அத்தியாயம் 27
இரவு…
அந்த குளிர்ந்த காற்று அவன் வெற்று தேகத்தில் படர்ந்து ஒரு வித சிலிர்ப்பை உண்டாக்க, கையில் எரிந்து கொண்டிருந்த சிகரட்டை புகைத்த படியே நின்றிருந்தான் சிம்மன்.
மனதுக்குள்ளே பல எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருந்தன.
அவன் விழிகளோ வெறுமையாக இருளை வெறித்துக் கொண்டிருந்தாலும், அவன் மனம் முழுக்க சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்திலேயே நிலைத்திருந்தது.
தான் செய்தது சரியா? தவறா?
அவன் வாழ்நாளில் முதல் முறையாக அந்த கேள்வி தோன்றியது.
ஆனால், அந்நொடி அவனுக்கு எது சரியென்று பட்டதோ அதை தான் செய்திருந்தான்.
அவனை பொறுத்த வரையில் அவள் மனதை மாற்ற இதை தவிர வேறு எந்த வழியும் இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை.
பெண்ணவளின் எண்ணங்களில் மொத்தமாக தன்னை மறந்து போய் இருந்தவன், கையில் இருந்த சிகரட்டை மேலும் உதித் தள்ளிய படி இருக்க,
அவன் சிந்தனையை கலைக்கும் விதமாக அவனின் அலைபேசி அலறியது.
அதில் சட்டென சுய உணர்வுக்கு வந்தவன், போனை எடுத்துப் பார்த்தான்.
மருத்துவமனையில் இருந்து தான் அழைப்பு வந்தது.
அதை ஏற்று எடுத்து காதில் வைக்க, மறு முனையில் ஏதோ எமெர்ஜென்சி கேஸ் வந்திருப்பதாக விடயத்தை கூற, உஷ்ண பெரு மூச்சு ஒன்றை விட்டுக் கொண்டவன், “எல்லாத்தையும் ரெடி பண்ணுங்க. ஐ ல் பி தேர் இன் ட்வென்டி மினிட்ஸ்.” என்று கறாராக சொன்னவன்,
அடுத்த சில நிமிடங்களிலேயே தயாராகி வைத்தியசாலைக்கு புறப்பட்டு இருந்தான்.
இப்போது அவன் முகத்தில் யோசனைக்கான எந்த அடையாளமும் மிச்சம் இருக்கவில்லை என்பது தான் உண்மை. அவனை பற்றி தான் தெரியுமே! வேலை என்று வந்து விட்டால் வேறு எதை பற்றியும் சிந்திக்க மாட்டானே!
ஆனால், இங்கே அறையில் ஒரு மூலையில் முடங்கிப் போய் அமர்ந்திருந்த பிருந்தாவால் தான் இன்னுமே இன்று நடந்த சம்பவங்களில் இருந்து வெளியில் வர முடியவில்லை.
எப்படி முடியும்?
அவன் செய்தது ஒன்றும் சாதாரண காரியம் அல்லவே!
அவனிடம் இருந்து இப்படி ஒன்றை அவள் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லையே!
கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருக்க, மெல்ல தன் கரங்களை உயர்த்தி தன் கழுத்தை வருடிப் பார்த்தவளுக்கோ சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களே கண் முன் தோன்றியது.
சில மணி நேரங்களுக்கு முன்னர்….
பிருந்தா பேசுவதை அவ்வளவு நேரமும் கேட்டுக்கொண்டிருந்தவனோ, “சோ உன் காதலை தியாகம் பண்ண போற?” என்று கறாரான குரலில் கேட்டான்.
அந்த கேள்வியில் சட்டென அவனை திரும்பிப் பார்த்தாள் பாவை.
ஆனால், அவனோ இப்போதும் அவள் புறம் பார்வையை திருப்பவில்லை.
அதில் பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டவள், “எனக்கு வேற வழி இல்ல.” என்றாள் அதற்கு மேல் முடியாமல்.
அவள் கூற்றில் அவனுக்கு எரிச்சல் தான் வந்தது.
அவனைப் பொறுத்த வரையில் இந்த கட்டுப்பாடு எல்லாம் சுத்தமாக இல்லையே! யாருக்காகவும் எதையும் விட்டுக் கொடுக்கும் பழக்கம் அவனுக்கு சிறு வயதில் இருந்தே இருந்ததில்லை.
அதனாலேயே எப்போதுமே தன்னுடைய சுய நலத்தை பற்றி மட்டும் தான் யோசிப்பான்.
