அத்தியாயம் 31
இரவு நேரம் நெருங்கிக் கொண்டிருக்க, தன்னுடைய கணவரின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தார் கீதா.
இன்று எப்படியும் உண்மையை கூறி விட வேண்டும் என்ற முடிவில் தான் இருந்தார்.
ஆனால் உண்மை தெரிந்த பிறகு தன் கணவரின் நிலை என்னாகும் என்று எண்ணும் போது தான் உள்ளுக்குள் பயமாக இருந்தது.
நேரம் இரவு ஏழு மணியை தாண்டி இருக்க, வாசலுக்கு வெளியே கார் வந்து நின்ற சத்தம் கேட்டது.
அதில் திடுக்கிட்டு எழுந்தவர், தன்னையும் அறியாமல் பதற்றத்துடன் வாசலை நோக்கி பார்த்தார்.
அடுத்த சில நொடிகளில், கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் குணசேகர்.
உள்ளே வந்தவர் கண்களில் பட்டது என்னவோ சோபாவின் அருகே சற்று பதட்டமாக நின்றிருந்த மனைவியின் முகம் தான்.
அதை கண்டவர் புருவம் சுருக்கிய படி,
“என்ன கீதா? ஏன் ஒரு மாதிரியா இருக்க?” என வினவ,
அவரது கேள்வியில் தடுமாறியவர்,
“அ… அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. நீங்க போய் குளிச்சிட்டு வாங்க. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.” என்க, அவரும் சரியென கூறி விட்டு அறைக்குள் சென்றார்.
இரவு உணவை சாப்பிட்டு விட்டு தனது லேப்டாப்பில் ஏதோ வேலை பார்த்து கொண்டிருந்தார் குணசேகர்.
அதே நேரம் சற்று தயங்கிய படி, அறைக்குள் நுழைந்தார் கீதா.
அவரை ஏறிட்டு பார்த்தவர், “என்னடி? இன்னக்கி ஒரு மாதிரி இருக்க? என்ன பிரச்சனை உனக்கு?” என்று புரியாமல் கேட்டார்.
அவரது கேள்வியில் கீதாவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
எங்கிருந்து ஆரம்பிப்பது…
எப்படி சொல்வது…
என்று தெரியாமல் சில நொடிகள் அப்படியே நின்றார்.
அவர் அமைதியாக நிற்பதைக் கண்ட குணசேகர், லேப்டாப்பை மூடி விட்டு முழுவதுமாக அவர் பக்கம் பார்வையை திரும்பினார்.
“கீதா…” என்று அழுத்தமாக அழைத்தவர், “என்னாச்சு? ஏன் இப்படி பதட்டமா இருக்க? வீட்டுல ஏதாவது ப்ரோப்லமா?” என்று வினவ,
அதில் திடுக்கிட்டு நிமிர்ந்தவர்,
“நா… நான் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்ங்க…” என்றார் தடுமாறியபடி.
“என்ன விஷயம்?” என்று இயல்பாகவே கேட்டார் குணசேகர்.
கீதாவோ தனது விரல்களை ஒன்றோடு ஒன்று பிசைந்தபடி, “நம்ம… நம்ம பிருந்தாவோட கல்யாணத்தை பத்தி…” என்று இழுக்க, அதில் புருவம் சுருக்கியவர்,
“கல்யாணத்தை பத்தி என்ன? எல்லாம் நல்ல படியா தானே போய்ட்டு இருக்கு?” என்று கர கரப்பான குரலில் கேட்க,
கீதாவுக்கோ தொண்டை வறண்டு போனது.
உள்ளுக்குள் இனம் புரியாத பயம் தோன்ற, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் சில நொடிகள் கணவனையே பார்த்தபடி நின்றார்.
அவரோ மனைவியின் முகத்தில் இருந்த பதற்றத்தை பார்த்து, “என்ன கீதா? ஏன் இப்படி இழுக்குற? ஏதாவது பிரச்சனையா? இல்ல மாப்பிள்ளை வீட்டுல இருந்து ஏதாவது…. ” என இழுத்தவர், கீதாவின் முகத்தில் படர்ந்திருந்த கலக்கத்தை பார்த்து தன் வார்த்தைகளை பாதியிலேயே நிறுத்திக் கொண்டார்.
