தமிழ்நாட்டின் தொன்மையான நகரம் என்று பெயர் பெற்ற நகரங்களில் ஒன்று தான் மதுரை மாநகரம்.
தமிழ்நாட்டிலுள்ள பெருநகரங்களில் இந்த மாவட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த மதுரையின் சிறப்பு மீனாட்சியம்மன் கோவில் என்றே கருதப்படுகிறது.
உலகளாவிய அளவில் பிரசித்தி பெற்ற இந்த கோவில் உலக அதிசயங்களின் தேர்விலும் இடம்பெற்றிருந்தது.
இந்நகரம் முந்தைய காலத்தில் மலைகள் மிகுந்த பகுதியாக இருந்ததால் இவ்வூருக்கு மலைதுரை என்ற பெயரிலே அழைக்க பெற்றதாகவும், பின்னாளில் அப்பெயர் காலத்தால் மருவி மலைதுரை= ம+(லை)+துரை மதுரையாக மாறியதாக கூறப்படுகிறது.
இவை ஒரு காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகவும் திகழ்ந்தது.
‘ஏறு தழுவுதல்’ அவர்களின் மரபு வழி வந்த மதுரை மண்ணிற்கே உரிய வீர பராக்கிரம விளையாட்டு.
சங்க இலக்கியமான கலித்தொகையில்,
“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்”
என்ற பாடல் ஏறு தழுவுவதின் சிறப்பை பற்றி எடுத்துரைக்கிறது.
அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரையில் “கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்” என்பதாகும்.
பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர்/யாதவர் மக்களிடம் ஏறு தழுவுதல் நடைபெற்று வந்தது.
ஆயர் குல வாலிபர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர் குல பெண்.
50 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கத்தில் இருந்த ‘சல்லி காசு’ என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது.
மாட்டை அடக்கும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும்.
இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ என்று ஆனது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும், மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு எப்போதும் தனி சிறப்பு உண்டு.
ஜல்லிக்கட்டு மதுரை மக்களின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் பொங்கலன்று மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு,அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசிப்பார்கள்.
பொங்கல் திருநாளை ஒட்டி இந்த போட்டி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நடைப்பெறுகிறது.
இந்த ஏறு தழுவதல் தமிழர்களின் வீர விளையாட்டு என்றப்போதிலும் இந்த வீரபாண்டியபுரம் மக்களை பொறுத்தவரை அவர்கள் மண்ணின் கௌரவமே இதில் தான் அடங்கியிருக்கிறது என்பது போல் இதனை தங்களின் உயிர்மூச்சாகவே பின்பற்றுவார்கள்.
ஊரிலிருக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் சார்பாகவும் இளைஞர்கள் களமிறங்கி தங்களின் வீரத்தினால் கட்டிளம் காளையை அடக்கி தங்கள் ஊரின் பெயரை நிலைநாட்டி காலம் காலமாக அவர்கள் ஊருக்கு என்று இருக்கும் பெருமையை நீடித்து நிலைக்க வைத்துக்கொள்வார்கள்.
இன்னும் சற்று நேரத்தில் அலங்காநல்லூரில் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டை காண்பதற்கு சுற்றியிருக்கும் ஊர்களில் உள்ள பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரள் மைதானத்தை சுற்றிலும் கூடியிருந்தது.
மைதானத்திற்கும் பார்வையாளர்களுக்கும் இடையே மரத்தடுப்புகள் அமைத்திருந்தார்கள்.
இதில் 2000 மாடு பிடி வீரர்கள் கலந்துக்கொண்டதோடு,500க்கும் மேற்பட்ட மஞ்சு விரட்டு காளைகள் அவிழ்த்துவிடுவதற்கு கொம்பு சீவி தயார் நிலையில் இருந்தது.
அந்த வீரர்களில் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆடவர்கள் வீரபாண்டியபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதோடு அவர்கள் அனைவரும் தங்களுக்கு என்று வழங்கிய நீல நிற உடையுடன் காளையின் மீது பாய காத்திருக்கும் சிங்கங்களாய் மீசை முறுக்கி கர்ஜனையோடு காத்திருந்தார்கள்.
அந்த ஊரிலுள்ள மனிதர்களுக்குள் பல வேற்றுமைகள் இருந்தாலும் அனைவரும் ஒன்றுக்கூடி செயல்படும் ஒரு யுத்த களம் இவை மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீரர்கள் இங்கு தயாரான நிலையில் அவர்களுக்கு இணையான உக்கிரம் குறையாமல் நீண்ட கொம்புகள் வைத்த காளைகள் மைதானத்தை நோக்கி சீறி பாய உஷ்ண பெருமூச்சுடன் அனல் பறக்க தலையை சிலுப்பிக்கொண்டு தயாராக இருந்தது.
