‘மட்டி’ என தன் தலையில் தட்டிக்கொண்டு வெட்கிய யாழினி சிரித்துக்கொண்டே உணவை உட்கொள்ள ஆரம்பித்தாள்.
சற்று முன்பு வேம்பை விடக் கசப்பாக தெரிந்த உணவு இப்போது தேனை விட தித்தித்திப்பாய் இருந்தது.
தனக்குள் அதிரடியாய் நிகழும் மாற்றத்தை எண்ணி வியந்த பெண்ணவள்,அதனை மாற்றவும் முயலவில்லை.
ஏனெனில்,அவளிற்கும் இவையெல்லாம் பிடித்திருக்கிறதே?
அதனால் ஒரு மென்புன்னகையுடனே தனலட்சுமி தனக்காக சமைத்துக்கொடுத்த உணவை உண்டப்படி அவனை ஏறிட்டு நோக்கினாள்.
ஒற்றை காலை தரையில் ஊன்றி மற்றொரு காலை சுவற்றில் வைத்து சாய்ந்து நின்று மழையை ரசித்து பார்த்திருந்தான் அவன்.
சிகையை அழுந்தக்கோதிப்படி நின்றவனின் இதழில் முறுவல் மட்டும் மறையாமல் இருந்தது.
அவளும் உணவை உண்டு முடித்துவிட்டு வெளியே வந்தாள்.
மழையை ரசித்திருந்த சரவணனின் அருகே வந்து நின்றவளிற்கு சட்டென அவனிடம் பேச வரவில்லை.
அவனிற்கும் அதே நிலை தானோ என்னவோ?
அவனும் அவளை திரும்பி ஏறிடாமல் மழையையே இமைக்காமல் பார்த்திருந்தான்.
துளி துளியாய் மண்ணில் வந்து விழுந்துக்கொண்டிருந்த நீரின் சப்தம் ஒரு மென் கானமாய் அவர்களது காதில் இசைத்தது.
அந்தவொரு நொடி…அந்தவொரு நிமிடம்…இருவரின் மனதிலும் இனம் புரியாத ஓர் உணர்வு!
மேனியிலோ மழையின் குளுமையை மீறிய ஒரு சிலிர்ப்பு!
அவ்விடத்தில் ஒரு மோன நிலை ஆக்கிரமித்தது.
அக்கணம் அந்த மோனத்தை களைக்கும் விதமாக “வாழ்க்கை” படத்தில் இருந்து “ல…ல…லா…மெல்ல வந்து என்னை தொட்டு” என்ற இளையராஜாவின் வயலினின் மயக்கும் பின்னணி இசை அலைப்பேசியின் வழியே ஒலித்தன.
அவன் தன்னிலை களைந்து தனது கால்சட்டை பையிலிருந்து அலைப்பேசியை கையிலெடுத்தான்.
திடீரென்று இறைந்த அவனது அலைப்பேசியின் ஓசை கேட்டவளிற்கு தூக்கிவாரிப்போட்டது.
அதன்பிறகே அது அவனது அலைப்பேசியின் மணி என்று அறிந்து “ஊப்” என இதழ் குவித்து ஊதி நெஞ்சி நீவியப்படி அவனை ஏறிட்டாள்.
அவனோ அவளின் செயலை கவனிக்காதது போல் அலைப்பேசியில் உரையாட ஆரம்பித்திருந்தான்.
அதில் கடுப்பானவள் ‘பெரிய சர்வம் பட ஆர்யானு மனசுக்குள்ள நினைப்பு’ என முனகியப்படி,தனது இரண்டு கரங்களையும் தேய்த்தப்படி தனது ஜாக்கெட்டினுள் கரத்தை நுழைத்துக்கொண்டாள்.
அவளின் பார்வை பொழிந்த மாரியின் மீது நிலைப்பெற்று இருந்தாலும்,அவளின் செவியோ கூர்மையாகி அவனின் பேச்சை கேட்க ஆவலாக இருந்தது.
அதையறிந்து அவனது இதழ்கள் மேலும் விரிந்தன.
