“இசை மனிதப் பொறிகளில் மின்னலைகளை பாய்ச்சும் ஒலி அதிர்வுகளுடன் தொடர்புடையது.அதுமட்டுமின்றி இரத்த நாளத்தில் ஹார்மோன் சுரப்பிகளை அதிகரித்து,உடலில் ரசாயன மாற்றத்தை கொண்டு வந்து காதலை மலர்ச்செய்யும் வல்லமை பெற்றது இசை.
நல்ல இசை ரசனை வீண் பிடிவாதத்தையும்,வரட்டுப் பெருமையையும் நொறுக்கிவிடும்.கசடு நீங்கிய நல் வாழ்வுக்கும் துணை போகும்.உள்ளத்தில் ஒளியும்,உணர்வும் பொங்கச் செய்வது இசை”
பங்களாவின் மதில் சுவர் வானை முட்டுமளவு உயர்ந்திருக்க,அச்சுவற்றை முட்டி மோதி வெளியே செல்ல வழியின்றி காற்றில் கலந்து வந்த கீச்கீச்கீச் என்ற ஒலியில் தனது மலர்கண்களை மெல்ல மலர்த்தினாள் தாரா சக்கரவர்த்தி.
முன்பு தாரா சக்கரவர்த்தி என்று யாராவது அழைக்கையில் முகத்தில் ஒரு வித பெருமிதமும்,நடையில் மிடுக்கும் கேட்காமலே வந்து ஒட்டிக்கொள்ள, இப்போது அப்பெயரை கேட்டாலே பாகற்காயை பச்சையாய் விழுங்கியது போல் வாழ்க்கையே கசந்து வழிந்தது.
அதற்கு முக்கியக்காரணம் உதகமண்டலத்தை தலைநகராக கொண்டுள்ள நீலகிரி மலைப்பிரதேசத்தின் முடிசூடா மன்னன் ஆரூரன் சக்கரவர்த்தி.
பல தொழிற்சாலைகளை தங்கள் வசம் கொண்டுள்ள சக்கரவர்த்தி தொழிற்சாலைகளின் வாரிசுகளில் ஒருவன் ஆரூரன் சக்கரவர்த்தி.
ஆரூரன் சக்கரவர்த்தி அவனது பெயரை போலவே எதிரிகளை நேருக்கு நேர் எதிர்க்கும் துணிவு கொண்டதோடு,பார்ப்பவரை வசீகரிக்கும் தோற்றம் கொண்டவன்.வெளிநாட்டில் சென்று படித்து வந்தாலும், கலாச்சாரம்,பாரம்பரியம்,பண்பாடு இதை கவனமாக பின்பற்றுபவன்.அத்தோடு மனைவி என்பவள் தனக்கு வைத்த அடிமை என்னும் கோட்பாடு கொண்டவன்.
அதற்கு முழுகாரணம் அவனது பாட்டனாரான அதிருங்கழகோன் சக்கரவர்த்தி ஆவார்.அவர் தனது மனைவியான பார்வதியை ஒரு அடிமை போல் நடத்துவார்.சிறு வயதிலிருந்தே அவரின் செயல்முறையைப் பார்த்து வளர்ந்ததினால் இவனும் அதே கோட்பாட்டை பின்பற்றுகிறான்.
ஆனால் அவனது கருத்துத்திற்கு முற்றிலும் மாறுப்பட்ட கருத்து கொண்டவள் தான் அவனது மனைவி தாரா.சென்னை போன்ற பெருநகரத்தில் பிறந்து வளர்ந்த தாராவிற்கு கணவன் மனைவி இருவரும் ஒரு தோழமையுடன் கூடிய காதலோடு வாழ வேண்டும் என்னும் கோட்பாடு கொண்டவள்.அத்தோடு ஆண்,பெண் இருபாலரும் சமம்…யாருக்கும் யாரும் அடிமையில்லை என்னும் கொள்கை கொண்டவள்.ஆனால் அவையெல்லாம் ஒரே நொடியில் தலைகீழாகிப்போனதை,அவளால் இன்று வரை பொறுக்க முடியவில்லை.
ஆனால் இத்திருமணத்திற்கு முழுசம்மதம் கூறியதும் அவள் தான்.ஆனால் யானை தன் தலையிலே மணலை வாரி கொட்டியது போல்,தன் வாயாலே இத்திருமணத்திற்கு சம்மதம் கூறி,தன் வாழ்க்கையை தானே கெடுத்துக்கொண்டாள்.
ஆனால் இத்திருமணத்திற்கு அவள் சம்மதித்த காரணமே வேறு, அக்காரணத்தை நினைக்கையில் அவளது மனதில் பெரும் வலி ஒன்று எழுந்தது.
திருமணத்திற்கு முன் அவள் அனுபவித்த வந்த சந்தோஷங்கள் யாவும் அந்த ஒற்றை தாலிக்கயிற்றால் வழிமீளானது.
அதற்கெல்லாம் காரணம் அந்த ஒரு நபர்,அந்த ஒரு நபரினால் அவள் அனுபவித்து வந்த கொடுமைகள் மட்டும் எத்தனை எத்தனை…?? அதையெல்லாம் எண்ணும் போதே இவ்வாழ்க்கையே வேண்டாம்,எங்காவது ஓடிவிடலாம் என்று கூட தோன்றியது தாராவிற்கு.
ஆனால் அதையெல்லாம் அனுமதிக்கும் வகையில் நடந்து கொள்பவனா அவளது கணவன்.தன் கழுத்தில் விருப்பத்தோடு தாலி கட்டினானோ அல்லது விருப்பிமின்றி தாலிக்கட்டினானோ,இந்த ஜென்மத்தில் அவள் ஒருத்தி மட்டுமே அவனது மனைவி என்பதில் உறுதிக்கொண்டவன் என்பது அவள் அறிந்த ஒன்று.
