மலர்கள் 1

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாநகரத்தின் ஒரு குறுகலான விதியில் ஆட்கள் அங்கும் இங்கும் நடந்தவாறும் இரு சக்கர வாகனங்களிலும் பயணித்து கொண்டும் இருந்தனர்.ஆனால் மதிய வேளையின் காரணமாக அந்த வீதியில் குறைவான ஆட்களின் நடமாட்டம் மட்டுமே இருந்தது.

அப்போது இரு சக்கர வாகனத்தில் தலை கவசம் அணிந்து வந்து கொண்டிருந்த இருவர் நடந்தப்படி சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணியின் கழுத்திலிருந்த தங்க சங்கலியை வேகமாக இழுத்து பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் வண்டியில் பறந்தனர்.

அந்த பெண் வலியில் துடித்தவாறு “என் தாலி…என் தாலி…கொடுங்கடா…” என்று தெருவெங்கும் அதிரும்படி அலறி,அந்த வண்டியை துரத்தி கொண்டே ஓடினாள்.

அங்கு இருக்கும் மக்கள் அனைவரும் என்ன முயன்றும் திருடர்களை தடுக்க முடியாமல் போகவே வண்டியின் பின்னால் ஓடி துரத்தி கலைத்தனர். 

யாரும் தங்களைப் பிடிக்காத எக்களிப்பில் தனது தலையில் இருந்த கவசத்தைக் கழட்டியவாறு தங்களைத் துரத்தி ஓய்ந்தவர்களைக் கண்டு எகத்தாளமாக சிரித்துவிட்டு முன்னால் திரும்பினார்கள் இருவரும்.

மகிழ்ச்சியில் மிதந்துக் கொண்டிருந்த திருடர்கள் தீடிரென்று தடுமாறி கீழே விழுந்தனர்.அதற்கு காரணம் அவர்களின் கண்களில் மிளகாய் பொடி தூவி அவர்களை கீழே விழச் செய்திருந்தாள் ஒரு இளம் பெண்.

அவர்களைக் கீழே விழச் செய்த கையோடு அந்த தாலி சங்கலியை அவர்களிடமிருந்து பறித்து கம்பீரமான நடையுடன்…சங்கிலியைப் பறிக்கொடுத்த பெண்ணைப் பார்த்து நடந்தாள்.

அவள் கோதுமை நிறம்…களையான முகம்…உடற்பயிற்சியின் மூலம் விளைந்த கச்சிதமான உடலமைப்பு…மெல்லிய இடை…முழு நீளப் பாவாடை மற்றும் மேல் சட்டை அணிந்து…நேர்கொண்ட பார்வையுடன்…நிமிர்ந்த நன்னடையுடன்…பாரதி எடுத்துரைத்த புதுமைப்பெண்…இன்றைய நவநாகரிக மங்கையாக இருந்தால் எவ்வாறு இருக்குமோ…அந்த வார்த்தைக்கான மொத்த உருவத்தின் மறுப்பெயர் சஞ்சுயுக்தா.

சஞ்சுயுக்தாவை அங்கிருந்த அனைவரும்…ஏதோ அதிசயப் பிறவியைப் பார்ப்பது போல் விழி விரித்து பார்த்து கொண்டிருந்தனர்.

அந்த பெண்மணியை அடைந்த சம்யுக்தா கோபமான குரலில் “இந்தாங்க பிடிங்க…” என்று அவர் கையில் அந்த நகையைத் திணித்து விட்டு சுற்றியிருக்கும் அனைவரின் மீது ஒரு கனல் பார்வை வீசி,

“உங்களுக்கெல்லாம் தனியாச் சொல்லணுமா…அவங்க இரண்டு பேரையும் பிடித்து வைத்து…போலீஸ்க்கு போன் பண்ணுங்க…இதைக்கூட நான் சொன்ன தான் செய்வீங்களா…?இர் ரெஸ்பனஸிபிள் பீப்பிள்…!!” என்று அவர்களிடம் பொறிந்தவள்,

அங்கு அழுதுக்கொண்டிருந்த அந்த பெண்மணியைப் பார்த்து எரிச்சலுடன் “நீங்க எதுக்கு இவ்வளவு நகைக்களைப் போட்டு வெளியே வரீங்க…??அவங்களுக்கு நீங்களே திருடுவதற்கு சான்ஸ் கொடுக்க வேண்டியது…தென் போச்சே போச்சேனு அழ வேண்டியது…உங்களை மாதிரி ஆட்களால் தான்…இந்த மாதிரி திருடர்கள் உருவாகறாங்க…உங்களை திருத்தினால் தான் நாடு உருப்படும்…” என்று படபடவென பேசியவள்…

அவர்களின் கழுத்தில் இரத்தம் கசிவதைப் பார்த்து “இவங்களை யாராவது டாக்டரிடம் கூட்டிட்டு போங்க” என்று அக்கறையுடன் கூறிவிட்டு தன் வேலை முடிந்தது போல் அவள் போக்கில் நடந்து சென்றுவிட்டாள்.

எல்லோருக்கும் ஏதோ புயலடித்து ஓய்ந்தது போல் இருந்தது…அந்த பெண்மணி ‘இவள் நல்லவளா…கெட்டவளா’ என்ற வகையில் தன் வலியை மறந்து அவளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.

இதுதான் சஞ்சுயுக்தா…எல்லோருக்கும் உதவி செய்வாள்.ஆனால் இது தப்பு என்று தெரிந்தால் முகத்திற்கு நேராகவே வயதில் சின்னவர்கள் பெரியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமலே பட்டென்று உடைத்து பேசிவிடுவாள்.