அவன் வாழ்ந்த சூழலும் அப்படித்தான்.
ஆனால் இவள், இவ்வளவு சாதாரணமாக காதலை தியாகம் செய்யப் போகிறேன் என்கிறாளே!
அதுவும் தந்தைக்காக.
தந்தை அவமானப்படக்கூடாது என்பதற்காக தனக்கு பிடிக்காதவனை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்கிறாள்.
பாதி பெண்களின் வாழ்க்கை இப்படி தானே இருக்கிறது.
குடும்பத்துக்காக எத்தனையோ பெண்கள் தங்கள் காதலை விட்டு விட்டு வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்கிறார்கள் அல்லவா!
இப்போது அதே நிலை நம் பிருந்தாவுக்கும்.
இப்படி குடும்ப மானம் போய் விடக்கூடாது என்பதற்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணிக்க நினைக்கும் அவளின் இந்த செயல் அவனுக்கோ முட்டாள் தனமாக தான் தோன்றியது.
“சோ இதான் உன் முடிவுல்ல?” என்று அழுத்தமாக கேட்டுக் கொண்டே சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி இருக்க, பெண்ணவளோ அதில் திடுக்கிட்டுப் போனவளாய் அவன் முகத்தைப் பார்த்தாள்.
அவனும் அவள் புறம் பார்வையை திருப்ப, “எதுக்கு இங்க வண்டிய நிறுத்தினீங்க?” என்று கேட்ட படியே, சுற்றி முற்றி பார்த்தவள், அவன் வந்திருந்த இடத்தை கண்டு அதிர்ந்து போய் விட்டாள்.
‘கோயிலுக்கா?’ என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டவள், அவனிடம் திரும்பி, “இப்போ எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தீங்க?” என்று பதட்டமாக கேட்க,
அவனோ, “இறங்கு” என்று மட்டும் சொல்லி விட்டு காரில் இருந்து இறங்கப் போக, அவனை போக விடாது சட்டென அவனின் கரங்களை பற்றியவள், “நான் கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க சிம்மன். வீட்டுக்கு போகாம எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்றாள் அழுத்தமாக.
அவனோ ஒரு கணம் விழிகளை மூடித் திறந்தவன், அவள் புறம் திரும்பி, “நீ உன் முடிவ சொல்லிட்ட. இப்போ என் முடிவையும் நீ தெரிஞ்சிக்க வேணாம். அதுக்கு தான்” என்றவன், அவள் ஏதோ பேச வருவதை கூட கண்டு கொள்ளாமல், சட்டென காரில் இருந்து இறங்கினான்.
இவளுக்கோ ஏதோ தவறாக நடக்க போகிறது என்று தெளிவாக புரிய, வண்டியை விட்டு இறங்காமல் இருந்தாள்.
ஆனால், அவன் விட்டால் தானே!
காரின் மறு புறம் வந்து கதவைத் திறந்தவன், “இறங்கு” என்றான்.
அவளோ “இ… இல்ல…. நான்…. நான் வர மாட்டேன்” என்றாள் திக்கித் திணறிய படி.
அவன் முகமோ மேலும் கடுமையாக மாற, “உனக்கு வாயால சொன்னா புரியாதுல்ல!” என்றவன், சட்டென உள்ளே குனிந்து அவள் கரங்களை பற்றி ஒரே இழுப்பாக வெளியில் இழுத்திருக்க,
அதை சிறிதும் எதிர் பாராத பெண்ணவளோ, அவன் இழுத்த இழுப்பில் வேகமாக அவன் மார்பில் மோதிய படி நின்றாள்.
அவள் விழிகளில் இருந்து கண்ணீர் வழிய, அவனை மிரண்டு போய் பார்த்தவள், “சிம்மா…. நீங்க பண்ணுறது தப்பு…. ப்ளீஸ்… என்னை…. என்னை விட்டுடுங்க” என்று அவனிடம் இருந்து விலக திமிறினாள்.
ஆனால், அவன் இரும்புப் பிடியில் இருந்து அவளால் அசைய கூட முடியவில்லை.
சிம்மனோ அவள் முகத்துக்கு நேராக மிக நெருக்கமாக சென்றவன், “நீ என்ன தான் அடம் பிடிச்சாலும் என்னை கண்டிப்பா உன்னால தடுக்க முடியாது பேபி. சோ டோன்ட் வேஸ்ட் யுவர் எனெர்ஜி” என்று அழுத்தம் திருத்தமாக கூறி விட்டு, அவளை தரதரவென இழுத்துக் கொண்டு கோயிலுக்குள் சென்றான்.