அச்சமயம் வாடி வாசலுக்கு சற்று வலதுப்புறமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் இந்த விழாவை தலைமை தாங்க வந்திருந்த மாவட்ட ஆட்சியாளர் கொடி அசைத்து விளையாட்டை தொடங்குவதற்கு ஆயத்தமாகினார்.
சுற்றியிருந்த மக்களும் ஆரவார குரல்களை எழுப்பி வீரர்களை கரகோஷம் எழுப்பி ஊக்கப்படுத்தினார்கள்.
இந்நிலையில் மைதானத்தின் உள்ளே காளையின் மீது பாய்வதற்கு தயாராக இருந்த வீரர்களில் ஒருவன் மட்டும் ஏனையவர்களிடமிருந்து தனித்து தெரிந்தான்.
அந்த மலை நகரத்திலுள்ள கரடுமுரடான பாறைகளுக்கு இணையான சற்றே முரட்டுத்தனமான தோற்றம் கொண்டவன் அவன்.
வெய்யோனின் கதிர்களுக்கு இணையான ஆக்ரோஷமுடையவன்.
அவன் கீழே குனிந்து தன் கரம் கொண்டு மண்ணை அள்ளி இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து தேய்த்து கால்களை விரித்து வைத்து வேட்டையாட போகும் சீற்றத்துடன் தன்னுடைய ஊரை சேர்ந்த ஆட்களுக்கு கண்ணாலே தயாராக இருக்கும்படி ஆணைப்பிறப்பித்தான்.
ஆட்சியாளர் மீது ஒரு கண்ணும் வாடி வாசலில் இருக்கும் காளையின் மீது ஒரு கண்ணும் வைத்திருந்த ஆடவன்,ஆட்சியாளர் கொடி அசைத்த அடுத்த வினாடியே வாசலை உடைத்துக்கொண்டு 10 அடி உயரத்திற்கு மேலாக எம்பி திமிறிக்கொண்டு காளை வெளியே வந்தவுடன்,வாசலை நெருங்கி நின்றிருந்த தன் ஆட்களுக்கு கண்ணாலே எச்சரிக்கை செய்து விலகும் படி ஆணை பிறப்பித்தான்.
அதனால் அவர்களது ஊர் ஆட்கள் சிலர் அந்த காளையனின் கொம்பிற்கு இரையாகாமல் மயிரிழையில் உயிர் தப்பித்தனர்.
‘கரணம் தப்பினால் மரணம் நிச்சயம்’ என்னும் பழமொழிகளுக்கு ஏற்ப முதலாவதாக வெளிவந்த அந்த ஒரு காளையே இருபதிற்கும் மேற்பட்ட ஆட்களை குத்தி காயப்படுத்தி மைதானத்தின் பரப்பளவை நோக்கி அசுரவேகத்தோடு ஓடியது.
காயம் பட்ட வீரர்களை களத்தில் இருந்த மருத்துவ குழுவை சேர்ந்த ஆட்கள் அழைத்துச் செல்ல மைதானத்திற்குள் அவசரமாக நுழைந்தனர்.
காளை முன்னால் ஓடிய வேகம் கண்டு வீரர்களும் சுற்றியிருந்தவர்களும் ஆசுவாச பெருமூச்சு விடுவதற்குள்,திமிறிக்கொண்டு காளை மீண்டும் இவர்கள் இருக்கும் பகுதியை நோக்கி ஆவேசமாக துள்ளிக்கொண்டு வந்தது.
மண் புழுதி பறக்க அது திரும்பி வந்த வேகத்தில் இரண்டு உயிர்களையாவது பலிக்கொடுக்கும் என்று எண்ணியிருந்த சமயத்தில் அது விளையாட்டு வீரர்களை விடுத்து மருத்துவ சேவைப்புரியும் பணியாளர்களை நோக்கி பாய்ந்து வருவதை கண்டு,கூட்டத்திலிருந்த அத்தனை மக்களும் மிரட்சியில் கூச்சலிட தொடங்கினார்கள்.
ஆட்சியாளரும் பதட்டத்தில் எழுந்து மேடையின் முன் வந்து பதட்டத்துடன் நின்றிருக்க,வீரர்கள் சிலரும் அந்த காளையின் எண்ணம் உணர்ந்து அதை தடுப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்து அவர்கள் அதன் உடலின் சிலுப்பலினால் தூக்கி வீசப்பட்டார்கள்.
அச்சமயம் கண நேரத்தில் அந்த திடலே சற்றும் எதிர்ப்பாராத வகையில் கட்டிளங் காளைக்கு இணையான வேகத்தோடு உஷ்ண மூச்சுகளோடு அனலை கக்கி ஓடி வந்துக்கொண்டிருந்தது,காளையன் என்று பெயர் கொண்ட திமிறி திரியும் மனித காளை ஒன்று!!
அவனது அந்த ஆக்ரோஷமான சீறலில் அனைவரும் வாயில் கைவைத்து ஒரு வித ஆர்வத்தோடு நின்றிருந்த நேரத்தில் அந்த காளையின் முன்னே பாய்ந்து அதன் இரு கொம்புகளையும் தனது முரட்டு கரங்களால் கவ்வி பிடித்திருந்தான் அவன்.
