“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!”
என்ற பாரதியாரின் பாடலை பற்றி குழந்தைகளுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்த மணிகர்ணிகா மனதிலும் உடலிலும் அப்பாடலுக்கேற்ற நிமிர்வு சிறிதும் இல்லை.
அவளது தற்போதைய கவனம் முழுவதும் பள்ளி குழந்தைகளின் மீது இருந்தாலும் தெளிந்த நீரோடையில் விழுந்த கல்லினால் ஏற்பட்ட கலங்கிய குட்டையாய் குழம்பியிருந்தது.அவளது மனதில் கடந்த சில நாட்களாக சஞ்சலம் குடிக்கொண்டு அவளை மிகுந்த வருத்தத்திற்குள்ளாகியிருந்தது.
மணிகர்ணிகா என்ற ஒரு புரட்சிப்பெண்ணின் பெயர் வைத்ததாலோ என்னவோ அந்த வீரமங்கை ஜான்சி ராணியின் வாழ்க்கையை போலவே வெகு எளிதாக ஆரம்பித்த அவளது திருமண வாழ்க்கை மிக விரைவிலேயே ஒரு முடிவிற்கு வந்துவிட்டு இருந்தது.
அவர்களது சமூகத்தில் மிகச்சிறிய வயதிலே பெண்களை திருமணம் என்னும் பந்தத்தில் இணைத்துவிடுவார்கள்.அவர்களது சமூகத்தில் இருக்கும் நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதற்காக கல்லூரி மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருந்த மணிகர்ணிகாவிற்கு ஒரு நல்ல வரன் வீடு தேடி வர,உடனடியாக அவளது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அவசரமாக பத்தொன்பது வயதேயான அன்றலர்ந்த மலர் போல் பூத்து குலுங்கிய அந்த பூவிற்கு திருமணம் செய்துவிட்டார்கள் அவளது பெற்றோர்கள்.
நிறைய ஆசை கனவுகளுடன் தொடங்கிய அவளது கல்லூரி வாழ்க்கை அவளது லட்சியம் விதையூன்றி சிறு தளிராய் துளிர்விடுவதற்கு முன்பே குழித்தோண்டி புதைக்கப்பட்டது.
அத்தகைய சூழ்நிலையிலும் சிறிதும் மனம் தளர்ந்துப்போகாமல் தனக்கென கடவுளால் விதிக்கப்பட்ட வாழ்க்கை இது தான் என்ற நிதர்சனம் உணர்ந்த மங்கையவள் அவ்வாழ்வை ஏற்றுக்கொண்டு வாழ முயற்சி செய்தாள்.
முடிவெடுத்த கையோடு இல்வாழ்க்கையில் நுழைந்து கணவனது அன்பில் மூழ்கி திளைக்கலாம் என்று அன்பிற்கினியவன் அன்பை பெறவேண்டி காலடி எடுத்துவைக்கையில் அவளது ஒட்டுமொத்த மலர்ச்சியையும் அடியோடு குலைத்து சென்றது விதி.
வாழ்க்கை ஆரம்பிப்பதற்கு முன்பே அவளது திருமண வாழ்வு முழுமையாக பட்டுப்போய்விட்டது.
கணவனும் மனைவியுமாய் இனிமையை ஆரம்பித்த அவர்களது இன்பகரமான முதல் வண்டி பயணம் எதிரில் திருப்பத்தில் வந்த காரினால் மோதப்பட்டு இருவரது உடலும் தார்சாலையில் தூக்கி வீசப்பட,அவ்விடத்திலேயே தனது இன்னுயிரை துறந்ததோடு மனைவியின் மகிழ்ச்சியையும் கையோடு பறித்துக்கொண்டு சென்றுவிட்டான் அவளது மணவாளன்.
ஆனால் அந்த பெண்ணானவளோ பின்னால் அமர்ந்திருந்ததால் தூக்கி எறியப்பட்ட வேகத்தில் ஓரமாய் இருந்த தேனீர் கடையின் கூரையின் மேல் விழுந்து இலேசான காயங்களுடன் உயிர் தப்பினாள்.
திருமணம் நடந்தேறிய ஒரே மாதத்தில் கணவனை இழந்து சமுதாயத்தில் கைம்பெண் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட மணிகர்ணிகாவின் சோதனை காலம் அத்துடன் ஒரு முடிவிற்கு வரவில்லை.