அவரது கேள்வியில் கீதா வேகமாக தலையசைத்தார்.
“இ… இல்லைங்க…”
“அப்புறம் என்ன? வாயைத் திறந்து சொல்லுடி?” என்றவர் குரல் இப்போது சற்றுக் கடினமாக ஒலிக்க,
கீதாவோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டவர், “இந்த… இந்த கல்யாணம் நடக்காது…” என்றார் வெடுக்கென.
குணசேகரோ அவர் கூற்றில் புருவம் சுருக்கியவர், “எ… என்ன?” என கேட்க,
கீதாவோ கணவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல், “இந்த கல்யாணம் நடக்காதுங்க…” என்றார் மீண்டும்.
அதை கேட்டவரோ அடுத்த நொடியே படுக்கையில் இருந்து சட்டென எழுந்து நின்றார்.
“கீதா!” என்று அதட்டியவர், “உனக்கு என்னாச்சு? இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணத்தை வச்சிக்கிட்டு என்ன பேச்சு பேசிட்டு இருக்க?” என்றார் கர்ஜனையாக.
கணவனின் கர்ஜனையான குரலில் கீதாவுக்கோ உடல் நடுங்கியது.
“என்னங்க… ந… நான் சொல்லுறதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க” என்றார் தழு தழுத்த குரலில்.
குணசேகரோ இரண்டு அடியில் தன் மனைவியை நெருங்கி நின்றவர், “என்னடி பொறுமையா கேக்க சொல்லுற? நீ என்ன பேசுறன்னு சுய நினைவோட தான் பேசுறியா?” என்று பெருங் குரலில் கேட்க,
கீதாவோ கண்களில் இருந்து கண்ணீர் வழிய, தன் முன்னால் கோபமாக நின்றிருந்த கணவரை ஏறிட்டு பார்த்தவர், “ந… நம்ம பொண்ணு… நம்ம கிட்ட….. எ…. எல்லாத்தையும் மறச்சிட்டாங்க… ” என்று வார்த்தைகள் ஒவ்வொன்றையும் கோர்க்க முடியாமல் திணறிய படி அவர் சொல்ல,
குணசேகருக்கோ பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறந்து சென்றது.
மனைவியின் தோளை அழுத்தமாகப் பற்றியவர், “கீதா…. நீ என்ன சொல்லுறன்னு எனக்கு சுத்தமா புரியல. கல்யாணம் நடக்காதுங்குற!… நம்ம பொண்ணு ஏதோ மறைச்சுட்டாங்குற!.. நீ என்ன சொல்றன்னு எனக்கு ஒண்ணுமே புரியல டி….” என்றார் அழுத்தமான குரலில்.
கீதாவோ, “என்னங்க… நம்ம பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லங்க…” என்று மனதை கல்லாக்கிக் கொண்டு கூறினார்.
அவர் கூறிய வார்த்தைகள் குணசேகரின் காதுகளில் விழுந்த அடுத்த நொடி, அவரது கரங்கள் தானாகவே மனைவியின் தோளில் இருந்து நழுவின.
“எ… என்னடி சொல்ற?… கல்யாணத்தை இஷ்டம் இல்லையா? ஆனா… ஆனா… நம்ம பொண்ணு கிட்ட சம்மதம் கேட்டுட்டு தானே எல்லாம் முடிவு பண்ணோம்?” என்று அதிர்ச்சியும், கோபமும் கலந்த குரலில் கேட்க,
“ஆமாங்க… ஆமா… இது வரைக்கும் நடந்தது எல்லாமே அவ இஷ்டத்துக்கு தான். ஆனா.. இப்போ… இப்போ வேற ஒருத்தனை காதலிக்கிறேன்னு அவன் கட்டின தாலியை கட்டிட்டு வந்து நிக்கிறாங்க நம்ம பொண்ணு…” என்று மொத்தமாக உண்மையை உடைத்து விட்டார் கீதா.
