Ep 38

அத்தியாயம் 38

‘விஷ்வாவா?’ என்று சட்டென அலைபேசியை எடுத்து பெயரை பார்த்தவளுக்கோ, அப்போதே அழைத்தது சிம்மன் இல்லை விஷ்வா என்று புரிந்தது.

இந்த நேரத்தில் அவன் ஏன் அழைக்கிறான் என்று அவளால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது.

காரணம் சாயந்திரமே அவளின் அன்னை கீதா அவர்களின் திருமணத்தை நிறுத்த சொல்லி விஷ்வேந்திரனிடம் குணசேகர் பேசியதை பற்றி அனைத்தையும் அவளிடம் கூறி இருந்தாரே!

அதனால் நிச்சயம் அவன் அதை பற்றி பேச தான் அழைத்து இருப்பான் என்று அவளுக்குமே புரிந்தது. 

ஆழ்ந்த பெரு மூச்சு ஒன்றை வெளி விட்டுக் கொண்டவள், “சொல்லுங்க விஷ்வா” என்றாள் மெல்லிய குரலில்.

மறு முனையில் எந்த பதிலுமே இல்லை.

“விஷ்வா….” என்று மீண்டும் அவள் அழைக்க,

“இப்போ நீ யார்னு நினைச்சி என் கூட பேசிட்டு இருந்த?” என்று இறுகிய குரலில் கேட்டான்.

அவன் கேள்வியில் பிருந்தாவோ அமைதியாக இருக்க, 

விஷ்வாவோ பொறுமையை இழுத்து பிடித்த படி, “பிந்து உன் கிட்ட தான் நான் பேசுறேன். இப்போ நான் போன் பண்ணப்போ எதுக்காக சிம்மன்னு அந்த பேரை சொன்ன?” என்று குரலை உயர்த்தி கேட்க,

இனியும் உண்மையை மறைப்பதில் எந்த பயனும் இல்லை என்பதை அவளும் நன்றாகவே உணர்ந்திருந்தாள்.

இது நாள் வரையில் பெற்றோருக்காக தான் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருந்தாள்.

இனி அதற்கான அவசியம் தான் இல்லையே! 

மெதுவாக பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டவள், “நான்… சிம்மன் கிட்ட பேசுறேன்னு நினைச்சேன் விஷ்வா…” என்றாள்.

அதில் அவன் புருவங்கள் சுருங்க, “இல்லை புரில பிந்து…. நீ இப்போ என்ன சொல்லுற? அவன் கூட பேசிட்டு இருந்தன்னா…” என்றவனுக்கோ மனதுக்குள் பல குழப்பங்கள் தோன்றியது.

குணசேகர் சொன்ன விஷயத்தை அவளிடம் கேட்டு, அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தானே அழைத்தான். 

ஆனால், அவளோ சிம்மன் என்று தனக்கு பிடிக்காதவனின் பெயரை சொல்கிறாள்.

அதுவும் எவ்வளவு நெருக்கமாக பேசினாளே!

அவனோடு இவ்வளவு நெருக்கமாக பேசும் அளவுக்கு அவர்களுக்குள் என்ன இருக்கிறது?

ஒரு வேளை இந்த திருமணத்தை  நிறுத்த கூட இது தான் காரணமா?

அவன் மனதுக்குள் பல சந்தேகங்கள் முளைக்க, தான் நினைப்பது உண்மையா இல்லை தான் தவறாக யோசிக்கிறோமா என்று தான் அப்போது  கூட எண்ணினான்.

பிருந்தாவோ எச்சிலை கூட்டி விழுங்கிய படி, “விஷ்வா… நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்” என்றாள்.

அவனோ அவள் குரலில் இருந்த தயக்கத்தை உணர்ந்து கொண்டவனாய், “என்ன?” என்று அழுத்தமான குரலில் கேட்க,

பெண்ணவளோ ஒரு நொடி விழிகளை மூடி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “விஷ்வா… ஐ அம் இன் லவ் வித் சிம்மன்” என்றாள் தழு தழுத்த குரலில்.

அவள் கூற்றில் ஆடவனின் விழிகளோ விரிந்து கொள்ள, கையில் இருந்த அலைபேசியை இறுக்கமாகப் பற்றியவன், “வாட்?” என்றான்.

அவள் சொன்னதை அவனால் அவ்வளவு எளிதில் நம்ப முடியவில்லை.

