“அடியே நான் பெத்த அழகு சுந்தரி…இன்னும் உள்ளுக்க என்னத்தடி நோண்டிட்டு கிடக்கவே?” என சமையலறையிலிருந்து வாசமல்லி கத்திக்கொண்டிருக்க,
“யம்மா இப்போ என்னத்துக்கு இந்த கத்து கத்தறவ…வரேன் இரு” என பதிலுக்கு அறையின் உள்ளிருந்து ஒரு குரல் சிடுசிடுப்புடன் வெளியே வந்தது.
“அடியே வந்தேன்னு வைச்சுக்கோ ஏறி குறுக்குலே ஒண்ணு மிதிப்பேன்…வெரசா வந்து தொலைடி…காலேசுக்கு நேரமாச்சு” என இவரும் தொண்டை கிழிய கூப்பாடுப்போட்டார்.
‘இந்தம்மாவுக்கு என்ன தான் பிரச்சனை?’ என முணுமுணுப்போடு தாயின் அதட்டலை கண்டுக்கொள்ளாமல் நிதானமாக தன்னுடைய முகத்திற்கு ஒப்பனை செய்துக்கொண்டிருந்தாள் அவரது தவப்புதல்வி மதிவதனி.
மதிவதனி பெயருக்கு ஏற்றது போல் அறிவும்,அழகும் ஒருங்கே பெற்ற இருபது வயது குமரி.
வெண்ணெயில் குங்குமத்தை குழைந்தெடுத்த சிவந்த நிற பளபளத்த மேனியுடையாள்.ஐந்தரை அடி உயரம்.
வில்லாய் வளைந்திருந்த இரண்டு புருவங்கள்.கோழி குண்டை பதித்து வைத்ததுப்போன்ற அழகிய பெரிய கண்கள்…புருவத்தை தீண்ட ஆசைக்கொள்ளும் நீண்ட இமைமயிர்கள்…கூரான நாசி…அதன் வடிவை சீர்தூக்கி காட்டும் ஒற்றை பச்சைக்கல் மூக்குத்தி…உதட்டு சாயம் இல்லாமலே சிவந்திருந்த செர்ரி பழ உதடுகள்…இடை தாண்டி வளர்ந்திருந்த கார்மேக கூந்தல்…பார்ப்போரை சுண்டியிழுக்கும் ஆபத்தான எழில் வளைவுகளை கொண்ட பேரழகி.
மொத்தத்தில் பிரம்மன் செதுக்கி வைத்த சிற்பம் என்றே அவளை கூறலாம்.
வாசமல்லி மற்றும் சீமைத்துரையின் தலை மகள்.
ஆனால் அவளது தோற்றமும் நிறமும் தாய் தந்தைக்கு சற்றும் பொருந்தாத பளிங்கு நிறத்தில் இருந்ததினால் ஊராரின் பலர் கண்கள் அத்தனையும் மதிவதனியின் மீதே நிலைப்பெற்று இருந்தது.
அதனால் மகளை அவர்கள் இருவரும் மிகவும் பாதுகாப்பாக கைக்குள் வைத்து பேணி வளர்க்கின்றார்கள்.
மேலும்,முதலில் ஆண்பிள்ளை எதிர்ப்பார்த்து அது பெண்ணாக பிறந்துவிட்டதினால் உண்டான சலிப்பும்,இவளது அழகின் மீது உண்டான கடுப்பும் ஆதங்கமாக சில சமயங்களில் வெளிப்படும்.
இவளிற்கு அடுத்ததாக பிறந்த செந்தூரப்பாண்டியை பெற்றோர்கள் இருவரும் அவன் ஆண் என்ற ஒரு காரணத்திற்காக தங்க தாம்பலத்தில் வைத்து தாங்க,அவள் பெண் என்பதற்காகவே காலில் குத்திய முள் போல வேண்டா வெறுப்பாக நடத்துவார்கள்.
அதற்காக ஒரேயடியாக பாசமில்லை என்று கூறிவிட முடியாது.
ஆணாதிக்க சமுதாயத்தில் பிறந்து வளர்ந்ததினால் உண்டான கலாச்சாரம் அது!
இப்போது கல்லூரி செல்லும் பேருந்து கிளம்புவதற்கு இருபது நிமிடங்களே இருந்ததினால் அவளின் தாய் வாசமல்லி “மதிஈஈஈஈ…” என அவ்விடமே அதிர குரல் கொடுத்தவுடன்,
“ஷப்பா” என பெருமூச்சோடு “உனக்கு இப்போ என்ன தான்மா பிரச்சனை?” என்ற கேள்வியுடன் சமையலறைக்குள் வந்து நின்றாள் அவரது மகள் மதிவதனி.
உள்ளே வந்த மகளை இடையில் கைவைத்து மேலிருந்து கீழாக மூச்சிறைக்க கோபத்தோடு நோக்கிய வாசமல்லி “ஏன்டி நீ காலேசுக்கு போறீயா?இல்ல எவனையாவது இழுத்திட்டு அப்படியே ஓடப்போறீயா?எதுக்கு உனக்கு இம்புட்டு மேக்கப்பு?” என எரிச்சலோடு முகத்தை சுழிக்க,தாயின் கேள்வி மகளின் நெஞ்சத்தை சுருக்கென்று தைத்தது.
ஆண்கள் சிலரின் விழிகள் சுவாரசியமாக மதிவதனியின் மீது பதிந்து மீளுவதை அறிந்ததினால்,அவளின் எளிய அலங்காரமே வாசமல்லியின் வயிற்றில் நெருப்பை பற்ற வைத்தது.
ஆனால் அவருள் எரிந்த அச்சத்தீயிற்கு மகளை இரையாக்கும் நிகழ்வும் அவ்வப்போது நடக்கும்.