சுற்றியிருந்த கூட்டத்தினர் “ஹே” என கத்தி ஆரவார குரல் எழுப்ப,
அவனோ மக்களின் புகழாராத்தை மதியாமல்,சீறி பாயும் காளையை அடுத்த அடி எடுத்து வைக்காமல் தடுத்து நிறுத்த முயன்றான்.
வேட்டையாட நினைக்கும் காளையிற்கு முன்பு வந்து நின்று கொம்பை பிடித்து நிறுத்தும் முறை ஆபத்து விளைவிக்கக்கூடியதாக இருப்பினும் வேறு வழியின்றி உயிரை பணயம் வைத்தான் அவன்.
அதற்கு ஏற்றாற் போன்று தன் நிதானத்தையெல்லாம் முன்பே இழந்தது போல் மூர்க்கத்தனமாக தன் கொம்பு கொண்டு அவனை தாக்க முயன்றது எருது.
ஆடவனோ அது முன்னேறிய வேகம் கண்டு அதற்கு ஈடுக்கொடுக்க இயலாமல் உடலில் இருக்கும் ஒட்டுமொத்த குருதியும் முகத்தில் பாய கழுத்து நரம்புகள் புடைக்க காலை தரையில் ஊன்றி தன் சரீரத்திற்கு பலம் ஏற்றியவன்,மற்றைய வீரர்களிடம் கண்ணாலே அதன் திமிலை பிடித்து அடக்கு என்பது போல் கட்டளையிட்டான்.
ஒன்றிரண்டு நபர்கள் வந்து அடக்கியும் முடியாமல் மாட்டின் திடக்காத்திரத்தால் ஏற்கனவே காயம் கொண்டு கீழே விழுந்து கிடந்த வீரர்களை நோக்கி நரம்புகள் புடைக்க முகம் சிவந்து “ஏய் இந்தாருய்யா…எழுந்து வந்து அவிகளுக்கு உதவிப்பண்ணுங்கஆஆஆ” என மக்களின் கூச்சலை மீறி ஒலிக்க முயன்றது அவனது கர்ஜனை குரல்.
அவன் எண்ணியது போலவே அது சிலரின் செவியில் விழுந்து அவர்களும் இவனுடன் இணைந்து ஏறின் மீதேறி தழுவி திமிலை பிடித்து தொங்கி முதல் காளையை இப்படியாக ஒன்றிணைந்து வெற்றி வாகை சூடினார்கள்.
அவன் பெயர் மட்டும் காளையன் அல்ல.அந்த காளைகளுக்கு இணையான புஜப்பலங்களையும் பராக்கிரமத்தையும் கொண்டவனே காளையன்.
முப்பத்தி ஏழு என்னும் இலக்கத்தை தொட்டுவிட்ட அகவையுடையவன்.
அதற்கெல்லாம் மேலாக அவனது ஆஜானுபாகுவான தோற்றமும்,முரட்டு உழைப்பில் முறுக்கேறிய கட்டுக்கடங்காத கருந்தேகமும்,முறுக்கிய பெரிய மீசையும்,அவனது இறுகிய தாடைகளை அலங்கரித்திருந்த தாடியும்,பரட்டை தலையுடன் சுருண்டிருந்த அவனது கருமை நிற கேசமும் திரைப்படத்தில் வரும் வில்லன்களை ஒத்து சித்தரிக்கும் முரட்டுத்தனமான தோற்றம் கொண்டவனே இந்த காளையன்.
காளையனுக்கு ஒற்றையாளாய் காளையின் திமிலை அடக்கியாளும் வல்லமையிருந்தப்போதிலும்,அவன் சற்று நகர்ந்தாலும் அது பணியாளர்களை காயப்படுத்தும் மார்க்கம் இருப்பதினாலே முன்னே நின்று அதன் வேகத்தை மட்டுப்படுத்தினான்.
அந்த காளையோடு விடாமல் போராடிய காளையனின் உடம்பில் இலேசான காயங்கள் ஏற்பட்டு இருந்தப்போதிலும் வீரம் விளைந்த மண்ணில் பிறந்தவனிற்கு இவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.
ஆனால் கூடியிருந்த மக்கள் இவனது சாகசம் கண்டு பலத்த கரகோஷத்துடன் சீட்டியடித்து அவனை பாராட்டினார்கள்.
அவனோ அதற்கெல்லாம் வளைந்துக் கொடுக்காமல் ஒரு சிறிய தலையசைப்புடன் அடுத்த வேட்டைக்காக தயாராகியதை கண்டு ஆட்சியாளரே பெரும் வியப்படைந்தார்.