ஓரவிழியால் குளிரில் சிவந்திருந்த அவளது செவிமடலை ரசித்தப் படியே உரையாடினான் சரவணன்.
காதோரம் சுருண்டு கிடந்த அவளது கூந்தல் கற்றையை ஒதுக்கிவிட அவனின் கரம் விரும்பியது.
ஆனால் அவன் அடக்கிக்கொண்டான்.
கை முஷ்டியை இறுக்கி கால் சட்டை பையினுள் விட்டப்படி தொண்டையை செருமிக்கொண்டான்.
அலைப்பேசியின் எதிர்ப்புறமாக அவனிடம் பேசிக்கொண்டிருந்தது வேறு யாருமல்ல,தனலட்சுமி தான்!
அவர் வழக்கம் போல் ஓயாமல் பேசிக்கொண்டிருக்க அவனோ அன்னையிடம் “ம்” மட்டுமே கொட்டிக்கொண்டிருந்தான்.
யாழினியைப் பற்றி தான் அவர் விசாரித்திருந்தார்.
அவனோ எதற்கும் சொற்களை உதிர்க்காமல் பதில் கூறவும்,
ஒரு கட்டத்தில் கடுப்பாகிய தனலட்சுமி “டேய் மகனே…வாயிலே என்ன கொள்ளுக்கட்டையா வைச்சிட்டு இருக்கே?வாயை திறந்து பேசுடா” என சிடுசிடுக்க,
அவனோ ஒரு பெருமூச்சுடன் “இருங்கம்மா அவங்ககிட்டயே ஃபோனை கொடுக்கறேன்…நீங்களே பேசிக்கோங்க” என்றுவிட்டு அலைப்பேசியை அவளிடம் நீட்டினான்.
அவளோ திகைப்புடன் அலைப்பேசியைப் பார்த்துவிட்டு ‘யார்’ என்பது போல் அவனை ஏறிட,
“அம்மா” என இதழசைத்து அவன் உரைக்க,
உடனே அவளின் முகம் பூவாய் மலர்ந்தன.அவசரமாக அவனிடமிருந்து அலைப்பேசியை பறித்தெடுத்து காதில் வைத்தாள் யாழினி.
அவளின் மின்னல் வேகம் கண்டு அவனது ஒற்றை புருவம் ஏறி இறங்கியது.
அவளோ “ஹலோ ஆன்ட்டி” என்றவளின் குரலில் அப்படியொரு உற்சாகம்!
அதிலே அன்னையின் மீது அவள் வைத்திருக்கும் அன்பு எத்தகையது என்று அவன் உணர்ந்தான்.
மிக குறைந்த நாட்களில் இருவருக்குமிடையே உண்டாகிய பிணைப்பை எண்ணி அவன் ஆச்சரியமுற்றான்.
அவரிடம் பேச பேச அவளின் முகம் நொடிக்கு ஒரு முறை மாறிக்கொண்டே இருந்தன.
அவர்கள் பேசுவதை அவன் கேட்டுக்கொண்டிருப்பதை அறிந்து வேகமாக அலைப்பேசியில் உரையாடியப்படி வீட்டிற்குள் நுழைந்தாள்.
அவனோ அவளை புருவம் உயர்த்தி பார்த்தானே தவிர அவளை தடுக்க விளையவில்லை.
‘அப்படியென்ன ரகசியம் பேசறாங்க இரண்டு கேடிகளும்’ என சிந்தையை கசக்கிப் பிழிந்தப்படி யோசித்திருந்தான்.
உள்ளே சென்ற யாழினியோ “ஹான் தனியா தான் இருக்கேன் ஆன்ட்டி இப்போ சொல்லுங்க” என்றாள் ரகசியக்குரலில்.
“அவன் உன்னை ஏதாவது மிரட்டறானா பாப்பா?” என எதிர்புறம் தனலட்சுமி வினவ,
அதில் அவளின் இதழ்கள் தாராளமாக விரிந்தன.
