Ep 28

அத்தியாயம் 28

 

பூசாரிக்கோ பிருந்தாவை பார்க்கவே பாவமாக இருந்தது. 

“தம்பி இங்க தாலி எதுவும் இல்லப்பா” என்றார் தடுமாறிய படி,

அவனோ, “இஸ் இட்?” என்றவன், “தென் வாட் இஸ் தெட்?” என்றான் அங்கே ஓரமாக பூஜை தட்டில் வைத்திருந்த மஞ்சள் கயிறை சுட்டிக் காட்டியபடி.

பூசாரியோ திடுக்கிட்டு போய் அதைப் பார்த்தவர், “அது… அது அம்மனுக்கு சாத்தி வைக்குற மஞ்சள் கயிறுப்பா…” என்றார் தயக்கத்துடன்.

அவனோ, “குட். அப்போ அதையே எடுத்துட்டு வாங்க.” என்றான் கறாராக.

பிருந்தாவோ “வேண்டாம் ப்ளீஸ்… தயவு செஞ்சு அவர் சொன்னதை பண்ணாதீங்க” என்று பூசாரியிடம் கத்த,

சிம்மனுக்கோ இருந்த கொஞ்ச பொறுமையும் காற்றில் பறந்தது.

அவளை பிடித்து தன்னிடம் இழுத்தவன், அவள் நாடியை அழுத்திப் பற்றிய படி, “இப்போ நீ மட்டும் உன் வாய மூடிட்டு அமைதியா இருக்கல்ல, இதை அடக்குறதுக்கு நான் வேற மாதிரி நடந்துக்க வேண்டி இருக்கும் பிருந்தா. டூ யூ வாண்ட் தட்?” என்றானே பார்க்கலாம் அவள் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து போனது.

என்ன பேச்சு பேசிக்கொண்டு இருக்கிறான். அதுவும் கோயிலில் வைத்து.

அவன் வார்த்தையில் இருந்த அழுத்தத்தில் எங்கே அவன் சொன்னதை செய்தாலும் செய்து விடுவானோ என்று பயந்து போனவள், அவனை பாவமாக பார்த்தாள்.

பாவம் அவளால் அதற்கு மேல் எதுவும் பேச கூட முடியவில்லை. 

அவள் நாடியில் இருந்த கரங்களை எடுத்தவன், பூசாரியிடம் திரும்பி, “நான் சொன்னது உங்களுக்கு கேட்கலையா? எனக்கு அந்த கயிறு வேணும். நீங்களா எடுத்து தரீங்களா?… இல்ல நானே போய் எடுத்துக்கட்டுமா?” என்றான் பெருங் குரலில்.

“தம்பி…. அத அப்படியெல்லாம்…” என்று பேச வந்தவர், அவன் முறைத்த முறைப்பில் சட்டென வாயை மூடிக் கொண்டார்.

இதற்கு மேல் அவனை எதிர்த்தால் தனக்கு ஏதாவது பிரச்சனை ஆகி விடும் என்று பயந்து போனவராய், அவன் கேட்ட மஞ்சள் கயிறை அவசரமாக எடுத்து வந்து அவனிடம் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டான் சிம்மன்.

பிருந்தாவுக்கோ அதற்கு மேல் அவனை எப்படி தடுப்பது என்றே புரியவில்லை.

அவளுக்கு யாரும் உதவி செய்யவும் முன் வரவில்லை.

அங்கே பெரிதாக கூட்டம் இல்லாததால் இருந்த ஒரு சிலரும், அவன் தோற்றத்தையும், நடவடிக்கைகளையும் பார்த்து பயத்தில் ஒதுங்கி சென்று விட்டனர்.

அவர்கள் முகத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணத்தை விட, தேவையில்லாத பிரச்சனையில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற தயக்கமே தெரிந்தது.

தனக்கு யாரும் உதவி செய்ய போவதில்லை என்று புரிந்து கொண்டவளுக்கோ கண்களில் இருந்து கண்ணீர் தான் வந்தது.

அதற்கு மேல் அவனை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையும் அவளுக்கு சுத்தமாக இல்லை.

தன்னுடைய முடிவில் இந்த அளவுக்கு உறுதியாக இருப்பவன், இனி எந்த எல்லைக்கும் போவான் என்றும் புரிந்தது.

