அத்தியாயம் 30
அன்னை அறைந்ததில் நிலை தடுமாறி கீழே விழ போனவள், சட்டென படியின் கை பிடியை பற்றிக் கொண்டாள்.
அவளுக்கோ ஒரு நொடி என்ன நடந்தது என்றே புரியவில்லை.
தன் முன்னே பத்ரகாளியாய் நின்றிருந்த அன்னையை கண்களில் நீர் வழிய அதிர்ச்சியுடன் பார்த்தவள், “ம்மா..” என்று ஏதோ கூற வர,
“பேசாதடி… இதுக்கு மேலயும் என்ன பொய் சொல்லாம்னு யோசிக்கிற? பிரண்ட பார்க்க போறேன்னு சொல்லிட்டு நடு ரோட்டுல நின்னு யாரோ ஒரு பொறுக்கி கூட…. ” என்று கத்தியவருக்கு அதற்கு மேல் பேச முடியாமல் நா தழு தழுத்தது.
அவர் கூற்றில் பிருந்தாவோ திகைத்து விட்டாள்.
அப்படி என்றால் அன்னை நடந்த அனைத்தையும் பார்த்து விட்டாரா?
ஒரு நொடி தலையே சுற்றியது அவளுக்கு.
ஆம்…
கடந்த இரண்டு நாட்களாகவே பிருந்தாவின் நடத்தையில் ஏதோ மாற்றம் இருப்பதை அவர் கவனித்து கொண்டு தான் இருந்தார்.
இருந்தாலும் திருமண வேலைகள், வீட்டுப் பொறுப்புகள் என்று அலைந்து கொண்டிருந்தவர், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
‘கல்யாணம் நெருங்குது… அதான் கொஞ்சம் டென்ஷனா இருப்பா’ என்று தான் நினைத்திருந்தார். அதனால் தான் மகளிடம் எதை பற்றியும் அவர் கேட்கவில்லை.
ஆனால் இன்று…
அவளுக்கு அழைப்பு வந்ததும் மகளின் முகத்தில் தோன்றிய பதட்டத்தையும் நண்பி வந்திருக்கிறாள் என்று சொல்லி விட்டு அவள் பதறி போய் வெளியே ஓடியதையும் கவனித்தவருக்கு ஏதோ தவறாக தோன்ற, அவளுக்கு தெரியாமல் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்திருந்தார்.
அப்போது தான் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த அந்த காரையும், அதில் சாய்ந்து நின்றிருந்த சிம்மனையும் கண்டார்.
முதலில் யார் என்று அவருக்கு சரியாக புரியவில்லை.
ஆனால் அடுத்த நொடியே அந்த ஆடவன் பிருந்தாவை தன்னிடம் இழுத்துக் கொண்டதை பார்த்ததும், பதறி போய் வெளியே வர நினைத்தவர், அதற்குள் நடந்ததை கண்டு அப்படியே உறைந்து போய் விட்டார்.
அதற்கு மேல் அந்த காட்சியை ஒரு தாயாக அவரால் எப்படி பார்க்க முடியும்?
மொத்தமாக உடைந்து போய் விட்டார்.
கண்களில் வழிந்த கண்ணீரை கூட துடைக்காமல், தன் முன்னால் தலை குனிந்து போய் நின்றிருந்தவளை பார்த்தவர் “நீ எல்லாம் என் வயித்துல தான் பிறந்தியா? இப்படி குடும்ப மானத்தையே வாங்கிட்டியேடி பாவி!” என்று மீண்டும் அவள் கன்னத்தில் ஓங்கி அறைய,
பிருந்தாவோ வலியில் கன்னத்தை பிடித்துக் கொண்டாள்.
“ம்மா… ப்ளீஸ்… ந… நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க…” என்று கண்ணீரோடு கெஞ்ச,
“சீ…. என்னை அம்மான்னு கூப்பிடாதடி… உன்னை நான் இப்படி தான் வளர்த்தேனா? இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணத்தை வச்சிட்டு இப்படி ஒரு அசிங்கத்தை பண்ணிட்டு வந்து நிக்கிறியே? உன் அப்பாவை பத்தியோ நம்ம குடும்ப மானத்தை பத்தியோ கொஞ்சமாவது யோசிச்சியா?” என்று கோபமாக கேட்டவர்,
“யாருடி அவன்? சொல்லு யாராவன்? எத்தனை நாளா இதெல்லாம் நடந்துட்டு இருக்கு?” என அவளின் தோளை பற்றி உலுக்க,
பிருந்தாவோ பதில் சொல்ல முடியாமல் அழுத படியே நின்றாள்.