இறந்தவனது பெற்றோர்கள் புத்திரச்சோகத்தில் தங்களுடைய வேதனையை தீர்த்துக்கொள்ள மணிகர்ணிகாவை வடிகாலக்கி அவளை கரித்துக்கொட்டி தூற்றி மனதை தேற்றிக்கொண்டார்கள்.அவர்களது அத்தகைய கொடூரம் அத்துடன் மட்டும் நிற்க பெறாமல் அவளது நெஞ்சத்தை வார்த்தைகளால் குத்தி கிழித்து காயப்படுத்தி மிகுந்த ரணத்தோடு வீட்டை விட்டு துரத்திவிட்டார்கள்.
வேறு எதுவும் போக்கிடம் இல்லாத அந்த சின்னஞ்சிறு பறவை மீண்டும் தான் பிறந்து வளர்ந்த கூட்டுக்குள் அடைக்கலம் தேடி ஓடி வந்தது.
அவளை பெற்றவர்களோ மகளுக்கு வேறொரு நல் வாழ்வை அமைத்து தருவோம் என்றில்லாமல் அவளுடைய வாழ்க்கை முடிவிற்கு வந்துவிட்டது என்ற முடிவிற்கே வந்தவர்கள் போல் ‘இனி காலம் முழுவதும் மகள் தனிமரமாய் நிற்க வேண்டுமே…நம் காலத்திற்கு பிறகு அவளுக்கு யார் துணை நிற்பார்கள்’ என்று பெரும் கவலை கொண்டதினால்,அந்த துக்கம் அவர்களை உயிரோடு கொன்று புதைக்க,தினந்தோறும் உள்ளுக்குள் நரக வேதனையை அனுபவித்தனர்.
அவர்களது அத்தகைய வலியும் வேதனையும் கூட நாளுக்கு நாள் மறைந்துக்கொண்டே போக,நாளடைவில் அது முற்றிலும் துடைத்தெறியப்பட்டு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.
சில நாட்களில் முழுவதும் தேறி அன்றாட வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தவர்களுக்கு மூத்தமகளை தங்கள் மடி மீது தாங்கி ஆறுதல் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றாமல் போனது தான் கொடுமை.
தங்களது பெண் வாழ்க்கை இழந்து வந்திருக்கிறாள் என்பதை விட,மூத்த மகளுக்கு பிறகு பிறந்திருக்கும் மற்ற இரண்டு மகவுகளின் எதிர்காலம் என்னவாகும் என்பது தான் அவளது தாயின் தற்போதைய வருத்தமாக இருந்தது.
அதனால் தன்னுடைய உதிரத்தினால் உருவாகி பத்து மாதம் சுமந்து ஈன்றெடுத்த மகள் என்றும் பாராமல் சுற்றதாரை போலவே ராசியில்லாதவள் என்று தூற்ற ஆரம்பித்தார்.
அதில் மனதளவில் பெரும் அடி வாங்கிய மணிகர்ணிகா மற்றவர்களிடம் பேசுவதை கூட விரும்பாதவளாய் தன் அறையினுள்ளே அடைந்துக்கிடந்தாள்.எந்நேரமும் தன் அறையினுள்ளே அடைந்து கிடந்த அந்த சிறைப்பறவைக்கு இவ்வுலகமே சூன்யமாக தென்பட்டது.
மணிகர்ணிகா பிறந்த வீட்டில் எதிர்ப்பார்த்து வந்த அன்பும் ஆதரவும் கிடைக்காமல் தனக்குள்ளே மிகவும் இறுகிப்போக,அந்த பத்தொன்பது வயது இளம்குருத்திற்கே உரிய எந்த வித இயல்பான துடுக்குத்தனமும் உணர்ச்சிகளும் மரத்து மரித்துப்போனது.அத்துடன் விழிகளில் உயிர்ப்பின்றி எந்நேரமும் இலக்கின்றி சூனியத்தை வெறித்துக்கொண்டிருந்தாள்.
அவளது கணவனுடன் வாழ்ந்த அந்த சில நாள் வாழ்க்கையில் அவனது முகத்தின் வரிவடிவம் கூட பெண்ணவளின் இதயத்தில் பதியவில்லை என்பது தான் உண்மை.அத்தகைய நிலையில் இருந்தவளுக்கு கணவனை பற்றிய நினைவுகள் கூட பின்னுக்கு தள்ளப்பட, மற்றவர்களின் உதாசீனத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னுடைய துயரத்திலிருந்து முழுவதுமாய் மீண்டு வந்து வெகு தீவரமாக அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்க தொடங்கினாள்.