சிறு வயதிலிருந்தே ஒரு அனாதை இல்லத்தில் வளர்ந்த சஞ்சுயுக்தா…இயல்பிலேயே தைரியமான பெண்…நினைத்ததை நினைத்தப்படி முடிப்பவள்…தனக்கு சரியென்று தோன்றுவதை மட்டும் தான் செய்வாள்…அதேசமயம் தப்பென்று தெரிந்தால் கண்டிக்கவும் தயங்கமாட்டாள்.அதனால் இவளைக் கண்டாலே இல்லத்தில் அனைவரும் பதறியடித்து ஓடிவிடுவர்கள்.

ஆனால் இவளும் ஒருத்தரின் வார்த்தைக்கு கட்டுப்படுவாள் என்றால் அது அவள் வளர்ந்த அந்த இல்லத்தின் தலைவி கோசலைக்கு மட்டும் தான்.

கோசலை இயல்பிலேயே அமைதியான குணம் கொண்டவர்.அந்த இல்லத்தில் வளரும் அனைத்து குழந்தைகளையும் தன் குழந்தைப்போல் பாவித்து அன்பு செலுத்தி வளர்த்து வந்தார்.அதனாலேயே சஞ்சுயுக்தாவிற்கு அவர் மேல் ஒரு தாயைப் போன்ற பாசம் உருவாகியிருந்தது.

அந்த இல்லத்தைவிட்டு வெளியே வந்து 2 வருடமானாலும் எவ்வளவு வேலையிருந்தாலும் தினமும் ஒரு முறையாவது அவரிடம் கைப்பேசியில் பேசிவிடுவாள்.

சஞ்சுயுக்தாவிற்கு நிரந்திர வேலை என்பதே கிடையாது.அவளின் இத்தகைய அதிரடி குணத்தினலே ஒரு வேலையில் தொடர்ந்து நீடித்ததுயில்லை. இப்பொழுது கூட இரண்டு நாள் கழித்து,ஒரு விளம்பர கம்பெனிக்கு நேர்முகத்தேர்விற்காக செல்கிறாள்.

சஞ்சுயுக்தா அந்த விபத்து நடந்த இடத்திலிருந்து நேராக சென்றது,அவள் தங்கியிருக்கும் மகளிர் விடுதி.அவள் அறைக்கு சென்றவள் கோபத்தில் தன் கைப்பையை கட்டிலின் மேல் விசிறியடித்தாள்.

“எல்லாருக்கும் கொஞ்சம் கூட அறிவேயில்லை…ஒரு திருடனைப் பிடிக்கமுடியலை…இவங்கயெல்லாம்…நாளைக்கு குடும்பத்திற்கு… இந்த மாதிரி பிரச்சனை வந்தால் என்ன செய்வாங்களோ?பொறுப்பே இல்லாத மனிதர்கள்” என்று அனைவரையும் மனதினுள் வறுத்தெடுத்தாள்.

எல்லோரையும் மனதார இரவு உணவு வேளை வரை திட்டி தீர்த்தவள் பசியெடுக்க உணவருந்துவதற்காக விடுதியின் உணவு கூடத்திற்கு சென்றாள்.

அவள் அந்த கூடத்திற்குள் நுழைந்தவுடன் அங்கிருக்கும் பெண்கள் இவளைப் பார்த்து பயந்து தலைக்குனிந்துக்கொண்டனர்.அதைக் கண்ட சஞ்சுயுக்தா நமுட்டு சிரிப்புடன் தனக்கான சாப்பாட்டை எடுத்துக்கொண்டு யாரும் உட்கார்ந்திராத காலி மேசையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

அதுவரை அங்கிருந்த தொலைக்காட்சியில் சினிமா பாடலை அலறவிட்டு கொண்டிருந்தவர்கள் இவள் வந்தவுடன் பி.பி.ஓ செய்தி அலைவரிசைக்கு மாற்றினார்கள்.

சஞ்சுயுக்தா எதையும் கண்டுக்கொள்ளாமல் செய்தியைப் பார்த்து கொண்டிருந்தாள்.அவளின் அருகில் வந்து அமர்ந்தாள் தேன்மொழி.

தேன்மொழி மட்டுமே சஞ்சுயுக்தாவின் நெருங்கிய தோழி.சிறுவயதிலிருந்தே ஒன்றாக இல்லத்தில் வளர்ந்த இவர்கள் தங்களுக்குள் எத்தனை மனதாங்கல்கள் பிரச்சனைகள் வேறுபாடுகள் வந்தாலும் இதுவரை பிரிந்ததில்லை.

அதுவும் தேன்மொழி யுக்தாவிடம் நிறைய அடிகள் பெற்றுக்கொண்டப்போதிலும் அவளை மற்றவரிடம் விட்டுக்கொடுக்கமாட்டாள்.அதேபோல தான் சஞ்சுயுக்தாவும் தன் தோழியிடம் எவ்வளவு சண்டைப்போட்டாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அவளிடம் கோபத்தைக் காண்பிக்கமுடியாமல் அவளிடம் சாரி கேட்டு சரணடைந்திடுவாள்.

அதேபோல் தேன்மொழிக்கு ஒரு பிரச்சினையென்றால் யார் எவர் என்று பார்க்காமல் வெளுத்துக்கட்டிவிடுவாள்.அதற்காக தேவையின்றி கைநீட்டும் பழக்கமெல்லாம் அவளிடத்தில் இல்லை.அவளின் முன் தனது பெற்றோரையும் காதலையும் பற்றி பேசினால் பிடிக்காது.அதைப் பற்றி பேசுபவர்களை முதலில் பேச வேண்டாம் என்று எச்சரிக்கை செய்வாள்.ஆனால் அதையும் கண்டுக்கொள்ளாமல் மறுபடியும் மறுபடியும் எள்ளி நகையாடுபவர்களைக் கண்டால் கோபத்தின் உச்சிக்கு சென்று கைநீட்டி அறைந்துவிடுவாள்.