அவளோ கண்கள் கலங்கிய படி, “ஐ அம் ரியலி சாரி விஷ்வா. சத்தியமா நான் உங்களை ஏமாத்தணும்னு நினைக்கல. இதை பத்தி நான் முன்னாடியே உங்க கிட்ட சொல்லி இருக்கணும். ஐ நோவ் நான் பண்ணது தப்பு தான். பட் என்னோட சிட்டுவேஷன்….” என்று அவள் கண்ணீருடன் முடிப்பதற்குள்,

“ஸ்டாப் இட்” என்று சீறி இருந்தான் விஷ்வா.

அவனது குரலில் இருந்த அழுத்தமே அவன் எந்த அளவுக்கு கோபத்தில் இருக்கிறான் என்பதை அவளுக்கு நன்றாகவே உணர்த்தியது.

“என்னடி சிட்டுவேஷன்? பிந்து நீ என்ன பேசிட்டு இருக்கன்னு உனக்கு புரியுதா?என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு இப்போ அவனை காதலிக்கிறேன்னு சொல்லுற? என்னடி இதெல்லாம்?” என்று கர்ஜனையாக கேட்க,

பிருந்தாவுக்கோ அவன் கேள்வியில் எந்த பதிலுமே சொல்ல முடியவில்லை.

அவனுக்கு தான் செய்தது மன்னிக்க முடியாத துரோகம் என்று அவளும் அறிவாள் தானே!

“விஷ்வா.. ப்ளீஸ் ஐ அம்… சாரி” என்று கலங்கிய குரலில் சொல்ல,

“சாரியா?….” என்று கசப்பாக புன்னகைத்தவன், “என்னடி இவ்ளோ கேசுவலா சொல்லுற? இந்த ஒரு வார்த்தை எல்லாத்தையும் மாத்திடும்னு நினைச்சிட்டியாடி? இத்தனை நாள் உன்னையே பைத்தியம் மாதிரி நினைச்சிட்டு இருந்த எனக்கு இதான் உன் பதிலா பிந்து?” என்று வலி நிறைந்த குரலில் கேட்டான். 

பிருந்தாவோ அவன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கூனிக் குறுகிப் போய் நின்றாள்.

நேற்று வரை தன்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற நம்பிக்கையில் இருந்தவனிடம் இன்று திடீரென்று ‘இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. தான் வேறு ஒருவனை காதலிக்கிறோம்’ என்று சொன்னால் அதை எப்படி அவனால் ஏற்றுக் கொள்ள முடியும்?

“நான் உன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தேன்டி. அன்னக்கி ஹாஸ்பிடல்ல அவன் கூட ஒரே ரூம்ல இருந்தப்போ கூட நான் உன் மேல சந்தேகப் படலயே! அப்போ கூட என் பிந்து என் கிட்ட பொய் சொல்ல மாட்டான்னு நீ சொன்ன வார்த்தைய தானேடி கண்ண மூடிட்டு நம்பினேன். ஏன்… இப்போ கூட…  இப்போ கூட என் அப்பா உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொன்னதும் அதெல்லாம் பொய்ன்னு நினச்சேன். உன்ன வற்புறுத்தி தான் அப்படி சொல்ல வச்சிருப்பாங்கன்னு பைத்தியக்காரன் மாதிரி நம்புனேன்…. ஆனா… இப்போ தானே புரியுது. நான் எவ்ளோ முட்டாளா இருந்து இருக்கேன்னு. ஒரு செக்கன்ல என்னை மொத்தமா தூக்கி போட்டுட்டல்ல?…. ஏன் பிந்து இப்படி பண்ண? ஏன்டி இப்படி பண்ண?” என்று கர்ஜனையாக கேட்டவன், ஆத்திரத்தில் பக்கத்தில் இருந்த பூச்சாடியை தூக்கி சுவற்றில் எறிந்திருந்தான்.

அதுவோ சுவற்றில் பட்டு சில்லு சில்லாக உடைந்து கீழே விழ, அவனோ கண்கள் சிவந்து போய்  நின்று இருந்தான்.

இப்போது அவன் மனம் கூட அந்த பூச்சாடியின் உடைந்த சில்லுகளைப் போலவே சுக்கு நூறாக உடைந்து போனது.

அலைபேசியின் வழியாக அந்த சத்தம் கேட்டதும் பிருந்தாவோ அதிர்ந்து போனாள்.

“வி… விஷ்வா…” என்று பயத்துடன் அழைக்க, மறுமுனையில் அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

அவனது மூச்சின் வேகம் மட்டுமே அவளுக்குக் கேட்டது.