அருகிலிருந்த விழா குழுவின் ஒருங்கிணைப்பாளரிடம் “யார் அந்த ஆள்?ரொம்ப தீயா இருக்கான்” என விசாரிக்க,
அவரோ ஆட்சியாளரை சற்றே வித்தியாசமாக நோக்கி “சார் அவன் வீரப்பாண்டியபுரத்தில் சாதாரண விவசாயம் பண்ணற விவசாயி தான்…ஆனால் இவன் குடும்பத்தில் இவனோட சேர்த்து மூணு பொம்பளை பிள்ளைங்க…அவன் அப்பன் இவன் சின்ன வயசா இருக்கும் போதே கள்ளு குடிச்சு குடிச்சு குடல் வெந்து செத்துப்போயிட்டான்…சொல்லப்போனால் ஒத்த மனுசனா பன்னிரெண்டு வயதிலிருந்து தனியொருவனா இருந்து இவனோட குடும்ப பாரத்தை ஏத்துக்கிட்டு அவனோட மூணு சகோதரிக்கும் கல்யாணம் பண்ணி வைச்சிட்டான்…பொறவு அவனுக்குன்னு ஒரு வீடு கட்டி சின்னதா ஒரு பால் பண்ணை அமைச்சு சம்பாதிச்சிட்டு இருக்கானுங்க…கூடவே பொறந்த வீட்டுக்கு பிரசவத்துக்கு வர அக்காவையும் நல்லா பார்த்து அனுப்பினதோடு,அவங்க குழந்தைங்க விழாவுக்கு ஊர் மெச்ச சீர் செனத்தி எல்லாமே இவன் ஒருத்தன் தானுங்க செய்யறான்…ரொம்ப நல்ல ஆளு…பாசக்காரனுங்க” என்றப்படி அவனது புகழாரம் பாட இன்றொரு நாள் போதாது என்பது போல் பேசிக்கொண்டே இருந்தவரின் வார்த்தைகளை அவரும் சுவாரசியமாக கேட்டுக்கொண்டே திடலிலும் ஒரு கண்ணை வைத்திருந்தார்.
அதற்குள் அடுத்தடுத்த காளைகள் மைதானத்திற்குள் நுழைந்து தங்களது தீரத்தை காட்ட,காளையன் தனியொருவனாக நின்று இளைஞர் கூட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தி அவர்களது ஆதரவு கொண்டு அன்றைய நாளில் அனைத்து காளைகளையும் தோற்கடித்திருந்தான்.
இதில் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டப்போதும் ஒரு உயிரை கூட போகவிடாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்து அனைவரையும் காப்பாற்ற வழிவகை செய்திருந்தான்.
இதற்கிடையில் அவன் பாசம் கூட்டி வளர்த்த அவனது மருதுவும் இந்த பந்தயத்தில் இருந்தது என்பது விஷேடமிக்கது.
நேரில் அவனை கண்டுவிட்டால் குழையும் அவனது மருதுவிற்கோ மைதானத்தில் அவன் என்றுமே பகையாளி மட்டும் தான்.
தன் எதிரில் இருப்பவர் யார் என்றெல்லாம் கவனியாமல் மதம் கொண்டு திமிறிக்கொண்டு வந்த அவனது காங்கேயன் காளையை அடக்குவதே அவனிற்கு மிகுந்த சிரமத்தை கொடுத்தது எனலாம்.
ஏனெனில்,அவனை அதிகம் காயப்படுத்திய காளைகளில் அதுவும் ஒன்று.
இதனையறிந்த ஆட்சியரே ‘என்னே! இவனது வீரம்’ என சிலாகித்துப்போய் தன்னை மீறி எழுந்து நின்று அவனிற்கு மரியாதை செலுத்தும் வகையில் பலத்த கரகோஷம் எழுப்பினார்.
முதல் நாள் அவனது ஊருக்கு கிடைத்த வெற்றியின் பலனாய் ஊர் மக்கள் அவனை தோளில் சுமந்து தூக்கி கொண்டாடி தீர்த்தப்போதும் அவனது முகத்தில் சிறியதாக ஒரு வெற்றி புன்னகை தோன்றி உடனடியாக மறைந்தும்விட்டது.
அவனது வெற்றியினால் உண்டான மகிழ்ச்சிக்கான ஆரவாரம் எப்போதும் அவ்வளவு தான்.
சில பெண் வாண்டுங்களோ “மாமா கலக்கிட்டே…” என கத்தி கூக்குரலிட,
வேறு சில பெண்களோ “அண்ணே!சூப்பருஊஊஊ…காளையன் அண்ணாவா கொக்கனானா” என திடலே அதிர ஆர்ப்பரிக்க,
வீரபாண்டியபுர இளைஞர்களோ ஒருப்படி மேலே சென்று மற்ற ஊர் ஆண்களை ‘எப்படி?’ என்பது போல் நக்கலாய் பார்த்து பரிகாசம் செய்து வைக்க,
அதைக்கண்டு அவனை தோற்கடிக்க தங்களின் காளைகளுக்கு பலத்த தீவனம் கொடுத்து கொம்பு சீவி அழைத்து வந்திருந்த பக்கத்து ஊர்க்காரர்களுக்கு அவமானத்தில் முகம் கறுத்தாலும்,நாளைய பந்தயத்தில் நிச்சயம் காளையனது உயிரை பறிப்போம் என்ற பழிவெறியுடன் வன்மத்துடன் அவனை முறைத்தார்கள்.