இப்பொழுது கூட இருவருக்கும் ஒரு சின்ன சண்டை,இருப்பினும் தேன்மொழி அவள் அருகில் உணவு தட்டுவுடன் அமர்ந்தவுடன் அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவள் திரும்பவும் தொலைக்காட்சியில் தன் கவனத்தைச் செலுத்தினாள்.

அதில் ‘கே.கே.அட்வர்டைஸ்மென்ட் ஏஜின்ஸிக்கு இந்தியாவின் சிறந்த விளம்பரப்படத்திற்கான விருதான IDMA (Indian Digital Media Award) விருதை அளிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.அதுவும் இந்தியவரலாற்றிலே…இளம் வயதில் இந்த விருதை தட்டிச்சென்ற… இந்த கம்பெனியின் CEO… யாதிஷ் கிருஷ்ணகுமாருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டு… அவரை இந்த மேடைக்கு வந்து விருதை வாங்கிசெல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்’ என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆங்கிலத்தில் கூறியவுடன்,

முன் இருக்கையிலிருந்து ஒரு உயரமான இளைஞன்…வெள்ளை நிறம்…பரந்து விரிந்திருந்த தோள்கள்…மேலும் உடற்பயிற்சியின் பலனால் விளைந்த கட்டுமஸ்தான உடற்கட்டுடன்…சாம்பல் நிற பிளேசரும்…அதற்கு ஏற்றார் போல் சாம்பல் நிற பேன்டும்…உள்ளே வெள்ளை நிற சட்டை அணிந்து…கம்பீரமான நடையுடன் எழுந்து மேடையை நோக்கி நடந்தான் யாதிஷ் கிருஷ்ணகுமார்.

இங்கே தொலைக்காட்சியில் இதனைப் பார்த்து கொண்டிருந்த தேன்மொழி “சஞ்சு…இது நீ இன்டர்வியூ போக போறே கம்பெனியா…??” என்று மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பெரிதாக விழி விரித்து வினவினாள்.

அதற்கு சஞ்சுயுக்தா முகத்தில் எந்த வித பாவனையும் காட்டாமல் “ஆமாம்” என்று தலையாட்டிவிட்டு மறுபடியும் தனது தட்டில் கவனத்தைச் செலுத்தினாள்.

தேன்மொழி இன்னும் அதிகமான பரபரப்புடன் “வாவ் சூப்பர்டி… இவ்வளவு பெரிய கம்பெனியிலா வேலை செய்யப்போறே…யூ ஆர் லக்கிடி…!!” என்று கத்தியவளைக் கண்டு முறைத்த யுக்தா,

“லூசு…நான் இன்னும் இன்டர்வியூ கூட அட்டண்ட் பண்ணலை…அதுக்குள்ள நான் அந்த கம்பெனியில் ஜாயின் பண்ணி ஆவார்டு வாங்கிய மாதிரி பில்டப் கொடுக்குறே” என்றாள் சூடாக.

அதற்கு தேன்மொழி லேசான புன்னகையுடன் “யூ ஆர் டெலன்டாட் பார்சன்…சோ நீ கண்டிப்பாக செலக்ட் ஆகிடுவேனு…எனக்கு நம்பிக்கை இருக்கு…!அந்த நம்பிக்கையில் தான் சொல்லுறேன்…!!” என்றவளைப் பார்த்து கோபப்படுவதா… இல்லை இவள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பார்த்து வருத்தப்படுவதா என்று தெரியாமல் முறைத்துவிட்டு தொலைக்காட்சியில் தன் பார்வையைத் திருப்பினாள்.

அப்போதும் மௌனமாக இருக்க முடியாமல் தேன்மொழி “சஞ்சு…!!உன் எம்.டி செம்ம ஹன்ட்ஷம்டி…பேசாமல் நீ கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ…!!” என்று கண்சிமிட்டியவளின் மீது தீப்பார்வை ஒன்றை செலுத்தியவள்,

தொலைக்காட்சி பெட்டியில் தன் வலது கையை நீட்டி திரையில் இருப்பவனைக் காண்பித்தவாறு “யாரு இவன் ஹேன்ட்ஷம்…சரியான இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சை வைச்சிருக்கான்…இவனைப் பார்த்து ஹன்ட்ஷம்னு சொல்லுறே…?அவன் மூஞ்சியும் தாடியும் மீசையும் பாரு…உவ்வே…எனக்கு காதலே பிடிக்காது…அப்படியே எனக்கு காதல் வந்தாலும்…எக்காலத்திலும் இவனை மட்டும் நான் காதல் செய்யமாட்டேன்…!!!” என்று வெஞ்சினத்துடன் இலேசான ஆக்ரோஷத்துடன் கூறிவிட்டு அத்தோடு தன் காலி தட்டை எடுத்துகொண்டு அந்த இடத்தை காலிச்செய்தாள்.

அவளின் கோபம் எதற்கு என்று புரியாமல் தேன்மொழி தான் திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தாள்… அவளுக்கு தோழியின் வித்தியாசமான நடவடிக்கை ஒன்றுமே விளங்கவில்லை.

‘அவரை இதற்கு முன்பு பார்த்தது கூடயில்லை…சும்மா ஒரு பேச்சுக்கு அவரை கரெக்ட் பண்ணிடுனு சொன்னால் அதற்கு எதுக்கு இவ்வளவு பெரிய ரியாக்‌ஷன் கொடுக்கிறாள்…சரியான கிறுக்கி இவள்…’ என்று முகத்தை சுருக்கி யோசித்து விட்டு ‘சரி அது தெரிந்த விசயம் தானே’ என்று உதட்டை சுழித்துவிட்டு தொலைக்காட்சியில் தன் பார்வையைத் திருப்பினாள்.