“விஷ்வா…. ப்ளீஸ்… தயவு செஞ்சு உங்களை ஹர்ட் பண்ணிக்காதீங்க….” என்று பதறிய குரலில் சொல்ல,

அவனோ சத்தமாக சிரித்தவன், “ம்ஹும்… என்னடி? என் மேல அக்கறை இருக்க மாதிரி நடிக்கிறியா?” என்று வலி நிறைந்த குரலில் கேட்டான்.

பெண்ணவளோ, “ப்ளீஸ் விஷ்வா…. இப்படி எல்லாம் பேசாதீங்க… எனக்கு உங்க மேல எப்பவுமே அக்கறை இருக்கு” என்று வழிந்த கண்ணீரை துடைத்த படி சொல்ல, 

“ஓஹ் ரியலி? அதுனால தான் என் லைஃப்லயே நல்லா விளையாடிட்டல்ல?” என்று ஆத்திரத்துடன் கேட்டான்.

அவளோ பதில் பேச முடியாமல் கண்களில் கண்ணீர் வழிய நின்று இருக்க, அவளின் அழுகை அவன் செவிகளையும் வந்து துளைத்தது.

ஏனோ இப்போது கூட அவள் அழுகையை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இத்தனை நாள் தன்னிடம் உண்மையை மறைத்து ஏமாற்றியதற்காக அவள் மீது கோப பட வேண்டும் என்று எண்ணினாலும், அவனால் அவளை காயப்படுத்தவும் முடியவில்லை.

ஒரு கணம் கண்களை மூடித் திறந்தவன், “உனக்கும் அவனுக்கும்….   எப்போல இருந்து பழக்கம்?” என்று கேட்டான்.

அதில் சற்று தடுமாறியவள், “கொ… கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான்.” என்றாள்.

அதில் அவன் முகம் இறுகிப் போக, “சோ நான் உன் லைப்ல வந்ததுக்கு அப்புறம் தான் அவன் வந்திருக்கான்ல்ல?” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து கேட்க,

அவளோ அவமானத்தோடு தலையை குனிந்து கொண்டாள்.

இதற்கு அவளால் என்ன பதில் சொல்ல முடியும்?

ஒருவேளை சிம்மனை அவள் விஷ்வாவை சந்திப்பதற்கு முன்பே காதலித்திருந்தால், அவள் இந்த திருமணத்திற்கு சம்மதித்தது வேறு ஒரு அர்த்தத்தை கொடுத்திருக்கும்.

ஆனால்… உண்மை அதுவல்லவே!

விஷ்வாவுடன் நிச்சயம் முடிந்த பிறகுதானே சிம்மன் அவளுடைய வாழ்க்கைக்குள் வந்தான்.

அவனோடு பழக்கம் ஏற்பட்டது.

அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

தான் ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் என்பதை அறிந்திருந்தும், இன்னொருவன் மீது காதல் கொண்டது தவறு தான். 

ஆனால் இதை அவள் வேண்டும் என்றே செய்யவில்லையே!

காதல் எப்போது யார் மீது தோன்றும் என்று யாராலும் சொல்ல முடியாதே!

விஷ்வா மீது அவளுக்கு அப்படி எந்த எண்ணமும் தோன்றவில்லை.

பெற்றோருக்காக தானே வேறு வழி இல்லாமல் அவனை மண முடிக்க ஒத்துக் கொண்டாள்.

அதனாலேயோ என்னவோ தன் வாழ்க்கையில் ஒருவன் வரப் போகிறான் என்று தெரிந்தும், சிம்மன் அவள் வாழ்க்கையில் நுழைந்த பிறகு அவன் மீது தோன்றிய காதலை அவளால் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

மனதிற்கு கட்டளையிட்டு காதலை நிறுத்திவிட முடியுமா என்ன?

ஆனால், அதற்காக அவள் தான் செய்தது சரி என்று எப்போதுமே நினைத்தது இல்லை.

தெரிந்தோ தெரியாமலோ விஷ்வாவுக்கு தான் செய்தது ஒரு வகையில் துரோகம் என்றே தோன்றியது.

அவன் தன் மீது எந்த அளவுக்கு ஆசை வைத்திருக்கிறான் என்று தெரிந்தும் அனைத்தையும் மறைத்து அவன் நம்பிக்கையையே இன்று மொத்தமாக  உடைத்து விட்டாளே!

அதுவே அவளுக்குள் மேலும் குற்ற உணர்ச்சியைக் கொடுக்க, கண்களில் இருந்து நீர் வழிய நின்றிருந்தாள்.

அவள் அமைதியே அவனுக்கான அனைத்து பதிலையும் சொல்லி விட, அதற்கு மேலும் எதுவும் கேட்க விரும்பாதவன் கோபமாக அலைபேசியை துண்டித்து விட்டான்.