“சேச்சே இல்லை ஆன்ட்டி…உங்க கன்னுக்குட்டி கொஞ்சம் நல்லக்குட்டி தான் போலே…ஆரம்பத்திலே முரண்டுப்பிடிச்சது…இப்போ தான் மூக்கணாங் கயிறு கட்டி கொஞ்சமா அடக்கி வைச்சிருக்கேன்” என சன்னல் வழியே தெரிந்த அவனது பக்கவாட்டுத் தோற்றத்தை ரசித்தப்படியே உரைத்தாள்.
அவளின் பதிலை கேட்டு அவரின் முகமும் அகமும் மலர்ந்தது.
“பரவாயில்லை கன்னுக்குட்டி கொஞ்சம் கொஞ்சமா அவங்க அப்பன் புலிக்குட்டி மாதிரியே மாறிட்டு வர்றான் போலே..
நல்லது” என்றவர்,
சட்டென பாவனையை மாற்றி “அவன் மட்டும் மாறிலைனா நான் வேற ஒரு முடிவு எடுக்கலாம்னு நினைச்சேன் பாப்பா” என வெகு தீவிரமான குரலில் சொன்னார்.
“வேற முடிவா?அது என்ன ஆன்ட்டி?” என அவள் குழப்பமாக வினவ,
அவரோ “அதுவா?நீ டேட்டிங் போக வேற ஒரு ஆளை செட் பண்ணி தரலாம்னு நினைச்சேன்” என்று அதிரடியாக கூறியதும் “வாட் டேட்டிங்கா?” என வாயை பிளந்தாள் யாழினி.
அதேநேரம் வீராவும் “ப்ச் தனம்…என்ன பேச்சு இது?” என்று அங்கு அதட்டியிருந்தார்.
“அட விடுங்க…யாழினி நம்ப பாப்பா…அதுவும் டூ கே கிட்ஸ் வேற…இது வரை எத்தனை டேட்டிங் போயிருப்பாள்…அவளுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்” என்று கூறி கணவனை அடக்கியவர், “ஆமா தானே பாப்பா?” என அவளிடமும் தனக்கு ஆதரவு தர கோரிக்கை வைக்க,
அவளிற்கோ என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.
அவள் இந்த நூற்றாண்டை சேர்ந்து பெண்ணாக இருந்தாலும்,இதுநாள் வரை ‘டேட்டிங்…லவ்…பிரேக்கப்’ என இதுப்போலான உறவுகளுக்குள் அவள் சிக்கியது இல்லை.
அதற்கு மிக முக்கிய காரணம் அவளிற்கு அளவுக்கு அதிகமான ஆண் நண்பர்கள் இருந்தார்கள்.
அனைவரிடமும் சகஜமாக பேசி பழகியதால் யாரிடமும் காதல் என்ற உணர்வே அவளிற்கு ஏற்பட்டது இல்லை.
அவ்வளவு ஏன்?
அவள் தன்னை பெண்ணாக ஒரு முறை கூட உணர்ந்ததில்லை.
அவளை சுற்றிலும் ஆண் நண்பர்களே அதிகம் என்பதால்,அவளும் ஒரு ஆண் போலவே நடந்துக்கொள்ளுவாள்.
தன் மனதில் நினைப்பதை செய்யக்கூடிய துணிச்சலான பெண் தான் அவள்!
முதல் முறையாய் அவளிற்குள் வித்தியாசமான உணர்வை கொடுத்த ஒரே ஒரு ஆடவன் சரவணன் தான்!
அவ்வாறு இருக்கையில் அவளிற்கே அந்த ‘டேட்டிங்’ என்ற சொல் ஒரு தடுமாற்றத்தைக் கொடுத்தன.
அவளின் மௌனம் அவருக்கு எதையோ உணர்த்த “அச்சோ நான் ஒரு மடச்சி…நீ இப்போ தான் காதல் தோல்வியாகி வந்திருக்கே…உன்கிட்ட போய் இதெல்லாம் பேசிட்டு இருக்கேன் பாரு…சரி விடு பாப்பா…கொஞ்ச நாள் போகட்டும்…அதுக்கு அப்புறம் நாமளே ஒரு நல்ல பையனா பார்த்துக்கலாம்” என வழக்கம் போல் அவராகவே ஒரு காரணத்தை யூகித்துப் பேச,
அவளிற்கோ எங்கியாவது சுவற்றில் சென்று முட்டிக்கொள்ளலாம் போன்று இருந்தது.