ஆனால் காலையில் எழுந்ததிலிருந்து இரவு உறங்கும் வரை எதற்கெடுத்தாலும் கட்டுப்பாடு…கட்டுப்பாடு…கட்டுப்பாடு…!!.
முன்பு தன் மேல் அன்பு மட்டுமே செலுத்தி வந்தவர்கள்,இப்போது அவள் எது செய்தாலும் குத்தம் சொல்வதற்கே அவதறித்தவர்கள் போல் அல்லவா நடந்துக்கொள்கிறார்கள் இக்குடும்பத்தில் உள்ளவர்கள்.
தன் மேல் அன்பை மட்டுமே பொழிந்த இக்குடும்பம் திருமணத்திற்கு பிறகு ஒரே நொடியில் தலைகீழாக மாறிய விந்தை ஏன் என்று இன்று வரை அவளறிய முடியவில்லை.அவளறிய விளைந்தும் முடியவில்லை என்பது வேறு கதை.
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல்,சிறுசிறு காரண காரியங்கள் கூட பூதங்கரமாக தெரிகிறதே இவர்களுக்கு…!!
ஆனால் தன் வாழ்க்கையை இக்குடும்பத்தோடு இணைத்து,தன்னிலையை புரட்டிப்போட்ட அந்த ஒரு நபரைப் பற்றிய சிந்தனைகள் மனதில் ஊடூருவ,பழைய காலத்தை நோக்கி நினைவு திரும்ப ஆரம்பித்தது.
கடந்த எட்டு மாதத்திற்கு முன்,
தமிழ்நாட்டின் தலைநகரான சிங்கார சென்னையில் அதிகாலை 4 மணியளவில் ஒரு பிரபல பொறியியல் கல்லூரியின் பேருந்து, அக்கல்லூரியின் நுழைவாயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
அதன் அருகே மாணவர்கள் கூட்டம் கூட்டமாக நின்று அரட்டையடித்துக்கொண்டிருக்க,அப்போது “டியர் ஸ்டூடெண்ட்ஸ் எல்லாரும் பஸ்ஸுல ஏறுங்க…லெட்ஸ் கோ டூ நீல்கிரி” என ஒரு பெண் ஆசிரியர் குரல் கொடுக்க,அதையெல்லாம் துளியும் மதிக்காமல் மாணவர்கள் தன் அரட்டை கச்சேரியைத் தொடர,
அந்த பெண் ஆசிரியர் “திமிரு…திமிரு…உடம்பு முழுக்க திமிரு…நம்ம சொன்ன கேட்குதுங்களா பாரு…ச்சை” என கடுப்புடன் முனக,
ஆனால் அவர்களுடன் உடன் வரப்போகும் ஆசிரியர்களுள் ஒருவர் “ஹே பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ்…அவர் ஹாலிடே ஸ்டாட்ஸ் நவ்…சீக்கிரம் எல்லாரும் பஸ்ஸூல ஏறுங்க…நம்மோட என்ஜாய் மென்டை தொடங்குவதற்கான நேரம் வந்திடுச்சு” என உற்சாகத்துடன் அழைத்து கூற,அதற்காகவே காத்திருந்தாற் போன்று மாணவர்கள் இனிப்பை மொய்க்கும் எறும்பை போல் சுறுசுறுப்பாக போட்டிப்போட்டு கொண்டு குதுகலத்துடன் பேருந்தினுள் ஏற,
“ஹே ஸ்டூடெண்ட்ஸ் மெதுவாக ஏறுங்க…ஏ…செந்தில் பார்த்து…மெதுவா… எதுக்கு இந்த அவசரம்…??கேர்ள்ஸ் நீங்களாவது என் பேச்சை கேளுங்க” என மீண்டும் அவரே ஒரு அதட்டல் போட,அவரின் பேச்சிற்கு மதிப்பளித்து மாணவர்கள் “எஸ் சார்” என்று தன்மையாக பதிலளித்து மெதுவாக ஏறலானார்கள்.
“கீதா மேம் இத்தனை நேரம் நாம சொன்னதை இதுங்க கேட்டதுகளா…?? ஆனால் இந்த ஆரூரன் சார் ஒரு வார்த்தை சொன்னால் உடனே எல்லாம் கப்சிப்னு அடங்கிடுச்சுங்க…இதுங்களுக்கு நம்மளை பார்த்தால் கேனச்சிங்க மாதிரி தெரியுதுனு நினைக்கிறேன்…!!” என ஒரு பெண் பேராசிரியர் கோபத்தோடு மொழிய,அதற்கு இன்னொருவரும் “ஆமாம்” என ஒத்து ஊதினார்.
மாணவர்கள் ஏன் அந்த ஒரு ஆசிரியரின் வார்த்தைக்கு மட்டும் மதிப்பு கொடுக்கிறார் என்ற பதிலை தெரிந்துக்கொண்டே,அவர்கள் பேசுவதில் எவ்வித நியாயமும் இல்லை.ஏனெனில் ஆரூரன் அவர்களுக்கு ஆசிரியர் மட்டுமின்றி ஒரு நல்ல நண்பரும் கூட.
மாணவர்களோடு மிக நெருக்கமாக இருந்ததினால் அவர்களின் கவலைகள் அனைத்தையும் நொடியில் அறிந்து,அதை முழுமையாக தீர்த்து வைத்து படிப்பில் நாட்டம் கொள்ள செய்வான்.