இவளது நிலையில் வேறொரு பெண்ணாக இருந்திருந்தால் அடிப்பட்ட பறவை போல் சுருண்டு வீபரிதமான ஒரு முடிவை எடுத்திருப்பாள்.ஆனால் மணிகர்ணிகா என்னும் பெயர் விளக்கத்தை அறிந்தவளாதலால் என்பதாலும்,இயல்பிலே சிறிது துணிச்சலான பெண் என்பதாலும் பாரதியின் புதுமை பெண்ணாய் நிமிர்ந்து நின்று தனது தந்தையிடம் இடைநிறுத்திய கல்லூரி படிப்பை தொடர விரும்புவதாக தெரிவித்தாள்.
அவளது தாயோ மகள் தன்னுடைய பெரும் இழப்பில் இருந்து மீண்டு வெளிவந்துவிட்டாள் என்று மகிழ்ச்சிக்கொள்ளாமல் அவளை கல்லூரிக்கு செல்லவேகூடாது என கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார்.
அவருக்கு மகளின் நலமான வாழ்வை விட சுற்றத்தார் அனைவரும் என்ன கூறுவார்களோ என்பது தான் அவரது தற்போதைய தடைக்கு காரணகர்த்தாவாக இருந்தது.ஆனால் அதையெல்லாம் கண்டு சற்றும் இளகாமல் தன் மூடிவில் உறுதியாக நின்று சாதித்தும் காட்டினாள் இந்த இளம்வீரமங்கை.
“அப்பா இதுவரை உங்களோட வார்த்தைக்கு எதிராக நான் எதுவும் செய்ததுமில்லை…பேசியதுமில்லை…இந்த கல்யாணம் உட்பட…” என்னும் போது அவளது குரலில் ஒரு இறுக்கம் இழையோடியதை அறிந்த தந்தை மகளின் முகத்தை கூர்ந்து பார்க்க,
அதில் எந்த வித தயக்கமும் கொள்ளாமல் அதே நிமிர்வுடன் அழுத்தமான குரலில் தந்தையை நேருக்கு நேர் பார்த்து “நீங்க அமைத்து கொடுத்த கல்யாண வாழ்கை தான் எனக்கு இல்லாமல் போய்விட்டது…ஆனால் எனக்கு என்று நீங்கள் ஏற்படுத்தி கொடுத்த படிப்பாவது என்னுடன் இறுதி வரை தொடர வேண்டும் என நான் நினைக்கிறேன் அப்பா…இல்லை இந்த படிப்பும் எனக்கு நிலைக்கக்கூடாது என்று நீங்கள் விரும்பினால் அதையும் சொல்லுங்கள்…இப்போதும் உங்கள் மகளான நான் உங்கள் வார்த்தைக்கு கட்டுபடறேன்…ஆனால் ஒன்று அப்படி கட்டுப்படற உங்க பொண்ணு இந்த உலகத்தில் ஒரு நடைப்பிணமா தான் இருப்பாள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்… முடிவு உங்கள் கையில்” உறுதியாக பேசிய மகளின் வார்த்தையில் மறைந்திருந்த வேதனையை அறிந்த தந்தையாய் மகளது வேண்டுக்கோளுக்கு உட்பட்டு “சரி” என்று ஒத்துக்கொண்டார்.
அவளது தாயார் சங்கவிக்கு இது அறவே பிடிக்கவில்லை என்றாலும் கணவரது வார்த்தைக்கு கட்டுப்பட்டு இலேசான முணுமுணுப்போடு அமைதியாகிப்போனார்.
இப்படியாக அவளது வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் அடியில் இருந்து துணிச்சலாக எழுந்து சமாளித்து நின்ற மணிகர்ணிகா வெற்றிக்கரமாக தனது கல்லூரி படிப்பை முடித்தாள்.
படிப்பு ஒன்றே தன் வாழ்விற்கு துணை என்ற அறிந்தவள் போன்று அதை தவிர வேறு எதிலும் தனது கவனத்தை செலுத்தாமல் உறுதியாக நின்று படித்தும் முடித்துவிட்டாள்.