ஒரு கணம் தன் செவிகளில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் நிலை தடுமாறி இரண்டடி பின்னால் சென்றவரை “என்னங்க..” என்று பதறி போய் பிடித்தார் கீதா.
குணசேகரோ, “என்… என் பொண்ணா?.. இல்ல அவ அப்படி… அப்படி எல்லாம் பண்ணி இருக்க மாட்டா.. உனக்கு என்ன பைத்தியம் புடிச்சிடுச்சா? அவ மேல இப்படி ஒரு பழிய போடுற?” என்று மனைவி மீது சீற,
அவரோ, “போதுங்க… உங்க பொண்ண நம்பினது போதும். அவ எல்லாத்தையும் நம்ம கிட்ட மறச்சிருக்கா.” என்று அழுது கொண்டே சொல்ல,
குணசேகருக்கோ அதற்கு மேல் பேச வார்த்தைகள் வரவில்லை.
கோபம் மறைந்து, ஒரு வித ஏமாற்றமும், அதிர்ச்சியும் அவரது உள்ளத்தை ஆக்கிரமித்தது.
எப்போதுமே தன் மகளைப் பற்றி பெருமையாக மட்டுமே நினைத்த மனிதருக்கு, மனைவி கூறிய உண்மை நெஞ்சில் யாரோ கூர்மையான ஆயுதத்தை இறக்கியதைப் போல வலித்தது.
“இல்ல… இல்ல… என் பொண்ணு அப்படி பண்ண மாட்டா…” என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவர், வெறுமையாக எதிரே இருந்த சுவரை பார்த்தார்.
சில நொடிகளுக்கு அந்த அறையில் கீதாவின் அடக்கப்பட்ட அழுகை சத்தம் மட்டுமே ஒலித்தது.
குணசேகரின் கண்களும் மெதுவாக கலங்கின.
சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவர், “யார் அவன்?” என்று திடீரென கேட்க,
அந்த கேள்வியில் கீதா திடுக்கிட்டு கணவனை நிமிர்ந்து பார்த்தார்.
“எ… என்னங்க?” என புரியாமல் அவர் கேட்க,
குணசேகரோ தன் மனையாளை அழுத்தமாக பார்த்தவர், “அவன் யாருன்னு கேட்டேன். நம்ம பொண்ணு வாழ்க்கையை நமக்கே தெரியாம இந்த அளவுக்கு கொண்டு வந்த அந்த புறம் போக்கு யாருடி?” என்று கோபமும், ஆத்திரமும் கலந்த குரலில் கேட்க,
கீதாவோ பயந்த படி, “அ… அது… உங்க ஹாஸ்பிடல்ல வேலை பார்க்குற யாரோ டாக்டராம். அதாங்க.. அன்னக்கி நம்ம பொண்ண ஒருத்தன் காப்பாத்தினானே அவன் தான்” என்று மெதுவாக கூறினார்.
அதை கேட்டவரோ மேலும் அதிர்ந்து போனவராய், “யாரு.. சிம்மனா?” என்று கேட்க, கீதாவும் ஆம் என்பது போல தலையாட்டினார்.
குணசேகருக்கோ தன் மகள் வாழ்க்கையில் இப்படி விளையாடியது சிம்மன் என்று சுத்தமாக நம்ப முடியவில்லை.
அவன் மீது அவர் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தாரே!
அவனின் குணத்தை பற்றி அவருக்கொன்றும் தெரியாமல் இல்லை. அவனுக்கு இந்த கட்டுப்பாடெல்லாம் சுத்தமாக இல்ல என்பது அவர் ஏற்கனவே அறிந்த விடயம் தான்.
ஆனால், வேலை என்று வந்துவிட்டால் அவன் ஒரு சிறந்த மருத்துவர். தன் பொறுப்பில் ஒருநாளும் தவறாதவன்.
மற்ற பெண்கள் விடயத்தில் அவன் எப்படி இருந்தாலும், தன்னுடைய மகளை அவன் அப்படி ஒரு கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தது.