அதில் ஒன்றே இத்தகைய இழிவான பேச்சுக்கள்!!
தாயின் வார்த்தையில் ஒரு நொடி சுருங்கிய முகம் சடுதியில் சாதாரணமாக மாற “அப்படி என்ன மேக்கப்பு போட்டிருக்கேனு என்னைய வைய்யறவ…பவுடரை இலேசா பூசி பொட்டு வைச்சிருக்கேன்…அதுக்கு இம்புட்டு அக்கப்போரா?” என ஆதங்க குரலில் தாயின் மனம் நோகாதவாறு அவரின் தவறை சுட்டிக்காட்டினாள் மதிவதனி.
வாசமல்லிற்கும் மகளிடம் அளவுக்கதிகமான வார்த்தைகளை உதிர்த்துவிட்டோம் என்ற குற்றவுணர்வு அதிகரித்ததால் ‘அச்சோ பாவம் புள்ள’ என அக்கணம் மௌனமாக இருக்க,
அதனை கண்ணுற்று விரக்தியாக தலையசைத்து மூச்சை இழுத்து வெளியிட்டவள் “அம்மா காலையில சாப்பிட நேரமில்ல…அதனால காலைக்கும் சேர்த்து டிபனு கட்டிரு…நான் காலேஜில போய் தின்னுக்கறேன்” என பேச்சை திசைமாற்றி அங்கிருந்து வெளியே வந்தாள்.
அவரும் அவ்வாறு பேசியதற்காக வருந்தி சப்தம் செய்யாமல் பாத்திரத்தில் சாப்பாடு கட்ட ஆரம்பித்தார்.
அவையெல்லாம் அடுத்த சில நிமிடங்கள் வரையிலும் மட்டுமே தொடரும் என்பதை எண்ணி அலட்சியமாய் தோளை குலுக்கி கல்லூரிக்கு புறப்பட ஆயத்தமானாள் சிறியவள்.
அதேநேரம் மகளிடம் உணவுப்பையை கொடுக்க வந்தவர்,மகள் துப்பட்டாவை சரியாக பின் செய்யாமல் இருப்பதை கண்டவருக்குள் மீண்டும் சாத்தான் குடிப்புகுந்து விட்டது.
“ஏன்டி கூறுக்கெட்ட குப்பி” என அவளின் தோளில் சுள்லென்று ஒரு அடி வைத்தவர்,
“உனக்கு சொன்னா மட்டும் ஏழூருக்கு சேர்த்து கோவம் பொத்துக்கிட்டு வருதில்லை…என்னத்துக்குடி இதெல்லாம் துறந்துக்காட்டிட்டு நீ காலேசு பொறவ” என துப்பட்டாவை இழுத்து மார்பிற்கு கீழ் இறக்க,
அதுவரை இழுத்து பிடித்திருந்த பொறுமை இப்போது காற்றில் பறந்து விட “யம்மா நீ என்ன லூசா?எதுக்கு சும்மா சும்மா என்னை வஞ்சிட்டே இருக்கவ…பின் குத்தறதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு?” என முகம் சிவந்து கத்தினாள்.
உடனே பல்லை கடித்து நறுக்கென்று மகளின் கரத்தில் கிள்ளினார்.
அவள் “ஆ”என அலறியதை பொருட்படுத்தாமல் “என்னாடி வாய் ரொம்ப நீளுது…பட்டணத்துக்கு போய் மெத்த படிக்கிற பவுசோ?நான் மட்டும் உங்க ஐயன்கிட்ட ஒத்த வார்த்தை இந்த புள்ளைய படிக்க அனுப்பாதேனு சமிக்க காட்டன…அம்புட்டுதேன்…உன் காலேசுக்கு முழுக்கு போட்டுட்டு கண்ணாலம் கட்டி துரத்திவிட்டிருவாக…சாக்கரதை” என வினயமாக பேசிய தாயை சில நொடிகள் வெறித்தவள்,
அவரின் பார்வையில் கனல் கூடுவதை கண்டு நேரடியாக முறைக்க முடியாமல் பையில் புத்தகத்தை வைப்பது போல் குனிந்துக்கொண்டாள்.
மகளை அடக்கியதற்காக தன்னையே மெச்சிக்கொண்டு “ஒத்த வார்த்த சொல்லக்குள்ளயே கேட்டா தான் என்னவாம்…எல்லாம் உன் மாமனும் அம்மாச்சியும் குடுக்கற செல்லம்…தெனவெடுத்த கழுதை” என மகளை வாயிற்கு வந்தது போல் வசைப்பாடிக்கொண்டே “ஏய்யா ராசா…பள்ளிக்கூடத்துக்கு நேரமாவது வெரசா எந்திரிச்சு குளிய்யா…” என தனது இரண்டாவது பிள்ளையை எழுப்ப அவனறை நோக்கிச் சென்றவரின் குரல் தேய்ந்து மறைந்துப்போனது.
தாய் கிள்ளிய இடத்தில் தோள் உரிந்து குருதி கசிந்து வலிக்க,அதை நோக்கியவளின் கண்கள் கலங்கியது.
‘இந்த வூட்டுல வந்து பொறந்ததுக்கு ஊரணியில் விழுந்து சாவலாம்…நின்னா குத்தம்…நடந்தா குத்தம்…உட்கார்ந்தா குத்தம்…பொண்ணா பொறந்தது என் தப்பா?’ என இதயம் வெடிக்க முணுமுணுத்தவாறே பின்னூசியை எடுத்து துப்பட்டாவை கைகள் நடுங்க தோள் சட்டையோடு பொருத்தி பின் குத்தினாள்.