அவள் கல்லூரிக்கு செல்வதை கண்டு அக்கம் பக்கத்தினர் சொல்லால் வஞ்சித்தாலும் தூற்றினாலும் அதற்கெல்லாம் துவண்டு சுருண்டு விடாமல் துணிச்சலுடனே கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பு படிப்பதற்கான விண்ணப்பத்தை ஒரு பெரிய கல்லூரிக்கு அனுப்பி வைத்த திருப்தியோடு,அதை தனது தந்தையிடம் பகிரலாம் என்று தன் வீட்டினுள் காலெடுத்து வைத்த மணிகர்ணிகாவிற்கு அவளது வாழ்வில் அடுத்த பெரும் இடியாக வந்திறங்கியது தந்தையின் மரண செய்தி.
அதில் மீண்டும் ஒரு முறை துடிக்க துடிக்க அடி வாங்கியவளால் இப்போது எழுந்துக்கொள்ளவே முடியாத ஒரு நிலை.அவளது கனவுக்கோட்டை மீண்டும் ஒரு முறை இடிந்து சரிந்தது.
கடந்த சில நாட்களாகவே மூத்த மகளின் தற்போதைய நிலைக்கு தானும் ஒரு காரணமோ என்ற கவலை அவரது மனதை அரித்துக்கொண்டே இருக்க,மகளின் சுமங்கலியற்ற நிலை அவரது கண்ணில் படும் போதெல்லாம் அவரது துயரம் அதிகரித்து ஒரு கட்டத்தில் மாரடைப்பை ஏற்படுத்தி உயிரை குடித்திருந்தது.
தந்தையுடைய தற்போதைய கவலையைப் பற்றி அறிந்த ஒரே ஜீவன் மணிகர்ணிகா மட்டுமே.ஏனெனில் இறப்பதற்கு முந்தைய நாள் இரவு மகளின் அறைக்கு சென்று அவளிடம் மன்னிப்பை வேண்டிய கையோடு இதற்கு மேல் நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் உன் தந்தையுடைய ஆதரவும் பங்களிப்பும் இருக்கும் என்று உறுதியும் அளித்திருந்தார்.
தந்தை தன்னை புரிந்தக்கொண்ட நொடியில் உலகிலுள்ள அனைத்து இன்பங்களும் தனக்கே கிடைத்ததில் மலர்ச்சியோடு மேல் படிப்பிற்கான விண்ணப்பத்தோடு வீட்டிற்கு வந்த மணிகர்ணிகாவிற்கு இது மாபெரும் இழப்பு தான்.
இவளது குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தது என்பதால் வீட்டு தலைவனை இழந்ததால் குடும்பத்தின் பொருளாதாரமும் அகல பாதாளத்திற்கு தள்ளப்பட்டது.
அவர்களது பொருளாதாரம் நிலைமை கூட தந்தை இறந்த துக்கத்தில் சுருண்டு இருந்தவளுக்கு அவர்கள் குடியிருக்கும் வாடகை வீட்டின் முதலாளி வீட்டிற்கு வந்து வாடகை கேட்கும் போது தான் வீட்டின் தற்போதைய நிலை ‘என்ன’ என்பது அவளுக்கு புரிந்தது.
உடனே தனது விழிகளில் வழிந்த கண்ணீரை அழுந்த துடைத்த மணிகர்ணிகா மீண்டும் ஒரு முறை நிமிர்ந்து நின்றாள்.ஆனால் அதிலும் ஒரு மாற்றமாக முன்பு தனக்காக துக்கத்தை துரத்தி அடித்தவள்,இப்போது தன்னுடைய குடும்பத்தினருக்காக துக்கத்தை அடியோடு அடித்து துரத்தி போராட ஆரம்பித்தாள்.
மணிகர்ணிகாவிற்கு சமையல் கலையில் அதீத ஆர்வம் இருப்பதனால் அதற்கேற்றாற் போன்ற படிப்பை தேர்ந்தெடுத்திருந்தாள்.தன்னுடைய வருமானத்தில் வரும் பணத்தில் சொந்தமாக ஒரு உணவகம் ஆரம்பிக்க வேண்டும் என்பது தான் அவளது வாழ்வின் லட்சியம்.
அதனால் அவளது தற்போதைய குடும்ப சூழ்நிலைக்கு அத்தகைய படிப்பு கைக்கொடுக்காததால் விருந்துக்கள் மற்றும் விழாக்களில் சமையலுக்கான உத்தரவு பிரகாரம் சமையல் தொழில் செய்யும் ஒரு குழுவினரிடம் வேலைக்கு சேர்ந்தாள்.