“ஆன்ட்டி எனக்கு லவ் ஃபெயிலியர் எல்லாம் இல்லைனு உங்களுக்கு எத்தனை தடவை சொல்லறது?” என ஒரு வித அலுப்புடனே அவள் கூற,
அவரோ “சரி சரி நீ சங்கடப்படாதே யாழு…நாங்க கிளம்பலாம்னு நினைச்சோம் உடனே மழை வந்திடுச்சு…நாங்க மழை நின்னவுடனே கிளம்பி வர்றோம்…கன்னுக்குட்டி மழையிலே நனைஞ்சிட்டு கிளம்பிடப்போறான்…நீ அவனை போகவிடாதே பாப்பா…மழை நின்னப்பிறகு அனுப்பி விடு…சரியா?” என படபடவென கட்டளைகளைப் பிறப்பித்துவிட்டு அவளிற்கு பேசவே வாய்ப்பளிக்காமல் அலைப்பேசியைத் துண்டித்துவிட்டார்.
யாழினியோ ‘ஐய்யோ இவரை வைச்சுக்கிட்டு முடியலை’ என அலைப்பேசியால் தன் நெற்றியில் தட்டிக்கொள்ள,அது வேறு வலித்தது.
“ப்ச்” என தலையை கையால் தேய்த்துக்கொண்டே வெளியே வந்தாள் யாழினி.
தனலட்சுமி அவ்வாறெல்லாம் பேசியும் அவரின் மீது அவளிற்கு கோபமெல்லாம் வரவில்லை.
அவர் அதனையெல்லாம் வெளிநாட்டு நாடகத்தைப் பார்த்தே கற்றுக்கொண்டிருக்கிறார் என்பது அவளிற்கு தெரிந்தே இருந்தது.
அதனால் அவரின் பேச்சை எளிதாக தட்டிவிட்டு கடந்தாள்.
ஆயினும் மனதிற்குள் ‘நான் ஏதோ இவங்க பையனை டேட் பண்ணற மாதிரி இவன் ஒத்து வரலைனா வேற பையன் பார்க்கறேன்னு சொல்லறாங்க…வெர்ரி டேன்ஜரஸ் ஃபெலோ’ என சிரிப்புடன் எண்ணிக்கொண்டே வெளியே வந்து அலைப்பேசியை அவனிடம் நீட்டினாள்.
“யூ ஆர் சோ லக்கி” என்று அவள் திடீரென்று கூறியதும் “எதுக்கு?” என கேட்டுக்கொண்டே அலைப்பேசியை வாங்கி கால் சட்டை பையினுள் போட்டான் சரவணன்.
அவளோ அங்கிருந்த படிக்கட்டில் சென்று அமர்ந்து “உங்களுக்கு தெரியுமா தெரியாதானு எனக்கு தெரியலை…நான் ரொம்ப மனசு கஷ்டத்தோட தான் இந்த ஊருக்கு வந்தேன் சரவணன்…கிட்டத்தட்ட இந்த வாழ்க்கையே வெறுத்துப்போயிருந்தேன்…எதுக்குடா நானெல்லாம் வாழறேன்னு கூட எனக்கு தோணுச்சு…அப்படிப்பட்ட நிலையிலே வந்த என்னோட மனசை ஒரு நாளிலே மத்தினது ஆன்ட்டி தான்…” என வருத்தத்துடன் ஆரம்பித்தவளின் முகம் இறுதியில் தனலட்சுமியை எண்ணி மலர்ந்தது.
