Ep 32

அத்தியாயம் 32

அடுத்த நாள் காலை மிக அழகாக புலர, கண்ணாடியின் முன் நின்று தனது விலை உயர்ந்த கைக் கடிகாரத்தை கட்டிய படி நின்றிருந்தார் குணசேகர்.

இரவு முழுவதும் அவருக்கு உறக்கம் என்பதே சுத்தமாக இல்லை.

ஒரு தந்தையாக தன் மகள் செய்த செயலை நினைத்து மனம் வெதும்பியதோடு, அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்தவன் மீது கொலை வெறி தான் தோன்றியது. 

அவரது முகத்தில் எப்போதும் இருக்கும் நிதானம் இன்று முழுவதுமாக காணாமல் போயிருந்தது.

அதே நேரம் மெதுவாக அறைக்குள் நுழைந்தார் கீதா.

“என்னங்க… ஹாஸ்பிடலுக்கு கிளம்புறீங்களா?” என்று தயக்கத்துடன் கீதா கேட்க, 

குணசேகரிடமோ எந்த பதிலும் இல்லை.

நேற்று இரவு நடந்த சம்பவத்திற்கு பிறகு அவரோ யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

கீதாவோ கணவனின் முகத்தை கவலையுடன் பார்த்த படி, 

“சாப்பிட்டுட்டு போலாமே!” என்று மெதுவாக சொல்ல, 

அவரோ மேசையில் இருந்த தனது பணப்பையையும் கார் சாவியையும் எடுத்துக் கொண்டவர், “எனக்கு எதுவும் வேணாம்” என்று கூறி விட்டு வெளியேறி விட, கீதாவும் கண்ணீரோடு சுவற்றில் சாய்ந்து கொண்டார்.

குணசேகரோ தனது வண்டியில் ஏறி மருத்துவமனைக்கு புறப்பட, அவர் போவதை தனது அறையில் உள்ள ஜன்னலின் வழியாக பார்த்து கொண்டிருந்த பிருந்தாவுக்கோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

கார் வீட்டை விட்டு வெளியேறும் வரை காத்திருந்தவள், அப்படியே தரையில் அமர்ந்து கதறி அழ ஆரம்பித்தாள்.

அவளது அழுகை சத்தம் கேட்டு ஓடி வந்தாள் மிருதுளா.

“அக்கா…” என்று அவளை அணைத்துக் கொண்டவள், “அழாதக்கா… எல்லாம் சரியாகிடும்…” என்று சமாதானப்படுத்த முயற்சித்தாள்.

ஆனால் பிருந்தாவோ, “அப்பா என்னை வெறுத்துட்டாரு மிரு… இனிமே எந்த முகத்தை வச்சிக்கிட்டு நான் அவரை போய் பார்ப்பேன்?” என்று தேம்பி தேம்பி அழ, மிருதுளாவின் கண்களும் கலங்கி போனது.

அதே நேரம்…

குணசேகரின் கார் மருத்துவமனையின் பார்க்கிங்கில் வந்து நின்றது.

எப்போதும் கம்பீரமாக நடந்து வரும் அவர் இன்று வேகமான அடிகளுடன் உள்ளே நுழைந்தார்.

அவரை பார்த்த ஊழியர்கள் அனைவரும் மரியாதையுடன் வணக்கம் கூறினாலும், அவர் யாரையும் திரும்பி கூட பார்க்கவில்லை.

விறு விறுவென தனது அறைக்குள் சென்றவர், இன்டர்காமை எடுத்தார்.

“டாக்டர் சிம்மனை உடனே என் ரூமுக்கு வர சொல்லுங்க…” என்று கூற,

மறு முனையில் இருந்த பெண்ணோ, “டாக்டர் சிம்மன் இப்போ ஆப்பரேஷன் தியேட்டர்ல இருக்காரு. ஒரு முக்கியமான சர்ஜரி நடந்துட்டிருக்கு. அவர் வந்ததும் இன்போர்ம் பண்ணிடுறோம் சார்” என்று கூற,

குணசேகரும் உஷ்ண பெரு மூச்சு ஒன்றை வெளிவிட்ட படி, “ஓகே. சர்ஜரி முடிஞ்சதும் நேரா என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க” என அழுத்தமாக கூறிவிட்டு ரிசீவரை வைத்தார்.

இனியும் அமைதியாக இருந்தால் தன் மகளின் வாழ்க்கை முழுவதுமாக கைமீறி போய்விடும் என்பதை குணசேகர் நன்றாகவே உணர்ந்திருந்தார்.

நடந்ததை இனி மாற்ற முடியாது தான்.

ஆனால் நடந்த தவறை காரணம் காட்டி தன் மகளின் எதிர்காலத்தை பலி கொடுக்க அவர் தயாராக இல்லை.

ஏதோ வயதுக் கோளாறில் மகள் செய்த செயலுக்காக அவளை சிம்மனுக்கே திருமணம் செய்து கொடுக்கும் அளவுக்கு எல்லாம் குணசேகர் பலவீனமானவர் இல்லை.