அப்போது யாதிஷ் அந்த விருதை இதழில் வைத்து முத்தம் ஒன்றைக் கொடுத்தவன் இயல்பான குரலில் “சாரி டூ பாதர் யூ…ஐ வான்ட் டூ ஸ்பீக் இன் மை மாதர் லாங்குவேஜ்…” என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு,

தமிழில் “எங்கள் கம்பெனிக்கு இந்த விருது கொடுத்தற்கு நன்றி…ஆனால் இந்த விருதிற்கு எங்களைவிட தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்…சில விளம்பரங்கள் என்னையும் கவர்ந்திழுத்திருந்தது… இருந்தும் எங்கள் கம்பெனிக்கு idma விருது கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி…இது என் ஒருவனுடைய வெற்றி மட்டுமில்லை…என் அலுவலகத்தில் இதற்காக இரவு பகல் பாராமல் பணிப்புரிந்த என் கம்பெனி ஊழியர்களுக்கு தான் போய் சேரும்…எங்களது கம்பெனிக்கு மிக எளிதாக இத்தகைய பெரிய விருது கிடைத்திருக்கிறது…அதனால் மேலும் கடுமையாக உழைத்து,அடுத்தமுறை இதையும் விட சிறப்பான பணிகளை மேற்கொண்டு,ஒரு பிராஜக்ட் செய்யவேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்கு கூடியிருக்கிறது…சோ,கண்டிப்பாக அடுத்தமுறை ஒரு சிறந்த பிராஜக்ட் தேர்வு செய்து மீண்டும் இந்த விருதை தக்க வைத்துக்கொள்வோம் என்று கம்பெனி ஊழியர்களின் சார்பாக உறுதியளிக்கிறேன்.ஆன்ட் அதர் காம்பிடேட் கம்பெனிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்…!!!” என்று தமிழில் கூறி அதையே மறுபடியும் ஆங்கிலத்தில் ஒருமுறைக் கூறி,

“தேங்க்யூ…!!” என்று இதழில் பூத்த புன்னகையுடன் தலைக்கோதி விடைப்பெற்றவுடன் அரங்கமே அதிரும் அளவு கரகோஷம் எழும்பியது.

கீழே இறங்கி வந்தவுடன் அனைவரும் அவனுக்கு கைக்கொடுத்து வாழ்த்தினார்கள்.அவர்களுக்கெல்லாம் ஒரு சிறு புன்னகையோடு கைக்கொடுத்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தான்.

தேன்மொழி தான் அவனின் பேச்சை கேட்டு வாயடைத்திருந்தாள். 

‘இவனது நிலையில் வேறுவொருவராக இருந்தால் இந்நேரம் இந்த விருது கிடைத்ததிற்கு தற்பெருமை பாடியிருப்பான் இல்லை கர்வமாக தன் கம்பெனியை உயர்த்தி அடுத்த கம்பெனியைத் தாழ்த்தி கூறியிருப்பான். ஆனால் இவன் தன் கம்பெனி வேலையாட்களை உயர்த்தி பேசியதோடு மட்டுமில்லாமல் மற்ற கம்பெனி விளம்பரப்படங்கள் கூட தங்களை விட நன்றாக இருந்தது…’ என்று அவர்களையும் வருந்தவிடாமல் பேசியவனைப் பார்த்து வாயடைந்திருந்தாள்.

மொத்தத்தில் ‘வாவ்…!!வாட் அ கேரக்ட்டர்…ஹவ் ஸ்வீட் ஹி இஸ்’ என்று தன்னை மறந்து ஜொள்ளு ஊத்திக்கொண்டிருந்தாள் தேன்மொழி.

ஆனால் இதெற்கெல்லாம் காரணமானவனோ அவள் நினைத்திற்கு நேர் மாறாக தன் கம்பெனி மேனஜரிடம் கோபமாக கத்திக் கொண்டிருந்தான்.

*******************************************************************

                        

ஈரோட்டில் உள்ள வெள்ளாங்கோயில் கிராமத்தில் உள்ள பெரிய வீட்டின் உள்ளே வானவெளி தெரிவது போல் பெரிய முற்ற அமைப்பும், வீட்டினுள் உள்ள மற்ற அறைகள் அனைத்தும் அந்த முற்றத்தில் வந்து ஒன்று சேர்வதாக இருந்தது.வீடு முழுவதும் பல மரத் தூண்களும், ஒவ்வொரு தூண்களிலும் வேலைப்பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்டு பச்சை நிறங்களிலும் தங்க நிறத்திலும் வர்ணங்கள் பூசப்பட்டு, நுழைவு வாசலின் இருபுறமும் விசாலமான திண்ணைகளும் அமைக்கப்பட்டும் இயற்கையின் அழகை ரசிப்பதற்காக எந்த பக்கம் பார்த்தாலும் சாளரங்கள் அமைக்கப்பட்டு கண்கவரும் வகையில் அமைந்திருந்தது.

இரண்டு தளங்கள் கொண்டு பெரிய வீடு ஆதலால் அனைத்து தளங்களிலும் இருந்த அறைகளுக்குக் கதவுகள் வானவெளியைப் பார்ப்பது போலவே அமைக்கப்பட்டிருக்க, வீட்டின் அகலத்தையும், கூரையின் உயரத்தையும், வீட்டிற்குள் அமைக்கப்பட்டிருந்த தூண்கள் அமையப்பெற்று ஒரு பழைய கால அரண்மனை போல் காட்சியளித்தது.