அவனோ அதற்கெல்லாம் அசராமல் தன் கைமுஷ்டியை முறுக்கி செம்பு காப்பை பின்னுக்கு தள்ளி நாக்கை மடித்து கடித்தவன் “கொண்டேப்புடுவேன்” என அரிவாள் கொண்ட ஐய்யனார் போல ஒருமுறை தலையை உலுக்கி சிலும்புவதை பார்த்தவுடன்,
அத்தனை நேரமாக அவனிடம் விடைத்துக்கொண்டு நின்றிருந்த இளைஞர்கள் கல்லெறிந்த காக்காய் கூட்டம் போல் ‘ஆத்தாடி’ என பயத்தில் சிதறி ஓடினார்கள்.
அதில் சிறியதாய் அவனிதழில் வெற்றி புன்னகை மிளிர்ந்தாலும்,அது அவனின் முரட்டு தாடிகளுக்குள் மறைந்துப்போனது.
‘புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடாதீர்’ என்னும் மொழிக்கு ஏற்ப,காளையன் தோற்றத்தில் முரடனாக அவதானித்தாலும்,அவன் அன்பிற்கு கட்டுப்படும் எளிய மனிதன்.
ஏனெனில்,வெளி உலகத்திற்கு திமிறி திரியும் காளையாய் கட்டுக்கடங்காமல் துள்ளி திரிந்தாலும் அவனது வீட்டிலுள்ள பெண்ணரசிகளுக்கு அடங்கிப்போகும் பாசக்கோழை அவன்.
வேலப்பன் மற்றும் காந்திமதி தம்பதியினருக்கு நான்கு மக்கள்.
மூத்தவர்கள் இருவரும் பெண்ணாக பிறந்திருக்க,அவர்களுக்கு அடுத்ததாக பிறந்தவன் தான் காளையன்.
இறுதியாக பிறந்த ஒரு பெண் பிள்ளையோடு இந்த குடும்பத்தினரின் அங்கம் ஒரு முடிவிற்கு வந்தது.
தந்தை இறக்கும் தருவாயில் முதல் இரண்டு பெண்களும் திருமண வயதை ஒட்டியிருந்தார்கள்.
அதனால் தகப்பன் இறந்த நொடியிலிருந்து குடும்பத்தின் பொறுப்பு முழுவதும் அவன் வசம் வந்தடைந்தது.
அவனது தாய் காந்திமதி கூலி வேலைக்குச் சென்று சம்பாதித்தாலும் அந்த வருமானம் ஒரு வேளை சோற்றுக்கு கூட போதவில்லை என்பதால்,அவரது மகன் காளையன் வயலில் இறங்கி ஓரளவு குடும்ப பாரத்தை சுமந்து,அந்த குடும்பத்தின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த ஆரம்பித்தான்.
அவனது பதினேழாவது அகவையில் முதல் தமக்கையான வாசமல்லியை பெண் கேட்க ஒரு வசதியான குடும்பம் முன் வந்தது.
அவனிற்கு அந்த சம்பந்தத்தில் பெரிதாக உடன்பாடு இல்லையென்றாலும் வாசமல்லிக்கு மணமகனை பிடித்திருந்த ஒரே காரணத்திற்காக சிறுக சேமித்திருந்த காசுகளை வைத்து ஊர் மெச்சிய சீதனத்தோடு திருமணம் செய்து புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
அதே வருடம் சிறிய தமக்கையான சுகந்திக்கும் ஒரு நல்ல வரன் அமைய,தனது சக்தியை மீறி அவருக்கும் நிலத்தை அடமானம் வைத்து திருமணம் செய்துக்கொடுத்துவிட்டான்.
அவனது தாய் கூட ‘இந்த சம்பந்தம் வேண்டாம்’ என்று மறுப்பு கூறியதற்கு,
“விடுத்தா…பெரிய அக்காவை மட்டும் வசதியான வூட்டுல கட்டிக்கொடுத்துப்புட்டு சின்ன அக்காவை வசதி குறைவான இடத்தில கட்டிக்கொடுத்தாக்கா அது மனசு சஞ்சலப்படுமில்ல…அதேன்…என் சக்திக்கு மீறினதுன்னு தெரிஞ்சும் கண்ணாலம் பண்ணிப்புடலாம்னு ஓசிச்சேன்” என தன் செய்கைக்கு விளக்கம் கொடுக்க,
இருந்தாலும் சஞ்சலத்துடன் “ஏய்யா காளை…சோறு போடற ஒத்த நிலத்தையும் பாங்குல அடமானம் வைச்சுப்புட்டு உன் பொழப்புக்கு என்னத்தய்யா செய்யப்போறே?” என கண்ணை கசக்க,
“ப்ச்…ஆத்தா சும்மா எதுக்கு ஆவுனா கண்ணை கசக்கறே…மொத கண்ணத்துடை” என குரலுயர்த்தி அதட்டியவன்,
“நீங்களாம் சந்தோஷமா இருக்கணும்னு தானே இந்த காளையன் ஓடி ஓடி வேலை பாக்கறேன்…அக்கா சந்தோஷமா?நீ சந்தோஷமா?எனக்கு அது போதும்…போய் வடிவா பட்டுக்கட்டி அக்கா கண்ணாலத்திலே நில்லு…வேற ரோசனையே உனக்கு வேணாம்…புரிஞ்சுதா?” என தாயிற்கு சமாதானம் உரைத்து விடாப்பிடியாக இந்த திருமணத்தை முடித்துவிட்டே ஓய்ந்தான்.