தன் கரங்களை பற்றி இருந்தவனை எரித்து விடுவது போல பார்த்தவள், “ஐ ஹேட் யூ சிம்மா… ஐ ஹேட் யூ சோ மச். நான் உங்களை கண்டிப்பா மன்னிக்க மாட்டேன்” என்று கோபமாக கத்த,

சட்டென அவளை தன் புறம் இழுத்தவன், “வாழ்க்கை முழுக்க வேணாலும் இந்த வெறுப்பை ஏத்துக்குறேன் பேபி” என்று அழுத்தமாக சொன்னவனோ, அடுத்த நொடி தன் கையில் இருந்த மஞ்சற் கயிறை அவள் கழுத்தில் கட்டினான்.

அவளும் தடுக்கவில்லை.

உணர்வுகள் அற்ற சிலை போல அவன் விழிகளையே பார்த்து கொண்டு நின்றாள்.

தான் காதலிப்பவன் தான் தன்னை திருமணம் செய்து கொள்கிறான். ஆனால், அந் நொடி அதை நினைத்து அவளால் சந்தோஷப் பட முடியவில்லை.

இனி என்ன நடக்கும்?

தன் மீது அளவு கடந்த பாசத்தையும், நம்பிக்கையையும் வைத்திருக்கும் தந்தையின் முகத்தில் எப்படி தன்னால் முழிக்க முடியும்?

நினைக்கும் போதே இதயம் வெடித்து விடுவது போல இருந்தது.

ஆனால், அதை பற்றி எல்லாம் சிறிதும் கவலை படாத சிம்மனோ, அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்ட பின்னரே அவளை விட்டு விலகி நின்றான்.

பிருந்தாவோ அவனின் ஷேர்ட்டின் காலரை பற்றிய படி, “ஏன் சிம்மா?…. ஏன் இப்படி பண்ணீங்க? உங்களோட சுயநலத்துக்காக என் வாழ்க்கையவே அழிச்சிட்டீங்களே! இப்போ உங்களுக்கு சந்தோஷம் தானே!” என்று அவள் அழ,

சிம்மனோ சட்டென அவள் கரங்களை தன்னிடம் இருந்து விலக்கி விட்டவன், “ஆமான்டி நான் செல்பிஷ் தான். உன்ன மாதிரி யாருக்காகவும் என்னால என் லைபை தியாகம் பண்ண முடியாது. எனக்கு எது வேணுமோ அதை நான் எடுத்துக்கிட்டேன். இனி என்ன நடந்தாலும் நான் மட்டும் தான் உன்னோட புருஷன். இத நீ நினைச்சா கூட மாத்த முடியாது பேபி” என்றான் நக்கலான குரலில்.

அவளுக்கோ அவன் கன்னத்திலேயே ஓங்கி அறைந்து விடும் அளவுக்கு கோபம் வந்தது.

தன்னை கட்டாயப் படுத்தி திருமணம் செய்து கொண்டது மட்டும் அல்லாமல் இவ்வளவு திமிராக பேசுகிறானே!

அவனை முறைத்து பார்த்தவள், “நமக்கு நடந்தது கல்யாணமே கிடையாது. நீங்க போர்ஸ் பண்ணி இந்த கயிறை என் கழுத்துல கட்டி விட்டிருக்கீங்க. அப்படி இருக்கும் போது நான் உங்களை புருஷனா ஏத்துப்பேன்னு நினைக்கிறீங்களா? கண்டிப்பா அது மட்டும் நடக்காது சிம்மா” என்று கத்தியவள் அங்கிருந்து விறு விறுவென முன்னால் செல்ல, அவளையே சற்று அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தவன் இதழ்களோ, ‘அதையும் பார்க்கலாமே!’ என்றே மனதுக்குள் கூறிக்கொண்டது.

நிகழ்காலம்.…

நடந்ததை நினைத்து வெகு நேரமாக அழுது கொண்டிருந்தவளோ, கண்ணீர் வற்றிப் போகும் அளவுக்கு மொத்தமாக சோர்ந்து போய் விட்டாள்.

அதுவும் வீட்டுக்கு வந்ததில் இருந்து அவள் அறையில் இருந்து வெளியே போகவே இல்லை. 

வீட்டில் உள்ளவர்களிடம் தலை வலி என்று சமாளித்து இருந்தாள்.

அதனால் அவர்களும் அவளை தொந்தரவு செய்யவில்லை.

உணவை கூட மொத்தமாக மறந்து போய் விட்டாள்.

அதனாலேயே உடல் சோர்ந்து போய் விட்டது. 

