Ep 26

அத்தியாயம் 26

அவளோ தன் மனதில் உள்ள காதலை அவனிடம் வெளிப்படுத்தி இருக்க, அதை கேட்டவனுக்கோ பெரிதாக எந்த அதிர்ச்சியும் இருக்கவில்லை என்பது தான் உண்மை.

அவனுக்கு தான் ஏற்கனவே அவள் தன்னை காதலிக்க ஆரம்பித்து விட்டாள் என்று தெரியுமே!

அவள் தன் மீது உள்ள காதலை உணர வேண்டும் என்பதற்காக தானே அன்று நடந்த சண்டைக்கு பிறகு அவளை மொத்தமாக தவிர்த்தது போல நாடகம் ஆடிக் கொண்டிருந்ததே!

ஆம்…

இத்தனை நாள் அவளை விட்டு விலகி இருந்தது அவளை மொத்தமாக விட்டுச் சென்று விட வேண்டும் என்பதற்காக அல்ல. அவளும் தன் மீது உள்ள காதலை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான்.

அவன் நினைத்தது போலவே அவளும் அவன் விலகி செல்லச் செல்ல கொஞ்ச கொஞ்சமாக அவன் மீது தோன்றிய காதலையும் உணர ஆரம்பித்து இருந்தாள்.

ஒவ்வொரு முறையும் அவன் தன்னை பார்க்க மாட்டானா? தன்னிடம் வந்து பேச மாட்டானா என்று அவள் ஏங்கும் போதெல்லாம் அவனும் உள்ளுக்குள்ளேயே தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்து விடுவான்.

அவள் தனக்காக ஏங்கித் தவிக்கும் ஒவ்வொரு நொடியும் அவனும் அவளுக்காக தவித்துக் கொண்டிருந்தாலும், அவளாகவே வந்து தன் மனதில் உள்ளதை கூறும் வரையில், தான் அவளிடம் நெருங்கக் கூடாது என்ற முடிவில் தான் இருந்தான்.

அவன் குணத்தை பற்றி தான் தெரியுமே!

மிகவும் ஈகோ பிடித்தவன். 

என்ன தான் இப்போது அவளை காதலித்தாலும், தானாக சென்று அதை வெளிப்படுத்த அவன் மனம் இடம் கொடுக்கவில்லை.

அதனால் தான் அவளே தன்னை தேடி வரட்டும் என்று காத்திருந்தான்.

ஆனால், இன்று அவளின் திருமண அழைப்பிதலை கண்டதும் அவனுக்குள் இருந்த மொத்த பொறுமையும் காற்றில் கரைந்து போனது.

தான் காதலிக்கும் பெண்ணின் திருமணத்துக்கு தன்னையே அழைத்திருந்தால் அதை யாரால் தான் தாங்கிக் கொள்ள முடியும்?

அதுவும் சிம்மனை பொறுத்த வரை அவன் விரும்பும் பொருள் எப்போதுமே அவனுக்கு கிடைத்தாக வேண்டும். அதை தனதாக்கிக் கொள்ள எந்த எல்லைக்கும் போகக் கூடியவன், அவளை மட்டும் வேறு ஒருவனுடன் நிச்சயமான பெண் என்று விட்டு விடுவானா என்ன?

அப்படி விட நினைத்திருந்தால் எதற்காக அவள் தன்னை வெறுக்கிறாள் என்று தெரிந்தும் அவளையே சுற்றிச் சுற்றி திரிந்தான்.

பிருந்தாவோ தன் நிலையை எண்ணி மனமுடைந்து போனவளாய் அதே இடத்தில் அழ ஆரம்பித்து விட, சிம்மனுக்கோ அவள் அழுகை கூட இப்போது கோபத்தை மட்டும் தான் வரவழைத்தது.

தன் நிதானத்தை தான் அவன் மொத்தமாக இப்போது இழந்திருந்தானே!

அங்கு சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அவர்கள் இருவரையுமே குறு குறுவென பார்த்துக் கொண்டிருக்க, ஒரு சிலர் தனக்குள்ளேயே ஏதேதோ கிசு கிசுத்துக் கொண்டனர். 