அவள் மௌனம் அவரை மேலும் கோபப் படுத்த, “வாயை திறந்து சொல்லுடி? உனக்கும் அவனுக்கும் என்ன சம்மந்தம்? இப்போவாவது உண்மையை சொல்லி தொலையென்” என்று அதட்ட,
இவளோ பயத்தில் நடுங்கிய படியே, “அ… அவர… நான்…” என்று வார்த்தைகளை கோர்க்க முடியாமல்
தடுமாறினாள்.
கண்ணீர் தாரை தாரையாக வழிய, அவளது உதடுகள் நடுங்கிக் கொண்டே இருந்தது.
எங்கிருந்து ஆரம்பிப்பது…
எதை சொல்வது…
எப்படி சொல்வது..
என்று எதுவுமே தெரியாமல் நின்றவளுக்கு, மூச்சே அடைத்தது.
“என்னடி முழுங்குற? வாயை திறந்து சொல்லு! அவனை நீ காதலிக்கிறியா? எத்தனை நாளா உங்களுக்குள்ள பழக்கம் இருக்கு? ஏதாவது சொல்லுடி” என்று மீண்டும் அதட்டினார் அவளது அன்னை.
அந்த குரலில் பிருந்தாவின் உடல் மொத்தமும் நடுங்கியது.
கடந்த சில நாட்களாக நடந்த ஒவ்வொரு சம்பவமும் மின்னல் வேகத்தில் அவளின் கண்முன் வந்து போக, நெஞ்சுக்குள் இருந்த பாரம் தாங்க முடியாமல் பெருகியது.
“ம்மா…” என்று மெல்லிய குரலில் முனகியவள், அடுத்த நொடியே நெஞ்சை பிடித்துக் கொண்டாள்.
மூச்சு விடவே சிரமமாக இருந்தது.
கண்கள் மெல்ல மெல்ல இருளத் தொடங்க,
கால்கள் இரண்டும் தள்ளாடின.
“பிருந்தா…” என்று அவளது அன்னை அழைத்தும், அதை காதில் வாங்கும் நிலையில் கூட அவள் இல்லை.
ஒரே நாளில் இத்தனை அதிர்ச்சிகளை தாங்கிக் கொள்ள முடியாமல், அவளது மனமும் உடலும் முற்றிலுமாக சோர்ந்து போக, “பிருந்தா என்னாச்சு உனக்கு?” என்று அன்னை பதறி போய் அவளை பிடிப்பதற்குள் அப்படியே மயங்கி கீழே சரிந்தாள் பெண்ணவள்.
சில நிமிடங்கள் கழித்து…
மெல்ல கண்களை திறந்தாள் பிருந்தா.
தலை முழுவதும் பாரம் ஏறியது போல வலிக்க, கண்களை திறக்க சிரமப்பட்டவள், மெதுவாக விழிகளைத் திறந்தாள்.
முதலில் பார்வை மங்கலாக இருந்தது.
சில நொடிகளில் அது தெளிய, சுற்றிலும் பார்வையை சுழற்றினாள்.
தான் தன் அறையில் இருப்பது புரிய, அருகில் அவளின் அன்னை கலங்கிய கண்களுடன் அமர்ந்து இருந்தார்.
அவர் முகத்தில் கவலையை தாண்டி ஏமாற்றமும், வலியுமே அதிகமாக தெரிந்தது.
அவரை பார்த்ததுமே சற்று முன்னர் நடந்த அனைத்தும் அவள் கண் முன்னால் வந்து போக,
“ம்மா…” என்று நடுங்கிய குரலில் அழைத்தவள், மெதுவாக எழுந்து அமர முயன்றாள்.
உடனே அவளது தோளை பிடித்து சாய்ந்து கொள்ள வைத்தவர்,
“எழுந்திருக்காத… கொஞ்ச நேரம் படுத்துக்கோ…” என்று அமைதியாக கூறினார்.
அந்த அமைதியே பிருந்தாவுக்கு இன்னும் அதிக வலியை கொடுத்தது.
“ம்மா… நான் சொல்லுறதை கொஞ்சம் கேளுங்க” என்று அவள் ஏதோ பேச வர முன்னரே,
“அம்மா…” என்று அழைத்தபடி வீட்டில் வேலை செய்யும் பெண்மணி ஒரு டம்ளர் எலுமிச்சை சாறுடன் உள்ளே வந்தார்.
“பாப்பா கண் முழிச்சிட்டாங்களா?” என்று பதற்றத்துடன் கேட்டவர், அந்த டம்ளரை பிருந்தாவின் அன்னையிடம் கொடுக்க, அதை வாங்கியவர், “நீ போய் வேலைய பாரு” என்று கூற,
அவளும் சரியென தலையாட்டி விட்டு வெளியேறினாள்.
