சக்திக்கு அன்று காலை எழும் சமயம் பயங்கரமாக வயிறு வலித்தது.
அடி வயிறு சுண்டி இழுக்கும் போதே அவளிற்கு ஓரளவு புரிந்துவிட்டது.
உடனே நிமிர்ந்து தனது அலைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்.
அன்று தேதி 18 என்று காட்டியது…அப்போது அவளிற்கு நூறு சதவீதம் தெள்ள தெளிவாக புரிந்து விட்டது.
எதற்காக அவளிற்கு வயிறு வலிக்கிறது என்று..!
அவளையும் அறியாமல் ஒரு பெருமூச்சு எழுந்தது.
ஏனெனில்,அவளிற்கு இன்று மாதவிடாய் வரும் நாள்!
அவள் அதனை நினைத்த மாத்திரத்திலே மாதவிடாயும் வந்து விட்டிருக்க,உடனே படுக்கையிலிருந்து எழுந்தவள்,வேகமாக குளியலறைக்குள் நுழைந்தாள்.
தன்னுள் உருவாகிய உதிரக்கறையையும் கிருமிகளையும் நீர் கொண்டு அடித்து கழுவிவிட்டு குளித்து துவாலையை சுற்றிக்கொண்டு வெளியே வந்தாள்.
ஏனெனில்,அவளின் மாமியார் அம்பிகா “தீட்டோட உடுப்பை எடுத்திட்டு குளிக்கப்போகாதேடி…குளிச்சிட்டு சுத்தமா வந்து தான் உடுப்பு மாத்தணும்…இதெல்லாம் உன் அம்மாக்காரி சொல்லி தரலையா?” என வார்த்தையாலே குத்திய நினைவு இன்று வரை அவளிற்கு மறக்கவில்லை.
அவளை மட்டும் ஏதேனும் சொல்லியிருந்தால் அவளிற்கு எவ்வித பிரச்சனையும் இல்லை.
ஆனால் அவளின் அன்னையை இழுத்து பேசிய விதம் அவளிற்கு சிறிதும் பிடிக்கவில்லை.
இறைவனடி சேர்ந்தவருக்கு அவப்பெயர் வாங்கி தரக்கூடாது என்றெண்ணி அவரின் பேச்சுக்கு அடிப்பணிந்து நடந்துக்கொண்டாள்.
அவனின் தாய் பேசிய பேச்சை கேட்டு கணவன் அவளிற்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை.
அதனால் எழுந்த சீற்றத்தோடு ‘அம்மா பையன் ரெண்டு பேருக்கும் குத்தி பேசறதை தவிர வேற எதுவும் தெரியாது போலே’ என மனதிற்குள் விரக்தியாக எண்ணிக்கொண்டாள்.
அவள் படித்து பட்டம் பெற்ற பெண்ணாகினும் அவளையும் அறியாமல் சில சம்பிரதாயங்களை பின்தொடர்ந்து வாழ வேண்டிய கட்டாயம்!
சமுதாய கட்டமைப்பை மீற அவளால் மட்டும் என்ன செய்ய முடியும்?
பூந்துவாலையை கட்டிக்கொண்டு வெளியே வந்தவள் கத்திரிப் பூ நிற புடவையை உடுத்தினாள்.
தலைக்குளித்து ஈரத்துடன் கட்டிய துவாலையை கூட அவிழ்க்க நேரமின்றி வாசலை கூட்டி பெருக்கி கோலம் போட்டாள்.
அவளிற்கு பெரிதாக கோலம் போட தெரியாது.
ஆனால் அவளின் மாமியார் “வெறும் வாசலாக விடக்கூடாது சக்தி…வீட்டுக்குள்ள மகாலட்சுமி வராது…உனக்கு தெரிஞ்ச மாதிரி கோலம் போடு…போதும்” என மெதுவாக ஆரம்பிப்பவர்,
அவள் போடும் கோலத்தை கண்டுவிட்டு “என்ன உனக்கு ஒரு கோலம் கூட போட தெரியாதா?என்ன தான் புள்ளை வளர்த்து வைச்சிருக்காளோ உன் அம்மா?” என அதற்கும் சேர்த்து வசைப்பாட ஆரம்பித்துவிடுவார்.
‘உட்கார்ந்த இடத்திலே கைகழுவிட்டு போற உங்க புள்ளைய விட எங்க அம்மா என்னை நல்ல தான் வளர்த்து வைச்சிருக்காங்க’ என்று பேசிவிட அவளிற்கு நாவு துறுதுறுக்கும்.
