“ஶ்ரீ ராம தூத மஹாதீர
ருத்ரவீர்ய சமுத்பவ
அஞ்சனா கற்ப சம்பூத
ஶ்ரீ வாயுப்புத்திர நமோஸ்துதே…!”
என்று ஆஞ்சநேயர் தூதியைப் பாடி எடுத்த காரியங்களில் வெற்றி பெற வேண்டும் என்று கண்மூடி வேண்டினாள் சஞ்சுயுக்தா.
சஞ்சுயுக்தா ஆஞ்சநேயரை தவிர வேறு எந்த கடவுளையும் கையெடுத்து வணங்கமாட்டாள்.ஏனெனில் அவள் வளர்ந்த இல்லத்தில் பிள்ளைகளின் மனதில் துணிச்சலையும் நம்பிக்கையையும் விதைக்க வேண்டி ஆஞ்சிநேயர் தூதியை தினந்தோறும் துதிக்க கற்று கொடுத்திருந்தார்கள்.அதையே சஞ்சுயுக்தாவும் கடைப்பிடித்திருந்தாள்.அப்படியாக ஆஞ்சநேயரை வணங்க ஆரம்பித்தவள் இன்று வரை அதை நிறுத்தாமல் தொடர்கிறாள்.
கடவுளை வணங்கிவிட்டு திரும்பியவள்,அங்கே தேன்மொழி கண்ணிரில் மிதக்கும் முகத்துடன் தலை தொங்க சோர்வுடன் இருப்பதை பார்த்து எரிச்சலுடன் “ஏன்டி…இப்படி எலி செத்த மாதிரி மூஞ்சியை வச்சிருக்கே…நான் போகும்போது இப்படி மூஞ்சியை வைச்சிருந்தால் போற காரியம் நல்லதா நடக்குமா…??எனக்கு எரிச்சலா வருது…இப்போ நீ அழுகையை நிறுத்து…இல்லை” குரலுயர்த்தி அவளை அதட்டினாள்.
அதில் பயந்து அவள் அழுகையை நிறுத்தி தன் தோழியின் கோப முகத்தை நிமிர்ந்துப்பார்த்தாள் தேன்மொழி.
அவளை பார்த்து “இதுக்கு மேலே நான் இங்கிருந்து போகும் வரை…நீ கண்ணீர் சிந்தினே…அதுக்கு அப்புறம் அறைஞ்சிருவேன்… புரியுதா…??” என்று விரல் நீட்டி எச்சரித்தாள் சஞ்சுயுக்தா.
தேன்மொழியும் அதைப் புரிந்து கொண்டு பயத்துடன் ‘இதற்கு மேல் அழுகவில்லை’ என்பது போல் தலையாட்டினாள்.
அவள் தலையில் செல்லமாக ஒரு கொட்டு வைத்துவிட்டு தனது பெட்டியில் துணிகளை அடுக்கினாள்.அதற்கு உதவியாக வந்த தேன்மொழியை “ச்சு” என்று வாய் மேல் விரல் வைத்து காண்பித்து பக்கத்தில் அமைதியாக அமருமாறு சைகைச் செய்தாள்.
அவள் சொல்படி எதுவும் பேசாமல் உதட்டை குவித்து வாய் மேல் விரல் வைத்து அமைதியாக இருந்தாள் தேன்மொழி.அதைச் சிரிப்புடன் பார்த்துவிட்டு வேக வேகமாக அனைத்து துணிகளையும் பெட்டியில் அடுக்கி,அதைப் பாதுகாப்பாக பூட்டி பெட்டியை எடுத்து கட்டிலுக்கு கீழே வைத்தாள்.
அத்தனை நேரம் அமைதியாக இருந்த தேன்மொழி…இப்போது வாய் மேல் இருந்து விரலை எடுக்காமல் “ஹூம்…ஹூம்…!!” என்றவாறு முனங்கினாள்.
சத்தம்கேட்டு “என்னடி…??” என்று வினவி புருவம் உயர்த்தினாள்.
தேன்மொழி வாய் மேல் இருந்த விரலைக் காண்பித்து ‘பேசக்கூடாதுனு சொன்னியே’ என்று சைகை செய்தாள்.
சஞ்சுயுக்தா அவளை முறைக்கவும் பட்டென்று தனது வாயிலிருந்த விரலை எடுத்துவிட்டு பதிலுக்கு அவளை முறைத்து “சஞ்சு நீ தான்டி பேசுகூடாதுனு சொன்னே…அதனால் தான் வாய் மேல் விரல் வைச்சு அமைதியா இருந்தேன்…!!” என்று குழந்தை போல் கூறவும்,
“ஏன்டி பக்கி…நான் உன்னை துணி அடுக்கும் போது தான் பேசக்கூடாதுனு சொன்னேன்…அதுக்கு அப்புறம் பேசக்கூடாதுனு சொன்னனா…??” என்று எரிச்சலுடன் வினவியவுடன்,
தேன்மொழி அவளை பாவம் போல் பார்த்து “போடி இப்போ இப்படி சொல்லுவே…ஆனால் நான் பேசியிருந்தால் உன்னை யாரு பேச சொன்னானு கேட்பே…இதெல்லாம் எனக்கு தேவையாடி…??” என்று சிணுங்கியவளை இன்னும் நன்றாக முறைத்த சஞ்சு “நீ முதல்ல விசயத்தைச் சொல்லு எனக்கு நேரமில்லை…??” என்றாள் பொறுமையிழந்து.