மெல்ல எழுந்து குளியலறைக்குள் சென்றவள், குழாயைத் திறந்து முகத்தில் தண்ணீரை அடித்துக் கழுவினாள்.

குளிர்ந்த நீர் முகத்தில் பட்டும், அவள் மனதின் கொதிப்பு மட்டும் தணியவில்லை.

கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தை பார்த்தாள்.

அழுதழுது அவள் கன்னங்கள் வீங்கி போய் இருக்க, கண்கள் இரண்டும் சிவந்து போய் காணப்பட்டது.

தன்னையே சில நொடிகள் வெறித்துப் பார்த்தவளின் பார்வை, மெதுவாக கழுத்தில் கிடந்த அந்த மஞ்சள் கயிற்றின் மீதே நிலைத்தது.

அதை பார்த்ததும் அவன் முகம் மட்டுமே அவள் எண்ணத்தில் தோன்ற,  இப்போதே அதை கழட்டி எறியும் அளவுக்கு கோபம் வந்தது.

ஆனால், அவள் கரங்கள் அந்த தாலியை நெருங்கிய அடுத்த நொடி, மனதுக்குள் ஏதோ ஒரு தயக்கம்.

அதை கழற்றி விட வேண்டும் என்று அவள் விரல்கள் துடித்தாலும், மனம் அதை ஏற்க மறுத்தது தான் உண்மை. 

சிம்மன் மீது கோபம் இருக்கிறது தான்.

ஏன் அவன் செய்த செயலில் அவன் மீது வெறுப்பு தான் தோன்றியது. 

ஆனாலும், அவன் கட்டிய இந்த தாலியை கழற்றி எறிய அவள் மனம் இடம் கொடுக்கவில்லையே!

வற்புறுத்தி அந்த தாலியை அவன் கட்டி இருந்தாலும், அதை கட்டியவன் தான் உயிருக்கு உயிராக காதலித்தவன் ஆயிற்றே!

அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், தூக்கி போடவும் முடியாமல் இரண்டு உணர்வுகளுக்கு நடுவே சிக்கித் தவித்து போனாள் அந்தப் பேதை.

தனக்கு மட்டும் ஏன் இவ்வாறு எல்லாம் நடக்கிறது என்றே புரியவில்லை.

‘ஏன் சிம்மா இப்படி பண்ணீங்க? என்னை பத்தி கொஞ்சம் கூட நீங்க யோசிக்கலையே!’ என மனதுக்குள் வருந்தியவள், யாரும் அறியாத படி தாலியை பத்திரமாக ஆடைக்குள் போட்டு மறைத்துக் கொண்டாள்.

முகத்தை துடைத்து கொண்டு அவள் குளியலறையில் இருந்து வெளியே வர, அவளின் அலைபேசி சிணுங்கிக் கொண்டிருந்தது. 

‘இந்த நேரத்துல யாரு?’ என எண்ணிய படியே, மேசையில் இருந்த அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். 

‘சிம்மன் சார்’ என்ற பெயர் அதில் மின்ன, அவளுக்கோ மீண்டும் கோபம் தலை தூக்கியது.

என்ன தான் அவன் கட்டிய தாலியை தூக்கி எறிய மனம் வரவில்லை என்றாலும், அதற்காக அவன் செய்த தவறை மன்னித்து விட முடியுமா?

தன் வாழ்க்கையைப் பற்றிய முடிவை, தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் அவன் இஷ்டத்துக்கு எடுத்து விட்டானே!

அந்த கோபம் அவளுக்கு அவ்வளவு இலகுவில் தணிந்து விடுமா என்ன?

சட்டென அழைப்பை துண்டித்து விட்டாள்.

ஆனால், அடுத்த சில நொடிகளில் மீண்டும் அவனிடம் இருந்து அழைப்பு வர, அவள் ஏற்கவில்லை.

இவ்வாறு தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் பொறுமையை மொத்தமாக இழந்து விட்டாள்.

அழைப்பை ஏற்று காதில் வைத்தவள், “இப்போ என்ன வேணும் உங்களுக்கு?” என்று கோபத்தின் உச்சத்தில் கேட்டாள்.

மறு முனையில் இருந்தவனோ சில நொடிகள் அமைதியாக இருந்து விட்டு, “போனை ஆன்சர் பண்ண ஏன் இவ்ளோ நேரம்?” என்று கூலாக கேட்டான்.

அவன் குரலில் ஒரு துளியும் வருத்தமோ இல்லை குற்ற உணர்வோ இருப்பதாக கொஞ்சமும் தெரியவில்லை.