ஆரம்பத்தில் அவளுக்கு கீழ் வேலைகளை மட்டுமே கொடுத்துக்கொண்டிருந்த அவளது முதன்மையாளர் அவளை பணியில் அமர்த்திய ஒரு வருடத்திற்கு பிறகு ஒரு காதணி விழாவில் சமைப்பதற்கான வாய்ப்பை வழங்கினார்.அதில் வெகு சிறப்பாக சமைத்து எல்லாரிடமும் பாராட்டை பெற்றவளுக்கு தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் கிடைக்க அதன்படி வருமானமும் அதிகரித்தது.
இதற்கிடையில் விஷேச நாட்கள் தவிர மற்ற பிற நாட்களில் வருமானம் எதுவும் இல்லாமல் இருப்பதாலும் மாலை வேளையில் எந்த வித பணியுமின்றி இருப்பதாலும் பள்ளி குழந்தைகளுக்கு வீட்டிலேயே துணைப்பாட வகுப்பு எடுக்க ஆரம்பித்திருந்தாள்.
அதிலும்,அவர்களது தேவைகளுக்கு ஏற்ப வருமானம் வந்ததால் குடும்பத்தில் பொருளாதார சரிவு எதுவும் நேராமல் ஒரே சீராக சென்று கொண்டிருந்தது.
இதற்கிடையில் வருடங்கள் பல உருண்டோடி அவளது இருபத்தி ஆறாவது வயதில் தன்னுடைய செலவில் தனக்கு கீழ் இருக்கும் முதல் இளைய சகோதரிக்கு திருமணம் செய்து வைத்தாள்.
அவளிடமிருந்து பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டவர்கள் அவளை அமங்கலி என்ற இழிச்சொல்லின் கீழ் கொண்டு வந்து மணமேடையில் முன்னிருத்தாமல் திருமணம் முடித்தவர்கள்,அதேப்போல் அவளது இரண்டாவது தங்கைக்கும் திருமணம் முடித்து வைத்தார்கள்.
அவளை குப்பையாக விலக்கி தள்ளியப்போதும் அதற்கென எந்த கவலையும் கொள்ளாமல் தன்னிலையில் உறுதியாக நின்று தன் கடமையை மேற்கொள்ள ஆரம்பித்தாள்.தொடர்ந்து பல வருடங்களாக மற்றவரின் அவமதிப்பையும் வெறுப்பையும் தாண்டி பயணம் செய்தவளுக்கு உடன் இருந்தவர்களின் இத்தகைய ஒதுக்கம் பெரிதாக தெரியாமல் ஒரு விரக்தியான மனநிலையை மட்டுமே தோற்றுவித்திருந்தது.
உடன்பிறந்த இரண்டு சகோதரிகளுக்கும் திருமணம் செய்து முடிக்கையில் அவளுக்கு முப்பது வயது முடிவடைந்திருந்தது.தனது கடமைகள் அனைத்தையும் முடித்தவள் இனியாவது தனக்கு பிடித்தமான ஒரு உபயோகத்தை தொடங்கலாம் என்று நினைக்கையில் முதல் சகோதரியுடைய வளைகாப்பு சீமந்தம் வந்து விட,மீண்டும் அதற்காக ஓடியாடி வருமானம் தீட்ட ஆரம்பித்தவள் தொடர்ந்து வந்த இரண்டாவது சகோதரியின் முதல் சீமந்தத்திற்கும் செலவு செய்து குழந்தை பிறப்பு வரை அனைத்திலும் முன்னின்று பொறுப்பை ஏற்று செய்து முடித்து ஓய்ந்துப்போகையில் அவளிற்கு முப்பத்தி இரண்டு வயது முடிவடைந்திருந்தது.
அதுவரை மற்றவரின் ஒதுக்கத்தையும் வெறுப்பையும் பரிசாக பெற்றப்போதும் கடிவாளமிட்ட குதிரை போல் யாருக்கும் செவிசாய்க்காமல் ஒரே நேர்க்கோட்டில் பயணித்துக்கொண்டிருந்தவளுக்கு சில நாட்களுக்கு முன்பு வீட்டில் நடந்த அந்த ஒரு நிகழ்ச்சி அவளின் இதயத்தை கூறுப்போட்டது.
அத்தகைய நிகழ்வு தான் இத்தனை வருடங்கள் குடும்பத்திற்காக தனது சொந்த வாழ்வில் என்னென்ன இழந்திருக்கிறோம் என்பதை தலையில் சம்மட்டியால் அடித்து தெரிவித்தது.