அச்சமயம் மகளை பேருந்து நிலையத்தில் விடுவதற்காக தயாராகி வெளிவந்த சீமைத்துரை “பாப்பா காலேசுக்கு புறப்பட்டியா?” என கேட்டுக்கொண்டே வரவேற்பறைனுள் நுழைய,
அதுவரை ‘விழவா?வேண்டாமா?’ என்ற விவாதத்துடன் கண்ணில் துருத்திக்கொண்டிருந்த கண்ணீர் தந்தையின் கணீர் குரலில் படீரென்று கண்களுக்குள்ளே அடைக்கலம் புகுந்துவிட்டது.
ஏனெனில்,மனைவியின் சொல் தட்டாத அன்பான கணவன் சீமைத்துரை என்பது அவள் அறிந்ததே!!
விஷயம் அறிந்தால் தனக்கு ஒரு அறிவுரை கட்டுரை வாசிக்க தொடங்கிவிடுவார் என்பதால் பெருமூச்சை இழுத்து விட்டு “ஐயா நான் ரெடியாகிடேனுங்க…போகலாம்” என பவ்யமாக பதில் கொடுத்தாள்.
அவரோ கன்னத்தை மறைத்திருக்கும் வகையில் வளர்ந்திருந்த முரட்டு மீசையை தன் கையால் ஒரு முறை முறுக்கிவிட்டு “சோறு தின்டாச்சா பாப்பா?” என வெண்கல குரலில் கேட்க,
அவளோ விழி விரிய எச்சில் கூட்டி விழுங்கி “இல்லீங்கய்யா…காலேசுக்கு நேரமாச்சு…அதேன் பஸ்ஸில போய் சாப்பிட்டுக்கிறேனுங்க” உள்ளேச் சென்ற குரலில் மிரட்சியோடு பதில் கொடுக்க,
அவள் நினைத்தது போலவே வெடுக்கென்று அவளை நோக்கி திரும்பியவர் “வயசுப்புள்ள நாலு மணிக்கு எந்திரிச்சு வூட்டு வேல செஞ்சு வெரசா காலேசுக்கு கிளம்பறதை வுட்டுப்பட்டு…நேராச்சுன்னு என்னல சோறு உண்ணாம புறப்படற பழக்கம்…இந்த கோக்கு மாக்கைதேன் உங்க காலேசுல சொல்லி தராகளா?” என படபடவென பொரிந்து தள்ளியவரின் முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடியது.
அதில் மிரண்டு ஓரடி பின்னடைந்தவள் ‘என்னைய மட்டும் எல்லாரும் ஈஸியா திட்டிப்புடுங்கல’ என உள்ளுக்குள் நொந்துக்கொண்டு “ஐயா இன்னைக்கு பரிட்சை…நாலு மணியிலிருந்து படிச்சிட்டு இருந்தேங்ய்யா…அதேன் மணிய சரியா கவனிக்கலை” என நலிந்த குரலில் உரைக்கவும்,
“அப்படியா” என மீசையை இடது கையால் தடவியவரின் முகத்திலிருந்த கோபம் மறைய அதே அதட்டலான பாவனையுடன் “பாப்பா இன்னைக்கு ஒரு நாள் போனா போகட்டும்…இனிமேட்டுக்கு எம்புட்டு காலமானாலும் ஏழுரை மணிக்கெல்லாம் புறப்பட்டு வாசல்ல நிக்கணும்…புரிஞ்சதா?” என மிரட்டினார்.
அவளோ கைகளை பிசைந்தவாறே அவரின் தோரணையில் பயந்து ‘சரி’ என்பது போல் அவசரமாக தலையசைத்த வேளையில் “ஏய்யா கொல்லையில வெந்நீர் விளாவி வைச்சிருக்கேன்…வெரசா போய் குளிச்சிட்டு வந்திடுய்யா…ஆறிட போகுது…செத்த எழுந்து வாய்யா” என மகனை செல்லமாய் கொஞ்சிக்கொண்டே வெளியே வந்த வாசமல்லி மகளும் தந்தையும் தயாராய் இருப்பதை கண்டு விட்டு அவசரமாக வரவேற்பறைக்கு வந்தார்.
படபடப்புடன் முகத்திலிருந்த வியர்வையை துடைத்தவாறே “ஏனுங்க மாமோய்…அதுக்குள்ள மதிய விட கிளம்பிட்டீங்களா?” என,அவரின் முகத்தில் மதிவதனியிடம் பேசிய அலட்சியப் பாவனைக்கான அடையாளம் சிறிதும் இல்லை.
அதற்கு நேர் மாறாக வாஞ்சை குழைந்து இருப்பதை கண்ணுற்ற மதிவதனிக்கு ஏக்கத்தோடு நெஞ்சம் பிசைந்தது.
அதற்குள் பூஜையறையில் இருந்த திருநீற்றை நெற்றியில் பட்டையாய் தீட்டிய சீமைத்துரை “ஆமா மல்லி…புள்ளைக்கு பரிட்சைக்கு நேரமாச்சாம்…நான் வெரசா போய் புள்ளைய பஸ் நிறுத்தத்தில வுட்டுப்புட்டு வாரேன்…வந்தவுடனே சாப்பிட்டு மதுர டவுனு பக்கம் ஒரு சோலி கிடக்கு…போவணும்” என பேசிக்கொண்டே தனது இருசக்கர வாகனத்தின் திறவுக்கோலை எடுத்துக்கொண்டு காலணி அணிய வாசல் நோக்கி நடந்தார்.
முன்பு தாய் தன்னை திட்டிய சினத்தில் உம்மென்ற முகத்தோடு அவரிடம் சொல்லிக்கொள்ளாமல் பையை இருப்பக்க தோளிலும் மாட்டிக்கொண்டு திரும்பிய மகளை கண்டவுடன் மீண்டும் அவர் முகத்தில் சிடுசிடுப்பு வந்து ஒட்டிக்கொண்டது.