அத்தோடு அவன் பாடம் நடத்தும் அழகில் மயங்கியது மாணவிகள் மட்டுமின்றி மாணவர்களும் அதில் அடங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அதனால் அவர் நடத்தும் பாடத்தில் ஒருவரும் சோடைப்போவதில்லை.(கோட்டை விடுவதில்லை)
நூற்றுக்கு நூறு சதவீதம் அவரது பாடத்தில் மட்டும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதினால்,அவர்களின் வகுப்பிற்கு செல்லும் மற்ற பேராசிரியர்களுக்கு மாணவர்களின் மீது பெருங்கோபமும்,அத்தோடு ஆரூரனின் மீது மிகுந்த பொறாமையும் உண்டு.
ஏனெனில் மற்ற ஆசிரியர்கள் தலைமைசெயலாளரிடம் திட்டு வாங்குவது அவனால் அல்லவா…??
மாணவர்கள் அனைவரும் பேருந்தில் ஏறியதும்,வேண்டா வெறுப்பாக அப்பெண் ஆசிரியர்களும் உடன் ஏறி,அவர்களது இருக்கையில் உம்மென்று அமர,ஆரூரன் பேருந்தில் இருப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு,தன்னிடமுள்ள பெயர் பட்டியலை வாசித்து,மாணவர்களின் வருகையை ஒவ்வொருத்தராக உறுதிசெய்ய,அதில் ஒரே ஒரு மாணவி மட்டும் வரவில்லை என்பதை தெரிந்துக்கொண்டான்.
“சில்வியா வேர் இஸ் தாரா…?” என புருவம் சுருக்கி கேள்வி எழுப்ப,
அவன் முகப்பாவனையில் பயந்து “ச…சார் சரியான நேரத்திற்கு வந்திடுவேனு சொன்னாள்…ஆனால் ஏன் இன்னும் வரலைனு தெரியலை சார்” உமிழ்நீர் விழுங்கினாள்,இன்னும் பலமாக அவளை முறைத்தான் ஆரூரன்.
அவன் முறைப்பதற்கு காரணமும் உண்டு.ஏனெனில் தாரா ஒரு நாளும் வகுப்பு தொடங்குவதற்கு முன்னால் வந்ததில்லை.எத்தனை முறை அவளை கண்டித்தும் தண்டனை வழங்கியும்,அவள் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்வதில்லை.
அதே பழக்கத்தில் இன்றும் அதைப்போல் நடந்துக்கொண்டதால் ஆரூரனனிற்கு சினம் கரைகடந்துவிட்டது.அவன் எந்தளவு மாணவர்களுக்கு உற்ற தோழனாக நடந்துக்கொள்வானோ அதேஅளவு கடுமைக்காட்டவும் மறக்கமாட்டான்.அதனால் தான் சில்வியா பயந்தது.
அவளை கோபத்தில் முகம் சிவக்க முறைத்துக்கொண்டே “தாரா அடுத்த முறை நம்மோடு வரட்டும்…இப்போது நாம் கிளம்பலாம்…” என நறுக்குத்தெறித்தாற் போன்று கூறியவன்,ஓட்டுனரிடம் திரும்பி “அண்ணா கிளம்பலாம்” என்று கூறி தன்னிருக்கையில் சென்று கோபத்தோடு அமர்ந்தான்.
அவனது முகத்தில் தெரிந்த கோபத்தில் மற்ற யாவரும் அவனை நெருங்க பயப்பட தாராவின் தோழிகளுக்கு “இவருக்கு எதுக்கு இவ்வளவு கோபம்…??” என்று தோன்றமளவு இருந்தது அவனது செயல்.
அதன்பிறகு தான் அந்த பெண் ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.அதனால் மனதிற்குள் கொட்டமடித்து “ஹே ஸ்டூடெண்ட்ஸ் சார் சொன்ன மாதிரி தாரா அடுத்த முறை டூருக்கு நம்மோடு வரட்டும்…இப்போ நாம் கிளம்பலாம்” என கூற,
அவனை எதிர்த்து பேசாத மாணவர்கள் கூட இவரிடம் “மேம் அவ வரலைனா நாங்க யாரும் டூருக்கு வரலை…” என போர்க்கொடி தூக்க,
அவளது தோழிகளோ ஒரு படி மேலே போய் “அவ இன்னும் அஞ்சு நிமிஷத்தில் வந்திடுவாள்…அவ வரலைனா நாங்களும் வரலை…பஸ்ஸூல இருந்து கீழ இறங்கிக்கறோம்” என உறுதிமொழி அளிக்க,வேறு வழியின்றி ஒரு ஐந்து நிமிடம் காத்திருப்பிற்கு ஒத்துக்கொண்டான் ஆரூரன்.
ஏனெனில் தாரா இன்றி இவ்விடம் விட்டு நகர அவனுக்கும் விருப்பமில்லை.அதற்கு காரணம் இந்த சுற்றுலாவில் அவளிடம் தன் மனதில் இருக்கும் காதலை தெரிவிப்பதற்கு முடிவெடுத்திருந்தான்.
அது அடியோடு கெட்டுப்போனதினால் வந்த கோபமே இது.இத்தனை நாள் தன்னிடம் படிக்கும் மாணவியிடம் எவ்வாறு காதலை கூறுவது என்ற தயக்கத்தினால் சிறிது பின்வாங்கியவன்,இன்னும் சில மாதங்களில் பட்டயப்படிப்பை முடித்துவிட்டு அவள் வேறிடம் சென்றுவிடுவாள் என்ற உண்மை முகத்திலறைய வேறு வழியின்றி இச்சுற்றுலாவில் அவளிடம் தன் மனதை திறக்க வேண்டும் என உறுதியாக முடிவெடுத்திருந்தான்.
குறிப்பிட்ட நேரம் கடந்துக்கொண்டிருக்க ஆரூரனிற்கு இரத்தழுத்தம் எகிற ஆரம்பித்தது.நினைத்தது நடந்திராத ஆத்திரத்தில் சன்னலின் இரும்பு கம்பியில் பலமாக குத்த,தாராவின் தோழிகளோ தேர்வின் முடிவிற்கு காத்திருப்பது போல் பதட்டத்தோடு நகத்தை கடித்துத் துப்பிக்கொண்டிருந்தார்கள்.