அதன்பிறகு மீண்டும் அவனது வாழ்வில் ஒரு சரிவு ஏற்பட்டது.
அந்த இறக்கம் அவர்களது நிதி நிலைமையில் பெருத்த அடி கொடுத்தது.
வாழ்வின் தரத்தை உயர்த்த இரவு பகல் பாராமல் உறக்கம் தொலைத்து,கடுமையாக உழைத்ததின் பலனாய் ஓரளவு அவர்களது குடும்பம் நல்லதொரு நிலைமைக்கு சென்றுக்கொண்டிருந்தது.
அத்தகைய சந்தர்ப்பத்தில் வாசமல்லியின் வளைகாப்பும்,பிள்ளை பேறு செலவும் அவன் ஏற்கும் படியான நிலையானது.
அடுத்ததாக,அவனது இரண்டாவது தமக்கையும் பிரசவத்திற்கு வந்துவிட,அவனது கடமைச்சுமை மற்றும் பணச்சுமை அதிகரித்தது.
அதற்கெல்லாம் அவன் துவண்டு விடாமல் நிமிர்ந்து நின்று தரையில் காலை ஊன்றி நெஞ்சுரத்தோடு கடுமையாக உழைக்க ஆரம்பித்தான்.
ஒரு நிமிடம் கூட சோர்ந்து விடாமல் ஓயாமல் உழைத்ததின் பலனாய் அவனது உடலும் மனமும் கட்டுக்கடங்காத உறுதியை பெற்றது.
சகோதரனின் துயரத்தை கண்டு பெண்களுக்கு இரக்கம் சுரந்தாலும்,புகுந்த வீட்டினரின் முன்பு தங்களுக்கு தலையிறக்கமாகிவிடக்கூடாது என்ற சுயநல எண்ணத்துடன் மௌனமாக இருந்து அவனை துன்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தனர்.
அதை அவர்கள் உணர்ந்தும் உணராதது போல் அலட்சியமாக இருந்து,அவனது இரத்தத்தை உறிஞ்சும் அட்டையாய் வாழ்ந்திருந்தனர்.
ஒற்றை மகனை பெற்றெடுத்த அந்த அன்னையிற்கு அவன் ஓய்வின்றி உழைப்பதை கண்டு நெஞ்சில் இரத்தம் வடிந்தாலும்,மகன் தான் கூறுவதை கேட்கமாட்டான் என்று பேச தெரிந்தும் ஊமையாய் இருந்தார்.
அதனால் பிள்ளை பேறு,காது குத்து வைபவம் என அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவனது உழைப்பு மொத்தத்தையும் திருடிக்கொண்ட நிலையில் ‘ஹப்பாடா’ என அவன் மூச்சு விடுவதற்குள் தங்கை திருமணம் வயதில் நின்றிருந்தாள்.
அதில் மலைத்துப்போன காளையன் தங்கைக்கும் வசதியான வரனை கொண்டு வர முயன்றான்.
தன்னுடைய இரத்த உறவுகளுக்கு செய்வதில் அவன் என்றுமே வேறுப்பாடு பார்த்ததில்லை.அதேசமயம் மனத்தாங்கலும் அடைந்ததில்லை.
தங்கையிடம் அதனை பற்றி பேச முயல,
அவனது தங்கை கயல்விழியோ தன் சகோதரனின் உடன் இருந்து அவனடைந்த துயரங்களை இத்தனை வருடங்களாக நேரில் பார்த்து வளர்ந்திருந்ததினால் “அண்ணா எனக்கு வசதியான மாப்பிள்ளையெல்லாம் வேணாம்…வசதி குறைவா இருந்தாலும் என்னை கடைசி வரை வைச்சு காப்பாத்திற மனுசன் புருஷனா இருந்தால் போதும்” என திடமாக மொழிந்த தங்கையை கண்கள் பனிக்க பெருமிதத்தோடு நோக்கிய காளையனிற்கோ நெஞ்சம் நனைந்தது.