“அம்மாஆஆஆஆ….!!” என்று அந்த பாரம்பரியமான பழைய வீடு இடிந்து விழும் அளவு பயத்தில் அலறிக்கொண்டிருந்தாள் மகிழா ஶ்ரீ.

அவளுடைய தாய் பானுமதி எரிச்சலுடன் “ஏன்டி…எதுக்கு இப்படி கத்திட்டு இருக்கே…!!” என்று கூறியவாறே அவள் அறைக்குள் நுழைந்தார்.

மகிழா குளியல் அறையின் கதவை பாதி திறந்த நிலையில் ஒரு முழு நீள பூந்துவாலையை இடுப்பிலிருந்து முழுங்கால் வரை மட்டும் மறைக்குமாறு கட்டி தலையில் நீர் சொட்ட சொட்ட பாதி குளியலோடு,குளியல் அறைக்கு வெளியே முகத்தில் வியர்வை வழிய பதட்டத்துடன் நின்றுக்கொண்டிருந்தாள்.

எரிச்சலோடு வந்த பானுமதி மகளிடமிருந்து இப்படியொரு கோலத்தை எதிர்ப்பார்க்கவில்லை.அதைக் கண்டு தன் தலையில் அடித்துக்கொண்டு “என்னடி இது கோலம்…??” என்று எரிச்சலுடன் கேட்டவாறு அவளை நெருங்கினார்.

அதற்கு மகிழா அழுதுவிடுபவள் போல் உதட்டை பிதுக்கி “அம்…அம்மா…அங்க பாத்…ரூமில் ஒரு க…க…கரப்பான்பூச்சி இருக்கு…ம்மா…எ…எனக்கு பயமாக இ…ருக்கு…நீங்க அதை து…துரத்தி விடுறீங்களா…??” என்று பயம் பாதி அழுகை பாதியோடு திக்கி திணறி கூறியவளைக் கண்டு அதட்ட முடியாமல் இப்படி இவளை பயத்தோடு வளர்த்த தன்னையே நொந்துக்கொண்டு அவளிடம் வெளிப்படுத்தாமல்,

“எங்க இருக்கு மகிம்மா…!!” என்று கேட்டுக்கொண்டே அவள் காட்டிய திசையில் சென்று பார்த்தார்.

அங்கு இருந்த அந்த பூச்சி சென்றுவிட்டது,இதை அப்படியே சென்று அவளிடம் கூறினால்… ‘இல்லை பூச்சி அங்கு தான் இருக்கு…நீங்க முதல்ல அந்த பூச்சியை அடிச்சிட்டு வந்தா தான்…நான் உள்ள போவேன்…’ என்று அடம்பிடிப்பாள் என்று மகளைப் பற்றி அறிந்தவர்… வேறுவழியில்லாமல்… அங்கிருக்கும் துடைப்பத்தை எடுத்து…அந்த பூச்சியை அடிப்பதுபோல்…சத்தம் ஏற்படுத்தி நடித்துவிட்டு வெளியில் வந்தார்.

புடவை முந்தானை கொண்டு கைகளை துடைத்தப்படி பயத்துடன் இருந்தவளின் அருகில் வந்து “நான் பூச்சியை அடிச்சு… குப்பையில் போட்டுட்டேன்…நீ போய் சீக்கிரம் குளிச்சிட்டு வா…ஈரத்தோடு ரொம்ப நேரம் நிற்கக்கூடாது…உடம்பு சரியில்லாமல் போகப்போகுது…!!” என்று கனிவோடு கூறினார்.

இருந்தும் அங்கிருந்து நகராமல் அங்கேயே நின்றுக்கொண்டிருந்தவளிடம் பானுமதி “என்னம்மா…??” என்று புருவம் சுருக்கி புரியாமல் சற்று கோபமாகவே கேட்டார்.

மகிழா தயங்கி தயங்கி “அம்மா…!நீயும் என் கூட உள்ளே குளிக்க வரியா…??அது மறுபடியும் வந்துவிட்டால் என்ன பண்ணறது…?” என்று அப்பாவி போல் கூறியவளைப் பார்த்த பானுமதி தலையடித்தவாறு இவளிடம் அன்பாக பேசினால் வேலைக்காகாது என்று நினைத்து அவளிடம்,

“மகிஈஈஈஈ…” என்று கத்தி அவளின் பெயரை உச்சரித்து “ஒழுங்கா இப்போ போய் குளிக்கிறியா…இல்லை அடி வேணுமா…??” என்று கை ஓங்க அதட்டியவுடன் வேறு வழியில்லாமல் உதட்டை சுழித்து முகத்தை தொங்கப்போட்டு கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தாள் மகிழா.

மகிழா ஶ்ரீ,இருபது வயது நிரம்பிய குமரி…வீட்டிற்கு ஒரே பெண்…அவள் வெள்ளை நிற தோல்…மற்ற பெண்களைவிட கொஞ்சம் கூடுதலான உயரம்…களையான முகவடிவு…இரண்டு மான்விழி கண்கள்… கூர்மையாகவும் இல்லாமல்…அதேசமயம் சப்பையாகவும் இல்லாமல்…சரியான அளவில் இருந்த நாசி…அதற்கு கீழே பூவை விட மென்மையாக இருக்கும்.ஒரு ஜோடி செவ்விதழ்கள்…சரியாக மேல் உதட்டிற்கு மேலேயும்…நாசிக்கு கீழேயும் உள்ள சிறு பள்ளம் போன்ற குழிந்த பகுதியில் ஒரு சிறு கருப்பு நிற மச்சம்…அதே சமயம் சரியான உடலமைப்பு,சுருக்கமாக சொன்னால் பார்ப்போரை ஒரு பார்வையில் கவர்ந்திழுக்கும் தோற்றமுடையவள்.