அனைவரின் பொறுமையையும் காற்றில் பறக்கவிட்டு சில நிமிடங்களுக்கு பிறகே பேருந்திற்கு வந்தாள் ஆரூரனின் காதல் கன்னிகை தாரா.
தாரா இருபத்தியொரு வயது நிரம்பிய பருவ மங்கை.தன்னை சுற்றியிருக்கும் அனைவரையும் உயரமாக்கிய பெருமை அவளை மட்டுமே சேரும்.ஏனெனில் அவளது உயரம் நான்கு அடி ஒன்பது அங்குலம் மட்டுமே.பச்சிளம் மாறாத சிறு குழந்தை போன்ற முகமும் சிரிப்பும் கொண்டவள்.பேச்சில் அனைவரையும் தன் பக்கம் திருப்பும் வல்லமை கொண்டவள்.அத்தோடு இக்கால நவநாகரீக யுவதி.
அவளது பெற்றோர்களால் சுதந்திரமாக வளர்க்கப்பட்டவள்.அதேசமயம் அவளது தாயாரான சிவகாமி பெண் சுதந்திரத்தில் தலையிடவில்லை என்றாலும்,பெண் ஒழுக்கத்தில் மட்டும் சில கட்டுப்பாடுகளை விதித்து வளர்த்திருந்தார்.
பேருந்திற்கு வந்தவள் அமைதியாக பேருந்தில் ஏறி மன்னிப்பை வேண்டியிருந்தால் அனைவரின் கோபமும் மனமும் சற்று ஆறியிருக்கும்.ஆனால் அவளோ தன் மீது தவறே இல்லாதது போல் “ஹே மணி என்ன தெரியுமா 12.15…நாம் சொன்ன நேரம் தாண்டி பதினைந்து நிமிஷம் லேட்டாகிடுச்சு…இன்னும் கிளம்பாமல் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க…ஆரூரன் சார் நீங்க இருந்தும் இப்படியா…??என்ன கொடுமை சார்…??கீதா மேம் உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பேயில்லை… ஸ்டூடெண்ட்ஸ் நீங்கயெல்லாம் சார் கிட்ட கிளம்ப சொல்லாமல் பிளைட் ஓட்டிட்டு இருந்தீங்களா…?நான் இங்க இல்லைனா யாருக்கும் கொஞ்சம் கூட பொறுப்பேயில்லை…சோ சேட்…” என தன் நெற்றிப்பொட்டில் தட்டி படபட பட்டாசாய் பொறிந்தவள் அத்தோடு நிறுத்தாமல் ஓட்டுனரிடம் சென்று “அண்ணா இங்க இருக்கிற யாருக்கும் கொஞ்சம் கூட பொறுப்பில்லை…இங்க இருக்கிற எல்லாரையும் பாதுகாப்பா சேர்க்கிற பொறுப்பு எனக்கு தான் இருக்கு…சோ என்னோட பெயரை காப்பாத்தறது உங்க கையில் தான் இருக்கு…” என சீரியசான குரலில் கூறி ஒரு நொடி நிறுத்த,
ஓரக்கண்ணால் தனக்கு பின்னால் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்து ‘ஹோ காட் ஒவ்வொரு மூஞ்சியும் ஜிஞ்சர் ஏட்(ate) மங்கி மாதிரி இருக்கே…ஒவ்வொரு குரங்கையும் சமாளிக்கிறதுக்குள்ள அம்மாடி…’ என்ற பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள்,
‘தாரா எவ்வளவோ சமாளிச்சிட்டே,இந்த சிம்பான்ஸிகளை சமாளிக்க முடியாதா என்ன…?கெட் ரெடி பேபி நீ பிறப்பிலே ஒரு ரிங் மாஸ்டர்…வீட்டில் மங்கிஸை சமாளிக்கிற உன்னாலே இந்த மனித குரங்குகளையா சமாளிக்க முடியாது…சியர் அப் கேர்ள்…சியர் அப்’ தனக்கு தானே தட்டிக்கொடுத்து உள்ளுக்குள் திடமளித்தவள்,
தன்னை கடுமையாக முறைத்துக்கொண்டிருக்கும் ஆரூரனின் அருகில் சென்று முகத்தை பாவமாக வைத்து “சார் வர வழியில் ஒரு கண்ணு தெரியாத பாட்டி ரோட் க்ராஸ் பண்ண முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்க…” என்று கூறிக்கொண்டிருந்தவள் தீடிரென்று கண்ணை உருட்டி “சார் நீங்களே சொல்லுங்க…அவங்களை அப்படியே ரோட்டில் விட்டுட்டு வந்துட்டால் ஊர் என்ன சொல்லும்…இன்னார் காலேஜில இன்னார் கிளாசில் உங்களை மாதிரி நல்ல சார் கீழ் படிக்கிற பொண்ணு ஒரு கண்ணு தெரியாத பாட்டிக்கு ஹெல்ப் பண்ணமா வந்திடுச்சுனு தெரிஞ்சா…ரெட் க்ராஸ்ல இருந்து ப்ளூ க்ராஸ் வரைக்கும் இருக்கிற அத்தனை பேரும் இந்த தாராவை மட்டுமில்லாமல் உங்க எல்லாரையும் தானே தப்பா பேசும்…இத்தனை பேருக்கும் கெட்ட பேர் வராமல் காப்பாத்திட்டு வந்திருக்க என்னை போய் தப்ப நினைக்கிறங்களே…?என்ன கொடுமை சார் இது…” என அழுவது போல் மூக்கை உறிஞ்சியப்படி,