இருப்பினும் “பாப்பா இப்போ வசதியான மாப்பிள்ளை வேண்டாம்னு சொல்லிப்புட்டு பொறவு அக்காக்களை மட்டும் நல்ல இடத்தில கட்டிக்கொடுத்துப்புட்டு,எனைய ஒண்ணும் இல்லாத இடத்தில தள்ளிப்புட்டனேனு நூனாயம் பேசக்கூடாது…நல்லா ஓசிச்சுக்கோ” என தங்கையை தனது கூரிய விழிகளால் துளைத்தவாறு வினவ,
கயல்விழியோ தமையனை நேருக்கு நேராக பார்த்து “அண்ணே!நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்…எனக்கு வசதியான மாப்பிள்ளை வேணா…நல்லா உழைக்கிற மனுசன் யாராவது இருந்தால் பாரு …போதும்” என அழுத்தமான குரலில் தன் முடிவை தெரிவிக்கவும்,
அவளுடைய நற்குணத்திற்கும் கல்வி தகுதிக்கும் ஏற்றது போல் நல்ல வேலையில் இருக்கும் மணமகனே அமைந்துவிட்டது.
பெரிதாக வசதியில்லை என்றாலும் தங்களது உழைப்பின் மூலம் முன்னேறி வந்த குடும்பத்தினர் என்பதே அவனிற்கு திருப்தியளிக்க,மகிழ்ச்சியாக திருமணத்தை அமர்க்களத்துடன் நடத்தி முடித்துவிட்டான்.
தமக்கைக்கு ஈடான நகைகளை அவளிற்கும் கொடுக்க,அவளிற்கு முன்பாக அவளது புகுந்த வீட்டினர் ‘நாங்க சீதனமெல்லாம் வாங்கறது இல்லை…எங்களுக்கு கயல்விழியை ரொம்ப பிடிச்சிருக்கு…அதுவே போதும்’ என நல்ல மனதோடு அவனளித்ததை மறுத்துவிட்டு அவளை மட்டுமாக அழைத்துச் சென்றனர்.
‘இந்த காலத்தில் இப்படியொரு குடும்பமா?’ என அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
அதனால் தங்கைக்காக வாங்கிய நகைகளை வைத்து புதிதாக பசு மாடுகளை வாங்கி தொழில் செய்ய ஆரம்பித்தான்.
அதற்கு முன்பிருந்தே மருது அவனுடன் தோழனாக அவன் வீட்டிலிருந்தது.
அவன் சோர்ந்து போகும் சமயங்களில் தோள் கொடுக்கும் தோழனாக இருப்பவன்.
ஓரளவு அவனது கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டு அவன் நிமிர்கையில் வயது முற்பதை தொட்டிருந்தது.
அதற்கிடையில் அவனது தாயும் திருமணம் செய்துக்கொள்ளும் படி அவனை கட்டாயப்படுத்தியதால் ‘சரி இதற்கு மேலாவது திருமணம் செய்வோம்’ என்ற முடிவிற்கு வந்தான்.
‘நினைப்பதெல்லாம் வாழ்வில் நடந்துவிட்டால் தெய்வம் எதற்கு?’ என்பது போல்,
தாயிடம் சம்மதம் உரைத்துவிட்டு எதிர்காலம் பற்றிய கனவுகளில் மிதந்துக்கொண்டிருந்த நேரத்தில் அவனது தலையில் இடியை இறக்கியது,அவனது திருமண தோஷம்!!
அவனிற்கு இருந்த கடும் தோஷத்தினால் பெண் வீட்டினர் அவனை நிராகரிக்க தொடங்கிவிட்டார்கள்.
முதலில் ஜாதகம் பொருந்தி வருவதாக பெண் பார்க்க வர கூறுபவர்கள்,அவனது முரட்டுத்தனமான தோற்றத்தை கண்டு அப்படியே அச்சத்தோடு பின்னடைந்துவிடுவார்கள்.
ஆரம்பத்தில் மறைமுகமாக இருந்த மறுப்புகள் காலங்கள் கடக்கும் போது முகத்திற்கு முன்பே வெறுப்பு மிகுந்த வார்த்தைகளாக வெளிவர தொடங்கியது.
ஏனெனில்,பெற்றோர்கள் ஒப்புக்கொண்டாலும் அந்த மணப்பெண்களோ அவன் முகத்திற்கு நேரெதிரே ‘ஐய்யோ அப்பா…அந்த ஆள் பூச்சாண்டி மாதிரி இருக்கான்…ஐய்யனார் மாதிரி இருக்கான்…ரௌடி மாதிரி இருக்கான்…என் கலரென்ன அவன் கலரென்ன?அவனும் அவன் மீசையும் தாடியும் சுருட்ட முடியும் உவ்வே…அவனை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு கிணத்தில் விழுந்தே செத்திடலாம்…அவனையெல்லாம் யாரு கல்யாணம் செய்துப்பா…எனக்கு அவனை பிடிக்கலை’ என அப்பட்டமாக நாக்கில் நரம்பின்றி அவனது முகத்தின் முன்பே கூறி மனதை கீறி ரணப்படுத்தினார்கள்.