அவன் கண்களோ கலங்கிப் போயிருந்தது. 

என்ன தான் அவள் தனக்கு துரோகம் செய்து விட்டாள் என்று நினைத்தாலும், அவனால் அவளை முழுமையாக வெறுக்க முடியவில்லை.

அதே நேரம், அவள் தன்னிடம் உண்மையை மறைத்து இத்தனை நாள் தன்னை நம்ப வைத்து ஏமாற்றியதை எண்ணி கோபமும் வராமல் இல்லை.

தோய்ந்து போய் அப்படியே தரையில் அமர்ந்தவனுக்கோ மனம் ரணமாக வலித்தது. 

அவள் தன்னை இப்படி ஏமாற்றுவாள் என்று அவன் கனவில் கூட நினைக்கவில்லையே!

தன் வாழ்க்கையில் மட்டும் ஏன் இந்த விதி இப்படி விளையாடியது.

அவளை பொறுத்த வரையில் இது வெறும் திருமணமாக இருந்திருக்கலாம். ஆனால் அவனோ அவளை தன் மொத்த வாழ்க்கையுமாக அல்லவா நினைத்திருந்தான்.

அவளோடு எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று கனவு கண்டான்.

அவளுக்காக பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டானே!

ஆனால், அதெல்லாம் ஒரு நொடியில் மொத்தமாக சிதைந்து போய் விட்டதே!

ஏன் தன்னை இப்படி ஏமாற்றினாள்?

தன் மனதை பற்றியோ, தன் காதலை பற்றியோ அவள் ஒரு நொடி கூட யோசிக்கவில்லையா?

அவள் மீது வைத்த நம்பிக்கையை மொத்தமாக பொய்யாக்கி விட்டாளே!

ஒரு நொடியில் தன் மொத்த வாழ்க்கையையும் திசை மாற்றி விட்டு சென்ற அவள் மீது இப்போது கோபப்படுவதா?

இல்லை தனக்கு பிடிக்காதவனுக்காக தன்னை விட்டு சென்ற அவளை வெறுப்பதா?

அவன் கண்களோ வலியிலும், கோபத்திலும் சிவந்து போயின.

கடைசியில் தன் காதலுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போய் விட்டதே!

அந் நொடி அவள் தனக்கானவள் இல்லை என்ற உண்மையை அவனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

*****

அடுத்த நாள் தனது கேபினில் இருந்த சிம்மனோ, நோயாளிகளின் கோப்புகளை பார்த்துக் கொண்டிருக்க,  அந்நேரம் தடால் என்று கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் விஷ்வஜித்.

அவன் திறந்த வேகத்தில் கதவு சுவற்றில் மோதி பலமான சத்தத்தை எழுப்ப, அதில் சிம்மனின் பார்வையோ வாசலின் புறம் திரும்பியது.

 

அங்கே நின்று கொண்டிருந்தவனை கண்டதும் அவன் புருவங்கள் சற்றே இடுங்க, விஷ்வாவோ கோபத்தில் அவனை எரித்து விடுவது போல நோக்கினான்.

சிம்மனோ எந்த அதிர்ச்சியும் இல்லாமல் தனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன், அவனை என்ன என்பது போல புருவம் உயர்த்தி பார்க்க, 

விஷ்வாவுக்கோ அவனின் இந்த திமிரே மேலும் கோபத்தை அதிகப் படுத்தியது.

“எதுக்குடா இப்படி பண்ண?” என்று பற்களை கடித்த படி அவன் கேட்க, 

சிம்மனோ எந்த சலனமும் இல்லாமல்,  “நான் என்ன பண்ணேன்?” என்றான் சாதாரணமாக.

அதில் விஷ்வாவின் கை முஷ்டிகள் இறுக, “தெரியாத மாதிரி நடிக்காதடா…” என்றான் கர்ஜனையாக.

அதற்கு அலட்சியமான ஒரு பார்வையை அவன் மீது செலுத்திய சிம்மனோ, “பிருந்தாவை பத்தி பேசலாம்னு வந்திருக்க போல!” என்று நக்கலான குரலில் கேட்க,

அவ்வளவுதான்.

அவள் பெயரை சொன்னதுமே விஷ்வாவின் பொறுமை மொத்தமாக காற்றில் பறக்க, அடுத்தநொடி தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்தவன், அதை சிம்மனை நோக்கி நீட்டியிருந்தான்.

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
1 Comment
error: Content is protected !!
Scroll to Top