பிருந்தாவின் புறம் திரும்பியவர், “இதை குடி” என்று அந்த சாறை நீட்ட,
நடுங்கிய கைகளால் அதை வாங்கிக் கொண்டவள்,
“ம்மா… நான் உங்ககிட்ட…” என்று பேசத் தொடங்க,
“இப்போ எதுவும் பேசாத… முதல்ல இந்த ஜூசை குடி” என்றார் அழுத்தமான குரலில்.
அவளும் வழிய தயாரான கண்ணீரை உள்ளே இழுத்தபடி, அந்த சாறை மெதுவாக பருகி முடித்தவள், டம்ளரை அன்னையிடம் நீட்டப் போக, அப்போதே தன் முன்னால் இருந்த கண்ணாடியின் ஊடாக தெரியும் தன்னுடைய பிம்பத்தை ஏதேர்ச்சியாக கண்டாள்.
அதில் அவளுடைய சுடிதார் சற்றே விலகி, அவள் கழுத்தில் இருந்த தாலிக் கயிறு வெளியில் எட்டிப் பார்க்க, அதை கண்டவளோ பதறி போனாள்.
‘ஐயோ!…’ என்று உள்ளுக்குள் பதறியவள், அன்னை காண்பதற்குள் அதை உள்ளே மறைக்க முயல,
“போதும்” என்றார் கீதா.
அதில் திடுக்கிட்டு போய் அன்னையை அவள் பார்க்க,
கீதாவோ “இதுக்கு மேலையும் எதை மறைக்கலாம்னு நினைக்குற? இது வரைக்குமே நீ மறைச்சது போதாதா?” என்று கண்களில் இருந்து கண்ணீர் வழிய கேட்டவர்,
“இது மட்டும் தானா! இல்ல… உனக்கும் அவனுக்கும்…” என்று வார்த்தையை முடிக்க முன்னரே,
நொடியில் அவர் கேள்வியின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டவள்,
“அம்மா..” என்று கத்தி இருந்தாள்.
அவரோ கோபமாக கையில் இருந்த டம்ளரை விசிறியடித்தவர், “என்னடி அம்மா? இவ்வளவு பெரிய விஷயத்தை மறச்சிட்டு எதுவுமே நடக்காத மாதிரி இத்தனை நாள் எங்களை ஏமாத்தி இருக்க! இதுக்கு மேலயும் உன்ன நாங்க நம்பணும்னு சொல்லுறியா?” என்று மனமுடைந்து போய் அவர் கத்த,
“அம்மா…!” என்று அலறிய படி, சட்டென படுக்கையில் இருந்து இறங்கி அவர் கால்களில் விழுந்து கதறினாள்.
“இல்லம்மா… இல்ல… நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்கலம்மா… நான் எந்த தப்பும் பண்ணலம்மா…. சத்தியமா பண்ணல… ப்ளீஸ்ம்மா என்னை நம்புங்க… அவர் என்னை கல்யாணம் பண்ணிகிட்டது உண்மை தான். ஆனா… ஆனா எங்களுக்குள்ள எந்த தப்பும் நடக்கலம்மா…. உங்க பொண்ணு சத்தியமா எந்த தப்பும் பண்ணலம்மா… ப்ளீஸ் என்னை நம்புங்க” என்று தேம்பி தேம்பி அழுதவளின் கண்ணீர் துளிகள் அன்னையின் பாதங்களை நனைத்தது.
கீதாவுக்கோ மகளின் அழுகையை அதற்கு மேல் பார்க்க முடியவில்லை.
என்ன தான் அவள் இவ்வளவு பெரிய விடயத்தை மறைத்திருந்தாலும், அவள் அத்துமீறவில்லை என்று சொன்னது, ஒரு தாயாக அவரின் நெஞ்சில் இருந்த பெரும் பாரத்தை சற்றே குறைத்தது.
காலில் விழுந்து அழுது கொண்டிருந்த மகளை பார்த்தவர், “எந்திரி” என்றார்.
பிருந்தாவும் அழுது கொண்டே எழுந்து நிற்க,
அவரோ, “இதுக்கு மேல எதையும் மறைக்காம என் கிட்ட உண்மைய சொல்லு பிருந்தா. அவனுக்கும், உனக்கும் எப்படி பழக்கம் வந்தது? இதெல்லாம் எப்போ நடந்தது?” என்று வேதனை கலந்த குரலில் அவர் கேட்டார்.
பிருந்தாவும் இனியும் எதையும் மறைக்க நினைக்கவில்லை.
ஏற்கனவே அவள் உண்மையை மறைத்ததால் இவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டாள்.
எப்படியும் இரண்டு நாள் கழித்து சிம்மன் மூலமாக அனைத்து உண்மையுமே தெரியப் போகிறது.