ஆயினும் ‘சக்தி அமைதி அமைதி’ என தன்னை தானே கட்டுப்படுத்திக்கொள்வாள்.
இப்போதும் அவளிற்கு சரியாக கோலம் போட வராது.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல் வாசலை வெறுமையாக விட தெரியாத அளவு கற்றுத் தேர்ந்திருந்தாள்.
அவள் வலியோடு கோலம் போட்டுவிட்டு எழ முயன்ற சமயம் காரிகையவளால் சாலையிலிருந்து எழவே முடியவில்லை.
அவளின் கால்கள் இரண்டும் வலியில் துவண்டன.
அடிவயிற்றிலிருந்து பாதம் வரை உள்ள நரம்புகள் அனைத்தும் அவளை சுருட்டி இழுத்தன.
அவளிற்கு வலி உயிர்ப்போனது.
சில கணங்கள் அப்படியே கண் மூடி சாலையில் அமர்ந்துவிட்டாள்.
அப்போது தான் அவள் சுத்தமாக குளித்துவிட்டு வந்திருக்கிறாள் என்ற எண்ணமே அவளிற்கு இல்லை…
அதேசமயம் தனது புடவையில் சாலையிலுள்ள தூசுக்கள் ஒட்டியதையும் அவள் பொருட்படுத்தவில்லை.
பொதுவாக,மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலியை சொற்களால் வரையறுக்க முடியாது.
சில பெண்களுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் படுக்கையை விட்டு எழ முடியாத அளவு வயிறு வலிக்கும்.
ஒரு சிலருக்கு வாந்தி அல்லது மயக்கம் தோன்றும்.
அதையும் மீறி தான் பெண்கள் தங்களது வீட்டிலும் வெளியிலும் வேலை பார்க்கிறார்கள்.
பெரும்பாலான ஆண்கள் மனைவியின் வலியை புரிந்துக்கொண்டு நடப்பார்கள்.
ஆனால் சிவப்பிரகாஷோ “எல்லா பொண்ணுங்களுக்கும் வர ப்ரீயட்ஸ் தானே...எழுந்து வேலை செய்…எல்லாம் சரியாகிடும்” என அலட்சியமாக கடந்துவிடுவான்.
‘ப்ரீயட்ஸ் தானேவா?வலியும் வேதனையும் உனக்கு வந்தால் தான்டா தெரியும்’ என மனத்தாங்கலுடன் புலம்பிக்கொள்வாள் அவள்.
சில நேரம் அவளின் கணவருக்கு மாமியாரே பரவாயில்லை என்று தோன்றும் அளவிற்கு செய்வான் அவன்.
‘மாமியார் நம்பர் ஒன்’ என பட்டப்பெயரே அவனிற்கு கொடுக்கலாம்.அப்படியான கோளாறு பிடித்த மனிதன் தான் சிவப்பிரகாஷ்.
அவள் வலியில் எவ்வளவு நேரம் அப்படியே சுருண்டு விழி மூடி சாலையில் அமர்ந்திருந்தாளோ தெரியவில்லை.
பக்கத்து வீட்டு மூதாட்டி ஜானகி அவளின் தோளை தொட்டு “சக்தி” என உலுக்கியதற்கு பிறகே அவள் விழித்தாள்.
அமர்ந்திருந்த நிலையிலே அவரை ஏறிட்டாள் சக்தி.
அவரை கண்டவுடன் வலியையும் மீறி அவளின் இதழ்கள் புன்னகைத்தன.
பக்கத்து வீட்டு மூதாட்டி அவர்.
அவள் மனம் விட்டு பேசக்கூடிய ஒரு நபரும் அவர் தான்.
“எழுந்திட்டீங்களா பாட்டி?” என கேட்டுக்கொண்டே மெதுவாக எழுந்தாள்.
அவள் சிரமப்பட்டு எழுவதை வைத்து அவளிற்கு உதவ கைக்கொடுத்து எழுப்பிவிட்டவர் “என்னடிம்மா இன்னைக்கு வீட்டுக்கு தூரமா?” என அவளின் நிலையை சட்டென அறிந்து கேட்டார்.
வயதின் அனுபவம் அவரை சரியாக கணிக்க வைத்திருந்தது.
அவளோ சோர்வுடன் “ஆமா பாட்டி” என தலையசைத்தாள்.
“முடியலைனா உன் அம்படையானுக்கிட்ட சொல்லி ஓய்வு எடுக்கலாமோ இல்லையோ?” என அவளின் மேல் இரக்கப்பட்டு அறிவுரை கூறினார்.