அவள் கூறுவதை கேட்ட சரவணன் “அம்மாவா?” என வியப்புடன் வினவ,
“ஆமா” என சிரித்தப்படி ஆமோதிப்பாக தலையசைத்தவள் “இனி என் வாழ்க்கையிலே சிரிப்பே இல்லை…காலம் முழுவதும் ஒரு இறுக்கத்துடனே வாழணுமானு நொந்துப்போய் இருந்தேன்…ஆனால் ஆன்ட்டி தான் உன்னோட சிரிப்பு இன்னும் தொலைஞ்சுப்போகலை…உன்கூட தான் இன்னும் இருக்குனு என்னோட பாரத்தை குறைச்சு சிரிக்க வைச்சாங்க…அவங்களை அம்மாவா அடைய நீங்க ரொம்ப கொடுத்து வைச்சிருக்கணும்” என்றாள் சிலாகப்போடு…
அவன் எதுவும் பேசாமல் அவளையே ஆழ்ந்துப் பார்த்திருந்தான்.
அவளை பார்த்த தருணங்களில் எல்லாம் அவளின் விழியில் ஒரு சோகம் இழையோடியதை அவனும் கண்டிருக்கிறான்.
ஆனால் அவையெல்லாம் காதல் தோல்வியினால் விளைந்த விரக்தி என்று நினைத்தான்.
இன்று முதல் முறையாய் அவ்வாறு இருக்காதோ? என்ற சிறு சந்தேகம் அவனுள் முளைத்தது.
அதைப்பற்றி அவளிடம் நேரடியாக வினவ முடியாமல்,அவள் அவனிடம் மனம் திறந்து பேசுவதை இடைமறிக்காமல் மௌனமாக கேட்டிருந்தான்.
சிரித்துக்கொண்டே இருந்தவளின் புன்னகை சட்டென மறைந்திட,கோபமாக அவனை நோக்கி நிமிர்ந்தவள் “ஆனால் அந்த ஏஞ்சலோட மகன் நீங்க ஒரு சிடுமூஞ்சி…உங்களை பார்த்தாலே எனக்கு கடுப்பு கடுப்பா வருது” என விரலை அவனை நோக்கி நீட்டி திட்டினாள்.
அவனை நோக்கி நீண்ட விரலை ஒரு பார்வை பார்த்தவாறு “நான் என்ன பண்ணேன்?” என்று நெற்றி சுருக்கி கேட்டான்.
அவளோ ஆவேசமாக “நீங்க என்ன பண்ணலைனு கேளுங்க…பார்த்ததிலிருந்து இப்போ வரை என்கிட்ட சிடுசிடுப்பா நடந்துக்கிறீங்க?காலையிலே எப்படி பேசிட்டு போனீங்க?இதோ இப்போ கூட நான் தான் உங்ககிட்ட சாரி கேட்டேன்…நீங்க என்கிட்ட இதுவரை சாரி கேட்கலை…உங்களுக்கு ஏனோ என்னை பிடிக்கலை…அது ஏன்னு இப்போ வரை எனக்கு தெரியலை…சரி அது உங்க விருப்பம்…ஆனால் ஆன்ட்டிய எதுக்கு என்கிட்ட பேச வேண்டாம்னு சொன்னீங்க?அதுக்கான காரணம் சொல்லுங்க” என அவனை நேருக்கு நேராக பார்த்து குற்றம் சாட்டி கேட்டாள்.
அவனோ அவளை அழுத்தமாக பார்த்திருந்தானே ஒழிய எதுவும் பேசவில்லை.
“ப்ச் இப்படி அமைதியா இருந்தால் என்ன அர்த்தம் சரவணன்?பதில் சொல்லுங்க” என்றாள் நாசிவிடைத்து முகம் சிவக்க.
அவளிற்கு அவன் பதில் கூற வேண்டிய அவசியமே இல்லை.
அதனால் அவன் மௌனம் காக்க,அவளின் முகம் சோர்ந்துப்போனது.
“உங்க அம்மா உங்க இஷ்டம்…அதானே…ஆனால் என் மேலே இவ்வளவு கோபத்தை கொட்டற அளவு நான் உங்களுக்கு எதுவுமே பண்ணலையே…எதுக்காக என்னை இவ்வளவு வெறுக்கறீங்க?” என மனம் மரத்துப்போன குரலில் அவள் கேட்க,
கண்ணீரை அடக்க முயன்று சிவந்த அவளின் முகத்தை ஒரு பெருமூச்சுடன் நோக்கிய சரவணன் முதன் முறையாய் வாயை திறந்தான்.