“ஏய் கோட்டிக்கார சிறுக்கி…அங்கனவே நில்லுடி” என உச்சஸ்தானியில் கத்தியவாறே அவளருகே வந்தார்.
அவள் நின்று தாயை நோக்கி ‘என்ன?’ என்பது போல் சலிப்புடன் ஏறிட,
அருகில் வந்து அவளின் தலையில் ஒருமுறை தட்டி “சோத்து டப்பாவை எடுத்து வைச்சியா இல்லையாடி?” என அவளின் முன்பு நின்று வேகமாக வினவினார்.
அவளோ மீண்டும் அவர் அடித்த கடுப்பில் “ம்” என்று அவர் முகம் காண விரும்பாமல் தலைக்குனிந்து முனக,
அவளின் தாடையை பற்றி நிமிர்த்தி “ஏதாவது சொன்னாக்க உடனே நோபாலம் இழுத்துக்கறது. உன் வயசு புள்ளைகளுக்கு நல்லது சொன்னாவே புடிக்காதே…சொன்ன பேச்ச கேட்கறதா இருந்தா படிக்க போ…இல்லைனா வூட்டோட அடைஞ்சு கிட…கண்ணால…” என மீண்டும் அவரது வசைவுப்படலத்தை ஆரம்பிக்கவும்,
நல்லவேளையாக சீமைத்துரை இடைப்புகுந்து “மல்லி புள்ள காலேசுக்கு போகும் போது என்ன பேச்சு இது…செத்த அமைதியா இரு” என அவரை அதட்டியவுடன்,வாசமல்லி கப்பென்று வாயை மூடிக்கொண்டார்.
“பாப்பா ஆத்தா எது சொன்னாலும் உன் நல்லதுக்கு தான் சொல்லுவாக…அவக என்ன சொன்னாலும் கேட்டு சூதானமா நடக்கணும்” என மகள் தவறு செய்தது போல் அவளிற்கும் சேர்த்து அறிவுரை கூறினார்.
இவையனைத்தையும் கேட்ட பாவையவளிற்கு எரிச்சலாக இருந்தாலும்,இது தினந்தோறும் நடக்கும் கூத்து என்பதால் மானசீகமாக ‘ஏய்யா ஐய்யனாரே…வெரசா என்னைய இந்த கோளாறு புடிச்ச கும்பல்கிட்டயிருந்து காப்பாத்துய்யா... முடியல’ எப்போதும் போல் தனது இஷ்ட தெய்வத்திடம் வேண்டுதலை முன்வைத்தே புறப்பட்டாள்.
செல்லும் மகளின் முதுகை முறைத்த வாசமல்லி ‘இந்த கழுதைக்கு கொழுப்பு கூடிப்போச்சு…காலேசு விட்டு வூட்டுக்கு வரட்டும்…இன்னைக்கு நொக்கற நொக்கல இரண்டு நாளுக்கு எந்திரிக்கவே கூடாது’ என தனக்குள்ளே சூளுரைத்து மகனிற்கு மீண்டும் திருப்பள்ளி எழுச்சி பாட கிளம்பினார்.
******
வேட்டியை தொடையின் இடுக்கில் விட்டு மடித்து கட்டி வெற்றுடம்புடன் தன்னுடைய நிலத்தில் குனிந்து பணிசெய்துக்கொண்டிருந்தான் காளையன்.
அவனருகே அவனது தோழன் கதிர்வேலும்,மேலும் சில ஊர் மக்களும் வெகு மும்முரமாக பணிப்புரிந்துக்கொண்டிருந்தார்கள்.
அச்சமயம் நாற்று நடவும் போது அங்கு வேலை செய்யும் மக்கள் சோர்ந்து விடாமல் இருப்பதற்காக ஏதாவது ஒரு பாடலை பாடுவது வழக்கம்.
இன்று ஒரு ஆண்மகன் தனது இசை கச்சேரியை தொடங்கி வைத்தான்.
“கடிய நடவும் பெண்ணே – உன்
கால் அழகைப் பார்ப்போம்
வீசி நடவும் பெண்ணே – உன்
விரல் அழகைப் பார்ப்போம்
சாஞ்சி நடவும் பெண்ணே – உன்
சாயல் நடை பார்ப்போம்” என அங்கு நாற்று நடவும் பெண் ஒருவள் மீது கொண்ட விருப்பத்தினை பாடலின் மூலம் மறைமுகமாக தெரியப்படுத்தினான்.
அதனை அறிந்த பெண்ணும் அவனுடைய ஆசை வார்த்தைகளுக்கு அடிப்பணிவதில்லை என்பது போல்,
“நான் முன்னே நடந்தாலும்
என் அன்ன நடை போமா
நான் சாஞ்சி நடந்தாலும்
சாயல் நடை போமா
அசைஞ்சி நடந்தாலும் – என்
அன்ன நடை போமா
என் விரலழகுக் கேத்த
வீரனல்ல போடா
என் அன்ன நடைக்கேத்த
ஆணல்ல போடா
என் பெண்ணு நடைக்கேத்த
புருஷனல்ல போடா” என அப்பெண்ணும் தன்னுடைய எதிர் பாட்டின் மூலம் அவனது வாயை அடக்கிவிட்டாள்.
அதில் அருகில் பணிப்புரிந்த ஆட்கள் அனைவரும் அந்த ஆடவனை பார்த்து நக்கலாய் சிரித்து வைத்தார்கள்.
அவனோ முகம் வாட ‘இந்த அசிங்கம் உனக்கு தேவையா?’ என்ற ரீதியில் தன்னை தானே சுட்டிக்காட்டி பாவமாக கேட்க,அவனது பாவனை கண்டு அவ்விடமே சிரிப்பலையால் நிறைந்தது.