இதையெல்லாம் தாண்டி தன்னுடைய மகள் மீது அவர் அளவு கடந்த நம்பிக்கையை வைத்திருந்தார்.
இது வரையில் தான் போட்ட கோட்டை தாண்டி வெளியே வராதவள்.
தன்னை தலை குனிய வைக்கும் படி எந்த காரியத்தையும் இது வரையில் செய்யாத மகள் இனியும் அப்படி ஒரு காரியத்தை செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கையில் தான் அவனிடம் பயிற்சிக்காக அனுப்ப முடிவு செய்து இருந்தார்.
ஆனால் அவளே இன்று தன்னுடைய நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்து விட்டாளே என்று எண்ணும் போது தான் அந்த தந்தையால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“உன் பொண்ணு எங்க?” என்று கேட்டார் இறுகிப் போன குரலில்.
கீதாவோ அவர் வார்த்தையில் சட்டென கணவரை நிமிர்ந்து பார்த்தார்.
இது வரையில் ‘என் பொண்ணு’, ‘நம்ம பொண்ணு’ என்று பெருமையாகவும், உரிமையுடனும் தான் அழைப்பார்.
ஆனால் இன்று முதல் முறையாக அந்த உரிமை நிறைந்த வார்த்தை மாறியிருந்தது.
கணவனின் முகத்தையே வெறித்து பார்த்தவரின் கண்களில் மீண்டும் கண்ணீர் பெருக, தன் மகளின் செயல் கணவன் மனதை எந்தளவிற்கு காயப்படுத்தியிருக்கிறது என்பதை அந்த ஒரு வார்த்தையே அவருக்கு உணர்த்தியது.
ஆனாலும் ஒரு தாயாக தன் மகள் தவறு செய்திருந்தாலும், நடந்த அனைத்திற்கும் அவள் மட்டும் காரணமில்லை என்பதையும் கணவனுக்கு புரிய வைக்க வேண்டும் என எண்ணியவர்,
“என்னங்க… கோபப்படாதீங்க. நம்ம பொண்ணு அவனை காதலிச்சது உண்மை தான். ஆனா… ஆனா.. அவன் தான் நம்ம பொண்ண இழுத்துட்டு போயி கட்டாய தாலி கட்டி இருக்கான். அதுக்காக அவ பண்ணது சரின்னு நான் சொல்ல வரல. நம்ம கிட்ட உண்மைய மறச்சது தப்பு தான். ஆனா இதெல்லாத்துக்கும் அவ மட்டும் காரணம் இல்லங்க. அப்புறம் இன்னும் ரெண்டு நாள் கழிச்சி வீட்டுக்கே வந்து அவளை கூட்டிட்டு போயிடுவேன்னு அவளை மிரட்டிட்டு போயிருக்கான். அதுனால அவ ரொம்ப பயந்து போயிருக்கா” என்று கண்ணீரோடு கூற,
அவர் கூறியதைக் கேட்ட குணசேகரின் முகம் இன்னும் இறுகிப் போனது.
“இதுக்கு மேல எதுவும் பேசாத. நான் எதையும் கேட்க தயாரா இல்ல” என்றவர் விறு விறுவென அறையை திறந்து கொண்டு வெளியேற,
கீதாவோ, “என்னங்க எங்க போறீங்க?” என்று கத்திய படி அவர் பின்னால் ஓடினார்.
அவரோ எதையும் காதில் வாங்காமல் ஹாலுக்கு வந்தவர், “உன் பொண்ண கூப்பிடு” என்றார் அங்கே வந்த கீதாவிடம்.
கீதாவோ, “என்னங்க… ப்ளீஸ் அவ கிட்ட தயவு செஞ்சு கோப படாதீங்க!” என்று அப்போதும் மகளுக்காக அவர் பரிந்து பேச, குணசேகரோ கோபமாக அவரை ஒரு பார்வை தான் பார்த்தார்.