“தேவையில்லாமல் உங்க மேலே வன்மத்தை கொட்டுற அளவு எனக்கும் உங்களுக்கும் இடையே ஒண்ணுமே இல்லை யாழினி…முதல்ல அதை புரிஞ்சுக்கோங்க” என்றவன்,
“நான் உங்களை விட்டு விலகி விலகிப்போனதுக்கு காரணம் கூட இது வரை எந்த பொண்ணு கூடவும் எனக்கு பேசி பழக்கமில்லை…நான் நல்லா பேசற ஒரு பொண்ணு என் அம்மா தான்…அதுக்கு அடுத்து இப்போ சரோஜோம்மா…அவ்வளவு தான்…மத்தப்படி எனக்கு உங்க மேலே எந்த வித கோபமோ வருத்தமோ இல்லை” என தனது செயலுக்கான நியாயத்தை கூறினான்.
அவனது விளக்கம் அவளிற்கு ஏற்புடையதாக இல்லை.
“ஆனா ஆன்ட்டிய எதுக்கு என்கிட்ட பேச வேணாம்னு சொன்னீங்க?” என ஆற்றாமையுடன் வினவ,
அவனோ ஒரு முறை விழி மூடி திறந்து “அது எங்கம்மா உன்னாலே காயப்பட்டு நிற்கக்கூடாதுனு தான் உன்கிட்ட பேச வேண்டாம்னு சொன்னேன்” என்றான் கழுத்தை வருடியப்படி…
“வாட்…நான் எப்போ ஆன்ட்டிய ஹெர்ட் பண்ணேன்” என கோபமும் வருத்தமுமாக அவள் கேட்க,
அவளின் முகத்தை ஆழ்ந்து நோக்கிய ஆடவன் “நீங்க இதுவரை பண்ணலை…ஆனால் இதுக்கு மேலே பண்ண வாய்ப்பிருக்கு” என அழுத்தம் திருத்தமாக உரைத்தான்.
அவளோ “இப்போ என்ன சொல்ல வர்றீங்க?” என இமைகள் இடுங்க அவனை பார்க்க,அவளின் முகத்தில் சினத்தின் ரேகைகள் படர்ந்திருந்தது.
“நான் உங்களை தப்புச்சொல்லலை யாழினி…நான் என் அம்மாவுக்கு சொன்னேன்” என,அவள் அவனை புரியாமல் பார்க்கவும்,
அவனோ தொண்டையை செருமி “அம்மாவோட இயல்பு இந்த மூணு நாளிலே உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்…அவங்க ஒரு கள்ளம் கபடமில்லாத மனுஷி…அதனாலே மனசுலே பட்டதை அப்படியே வெளிப்படையா பேசிடுவாங்க…அது நிறைய பேருக்கு பிடிக்காது…அதுக்காகவே பதிலுக்கு அவங்களை காயப்படுத்திடுவாங்க…அம்மா மனசு கஷ்டப்பட்டால் அப்பாவாலே தாங்கமுடியாது…அதனாலே பதிலுக்கு அப்பாவும் ஏதாவது பேசிடுவாரு…இதனாலே சொந்தக்காரங்க யாரும் எங்க வீட்டுக்கு கூட வர்றதில்லை…அம்மாவுக்கு அதெல்லாம் புரிஞ்சுக்க முடியாது…தன்னை அவமானப்படுத்தினவங்களையே தேடிப்போய் பேசி மறுபடியும் காயப்பட்டு வந்து அழுவாங்க…அடுத்த நிமிஷமே எல்லாத்தையும் மறந்திட்டு மறுபடி அவங்ககிட்ட பேசுவாங்க…அவங்ககிட்ட எத்தனை தடவை எடுத்து சொன்னாலும் அவங்களாலே புரிஞ்சுக்க முடியாது…அவங்க ஒரு குழந்தை மாதிரி…அதனாலே நானும் அப்பாவும் அவங்களை கண்ணாடி பாத்திரத்தை கையாளுற மாதிரி ரொம்பவே கவனமா பார்த்திட்டு இருக்கோம்…இதுக்காகவே புதுசா யாருக்கிட்டயும் பேசக்கூடாதுனு நானும் அப்பாவும் கண்டிஷனா சொல்லி வைச்சிடுவோம்…உங்ககிட்ட பேச வேணாம்னு சொன்னதும் அதுக்காக தான்” என மிக நீண்டதொரு விளக்கம் அவன் கொடுத்து முடித்ததும்,அவ்விடத்தில் ஒரு ஆழ்ந்த மௌனம்!