தேன்மொழி மனதில் ‘சரியான ஹிட்லர்…இவளையெல்லாம் ஒருத்தன் கல்யாணம் பண்ணிட்டு என்ன பாடுபடப் போறானோ…அவனுக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள்…!!’ என்று அந்த முகம் அறியாத ஜீவனுக்கு வருத்தப்பட்டுவிட்டு வெளியில் தேன்மொழி மலர்ந்த முகத்துடன் “சஞ்சு நேற்று உன் பாஸ்…” என்று ஆரம்பித்து யாதிஷ் கிருஷ்ணகுமார் தொலைக்காட்சியில் பேசிய விதத்தைப் பற்றி கூறியவள்,
“அவர் ரொம்ப ஸ்வீட்டான பெர்சன்டி…ஐ லைக் ஹீம்டி…நானும் உன்கூட வந்து…அந்த கம்பெனியில் ஜாயின் பண்ணி…அவரைக் கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறேன்…!!” என்று கண்ணில் கனவு மிதக்கக் கூறியவளை,
‘வெட்டவா குத்தவா…?’ என்பது போல் முறைத்த சஞ்சுயுக்தா “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா…??யாருனே தெரியாதவனைப் போய் கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுறே…??அவன் யாரோ எப்படி பட்டவனோ… நல்லவனா… கெட்டவனானே எதுவுமே தெரியலை…இந்த லட்சணத்தில் கல்யாணம் வரைக்கும் சீன் கொண்டு போயிட்டே…யூ இடியட்” என்று நன்றாக திட்டியவள் அவளின் வாடிய முகத்தை பார்த்து,
தனது கோபத்தைக் குறைத்து மென்மையாக “தேனு…டிவியில் பார்க்கறதை வைச்சு மட்டும் யாரையும் நம்பக் கூடாது…அதுவும் இந்த காலத்தில் சுத்தமா…நல்ல தெரிஞ்சவங்களைக் கூட நம்பக்கூடாது… அதனால் கவனமாக இரு…குறிப்பாக ஆண்களிடம்…புரியுதா…??” என்று கூறியவள் ஆண்களிடம் என்ற வார்த்தை மட்டும் அழுத்தி கூறி அவளுக்கு இலவசமாக அறிவுரை வழங்கினாள்.
தேன்மொழி முகத்தை சுருக்கி “ஏய் சஞ்சு…நான் ஜஸ்ட் ஒரு ஜாலிக்கு சொன்னேன்டி…இதை போய் சீரியசா எடுத்துக்கிட்டு அட்வைஸ் பண்ணறே…” என்று குறைப்படவும்,அதன்பிறகு தான் சஞ்சுயுக்தாவின் முகம் தெளிந்தது.
ஆனால் இவர்களின் பேச்சுக்கு சொந்தக்காரன் யாதிஷ் கிருஷ்ணகுமார்… அவனது அலுவலகத்தில் தனது மேனேஜரிடம் கத்திக் கொண்டிருந்தான்.
“என்ன பிரதீப்…??என்ன பண்ணிட்டு இருக்கீங்க…??இன்னும் இரண்டு நாளில் இந்த பிராஜக்ட்டை முடிக்கலை…உங்களையெல்லாம் வேலையை விட்டு தூக்கவும் தயங்கமாட்டேன்…!!” என்று உறுமியவனைப் பார்த்து பயந்த மேனேஜர்,
“சார்…சார்…பிளீஸ் சார்…!!” என்று பதறினார்.
யாதிஷ் புருவம் உயர்த்தி “என்ன சார் சார்…உங்களுக்கு இரண்டு நாள் தான் டைம்…அதுக்குள்ள வேலையை முடிக்கணும்…இல்லைனா நான் சொல்லுறது தான்…கண்டிப்பாக நடக்கும்.இது தான் என் இறுதி முடிவு…!!” என்று முடிவுடன் கூறிவிட்டு ‘நீங்க போகலாம் என்பது போல்’ தனது மேசையில் மேல் இருந்த கோப்பில் தனது பார்வையைத் திருப்பினான்.
வேறுவழியில்லாமல் மேனேஜர் அவனை பாவமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.
இதுதான் யாதிஷ் ‘டைம் இஸ் பிரஸியஸ்(time is precious) என்ற வார்த்தையில் அதீத நம்பிக்கை கொண்டவன்…இவையனைத்தும் காலம் அவனுக்கு கற்றுக்கொடுத்திருக்கும் பாடங்கள்…அதேசமயம் யாதிஷிற்கு ஒரு பணியை ஒருத்தரிடம் ஒப்படைத்தால்,அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் சரியாக முடித்து இருக்க வேண்டும் என விரும்புவான்.இல்லையென்றால் இவ்வாறு அதிரடியான முடிவை எடுத்து சிறிதும் தயவு தாட்சணைப் பார்க்காமல் சட்டென்று ஒரு முடிவை எடுத்துவிடுவான்.அதேபோல் தனக்கு துரோகம் செய்ய நினைப்பவர்களை விட்டு வைக்க நினைக்கமாட்டான்.
