Ep 39

 

அத்தியாயம் 39

பிருந்தாவின் பெயரை சொன்னதுமே விஷ்வாவின் பொறுமை மொத்தமாக காற்றில் பறக்க, அடுத்த நொடி தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்தவன், அதை சிம்மனை நோக்கி நீட்டியிருந்தான்.

 “அவ பேரை சொல்லுற தகுதி கூட உனக்கில்லடா…” என்று ஆக்ரோஷமாக அவன் கத்த, அப்போது கூட சிம்மனின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

சற்றும் பதட்டமில்லாமல் தன் முன்னால் நின்றிருந்தவனை அழுத்தமாக பார்த்தவன், “இப்போ உனக்கு என்ன தான்டா வேணும்? எதுக்கு இங்க நின்னு பூச்சாண்டி காட்டிட்டு இருக்க?” என்று கேட்டான்.

விஷ்வாவோ கோபத்தில் பற்களை கடித்த படி, “வாய மூடுடா… என் வாழ்க்கையவே மொத்தமா அழிச்சிட்டு திமிரா வேற பேசுறியா? மரியாதையா என் பிந்துவோட லைஃப்ல இருந்து விலகி போயிடு. இல்லை உன்ன நான் கொல்ல கூட தயங்க மாட்டேன்” என்றான் ஆவேசத்துடன்.

சிம்மனோ, “என்ன மிரட்டுறியா?” என்று  நக்கல் மாறாத குரலில் கேட்டவன், தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து விஷ்வாவின் முன்னால் நின்ற படி, “நீ சொன்னதும் அவ வாழ்க்கையில இருந்து விலகி போறதுக்கு நான் ஒன்னும் அவ வீட்டுல பேசி நிச்சயம் பண்ண மாப்பிள்ளை கிடையாது. அவளை லவ் பண்ணி அவ கழுத்துல தாலியே கட்டின அவளோட புருஷன்.” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்த படி சொல்ல,

அதை கேட்ட விஷ்வாவோ ஒரு கணம் ஸ்தம்பித்து போனான்.

“வாட்?… தாலி கட்டின புருஷனா?” என்று அதிர்ந்து போய் கேட்டவனுக்கோ கையில் இருந்த துப்பாக்கியின் பிடி கூட சற்று நழுவியது.

நேற்று வரையில் வெறும் காதல் என்று நினைத்தது இன்று தாலி வரையில் போய் விட்டதா?

அவனுக்கோ ஒரு கணம் எதை நம்புவது என்றே புரியவில்லை. பாவம் நேற்றிலிருந்து எத்தனை அதிர்ச்சிகளை தான் அவனும் தாங்கிக் கொண்டிருக்கிறான்.

விஷ்வாவின் முக மாற்றத்தை கவனித்த சிம்மனோ, “என்னாச்சு பிரதர்? நீ ஷாக் ஆகுறதை பார்த்தா பாதி கதையை மட்டும் தான் தெரிஞ்சிட்டு வந்திருக்க போலிருக்கே! நான் வேணும்னா…. எங்க ரெண்டு பேருக்குள்ள என்னெல்லாம் நடந்ததுன்னு…. விலாவாரியா சொல்லட்டா?” என்று இதழோரம் அரும்பிய ஒரு வித நக்கல் புன்னகையுடன் கேட்க, 

அதில் விஷ்வாவின் முகமோ கோபத்தில் மேலும் சிவந்து போனது.