அவளோ பல்லைக் கடித்த படி, “நான் எதுக்கு உங்க போனை ஆன்சர் பண்ணனும்?” என்றாள்.

அவனோ சிகரட்டை வாயில் வைத்து புகையை இழுத்து விட்ட படியே, “ரொம்ப ஹீட்டா இருக்க போல! நான் வேணா கூல் பண்ணட்டா பேபி?” என்று கேட்டானே பார்க்கலாம் அவளுக்கோ கோபம் பொத்துக் கொண்டு வந்தது. 

“சீ….” என்று முகத்தை சுழித்தவள், “இப்போ எதுக்கு போன் பண்ணீங்க?” என்றாள் கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிய படி.

“சாப்பிட்டியா?” என்று அவன் கேட்க,

“இத கேட்க தான் போன் பண்ணீங்களா?” என்றாள் வெறுப்புடன்.

“ப்ச்…. கேக்குறதுக்கு பதில் சொல்லுடி!” என்றான் கர கரப்பான குரலில்.

“இல்லை” என்றாள்.

“ஏன்?” என்று அடுத்த கேள்வி அவனிடம் இருந்து.

“ஹாங்…. பட்டினி கிடந்து சாகலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். போதுமா?” என்றாள் வெடுக்கென.

அவன் இதழ்களோ கேலியாக வளைந்து கொள்ள, “ரொம்ப பெரிய முடிவு தான்” என்றவன், கையில் இருந்த சிகரட்டை ஆஸ்ட்ரேயில் வைத்து அணைத்த படியே, “போய் சாப்பிடு. இப்போவே நைட் ரொம்ப லேட் ஆகிடுச்சு” என்றான்.

“நீங்க சொன்னதும் நான் போய் சாப்பிடணுமா?” என்று திமிராக அவள் கேட்க,

அவனோ புருவத்தை அழுத்திய படி, “எப்படியும் ராத்திரி முழுக்க அழுது புலம்புறதுக்காவது எனர்ஜி வேணும்ல? அதுக்காகவாச்சும் போய் சாப்பிடு” என்று கூற,

அவளுக்கோ பற்றிக் கொண்டு வந்தது.

“உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லல? என் வாழ்க்கையவே கேள்வி குறியாக்கிட்டு எப்படி உங்களால இப்படி எல்லாம் பேச முடிது?” என்றாள் வெடித்த படி.

“இப்போ எதுக்கு நடந்து முடிஞ்சதை பத்தி பேசுற? ஜஸ்ட் லீவ் இட் பேபி.” என்றான் அலட்சியமான குரலில்.

அவளுக்கோ ஆத்திரமாக வந்தது.

“ஓஹோ… எல்லாத்தையும் மறக்கணுமா? அவ்ளோ ஈஸியா போச்சுல்ல உங்களுக்கு? ஒரு பொண்ணோட சம்மதம் இல்லாம அவ கழுத்துல கட்டாய தாலி கட்டிட்டு ஜஸ்ட் லீவ் இட்னு இவ்ளோ கேசுவலா சொல்லுறீங்க? நீங்க எல்லாம் மனுஷன் தானா?” என்று கோபமாக கத்த, 

“பேபி திரும்ப திரும்ப அதையே பேசி என் மூடை ஸ்பாயில் பண்ணாதடி. நான் உன் கிட்ட சண்டை போடுற மூட்ல இப்போ இல்ல” என்றான் பொறுமையாகவே.

“அப்போ சார் என்ன மூட்ல இருக்கீங்க?” என்று நக்கலாக கேட்டாலும், அதில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது.

அவனோ இதழ்களை கடித்த படியே, “நிஜமாவே நான் என்ன மூட்ல இருக்கேனு தெரிஞ்சிக்கணுமா பேபி?” என ஹஸ்கி குரலில் கேட்க,

அவன் குரலில் இருந்த கிறக்கம் அவள் மேனியை ஒரு நொடி சிலிர்க்க வைத்தது.

“அ… அது…. எனக்கு ஒரு மண்ணும் தெரிய வேணாம்.” என்று தடுமாற்றத்தில் குரல் கம்மி போய் சொன்னவள்,

“மறுபடியும் எனக்கு போன் பண்ணாதீங்க. உங்க கிட்ட பேச எனக்கு சுத்தமா இஷ்டம் இல்ல” என்று தன் பலவீனத்தை காட்டி விடக்கூடாது என்பதற்காக சற்று அழுத்தமாக வார்த்தைகளை கோர்த்து முடித்தவள், அவன் பதிலை கூட எதிர் பாராது, 

அழைப்பை துண்டித்து விட்டாள்.