அப்படியாக ஒரு முறை தன் கம்பெனியின் ஒப்பந்த அறிக்கையை தன் உதவியாளர் திருடி,எதிராளியின் கம்பெனிக்கு விற்றுவிட்டான் என்பதற்காக… அவனை வேலையைவிட்டு நீக்கி,கையோடு அவனை சிறையில் தள்ளினான்.அத்தோடு நிறுத்தி கொள்ளாமல்,அவனுக்கு வேற எந்த இடத்திலும் வேலை கிடைக்காதது போல் பார்த்துக்கொண்டான்.அவனின் மனைவி வந்து…அவனின் காலில் விழுந்து கதறியதினால் பாவப்பட்டு அப்போதும் தனது கம்பெனியில் வேலைக்கொடுக்காமல் வேறு ஒரு கம்பெனியில் அவள் படிப்பிற்கு தகுந்த வேலை வாங்கிக்கொடுத்தான்.
இதுக்கூட அவனின் குழந்தைகள் மேல் ஏற்பட்ட பரிதாபத்தினாலே ஒழிய அவளின் மேல் இரக்கப்பட்டுயில்லை.ஆனால் அப்போதும் யாதிஷிற்கு துரோகம் இழைத்தவனை சிறையிலிருந்து வெளியெடுக்க விரும்பவில்லை.
யாதிஷ் வெளியில் தனது கம்பெனி வேலையாட்களை யாரிடமும் விட்டு கொடுக்கமாட்டான்.அவன் சொன்ன வேலையைச் சொன்ன நேரத்தில் முடித்துக் கொடுப்பவருக்கு ஊதிய உயர்வு தந்து மகிழ்ச்சிப் படுத்துவான்.அதேசமயம் முடித்து கொடுக்க முடியாதவர்களை தண்டிக்கவும் தயங்கமாட்டான்.
யாதிஷ் அப்படியே அவன் வீட்டில் கம்பெனியில் நடந்துகொள்வதற்கு நேர் எதிர்.யாதிஷ் கே.கே குரூப் ஆப் கம்பெனியின் இரண்டு வாரிசுகளில் ஒருவன்.மூத்தவன் அபிஷேக் கிருஷ்ணகுமாருக்கு திருமணமாகி 6 வயதில் மகன் இருக்கிறான்.இளையவன் யாதிஷிற்கு இப்போது தான் 28 வயது நடக்கின்றது திருமணமாகவில்லை.
அவனுடைய தாய் பரிமளம்.மிகவும் அன்பானவர்.பிள்ளைகளின் மேல் மிகுந்த அக்கறைக் கொண்டவர்.ஆனால் யாதிஷைக் காட்டிலும் ஒரு படி அதிகமான அன்பை அபிஷேக்கின் மேல் வைத்துள்ளார்.அதாவது அபிஷேக்கா யாதிஷா என்ற ஒரு நிலை வந்தால் அவர் அபிஷேக்கின் பக்கம் மட்டுமே நிற்பார்.ஒரு முழுமையான தாய்ப்பாசம் யாதிஷிற்கு கிடைக்கவில்லை என்றே கூறவேண்டும்.அவன் மனதில் தன் தாயின் முழுமையான பாசத்திற்காக ஏங்கினான்.அதற்காக அண்ணன் மேல் பொறாமை என்று கூறமுடியாது.அவரின் அன்பு தனக்கும் தன் அண்ணனுக்கும் சரிவிகிதத்தில் கிடைக்க வேண்டும் என்று எண்ணினான்.
அபிஷேக்கிற்கு சிறு வயதிலிருந்தே பொறுப்பு என்பது துளிக்கூட இருந்ததில்லை.அவனுக்கு பணத்தை எடுத்து செலவு செய்ய மட்டுமே தெரியும்.பணத்தை சேமிக்க தெரியாது.அதற்கெல்லாம் காரணம் அவனது தாய் அபிஷேக்கிற்கு கொடுக்கும் செல்லம் தான் அவனை தீய வழிக்கு இட்டுச்செல்லுகிறது.யாதிஷ் தனது இருபதாவது வயதில் தன் தந்தையைப் பறிக்கொடுத்த கையோடு தன் படிப்பையும் கம்பெனியின் பொறுப்பையும் ஒரு சேர வழிநடத்தி சென்றான்.
இடையில் ஒரு இரண்டு வருடம் வெளிநாட்டிற்கு சென்று தனது படிப்பைப் முடிக்க எண்ணியவன் தனது அண்ணனின் கையில் கம்பெனியை ஒப்படைத்துவிட்டு தன் படிப்பை எதிர் நோக்கி வெளிநாட்டிற்கு சென்றான் யாதிஷ்.
