அத்தியாயம் 25
சிம்மன் வெளியேறியதும் பிருந்தாவின் புறம் திரும்பிய அவளின் தந்தையோ, “அம்மாடி நீ உனக்கு தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் இன்விடேஷன் கொடுத்துட்டு சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பு. இல்லன்னா உங்க அம்மா என்னை தான் திட்டுவா” என்று கூற,
அவளும் சரியென தலையாட்டி விட்டு அங்கிருந்து சென்றாள்.
அவளின் தோழிகளான சக நர்ஸுகளுக்கும் பத்திரிகையை கொடுத்து விட்டு, வீட்டுக்கு புறப்படத் தயாரானவள் தனது தந்தையிடம் கூறி விட்டு, சென்று காரில் ஏறிக் கொண்டாள்.
டிரைவரும் வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட, பிருந்தாவோ ஏதோ சிந்தனையில் மூழ்கிய படியே ஜன்னலின் ஊடாக வெளியில் வெறித்த படி வந்தாள்.
சில நிமிடங்கள் கழியவே, அப்போது தான் கார் செல்லும் திசையை கவனித்தாள். அதுவோ வேறு ஒரு வழியில் பயணித்துக் கொண்டிருக்க,
‘இது வீட்டுக்கு போற வழி கிடையாதே!’ என எண்ணியவள், “அண்ணா… நீங்க எந்த வழியில போறீங்க? இது… இது நம்ம வீட்டுக்கு போற வழி கிடையாதே!” என்று அவசரமாக கேட்க,
டிரைவரோ எதுவும் பேசாமல் அமைதியாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
ஆனால் அவன் விழிகளோ, முன்னால் உள்ள கண்ணாடியின் ஊடாக தெரியும் பெண்ணவளின் பதட்டமான முகத்தையே சற்று கோபமாக பார்த்துக் கொண்டு இருந்தது.
பிருந்தாவோ “அண்ணா உங்க கிட்ட தானே கேக்குறேன். பதில் சொல்லுங்க… வீட்டுக்கு போகாம எங்க போறீங்க?… முதல்ல வண்டியை நிறுத்துங்க….” என்று சத்தம் போட்டவள், அந்த கண்ணாடியில் தெரியும் விழிகளை கண்டதும் திகைத்து போய் விட்டாள்.
“நி….. நீங்களா?” என்று கேட்டவள் இதழ்கள் நடுங்க, அவளையே அழுத்தமாக பார்த்துக் கொண்டே, “நானே தான் பேபி…” என நக்கலாக வார்த்தைகளை உதிர்த்தது வேறு யாரும் அல்ல சிம்ம விஷ்ணுவே தான்.
“நீங்க…. நீங்க என் கார்ல என்ன பண்ணுறீங்க? அந்த… டிரைவர்… அவர் எங்க போனாரு?… முதல்ல வண்டியை நிறுத்துங்க… ஸ்டாப்…” என்று பதட்டமாக அவள் கூச்சலிட,
“ஷ்.. ஷ்.. ஷ்.. இப்போ எதுக்கு இவ்ளோ சத்தம் போடுற?….” என்று அவன் கோபமாக கேட்டாலும், குரல் என்னவோ அமைதியாகவே ஒலித்தது.
அவளுக்கோ உள்ளுக்குள் பட படக்க, “ஐயோ! மரியாதையா வண்டியை ஹாஸ்பிடல்க்கு திருப்புங்க. அப்பாக்கு மட்டும் தெரிஞ்சதுன்னா ப்ரோப்லமாயிடும்…. ப்ளீஸ்…” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவளின் தொலைபேசி அலறியது.
சிம்மனோ, “உன் டிரைவர் தான் கால் பண்ணுறான். அட்டன் பண்ணி பேசு” என்று கூற, அவளும் அழைப்பை பார்த்தாள்.
அவன் சொன்னது போல டிரைவர் தான் அழைத்து இருந்தான்.
“அவரை என்ன பண்ணீங்க?” என்று கோபமாக கேட்ட படியே, அழைப்பை ஏற்றவள், “ஹலோ… அண்ணா…. நீங்க… நீங்க எங்க இருக்கீங்க?” என்று மெல்லிய குரலில் கேட்க,
மறு முனையில் இருந்த டிரைவரோ, “அம்மா நீங்க இப்போ எங்க இருக்கீங்க? நான் பக்கத்துல போன் பேச போயிருந்தேன். திரும்பி வந்து பார்த்தா காரை காணோம். நீங்க தான் வண்டியை எடுத்துட்டு போனீங்களாம்மா?” என்று அவன் சற்று பதறிப் போய் கேட்க,
பிருந்தாவுக்கோ இப்போது தான் பதட்டம் குறைந்தது. சிம்மன் அந்த டிரைவரை ஏதாவது செய்து விட்டு தான் காரை எடுத்து கொண்டு தன்னை அழைத்து வந்தானோ என்றே முதலில் எண்ணினாள்.