“அதனால் தான் அவங்களை கூட்டிட்டு போய் வீட்டில் பத்திரமா விட்டுட்டு வந்துட்டேன்…அக்சுவலி நான் செஞ்ச வேலைக்கு நீங்க எனக்கு ஆஸ்கார்…ஓ…சாரி அது சினிமாவுக்கு கொடுக்கற ஆவார்டா…” என்று மூளையை தட்டி யோசித்தவாறு,
தன் தோழி யுவனியிடம் திரும்பி இலேசாக கண்சிமிட்டி “ஹே யுவனி…போன வாரம் பேப்பரில் படிச்சமே… சமூக சேவை பண்ணறவங்களுக்கு ஒரு விருதுனு…அது பேரு என்ன…?” என ஒன்றும் அறியாதவள் போல் கேட்க, அவளோ தாராவை பலமாக முறைக்க,
“ஓ…உனக்கு தெரியாதா…??இட்ஸ் ஓகே விடு…” என்று அசால்ட்டாக தோளைக் குலுக்கிவிட்டு மீண்டும் ஆரூரனிடம் திரும்பி “பாவம் யுவனிக்கு தெரியலை சார்…பேசாமல் நீங்களே கண்டுப்பிடிச்சு சொல்லிடுங்க…நீங்க தான் ‘விடாகண்டன் கொடாகண்டன்’ மாதிரி எப்போ பார்த்தாலும் லைப்ரேரிலே இருக்கிறீங்களே…சோ நீங்களே கண்டுப்பிடிச்சு சொல்லுங்க…” வார்த்தையில் ஏற்ற இறக்கத்தோடு பேசியவள் நடுவில் “விடாகண்டன் கொடாகண்டன்” என்பதை மட்டும் மனதிற்குள் முனகியிருந்தாள்.
வெளியே அதை தவிர்த்து பேசியவள்,இவனின் கோபம் இப்போதைக்கு குறையாது என்பதறிந்து,தன் வகுப்பு தோழர்களிடம் திரும்பி மெதுவான குரலில் கிசுகிசுப்பாக “ஹே ப்ரெண்ட்ஸ்…டூருக்கு கிளம்பலையா…?டைம் போயிட்டு இருக்கு…அப்புறம் உங்களுக்கு இருக்கற இரண்டு நாளில் பாதிநேரம் இங்கே போயிடும்…தென் உங்களோடு கலர் கலர் பிளான்ஸ் எல்லாம் நமுத்துப்போன பட்டாச்சு மாதிரி வேஸ்ட்டா போயிடும்…எனக்கு என்ன…??” தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் உதட்டை பிதுக்கி பாவமாக கூறி,மற்ற மாணவர்களுக்கும் சரியான வழியில் தூபம் போட,
வேறுவழியின்றி மாணவர்களும் தங்களது முறைப்பை விடுத்து ஆரூரனிடம் “சார் பிளீஸ்…தாராவை அப்புறம் பார்த்துக்கலாம்…முதல்ல கிளம்பலாம் சார்…டைம் போயிட்டே இருக்கு” என ஒரு சேர கெஞ்ச,அவனும் வேறு வழியின்றி ஓட்டுனரிடம் பேருந்தை எடுக்க சொல்ல,
தாராவும் தப்பித்தோம் பிழைத்தோம் என மடமடவென ஓடிச்சென்று தன் தோழிகளிடம் அடைக்கலமாகிவிட,அவர்கள் கொடுக்கும் பூசையையும் வாங்கிக்கொண்டு,சில பல மன்னிப்புபடலங்களுடன் ஆட்டம் பாட்டத்தோடு பேருந்து புறப்பட்டது.
தாராவின் மீது கோபமாக இருந்த போதும்,அனைவரும் அவளின் ஆட்டத்தில் மயங்கி கைத்தட்டி ரசித்து,மகிழ்ந்தப்படி பயணப்பட,ஆரூரனும் தனது கோபத்தை விடுத்து,தன் மனங்கவர்ந்தவளின் நடனத்தை ரசிக்க,இன்று ஒரு கலவரம் வெடிக்கும் என்ற எதிர்ப்பார்ப்போடு இருந்த இரண்டு பெண் ஆசிரியர்களும் நினைத்தது நடக்காத்தினால் காதில் புகைச்சலோடு தாராவின் ஆட்டத்தை எரிச்சலோடு பார்க்க,தாராவின் வகுப்பு தோழர் தோழிகளும் அவளோடு உடன் சேர்ந்து நடனமாட,அவர்களது கல்லூரி பேருந்தோ நீலகிரி செல்லும் பாதையை நோக்கி பயணமாக,தாராவின் வாழ்க்கையோ ரோல்லர் கோஸ்டர் பயணத்திற்கு தயாராகிக்கொண்டிருந்தது.
பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்தவள்,குளியலறை கதவு திறக்கும் ஒலியில் களைந்து,பரப்பரப்போடு படுக்கையிலிருந்து அவசரமாக எழுந்து அமர்ந்தாள்.
அமர்ந்த கையோடு அருகிலிருந்த போர்வையை எடுத்து தனது வெற்று தேகத்தை மறைத்து மருண்ட விழிகளோடு அவனை நோக்க,குளியலறையில் இருந்து வெளிவந்தவனின் விழிகள் ஒரு நொடி கோபத்தில் இடுங்கியது.
ஆனால் சடுதியில் அது பொய்யோ என்பது போல் அவளை துளைத்தெடுத்த கூரிய விழிகளில் ஒரு அலட்சியம் குடிக்கொள்ள,முகத்தில் இருந்த உணர்ச்சிகள் துடைத்தெறியப்பட்டிருந்தது.