அவரைப் பொறுத்தவரை கழுத்தில் கட்டப்பட்ட தாலியை விட, தன் மகளின் வாழ்க்கை தான் முக்கியம்.

ஒருவேளை சிம்மன் நல்ல குணம் கொண்டவனாகவும், பொறுப்புணர்வு உள்ளவனாகவும் இருந்திருந்தால் கூட அவர் யோசித்திருக்கலாம்.

ஆனால் பெண்களை வெறும் ஆசைக்கான பொருளாக மட்டுமே பார்க்கும் ஒருவனிடம், தன் மகளின் வாழ்க்கையை ஒப்படைக்கும் எண்ணம் அவருக்கு துளியும் இல்லை.

தன் வாழ்க்கையில் எத்தனையோ பெண்களை பயன்படுத்திவிட்டு கடந்து சென்றவன் மீது, ஒரு தந்தையாக அவருக்கு எப்படி நம்பிக்கை வரப் போகிறது?

அதுவும் மகளின் சம்மதமே இல்லாமல் அவளை கட்டாய திருமணம் செய்து, மிரட்டி விட்டு வேறு சென்று இருக்கிறான்.

இப்படி பட்டவனுக்கு அவர் எப்படி தன் மகளை கொடுப்பார்?

அதனால்தான் நேற்றிரவே ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.

எந்த சூழ்நிலையிலும் சிம்மனை தன் மருமகனாக ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.

அவன் செய்த தவறுக்கு அவனை அப்படியே விடவும் கூடாது. நிச்சயமாக அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தார்.

சுமார் இரண்டு மணி நேர முடிவில்லாத காத்திருப்பிற்குப் பின், “மே ஐ கமிங் டாக்டர்” என்று அனுமதி கேட்ட படி, குணசேகரின் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் சிம்ம விஷ்ணு.

அத்தனை பெரிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துவிட்டு வந்தவனின் முகத்தில் எப்போதும் போல எந்தவித களைப்பும் இருந்ததாக தெரியவில்லை.

குணசேகரோ, “உட்காரு” என்றார் தன்னை கஷ்டபட்டு கட்டு படுத்திய படி.

ஆனால், சிம்மனோ இருக்கையில் அமராமல், தன் இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டிற்குள் போட்ட படியே, “இட்ஸ் ஓகே டாக்டர் சொல்லுங்க, எதுக்கு வர சொன்னீங்க?” என்று எந்தவித சலனமுமின்றி மிக இயல்பாகக் கேட்டான்.

அவனது அந்த அலட்சியமான பேச்சையும், திமிரான செயலையும் கண்ட குணசேகருக்கோ கோபம் தலைக்கேறியது.

தன் குடும்பத்தின் சந்தோஷத்தையே மொத்தமாக அழித்து விட்டு, இவ்வளவு சாதாரணமாக இருக்கிறானே!

ஆவேசமாக தனது இருக்கையில் இருந்து எழுந்தவர், “உனக்கு எவ்ளோ தைரியம் இருந்திருந்தா என் பொண்ணோட வாழ்க்கையிலேயே விளையாடி இருப்ப?” என்று கட்டுக்கடங்காத கோபத்துடன் சீறினார்.

ஆனால் சிம்மனோ எந்த வித சலனமும் இல்லாமல் அவரை பார்த்தவன், “வாட்? நான் உங்க பொண்ணு வாழ்க்கையில விளையாடினேனா? என்ன டாக்டர் பேசிட்டு இருக்கீங்க! நானும், அவளும் சீரியஸா லவ் பண்ணிட்டு இருக்கோம். இதை போய் எப்படி விளையாட்டுன்னு சொல்லுவீங்க?” என்று தோள்களை குலுக்கிய படி கேட்க, 

அவரோ கோபமாக வந்து அவன் காலரை பற்றி இருந்தார்.

“டேய்… நல்லா இருந்த என் பொண்ணோட மனசை கண்டதையும் பேசி கலச்சிட்டு இப்போ லவ்வுன்னு சொல்லி நாடகம் ஆடுறியா? நீ தாலி கட்டிட்டா என் பொண்ண உன் கூட அனுப்பி வச்சிடுவேன்னு நினைச்சியா? ராஸ்கல்… உன்ன மாதிரி ஒரு அயோக்கியனுக்கு என் பொண்ணு கேக்குதா?” என்று ஆக்ரோஷமான குரலில் கத்த, 

சிம்மனோ அதற்கெல்லாம் சிறிதும் அசராமல், தன் காலரைப் பற்றியிருந்த குணசேகரின் கைகளை மிக அனாயாசமாக விலக்கி விட்டவன், “வயசான காலத்துல எதுக்கு இந்த வேலையெல்லாம் டாக்டர்? பிருந்தா இப்போ என்னோட வைப். அவளை கூட்டிட்டு போறதுக்கு எனக்கு இனி யாரோட பர்மிஷனும் தேவையில்ல.” என்று இதழை பிதுக்கிய படி சொல்ல,

குணசேகருக்கோ இருந்த கொஞ்ச பொறுமையும் காற்றில் கரைந்தது.