ஆனால் அப்படி எதுவும் ஆகவில்லை என்றதும் தான் கொஞ்சம் நிதானத்துக்கே வந்தாள். இப்போது ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டும் என எண்ணியவள், குரலை செருமிக் கொண்டே,
“அது… வந்து… ஆமாண்ணா நான் தான் காரை எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்புறேன். எனக்கு வழியில கொஞ்சம் வேலை இருக்கு. நான் முடிச்சிட்டு சீக்கிரமா வந்துடுவேன். சோ நீங்க வீட்டுக்கு போங்க” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, சடன் பிரேக் போட்டு வண்டியை ஓரமாக நிறுத்தி இருந்தான் சிம்மன்.
அதில் திடுக்கிட்டு போய் அவனை பார்க்க, சிம்மனோ எதுவும் பேசாமல் கதவை திறந்து கொண்டு வெளியேறினான்.
இவளும் டிரைவரிடம் பேசி விட்டு, அழைப்பை துண்டித்தவள், காரை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
அதுவோ ஒரு அழகிய பார்க்.
ஆங்காங்கே சில காதல் ஜோடிகள் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க, இவளுக்கோ இவன் எதற்காக இங்கே அழைத்து வந்தான் என்றே புரியவில்லை.
சுடிதாரின் முந்தானையை திருகிய படியே மெல்ல அவனை நெருங்கி வந்தவள், சுற்றி முற்றி பார்த்த படியே, “எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க? நான் வீட்டுக்கு போகணும். என் அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சா…” என்று ஏதோ பேச முன்னரே,
“வில் யூ ஷட் அப்” என்று கர்ஜனையாக கத்தி இருந்தான் சிம்மன். அவன் போட்ட சத்தத்தில் பிருந்தா மட்டும் அல்ல அங்கிருந்த மற்றவர்களுமே திடுக்கிட்டுப் போய் அவனைப் பார்த்தனர்.
அவன் விழிகளிலோ அத்தனை அனல்…
இப்போது எதை பற்றியும் யோசிக்கும் நிலையில் அவன் சுத்தமாக இல்லை.
இவளுக்கோ அவனை பார்க்கவே பயமாக இருந்தது.
“இ… இப்போ உங்களுக்கு என்ன வேணும்? எதுக்கு இ… இப்படி பண்ணுறீங்க?” என்று அவள் கண் கலங்கி போய் கேட்க, சிம்மனோ தன் கையில் கசக்கி வைத்திருந்த அவளின் திருமண அழைப்பிதலை எடுத்து கோபமாக அவள் முகத்திலேயே எரிந்திருந்தான்.
அதுவோ அவள் முகத்தில் உரசிய படி சென்று தரையில் விழ, பெண்ணவளோ அதிர்ந்து போய் கீழே விழுந்த பத்திரிகையை பார்த்தாள்.
அது மொத்தமாக கசங்கி போயி கிடக்க, அதை பார்த்து கண்களை ஒரு கணம் மூடித் திறந்தவள், அவன் புறம் பார்வையை திருப்பினாள்.
சிம்மனோ அவளை நெருங்கி வந்தவன், “என்னடி இது?… என்ன இது?… என்னை லவ் பண்ணிட்டு அவனை கல்யாணம் பண்ணிக்க போறியோ?” என்று அவன் அழுத்தமாகக் கேட்க,
பிருந்தாவோ அவனை வெறித்துப் பார்த்தவள், “லவ் பண்ணேனா? அது எப்போ சார்?” என்றாள் அவனை விட அழுத்தமாக.
அவள் கேள்வியில் புருவங்கள் சுருங்க, “ஹேய்… சும்மா என்னை கடுப்பேத்தாத. நீ என்னை லவ் பண்ணுறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா? அத உன் வாயால சொல்லலன்னாலும் அதான்டி உண்மை” என்று கூற,
பிருந்தாவோ அவன் கூற்றில் சற்று நிலை தடுமாறி தான் போனாள்.
அவன் கூறியதில் எந்த பொய்யும் இல்லையே! அவள் வெளியில் கூறவில்லை என்றாலும் சிம்மனை காதலிப்பது என்னவோ உண்மை தானே!
ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல், “என்ன உளறிட்டு இருக்கீங்க? நான் உங்களை லவ் பண்ணுறேனா? இத்தனை நாள் என்னை டார்ச்சர் பண்ணது பத்தாதுன்னு இப்போ புதுசா லவ் அது இதுன்னு சொல்லி டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா? இது வரைக்கும் நீங்க பண்ணதெல்லாம் நான் பொறுத்துகிட்டேன் சிம்மன். பட் இப்போ நான் உங்களுக்கு கீழ வேலை பார்க்குற நர்ஸ் கிடையாது. சோ என் கிட்ட நெருங்க நினைக்காதீங்க” என்று கோபமாக சொன்னவள் அங்கிருந்து போகப் பார்க்க,
அதற்குள்ளேயே அவளை பற்றி வேகமாக தன்னிடம் இழுத்திருந்தான் சிம்மன். அதை எதிர் பாராத பெண்ணவளோ அவன் மார்பில் மோதிய படி வந்து நிற்க, அவள் கன்னத்தை பற்றி தன் முகத்துக்கு நேராக கொண்டு வந்தவன், “என்னடி?… என் கிட்ட இருந்து அவ்ளோ சீக்கிரம் தப்பிச்சிடலாம்னு நினைச்சியா? நீ என்னை வெறுக்கும் போதே உன்னை நான் அடையணும்னு தான் ஆசை பட்டேன். இப்போ நீயே என்னை லவ் பண்ணுற…. அப்படி இருக்கும் போது விட்டுடுவேனா என்ன?…” என்றானே பார்க்கலாம், அவளுக்கோ இதயம் படு வேகமாக அடித்துக் கொண்டது.
“சி… சிம்மா ப்ளீஸ்… என்… என்னை விடுங்க.. ரொ…ம்ப வலிக்கிது…” என்று வலியில் கண்களில் இருந்து நீர் கோர்க்க, அவனிடமிருந்து விலக திமிறினாள் பாவை.
அவனும் அவள் வலியை உணர்ந்தவனாய் அவள் முகத்தில் இருந்த கரங்களை சட்டென விடுவித்து இருந்தான்.
பெண்ணவளோ அவனை முறைத்துப் பார்த்தவள், “நீ… நீங்க பண்ணுறது ரொம்ப தப்பு சிம்மன். நான் உங்களை லவ் பண்ணவே இல்லன்னு சொல்லிட்டு இருக்கேன். ஆனா… நீங்க புரிஞ்சிக்காம திரும்ப திரும்ப அதையே பேசிட்டு இருக்கீங்க?” என்று கத்த,
“நான் புரிஞ்சிக்காம பேசுறேனா? என்னடி?… என்னை பார்த்தா என்ன உங்கப்பனை மாதிரி அறிவு இல்லாத கிறுக்கன் மாதிரியா தெரிது? பொண்ணோட மனசுல என்ன இருக்குனு கூட தெரியாம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கான். இதுல என் கிட்ட வந்து மேரேஜ்க்கு வான்னு இன்விடேஷனை நீட்டுறான். அவன் மட்டும் உன் அப்பனா இல்லாம இருந்திருந்தான் என்ன பண்ணியிருப்பேன்னு எனக்கே தெரியாது” என்று பொறுமையை இழுத்து பிடித்த படி அவன் சொல்ல,
பிருந்தாவுக்கு தான் பொறுமை காற்றில் கரைந்து போனது.
அவளுடைய தந்தையையே இவ்வாறு மரியாதை இல்லாமல் பேசுகிறானே!
“ஹேய்… எவ்ளோ தைரியம் இருந்தா என் அப்பாவையே மரியாதை இல்லாம பேசுவீங்க?… அவரை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?… அவர் எப்பவுமே என்னோட விருப்பத்துக்கு மாறா எதையுமே பண்ணதில்ல அது தெரியுமா?… இந்த கல்யாணத்தை கூட என் கிட்ட கேட்டு தான் முடிவு பண்ணாரு. அவர் என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தாரு. ஆனா…. ஆனா நான் தான்…. அவரோட நம்பிக்கையவே குழி தோண்டி புதச்சிட்டேன்…. ஏற்கனவே இன்னொருத்தர் கூட நிச்சயமான எனக்கு எதுக்கு பாதியில வந்த உங்க மேல பீலிங்ஸ் வந்ததுன்னே தெரில….. எதுக்காக எனக்கு யார் மேலயும் தோணாத உணர்வு உங்க மேல தோணிச்சி?…. எனக்கு சத்தியமா தெரில…. எதுக்கு எனக்கு உங்களை புடிச்சதுன்னு தெரில…. எ… எதுக்கு…?” என்று ஏங்கி ஏங்கி அவள் அழ ஆரம்பித்து விட,
தெரிந்தோ தெரியாமலோ அந் நொடி அவன் மீது உள்ள காதலை வெளிப்படுத்தி இருந்தாள் அந்தப் பேதை.