அத்தியாயம் 2
பகல் ஒரு மணியை தாண்டி இருந்தது.
சுமார் ஏழு மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு அந்த ஹார்ட் டிரான்ஸ்பிளான்ட் சர்ஜரியை வெற்றிகரமாக முடித்துவிட்டு, வெளியே வந்தான் சிம்மன்.
வாசலில் காத்திருந்த நோயாளியின் உறவினர்கள் அவனைக் கண்டதும் ஓடி வந்தனர்.
“டாக்டர் என் பையன் பொழச்சிடுவால்ல?” என்று அந்த பெண் கேட்ட படி அவனின் கையை பற்ற போக,
சட்டென தன் கையை பின்னால் இழுத்துக் கொண்டவன் முகமோ ஒரு வித ஒவ்வாமையை காட்டியது.
“ஸ்டே பேக்!…..” என்ற படி, “சர்ஜ்ரி ஈஸ் சக்ஸஸ்புல். அடுத்த 24 மணித்தியாலமும் அப்சர்வேஷன்ல இருக்கணும். டோன்ட் கிரௌட் ஹேர்.” என்று சொல்லி விட்டு,
தனது பக்கத்தில் நின்றிருந்த நர்ஸ் கார்த்திகாவிடம் “பேஷண்டோட பிபியை 10 மினிட்ஸ்க்கு ஒருமுறை மானிட்டர் பண்ணிட்டே இருக்கணும். ஏதாவது சின்ன சேன்ஞஸ் தெரிஞ்சா கூட உடனே எனக்குத் தெரியணும். புரிஞ்சிதா?” என்று கேட்க,
அவளும் “ஓகே சார்” என்று தலையசைத்தாள்.
சிம்மனோ அங்கிருந்து நேராக தனது கேபினுக்கு சென்றவன், தண்ணீரை எடுத்து பருகினான்.
களைப்பு அவன் முகத்தில் தெரிந்தாலும், உடல் என்னவோ இன்னுமே கம்பீரமாக தான் இருந்தது. ஏழு மணிநேர அறுவை சிகிச்சை அவனது பலத்தை துளியும் குறைத்ததாகத் தெரியவில்லை.
நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவன் கண்களை மூடிய படி இருக்க, அவனது கேபினின் கதவு தட்டப்பட்டது.
“கமின்…” என்றான்.
கையில் ஓ. டி ரிப்போர்ட்ஸையும் கூடவே ஒரு காபியையும் எடுத்து கொண்டு உள்ளே வந்தாள் கார்த்திகா. அவனது பிரத்தியோகமான உதவியாளர் தான் அவள்.
சிம்மனோடு இரண்டு வருடங்களாக ஒன்றாக வேலை பார்க்கிறாள். அவளின் துரிதமான செயல்பாடும், அவன் எதை எதிர்பார்ப்பான் என்பதை அவன் சொல்லாமலேயே செய்யும் புத்திசாலித்தனமும் தான் அவளை அவனது தனி உதவியாளராக மாற்றி இருந்தது.
“சார் நீங்க கேட்ட ரிப்போர்ட்ஸ்… அப்புறம் காபி,” என்று கூறி அவற்றை மேசையில் வைத்தாள்.
அவனும் அந்த ரிப்போர்டை மேலோட்டமாக பார்த்த படி இருக்க, அவனது தொலை பேசி அலறியது.
எடுத்து காதில் வைத்து “சொல்லுங்க டாக்டர்” என்றான்.
இந்த வைத்தியசாலையின் டீனான குணசேகர் தான் அழைத்து இருந்தார்.
அவரோ “சிம்மன் பிரீயா இருந்தா என் கேபின் வரைக்கும் வரியா! உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்று சொல்ல,
அவனும் பெரு மூச்சு ஒன்றை விட்ட படி,
“வரேன் டாக்டர்” என்றான்.
****
கைகளை பிசைந்த படியே, தனது தந்தை குணசேகரின் பக்கத்தில் நின்றிருந்தாள் பிருந்தா.
ஐந்தடி உயரம் தான் இருப்பாள். மெல்லிய தேகமும், மாநிறமுமாக இருந்தவளோ நீல நிற புடவை அணிந்து, முடியை ஒற்றை பின்னல் இட்டு, பெரிதாக எந்த ஒப்பனையும் இல்லாமல் பார்க்க அவ்வளவு லட்சணமாக இருந்தாள்.
24 வயதை கொண்ட அவள் இப்போது தான் நர்ஸிங் படிப்பை முடித்திருந்தாள்.
தனது விரலில் உள்ள நிச்சயதார்த்த மோதிரத்தை சுழற்றிய படியே சற்று பதட்டமாக நின்றிருந்தவளோ, அந்த கதவை திறக்கும் சத்தத்தில் சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.
அங்கே அனுமதி கேட்ட படி உள்ளே நுழைந்தது வேறு யாரும் அல்ல சிம்ம விஷ்ணு தான்.