அவனோ நெற்றியை அழுத்திப் பற்றியவன், “பிருந்தா ஸ்டாப் இட். இப்போ எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க? எல்லாரும் நம்மள தான்டி பார்க்குறாங்க…. ஜஸ்ட் ஸ்டாப் இட்” என்று கர கரப்பான குரலில் சொல்ல,

அவளோ இயலாமையுடன் அவனை பார்த்தவள், “நீங்க எல்லாம் மனுஷனே இல்ல தெரியுமா? என்னோட இந்த நிலைமைக்கு நீங்க தான் காரணமே! உங்களை போய் லவ் பண்ணதை நெனச்சா எனக்கே அசிங்கமா இருக்கு” என்று அவள் அழுகையின் ஊடாகவே கூற,

“ஜஸ்ட் ஷட் அப் பிருந்தா. இங்க எல்லாரும் இருக்காங்கன்னு நான் அமைதியா இருக்கேன். இல்லன்னா…” என்று பொறுமையை இழுத்து பிடித்த படி அவன் சொல்ல,

பிருந்தாவோ கோபமாக அவனை நெருங்கி வந்து, அவன் ஷேர்ட்டின் காலரை பற்றி இருந்தாள்.

“இல்லன்னா… இல்லன்னா… என்ன பண்ணுவீங்க? ஹாங்… என்ன பண்ணுவீங்க? உங்க இஷ்டத்துக்கு என்னை ஆட்டிப் படைக்க நான் என்ன பொம்மையா? ஒரு நாள் பக்கத்துல வருவீங்க… இன்னொரு நாள் நீ எவனை வேணாலும் கட்டிக்கொன்னு விலகி போயிடுவீங்க…. ஆனா நான் மட்டும் உங்களையே நினைச்சிட்டு வாழணுமா?” என்று அவள் சத்தமாகக் கேட்க,

சிம்மனோ, “பிருந்தா… போதும் டி இதோட நிறுத்திக்கோ….. என்னை கஷ்டப்பட்டு கட்டுப் படுத்தி வச்சிட்டு இருக்கேன்….” என்று விரல் நீட்டி எச்சரிக்கையாக சொன்னவன்,

“வா போலாம்” என்று அவள் கரங்களை பற்றி கொண்டு அங்கிருந்து போகப் பார்க்க,

அடுத்த நொடி “என்னை விடுங்க…. நான் வர மாட்டேன்” என்று கத்திய படி, அவன் கரங்களில் இருந்து தன் கரங்களை இழுத்தெடுத்தவள்,

“என்ன சார்?…. என்னாச்சு?… இங்க இருக்க எல்லாரும் நம்மள பாக்குறாங்கன்னு ரொம்ப அவமானமா இருக்கோ? ஆனா நீங்க தானே என்னை இங்க கடத்திட்டு வந்தீங்க?” என்று ஆக்ரோஷமாக கத்தியவள்,

அவன் காலரை பற்றிய படி, “என்ன சொன்னீங்க?…. நான் உங்களை லவ் பண்ணுறேனா? ஆமா….. லவ் பண்ணுறேன் தான். அதுக்காக உங்களை மாதிரி ஒரு பொம்பளை பொறுக்கியை கட்டிப்பேன்னு நினைக்கிறீங்களா? ஹாங்?…. எத்தனை பொண்ணுங்க கூட கல்யாணம் பண்ணிக்காமலேயே குடும்பம் நடத்தியிருப்பீங்க? நீங்க எல்லாம் வெறும் லஸ்ட்க்கு மட்டும் தான் ஆசை படுவீங்க சிம்மன். ஏன்னா உங்களை மாதிரி ஆம்பளைங்களுக்கு பொண்ணுங்களோட உடம்பு மட்டும் தான் வேணும். அவங்களோட மனசு கிடையாது….. என் கிட்டயும் அதானே வேணும்? இத்தனை நாள் போர்ஸ் பண்ணி என்னை அடையலாம்னு ட்ரை பண்ணீங்க. ஆனா அது முடியாம போனதும் என்னோட காதலை உங்களுக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கலாம்னு நினைக்கிறீங்கல்ல? இப்போ அதுக்காக தானே இந்த நாடகம் எல்லாம்…” என்று கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று கூட புரியாமல் வார்த்தையை விட்டு விட,

அவ்வளவு தான். 