“போதும் நிறுத்துடா… இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா கூட அதான் உன் வாயில இருந்து வர கடைசி வார்த்தையா இருக்கும்.” என்று கத்தியவன், 

“இதெல்லாம் நீ எதுக்காக பண்ணன்னு எனக்கு நல்லாவே தெரியும்டா… பிந்து எனக்கு நிச்சயம் ஆன பொண்ணுன்னு தெரிஞ்சி தானே அவளை நீ நெருங்கின? அவளை எப்படியாவது என் கிட்ட இருந்து பிரிக்கணும். என் சந்தோஷத்தையே கெடுக்கணும். அதானே உனக்கு வேணும்? அதுக்காக தானே அவளை லவ் பண்ணுற மாதிரி நடிச்சிட்டு இருக்க… கடைசில என் வாழ்க்கையில இருந்து அவளை மொத்தமா பிரிச்சிட்டல்ல! எதுக்காகடா இப்படி பண்ண? உனக்கு என் மேல எதுக்குடா இவ்ளோ வெறுப்பு?” என்று கத்தியவனின் கண்களில் கோபத்தை விட வலி தான் அதிகமாக தெரிந்தது.

எப்போது இவர்கள் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு தான் சிம்மனோடு தனக்கு பழக்கம் ஏற்பட்டது என்று பிருந்தா கூறினாளோ அப்போதே இந்த சந்தேகம் அவனுக்குள் தோன்றியது.

சிம்மன் தன் மீது உள்ள வெறுப்பில் ஏன் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்க முடியாது?

அவளை தன்னிடம் இருந்து பிரிப்பதற்காக திட்டம் போட்டு பிருந்தாவை காதலிப்பது போல நெருங்கி இருக்கலாமே! 

சிம்மனின் வாழ்க்கை முறை எப்படி பட்டது என்று அவனுக்கு தான் நன்றாகவே தெரியும்.

அப்படி பட்டவனுக்கு திடீரென்று ஒரு பெண் மீது காதல் என்று சொன்னாலே அதை அவ்வளவு இலகுவில் நம்ப முடியாது.

அப்படி இருக்க, தான் திருமணம் செய்பவளையே அவன் விரும்புகிறான் என்றால் அதை வெறும் தற்செயல் என்று எப்படி விஷ்வா எடுத்து கொள்ளுவான்?

ஏற்கனவே சிம்மனுக்கும் தனக்கும் ஆகாது.

அதனால் நிச்சயம் அவன் இப்படி ஒரு காரியத்தை செய்ய கூட தயங்க மாட்டான் என்று தான் விஷ்வாவுக்குத் தோன்றியது.

ஒரு பக்கம் பிருந்தாவை யாருக்குமே விட்டு கொடுக்க முடியாத அளவுக்கு அவள் மீது தோன்றிய காதல்,  மறுபக்கம்… அவள் தன்னை வேண்டாம் என்று சொன்னதற்கு பின்னால் சிம்மனின் சதி வேலை தான் இருக்குமோ என்ற சந்தேகம்.

இந்த இரண்டுமே சேர்ந்து விஷ்வாவின் மொத்த கோபத்தையும் இப்போது சிம்மனின் மீதே திருப்பியிருந்தது.

அவன் கூறியதையெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த சிம்மனுக்கோ எந்த அதிர்ச்சியும் இருக்கவில்லை.

விஷ்வாவுக்கு அவன் மீது இப்படியான எண்ணங்கள் தோன்றாமல் இருந்திருந்தால் தானே ஆச்சரியமே!

அவனோ எந்த பதிலும் பேசாமல் அமைதியாக இருக்க,

விஷ்வாவோ “மரியாதையா என் பிந்து கிட்ட எல்லா உண்மையையும் சொல்லி நீயா விலகி போயிடுற. இல்ல… ” என்று அவன் கோபமாக ஏதோ பேசுவதற்கு முன்னரே,

அந்த அறையின் கதவை யாரோ திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர். 

அதில் அவர்கள் இருவரின் பார்வையும் ஒரு நொடி கதவின் புறம் திரும்ப, அங்கே வந்து நின்றது வேறு யாரும் அல்ல பிருந்தா தான்.