இரவில் தன்னோடு காமதேவனை போல் களியாட்டம் போடும் ஆரூரன்,பகலில் அவளுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது நடந்துகொள்வான்.வேற்றுகிரகவாசியைப் போல் நடந்துக்கொள்ளும் அவனோடு கூடி களைய விருப்பமில்லை என்றாலும்,வேட்டையாட தன்னை நெருங்கி வரும் சிங்கத்தின் பலத்தின் முன் ஒரு புள்ளி மானால் என்ன செய்துவிட முடியும்.கடைசியில் அவனிடம் சரணடைவதை தவிர அவளுக்கும் வேற வழியில்லை.
ஆனால் ஒன்று,பார்ப்பதற்கு கடுமையாக தெரிந்தப்போதும் இரவில் அவன் தன்னை பூவை விட மென்மையாக கையாளும் விதத்தில் அவளும் சற்று மயங்கி தான் போவாள் என்பது உண்மை.இருப்பினும் அவனை போல் காதலன்றி ஒரு இயந்திரத்தனத்துடன் ஒட்டி உறவோடு அவளால் முடியவில்லை.
அதனால் பகலில் கணவன் அன்றி வேற்று ஆளைப்போல் நடந்துக்கொள்ளும் ஆரூரனிடமிருந்து எப்போதும் தள்ளியே இருப்பாள் தாரா.இப்போதும் அதேபோல் அவளது கைகள் தன்னிச்சையாக போர்வையை எடுத்து அவளது தேகத்தை மறைத்திருந்தது.
அறையில் ஒருத்தி இருக்கிறாள் என்ற எண்ணமே இல்லாமல்,நேரே மர அலமாரியை திறந்து,அதிலிருந்து வெளீர் இளஞ்சிவப்பு நிற சட்டையையும், அதற்கு ஈடாக பட்டு கறை வைத்த வேட்டியும் எடுத்து,அதை பரபரவென அணிந்தவன்,தனது கைசட்டையை முழங்கைக்கு மேலாக மடித்துவிட்டு, முன்பு தன் இடுப்பை சுற்றியிருந்த துவாலையை அங்கிருந்த அழுக்கு துணியை சேகரிக்கும் கூடையில் போட்டு,கண்ணாடியின் முன் நின்று தலைமுடியை வாரிப்படிய சீவி,வழக்கமாக கையில் அணியும் ரோலக்ஸ் கை கடிகாரத்தை அணிந்து,முகத்தில் எப்போதும் இருக்கும் இறுக்கத்தோடு,அதற்கு மேல் அங்கிருக்க விருப்பமில்லாதவன் போல் அறையிலிருந்து அவசரமாக வெளியேறினான்.
அவனை சுற்றியிருக்கும் இடம் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் ஆரூரன்.அதனால் தாம் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் அதற்கான இடத்தில் வைத்தப்பிறகே அறையை விட்டு வெளியேறியிருந்தான்.
அவன் அறையிலிருந்து வெளியேறும் வரையிலும் அமர்ந்திருந்த அதே இடத்திலே இருந்த தாராவின் முகத்தில் முன்பு இருந்த பயம் நீங்கி,ஒரு நீண்ட பெருமூச்சு ஒன்று வெளி வர “பேசாமலே பயப்பட வைக்கிறான் ராட்சஸன்…இவனெல்லாம் காட்டுல பிறக்க வேண்டியது…தெரியாமல் மனுஷனா பிறந்து என் உயிரை எடுக்கறான்…ஜூவாசி” என வாய்விட்டு திட்டியவளுக்கு,கடிகாரத்தின் முள் விடியற்காலை ஐந்தை தொட்டு இருப்பது தெரிய சாசர் போல் இமைகளை விரித்தவள் பயத்தில “ஐய்யையோ மணி அஞ்சு…இப்போ ப்ரேயர் டைமாச்சே…தாரா இன்னைக்கு ப்ரின்சிபால் கையிலே கைமா தான்…” என தலையில் கைவைத்தவள்,அடுத்து ஒரு நொடி கூட தாமதிக்காமல் மடமடவென குளித்துவிட்டு,புடவையை உடலை சுற்றி போட்டுக்கொண்டு,அவசரமாக கீழிறங்கி ஓடி வந்தாள்.
எவ்வளவு சீக்கிரம் குளித்து தயாராகி கீழிறங்கி வந்தப்போதும் பூஜைக்கான நேரம் கடந்து,காலை சிற்றுண்டியான அருகம்புல் சாறு பருகும் நேரம் வந்துவிட்டது.அவளது பிரின்சீபாலான மாமியாரோ மாடிப்படி அருகே நின்று மருமகளை அடிக்க கையில் கம்பு இல்லாத குறையாக அவளை முறைத்தப்படி நின்றுக்கொண்டிருந்தார்.
அங்கிருந்த நீள் விரிக்கையில் அமர்ந்து மாமனாரான சித்தார்த் சக்கரவர்த்தி அருகம்புல் சாறு பருகுக்கொண்டிருக்க,அவர் ஏதேனும் தனக்கு உதவிக்கு வருவரா என அவரை பாவமாக பார்க்க அவரோ இவளை கண்டுக்கொண்டாள் அல்லவோ…??தனக்கு கொடுத்த அருகம்புல் சாற்றை நரசூஸ் கொட்டைவடிநீரை போல் ரசித்து ருசித்துக்குடித்துக்கொண்டிருந்தார்.
தாரா ‘போயா யோவ்…மிக்சர் தின்னி’ அவரை திட்டிவிட்டு மாமியாரைப் பார்த்து ‘செத்தோம்’ என்று நினைத்து பீதியோடு மாமியாரை நோக்கி மெதுவாக அடியெடுத்து நெருங்க,அவரோ எடுத்தவுடன் தனது வழக்கமான பாடத்தை கற்பிக்க ஆரம்பிக்க,அவளோ எப்போதும் போல் மனதிற்குள் கவுன்ட்டர் கொடுத்து பாடத்தை அம்போவென விட ஆரம்பித்துவிட்டாள்.