இவ்வாறு பல்வேறு விதமான கலாட்டக்களோடு நாற்று நடும் பணி நடந்துக்கொண்டிருக்க காளையனோ யாவரின் கண்ணிற்கும் புலப்படாத சிறு இதழ் முறுவலுடன் விறைப்போடு பணியை செவ்வனே செய்துக்கொண்டிருந்தான்.
அக்கணம் அங்கிருந்த சூழ்நிலையை இறுக்கமாக்கும் வகையில் அவர்களுக்கு அருகில் நாற்று நட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்மணி “ஏய்யா காளை…இன்னும் எத்தினி நாளைக்கு தான் மொட்டப்பயலா சுத்திட்டு திரிவே…ஒரு பொண்ண பார்த்து கண்ணாலம் கட்டவேண்டியது தான?” என அனைவரும் கேட்கும் வகையில் சப்தமாக வினவ,
அவனின் கரங்களோ ஒரு நொடி வேலை நிறுத்தம் செய்து,மீண்டும் தன் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டது.
முகத்திலிருந்த முறுவல் மறைந்து மாயமானது.
கதிர்வேலோ படபடப்புடன் ‘அவனே யாரு மேலடா பாயலாம்னு காத்திட்டு இருக்கான்ய…இதுல இந்த கிழவி வேற’ என மனதிற்குள் புலம்பிக்கொண்டே வேலையில் கவனமாக இருக்க,
“ஏய்யா நான் கேட்டதுக்கு பதிலு சொல்லாம செவுடன் காதுல ஊதின சங்கு மாதிரி மவுனமா இருந்தாக்க என்னய்யா அர்த்தம்?” என மீண்டும் அந்த பெண்மணி வம்பை விலைக்கொடுத்து வாங்க,
‘ம்க்கும்…இன்னைக்கு இந்த பொம்பளை நாக்குல சனிப்புடிச்சிருக்கு…அவனை சீண்டி அவன் குப்புற படுக்க வைச்சு கும்மற வரைக்கும் சும்மாவுடாது போல’ என கதிர் முனகினான்.
இப்போது ஆடவனின் முகம் கடுகடுக்க “இந்தா கண்ணம்மா இப்போ உனக்கு என்ன பிரச்சனைங்கற?” என தலையை திருப்பி பல்லை கடித்தவாறு வினவ,
“ம்க்கும்” என தாடையை தோளில் இடித்து நொடித்துக் கொண்ட அந்த பெண்மணி “என் புருஷன் தங்கமா தாங்கயில எனக்கு என்ன பிரச்சன இருக்கப்போவது…எல்லாம் உன் ஆத்தா தான் மூக்கால அழுதுக்கிட்ட கிடக்கறவ…அவ ஆசைக்கு ஒரு கண்ணாலம் தான் கட்டிக்கிறது” என இழுவையாக கையை ஆட்டி பேசியவரின் பேச்சில் எரிச்சலடைந்தான் காளையன்.
வெடுக்கென்று தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றவனின் கண்கள் சிவக்க “ஏய் சோலிக்கு வந்தம்மா பார்த்தம்மானு போயிட்டே இரு…நா கண்ணாலம் கட்டிக்கிறேன் இல்ல மண்ணோட மண்ணா போறேன்…உனக்கு என்னல?” என அவ்விடமே அதிர கர்ஜித்தவனை கண்டவரின் குரலே முதுகுத்தண்டை சில்லிட வைத்தது.
ஆஜானுபாகுவான தோற்றத்தில் கருப்பண்ணசாமி போல் அருவாள் இல்லாத குறையோடு நின்றிருந்த காளையனை பீதி படர்ந்த முகத்தோடு பார்த்திருந்தவரின் கால்கள் வெடவெடக்க தடுமாறி சேற்றில் விழுந்தார்.
அவர் முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்ட அச்சத்தில் தன் மீசையை முறுக்கி தாடையை தடவி ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தியவனின் முகத்தில் சினம் மிச்சம் ஒட்டியிருந்தது.
இடையில் ஒற்றை கைகுற்றி “இந்தாரு கண்ணம்மா…இன்னொருக்கா என் ஆத்தா மூக்கால அழுவுது நாக்கால அழுவுதுனு அலப்பறைய கூட்டின வகுந்திடுவேன்…வகுந்து…பொறவு காளையன் அகராதிப்புடிச்சவன்னு பட்டறைய போட்டு பஞ்சாயித்த கூட்டினாலும் ஒரு பிரயோசனமில்ல…சொல்லிப்புட்டேன்” என விரல் நீட்டி நாசி விடைக்க நாக்கை கடித்து மிரட்டியவனின் தோரணையை பார்த்ததற்கு பிறகும் அவர் வாயை திறப்பார்.
உடனே அவனிற்கு வலதுப்புறம் இருந்த ஒரு வயதான மூதாட்டியோ “ஏய்யா அவளைய எதுக்கு இப்போ வைய்யற?அவ உன் மேல இருக்க அக்கறையால தானே அப்படி பேசறா?எதுக்கு இப்படி கோவிக்கற?” என கண்ணம்மா கீழே விழுந்த பரிதாபத்தில் நியாயம் கேட்க,
வெடுக்கென்று தன் பரட்டை முடி சிலும்ப திரும்பிய காளையன் “ஆத்தா விஷயம் புரியாம கண்ணம்மாவுக்கு வக்காலத்து வாங்காத” என அவரிடமும் எகிறியவன்,
திரும்பி கீழே விழுந்து திருதிருவென விழித்துக்கொண்டிருந்த கண்ணம்மாவை தீச்சுடும் விழிகளால் உறுத்து விழித்தான்.