“சிம்மா இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின நான் மனுஷனா இருக்க மாட்டேன். என் பொண்ணை கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணிட்டு இப்போ வைப்ன்னு உரிமை கொண்டாடுறியா? நீ பண்ண தப்புக்கு உன்ன நான் சும்மா விட மாட்டேன். கண்டிப்பா போலீஸ்கு போயி உன்ன ஜெயில்ல தள்ளுவேன்” என்று எகிற,

“போலீஸா?” என்று நக்கலாக இதழ்களை வளைத்தவன், “போலீஸ்க்கு போனா உங்க பொண்ணோட நிலைமை என்னாகுறது டாக்டர்? அதை பத்தி கவலை பட மாட்டீங்களா?” என்று புருவம் உயர்த்தி கேட்க,

குணசேகரோ புருவம் சுருக்கி அவனை பார்த்தவர், “என்னடா உளறிட்டு இருக்க? என் பொண்ணை மிரட்டி கல்யாணம் பண்ண நீதான்டா ஜெயிலுக்கு போவ. அவ மேல எந்த தப்பும் இல்லைன்னு நிரூபிக்க எனக்குத் தெரியும்!” என்று ஆத்திரத்தில் கத்தினார்.

அவனோ எந்த பதட்டமும் இல்லாமல், “நிரூபிப்பீங்க… ஆனா, போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்னு அலைஞ்சா இந்த டீன் குணசேகரோட கௌரவம் என்ன ஆகுறது?” என்று ஒருக்களித்த புன்னகையோடு கேட்டவன், தன் சட்டையை மெதுவாக சரி செய்தபடியே, 

“நமக்குள்ள எந்த சொந்தமும் இல்லை… நான் அவளுக்கு முறை மாமன் இல்லை, அவ கழுத்துல உரிமை எடுத்து தாலி கட்டுறதுக்கு. நான் இந்த ஹாஸ்பிட்டல்ல வேலை பார்க்கிற ஒரு சீனியர் சர்ஜன், அவ்வளவுதான். அப்படி எந்த ஒட்டுறவும் இல்லாத ஒருத்தன் கட்டுன தாலியோட உங்க பொண்ணு நிக்குறான்னா… இந்த உலகம் யாரை தப்பா பேசும்? ‘பொண்ணை சரியா வளர்க்கல’ன்னு உங்களையும், ‘விருப்பப்பட்டு தான் அவனோட போயிருக்கா’ன்னு உங்க பொண்ணையும்தானே?”

சிம்மனின் இந்த வார்த்தைகள் குணசேகரை சவுக்கால் அடித்தது போல் இருந்தது.

“டேய்… நீ… நீ… என்ன பேசிட்டு இருக்க? என் பொண்ண வச்சே என்னை மிரட்டுறியா?” என்று சற்று குரல் நடுங்கிய படி அவர் கேட்க, 

சிம்மனோ ஏளனமான ஒரு பார்வையை அவர் மீது வீசியவன், “நோ டாக்டர்… நான் நடக்க போறததை தான் சொன்னேன். சட்டம், போலீஸ்னு போனா பாதிக்கப்படப் போறது பிருந்தாவோட பியுச்சர் தானே! அவளை கோர்ட் படியேற வச்சு, அவ மானத்தை நீங்களே வாங்கிடீங்கன்னா… அப்புறம் நீங்க முடிவு பண்ணியிருக்க அவ கல்யாணம் எப்படி நடக்கும்? சரி அந்த கல்யாணம் நின்னாலும் அதுக்கப்புறம் எந்த இளிச்சவாய் உங்க பொண்ண கட்டிக்க வருவான்?” என்று சிம்மன் கேட்ட கேள்வியில் குணசேகரோ அப்படியே உறைந்து போய் நின்றிருந்தார்.

அவனது வாதத்தில் இருந்த யதார்த்தம் அவர் முகத்தில் ஓங்கி அறைந்தது போல இருந்தது.

சிம்மனைத் தண்டிக்க நினைத்தால், தன் மகளின் பெயரும் சேர்ந்து நாறடிபடும் என்ற உண்மை அவரை சுட, அவர் முகமோ வெளிறிப் போனது. 

அவரது நிலைமையைக் கண்ட சிம்மனின் இதழ்களில் ஒரு வெற்றிப் புன்னகையே வந்து போக,

தனது ஷேர்ட்டின் கையை மடித்த படியே, “நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் டாக்டர். இனிமே முடிவு உங்க கையில்தான் இருக்கு. போலீஸ்க்கு போறதா, இல்ல பிருந்தாவோட வாழ்க்கையை காப்பாத்துறதா… நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க.” என்று அழுத்தமாக கூறியவன்,

தனது கைக் கடிகாரத்தை பார்த்து விட்டு, “ஓகே டாக்டர். டைம் ஆச்சு நான் கிளம்புறேன்” என்றவன் அவரின் பதிலை கூட எதிர்பாராது அங்கிருந்து விறு விறுவென வெளியேறி விட,

குணசேகரோ அப்படியே தோய்ந்து போய் தனது இருக்கையில் அமர்ந்து விட்டார். 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
1 Comment
error: Content is protected !!
Scroll to Top