“நீ இந்த வீட்டு மூத்த மருமகள்,உனக்கு அந்த எண்ணம் இருக்கா இல்லையா…??”
‘இல்லைனு சொன்னா என்ன பண்ணுவீங்க…??’
“எனக்கு அப்புறம் எல்லாத்தையும் நீ தான் பார்த்தக்கணும்…ஆனால் உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை…உன்னை நம்பினால் காலை சாப்பாட்டுக்கு பதில் மதிய சாப்பாடு தான் எல்லாருக்கும் கிடைக்கும்…உனக்கு உன் அம்மா என்ன தான் சொல்லி கொடுத்து வளர்த்தாங்களோ…நல்ல எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்கே…ஆனால் ஒண்ணுக்குமே லாக்கியில்லை…” என்று திட்டிக்கொண்டே சென்றவர்,
அவள் புடவை கட்டியிருக்கும் முறையைப் பார்த்து “என்ன இது புடவை…??(ஹீம்…இது எங்கேயும் காதல்ல ஹன்சிகா கட்டின டிஸ்யூ புடவை) டிஸ்கோ டான்ஸ் ஆடப்போறவ மாதிரி (இன்னும் கொஞ்ச நேரத்தில் நீங்க வாய மூடலை…நான் காளி டான்ஸ் தான் ஆடப்போறேன்)…உன் பட்டணத்து பவுசெல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டு இந்த ஊருக்கு ஏத்த மாதிரி காட்டன் புடவை கட்டு…” என்றவர்,
அத்தோடு நிற்காமல் அவளின் புடவை மடிப்பு இடுப்பிலிருந்து சற்று கீழிறங்கி இடுப்பு பிரவேசம் வெளியே தெரிய,அவளின் இடுப்பை நறுக்கென கிள்ளி,அவளின் ‘ஆ’ என்ற துள்ளலான அலறலை பொருட்படுத்தாமல் “என்னதுடி இது…?உனக்கு மட்டும் தான் இடுப்பு இருக்குனு நினைப்பா…??(பின்ன உங்களை மாதிரி அடுப்பா எனக்கு இருக்கு) நாளையிலிருந்து ஒழுங்கா இழுத்து சொருகி பின் போட்டுட்டு தான் கீழிறங்கி வர(எயிட்டீஸ் படத்துல வர ஆன்ட்டீஸ் மாதிரியா…?ஹோ காட்),இது என்ன தலையை பேய் மாதிரி விரிச்சுப்போட்டுட்டு வந்திருக்க…நாளையிலிருந்து பின்னிட்டு தான் கீழிறங்கி வரணும்…அது இருக்கட்டும் உன் புருஷன் கீழ வந்து எவ்ளோ நேரமாகுது…அவனுக்கு முன்னால் எழுந்திருச்சு…அவனை குளிப்பாட்டி அவனுக்கு வேண்டியதெல்லாம் செய்துக்கொடுக்கணும்னு கல்யாணமாகி அடுத்த நாள் உனக்கு சொன்னேனா இல்லையா…? (ஆமா…சின்ன பப்பா அவனை குளிப்பாட்டி வேற விடாறாங்க) என் பேச்சு கேட்காமல் இழுத்து போர்த்தி நல்லா தூங்கிட்டு ஆடி அசைஞ்சு வந்திருக்க…அந்த காலத்திலே என் மாமியார் பேச்சை கேட்கலைனா…கால்லே சூடு போடுவாங்க…இல்லைனா நாள் முழுசும் கல் உப்பு மேலே முட்டிப்போட வைப்பாங்க…ஆனால் நான் அது எதுவும் செய்யாமல் பொத்தி பொத்தி உன்னை வைச்சிருக்கேன் இல்லை…அதான் என் வார்த்தையை ரொம்ப மதிச்சு நடந்துக்கிறே…எல்லாம் என் மவன் கொடுக்கற இடம்…இல்லைனா நீயெல்லாம் இந்நேரம் ஒழுங்கா நடந்திரிப்பே…” தோள்பட்டையில் தாடையை இடித்து நொடித்துக்கொள்ள,
‘ஆமா…உங்க மவன் இடத்துல இரண்டு சென்டூ இடத்தை என் பேரிலே மாத்தி எழுதி வாங்கி,அதுல பிளாட் கட்டிட்டு இருக்கேன்…ஹூக்கும்…என்னை எதுக்கு கல்யாணம் பண்ணறார்னே இதுவரைக்கும் தெரியலை…இதுல இடம் கொடுக்கறாராம் இடம்’ கோபத்தில் வாய்விட்டு முனக,
“அங்க என்ன முனகல்…??” என,
‘அடியே தாரா,வாய்த்திறந்து ப்ரீன்சி கிட்ட மாட்டிக்கிட்டயே…சமாளிடி சமாளி’ என மனதிற்குள் அரண்டுப்போனவளாக “ஹிஹிஹி ஒண்ணுமில்லை அத்தை…நாளையிலிருந்து சீக்கிரமா எழுந்துக்கறேனு சொன்னேன்” என அசடு வழிய,
அவளை நம்பாமல் சந்தேகமாக பார்க்க ‘அச்சோ பிரீன்சி நம்ப மாட்டிக்குது போலவே ஐய்யோ முறைக்குதே முறைக்குதே…என்ன செய்யறது…??” என கையை பிசையும் போதே,
“அண்ணிஈஈஈ உங்களை அண்ணா கூப்பிடறாங்க” என வீட்டின் கடைசி வாரிசான ஆதிரையன் சக்கரவர்த்தி அபத்தமானவனாக அவளை காப்பாற்றிவிட,
‘ஹப்பாடா தப்பிச்சோம்டா சாமி’ என நினைத்து “அத்தை அவரு கூப்பிடறாராம்…நான் போறேன்” என்றவள் மாமியார் ஏதோ ஒன்று கூற வருவதை கவனியாதவள் போல் அங்கிருந்து சிட்டாய் பறந்துவிட்டாள்.