இருபத்தியொரு வயதிலிருந்து தனியொருத்தியாய் வேலை செய்து வருமானம் தீட்டி தங்கைகளை படிக்க வைத்து ஆளாக்கியதோடு தன்னை போல் அவர்களது வாழ்வும் சீரழிந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களின் படிப்பிற்கு ஏற்ற நல்லதொரு பணியில் அமர்த்தி சிறப்பான வருங்காலத்தை அமைத்துக்கொடுத்தவளை பார்த்து ‘வேசி’ என்ற பொருள்பட உபயோகித்த அந்த வார்த்தை அவளது தேகம் முழுவதையும் அனலில் இட்டது போல் பற்றி எரிய வைத்தது.
எந்தவொரு ஆண்மகனிடமும் சட்டென்று பேசி பழகியிராத மணிகர்ணிகா தன்னிடம் வந்து பேசிய இரண்டாவது தங்கையின் கணவரிடம் மரியாதை நிமித்தமாக இரண்டொரு வார்த்தை பேசிக்கொண்டிருப்பதை பார்த்த அவளது தங்கை ரோஷிணி வெகுண்டெழுந்து “என்னடி நமக்கு வயசாகிடுச்சு…பிற்காலத்தில் நமக்கு ஒரு துணை வேணும்னு என் புருஷனை வளைச்சு போட்டுக்கலாம்னு பார்க்கீறியா??” நாக்கை சாட்டையாய் சுழற்றி வீசியவளின் வார்த்தையில் அனலில் இட்ட புழுவாய் துடித்து விதிர்விதிர்த்து போய் நிமிர்ந்து தங்கையை நோக்கியவளின் விழிகளில் இருந்த வலியை உணராமல் வஞ்சகத்தில் சிவந்து உறுத்து விழித்து,
“என்னடி உன் மனசுல இருக்கிறதை அப்படியே சொல்லிட்டேனு அதிர்ச்சியாகிட்டியா??” என எகத்தாளமாக கேட்க,
அதில் கோபம் கொண்ட அவளது கணவன் சுசீந்திரன் “ரோஷி ஸ்டாப் இட்…அவள் உன் அக்கா என்று மனதில் வைத்து வார்த்தையை அடக்கி பேசு” அழுத்தமான குரலில் கண்டிக்க,
அதை அசட்டை செய்வது போல் நக்கலாய் ஒரு புன்னகையை உதிர்த்த ரோஷிணி “ஆடு நனையுதேனு ஓநாய் அழுதாம்” என போலியாக உச்சுக்கொட்டியவளை கண்டு ஆத்திரம் அதிகமாக,
“ரோஷி இது தான் உன் எல்லை…நீ முதல்ல இங்கிருந்து போ” என்று கத்தியவன் அத்துடன் மணிகர்ணிகாவிடம் “மன்னிச்சிடுங்க மதனி…ரோஷிக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்…” என இரு கரம் கூப்பி மன்னிப்பை வேண்டிட,
அதில் சங்கடமான மணிகர்ணிகா உள்ளுக்குள் இரத்தம் கசிந்தாலும் அதை அடக்கி இதழ்ப்பிரித்து வைத்து “பரவாயில்லைங்க…அவள் என் தங்கை…உங்க மேல் இருக்கும் அன்பினால் அப்படி பேசிவிட்டாள்…அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை… நீங்களும் அதை மறந்துவிடுங்கள்” என பெருந்தன்மையாக பதிலளிக்க,
தீடிரென்று கைத்தட்டல் ஓசை கேட்க இருவரும் ஒரே சேர திரும்பிப்பார்க்க புருவத்தை உயர்த்தி நக்கல் பார்வை பார்த்த ரோஷிணியின் இதழ்கள் இகழ்ச்சியாக சுழித்திருக்க “வாவ் வாவ் தாமரை அக்கா அப்போவே சொன்னாள்…உன் புருஷனை அடிக்கடி இங்க கூட்டிட்டு வராதே…மணி அக்கா என் புருஷனை பார்க்கிற பார்வையே சரியில்லை…அதனால் தான் அம்மா வீட்டிற்கு வரும் போது என் புருஷனை கூட்டிட்டு வரது இல்லை…நீயும் கூட்டிட்டு வராதேடி என்று சொன்னாள்…ஆனால் அவள் சொன்னப்போது கூட நம்முடைய அக்கா அப்படியெல்லாம் இல்லை என்று நினைத்தேன்…ஆனால் இருவரும் தனியாக நின்று பேசியதை பார்த்தப்பிறகு தான் இந்த மரமண்டைக்கு புரியது…தாமரை அக்கா கூறியது எத்தனை சாத்தியமான உண்மை என்பது!” இங்கு ஒருத்தியின் உயிர் சிறிது சிறிதாக உடலை விட்டு பிரிந்துக்கொண்டிருப்பது அறியாமல் அவளது தங்கையோ தனது மூத்த சகோதரியின் உயிர்கூடாகும் வரையிலும் விடமாட்டேன் என்பது போல் மேலும் பேசினாள்.