அவனது காதில் கண்ணம்மா ஒரு நாள் வேறொரு பெண்மணியிடம் ‘இந்த காளையன் சல்லிக்கட்டுல பரிசு வாங்கி என்னா பிரயோசனம்?ஒத்த பொம்பள புள்ள இவன ஆம்பளையா மதிச்சு கட்டமாட்டிக்குது…பொறவு என்னாத்துக்கு இவனுக்கு மீச?ஆம்பளைனு மதப்பு’ என ஜாடையாக பேசியது,ஏற்கனவே இவனது செவியை வந்தடைந்து அவனின் இரத்தக்கொதிப்பை அதிகரித்திருந்தது.
விஷயம் அறிந்தும் பெண்களின் மீது அவனிற்கு இருந்த மதிப்பே அவனை கட்டுப்படுத்தி அடக்கி வைத்திருந்தது.
ஆனால் இந்தவொரு சமயத்தில் அது ஆத்திரமாய் வெளிவர “இந்தாரு ஆத்தா…அக்கறையா யாரு கேட்கறா?குடைச்சலா யாரு கேட்கறானு எனக்கு நல்லாவே தெரியும்…எதுவும் தெரியாமல் கசகசன்னு பேசிட்டு திரியாம உன் சோலியா பாரு…போ” என உச்சஸ்தானியில் கத்தி அந்த வயதானவரின் வாயையும் அடக்கிவிட்டான்.
அந்த மூதாட்டியும் முகத்தை சுழித்து ‘சரியான கோளாறு புடிச்சவன்… இவன்கிட்ட மனுசன் பேசுவானா?’ என நொடித்துக்கொண்டு வேலையை பார்த்தார்.
‘அது’ என திமிராக அவரின் மீது ஒரு பார்வையை உதிர்த்தவனின் விழிகள் அந்த கண்ணம்மாவை ஓர விழியால் சுட்டெரித்துக்கொண்டிருந்தது.
அந்த பெண்மணியோ அவனது பார்வையிலே மிரண்டு சேற்றில் இருந்து அவசரமாக எழுந்து ‘ஆத்தாடி ஆத்தா…ரூட்டா பார்த்தே நம்மள சோத்துக்கு வெஞ்சனமா வைச்சு முழுங்கிடுவான் போல…கிரகம் புடிச்சவன்’ என மனதிற்குள்ளே புலம்பியவரின் உடம்பில் இருந்த உயிர் உறைந்துப்போனது.
அதனால் அவனிடமிருந்து இருபது அடி தள்ளிச் சென்று நின்றுக்கொண்டார்.
அதில் இளக்காரமாக இதழை வளைத்த காளையனின் மனமோ நெருப்பாய் கனன்றுக் கொண்டிருந்தது.
அமைதியும் பாகுமானமும் அவனது வீட்டினரிடம் மட்டுமே!!
ஏனையோரிடம் மரியாதை கொடுத்தால் மதிப்பு கிடைக்கும்.இல்லையென்றால் வார்த்தையாலோ அல்லது கையாலோ அடித்து வீழ்த்திவிடும் ரகம் தான் அவன்.
அதுவரை அனைத்தையும் வேடிக்கை பார்த்திருந்த அவனது தோழன் கதிர்வேல் இடையில் கட்டியிருந்த துண்டை உதறி தோளிலிருந்த வியர்வையை துடைத்துக்கொண்டிருந்த காளையனை எச்சில் கூட்டி விழுங்கியப்படி நோக்கினான்.
மெதுவாக தொண்டையை செருமி “ஏய்யா காளை…ஆத்தா நேத்து ஏதோ பொண்ணு பாத்துச்சாம்…ஏன்ய்யா வேணாம்னு சொன்ன?” என அவனிடம் மெதுவாக நூல் விட்டு பார்க்க,
அவனோ துடைப்பதை நிறுத்திவிட்டு ‘ஷப்பா…அடுத்து இவனா?’ என்பது போல் வெளிப்படையாக அவனை திரும்பி முறைத்தவன் “என்னடே இன்னைக்கு எல்லாரும் எனக்கு குடைச்சல கொடுக்கணும்னு ஒரு முடிவோடு வந்திருக்கீங்களா?” என அடிக்குரலில் சீற,
அவனோ அதில் அஞ்சி பின்வாங்கியவன் “இல்லய்யா நீயும் என்னைய மாதிரி கால காலத்தில புள்ளக்குட்டியோட பகுமானமா வாழணும்னு தான்யா அப்படி பேசின…நீ தப்பா எடுத்துக்காதய்யா” என பம்மிய குரலில் பேசியவனை பெருமூச்சோடு நோக்கிய காளையன்,
“நீயும் மத்தவீக மாதிரி கசகசன்னு பண்ணாத மாப்பிள்ள…நான் என்னவோ என் பொற்னாடி லைன் கட்டி வர புள்ளைய எல்லாத்தையும் வேணாம்னு சொல்லற மாதிரி பேசறவ…என் முகரைய மொத நீ உத்துப்பார்த்திருக்கீயா?இதை பார்த்தும் எந்த புள்ளையாவது கட்டிக்கிறேனு சொல்லுமா?” என்றான் வேதனை நிறைந்த குரலில்.
அதில் கோபமடைந்த கதிர் “கோட்டி மவனே…நீ ஏன்டே இப்படியெல்லாம் உன்னையே தாழ்த்திக்கிற…உனக்கு என்னா குறைச்சலாம்…நல்லா தோரணையா ஐய்யனார் சிலை மாதிரி கெத்தா தானல இருக்க?” என நண்பனை விட்டுக்கொடுக்காமல் ரோஷத்துடன் வினவ,
அவனோ முகத்தை சுழித்து “ப்ச்” என உச்சுக்கொட்டி சலித்து,இடையில் துண்டை கட்டினான்.