இரண்டு வருடம் தன் படிப்பை முடித்து வந்து பார்த்தவன் அதிர்ந்தான். அதற்கு காரணம் கம்பெனி நட்டத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அத்தோடு கம்பெனியில் வேலை செய்தவர்கள் பலபேர் அந்த வேலையைவிட்டு சென்றிருந்தனர்.இதையெல்லாம் அறிந்து இதற்கெல்லாம் காரணம் தன் அண்ணன் என்று அறிந்து அவனின் மீது கோபமாக வந்தது.இருந்தும் தன் அன்னையின் முகத்திற்காக பொறுப்பை தன் கையில் எடுத்து,4 வருட கடுமையான உழைப்பிற்கு பிறகு இந்த நிலையை அடைந்திருக்கிறான்.
சொன்ன நேரத்திற்கு ஒப்பந்தத்தைச் செய்து முடித்ததினால் தான்.இத்தகைய நிலையை வெகுவிரைவில் அடைய முடிந்தது என்பதையும்,அவனிற்கு நிறைய ஒப்பந்தங்கள் குவிய ஆரம்பித்தற்கு காரணம் ‘நேரம் காத்தல்’ என்று முழுமையாக நம்பினான்.அதனால் தான் யாதிஷ் தனது வேலையாட்களிடம் நேரம் காலத்தை சரியாக பின்பற்றுமாறு வலியுறுத்தினான்.
அதை பின்பற்றாதவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்கினான். அதற்கு காரணம் இதுபோல் மறுபடியும் இந்த தவறு ஏற்படாமல் இருக்கவே அவன் அளிக்கும் கடுமையான தண்டனைக்கு காரணம்.ஆனால் அதற்கு சரியான காரணங்கள் இருந்தால் மன்னித்துவிட்டுவிடுவான்.
சஞ்சுயுக்தா தான் கிளம்பும்போது கதறியழுத தேன்மொழியை ஒருவழியாக சமாளித்து தன் பெட்டியை எடுத்து கொண்டு கோயம்புத்தூரிலிருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸில் ஏறினாள்.
8 மணி நேரம் பயணத்தின் காரணமாக பொழுது போகாமல்…தனது கையோடு எடுத்து வந்திருந்த ராஜேஷ்குமாரின் கிரைம் நாவலைப் படிக்க ஆரம்பித்தாள்.
ஆர்வமாக படித்து கொண்டிருந்தவளுக்கு ஏதோ உள்ளுணர்வு உறுத்த நிமிர்ந்து பார்த்தவள் ஒரு பெரியவர் தன்னையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருக்கவும் ‘யாரிவர் என்னையே பார்த்துக்கொண்டு இருக்கார்…அவரைப் பார்த்தால் தப்பானவர் போல் தெரியலையே…!!’ என்று புருவம் சுருக்கி யோசித்தாள் சஞ்சுயுக்தா.
நெடுஞ்செழியன் மகிழா மயங்கி விழுந்தவுடன் அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினான்.
அதில் கண்விழித்த மகிழா செழியனின் முகம் மிகஅருகில் தெரியவும்,அத்தோடு அவனின் முகத்திலிருந்த பெரிய மீசையைப் பார்த்தவள் பயத்துடன் மிரண்டு மறுபடியும் மயங்கி சரிந்தாள்.
அதைக்கவனித்த செழியனின் முகத்தில் புன்னகை அரும்பியது.அவனின் புன்னகைக்கு அதுமட்டும் காரணமில்லை மகிழா இப்போது வேண்டுமென்றே மயங்கி விழுந்தது போல் நடித்து கொண்டிருந்தாள்.அதை அறிந்தவனின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.
அதை எப்படி செழியன் கண்டுப்பிடித்தான் என்றால் இத்தனை வருடங்கள் குற்றவாளிகளின் முகத்தை வைத்தே அவர்களின் எண்ணப்போக்கை கணித்தவனால் மகிழாவைக் கணிக்க முடியாதா என்ன…??
இமைகளுக்குள் ஓடி கொண்டிருந்த கருவிழிகள் அவளின் போலிதன்னத்தைக் காட்டிக்கொடுத்தத்திருந்தது.ஏனோ அவளின் கள்ளத்தனம் கோபத்தை விளைவிப்பதற்கு பதில் அவளை பிடிக்கும் படி செய்தது.அதற்காக தவறான எந்த எண்ணமும் இல்லை.அவளின் வித்தியாசமான நடவடிக்கைகளைப் பார்த்து அதுவும் அவளின் குழந்தை தனமான அந்த செயலை மிகவும் ரசித்தான் அவ்வளவே…!
அதைத் தாண்டி வேற எந்த எண்ணமும் இல்லை…அவன் மனதில்…!!
அவளை சீண்ட எண்ணிய செழியன் சிரிப்புடன் “சரி…இந்த பொண்ணு கண்ணு முழிப்பதுபோல் இல்லை…வேறவழியில்லை இந்த பொண்ணை இங்கிருந்து தூக்கிட்டு தான் போகணும்…” என்று அவனுக்குள் முணுமுணுப்பது போல் அவளின் காதில் விழுவது போல் சற்று உரக்கவே கூறினான்.