அவளோ ஒரு பெருமூச்சுடன் “அட நீங்க வேற பாட்டி…ஊரு உலகத்திலே யாருக்குமே ப்ரீயட்ஸ் வரலையா?உனக்கு மட்டும் தான் வருதா?வேலையிலிருந்து தப்பிக்க புரூடா விடறீயானு நக்கல் பண்ணி சிரிப்பாரு என் வீட்டுக்காரரு” என கணவனை அலுத்துக்கொண்டே சொல்ல,
அவளிற்கும் மேல் அவரின் நிலை படுமோசம்!
அவரோ முகத்தை சுழித்து “என்னத்த சொல்லறது?நம்ப கஷ்டம் இந்த ஆம்பளைங்களுக்கு எங்கிருந்து புரியுது?கல்யாணமாகி நாப்பது வருஷமாகுது என் வீட்டு மனுஷனே புரிஞ்சுக்கலை…உன் புருஷன் மட்டும் எங்கிருந்து புரிஞ்சுக்கப்போறாரு..ஹும்” என அவளிற்கு மீறிய ஒரு பெருமூச்சுடன் அவர் சொல்ல,
இருவரும் மாறி மாறி விட்ட பெருமூச்சில் அந்த சாலை தீப்பற்றி எரியாத குறை ஒன்று தான்!
அந்த அளவு பெண்களின் அடி வயிற்றில் தீராத நெருப்பு ஒன்று கனன்று கொண்டிருந்தன.
“சரி பாட்டி…மணி ஆறாகுது…நான் போய் சமைக்கிறேன்…நீங்க காலையிலே எதுவும் சமைக்காதீங்க…நானே சாப்பாடு கொடுக்கிறேன்” என்று அவள் வலியில் சுருங்கிய முகத்துடன் சொன்னாள்.
அவளிற்கே இங்கு முடியவில்லை…ஆனால் வயதில் மூத்த பெண்மணி ஒற்றையளாக அங்கு வீட்டில் சிரமப்படுவதை தாளாமல் அவள் சொல்ல,
அவரோ “ஏன்டிம்மா…நோக்கே முடியலை…இதிலே நீ சமைச்சு தரியா?நன்னாயிருக்குடிம்மா…போய் உன் அம்படையானுக்கு சமை…நான் சமைச்சு கொடுத்தா தான் புடிக்கலைனு சொல்லறானே உன் புருஷன்…நீ போ…நான் போய் என் அம்படையனை பாத்துக்கிறேன்” என சலிப்பாக கூறிக்கொண்டு சென்றார் அவர்.
அவளோ ஒரு கையால் வயிற்றை அழுத்திக்கொண்டே தட்டுத்தடுமாறி வீட்டிற்குள் வந்தாள்.
அவளின் உடல் நிற்க முடியாமல் துவள,ஒரு கட்டத்தில் போய் படுத்துக்கொள்ளலாமா என்று கூற அவளிற்கு தோன்றின.
அங்கு அவள் படுத்துவிட்டால் வீட்டில் ஒரு வேலையும் நடக்காது என்பதறிந்து வதையை பல்லை கடித்து பொறுத்துக்கொண்டு சமையலை மேற்கொள்ள ஆரம்பித்தாள்.
அவள் தலையில் ஈரத்தோடு கட்டியிருந்த துவாலையை கூட கழட்ட நேரமின்றி சமைத்துக்கொண்டிருந்த வேளையில் மெதுவாக பூனைப்போல் பதுங்கி வந்தான் அவன்.
கழுத்தில் அவன் சங்கிலியால் கோர்த்துக்கட்டிய தாலியுடன்,இழுத்து சொருகிய புடவையின் வழியே வெளிப்பட்ட அவளின் வெற்றிடையை ரசித்தவாறே அவளை பின்னோடு வந்து அணைத்தான் சிவப்பிரகாஷ்.
ஏற்கனவே அவள் முடியாமல் அனைத்தையும் செய்துக்கொண்டிருக்க,அதில் தனது கணவனின் இந்த சீண்டல் அவளிற்கு கடுப்பை வரவழைத்தது.
அதை யாவும் அறியாத அவளின் மணாளனோ “காலையிலே செம்ம அழகா இருந்து என்னை மூடேத்தேறடி பொண்டாட்டி” என கிறக்கத்துடன் கூறியவனின் கரம் அவளின் வெற்றிடையில் ஊர்ந்தது என்றால்,அவளின் கழுத்தில் முகம் புதைத்தவனின் பற்கள் அங்கு வேட்கையும் காயத்தை ஏற்படுத்த ஆரம்பித்தன.