“என்னடே பல்லி மாதிரி உச்சுக்கொட்டுறவ…அவளுக உன் பொற்னாடி வரலைனா என்ன?நீ உனக்கு புடிச்ச புள்ளைக பொற்னாடி போக வேண்டியது தானே?” என்றவுடன் வெடுக்கென்று திரும்பி காளையன் அவனை உறுத்து விழிக்க,
“ஏன்டே நான் எதுவும் தப்பா பேசிப்புட்டனா?” என திருதிருவென விழிக்க,
“பின்ன சரியா தான் பேசனியாக்கும்…அக்கா தங்கச்சி கூட பொறந்தவனை போய் பொம்பளைங்க பொற்னாடி போவ சொல்லறீயே…உனக்கெல்லாம் கூறு இருக்கா?” என குரலுயர்த்தி அதட்ட,
‘ஐய்ய…இவன் பெரிய உத்தமப்புத்திரன்…பெண்களை காக்க வந்த சந்திரன்னு தெரியாம வாயவூட்டுப்புட்டனே…சரி சமாளிப்போம்’ என மனதிற்குள் புலம்பி,
இறங்கிய குரலில் “ஏன்ய்யா…எதுக்கு கோவிச்சுக்கிறவ?இப்போ என்ன நீ கண்ணாலம் கட்டிக்காமலே கடைசி வரை இருந்திடுவியோனு ஒரு ஆதங்கத்தில சொல்லிப்புட்டேன்…மன்னிச்சிக்கிடுய்யா” என பதிவிசாக நண்பனின் புஜங்களை தடவியவாறு கெஞ்ச,
அவனோ அதில் சமாதானமாகாமல் விறைப்புடனே “இனிமேட்டுக்கு இப்படி பேசின நம்ப ஊரு கொடையப்ப உன்னைய தீ சட்டியில் போட்டு குளிப்பாட்டிருவேன்…சாக்கரதை” என பல்லை நறநறவென கடித்தவாறே எச்சரித்தான்.
‘இவன் ஒருத்தன் பெண்கள் நம் கண்கள்னு சுத்திட்டு திரியறான்…இப்படி பேசிட்டு கிடந்தா கடைசி வரை நீ கன்னிப்பையன் தான்டி மாப்பிள்ள’ என மனதிற்குள் வசைப்பாடியவாறு “சரி சரி ரூட்டா பாக்கத்தய்யா…சின்ன பயலுக்கு பயந்து வருதா இல்லையா?” என பாவமாக முகத்தை வைத்து கேட்டவுடன்,இளகிய காளையனின் இதழோரம் சிறியதாய் முறுவல் பூத்தது.
அவன் அத்தோடு நிறுத்தியிருந்தால் அந்த மதிய வேளை இனிமையாக கடந்திருக்கும்.
ஆனால் அடுத்ததாக கதிர்வேலன் கூறிய வார்த்தையில் இறங்கியிருந்த சினம் உச்சிமேட்டிற்கு ஏற “என்னடே சொன்ன சல்லிப்பையன் மவனே” என ஆக்ரோஷமாக நரம்புகள் புடைக்க கர்ஜித்தவனின் கால்கள் அவனது இடுப்பில் ஓங்கி ஒரு உதை விட்டிருந்தது.
ஏனெனில்,அவன் ‘உனக்கு தான் லட்டு மாதிரி இரண்டு அக்கா பொண்ணுங்க இருக்காங்களே…அவங்களில் யாரையாவது கல்யாணம் செய்துக்கொள்’ என்று கூறியதற்கு தான் இந்த ஆத்திரமும் ஆவேசமும்!!
ஒரு நொடி ‘என்ன நடந்தது?’ என்று தெரியாமல் கீழே விழுந்த அதிர்ச்சியில் உறைந்த கதிர்வேலுக்கு அதன்பிறகே விஷயம் புரிப்பட்டது.
அவனின் தேகமெல்லாம் சகதி பூசியிருக்க,தன் முன்னே தேகம் விடைக்க புஜங்கள் இறுக கருப்பண்ணசாமி போல் உஷ்ண பெருமூச்சுகளோடு நின்றிருந்த காளையனை கண்டவனின் கண்ணில் மிரட்சி குளித்திருந்தது.
“ஏன்டே என்னைய சேத்துல தள்ளின?” என அழுக்குரலில் கதிர் கேட்க,
கழுத்து நரம்புகள் புடைக்க “சின்னப்புள்ளைகளை லட்டுனு என் முன்னாடியே சொன்னது இல்லாமல் அதுகளை கட்டிக்க வேற சொல்லறீகளோ?என்ன பேச்சுட இது…குழந்த புள்ளைங்களோடு என்னைய சேர்த்து வைச்சு பேசற நீயெல்லாம் மனுசனடா…நாதாரி பயலே” என மீண்டும் அவனை இடையில் ஓங்கு ஒரு உதைவிட்டவனிற்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது.
அவனோ வலியில் சேற்றில் சுருண்டு விழ,அதற்குள் வயலில் வேலை செய்துக்கொண்டிருந்தவர்கள் இந்த சண்டையை பார்த்துவிட்டு “ஏய்யா காளையா?என்னால பண்ணற?தப்புய்யா” என பதறிக்கொண்டு கதிரை தூக்க முயல,
அவனோ அப்போதும் ஆத்திரம் அடங்காமல் “அண்ணே!மொத அந்த பரதேசியை வுடுங்க…இன்னைக்கு இரண்டுல ஒண்ணு நான் பார்க்கறேன்” என கதிரை தூக்கியிருந்தவர்களை தள்ளிவிட்டு மீண்டும் நாக்கை மடித்துக் கொண்டு ஒரு சண்டைக்கு தயாராக,
‘ஆத்தாடி…தெரியாம இந்த காட்டுமிராண்டிகிட்ட வாயக்கொடுத்து உடம்ப புண்ணாக்கிட்டனே’ என பயந்தவாறே காலம் கடந்து ஞானோதயம் வந்து வருந்தி என்ன பயன்?