“மணியக்கா உன் நடிப்பு பிரமாதம்…அப்பாடி குரலில் என்னவொரு உருக்கம்…முகத்தில் என்னவொரு பாவனை…உன்னோட உண்மையான நிறம் தெரியலைனா நானே உன்னை நம்பியிருப்பேன்…ஆனால் உன்னோட நடிப்பெல்லாம் சினிமாவில் காட்டினால் ஆஸ்கராவது கிடைக்கும்…எனக்கிட்ட உன் பாச்சா பலிக்காது…” என கட்டை விரலை ஆட்டி உதட்டி பிதுக்கியவளை கண்ட மணிகர்ணிகாவிற்கு ‘தந்தை இறந்தப்போது தன்னை கட்டியணைத்து கதறியழுத அந்த பதின் மூன்று வயது பாவை இவள் இல்லை…இங்கு நிற்பவள் வேறு யாரோ…’ என்ற உண்மைப்புலப்பட்டதில் ஒரு உயிரற்ற பார்வை பார்த்தாள்.
தனது மனைவியின் வீண் தேவையற்ற பேச்சில் விழிகள் கலங்க தாயின் ஸ்தானத்தில் நிற்கும் அவலை பெண்ணின் மீது இரக்கம் கொண்டவனாக தன் இல்லதரசியின் கன்னத்தில் தன் கை முத்திரையைப் பதித்தான்.
அவன் இப்படியொரு செயலை செய்வான் என்று அங்கிருந்த இரண்டு பெண்களும் எதிர்ப்பார்க்கவில்லை.
அவ்விருண்டு பெண்களில் ஒரு பெண் அவனை எரித்து பொசுக்குவது போல் பார்த்திருக்க,மற்றொரு பெண் இதற்கெல்லாம் காரணமானவள் இவள் தான் என தவறாக பாவித்து தன் சகோதரியை விழிகளில் ஏறிய சிவப்புடன் பார்த்திருந்தாள்.
மணிகர்ணிகா தங்கையின் வார்த்தைகளால் மனமொடிந்திருந்த போதிலும் தான் ஆசையாக வளர்த்த தங்கை கண்கலங்கி நிற்பது உள்ளுக்குள் பிசைய தன் தங்கையின் கணவனை முறைத்து “மிஸ்டர் சுசீந்திரன் என்ன இது??என் தங்கையை என் கண்ணு முன்னாடியே அடிக்கிறீங்க…இதற்கு தான் உங்களுக்கு அவளை கல்யாணம் செய்து வைத்தோமா?” ஒரு அன்னையின் இடத்திலிருந்து தங்கையின் மீது அக்கறையுடையவளாய் கேள்வி எழுப்ப,
அதில் முகம் கன்றிப்போன சிவந்த முகத்துடன் தலைக்குனிந்து “சா…” என்று கூறும் போதே ரோஷிணி இடைமறித்தாள்.
“ஏய் போதும் நிறுத்துடி உன் ட்ராமவை…” என்று வீடு அதிர கத்தியவள்,
அத்தோடு நிறுத்தாமல் “கல்யாணமானதிலிருந்து என்னை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை…இன்றைக்கு என்னை கைநீட்டி அடித்திருக்கார்னா அதுக்கு காரணம் நீ தான்…அவரை இந்த மாதிரியெல்லாம் செய்னு நீ தான் தூண்டி விட்டிருக்கே…ச்சை நீயெல்லாம் ஒரு பெண்ணாடி…கல்யாணமான உடனே புருஷனை கொன்னுட்டே…அங்கிருந்து இங்க வந்தவுடனே நம்ப அப்பாவை கொன்னுட்டே…அடுத்து என் புருஷனையும் கொல்லாம்னு பார்க்கிறீயா?அதுகெல்லாம் நான் விடமாட்டேன்…உனக்கு அப்படி எவனாவது வேணும்னா உனக்கேத்த மாதிரி ஆறுபது வயசு கிழவன் இருப்பான்…அவனை கட்டிக்கிட்டு கொல்லு…ச்சை…இனிமே உன் முகத்திலே முழிக்க மாட்டேன்” அருவருப்புடன் முகத்தை சுழித்து ஆவேசமாக பேசி முடித்த ரோஷிணி அங்கிருந்த தனது கணவனின் கைப்பிடித்து “இனிமே எனக்கு பிறந்த வீடு என்ற ஒன்று இல்லவேயில்லை…எனக்கு தெரியாமல் ஏதாவது செய்யலாம்னு நினைச்சீங்க…அப்புறம் என்னை உயிரோடு கொளுத்திப்பேன்… ஜாக்கிரதை” ஆத்திரத்தில் மதியிழுந்து வார்த்தைகளை அள்ளி வீசியவள் பிறந்து இரண்டு வாரமேயான பச்சிளங்குழந்தையைத் தூக்கிக்கொண்டு பிறந்த வீட்டின் உறவை ஒட்டுமொத்தமாக முறித்துக்கொண்டு வெளியேறினாள்.