அதைக்கேட்ட மகிழா ‘எங்கு அவன் தன்னை தூக்கிவிடுவனோ’ என்று பதறியடித்து எழுந்து கைகளைப் பிசைந்து அவனைப் பயத்துடன் பார்த்து அறியாத குழந்தைப்போல் மலங்க மலங்க விழித்தாள்.
அவனும் சிரிப்புடன் எழுந்தவாறு “என்னங்க மயக்கம் போயிடுச்சா…??” என்று புருவம் உயர்த்தி குறும்புடன் வினவினான்.
அவன் என்னவோ மென்மையாக தான் பேசினான்.ஆனால் அவளுக்கு அந்த குரலே ஒரு சிங்கத்தின் கர்ஜனையாய் தோன்றி உள்ளுக்குள் குளிரை ஏற்படுத்தி தேகம் தூக்கிவாரிப் போட்டது.
முகம் பயத்தில் வியர்த்து வழிய அவள் எந்த பதிலும் கூறாமல் எச்சில் கூட்டி இமைகள் படப்படத்து விழித்து கொண்டிருந்தாள்.
அதைக்கண்ட செழியனின் முகத்தில் இப்போது புன்னகை மறைந்து ஒரு கடுமைக் குடிக்கொண்டது.
அவன் மனதில் ‘என்ன இது இந்த பொண்ணு எதற்கெடுத்தாலும் பயப்படுது…அதுவும் நான் சத்தமாக கூட பேசலையே…தன்மையாக தானே பேசினேன்…அதற்கும் பதில் சொல்லாமல் அப்படியே நிற்குது…சரியான திமிர் பிடிச்சவள் போல’ என்று நினைத்து எரிச்சலடைந்திருந்தான்.
அவனுக்கு மகிழா சிறு பூச்சியைக் கண்டாலே அச்சப்படுவாள் என்று தெரியாது என்பதினால் அவளைப் பற்றி தவறாக கணித்தான்.
தன் தோளை உயர்த்தி உடையை சரிச்செய்தவாறு “உன் பெயர் என்ன…??” என்று கடுமையாக வினவினான்.இப்போது குரலில் ஒரு கடுமைக் குடிவந்திருந்தது.
அவள் மறுபடியும் எதுவும் சொல்லாமல் நடுக்கத்துடன் இருக்கவும்,செழியன் அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தப்படி தன் குரலை இன்னும் உயர்த்தினான்.
“உன்னை தானே கேட்கிறேன்…உன் பெயர் என்ன…??” என்று கிட்டதட்ட கர்ஜித்தான்.
அவ்வளவு தான் மகிழாவின் கண்ணில் கண்ணீர் மடை திறந்த வெள்ளமென உடைப்பெடுத்து கொண்டு வழிந்தது.அதைப்பார்த்த செழியனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.அவனுக்கு பார்ப்பவர்கள் தன்னை பற்றி தவறாக நினைப்பார்கள் என்று சற்று எரிச்சலாக இருந்தது.அவனுக்கு சத்தியமாக புரியவில்லை…அவளிடம் எப்படி பேசுவது என்று…!!
ஏனெனில் தன்மையாக பேசினாலும் அவளிடம் பதிலில்லை.சற்று மிரட்டிலாக பேசினாலும் பதில் இல்லை.அவளை தனியாகவும் விட்டு செல்லமுடியாமல் அங்கிருக்கவும் முடியாமல் தன் நிலையைப் பார்த்து நொந்துக் கொண்டு சுற்றும் முற்றும் தனது கூர் பார்வையைச் செலுத்தினான்.
அனைவரின் பார்வையும் அவனை ஒரு குற்றம் சாட்டும் பார்வைப் பார்த்துக்கொண்டிருந்தது.செழியன் அவளிடம் கடுமையாக பேசி அவளை அழ வைப்பது போல் அவளை பரிதாபமாகவும் அவனை கோபமாகவும் பார்த்து கொண்டிருந்தனர்.அதைக்கண்ட செழியனுக்கு அந்த பெயர் தெரியாத பெண்ணான மகிழாவைப் பார்த்து எரிச்சலாக இருந்தது.
அவளை கோபத்தோடு திட்டுவதற்கு வாய் திறக்க போக,ஒரு கார் தன் அருகில் வந்து நிற்கும் ஓசை கேட்டு பார்வையை காரை நோக்கி செலுத்தினான்.
அதிலிருந்து ஒருவன் பயத்துடன் தன்னை நோக்கி ஓடி வருவதைப் பார்த்து “என்ன வேணும்…??” என்று புருவம் உயர்த்தி கடுமையாக வினவினான்.