அவளுக்கு நன்கு தெரியும் அழைத்தது அவள் கணவன் அல்ல,தனது மாமியாரிடமிருந்து தன்னை காப்பாற்ற கொளுந்தனர் தான் பொய்யாக அதை கூறி அழைத்தான் என்பது.
தாரா எப்போதும் தனக்கு நேர்ந்த துன்பத்தை நினைத்து வருந்தாமல்,அதை தூசிப்போல் தட்டிவிட்டு,கவுன்ட்டர் கொடுத்து தன் வேதனையை நீக்கிக்கொள்வாள்.
சிறு வயதில் இருந்தே இந்த பழக்கத்தை பின்பற்றுவதால்,அவளால் எந்தவொரு சூழ்நிலையையும் எளிதாக சமாளித்து வெளி வர முடிந்தது.
கணவன் அலுவலகத்திற்கு செல்லப்போகிறான் என்பதறிந்து வாசலிற்கு வந்தவள் தனது கொளுந்தனரிடம் உதட்டசைவில் “நன்றி” என கூற,
“பரவாயில்லை அண்ணி…அண்ணாவை பாருங்க” என தனது தமையனை கண்காட்ட,உடனே அவளது பார்வை தனது கொளுந்தனரிடமிருந்து கணவனிடம் இடம் பெயர்ந்தது.
எப்போதும் போல் இரும்புப்போல் முகத்தை வைத்திருந்தவனின் பார்வை மட்டும் மனைவியை கூர்மையாக துளைத்தது.கணவனின் ஊடுருவும் பார்வைக்கான அர்த்தம் விளங்காமல் நின்ற இடத்திலே புடவை முந்தானையின் நுனியை பிடித்து பதட்டத்தோடு முறுக்க,அவனின் பார்வையில் கடுமை அதிகரிப்பதை அறிந்தவளுக்கு அவனின் பார்வைக்கான அர்த்தம் அப்போது தான் விளங்கியது.
வீட்டு ஆண்கள் வெளியில் செல்லும் போது,பெண்கள் முன்னால் வரவேண்டும் என்பது அவ்வீட்டின் எழுதப்படாத விதி.தனது மாமியார் தன்னை வறுத்தெடுத்ததில் சகலமும் மறந்துப்போயிருக்க,இது எவ்வாறு நினைவில் இருக்கும்.
தன் தலையிலே இலேசாக தட்டி,நாக்கை கடித்தவள்,அவர்கள் செல்லும் பாதையின் முன் வந்து நின்று வலுக்கட்டாயமாக உதட்டை சிரித்தது போல் இழுத்து வைக்க,அதற்கு மேல் நொடியும் தாமதிக்காமல் ஆரூரன் தனது ஜீப்பை ஓட்டிச்சென்றான்.
பழங்கால பாரம்பரிய கார்களின் அலாதிப்பிரியம் கொண்ட ஆரூரன்,வீட்டின் முற்றத்தை சுற்றி வகை வகையான கார்களை நிறுத்தி அலங்கரித்து வைத்திருந்தான்.இன்றும் அதேபோல் 1989ல் அறிமுகப்படுத்திப்பட்ட மஹேந்திரா சி.ஜே 640 ஜீப்பை ஒட்டிக்கொண்டு சென்றான்.
ஆதிரையன் மட்டும் தனது அண்ணியிடம் கையசைத்து விடைப்பெற, தாராவும் சிரித்த முகமாகவே அவனிற்கு கையசைத்து விடைக்கொடுத்தாள்.
அப்போது தான் அவள் ஒன்றை கவனித்தாள்.அவளது கணவனான ஆரூரன் வேட்டி சட்டையிலிருந்து கால்சட்டைக்கு மாற்றியிருப்பதை.
‘இவ்ளோ நேரம் நான் ரூம்ல தானே இருந்தேன்…இவர் எப்போ வந்து டிரெஸ் மாத்தியிருப்பாரு…ஏற்கனவே இவன் மனுஷனா ரோபோவானு எனக்கு சந்தேகமா இருக்கு… இதுல இவன் பண்ணுற மேஜிக்கை வேற கண்டுப்பிடிக்கணுமா…??ஹோ காட்’ என குழப்பத்தோடு தலையில் தட்டி யோசிக்க,அவளுக்கு அப்போதும் விடைக்கிடைக்கவில்லை.
அதன்பலனாக “என்னை கொல்றானே” என சரசமாக கூற வேண்டிய வாயால் “என்னை கொல்லுறானே ராட்சஸன்” என திட்டும் படியாக மாறிவிட்டது.
ஆனால் இதற்கெல்லாம் காரணமான ஆரூரனோ மனைவியின் மீது பெரும் கோபத்தோடு அலுவலகத்தை நோக்கி வண்டியைச் செலுத்திக்கொண்டிருந்தான்.
மலைச்சரிவில் அசுரவேகத்தில் வண்டியைச் செலுத்திக்கொண்டிருக்கும் தனது தமையனால் பீதியடைந்த முகத்தோடு இருக்கையை நன்றாக பிடித்து அமர்ந்திருந்தான் ஆதிரையன்.
அவனது அச்சத்திற்கு ஏற்றார் போன்று ஒரு நிகழ்வும் நிகழ்ந்தது.அதனால் அவனது வாழ்க்கையே திசைத்திரும்ப போகிறது என்பதை அவனிடம் யார் எடுத்துக்கூறுவது…!!