சாம்பல் நிற ஷேர்ட் அணிந்து அதற்கு மேல் வெள்ளை நிற டாக்டர் கோட் அணிந்திருந்தவனோ அதன் கையை சற்று மடித்து விட்டிருந்தான்.
அவனது இந்த வசீகரமான தோற்றத்தில் எப்படி பட்ட பெண்ணுமே ஒரு நொடி தன்னிலை இழந்து தான் போவாள்.
ஆனால் அவனை பார்த்த பிருந்தாவுக்கோ மனதில் ஏதோ இனம் புரியாத பயமே தோன்றியது. அது ஏன் என்று அவளுக்கே புரியவில்லை.
சிம்மனை கண்ட குணசேகரோ, “வா சிம்மன். ஒக்காரு” என்று கூற, அவனும்
இருக்கையில் சாய்ந்து அமர்ந்த படி, “சொல்லுங்க டாக்டர் எதுக்கு வர சொன்னீங்க?” என்று நேராக விடயத்துக்கு வர,
அவரும் சுற்றி வளைக்க விரும்பவில்லை.
“இது என் பொண்ணு பிருந்தா. இப்போ தான் நர்ஸிங் முடிச்சிருக்கா….. இவளை உன் கிட்ட ட்ரெய்னிங்க்கு அனுப்பலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்” என்றார் அவர்.
அவனோ “வாட்?” என்று விலுக்கென கேட்டவன்,
“என்ன விளையாடுறீங்களா டாக்டர்? நீங்க சொல்லறது ரூல்ஸுக்கே எகேன்ஸ்டா இருக்கு. ஒரு பிரெஷர கூட்டிட்டு வந்து என்கிட்ட ட்ரெய்னிங் எடுக்கச் சொல்றீங்க? இது ஒன்னும் ஜெனரல் வார்டு கிடையாது. கார்டியாக் யூனிட்! அஞ்சு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்குற நர்ஸையே நான் பத்து தடவை செக் பண்ணித்தான் தியேட்டர்க்குள்ளே விடுவேன்” என்று கடுப்பாக சொன்னவன்,
“இவங்களை வேற ஏதாவது வார்டுல போடச் சொல்லுங்க. அப்படியும் இல்லன்னா வேற சீனியர் டாக்டர் கிட்ட சேர்த்து விடுங்க. என்னால உங்க பொண்ணுக்கு எல்லாம் டிரைனிங் கொடுக்க முடியாது” என்று முகத்தில் அடித்தது போல சொல்லி விட்டான்.
அவன் எப்போதும் அப்படித் தான்.
தனக்கு சரி என்று பட்டால் அதை யார் முன்னிலையிலும் மறுக்காமல் பேசி விடுவான்.
அது எப்படி பட்ட ஆளாக இருந்தாலும்.
அதனாலேயே அவனிடம் பேசும் போது மற்றவர்கள் சற்று ஜாக்கிரதையாகவே இருப்பார்கள்.
பிருந்தாவுக்கோ அவனின் இந்த திமிரான பேச்சு சற்று அதிர்ச்சியையே கொடுத்தது.
அவளது தந்தை இந்த ஹாஸ்பிடலின் டீன். ஆனால் அவனோ அவரை கொஞ்சமும் மதிக்காமல் இப்படி துணிச்சலாக பேசுகிறானே!
குணசேகரோ லேசாக புன்னகைத்த படி, “எனக்கும் ரூல்ஸ் பத்தி தெரியும் சிம்மன். ஆனா இவளை நான் சீனியர் டாக்டர்ஸ் கிட்ட விட்டா, அவங்க இவ தப்பு பண்ணாலும் டீன் பொண்ணுன்னு திட்ட மாட்டாங்க. இவளுக்குப் பதிலா அந்த வேலையை மத்தவங்களே செஞ்சு முடிச்சுடுவாங்க.
ஆனா என் பொண்ணு என்னோட அதிகாரத்துனால அப்படி தகுதி இல்லாதவளா மாறிடக் கூடாது. அவளோட டேலண்ட்டால ஒரு நல்ல ப்ரொபஷனலா மாறனுங்குறது தான் என்னோட விஷ். அதுனால தான் இவளை உன் கிட்ட அனுப்ப முடிவு பண்ணேன்.” என்றார் நிதானமாக.
மொத்தத்தில் அவர் கூற வருவது ஒன்று தான். மற்றவர்கள் அவளை டீன் மகள் என்ற பயத்தில் தான் பார்ப்பார்கள். ஆனால் சிம்மனுக்கோ இந்த அதிகாரத்தை விட, திறமை தான் முக்கியம். அவனிடம் எந்த அதிகாரமும் செல்லுபடியாகாது.
தவறு செய்தால் முகத்தில் அடித்தது போல யார் முன்னிலையிலேமே திட்டி விடுவான்.
அது தான் அவன் குணம்.
சிம்மனோ ஆழ்ந்த பெரு மூச்சு ஒன்றை விட்ட படி, “பைன் டாக்டர். நீங்க சொல்லுறதுனால இவங்களை நான் ஏத்துக்குறேன்” என்று ஒத்துக் கொள்ள,
குணசேகருக்கும் அப்போது தான் நிம்மதியாக இருந்தது.