மணிகர்ணிகா நின்ற இடத்திலேயே அதிர்ச்சியுடன் எத்தனை மணிநேரம் நின்றிருந்தாளோ தெரியவில்லை அவளது தாய் வந்து “மணி” என்று தோளின் மீது வைவைத்த அடுத்த நொடி சுய உணர்வு பெற்றவள் உணர்ச்சியற்ற முகத்துடன் தாயினை நோக்க அவரது விழிகளிலோ கண்ணீர் ஆறாக பொங்கி பெருகிக்கொண்டிருந்தது.
அவரது மனம் முழுவதும் பாரமாய் கணக்க தனது வாழ்வில் முதன்முறையாக பெரிய மகளின் மீது அக்கறை கொண்டவராய் ‘சிறு பெண்களுக்கு நல்வாழ்வு அமைத்து கொடுக்கவேண்டும் என்று சுயநலமாய் நினைத்தேனே ஒழிய வாழ்வை இழந்து நின்றாலும் இருபது வயதில் நீயும் சிறு பெண் தான் என்பதை அறிய மறந்தேனே மணி…நீ இவ்வாறு நிர்கதியாய் நின்று வசவு மொழிகளை வாங்குவதற்கு நானே காரணமாகிவிட்டேனே கண்ணே…இந்த பாவியை மன்னிப்பாயா கண்மணி…’ மானசீகமாய் மனதில் நினைத்து விழிகளாலே அவளிடம் மன்னிப்பை யாசகமாய் பெற கையேந்தி நின்ற தாயின் மீது இரக்கம் சுரக்க மற்றதையெல்லாம் மறந்தவளாய் அவரை இறுக்கியணைத்து தன்னுடைய ஆதரவை தாயிற்கு அளித்தாள்.
உடைந்துப்போய் கண்ணீர் விட்டு கதறியழுதவரை தன்னோடு அணைத்துக்கொண்டவளின் சிந்தனையில் இத்தனை வருடங்களாய் கடந்து வந்த பாதை பாடமாக ஓடி கொண்டிருந்தது.
ஆனால் அவள் காலடி எடுத்த வைத்த தடங்கள் முழுவதும் அவளுக்கானதாக எதுவுமில்லாமல் தனது குடும்பத்தினருக்காக எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் ஆழமாக பதிந்திருந்த பெண்ணவளின் காலடி சுவடுகளுக்கான அடையாளம் மட்டுமே இருந்தது.
அந்நொடியில் மூளையில் பளிச்சென்று இத்தனை வருடங்களாய் தனக்காக ஒரு துரும்பை கூட அசைத்ததில்லை என்ற அசாத்திய உண்மை புலப்பட்டது.அவளது வாழ்வின் வரலாற்று பக்கங்களில் எந்தவொரு இடத்திலும் அவளுக்கென ஒரு பகுதி இல்லைவே இல்லை.ஆனால் அதற்குள் அவளது வாழ்விற்கான புத்தகம் முக்கால் வாசி பாகத்தை முடித்திருந்தது.மீதியிருக்கும் இருப்பதைந்து சதவீகத பக்கங்களிலாவது தனக்காக தன் லட்சியத்திற்காக வாழ்ந்து தன் பெயரை நிலைத்து நிற்கும் படி பதிய செய்யவேண்டும் என்று வைராக்கியத்தோடு முடிவெடுத்த மணிகர்ணிகா என்னும் வீரமங்கை தன் எதிர்க்காலத்தை தேடி புறப்பட தயாரானாள்.