அதில் அந்த ஆண்மகனின் கர்வம் பலத்த அடி வாங்கியது.
கைமுஷ்டியை இறுக்கி தன் முகத்திற்கு முன்பு இகழ்ந்த ஒவ்வொருவரையும் அடித்து வீழ்த்த வேண்டும் என்ற வெறி நாடி நரம்புகள் எங்கும் எழுந்து தேகம் புடைத்தெழுந்தாலும்,பெண்களோடு பிறந்தவனால் அக்காரியத்தை செய்திட முடியவில்லை.
இதுவே ஒரு ஆண்மகன் அவ்வாறு கூறியிருந்தால் இந்நேரம் அவனது தலை மண்ணில் உருண்டிருக்கும்,அந்த அளவு அவனது மனம் நெருப்பாய் கனன்றுக் கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் பெண் பார்க்கும் படலத்தையே அறவே வெறுத்துப்போய் ‘திருமணமும் வேண்டாம்…ஒன்றும் வேண்டாம்…எனக்கு எனது சகோதரிகளும் அவர்களின் பிள்ளைகளும் போதும்’ என்ற விரக்தியான ஒரு முடிவிற்கு ஆடவனை தள்ளியது.
அவனது தாய் அவனிடம் திருமணத்திற்காக போராடி பார்க்க “ஆத்தா கண்ணாலமும் வேணாம் ஒரு கருமாதியும் வேணா” என கழுத்து நரம்புகள் புடைக்க கத்தியவனை கண்டு காந்திமதி “ஏய்யா ராசா?ஏன் இப்படி சொல்லற?” என மிரண்டு பின் வாங்க,
அதில் தன் தவறை உணர்ந்து கைமுஷ்டியை இறுக்கி காப்பை பின்னுக்கு தள்ளி மீசையை நீவிய காளையன் “ஆத்தா எனைய புரிஞ்சுக்கோ…ஒவ்வொரு புள்ளையும் எனை பார்த்துப்புட்டு வேணாம்னு சொல்லும் போது எனை ஊருக்கு முன்னாடி முச்சந்தியில் அம்மணமா நிக்க வைச்சு வெஞ்சமரத்தால அடிச்ச மாதிரி அவமானமா இருக்கு…காசு,பணம் அதிகமில்லைனாலும் நம்மக்கிட்ட ஒட்டிட்டு இருக்கிறது இந்த மானமும் மரியாதையும் தான்…அதையும் என்னோட கண்ணாலத்துக்காக வித்துப்புட்டு ஒவ்வொரு வூட்டு படியா ஏற சொல்லறீயா?அதுக்கு நான் நாண்டுக்கிட்டு தூக்குல தொங்கலாம்” அவனது குரல் கணீரென்று ஒலித்தாலும்,ஓரிரு இடத்தில் இடறிய பேச்சிலே திருமண விடயத்தில் அவனடைந்த வேதனை அறிந்துக்கொண்ட அந்த தாயின் உள்ளமோ உடைந்து நொறுங்கிப்போனது.
அதனால் “என்ன பேச்சு பேசிப்புட்ட என் ராசா…உனைய வுட்டா எனக்கு யாருய்யா இருக்கா?” என மனதாங்கலோடு ஓவென்று நெஞ்சம் வெடிக்க கதறி மகனை கட்டிக்கொண்டு அழுத தாயின் துயர் பொறுக்க முடியாமல் அவரை சமாதானம் செய்த காளையனின் மனமோ இறுகிப்போனது.
திருமணம் என்றாலே வேப்பங்காய் போல் கசக்கும் என்ற நிலைக்கு அவனது உணர்வுகள் மரத்துப்போயிருந்தது.
எந்தவொரு காலத்திலும் திருமணம் என்ற பந்தத்திற்கு அடிப்படை விஷயமாக கருதப்படக்கூடியது அழகு மட்டுமே போலும்!!
அவர்களது குணங்களும், வாழ்க்கை நெறிமுறைகளும் சாத்தியப்படாத கூறுகளாக ஒதுக்கப்படுகிறது.
உருவத்தில் கரடுமுரடாக இருந்தாலும் தன்னை சார்ந்த உயிர்களை இமைப்போல் காக்கும் காளையனை போன்ற ஆண்மகன்களின் குணங்கள் பல பெண்களால் பரிசீலிக்கப்படாமலே நிராகரிக்கப்படுகிறது.
திருமண சந்தையில் உருவ கேலி என்பது ஆண் பெண் இரண்டு பாலருக்கும் சரிசமமானது என்பது காளையனின் விடயத்தில் ஊர்ஜிதமானது.
திருமணத்தை அடியோடு வெறுத்து ஒதுக்கும் காளையனின் தவ வாழ்விற்கு முக்தி வழங்கி அவனை மயக்கும் மோகனா வருவது எப்போதோ?