அவளின் சீற்றமும் அப்படியே மட்டுப்பட்டுவிட,அதேநேரம் பேயாய் சுழன்று அடித்த மழையும் தன் வேகத்தை குறைத்தது.
இப்போது மழை இலேசாக பெய்துக்கொண்டிருக்க,யாழினியால் தனலட்சுமியின் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பும் கரிசனமும் புரிந்துக்கொள்ள முடிந்தது.
முதல் தடவை அவர் பேசும் போது அவள் கோபம் கொண்டது நினைவில் எழுந்தது.
அவரிடம் சிறிது சிறிதாக பேச தொடங்கியப்பிறகே அவரின் சிறுப்பிள்ளை குணம் அறிந்து யாழினி தன்னை கட்டுப்படுத்திக்கொண்டாள்.
அவையெல்லாம் நினைவில் எழ ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள்.
அவனை நிமிர்ந்து அவள் ஏறிட,அவனது விழிகளும் அவளையே ஆராய்ச்சியாய் பார்த்திருந்தது.
உடனே அவளின் இதயம் படபடத்திட ‘யாழு காம் டவுன்’ என தன்னை தானே கட்டுப்படுத்தி அவனிடம் பேசினாள்.
“சரி ஓகே…நீங்க சொன்ன காரணம் நான் அக்சப்ட் பண்ணிக்கிறேன்…பட் உங்களுக்கு ஒரு கேள்வி?” என மார்ப்பிற்கு குறுக்கே கைகள் கட்டி வினவ,
‘என்ன?’ என்பது போல் அவன் அவளை பார்க்க,
“முன்னாடி தான் என்னை பத்தி தெரியாது…சோ ஆன்ட்டியை என் கூட பேச வேணாம்னு சொன்னீங்க?இப்போ என்னை பத்தி என்ன நினைக்கிறீங்க?” என தலை சரித்து ஆர்வமாக அவள் கேட்க,
அவளையே ஒரு கணம் உற்றுநோக்கிய சரவணனனுக்கு ‘என்ன தோன்றியதோ?’ “உங்களை பத்தி இன்னும் எனக்கு சரியா தெரியலை தான்…ஆனால் உங்களாலே அம்மாவுக்கு இந்த பிரச்சனையும் வராதுனு மட்டும் தோணுது” என்றான் திடமான குரலில்…
‘பார்றா’ என அவனை இதழை பிதுக்கி மெச்சியவள் “சோ ஆன்ட்டியை என் கூட பேச வேண்டாம்னு இனி சொல்லமாட்டிங்க…அப்படி தானே?” என ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க,
அவனோ அவளின் கேள்விக்கு பதில் கூறாமல் “நான் கடைக்கு கிளம்பறேன்…வீட்டை பூட்டிக்கோங்க” என வண்டி சாவியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
‘சரியான நெஞ்சழுத்தம் பிடிச்சவன்’ என திட்டியவளிற்கு அவன் மழையில் நனைந்தப்படி செல்வது தெரிந்ததும் வேகமாக முகப்பு வாசலுக்கு ஓடி வந்தாள்.