மகிழா ஶ்ரீ மிகவும் அமைதியான பெண் என்று கூறமுடியாது.ஆனால் எதற்கெடுத்தாலும்…பயப்படும் சுபாவம் உள்ள பெண்.அதற்கெல்லாம் காரணம்,அவளின் தாய் பானுமதி.மகிழா எதற்கெடுத்தாலும் அழுது அடம்பிடிப்பவள்.அதனால் பானுமதி அவளை அதட்டி மிரட்டுவார். முடிந்தால் இரண்டு அடி கூட வைப்பார்.அதன்பிறகு தான் அவள் அமைதியாகுவாள்.அதனால் அவளை அடக்கி வைப்பதற்காக சிறு வயது முதலே நிறைய பேய் கதைகளையும் கொடூரமான மனிதர்கள் பற்றிய கதைகளைப் பற்றியும் கூறி பயங்காட்டியுள்ளார்.அதைகேட்டு வளர்ந்த மகிழா ஶ்ரீ,ஒரு சிறு பூச்சியைக் கண்டால் கூட பயப்படுவாள். அவளுக்கு இரவில் தனியாக உறங்கும் பழக்கமில்லை.எப்போதும் தன் தாய் தந்தையின் அறையில் அவர்களுக்கு அருகில் தனியாக போடப்பட்டிருக்கும் மரக்கட்டிலில் தான் படுப்பாள்.

பானுமதி எத்தனையோ தடவை தனியாகப் படுக்குமாறு கூறியும் அவள் முடியவே முடியாது என்று விட்டாள்.ஒரு தடவை அதட்டி மிரட்டி அவளை தனியாகப் படுக்க வைத்து பார்த்தால்,அதற்கு அடுத்தநாள் அதிக காய்ச்சலுக்கு ஆளாகிப்போனாள்.அதிலிருந்து அவளை இங்கே படுத்துகொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்கள்.இருந்தும் குழந்தை தனம் மாறாத இந்த பருவ பெண்ணிற்கு எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்ற கவலையோடு இருக்கிறார்கள்,இவளை பெற்றவர்கள்.

மகிழா குளித்துமுடித்துவிட்டு பச்சை நிற தாவணி பாவாடைச் சட்டை அணிந்து படிக்கட்டுகளின் வழியே துள்ளி குதித்து கீழே இறங்கிவந்தாள். வந்தவள் நேராக சென்றயிடம் பூஜையறை.அங்கே சென்று கண்களை மூடி இரு கரம் கூப்பி இறைவனை வணங்கிவிட்டு திருநீறு குங்குமம் சகிதம் உணவுக்கூடத்திற்கு வந்தாள்.

உடனே அவளது தாய் பானுமதி அவளுக்கு காலை உணவைப் பறிமாறினார்.

அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்த மகிழாவைப் பார்த்த பானுமதி அவளின் கோபத்தைப் புரிந்துகொண்டு இதழுக்கிடையில் புன்னகையை மறைத்தவாறு “மகிம்மா…!!அம்மா மேலே கோபமாக இருக்கியா…??” என்று குறும்புடன் வினவியவரை முறைத்துவிட்டு மறுபடியும் சாப்பாட்டில் தன் கவனத்தை செலுத்தினாள்.

பானுமதியும் விடாமல் “சரி…அம்மா மேல் கோபமாக இருந்தால் இன்றைக்கு இரவு தனியாகப் படுத்துக்கோ…அப்பா நாளைக்கு தான்…மைசூரிலிருந்து வருவார்…வேறவழியில்லை…!!” என்று பாவம் போல் முகத்தை வைத்தப்படி கூறினார்.

அதைக்கேட்ட மகிழா விழிகள் விரிய “தனியாவாஆஆஆஆஆ…..??” என்று அதிர்ந்து கண்களில் திகில் பரவ கலவரத்துடன் “அம்மா…நான் உன் மேலே கோபமெல்லாம் இல்லை…நீ என் கூடவே படுத்துக்கோ…என்னை தனியாக விடாதீங்க…எனக்கு பயமா இருக்கும்…!!” என்று கூறியவளைப் பார்த்த பானுமதிக்கு கல்லூரிக்கு செல்லும் சமயத்தில் பதட்டப்படுத்த வேண்டாம் பிறகு விட்டால் அழுதுவிடுவாள் என்று நினைத்தவர்,

“சரிம்மா…அப்போது என் மேலே கோபமில்லைனா…நீ என்கூடவே படுத்துக்கலாம்…!!” என்று அவர் விட்டு கொடுப்பது போல் கூறியவுடன் தான் அவளுக்கு போன உயிர் திரும்பி வந்தது.

அதன்பிறகு புன்னகையுடன் தன் தாயிடம் விடைப்பெற்று தங்கள் காரில் ஏறி கல்லூரிக்கு புறப்பட்டாள் மகிழா ஶ்ரீ.

‘கடவுளே…!!ஒன்றுமே விவரமில்லாத பொண்ணை வைத்து…நான் என்ன செய்வது…இவளுக்கு வரப்போறவனையாவது…நல்லவனா அமைத்து கொடுத்திடு ஆண்டவா…அதுவே போதும்’ என்று கடவுளிடம் வேண்டி ஒரு ஆழ்ந்த பெருமூச்சோடு வீட்டிற்குள் நுழைந்தார்.

வண்டியை ஓட்டுனர் ஓட்ட பின் இருக்கையில் அமர்ந்து கண்ணாடி சன்னலின் வழியே தனது வெள்ளாங்கோயில் கிராமத்தை இருபுறமும் பார்த்து ரசித்து கொண்டே பயணித்துக் கொண்டிருந்தாள்.

