேசம் எழுந்தது.
ஆனால் கைமுஷ்டியை மடக்கி எந்த வித உணர்வையும் வெளிக்காட்டாமல் மௌனமாக இருந்தவளின் அருகே ஒரு வித தவிப்புடன் சுலோச்சனா கைகளை பிசைந்தவாறு நின்றிருப்பது அவளின் ஓரக்கண்ணில் விழுந்து உள்ளுக்குள் ஒரு குரூர சந்தோஷத்தை கொடுத்தது.
அவ்வப்போது தாயும் மகனும் பார்வையை பரிமாறிக்கொண்டிருந்த வேளையில் மணப்பெண் கவிதா தலையை நிமிர்த்தி வருங்கால கணவனை குழப்பமாய் ஏறிட்டாள்.
ஏனெனில்,நேற்றெல்லாம் அவளருகே வந்து விட்டாலே மாலையின் மறைவில் சில்மிஷம் செய்து கலாட்டா செய்தவனின் இந்த அமைதி அவளிற்குள் சந்தேகத்தை விளைவித்தது.
தற்போது அவன் முகம் பார்த்தவளிற்கு அதிலிருந்த பதட்டம் எதையோ உணர்த்த அவளிற்கு பகீரென்றது.
படீரென்று அவன் கண்கள் சென்ற திசைநோக்கி தலையை திருப்பியவள்,பல ஆயிரம் மின்சாரம் ஒரு சேர தாக்கிய உணர்வில் அதிர்ந்து சிலையானாள்.
ஆனால் அவையெல்லாம் ஒரு நொடி மட்டுமே!
சடுதியில் தன்னுணர்விற்கு மீண்ட அந்த பெண்ணோ இகழ்ச்சியாக அவளை பார்த்து ‘நீயா?’ என்பது போல் பக்கவாட்டாக அமர்ந்திருந்த கவினிடம் “கவின் அவளாம் ஒரு ஆளுன்னு நீ எதுக்கு பயப்படற?அவ என்ன சொன்னாலும் என்ன செஞ்சாலும் இந்த ஜென்மத்தில் நீ தான் என் புருஷன்…ரிலாக்ஸ்” என ஆறுதலாக கூறி அவனின் கைகளை அழுந்தப்பற்றி விடுவித்தாள்.
அதில் தன் கவனம் களைந்த கவினோ தனது வருங்கால மணவாட்டியை நோக்கி மென்மையாக புன்னகைக்க,அவளோ மென்புன்னகையுடன் ‘அமைதி’ என இமைமூடி திறந்து ஆறுதல் உரைக்க,
அதன்பிறகே ஆசுவாசமடைந்த கவினோ ‘நீ என்ன வேணா பண்ணுடி’ என்பது போல் ஆணவத்தோடு சமந்தாவை ஒரு பார்வை பார்த்தவாறே நிமிர்ந்து அமர்ந்தான்.
ஆனால் சமந்தாவோ இதழை பிதுக்கி அலட்சியமாய் தோளை குலுக்கி ‘ஆடு ராஜா ஆடு…இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம்னு பார்க்கறேன்’ என்றெண்ணி பரிகாச புன்னகை ஒன்றை சிந்திய வேளையில் புரோகிதர் “கெட்டிமேளம்…கெட்டிமேளம்” என குரல் கொடுத்தார்.
உடனே சமந்தா வெடுக்கென்று தன் இருக்கையிலிருந்து எழுவதை கண்ட மூவருக்கும் நெஞ்சில் நீர் வற்றிப்போனது.
அதேசமயம் மண்டபத்திலிருந்த மற்றவர்களின் பார்வையில் சுவாரசியம் கூடியது.
சமந்தா அவர்களை நோக்கி ஓரடி முன் வைக்கவும்,
‘ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ?’ என பதறி தனது கரத்திலிருந்து மங்கல நாணை அவசர அவசரமாக கவிதாவின் கழுத்தில் கட்டினான் அவன்.
அவனின் செயலை வெறித்தவாறே மணமேடையில் ஏறிய சமந்தா குனிந்து அட்சதையை கையிலெடுத்து ஒரு கணம் அதனை பார்த்தவள்,
வெடுக்கென மணமக்கள் புறம் திரும்பி அவர்களை ஆழ்ந்து நோக்கி “நல்லாயிருங்க” என்று அட்சதையை தூவிவிட்டு விறுவிறுவென கீழிறங்கி வந்துவிட்டாள்.
அவளின் அந்தவொரு செயல் அங்கிருந்த அனைவருக்கும் செருப்பால் அடித்தது போலிருக்க,
‘நல்லாயிருங்க’ என அவள் சாதாரணமாக உரைத்த அந்தவொரு வார்த்தையில் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்!!
அவள் மனதின் பாரத்தை தாங்கி வெளி வந்ததால் அது கனத்து தெரிந்தன.
இறுகிய பாறையென இருந்த அவள் வதனத்திற்கு எதிராக உள்ளம் குமுற,வேகமாக மேடையிலிருந்து கீழிறங்கி வந்தவள் ஒரு நொடி தன் நடையை நிறுத்தி சுலோச்சனாவை உறுத்து விழித்துவிட்டு உணவு கூடத்தை நோக்கி நடந்தாள்.