அவனின் தொடுகையில் அவளிற்கு துளியும் சிலிர்க்கவில்லை…அவளின் மேனி விறைத்து நிமிர்ந்தன.
மாதவிலக்கு காரணத்தால் ஏற்கனவே வயிற்றில் நெருப்பை பற்ற வைத்தது போல் தகித்த அடி வயிறு,இவனது சில்மிஷத்தில் மேலும் நெருப்பாய் கனன்ற தொடங்கின.
ஒரு கட்டத்தில் அவனின் கரங்கள் எல்லை மீற தொடங்கவும் “எனக்கு பீரியட்ஸ் சிவ்வு” என்றாள் உணர்ச்சியற்ற குரலில்.
அவனை நோக்கி அவள் திரும்பவே இல்லை…
ஆனால் அவளின் பேச்சை கேட்டதும் அதுவரை அவனுள் இருந்த உணர்வுகள் மொத்தமும் வடிந்துவிட “ப்ச் செம்ம மூடிலே வந்தேன்..எல்லாம் போச்சு…போடி” என எரிச்சலாக திட்டிக்கொண்டே அவன் அங்கிருந்து சென்றுவிட,
அவளோ வெளியில் செல்பவனின் முதுகை வெறித்து பார்த்திருந்தாள்.
மாதவிடாய் என்ன அவனின் அனுமதி கேட்டுக்கொண்டதற்கு பிறகா வரும்?
அதுவொரு இயற்கை உபாதை!
பெண்களின் உடலில் உள்ள சுரப்பிகளில் உண்டாகும் மாற்றம் இது!
அவள் தான் அவனிற்கு அடங்கிப்போவாள்?
அதையும் அவனின் கட்டளைக்கு இணங்கி நடக்க சொன்னால் அது கேட்குமா என்ன?
‘போடா’ என்றுவிட்டு அது தன் வேலையை செவ்வனே காட்டிக்கொண்டிருந்தது.
அவளிற்கு அடி வயிற்றை சுருட்டி வலி இருந்தாலும் பல்லைக்கடித்து அடக்கிக்கொண்டு ஆத்மசக்தியாக மாறி பணியை செய்ய ஆயுத்தமானாள்.
அவள் மிகுந்த சிரமத்துடன் காலையிலிருந்து அனைத்து வேலைகளையும் தனியாக செய்து கொண்டிருக்க,அவனோ தனது பாட்டை ஆரம்பித்துவிட்டான்.
“ஏய் சக்தி…கிச்சன்லே என்ன தான்டி பண்ணிட்டு இருக்கே?எனக்கு நேரம் ஆச்சுடி” என கத்த ஆரம்பித்து விட்டான்.
அவனிற்கு தேவையான உணவை பரிமாறி எடுத்து வைத்தவள்,குழந்தையை எழுப்பி தயாராக்கவே மறந்துவிட்டாள்.
‘ஐய்யோ’ என தலையிலடித்து குழந்தையை எழுப்பி குளிப்பாட்டி அழைத்து வந்து சாப்பிட வைத்தவள் “ஏங்க இன்னைக்கு ஒரு நாள் பையனை நீங்களே கொண்டு விட்டுப்போறீங்களா?வயிறு ரொம்ப வலிக்குது” என நலிந்த குரலில் இறைஞ்சலாய் கேட்க,
அவனோ அவளின் முகத்தை பார்க்காமல் காலணியை அணிந்துக்கொண்டே “சக்தி என்ன விளையாடறீயா நீ?நான் இன்னைக்கு சீக்கிரமே ஒரு கலெக்ஷனுக்கு போகணும்…நீ வீட்டுலே சும்மா தானே இருக்கே கூட்டிட்டு போயிட்டு வந்து ரெஸ்ட் எடு” என அவசரமாக உரைத்தவாறு அவளிடம் முறையாக விடைப் பெறாமல் கூட அவசரமாக கிளம்பிவிட்டான்.
மீண்டும் அவளை வலிக்க வைக்கும் அதே சொற்கள்…
அவளை அந்த சொற்கள் எப்போதும் போல் இன்றும் கொன்றன.
அவளிற்காக அவன் வருந்தவில்லை என்றால் கூட பரவாயில்லை…அவளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளாமல் செல்லும் கணவனை மனம் மரத்துப்போய் பார்த்திருந்தாள் சக்தி.