நேற்று சிம்மன் கொடுத்த அவனின் கோட்டை மீண்டும் அவனிடம் கொடுத்து விட்டு செல்லலாம் என்று அவனின் அறைக்கு வந்தவள் அங்கே துப்பாக்கியுடன் நின்று இருந்த விஷ்வாவை கண்டு அப்படியே ஸ்தம்பித்து போனாள்.

“வி.. விஷ்வா… இ…து… நி.. நீங்க…” என்று வார்த்தைகளை கோர்க்க முடியாமல் திணறியவளுக்கோ, விஷ்வாவின் துப்பாக்கி சிம்மனை நோக்கி இருப்பதை கண்டு இன்னுமும் பதறிப் போனாள்.

அவள் கரங்களோ பயத்தில் நடுங்க, கையில் இருந்த கோட் நழுவி கீழே விழுந்தது.

விஷ்வாவோ, “பிந்து நீ இங்க…?” என்று ஏதோ சொல்ல வாய் திறந்தவனை,

“விஷ்… வா… அ… ந்த… க.. கன்னை கி.. கீழ போட்டுடுங்க… ப்ளீஸ்…” என்று பதறிப் போய் சொன்னவளின் கண்களில் இருந்து பயத்தில் கண்ணீரே வந்து விட்டது. 

சிம்மனோ, “பிருந்தா முதல்ல நீ இங்கிருந்து கிளம்பு.” என்று கூற, அவளுக்கோ அவன் பேசிய எதுவுமே செவிகளில் விழவில்லை.

எப்படி விழும்?

தன் கண் முன்னாலேயே விஷ்வா துப்பாக்கியுடன் நின்றிருக்கிறான். அதுவும் சிம்மனை நோக்கி. அவளால் எதுவும் யோசிக்க கூட முடியவில்லை.

பயத்தில் உடல் மொத்தமும் வியர்த்து வழிந்தது.

“விஷ்வா… தயவு செஞ்சு நான் சொல்லுறதை கேளுங்க… உங்களுக்கு கோபம்னா என்னை என்ன வேணாலும் பண்ணுங்க…. ப்ளீஸ் அவரை மட்டும் எதுவும் பண்ணிடாதீங்க…. உங்களை கெஞ்சி கேக்குறேன் விஷ்வா.. ப்ளீஸ்…  கன்னை கீழ போடுங்க” என்று அழுகையினூடாகவே அவனிடம் கெஞ்சினாள்.

அவள் கண்ணீர் கன்னத்தை தாண்டி வழிந்தோட, அதைத் துடைக்கக் கூட மறந்து போனவளாய் விஷ்வாவிடம் கை கூப்பி நின்றிருந்தாள்.

தன் கண் முன்னாலேயே தான் உயிருக்கு உயிராக காதலிக்கும் பெண் அவளின் காதலனுக்காக இப்படி கண்ணீர் விட்டு துடிப்பதை பார்க்கும் போது விஷ்வாவால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

தனக்காக துடிக்க வேண்டிய அவள் மனம் இவனுக்காக துடிக்கிறதா?

அவனுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்பதற்காக அவள் கண்ணீர் விடுகிறாளா?

அவளின் காதலும், அக்கறையும் ஏன் ஒவ்வொரு அசைவும் கூட தனக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று எண்ணி இருந்தவனுக்கு, இன்று அது வேறு ஒருவனுக்காக வெளிப்படும் போது அவனால் அதை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? 

அவளை வலி நிறைந்த பார்வையுடன் பார்த்தவன், “இவனுக்காக இவ்ளோ துடிக்கிறியா? அவ்ளோ லவ்வா அவன் மேல?” என்று கேட்டவன், அடுத்த கணம் தன் கையில் இருந்த துப்பாக்கியின் ட்ரிகரை சிம்மனை நோக்கி அழுத்தி இருக்க,

பிருந்தாவோ “வேணாம்” என்று அந்த இடமே அதிரும் வண்ணம் கத்தியிருந்தாள். 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
2 Comments
error: Content is protected !!
Scroll to Top