அதில் அவர் தலையோ தன்னையும் மீறி குனிந்து விட, அவரை அழுத்தமாக பார்த்து விட்டு தன் பார்வையை திருப்பியவர், “பிருந்தா… பிருந்தா… வெளியில வா” என்று அந்த வீடே அதிரும் படி கத்தினார்.
இங்கே தனது அறையில் ஜன்னலின் அருகே நின்று வானில் தெரியும் அந்த முழு நிலவை வெறித்த படி நின்றிருந்தாள் பிருந்தா.
அவள் கண்களோ கலங்கி போயிருக்க, மனதுக்குள் இனம் புரியாத பயமே அவளை வாட்டிக் கொண்டிருந்தது.
அந் நேரம் அவளின் அறை கதவையும் தாண்டி தந்தையின் அழைப்பு அவள் செவிகளில் வந்து விழ, அவசரமாக கண்களை துடைத்து கொண்டவள், அறையை விட்டு வெளியே வந்தாள்.
ஹாலில் அவளின் பெற்றோர்கள் இருவரும் நின்றிருக்க, தந்தையின் முகத்தை பார்க்கும் போதே அவளுக்கு புரிந்து போனது, அவருக்கு அனைத்தும் தெரிந்து விட்டது என்று.
ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவள், மெதுவாக படிக்கட்டுகளில் இறங்கி கீழே வந்தாள்.
தந்தை போட்ட சத்தத்தில் பாதி தூக்க கலக்கத்தில் இருந்து விழித்த படி, தனது அறையை திறந்து மெதுவாக எட்டிப் பார்த்தாள் மிருதுளா.
அங்கே அன்னை கண் கலங்கி போய் நின்றிருக்க, தந்தையின் முகமோ கோபத்தில் இறுகிப் போயிருந்தது.
அதை கண்டவளுக்கோ ஒரு கணம் இங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
பிருந்தாவும் தந்தையை ஏறிட்டு பார்க்க முடியாமல் தலை குனிந்த படி வந்து நிற்க,
அவளை அழுத்தமாக பார்த்த குணசேகர், “அம்மா உன்ன பத்தி என்னென்னவோ சொல்லுறா! அதெல்லாம் உண்மை தானா பிருந்தா?” என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்க,
பிருந்தாவுக்கோ என்ன பதில் பேசுவது என்றே புரியவில்லை.
இதெல்லாம் நடக்க கூடாது என்பதற்காக தானே அவள் அனைத்தையும் மூடி மறைத்தாள்.
ஆனால், அனைத்துமே அவள் கை மீறி போய் விட்டதே!
அவளின் அமைதியை பார்த்த குணசேகரின் முகம் மேலும் இறுக,
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு பிருந்தா… உன் அம்மா என் கிட்ட சொன்னதெல்லாம் உண்மை தானா?” என்று கோபமாக கேட்க,
இவளோ பயத்தில் நடுங்கிய படி, “உ… உண்மைதாப்பா…” என்று கண்ணீரோடு ஒப்புக்கொண்டாள் அவள்.
குணசேகருக்கோ ஏதோ நெருப்பில் நிற்பது போல இருந்தது.
இயலாமையுடம் மகளை பார்த்தவர், “நான் உனக்கு என்னம்மா குறை வச்சேன்? இது வரைக்கும் நீ ஆசை பட்ட மாதிரி தானே எல்லாமே பண்ணேன். ஆனா உன்னால எப்படி இந்த அப்பாவை ஏமாத்த முடிஞ்சிது?” என்று மனமுடைந்து போனவராய் கேட்க,
பிருந்தாவோ அழுது கொண்டே அவர் காலில் போய் விழுந்தவள், “ப்ளீஸ்ப்பா… தயவு செஞ்சு இப்படி எல்லாம் பேசாதீங்க! நான் உங்களை எப்பவுமே ஏமாத்தணும்னு நினைக்கலப்பா… தெரியாம பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்கப்பா… ப்ளீஸ் என்னை வெறுத்துடாதீங்க” என்று அவள் கதறி அழ,
குணசேகரோ அதற்கு மேல் எதுவும் பேசாமல் விறு விறு வென அறைக்குள் நுழைந்து விட்டார்.