எந்தப்பக்கம் திரும்பினாலும் பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகளும்…வயல்வெளிக்கு நடு நடுவே…தென்னை மற்றும் பனை மரங்களின் தோப்புகள் காட்சியளிக்க…ஆங்காங்கே ஓடிக்கொண்டிருக்கும் ஓடைகளும்… அதன் சலசலப்பும்…அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓட்டு வீடுகள் காட்சியளிக்க…வயல்களில் வேலை செய்துக் கொண்டிருக்கும் பெண் மற்றும் ஆடவரின் குரல்களும் மற்றும் பறவைகளின் அணிவகுப்பும்…அதன் மெட்டுகளும்…இந்த காட்சிகள் அனைத்தும் கேட்கவும் பார்க்கவும் ரம்யமாக இருக்க…மகிழா அதனையெல்லாம் ரசித்துக் கொண்டே…காரில் சுகமாக பயணித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு மணிநேரப் பயணத்திற்கு பிறகு கல்லூரியை அடைந்த மகிழாவின் கார் ஈரோட்டில் புகழ்பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன் நின்றிருந்தது.

அதிலிருந்து இறங்கிய மகிழா ஓட்டுனரிடம் விடைப்பெற்று கல்லூரிக்குள் நுழைந்தாள்.

மகிழா இளங்கலைப் பட்ட படிப்பு பி.எஸ்.ஸி வர்த்தகம் கடைசி வருடம் படிக்கிறாள்.மற்றவிசயத்தில் சிறிது பயப்படுவது போல் தெரிந்தாலும் மகிழா படிப்பு விசயத்தில் படுச்சுட்டி.கல்லூரியில் எப்போதுமே முதலிடம் அவளுக்கு தான்.அதற்காக அந்த கல்லாரி அதிபர் கூட அவளை அழைத்து நிறைய முறை பாராட்டியுள்ளார்.அவளுக்கு இருக்கும் வசதிக்கு வெளியூருக்கு சென்று நல்ல கல்லூரியில் சேர்ந்து படிக்குமாறு சிலமுறை வழியுறுத்தியுள்ளார். ஆனால் இதில் துளியளவு கூட சம்மதமில்லை மகிழாவுக்கு.

மகிழாவுக்கு தோழிகள் என்றும் யாருமில்லை.எல்லோரிடமும் நல்லவிதமாகவே பழகுவாள்.ஆனால் யாரிடமும் நெருங்கி பழகும் பழக்கமில்லை.

மாலையில் கல்லூரி முடித்து தனது கார் ஓட்டுனருக்காக கல்லூரி வாயிற்கதவின் அருகே மகிழா தனித்து நின்று கொண்டிருந்தாள்.

எப்போதும் வரும் நேரத்தைத் தாண்டியும் கார் வராமல் இருக்கவே,சுற்றும் முற்றும் பார்த்தப்படி திகிலுடன் காத்திருந்தாள் மகிழா.கல்லூரி முடிந்து ஒவ்வொருவராக செல்ல ஆரம்பித்து கடைசி மாணவர்கள் வரைச் சென்றபிறகும்,கார் வந்து சேராதிதினால் அவள் மனதில் கிலி பரவ என்ன செய்வதென்று தெரியாமல் தன் கைகளைப் பிசைந்துக் கொண்டு முகம் முழுவதும் பதட்டம் அப்பியப்படி நின்றிருந்தாள்.

அப்போது பார்த்து ஏதோ ஒன்று தீடிரென்று தன் காலுக்கடியில் விழவும் “அம்மாஆஆஆஆஆஆ..!!” என்று கத்தி துள்ளி குதித்து நான்கு அடி பின்னால் சென்று பதட்டத்துடன் கீழே குனிந்து பார்த்தவளுக்கு உள்ளமும் உடலும் சேர்ந்தே அதிர்ந்தது.

ஏனெனில் அவள் காலுக்கடியில் விழுந்து கிடந்தது,ஒரு உயிருள்ள ஆண்மகன்.அவன் வயிற்றில் கைவைத்து வலியால் முனகிக்கொண்டு இருக்க அவன் சட்டை முழுவதும் இரத்தக்கறையாக இருந்தது.

அதைப் பார்த்தவளுக்கு மயக்கம் வரும் போல இருக்க இருந்தும் இவன் எப்படி இங்கே வந்து விழுந்தான் என்பதை அறிய தன் தலையை நிமிர்த்தி பார்த்தவளுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

ஏனெனில் அவள் பார்க்கும்போது ஒரு இளைஞன் காவலர் உடையில் தன் கடா மீசையை முறுக்கி கொண்டு கம்பீரமான நடையுடன் 20 அடி தூரத்திலிருந்து அவளை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான்,அவன் செழியன் என்கிற நெடுஞ்செழியன் ஐ.பி.எஸ்.

நெடுஞ்செழியன் 28 வயது நிரம்பிய வாலிபன்…6 அடிக்கும் அதிகமான உயரம்…மாநிறத்திற்கும் குறைவான நிறம்…முறுக்கு மீசை…அது இன்னும் அவனுக்கு ஒரு கம்பீரத்தைக் கொடுத்தது…முரட்டுத்தனமான தோற்றம்… குற்றவாளிகள் அனைவரும் பயந்து நடுங்கும் உயிரை உருக்கும் பார்வையை வெளியிடும் கூரிய கண்கள்…அவன் கண்களுக்கு அத்தனை சக்தியிருக்கும்.அவன் ஒரு காவலதிகாரி மட்டுமில்லாமல் முதலமைச்சரிடமிருந்து ஒரு சிறந்த காவல் அதிகாரி என்ற விருதை பெற்ற ஒரு நேர்மையான அதிகாரி.