அவளின் மனதிலிருந்த காயத்தினால் அவள் மேற்கொண்ட ஒவ்வொரு விஷயமும் மண்டபத்திலிருந்த அனைவருக்கும் அவளிற்கே உரிய ஆணவமாக தெரிய ‘இந்த திமிரால் தான் கவின் இவளை விட்டுட்டு இந்த பொண்ணை கட்டிக்கிட்டான் போல’ என அவதூறாக அவளின் மீது வீண் பழியை சுமத்தி வஞ்சித்தார்கள்.
அதையெல்லாம் கேட்டவுடன் அவளின் எதிராளிகளுக்கு குளுகுளுவென இருக்க ‘ஹப்பாடா’ என நிம்மதி பெருமூச்சுடன் இன்ப வானில் பறக்க தொடங்கினார்கள்.
சமந்தாவோ நேரே உணவு கூடத்திற்குச் சென்று இலையில் வைத்த உணவுகள் அனைத்தையும் காலி செய்ய,அவளருகே உட்கார்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்தார்கள்.
மணமக்கள் உறவுகள் சமந்தாவின் செயலை இழிவுப்படுத்தியதோடு மட்டுமின்றி அவளின் அலங்காரங்களையும் அழகிய தோற்றத்தையும் தவறாக சித்தரித்து ‘பழைய புருஷனுக்கு கல்யாணம்…இங்கப்போய் மினுக்கிட்டு வந்திருக்கிறதை பாருங்களேன்…இவன் போனால் என்ன அடுத்த ஆளையாவது பிடிக்கலாம்னு நினைச்சிட்டாளாயிருக்கும்’ என அநியாய குற்றச்சாட்டை முன் வைக்கவும் தவறவில்லை அந்த நரிக்கூட்டதினர்!!
அவளது செவியில் அவையனைத்தும் விழுந்தப்போதும் சிறிதும் பொருட்படுத்தாமல் உணவருந்திவிட்டு கைகழுவ எழுந்துச் சென்றாள்.
‘தவறு செய்த ஒரு ஆணை கூட இந்த சமுதாயம் மன்னித்துவிடும்…ஆனால் நிமிர்வுடன் இருக்கும் ஒரு பெண்ணை இழிவுப்படுத்தி பெருமைக்கொள்ளும்’ என விரக்தியாக சமுதாயத்தின் நிலைப்பாடுகளை விமர்சித்து அந்த மண்டபத்திலிருந்து வெளியே வந்தாள்.
டாக்ஸி எண்ணிற்கு அழைத்து இவ்விடத்திற்கு வரும் படி கட்டளையிட்டு மௌனமாக சாலையில் போகும் வாகனத்தை வெறித்தப்படி நின்றிருந்தாள் அவள்.
மண்டபத்திலுள்ள எல்லோரின் முன்பும் துணிச்சலாக அகம்பாவம் கொண்ட பெண்ணாக நிமிர்வுடன் இருந்தவள் இப்போது முழுமையாய் உடைந்துப்போனாள்.
‘அவ்வளவு தான் இல்ல…இனி அவனுக்கும் எனக்கும் இடையே இருக்கும் உறவு எல்லாமே முடிஞ்சிடுச்சு’ என்று எண்ணும் போதே ஆயிரம் ஊசிகள் நெஞ்சில் குத்தியது போல் பெரும் வலி ஒன்று உருவாக கடகடவென கன்னங்களின் வழியே நீர் வழிய தொடங்கின.
அது அதிகாலை என்பதால் அந்த பேருந்து நிலையத்தில் ஆட்கள் யாவருமின்றி வெறிச்சோடி இருந்தது.
அவ்விடத்திலே வெடித்து அழ தூண்டிய உணர்வை கட்டுப்படுத்தியவளால் என்ன முயன்றும் அடைத்த தொண்டையை சரிச்செய்ய முடியவில்லை.
அடிவயிற்றிலிருந்து பெரும் துக்கம் மேலெழுந்து தொண்டையை கிழித்துக்கொண்டு வெளியே வர துடித்த நிலையில் அதனை தடைச்செய்வது போல் அவளிற்கு முன்பாக ஒரு மகிழுந்து வந்து நின்றது.
இதழ்கடித்து தனது அழுகையை அடக்க போராடியவள் அந்த வாகனத்தின் சத்தத்தில் சட்டென்று தனது துக்கம் மறைத்து அதனுள் ஏறி அமர்ந்தாள்.
வாகன ஓட்டியின் முகத்தை கூட ஏறிடாமல் தனது கைப்பையை மடியில் வைத்து வெளியே வெறித்திருந்தவளின் கண்ணீர் மட்டும் மடைத்திறந்த வெள்ளமென வழிந்துக்கொண்டே இருந்தது.
ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த இளம் வயது வாலிபனோ கண்ணாடியின் வழியாக முகம் சிவக்க அவள் அழும் காட்சியை பார்த்தப்போதும் எதுவும் கூறாமல் விறைப்புடனே வண்டியை செலுத்தினான்.
இன்று கவின் சமந்தாவின் காதல் மண்ணுக்குள் புதையுண்டுப்போனாலும்,மற்றுமொரு புதிய காதல் அத்தியாயம் அவள் வாழ்வில் விதியால் தொடங்கப்பட்டிருந்தது.
‘Unconditional Love After Divorce’