தன் பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு இருந்தவனுக்கோ அவள் கடைசியாக பேசிய வார்த்தைகளை கேட்டதும் கோபம் எரிமலையாக வெடிக்க,

“போதும் நிறுத்துடி” என்று அந்த இடமே அதிரும் படி கத்தியவன், தன் முன்னால் நின்றவள் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்திருக்க, அவளோ அந்த அடியில் “அம்மாஆஆ….” என்று அலறிய படி சுத்தி போய் தரையில் விழுந்திருந்தாள்.

அவன் அறைந்ததில் அவள் இதழ்கள் கிழிந்து வாயில் இருந்து ரத்தம் வழிய, அரண்டு போய் தன் முன்னால் அனல் தெறிக்கும் பார்வையுடன் நின்றவனை பார்த்திருந்தாள் அந்தப் பேதை.

அங்கிருந்த சிலர், “ஏம்ப்பா… எதுக்கு அந்த பொண்ணை இப்படி அடிக்கிற?” என்று கேட்க,

இன்னும் சிலர், “இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல ஒரு பொண்ணை கை நீட்டு அடிக்கிறான். யாராவது போலீஸ்க்கு  போன் பண்ணுங்கப்பா” என்றனர்.

ஆனால் பிருந்தாவுக்கோ அவர்கள் பேசும் எதுவுமே செவிகளில் விழவில்லை. அவன் அறைந்த அறையில் கன்னமோ சிவந்து போய் விண் விண்ணென்று வலிக்க ஆரம்பித்து விட, கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென வழிந்தது. 

அங்கிருந்த இருவர் அவளை தூக்கி விட அவசரமாக ஓடி வர, சிம்மனோ திரும்பி அவர்களை ஒரு பார்வை தான் பார்த்தான்.

அவ்வளவு தான் அவர்கள் பாதங்கள் அதே இடத்தில் நின்று விட, மற்றவர்களும் அவசரமாக வாயை மூடிக் கொண்டனர்.

சிம்மனோ அவளை நெருங்கி வர, பிருந்தாவோ நடு நடுங்கி தான் போனாள்.

அன்று அந்த கயவர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றியவனா இன்று அனைவர் முன்னிலையிலும் தன்னை அடித்திருக்கிறான் என்றே அவள் மனம் தவிப்புடன் கேட்டது.

அவளோ பயத்தில் இன்னுமே கன்னத்தில் கை வைத்த படி, அவனை உறைந்து போய் பார்க்க, அவளை நெருங்கி வந்தவன், சற்று குனிந்து  ஒரே இழுப்பாக அவள் கரங்களை பற்றி  இழுத்திருக்க, அவளும் அவன் மேலேயே மோதிய படி நின்றாள்.

அவள் உடலோ இன்னுமே நடுங்கிக் கொண்டிருக்க, கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது.

அதை எல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாதவன், அவளை இழுத்து வந்து காரின் முன்னால் கதவை திறந்து தள்ளாத குறையாக அமர வைக்க, பிருந்தாவும் தொப்பென சென்று சீட்டில் விழுந்தாள்.

அவளின் சீட் பெல்ட்டையும் அவனே போட்டு விட்டவன், கதவை மூடி விட்டு ஓட்டுநர் சீட்டில் வந்து அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தான்.

வண்டியும் சென்று கொண்டிருக்க,  பிருந்தாவோ வழிந்த கண்ணீரையும் துடைக்காமல், வாயில் இருந்து கசிந்த இரத்தத்தையும் துடைக்காமல் அப்படியே சிலை போல அமர்ந்திருந்தாள்.

ஆனால், உள்ளுக்குள் பல எண்ணங்கள் அவளை படாய் படுத்தி எடுத்துக்கொண்டு இருந்தது.

ஒரு பக்கம் அவன் தன்னை அடித்து விட்டானே என்று அவன் மீது கோபம் வந்தாலும், தான் அவ்வாறு பேசியதும் ஒரு விதத்தில் தவறு தானே என்று தோன்றியது.

அவள் ஒன்றும் வேண்டும் என்று அவ்வாறு பேசவில்லை தான்.

அவன் தன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறான் என்று அவளுக்கும் தெரியாமல் இல்லையே!

அன்று அந்த கயவர்களிடம் அவள்  மாட்டிக் கொண்டு தவித்த போது அவன் எந்த அளவுக்கு துடித்து போனான் என்று அவளும் பார்க்கத் தானே செய்தாள்.