அவன் தப்பு செய்பவர்களுக்கு மட்டும் தான் கொடூரமானவன்.மற்றபடி எல்லோரிடமும் தன்மையாக பழகும் பழக்கமுடையவன்.

கோபம் வந்து விட்டால் குற்றவாளிகளைச் சுட்டு தள்ளவும் தயங்காத…அஞ்சா நெஞ்சம் கொண்டவன்.அதேபோல் நேர்மையான அதிகாரி.அதனாலே அவனுக்கு எதிரிகள் அதிகம்.சில பெரிய பெரிய அரசியல்வாதிகள் கூட அவனை கண்டு அஞ்சுவார்கள்.அதனால் அவனுக்கு அடிக்கடி வேலை மாற்றல் கொடுத்து கொண்டே இருப்பார்கள்.

குறைந்த வருடத்தில் 7 முறை வேலையில் மாற்றல் கொடுத்திருக்கிறார்கள். இந்த ஊர் செழியனுக்கு 8வது ஊர்.

இப்போது கூட சிறையிலிருந்து தப்பித்து வந்தவனை துரத்தி பிடித்து வெறித்தனமாக எட்டி உதைத்ததில்,அவன் மகிழாவின் காலடியில் விழுந்து கிடந்தான்.

அவனுக்கு கோபம் வந்துவிட்டால் எந்த இடம்,யார் இருக்கிறார்கள் என்று எதுவும் பார்க்கமாட்டான்.இப்பொழுதும் அப்படித்தான் பொது இடத்தில் அந்த குற்றவாளியை அடித்து துவைத்து கொண்டிருந்தான்.

அதனைப் பார்த்த மகிழா செழியனின் முரட்டு தனமான தோற்றத்தில் இன்னும் பயந்து நடுங்க முகமெல்லாம் வேர்த்து வழிய ஆரம்பித்தது.

அவளை நெருங்கியவன் கொஞ்சமும் அவளை பொருட்டாய் மதிக்காமல் கீழே குனிந்து அந்த குற்றவாளியின் சட்டை காலரைப் பிடித்து தூக்கி நிறுத்தி வார்த்தையில் அனல் தெறிக்க “உனக்கு எந்த அளவு ஏத்தமிருந்த என் கஸ்டடியிலிருந்து நீ தப்பிச்சு போவே…உனக்கு நான் கொடுக்கிற தண்டணையைப் பார்த்து…இனி ஒருத்தணும் என் கஸ்டடியிலிருந்து தப்பிச்சு போக முயற்சி பண்ணவே கூடாது…முயற்சி பண்ணறது என்ன…நினைக்க கூட பயப்படணும்…!!” என்று கர்ஜித்தவன்,

அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டு வயிற்றில் தன் மூட்டிகாலை வைத்து ஓங்கி ஒரு எத்துவிட்டு அவன் வலியில் கத்துவதையும் பொருட்படுத்தாமல்,அவனின் காலை தன் பூட்ஸ் காலை வைத்து நசுக்கியவன் தன் துப்பாக்கியை எடுத்து அவன் வாயில் வைத்து “என்ன சுட்டுடலஆமா…??சொல்லுடா…என்ன சுடட்டுமா…??” என்று சிங்கத்திற்கு நிகராக கர்ஜித்தவன்…

“இந்த கால் தானே ஒடுச்சு…இனிமே இது இருந்தால் தானே…” என்று கண்களில் கொலைவெறியுடன் சொன்னவன் துப்பாக்கி எடுத்து “டப்டப்” என்று அவனின் காலில் சுட அவன் வலியால் துடித்து அலறினான்.

அவனின் அலறலுக்கு நிகரான சத்தத்துடன் “அம்மாஆஆஆஆ…….” என்று அலறி மயங்கி சரிந்திருந்தாள் மகிழா ஶ்ரீ.

தனது இறையை வேட்டையாடும் வெறியில் இருக்கும் புலிக்கு தனது இறையை தவிர வேறு எதுவும் தெரியாதாம் அதுபோல் இதுவரை சுற்றுப்புறம் அறியாமல் இருந்தவன்…அப்போது தான் ஒரு பெண் அங்கிருப்பதை அறிந்து தன் கோபத்தை கொஞ்சம் குறைத்து, பக்கத்தில் இருந்த கான்ஸ்டபிளை ஒரு கை நீட்டி அழைத்து “இந்த நாயை தூக்கிட்டு போய் ஹாஸ்பிட்டலில் போடுங்க…நான் இந்த பொண்ணை தண்ணி தெளித்து எழுப்பி…அவங்களை அனுப்பிட்டு வரேன்…!!” என்று அவரை அனுப்பி வைத்தான்.

அவரும் “எஸ் சார்” என்று சல்யூட் அடித்து இரத்த வெள்ளத்தில் மிதந்திருந்த அவனைத் தூக்கி தோளில் போட்டு அழைத்து சென்றார்.

அவர் சென்றவுடன் அங்கிருந்த தேநீர் கடைக்காரனை அழைத்தவன் அவனிடமிருந்து தண்ணீர் புட்டியை வாங்கி,அவள் முகத்தில் தண்ணீரை தெளித்தான்.

மெதுவாக தன் இமைகளைப் பிரித்த மகிழா,அவன் முகம் தனக்கு வெகுஅருகில் தெரியவும் அதுவும் அவனின் முறுக்கேறிய பெரிய மீசையைப் பார்த்ததும் பயத்தில் மறுபடியும் மயங்கி சரிந்தாள்.

செழியனுக்கு அவளின் செய்கையைப் பார்த்து உதட்டோரம் சிரிப்பில் துடித்தது.

“உன்னை பார்த்த அந்த நொடியே

என் எதிர்காலம் நீ தான் என்றது எனது உயிர்…!!”

 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top