அவனும் செழியனின் தோற்றத்தைக் கண்டு பயத்துடன் கைக்கட்டி நின்று “சின்னம்மாவைக் கூட்டிட்டு போகலாம்னு வந்தேன் ஐயா…வரும் வழியில் டயரு பஞ்சராகிடுச்சு…அதைச் சரி பண்ணி வருவதற்கு தாமதமாகிடுச்சு மன்னிச்சக்கிடுங்க…!!” என்ற தகவலைக் கூறி மன்னிப்பை வேண்டியவன்,
அங்கே அழுதுக்கொண்டிருக்கும் தன் சின்னம்மாவை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு செழியனிடம் “ஐயா…!!அம்மா குழந்தை மாதிரி…அவங்க ஏதாவது தப்பு செய்திருந்தால் அவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்…அவங்களை எதுவும் சொல்லாதீங்க ஐயா…!!” என்று கையெடுத்து கும்பிட்டவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் மகிழாவை நோக்கி தன் பார்வையைச் செலுத்திக்கொண்டே,
“உங்க சின்னம்மாவும் எந்த தப்பும் செய்யவில்லை…நானும் அவங்களை எதுவும் சொல்லவில்லை…உன் பெயர் என்ன என்று கேட்டதற்கு இத்தனை ஆர்பாட்டம்…சரி சரி நீ இவங்களை கூட்டிட்டு போ…!!” என்று கூறிவிட்டு கம்பீரத்துடன் நடந்து ஒரு ஆட்டோ பிடித்து அதில் ஏறி சென்றுவிட்டான்.
இருந்தும் செல்வதற்கு முன் அவனிடம் மகிழா வீட்டு தொலைப்பேசி எண்ணை வாங்கி செல்லவும் தவறவில்லை அந்த கடமைத்தவறாத காவலன்.
அவன் சென்றபிறகு மகிழாவிடம் அந்த ஓட்டுனர் “என்னை மன்னிச்சிடுங்க சின்னம்மா…என்னால் தான் இதெல்லாம் நடந்தது… நீங்க அழாதீங்க…இப்படி நடக்கும்னு நான் நினைக்கவேயில்லை… என்னை மன்னிச்சீடுங்க…ஐயாவிடம் மட்டும் இதை சொல்லிடாதீங்க…அவர் என்னை வேலையை விட்டு தூக்கிடுவார் சின்னம்மா…அதன்பிறகு என் குடும்பம் புள்ளகுட்டியெல்லாம் நடு தெருவில் தான் நிற்கணும் …!!” என்று கெஞ்சியவனைப் பார்த்த மகிழா தனது அழுகையினை நிறுத்திவிட்டு,
“அண்ணா கவலைப்படாதீங்க…கண்டிப்பாக அப்பாவிடம் சொல்லமாட்டேன்…சரி வாங்க போகலாம்…அம்மா நம்மை காணும்னு வீட்டில் தேடிட்டு இருப்பாங்க…!!” என்று கரகரப்பான குரலில் கூறி காரை நோக்கி சென்றவளிடம் “நன்றி சின்னம்மா” என்று கூறினான்.
அதற்கு அவள் சிறுபுன்னகை ஒன்றை மட்டுமே பதிலாக தந்தாள்.
கார் ஓட்டுனருக்கு இவ்வளவு நேரம் பயந்து அழுதுக்கொண்டிருந்த நம் சின்னம்மா இது தானா என்ற சந்தேகம் எழுந்தது.அதற்கு காரணம் இவ்வளவு நேரம் செழியனைப் பார்த்து பயந்து நடுங்கி அழுது சிவந்த முகத்துடன் இருந்த மகிழா அவன் சென்றவுடன் கொஞ்சம் பயம் நீங்கி முகம் தெளிந்திருந்தாள்.அதன்பிறகு கார் ஓட்டுனர் அவளிடம் மன்னிப்பு வேண்டியவுடன் அவள் முகம் அவரின் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்காக இரக்கப்பட்டு தன் தந்தையிடம் கூறவில்லை என்று ஒப்புதல் அளித்து புன்னகைத்தவுடன் அவள் முகமே ஒளிப்பெற்றது போல் பழைய பிரகாசத்திற்கு மீண்டுயிருந்தது.
இதுதான் மகிழா எந்த ஒரு பிரச்சினையையும் உடனுக்குடன் மறந்துவிடுவாள்.ஆனால் அவள் நெருங்கி பழகியவருடன் மட்டும் நீண்ட நேரம் கோபத்துடன் இருப்பாள்.முழுமையாக கூற வேண்டுமென்றால் கோபம் இருப்பது போல் காட்டிக் கொள்வாள்.தனது தந்தை மற்றவரை தண்டிக்கும்போது கூட அவர்களுக்காக பேசி மன்னிப்பு வழங்குமாறு வேண்டி கொள்வாள்.அத்தனை கனிந்த மனம் படைத்தவள் மகிழா…!!
அங்கிருந்து சென்ற செழியன் மனதில் மகிழாவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.பாவம் உலகம் அறியாத பொண்ணாக இருக்கிறாள்.எப்படி இந்த பெண் ஒருவரை திருமணம் செய்து அச்சமின்றி வாழ்க்கையை எப்படி நடத்தும் என்று யோசித்துக்கொண்டே அவளின் வீட்டு எண்ணிற்கு தொடர்பு கொண்டான்.