“தேங்ஸ் சிம்மன்” என்று சொன்னவருக்கு பின்னாளில் இதனால் எவ்வளவு பிரச்சனை வர போகிறது என்று முன்னரே தெரிந்திருந்தால் இதை செய்திருக்க மாட்டாரோ என்னவோ.
சிம்மனோ பிருந்தாவிடம் திரும்பி, “நாளைக்கு காலையில ஷார்ப்பா சிக்ஸ கிளாக் டியூட்டில இருக்கணும். ஒரு நிமிஷம் லேட் ஆனாலும் பனிஷ்மென்ட் இருக்கு. புரிஞ்சிதா” என்று அதட்டலாக கேட்க,
அவளுக்கோ இதயம் படு வேகமாக அடித்துக் கொண்டது.
இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “ஓகே டாக்டர்” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
சிம்மனும் சிறு தலையசைப்புடன் அங்கிருந்து வெளியேறி விட, குணசேகரோ “சரிம்மா நீ வீட்டுக்கு கிளம்பு” என்று அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
வீட்டுக்கு வந்த பிருந்தாவோ உடையை மாற்றி விட்டு கீழே ஹாலுக்கு வந்து இருக்கையில் அமர,
அவள் பின்னால் சத்தமில்லாமல் வந்து நின்ற அவளது தங்கை மிருதுளாவோ, “என்னக்கா முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு. அந்த புது டாக்டர் எப்படி இருக்காரு?” என்று அவளின் தோள்களைத் தொட்டு பலமாக உலுக்கிய படி கேட்க,
பிருந்தாவோ “சும்மா இரு மிரு. நானே ரொம்ப டென்ஷனா இருக்கேன்” என்றாள் சலிப்புடன்.
மிருதுளாவோ அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து “என்னாச்சுக்கா எனி ப்ரோப்லம்?” என்று கேட்க,
பிருந்தாவோ சோபாவில் சாய்ந்து கண்களை மூடிய படி, “தெரில்ல. ஆனா அந்த டாக்டர பார்த்தாலே உடம்பெல்லாம் நடுங்குது. அப்பா எதுக்காக இப்படி ஒரு ஆள் கிட்ட டிரைனிங் அனுப்புறாருன்னு தான் தெரில.” என்று சொன்னவளுக்கு அவனை நினைக்க நினைக்க இன்னும் உடலில் நடுக்கம் தான் வந்தது.
மிருவோ “அதெல்லாம் விடு. ஆளு பார்க்க எப்படி இருப்பாரு.” என்று ஆர்வமாக கேட்க,
பிருந்தாவோ “ஏன்டி நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீ எத பத்தி கேட்டுட்டு இருக்க?” என்று அவளை முறைக்க,
மிருவோ “அச்சோ ப்ளீஸ்க்கா எனக்காக சொல்லு. பார்க்க அழகா இருப்பாரா?” என்று கண்ணடித்த படி கேட்க,
பிருந்தாவோ “அழகா? பார்க்க அப்படியே ராட்சசன் மாதிரி பனை மரம் கணக்கா இருப்பான். அவனும் அவன் மூஞ்சியும்.” என்று திட்டியவள்,
“உனக்கு தெரியாது அப்பா கிட்ட கூட எவ்ளோ திமிரா பேசுறான் தெரியுமா! இப்படி ஒருத்தனை என் வாழ்க்கையில பார்த்ததே இல்ல.” என்று அவள் சிம்மனை பற்றி கரித்து கொட்டினாள்.
அவளை பார்த்த மிருவுக்கு ஆச்சர்யம் தான்.
பிருந்தா இயல்பாகவே மிகவும் அமைதியான குணம் கொண்டவள். இது வரையில் அவள் யாரை பற்றியும் இப்படி எல்லாம் பேசியதே இல்லை. முதன் முறையே ஒருவனை இப்படி திட்டிகிறாள்.
மிருவோ “அவன் கூட எப்படி வேலை பார்க்க போற?” என்று கேட்க, அவளிடம் அதற்கு பெருமூச்சு ஒன்றை தவிர வேறு எந்த பதிலும் இல்லை.
****
அடுத்த நாள் அவன் சொன்ன நேரத்துக்கு முன்னரேயே மருத்துவமனைக்கு புறப்பட்டு இருந்தாள் பிருந்தா.
சிம்மனும் உள்ளே வர, அங்கே நர்ஸ் உடையில் கையில் ஒரு பைலை வைத்து கொண்டு சற்று பதட்டமாக அமர்ந்திருந்தாள் அவள்.
அவன் வருவதை கண்டதும் சட்டென எழுந்து “குட் மார்னிங் சார்” என்க, அவனும் சிறு தலையசைப்புடன் அங்கிருந்து விறு விறுவென அவனது கேபினுக்கு சென்று விட்டான்.