அதற்குள் தானே அன்னையிடம் உண்மையை கூறி விட எண்ணியவள்,
நடந்த அனைத்தையும் அவரிடம் சொல்லி முடித்தாள்.
அதை கேட்டவரோ அப்படியே தொப்பென கட்டிலில் அமர்ந்தார்.
அன்று தன்னுடைய மகளின் உயிரை காப்பாற்றியவன், இன்று அவளின் வாழ்க்கையையே இப்படி கேள்வி குறியாக்கி விட்டானே!
அவரின் முகத்தில் அதிர்ச்சியும், வேதனையும், கோபமும் மாறி மாறி வந்து போனது.
அவரால் எதையும் பேச முடியவில்லை.
ஒரு தாயாக மகளின் காதலை புரிந்து கொள்ள முடிந்தது.
ஆனால், அவள் அனுபவித்த வேதனையையும், அவளது சம்மதம் இல்லாமல் நடந்த திருமணத்தையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பிருந்தாவோ கண்களில் இருந்து கண்ணீர் வழிய, அன்னையின் முன்னே தலை குனிந்து ஒரு குற்றவாளி போல நின்றிருந்தாள்.
சில நிமிடங்கள் அந்த அறையில் அமைதி மட்டுமே நிலவியது.
இறுதியாக பெருமூச்சு ஒன்றை விட்ட கீதா,
“இவ்வளவு பெரிய விஷயம் நடக்குற வரைக்கும் ஒரு வார்த்தை கூட என் கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணலையாடி? உன் அம்மா செத்துட்டாங்கன்னு நினைச்சிட்டியா?” என்றார் உடைந்த குரலில்.
பிருந்தாவோ தேம்பியபடி,
“ம்மா ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? உங்க கிட்ட நான் எதையும் மறைக்கணும்னு நினைக்கலம்மா… எனக்கு உண்மைய சொல்ல தைரியம் வரல… அப்பாவை நினைச்சா பயமா இருந்துச்சு… ” என்றாள்.
“உன் அப்பாவை நினைச்சு பயமா இருந்துச்சா? அப்போ என்னை பத்தி ஒரு வாட்டி கூட தோணலையா? நான் உன் அம்மாடி… நீ வந்து ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, உலகமே எதிரா நின்னாலும் உனக்காக நான் நின்னிருப்பேன். ஆனா நீ என்ன பண்ணிட்ட? இவ்வளவு பெரிய சுமையை தனியா சுமந்துட்டு இருக்க…” என்று கண்ணீர் ததும்ப கூற,
பிருந்தாவால் கண்ணீர் விடுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
கீதாவோ தன் நெற்றியை பிடித்துக் கொண்டார்.
“ஐயோ கடவுளே!… இது என்ன சோதனை? ஒரு பக்கம் நிச்சயமான கல்யாணம்… இன்னொரு பக்கம் இவ கழுத்துல தாலியோட வந்து நிக்கிறா… இப்போ இதெல்லாம் எப்படி இவ அப்பா நான் சொல்லுவேன்” என்று கலங்கினார்.
அன்னையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பெண்ணவளை மேலும் குற்றவாளி கூண்டில் நிறுத்தியது.
அவர் அருகே மண்டியிட்டு அமர்ந்தவள்,
“எல்லா தப்பும் என் மேலதான் ம்மா… நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன். ஆனா அப்பாவுக்கு மட்டும் இப்போ எதுவும் சொல்லிடாதீங்க ம்மா… அவரால இதை தாங்கிக்க முடியாது… என்னை அவர் கண்டிப்பா வெறுத்துடுவாரு” என்று அவரது கைகளை பிடித்து கெஞ்சினாள்.
அவளை கோபமாக நிமிர்ந்து பார்த்தவர், “என்னடி பேசிட்டு இருக்க? இதுக்கு மேலையும் எல்லாத்தையும் மறைக்கணும்னு சொல்லுறியா? ஏற்கனவே நீ மறச்சதுனால இவ்ளோ பிரச்சினை வந்திருக்கு. இன்னும் நாம இதை மறைச்சிட்டு இருந்தா, நாளைக்கு வேற யார் மூலமாவது உன் அப்பாவுக்கு தெரிஞ்சா… அந்த மனுஷன் நிலைமை என்னாகும்னு நினைச்சி பார்த்தியா?
அவரு உன் அப்பா மட்டும் இல்ல, என் புருஷனும் கூட. அவர்கிட்ட இவ்வளவு பெரிய உண்மையை மறைச்சிட்டு என்னால இருக்க முடியாது.” என்று உறுதியாக கூறி விட,
அதற்கு மேல் பிருந்தாவாலும் எதுவும் மறுத்து பேச முடியவில்லை.