அவளின் வாழ்க்கையைப் பற்றிய அக்கறை தனக்கு எதுக்கு என்று அந்நொடி அவன் சிந்திக்கவில்லை.
ஆனால் மகிழாவின் வீட்டு எண்ணிற்கு அழைத்து பேசியவனுக்கு எதற்காக பேசினோம் என்பது போலான எரிச்சல் வந்தது.அதற்கு முக்கியக்காரணம் அந்தப்பக்கம் பேசியவரின் பேச்சு சற்று எல்லை மீறி இருந்தது,அவனது ஆணவத்தை சீண்டியிருந்தது.
அவ்விடத்தில் பேசியவன் மட்டும் இப்பொழுது இவனின் கண்முன்னால் இருந்தால் அடித்து நொறுக்கும் ஆத்திரத்தில் இருந்தான் செழியன்.
ஏனெனில் எதிரில் பேசியவர்களின் பேச்சு அவனின் காதில் ஈயத்தைக் காய்ச்சு ஊற்றியதைப் போல் இருந்தது.
அதைக்கேட்டவனின் கோபம் முழுவதும் அதற்கு காரணமானவளின் மீது திரும்பியது.
அவளை நினைத்து பல்லைக் கடித்தான்.
அதற்கு காரணம் இவர்கள் இருவரும் சாலையில் நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த மகிழாவின் சிறிய தந்தை நேரே தனது தமையனின் வீட்டிற்கு சென்று மகிழாவின் வருகைக்காக வேண்டி வேட்டையாடும் புலியின் வெறியோடு காத்திருந்தார்.
அவள் காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் நுழைந்தவுடன் செவிப்பறை கிழியும் வகையில் அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தார்.இதை சற்றும் எதிர்ப்பார்க்காத மகிழா அவர் அறைந்ததில் வீட்டின் ஒரு மூலையில் போய் விழுந்தாள்.
எதற்கு என்றே அறியாத அந்த வளர்ந்த குழந்தை வலியில் “அம்மாஆஆஆ…” என்று வீடு அதிரும் படி அலறினாள்.
அவளின் அலறலைக் கேட்டு பதறி துடித்து வெளியே ஓடி வந்த அவளைப் பெற்ற தாய் பானுமதி அவளைப் பிடித்து தூக்கி தன் அணைப்பில் நிறுத்தி கொளுந்தனைப் பார்த்து முறைத்து “அவளை எதுக்கு தம்பி அடிச்சீங்க…??” என்று கோபத்துடன் வினவினார்.
அவளின் சித்தப்பா சுந்தரம் கோபத்துடன் “உங்க பொண்ணு என்ன காரியம் பண்ணியிருக்கானு தெரியுமா…??ரோட்டில் ஒரு போலீஸ் நாய் கூட தனியாக நின்னு கொஞ்சிட்டு இருக்கா….?இதுமட்டும் நம்ப சாதி சனத்துக்கு தெரிந்தால் நம்மோட மானம் மரியாதை என்னவாகியிருக்கும்…அண்ணனால் இதை தாங்குமுடியுமா…??கோபத்தில் இந்த சிறுக்கியை வெட்டிப் போட்டிருவார்…!!” வன்மத்துடன் இடியாய் முழங்கவும்,
பானுமதி தன் மகளைத் திரும்பி ஒரு பார்வைப் பார்த்தார்.அந்த பார்வை அவர் சொல்லவதெல்லாம் உண்மையா என்று கேட்க,
அதற்கு மகிழா விம்மலுடன் “இல்லை” என்பது போல் கண்ணீருடன் தலையாட்டினாள்.
அவள் இல்லை என்று தலையாட்டியவுடன் ஆத்திரம் தலைக்கேற “ஏய்…எதற்கு பொய் சொல்லுறே…உண்மையைச் சொல்லுடி…!!” என்று அவளை அடிக்க கை ஓங்கிக் கொண்டு வந்தவரை தடுத்த பானுமதி துணிச்சலுடன் நேர்ப்பார்வை பார்த்து,
“என் பொண்ணு…அப்படி பட்ட பொண்ணு இல்லை தம்பி…என் பொண்ணைப் பற்றி எனக்கு தெரியும்…??இதுக்கு மேல் அவளைப் பத்தி எதுவும் பேசவேண்டாம்” என்று கூறியவுடன் சுந்தரத்திற்கு முகம் கறுத்து சிறுத்தது.
இருந்தும் விடாமல் “அண்ணி அவள் பொய் சொல்லுறா…நான் என் இரண்டு கண்ணாலே பார்த்தேன்…அவள் ஒருத்தனிடம் காலேஜிற்கு வெளியே நின்னு கட்டிப்பிடிகாத குறையாக பேசிட்டு இருந்தாள்…அதுவும் ஒரு போலீஸ்காரனுடன்…!!” முகத்தை அருவருப்போடு வைத்து அடுத்த அஸ்திரத்தை வீசினார்.
மகிழாவின் பயத்தைப் பற்றி அறிந்தவர் அதுவும் போலீஸ் என்றவுடன் அவரை நம்பாமல் ஒரு மாதிரி சந்தேகத்துடன் பார்த்தார்.