“ஏங்க எதுக்கு மழையிலே நனைஞ்சிட்டு போறீங்க?மழை நின்ன பின்னாடி போகலாமில்லை” என அங்கிருந்தே கத்த,
அவனோ வண்டியில் அமர்ந்தப்படி அவளை நோக்கி திரும்பியவன் “மழை இலேசா தூறிட்டு தான் இருக்கு…மறுபடியும் மழை பிடிக்கிறதுக்குள்ள கடைக்கு போயிடுவேன்…நீங்க உள்ள போங்க…மழையிலே நனையாதீங்க” என்றான்.
“சொன்ன பேச்சே கேட்க மாட்டான் போலே இவன்” என முணுமுணுத்தவள்,உடனே “வேகமா போகாதீங்க…மெதுவா போங்க” என அக்கறையாக மொழிய,
அவளின் பேச்சில் அவனின் இதயம் ஒரு நொடி தாளம் தப்பி மீண்டும் சீராக துடித்தது.
அவளையே ஒரு கணம் இமைக்காமல் பார்த்தவன்,பின்பு தலையை உலுக்கிக்கொண்டு தலைக்கவசத்தை அணிந்தான்.
வண்டியை திறவுக்கோல் கொண்டு இயக்கி வாசல் வரை சென்றவன்,சட்டென வண்டியை நிறுத்தி விட்டு பின்னால் திரும்பினான்.
அவளோ அப்போதும் அவனையே பார்த்துக்கொண்டு தூணில் சாய்ந்து நிற்கவும் “யாழினி” என்றான் சத்தமாக…
அவனது ஒற்றை அழைப்பிற்கே அவளின் மேனி சிலிர்த்தது.
“என்ன” என்றாள்..
“சாரி” என்று அவன் மெல்லிய குரலில் சொல்ல,அவளின் விழிகளோ ஆச்சரியமாக விரிந்தன.
‘நம்ப கட்டன் சாயாவா நம்பகிட்ட சாரி கேட்கிறது?என்னாலே நம்பவே முடியலையே…ஒரு வேளை இது கனவோ?’ என ஒரு முறை தன் கரத்தை கிள்ளிப்பார்த்தாள்.
அவளிற்கு நன்றாக வலித்தது.
‘அப்போ இது நிஜம் தான்’ என்று எண்ணியவளின் இதழ்கள் விரிந்திட “மிஸ்டர் கட்டன் சாயா…இப்போ என்ன சொன்னீங்க?எனக்கு சரியா கேட்கலை” என வேண்டுமென்றே அவனை சீண்டினாள்.
அவனிற்கும் அவளின் குறும்பு புரிந்திட,கண்ணிற்கு புலப்படாத புன்னகையுடன் “வீட்டுக்குள்ள போய் கதவை சரியா பூட்டிக்க சொன்னேன்…சரி நான் வர்றேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வெளியேறிவிட்டான் சரவணன்.
அவன் தலைகவசம் அணிந்திருந்ததால் அவனின் சிரிப்பை அவள் கவனிக்கவில்லை.
அதனால் ‘உர்ராங்கோட்டான் இன்னொரு தடவை சாரி சொன்னால் குறைஞ்சா போயிடுவான்…போடா’ என காற்றிலே அவனை குத்துவது போல் சைகை செய்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.
உள்ளே வந்து கதவை சாற்றிவிட்டு அதில் சாய்ந்து நின்ற யாழினியின் மனமெல்லாம் உல்லாசத்தில் சிறகடித்து பறந்துக் கொண்டிருந்தது.
அதுவரை அவளது நெஞ்சை அழுத்திய பாரமெல்லாம் காற்றெடுத்த பஞ்சாய் பறந்துப்போயிருக்க,அவளின் முகம் அவன் நினைவில் மலர்ந்து விகசித்தது.
அவனின் மீதிருந்து வீசிய வாசனை ஏனோ இப்போதும் அவளின் நாசியை வருடிக்கொண்டே இருக்க,அவளின் சிந்தை கிறங்கிப்போனது.
அவள் மோகனப் புன்னகையில் விழி மூடி நின்றிருந்த சமயம் அவளின் அலைப்பேசி ஓசையெழுப்பியது.