“காளை நீ பண்ணறது சரியில்லைய்யா…ஒண்ணு மண்ணா பழகன சிநேகிதனை இப்படி போட்டு புரட்டி எடுக்கலாமா?தப்புய்யா” என பெரியவர்கள் நியாயம் பேச,
அதில் கடுப்பாகிய காளையன் “ஏய்யா…அந்த நூனாயம் எல்லாம் எனக்கு தெரியாதாக்கும்…அவன் என்ன பேசினான்னு தெரியாம ஆளாளுக்கு ஒத்து வந்தீங்க…பெருசுங்க சிறுசுங்கனு யாரையும் பார்க்க மாட்டேன்…வெட்டி பொலிப்போட்டு போயிட்டே இருப்பேன்…நகருங்கய்யா” என அனைவரையும் தள்ளிவிட்டு நண்பனிற்கு கைக் கொடுத்து வெடுக்கென்று தூக்கி தன்னருகே நிற்க வைத்தான்.
அவனது உடலில் ஒட்டியிருந்த சகதியும் கண்களில் தெரிந்த அச்சமும் அவனின் மீது இரக்கத்தை வரவழைக்க “என்னய்யா வலிக்குதா?” என பரிவுடன் வினவினான்.
அவனோ இமைக்கொட்டி விழித்து “ஆமா” என்பது போல் பாவமாக தலையசைத்தான்.
உடனே ஒல்லி தேகமுடைய தனது தோழனை குழந்தை போல் கையில் ஏந்திக்கொண்டான் காளையன்.
நெருங்கியவர்களிடம் அவனிற்கு வரும் கோபம் காற்றடித்த பஞ்சு போல் எளிதில் பறந்துவிடும்.
அதனை கதிர்வேலும் அறிவான்.
மற்றவர்களோ ‘கொஞ்சம் முன்னாடி சண்டைப்போட்டதென்ன இப்போ கொஞ்சுக்கிறதென்ன…என்னடா நடக்குது இங்க?’ என திருதிருவென விழிக்க,
அதில் சங்கடமுற்ற கதிர்வேலோ ‘பொஞ்சாதிய தூக்கி டூயட் ஆட வேண்டிய வயசுல என்னைய போய் தூக்கறானே கிரகம் புடிச்சவன்’ என தலையில் அடித்துக்கொண்டான்.
ஆயினும்,தோழனின் கனிவான அணுகுமுறையில் நெஞ்சம் நெகிழ்ந்தது.
தோழனின் கழுத்தை வளைத்து “ஏய்யா காளை…எனக்கு கால் அம்புட்டு ஒண்ணும் வலிக்கலய்யா…என்னைய கீழ இறக்கிவுடு” என தயக்கத்துடன் குதித்து கீழிறங்கினான்.
அவனிடமிருந்து ஓரடி தள்ளி நின்று அவன் நேராக நிற்பதை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து ‘அவன் நன்றாக இருக்கிறான்’ என திருப்தியடைந்த நொடியே மீண்டும் முகத்தில் ரௌத்திரம் ஒட்டிக்கொண்டது.
குழந்தைகளாக பார்க்கும் பிள்ளைகளை திருமணம் செய்யும் படி வலியுறுத்தியதை அப்போதும் மென் உள்ளம் கொண்டவனால் ஏற்க முடியவில்லை.
அதனால் “ஏடே நீ அப்படி பேசினது இதுவே கடசி முறையா இருக்கட்டும்ல…இனிமேட்டுக்கு இப்படி பேசினாக்கா தொண்ட வழியா சோறு உள்ள இறங்காது…நொக்கிப்புடுவேன் நொக்கி…புரியுதால” என நாக்கை மடித்து கடித்தவாறே எகிற,
அவனோ ‘மறுபடியும் முதல்ல இருந்தா?’ என அதிர்ந்து பவ்யமாக தலையசைக்க,
அதில் மெல்லியதாய் இதழோரம் புன்னகை தோன்றினாலும் அவனறியாமல் மறைத்து காப்பை பின்னுக்கு தள்ளி கைமுஷ்டியை இறுக்கி “ஐயா வாய் துறந்து பதிலு சொல்லமாட்டீகளோ?” நக்கலாக கேட்டவாறு ஓரடி முன்னே வைக்க,
அவனோ தலையை பின்னுக்கு தள்ளி ‘எங்கு தன்னை அடித்துவிடுவானோ?’ என அஞ்சி “சரிய்யா…சரிய்யா” என பதட்டத்துடன் அவசரமாக பதில் கூறவும்,
நடையை நிறுத்தி ‘அது’ என ஒற்றை விரல் நீட்டி மிரட்டிவிட்டு இடையில் கட்டியிருந்த துண்டை உதறி தோளில் போட்டு புறப்பட்ட தோழனை கண்டவனோ ‘ஊரு உலகத்தில பத்து பதினைஞ்சு ஃப்ரெண்டு வைச்சிருக்கவனெல்லாம் நல்லா இருக்கான்…ஒரே ஒரு ஃப்ரெண்ட வைச்சுக்கிட்டு நான் படற அவஸ்தை இருக்கே…ஐய்யிய்யையோ’ என உள்ளுக்குள் புலம்பியவனின் முகமோ அஷ்டக்கோணலாகியது.
இன்று தன்னோடு மாமன் மகளை இணைத்து பேசியதற்கு நண்பனை மண்ணில் புரட்டி எடுத்த காளையனிற்கு விதி சிறப்பான தன் ஆட்டத்தோடு அவன் வாழ்வில் விளையாட தயாராகி இருந்தது.