ஏனெனில் அவர் பொய் சொல்லக்கூடியவர் தான்.அவருக்கு இந்த வீட்டின் மீதும் அவர்களது சொத்தின் மேல் ஒரு ஆசை இருந்தது.அவருக்கு திருமணம் செய்து வைத்து,அவருக்கு சேரவேண்டிய சொத்தைச் சரிசமமாக பங்கிட்டு கொடுத்தார் மகிழாவின் தந்தை பிரபாகரன்.ஆனால் அவரின் சூதாட்டப் பழக்கத்தினால் அவரின் பாதிக்கும் மேல் சொத்து அதில் கரைந்துவிட்டது. அதனால் அவரின் பார்வை முழுவதும் மகிழா வீட்டு சொத்தின் மீது திரும்பியது.அதற்காக அந்த வீட்டின் வாரிசான மகிழாவின் மீது எப்போதும் ஒரு குறையைக் கூறிக்கொண்டே இருப்பார்.அதனால் தான் பானுமதி அவரின் பேச்சை ஏற்கவில்லை.
அதில் எரிச்சலடைந்த சுந்தரம் ‘என்ன செய்வது’ என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரம் பார்த்து அவ்வீட்டின் தொலைப்பேசி அலறியது.பானுமதி மகளைச் சமாதானம் செய்துக் கொண்டிருந்ததால் அவர் அந்த அழைப்பை ஏற்காமல் மகளுக்கு அணைப்பாக நின்றிருந்தார்.வேறுவழியின்றி சுந்தரம் அந்த அழைப்பை எடுத்து பேசினார்.
“நான் நெடுஞ்செழியன்…ஈரோடு காவல் நிலையத்திலிருந்து பேசுகிறேன்…!!” என்றவுடன் சுந்தரத்திற்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல் எக்களிப்பாக இருந்தது.
உடனே தொலைப்பேசியின் வாயை கையால் மூடி தன் அண்ணியை அருகில் அழைத்து “நான் சொன்னதை நம்பமாட்டான்னு சொன்னீங்க தானே…இப்போ பாருங்க அவனே பேசுறான்” என்று கிசுகிசுப்புடன் கூறிவிட்டு பேசியில் அவனிடம் பேசினார்.
“அதுக்கு என்ன இப்போ…??” என்று திமிராக கேட்டார்.
இங்கே மகிழாவுக்கு தான் கைக்கால் எல்லாம் உதற ஆரம்பித்தது.
செழியன் எரிச்சலை உள்ளடக்கிய குரலில் “சார்…கொஞ்சம் மரியாதை கொடுத்து பேசுனீங்கானா நல்லா இருக்கும்…உங்க வீட்டு பொண்ணு வீட்டுக்கு வந்துட்டாங்களா…?அதுமட்டும் சொல்லுங்க…??” என்று தன்மையாகவே கேள்வி கேட்டான்.
அதற்கு அவர் “எங்க வீட்டு பொண்ணு மேலே உனக்கு என்னடா அக்கறை…?நல்லா வசதியான பொண்ணை பார்த்திடக் கூடாதே…உடனே அவங்க பின்னாடியே நாக்கைத் தூங்கப் போட்டுகிட்டு அலைஞ்சு திரிஞ்சு…அவங்களைக் கல்யாணம் பண்ணிட்டு சொத்தை அபகரிக்கலாம்னு நினைக்கறது…இதெல்லாம் என்ன பொழைப்போ…??பொறுக்கி” என்று சலிப்பது போல் அவனை வார்த்தையால் கடித்து குதறினார்.
அதைக்கேட்டவனின் கோபம் சரியான விதத்தில் சீண்டி விடப்பட கோபத்தில் கண்கள் சிவக்க “டேய்…என்ன பத்தி என்னாடா நினைச்சிட்டு இருக்கே… தைரியம் இருந்தால் நேரில் வந்து பேசுடா…ஏதோ போனால் போகட்டும்னு தன்மையாக பேசினால்…நீ ரொம்ப தான் துள்ளுறே… உன்னை ஸ்டேஷனில் வைச்சு…முட்டிக்கு முட்டி தட்டறானா… இல்லையானு பாரு…!!” என்று கர்ஜித்தவனின் குரல் பக்கத்தில் இருக்கும் பானுமதிக்கே கேட்டு நெஞ்சில் குளிர் பரவியது என்றால் சுந்தரத்திற்கு சொல்லவே வேணாம் கைக்கால் எல்லாம் பயத்தில் உதற ஆரம்பித்துவிட்டது.
இந்தப்பக்கம் செழியன் அத்தோடு விடாமல் வேட்டையாடும் சிங்கத்தின் ஆவேசத்துடன் “இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோ…எனக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தால் அது…உங்க வீட்டு பொண்ணுக் கூட தான்…நீ என்ன பண்ணுவியோ பண்ணு…ராஸ்கல்” என்று கர்ஜித்து கைப்பேசியை அணைத்தான்.
அவன் கூறியது உண்மையாகப் போவது தெரியாமல் செழியன் வாயை விட்டிருந்தான்.