அந்நொடி, அவன் தன்னை எந்த அளவுக்கு காதலிக்கிறான் என்பதை பெண்ணவளும் உணர்ந்து கொண்டாள்.

அப்படி இருக்கும் போது அவளால் எப்படி அவன் காதலை வெறும் நாடகம் என்று கூற முடியும்?

அவளின் சூழ்நிலை அவளை அப்படி மோசமாக பேச வைத்து விட்டது.

அவளும் பாவம் என்ன தான் செய்வாள்.

இந்த திருமணத்தால் அவள் எந்த அளவுக்கு நொந்து போயிருக்கிறாள் என்பது அவளுக்கு தானே தெரியும். 

தன் தந்தையின் கௌரவத்திற்காகத் தன் காதலையும், ஆசைகளையும் தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் நரக வேதனையை அல்லவா அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்!

மனதிற்குள் இத்தனை நாள் அவள் அடக்கி வைத்திருந்த அந்தப் கோபமும், கண்ணீரும், விரக்தியும் அவளுக்குள் ஒரு பெரும் மன அழுத்தத்தையே உருவாக்கியிருந்தது.

தன்னால் தான் விரும்பியவனோடு வாழவும் முடியவில்லை, அவனை மறக்கவும் முடியவில்லை என்ற தவிப்பில் கடந்த சில நாட்களாகவே அவள் நடைப்பிணமாகத்தான் சுற்றிக் கொண்டிருந்தாள்.

அந்தச் சூழ்நிலையில், அவளது சம்மதமே இல்லாமல் திடீரென்று அவளை இப்படி இழுத்து வந்து, அவன் என்னென்னவோ பேசி விட, இத்தனை நாள் அவள் அடக்கி வைத்திருந்த மொத்த உணர்வுகளும் தன் கட்டுப்பாட்டை இழந்திருந்தன.

ஆனால், இப்போது யோசித்துப் பார்க்கும் போதுதான், தான் பேசிய வார்த்தைகளின் வீரியம் அவளுக்கே உறைத்தது.

அவனை வார்த்தைகளால் மொத்தமாக வதைத்து விட்டாளே!

கோபம் தன்னை இந்த அளவுக்கு பேச வைத்து விட்டதே என்று தன்னையே நொந்து கொண்டவளுக்கு இப்போது குற்ற உணர்வு மட்டும் தான் எஞ்சியது.

தன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தை புறங்கையால் துடைத்தவள், அவனை மெல்ல திரும்பிப் பார்த்தாள்.

அவன் முகமோ இறுகிப் போயிருந்தது.

காரின் ஸ்டியரிங்கை பற்றியிருக்கும் தோரணையிலேயே புரிந்தது அவன் எந்த அளவுக்கு கோபமாக இருக்கிறான் என்பது.

எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டவள், “சாரி…. ந…. நான் அப்படி பேசி இருக்கக்கூடாது. த…. தப்பு தான்” என்று திக்கி திணறி சொன்னாள்.

அவனிடம் அமைதி.

‘ஏதாவது பேசுறானா பாரு. சரியான திமிரு புடிச்சவன்’ என்று வாய்க்குள்ளயே அவனை திட்டியவள்,

“நீங்களும் என்னை அடிச்சிருக்க கூடாது. எனக்கு எவ்ளோ வலிக்கிது தெரியுமா.” என்று கூறும் போதே அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

அப்போதும் அவளை திரும்பிப் பார்த்தானா என்றால்… ம்ஹும் இல்லவே இல்லை.

அவன் பார்வை பாதையை விட்டு கொஞ்சமும் அகலவில்லை.

அவளோ கண்ணீரை உள்ளே இழுத்த படி, “உங்களுக்கு ஏன் என்னோட சிட்டுவேஷன் புரிய மாட்டேங்குது சிம்மன். இந்த கல்யாணம் மட்டும் நின்னா என்னோட அப்பாவோட மானமே போயிடும். அவரு அசிங்க படுறதை என்னால கண்டிப்பா தாங்கிக்க முடியாது.” என்றாள் கண்ணீர் மல்க.

அது வரையில் அமைதியாக இருந்தவனோ, “சோ உன் காதலை தியாகம் பண்ண போற?” என்று கறாரான குரலில் கேட்டான்.

 

 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top