இவ்வாறு இரு நாட்கள் கடந்திருந்தது.

பிருந்தாவும் அறைக்குள்ளேயே முடங்கி கிடந்தாள். இந்த இரு நாட்களே ஏதோ பல வருடங்கள் போல தோன்றியது. 

வீட்டினர் முகத்தில் முழிக்கவே அவளுக்கு குற்ற உணர்வாக இருந்தது.

அதுவும் தந்தை இருக்கும் போது அவள் வெளியில் வருவதையே முற்றுமாக தவிர்த்தாள்.

ஏனென்றால், அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவளது இதயத்தில் ஈட்டியாக பாய்ந்தது.

“என் பொண்ணு கல்யாணத்துல இதெல்லாம் செய்யணும்…”

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரும்போது எந்த குறையும் இருக்கக் கூடாது…”

“பிருந்தாவுக்கு பிடிச்ச மாதிரி எல்லாத்தையும் பார்த்து பண்ணனும்…”

என்று அவர் ஆர்வமாக பேசும் போதெல்லாம், அவளால் அந்த இடத்தில் நிற்கவே முடியவில்லை.

கண்கள் கலங்கி விடும்.

தன்னுடைய மகளின் வாழ்க்கை குறித்து இவ்வளவு கனவுகளோடு இருக்கும் தந்தையிடம், தான் இவ்வளவு பெரிய உண்மையை மறைத்து கொண்டு இருக்கிறோமே!

இந்த விடயம் மட்டும் அவருக்கு தெரிந்தால் அவர் எவ்வளவு மனமுடைந்து போவார். அவருடைய முகத்தில் தன்னால் எப்படி முழிக்க முடியும்? 

நினைக்கும் போதே ஏதோ நெருப்பில் நிற்பது போன்ற உணர்வு!

ஒரு பக்கம் தந்தையை எண்ணி வருத்தப் படுவது என்றால் இன்னொரு பக்கம் சிம்மனை நினைத்து உள்ளுக்குள் பயமாக இருந்தது. 

எந்த நேரத்தில் என்ன செய்வான் என்று யாருக்குமே தெரியாதே!

இந்த இரண்டு நாட்களும் அவன் அவளை தொந்தரவு செய்யவில்லை.

அன்று கடைசியாக அவளுக்கு அழைத்து பேசியதோடு சரி, அதன் பிறகு அவன் அவளுக்கு ஒரு முறையாவது தொடர்பு கொள்ளவில்லை.

அது ஒருவிதத்தில் நிம்மதியாக இருந்தாலும், முழுமையாக அந்த நிம்மதியை கூட அவளால் அனுபவிக்க முடியவில்லை.

அவன் இவ்வாறு அமைதியாக இருந்தாலே அதற்கு பின்னால் ஏதாவது காரணம் இருக்கும் என்று தானே அர்த்தம்.

அதை எண்ணும் போதே மனதுக்குள் இனம் புரியாத பயம் அவளை தொற்றிக் கொள்ளும்.

இரு நாட்களாக சமாளித்து விட்டாள்.

இதற்கு மேலும் அறையிலேயே இருந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு தேவை இல்லாமல் சந்தேகம் வரக்கூடும் என்பதனால் தன்னையே சமாதானம் செய்து கொண்டு இயல்பாக இருக்க முயன்றாள்.

அன்று சமையலறைக்கு வந்து 

தனது அன்னைக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.

அவரும் திருமண விடயங்களை பற்றி அவளிடம் சாதாரணமாக பேசிக் கொண்டு இருக்க, இவளுக்கு தான் உள்ளுக்குள் ஒரு மாதிரியாக இருந்தது.

வேறு வழி இல்லாமல் ஆம் போட்டுக் கொண்டு இருந்தாள்.

இதை பற்றி பேசுவார் என்று முன்னரே தெரிந்திருந்தால், பேசாமல்  அறையிலேயே இருந்து இருக்கலாம் என்ற எண்ணம் வேறு.

அதே வேளை அவளின் அலைபேசி அலற, காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தவள், பக்கத்தில் இருந்த அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

இரண்டு நாட்கள் அவளை தொல்லை செய்யாத அவன் பெயர் இன்று மீண்டும்   அவளுக்கு அழைப்பு விடுத்தது.

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top