அதுவோ ஒரு சிறிய அம்மன் கோயில்.
அதனால் பெரிதாக கூட்டம் அங்கு இருக்கவில்லை.
அவனோடு இழுபட்டு சென்றவளுக்கோ, மனம் பதற ஆரம்பித்தது.
எப்போதுமே நிதானமாக நடந்து கொள்ளுபவன் இன்று இவ்வளவு பெரிய முடிவை எடுத்து விட்டானே!
இப்போது எப்படி இவனிடம் இருந்து தப்பிப்பது என்றே அவளுக்குப் புரியவில்லை.
“ப்ளீஸ்… யாராவது என்னை காப்பாத்துங்களே!… விடுங்க சிம்மா ப்ளீஸ்… லீவ் மீ” என்று கத்திய படியே, அவனிடம் இருந்து விலகி விட திமிறினாள் அந்தப் பாவை.
அவள் குரலில் அங்கிருந்த ஒரு சிலர் அவர்களை திரும்பிப் பார்க்க, சிம்மனோ அதை பற்றி எல்லாம் கண்டு கொண்டது போலவே தெரியவில்லை.
அவனை பற்றி தான் தெரியுமே! ஒன்றை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அதில் இருந்து எப்போதும் பின் வாங்கும் பழக்கம் இல்லையே!
அவள் கத்த கத்த தர தரவென இழுத்துக் கொண்டு சாமி சன்னதியிடம் சென்றான்.
சாமிக்கு பூஜை செய்து கொண்டிருந்த பூசாரியோ, அவர்கள் இருவரையும் புரியாமல் பார்க்க,
சிம்மனோ, “எனக்கு ஒரு தாலி வேணும்” என்றான் கர கரப்பான குரலில்.
பிருந்தாவோ திகைத்து போய் அவனைப் பார்க்க, பூசாரியோ குழப்பமாக இருவரையும் பார்த்தார்.
சிம்மன் வலுக்கட்டாயமாக அவளை இழுத்து வந்திருக்கிறான் என்பது அவருக்கு பார்க்கும் போதே நன்றாக புரிந்தது.
“என்னப்பா இது இப்படி திடீர்னு வந்து தாலி வேணுங்குற? அதுவும் உங்க ரெண்டு பேரை பார்த்தா கல்யாணத்தை விருப்பப்பட்டு பண்ணிக்கிற மாதிரி தெரியலையே!” என்றார் சந்தேகமாக.
பிருந்தாவோ “சிம்மா வேணாம் ப்ளீஸ் என்னை விடுங்க” என்றாள் அழுகையின் ஊடாகவே.
ஆனால் அவனோ அவளை துளியும் கண்டு கொள்ளாமல் பூசாரியிடம், “நான் உங்க கிட்ட தாலி வேணும்னு தான் கேட்டேன்” என்றான் அழுத்தமாக.
அவரோ, “தம்பி இது கோயில். இப்படி கட்டாய கல்யாணம் பண்ணிக்கிறது எல்லாம் தப்புப்பா. அந்த பொண்ணோட சம்மதம் இல்லாம…” என்று ஏதோ பேச வந்தவரை, சட்டென கை நீட்டி தடுத்தவன்,
“உங்க கிட்ட அட்வைஸ் கேட்க நான் ஒன்னும் வரல. இப்போ அவளுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கணும். போய் தாலிய எடுத்துட்டு வாங்க” என்றான் மிரட்டலான தொனியில்.
அவன் பேசும் தோரணையில் அவருக்கோ உடல் சற்று உதறியது.
பார்க்க நல்லவன் போல இருக்கிறான். ஆனால் நடந்து கொள்ளுவது எல்லாம் ரவுடி போலல்லவா இருக்கிறது.
அவரோ சற்று பயந்து போனவராய் பிருந்தாவைப் பார்க்க, அவளும் நடுங்கிய படியே அவரிடம் வேண்டாம் என்பது போல கெஞ்சுதலாக தலையை அசைத்தாள்.
எது நடந்தாலும் இந்த திருமணத்தை செய்து கொள்ளக் கூடாது என்ற முடிவில் தான் இருந்தாள்.
ஆனால் அவன் முடிவெடுத்த பிறகு அதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது என்பது அவளுக்குப் புரியவில்லை போலும்.